Advertisement

அத்தியாயம் – 10
“என்னை இப்பவும் நீ மறக்கலையா…” என்ற பிரம்மாவின் கேள்விக்குப் புன்னகைத்தாள் ஓவியா.
“எப்படி மறக்க முடியும் தேவ்… மனம் மரத்து, வாழ்க்கை வெறுத்து, தனிமைல தவிச்சு நின்ன எனக்கு உயிர் கொடுத்தது உங்க வார்த்தைகளும் நம்பிக்கையும் தான்… அந்த சின்ன வயசுல நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் இப்பவும் என் காதுல கேட்டுட்டே இருக்கு… என் வாழ்க்கைல நான் எதை செய்தாலும் என் தேவ் கிட்ட சொல்லாம செய்ததில்ல… நேர்ல பழகலைனாலும் நானும், தேவும் நல்ல நண்பர்கள் தெரியுமா…” சொல்லி சிரித்தவளை திகைப்புடன் நோக்கினான் பிரம்மா.
“நிஜமாலுமே எனக்கு சர்ப்ரைஸா இருக்கு அம்மு… அந்த பயணத்து சந்திப்பை அன்னைக்கே மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன்… என்னை இத்தனை மதிச்சு தினமும் நினைக்கிற ஒருவனா இருப்பேன்னு எதிர்பார்க்கலை…”
“மறக்கக் கூடிய சந்திப்பா அது… இப்பவும் என் பக்கத்துல உக்கார்ந்து நீங்க சொல்லற போல இருக்கு… உங்க வார்த்தைகள் தான் நாட்டியத்தை என் பாதையா தேர்ந்தெடுக்க வச்சுது…”
“தம்பி, அது மட்டுமில்ல… ஓவியம்னா இவளுக்கு உசுரு… அதுக்கு அடிப்படை கூட நீங்க வரைஞ்சு கொடுத்த ஓவியம் தான்… நீங்கன்னே தெரியாம இவ்ளோ நாளா உங்க ஓவியம் எல்லாத்தையும் ஆல்பம் பண்ணி வச்சிருக்கா, பாருங்க…” சிவநேசன் நடுவில் என்ட்ரி கொடுத்தார்.
“அம்மு, அதெல்லாம் எடுத்துக் காட்டுமா… தம்பி சந்தோஷப் படும்…” என்றவர், “இருந்தாலும் உங்க உயரம் நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கல தம்பி… சின்ன வயசுலயே அத்தனை திறமையா ஓவியம் வரைஞ்ச நீங்க இப்ப எங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்களோன்னு யோசிப்போம்… பிரம்மாவோட ஓவியத்தைப் பார்க்கும் போதெல்லாம் தேவ் பேர்ல எதுவும் ஓவியம் வருதான்னு பார்ப்போம்… எங்க நினைவில் தேவ் வராம இருந்ததில்லை…”
“ரொம்ப சந்தோஷமா இருக்கு அங்கிள்…”
“அன்னைக்கு ரயில்ல பார்த்தபிறகு எத்தனையோ நாள் நீங்க என்னைப் பார்க்க ஸ்டேஷனுக்கு வருவிங்களோன்னு நினைச்சிருக்கேன் தம்பி… அதென்னவோ உங்களைப் பார்த்ததை ரயில் சிநேகம்னு ஒதுக்க முடியல…”
“ம்ம்… அன்னைக்கு நான் இருந்த நிலமை அப்படி அங்கிள்… அடுத்த நாளே ஒரு குழந்தைகள் பத்திரிகைல ஆர்டிஸ்ட்டா ஜாயின் பண்ணேன்… ஆனா அவங்க என்னை பாங்களூர் அனுப்பிட்டாங்க… அங்கே ஒரு வருஷம் இருந்த பிறகு தான் மறுபடி சென்னை வந்தேன்… ஆனா எதையும் மறக்கலை…”
“ம்ம்… சரி, நீங்க பேசிட்டு இருங்க… நான் இதோ வந்திடறேன்… மசால் தோசை பிடிக்குமா…”
“அச்சோ அங்கிள்… நீங்க எது செய்தாலும் ஓகே… தனியா சிரமப்பட வேண்டாம், நானும் ஹெல்ப் பண்ணட்டுமா…” என்றவனை நோக்கி சிரித்தார்.
“சமையல்னு வந்துட்டா அம்முவைக் கூட அதுல கூட்டு சேர்த்துக்க மாட்டேன்… இவளை சேர்த்தா கண்டிப்பா அது சொதப்பல் ஆகிடும்…” சிரித்தவரை முறைத்தாள் ஓவியா.
