Advertisement

அத்தியாயம் – 1
சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட், காலை நேரத்தில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
டியூட்டியில் அழகிய யூனிபார்முடன் இருந்த சிங்கப்பூர் யுவதிகள் பளிச்சென்று கண்ணை நிறைத்தனர். அங்கங்கே மலாய், ஆங்கிலம், தமிழ், சீன மொழிகள் கலவையாய் ஒலித்துக் கொண்டிருந்தன.
சென்னைக்கு புறப்படப்போகும் விமானத்தின் வரவிற்காய் பார்மாலிட்டீஸ் முடிந்து டிபார்ச்சர் லாஞ்சில் இருந்த இருக்கைகளில் பயணிகள் நிறைந்திருந்தனர்.
“ஏய், அது பிரம்மா சார் தானே…” இளவயதுப் பெண்ணொருத்தி அருகிலுள்ள பெண்ணிடம் கேட்க, அவளும் இவள் சொன்ன திசையில் பார்வையைத் திருப்ப மலர்ந்தாள்.
“வாவ், அவரே தான்… வா ஆட்டோகிராப் வாங்கலாம்…”
உற்சாகத்துடன் சொன்னவள் பாகிலிருந்து ஆட்டோகிராப் நோட்டையும், பேனாவையும் எடுத்துக் கொண்டாள். இருவரும் பின் சீட்டில் தனியே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த பிரம்மாவை நோக்கி சென்றனர்.
“எக்ஸ்கியூஸ்மி சார்…” கண்ணைக் கவ்வியிருந்த கறுப்பு நிறக் கண்ணாடிக்குள் இமைகளை மூடி இருக்கையில் தலை சாய்த்து இருந்தவன் இவர்களின் அழைப்பில் கண்ணைத் திறந்தான்.
“எஸ்…” அடர்ந்திருந்த மீசை, தாடிக்குள் ஒளிந்திருந்த இதழ்கள் அவர்களை என்னவென்று கேட்க, பெண்கள் இருவரும் சிரித்தனர்.
“சாரி சார், டிஸ்டர்ப் பண்ணிட்டமா… நாங்க உங்க பான்ஸ்… எங்களுக்கு உங்க ஆட்டோகிராப் வேணும்…”
“ஹோ, யா…” என்றவன் கையால் முடியைக் கோதி ஒதுக்கிக் கொண்டு அவளது ஆட்டோகிராப் நோட்டை வாங்கினான்.
உயிர்களைப் படைப்பவன்
பிரம்மா என்றால்
உருவங்களைப் படைக்கும்
நானும் ஒரு பிரம்மா…
அழகாய் எழுத்துகள் பளிச்சிட அதற்கு கீழே பிரம்மா… என்று கையெழுத்திட்டு, அடிக்கோடிட்டு அவளிடம் நீட்டினான். அதைப் பார்த்த அவளின் விழிகள் வியப்பில் விரிந்தது.
“வாவ்… தேங்க் யூ சார்… உங்க படைப்பில் ஓவியங்கள் அழகா இருக்கற போல அந்த பிரம்மன் படைப்பில் நீங்களும் ரொம்ப அழகா, ஹான்ட்சமா இருக்கீங்க சார்…” அதைக் கேட்டவனின் இதழ்கள் புன்னகையில் நெளிந்தன.
“ஹாஹா… நைஸ், குட் காம்ப்ளிமென்ட்…” சிரிப்போடு அவனது குரல் கம்பீரமாய் ஒலித்தது.
“சார், சென்னை பிளைட்டா…”
“எஸ்…”
“ஓகே சார், ஹாவ் எ சேப் அண்ட் ப்ளசன்ட் ஜர்னி…” என்ற பெண்கள் அங்கிருந்து நகர்ந்தனர். சென்னை விமானம் ரன்வேயில் ஊர்ந்து கொண்டிருக்க பயணிகள் எழுந்து தயாராகத் தொடங்கினர்.