“ஹூக்கும், என்னைக் கிண்டல் பண்ணலேன்னா இவருக்கு முடியாதே, இவரு பெரிய நள சக்கரவர்த்தி…”  
“நீ ஒத்துக்கலேன்னாலும் சமையல்ல நான் ஒரு நளன் தான்னு இன்னைக்கு தம்பி வாயால சொல்ல வைக்கிறேன்…” என்றவர் உற்சாகமாய் அடுக்களைக்கு சென்றார்.
“தேவ், அப்பா சூப்பரா சமைப்பார்… இந்த வீட்லயே அவர் ரொம்ப விரும்பற இடம் சமையலறை தான்… எல்லாருக்கும் தனிமைல இருந்து விடுதலை பெற இப்படி ஏதாவது ஒரு விஷயம் தேவையா தான் இருக்கு…” என்றாள் ஓவியா.
“ம்ம்… உண்மைதான் அம்மு, திறமையைப் புரிஞ்சுக்காத வீட்ல இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு கிளம்பின என் தனிமையை என் ஓவியங்கள் தான் போக்குச்சு…”
அவனை யோசனையுடன் பார்த்தவள், “தேவ்… அன்னைக்கு எங்களைப் பத்தி மட்டும் தான் பேசினோம்… உங்க பாமிலி பத்தி ஏதும் சொல்லவே இல்லை… அவங்க எங்கிருக்காங்க…”
“ம்ம்… அது ஒரு கதை, இன்னொரு நாள் சொல்லறேன்…”
“சரி வாங்க, உங்களுக்கு சில ஆல்பம் எல்லாம் காட்டறேன்…” என்றவள் தனது அறைக்கு அழைத்துச் சென்றாள். என்னவோ அவனிடம் விலகி நிற்கவே தோணாமல் மிகவும் நெருக்கமான ஒருவனாகவே மனதில் காண முடிந்தது.
“இங்க பார்த்தியா தேவ்… இவன்தான் என் பிரண்டு…” மூன்று பேரும் இருக்கும் அவன் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள். ஒரு செல்பில் அடுக்கி வைத்திருந்த ஆல்பங்களை எடுத்துக் காட்டியவள், “இதெல்லாமே உங்க ஓவியம் தான்… நீங்க தான் தேவ்னு தெரியாமலே சேர்த்து வச்ச பொக்கிஷங்கள்…”
பத்துப் பதினைந்து ஆல்பங்கள் இருக்க, ஒன்றை எடுத்துப் புரட்டிக் கொண்டே கேட்டான் பிரம்மா.
“உனக்கு ஓவியம் அவ்ளோ பிடிக்குமா…”
“ம்ம்… உங்க ஓவியம் தான் என்னை உயிர்க்க வச்சுது… உங்க பேரு எந்த ஓவியத்துலயும் வந்திருக்கான்னு எல்லாப் பத்திரிகையும் வாங்கித் தேடிப் பார்ப்பேன்… ஆனா அதுல எல்லாம் இருந்த இந்த ஓவியங்கள், மனசுக்கு மிகவும் நெருக்கமா உணர வச்சுது… அதனால அதை சேகரிச்சு வச்சேன்… என்னை முதன்முதலா அதிசயிக்க வச்சது தேவ்னா, ரெண்டாவது முறையா பிரம்மிக்க வச்சது பிரம்மா… என்னவொரு உணர்வோட்டம், இந்த ஒவ்வொரு ஓவித்துலயும் நான் என்னை உணர்வேன்…” ஒரு ஆல்பத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்களில் சந்தோசம் மின்னக் கூறியவளை திகைப்புடன் நோக்கினான் பிரம்மா.
“இவள் தான் என் மனதுக்குள் இருந்து என் தூரிகையில் எல்லாம் தன் முகத்தைக் காட்டியிருக்கிறாள் எனப் புரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறேனே…” மனதுள் யோசித்தவன் அவளையே ஆர்வத்துடன் பார்த்தான்.
“என்ன தேவ், அப்படிப் பார்க்கறிங்க, நடக்கற எதையும் நம்ப முடியலை தானே… எனக்கும் கனவு மாதிரி இருக்கு…”
“உண்மைதான் அம்மு… உன்னில் கூட எத்தனை மாற்றம்…”
“என்கிட்டே பெருசா எந்த மாற்றமும் இல்லையே…”
“ம்ம்… அன்னைக்கு பொம்மை மாதிரி இருந்த… இன்னைக்கு ஓவியம் மாதிரி வளர்ந்து நிக்கற…” என்றவனின் பார்வை அவள் மீது ரசனையுடன் படிய திகைப்புடன் நோக்கினாள்.
“தே..தேவ்… என்ன சொல்லறிங்க…”
“நீ நல்லா வளர்ந்துட்டேன்னு சொன்னேன்…”
“ஹோ, அவ்ளோதானா…”
“வேற என்ன நினைச்ச…” அவளையே குறுகுறுவென்று பார்த்து அவன் கேட்க, சட்டென்று பதில் சொல்ல முடியாமல் பார்வையைத் தவிர்க்க முயன்றாள் ஓவியா.
அதற்குள் நல்ல வேளையாய் சிவநேசன் இருவரையும் சாப்பிட அழைத்து குரல் கொடுத்தார்.
“அம்மு டின்னர் ரெடி, தம்பியை சாப்பிட அழைச்சிட்டு வா…”
“இதோ வர்றோம் பா…” என்றவள், “வாங்க தேவ்…” என்று முன்னில் நடக்க அவளைப் பின்னிலிருந்து ரசனையுடன் பார்த்துக் கொண்டே தொடர்ந்தான் பிரம்மா.
“என் ஓவியத்தில் ஒளிந்திருக்கும் அழகின் ரகசியத்தை  இப்போது உணர்கிறேன்…” மனது கும்மாளமிட்டது.
அதற்குப் பிறகு சாப்பிட அமர்ந்தவனுக்கு சூடாய் மசால் தோசையை சிவநேசன் தட்டில் வைத்து தேங்காய் சட்னி, புதினா சட்னியுடன் பரிமாறினார்.
ஒரு வாய் சாப்பிட்டவன், “உண்மைலயே ரொம்ப அருமையா இருக்கு அங்கிள், நளனோட சமையலை ருசிச்சதில்லை… ருசிச்சாலும் இதுக்கு இணையா இருக்குமான்னு தெரியாது…” மனதார சொன்னவனை சந்தோஷமும், பெருமையுமாய் நோக்கினார் சிவநேசன்.
“டைம் கிடைக்கும் போதெல்லாம் நம்ம வீட்டுக்கு வாங்க தம்பி… விதவிதமா சமைச்சுக் கொடுத்து அசத்திடறேன்…”
“இந்த அன்புக்காகவே நிச்சயம் வருவேன் அங்கிள்…” அவன் சொல்ல தந்தையை சந்தோஷத்துடன் பார்த்தாள் மகள்.
“என்ன அம்மு, பிரம்ம வாக்கு பொய்க்காதுன்னு நம்பறியா…”
“ஹூம், எதோ இன்னைக்கு கொஞ்சம் டேஸ்ட்டா செய்து தப்பிச்சுட்டீங்க… ரொம்ப தான் அலட்டிக்காதீங்க…”
“ஏன் அம்மு அப்படி சொல்லற, நிஜமாவே நல்லாருக்கு…”
“அவ சும்மா என்னை சீண்டிட்டு இருக்கா தம்பி… தனக்கு ஒரு காபி கூட நல்லாப் போடத் தெரியாதுன்னு என் மேல பொறாமை…” சொன்னவரை முறைத்துக் கொண்டே தட்டுடன் அமர்ந்தவள், “பசிக்குதுப்பா…” என்றாள் சிணுங்கலுடன்.
“இதோ அடுத்தது உனக்கு தான் டா அம்மு…” என்றவர் இருவருக்குமாய் மாறி மாறி தோசை ஊத்திக் கொடுத்தார். 
தந்தை, மகளின் கிண்டல் கேலியை ரசித்துக் கொண்டே திருப்தியாய் சாப்பிட்டு முடித்தான் பிரம்மா. அந்த அழகான வீட்டில் அவர்களின் புரிதலான நேசம் நிறைந்திருப்பதை சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் கிளம்பட்டுமா அங்கிள்… டைம் ஆச்சு…” அவன் சொல்லவும் ஓவியாவின் முகம் சட்டென்று வாடி, அடுத்த நிமிடமே மீண்டும் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டதை உணர்ந்தவனுக்கு என்னவென்று புரியாத ஒரு சந்தோஷம் மனதை நிறைத்துக் கொண்டது.
“டைம் கிடைக்கும்போது வீட்டுக்கு வாங்க, தேவ்…” இன்முகத்துடன் சொன்னவளை நோக்கித் தலையாட்டினான்.
“நீங்களும் ஒரு நாள் நம்ம வீட்டுக்கு வாங்க…” என்றவன், அரை மனதுடனே வண்டியைக் கிளப்பினான்.
கலைவாணர் கலையரங்கம்.
மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருக்க, போட்டி தொடங்குவதற்கான தயாரெடுப்பில் இருந்தது. நாட்டியம் ஆடும் மாணவிகள் பளிச் மேக்கப்பிலும், உடையிலும் தனித்துத் தெரிந்தனர். அவர்களின் கழுத்தில் தொங்கிய டேக் எந்தப் பள்ளியைச் சார்ந்தவர்கள் எனக் காட்டியது.
ஓவியாவின் மாணவிகள் ஐந்தாவது பாடலுக்கு ஆட இருந்ததால் அவர்களுக்கான உடை, ஒப்பனைகளை முடித்து எல்லாம் சரி பார்த்துவிட்டு வந்த ஓவியாவின் பார்வை பார்வையாளர் வரிசையில் பிரம்மாவைத் தேடியது. அவனைக் காணாமல் ஏமாற்றத்துடன் நின்றவளின் பார்வை உள்ளே வந்து கொண்டிருந்தவனைக் கண்டதும் மலர்ந்தது.
சில ரசிகர்கள் பிரம்மாவைக் கண்டு கொண்டு வாசலிலேயே ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருக்க, அவர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தவன் தன்னைக் கண்டு புன்னகையுடன் நின்ற ஒவியாவைக் கண்டதும் புன்னகைத்து தலையாட்டி விட்டு அமைதியாய் இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.
அவளை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்க, சந்தோஷத்துடன் நகர்ந்தாள் ஓவியா. வேகமாய் வந்த ராகவ், “ஆஹா, உங்க ஓவியத்துகிட்ட பேசலாம்னு வந்தா அதுக்குள்ள போயிருச்சே…” எனவும்,
“நீ எதுக்கு மேன், அவ கிட்டப் பேசணும்…”
“இல்ல, சும்மா… உங்களைப் பதில் நல்ல விதமா நாலு வார்த்தை சொல்லலாமேன்னு…”
“ஓ… அவளுக்குத் தெரிய வேண்டியதை நானே சொல்லிக்கறேன்… நோ தேங்க்ஸ்…”
“ப்ச்… போங்க தெய்வமே, லவ்வர்ஸ் டே அன்னைக்கு ஒரு சமூக சேவை பண்ண நினைச்சா விட மாட்டீங்கறீங்க…”
“நீ ஆத்துன வரைக்கும் போதும்… அமைதியா உக்காரு…”
“ஏன் தெய்வமே, முன் வரிசைலயே உக்காரலாமே… நாம விஐபி டிக்கட் தான வாங்கிருக்கோம்…”
“முன்னாடி ஜட்ஜஸ் உக்காருவாங்க… நமக்கு இதான் வசதி…”
சரியாய் ஐந்து மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வந்தது. மேடையில் தோன்றிய தொகுப்பாளர் அனைவரையும் வரவேற்று, பரத நாட்டிய கலை  தொடர்பான அறிமுக உரையையும், பதினைந்து வயதுக்கு கீழே உள்ள மாணவிகள் கலந்து கொள்ளும் அந்த  நாட்டியப் போட்டி பற்றிய பொதுவான விஷயங்களையும் கூறிவிட்டு, எந்தப் பள்ளிகள் அதில் கலந்து கொள்கின்றன என்ற அறிவிப்பையும் கூறினார். 
மண்டபத்தின் விளக்குகள் மெதுவாக தங்கள் ஒளிக் கதிர்களை குறைத்துக் கொள்ள, மேடையின் முன்புறம் மூடி இருந்த வெல்வட் திரை மெல்ல மேலெழுந்து அரங்கினைக் காட்டியது. மேடையிலிருந்து ஒளி பரவ, இடப்புறம் நடராஜர் சிலை அலங்கரிப்பட்டு வீற்றிருக்க, அதற்குக் கீழே வாத்தியக் கலைஞர்கள் மிருதங்கம், வயலின், கடம், வீணை, புல்லாங்குழல் இவற்றுடன் வரிசையாய் அமர்ந்திருந்தனர். மைக்கின் முன் அமர்ந்திருந்த பாடகி தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடத் தயாராக ஐந்து மாணவிகள் மேடையில் பிரசன்னமாயினர்.
மேடையை வணங்கிவிட்டு நடனத்தைத் தொடங்கினர்.
தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன், தீராத விளையாட்டுப் பிள்ளை…
அவரது கணீர் குரலில் ஒலித்த ராகத்துக்கு ஏற்றாற் போல் தாளமும் அரங்கை அதிர வைக்க, அழகாய் அபிநயம் பிடித்து கண்ணனை கண் முன்னே காட்டத் தொடங்கினர். சிறப்பாகவே முதல் நாட்டியம் முடிய கைதட்டல் அரங்கை நிறைத்தது. பிரம்மாவும் ஆர்வத்துடன் பார்த்திருந்தான்.
“சார், டான்ஸ் சூப்பரா இருந்துச்சுல்ல, ரொம்ப அழகா ஆடினாங்க…” ராகவ் சொல்ல, “ம்ம்…” தலையாட்டினான்.
“கண்ணாடியைப் போட்டுட்டு பார்த்தா எப்படி, கழற்றிட்டு பாருங்க தெய்வமே…”
“ப்ச்… இதுல தெரிஞ்சாப் போதும்…” அடுத்தடுத்து ஒவ்வொரு பள்ளியும் நடனமாட, அடுத்து ஓவியா நாட்டியப்பள்ளி என அறிவிப்பு வந்தது.
“தெய்வமே, அடுத்து நம்ம ஓவியத்தோட ஸ்கூல்…” என்று பிரம்மாவிடம் சொல்ல அவன் தலை சாய்த்திருந்தான்.
“என்ன இவரு, ஏதும் சொல்ல மாட்டேங்கிறார்… ஒருவேளை தூங்கிட்டாரோ…” என யோசித்தவன், “சார், அங்க சைடுல பாருங்க, ஓவியா மேடம் பாக்குறாங்க…” என்றான் காதருகில்.
சட்டென்று தலையைக் குலுக்கிக் கொண்டவன், “எ..என்ன, யாரு…” என்றான் உளறிக் கொண்டே.
“ம்ம்… விளங்கிடும்… நல்ல தூக்கமாக்கும், இதுக்கு தான் கண்ணாடிய கழற்ற மாட்டேன்னு சொன்னிங்களா… பகல்ல ப்ரீயா இருந்துட்டு நைட் எல்லாம் கண்ணு முழிச்சு வரைஞ்சா இப்படி தான் இருக்கும்…”
“ப்ச்… விடு மேன், இதமா ஏசி, பாட்டு சத்தம்னு கொஞ்சம் கண் அசந்துட்டேன்… அதுக்குப் போயி…” என்றவன் நிமிர்ந்து அமர, “உங்க ஓவியம் டான்ஸ் எப்படி இருந்துச்சுன்னு கேப்பாங்க, என்ன சொல்லப் போறீங்க…” என்றான்.
“அ…அவங்க டான்ஸ் முடிஞ்சுதா…” என்றான் பதட்டமாக.
“அதுக்குள்ள தான் நான் எழுப்பிட்டனே, இப்போ தான் வராங்க பாருங்க… அதோ உங்க ஓவியம் சைடுல இருந்து உங்களை எட்டிப் பார்க்குது பாருங்க…” என்றதும் திரும்பிப் பார்க்க நிஜமாலுமே ஓவியா இவனைப் பார்த்திருந்தாள்.
அவளுக்கு ஒரு சிரிப்பைக் கடத்திவிட்டு நாட்டியத்தை கவனிக்கத் தொடங்கினான். நான்கு மாணவிகள் பத்மாவின் குரலில் வழிந்த நகுமோ வுக்கு அழகாய் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தனர். அழகாய் பாவத்துடன் வெளிவந்த நாட்டியத்துக்கு ஆடல் முடிந்ததும் அரங்கம் முழுதும் கரகோஷம் நிறைந்தது. பிரம்மா உண்மையான நிறைவுடன் ஒவியாவைப் பார்த்து கட்டை விரல் உயர்த்தினான்.
மேலும் சில நாட்டியம் முடிந்ததும், ஓவியாவின் எண்ணுக்கு ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு, “ராகவ், புரோகிராம் முடியும் முன்னாடி கிளம்பிடலாம்… அப்புறம் கஷ்டம்…” என்றவன் எழுந்து கொள்ள ராகவும் பின் தொடர்ந்தான்.
இவர்கள் அரங்கை விட்டு வெளியே செல்வதற்குள் ஓவியா, ராதிகாவுடன் அங்கே வந்திருந்தாள்.
இவர்களைக் கண்டதும் வேகமாய் அருகில் வந்தவள், “நான் கூப்பிட்டதும் மறுக்காம வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் தேவ்… இது ராதிகா, என் பிரண்டு… இவளும் உங்க ரசிகை தான்…” என்று படபடவென்று சொல்ல ராதிகாவும், ராகவும் வியப்புடன் பார்த்து நின்றனர்.
“சரி கிளம்பறேன் ஓவியமே, முடிஞ்சதும் கால் பண்ணு…”
“என்னடா நடக்குது இங்க…” என்பது போல் அவர்கள் இருவரும் முழித்துக் கொண்டு நிற்க, ஓவியாவுடன் பேசத் துடித்துக் கொண்டிருந்த ராகவ் பிரமை பிடித்தது போல் நிற்க, பிரம்மா அவனை இழுத்துக் கொண்டு காருக்கு சென்றான்.
“ஏய் ஓவி, ரெண்டு பேரும் என்னடி பேசுனிங்க, எனக்கு ஒண்ணுமே புரியல…” என்றவளை இழுத்துக் கொண்டு நடந்தவள், “ஏன், நாங்க தமிழ்ல தானே பேசினோம்… இதுல புரியறதுக்கு என்ன… சரி வா, டைம் ஆச்சு… எல்லாம் பாக் பண்ணா கிளம்பும்போது சரியாருக்கும்…” என்றவளைப் புரியாமலே பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.
“தெய்வமே, அதென்ன உங்களை ஓவியம் தேவ்னு கூப்பிடுது… உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே பழக்கம் இருக்கா… எனக்கு மட்டும் தான் உங்க ஒரிஜினல் பேரு தெரியும்னு பெருமைப்பட்டுட்டு இருந்ததெல்லாம் வீணா… நீங்க என்னடான்னா ஓவியமேன்னு ரொம்ப உரிமையா சொல்லறீங்க… இதெல்லாம் என்ன, எனக்கு ஒண்ணுமே புரியல, சொல்லிட்டேன்…” என்றான் பாவமாக.
“புரிய வேண்டிய சமயத்துல எல்லாம் புரியும்… முதல்ல வந்து கார்ல உக்காரு…” என்ற பிரம்மா காரை நோக்கி செல்ல யோசனையுடனே பின் தொடர்ந்தான் ராகவ்.
“இது எப்ப, எப்படி சம்பவிச்சிருக்கும்… எல்லாத்தையும் நம்ம கிட்ட சொல்லுற தெய்வம் இதைப் பத்தி மூச்சு விடலியே… ஹூம் எதும் சம்திங் சம்திங்கா இருக்குமோ, கவனிப்போம்…”
அமைதியாய் காரில் அமர்ந்தவன் பிரம்மா காரை எடுத்து சாலையில் கலந்த பின்னும் அமைதியைத் தொடர, “என்ன மேன், எட்டு மணிக்கு மேல ஏதும் மௌன விரதமா…” என்று கேட்க முறைத்தான்.
“இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை தெய்வமே… என் கிட்டயே எதுவும் சொல்லாம மறைக்கறிங்கன்னா இதுல ஏதோ நிச்சயம் இருக்கு…”
“ஆமா இருக்கு… இல்லாமலா நாங்க இப்படிப் பேசிக்குவோம்…” பிரம்மா சொல்லவும் அதிர்ந்தான்.
“என்னது, இருக்கா… ஒருவேளை, சம்திங், சம்திங்…”
“அடேய், அறிவு கெட்ட கோமாளி… உனக்கு முன்னாடி இருந்தே எனக்கும் அவளுக்கும் பழக்கம் இருக்கு…”
“என்ன, எனக்கு முன்னாடியேவா…” என்றான் அதிர்ச்சியுடன்.
“ஒருவேள, போன ஜென்மத்தில கூட இருந்திருக்கலாம்…” பிரம்மா சிரிப்புடன் சொல்ல ராகவ் கடுப்புடன் முறைத்தான்.
“நான் இப்ப உங்களை கொல்லப் போறேன்…” என்றவனை நோக்கி சிரித்தவன், “புலம்பாத, சொல்லறேன்…” என்றான்.
ஓவியமல்ல அவள்…
தூரிகையே அவள்தான்…
வண்ணங்களல்ல அவள்…
எண்ணமே அவள்தான்…
உள்ளத்தில் கருவான
பிரம்மனின் தூரிகை அவள்….

Advertisement