தாடியை சொறிந்து கொண்டே எழுந்து சோம்பல் முறித்தவனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி சிணுங்கியது. எடுத்தவன் டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்த ராகவ் பெயரைக் கண்டதும் சிரிப்புடன் காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லு மேன்…”
“சார், எப்ப சென்னை கிளம்பறீங்க… இந்த வாரத் தொடருக்கான உங்க ஓவியம் இன்னும் வந்து சேரலைன்னு வார இதழ் பத்திரிகையில் இருந்து கூப்பிட்டு நச்சரிக்கிறாங்க…”
“ம்ம்… ஆன் தி வே ராகவ்… இப்ப 9.55, சரியா 11.50 க்கு உன் முன்னால இருப்பேன்…”
“ஓ… கிளம்பிட்டிங்களா தெய்வமே… ரொம்ப சந்தோஷம்… நான் ஏர்போர்ட்டுக்கு பிக்கப்க்கு வந்திடவா…”
“வேண்டாம்… நானே வந்துடறேன்… வச்சிடறேன்…” என்றவன் பதிலை எதிர்பாராமல் இணைப்பைத் துண்டித்தான்.
சென்னை செல்வதற்கான அலுமினியப் பறவை பயணிகளுக்காய் காத்திருக்க, அதை நோக்கி நடந்தவர்களுடன் பிரம்மாவும் தொடர்ந்தான்.
ஸ்கூல் பிள்ளைகளைப் போல் முதுகில் ஒரு பாக்… காதில் கறுப்பு வளையம்… கழுத்தை இறுகக் கவ்வியிருந்த டீஷர்ட்டுடன் ஒரு ஸ்கார்ப்பும் பரமசிவன் கழுத்தில் பாம்பு போல் சுற்றிக் கிடந்தது. நீள்சதுர முகம், கூர்மையான மூக்கு, மெல்லிய இதழ்கள்… அடர்ந்த மீசையும், தாடியும் ட்ரிம் செய்யப்படாமல் அதிகமாய் வளர்ந்திருக்க தலை முடியும் சீண்டப்படாமல் கிடந்தது. ஆஜானுபாகுவான தோற்றத்தில் நல்ல உயரத்தில் கம்பீரமாய் இருந்த பிரம்மா, ஒரு உலகம் சுற்றும் வாலிபன். 
விமானத்தில் ஏறி தன்னை நோக்கிப் புன்னகைத்த விமானப் பணிப்பெண்ணுக்கு, ஒரு பதில் புன்னகையை வழங்கிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்தான். பிரம்மாண்ட விமானம் மெல்ல உருளத் தொடங்கி, தவழ்ந்து, உயரே எழும்பியது.
பிரம்மா, பிரபல ஓவியன்… அவனது ஓவியம் வராத தமிழ்ப் பத்திரிகைகளே கிடையாது எனலாம். கண்ணால் கண்டது மட்டுமின்றி காணாத கற்பனைக் காட்சியையும் ஓவியமாய் வடிக்கும் திறமை கொண்டவன்.
சிறுவர் இதழ், நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று அவனது பெயர் பதிக்காத ஓவியங்கள் கொண்ட பத்திரிகைகளே கிடையாது.
திறமையும், சுறுசுறுப்பும் அவனை இள வயதிலேயே அனைவருக்கும் பரிச்சயமாக்கி இருந்தது. 29 வயதுக்குள் நிறைய விருதுகள், தனக்கென்று நிலையான பெயர் பெற்றிருந்தும் ஒவ்வொருநாளும் புதிய உற்சாகத்துடனே ஓடிக் கொண்டிருக்கிறான்.
“எதுக்கு அம்மு, பயப்படற… கண்ணைத் திறந்து கீழே பாரு… பக்கத்துல உள்ள பிரம்மாண்டமான, பெரிய விஷயங்கள் எல்லாம் தள்ளி நின்னு பார்க்கும்போது எத்தனை சின்னதா இருக்குன்னு தெரியும்…” ஒரு பெண்மணியின் குரல் ஒலிக்க, சட்டென்று திரும்பிப் பார்த்தான் பிரம்மா.
அருகில் பயத்தில் கண் மூடி அமர்ந்திருந்த மகளிடம் அன்னை சொல்லிக் கொண்டிருக்க புன்னகைத்தான்.
“உண்மைதான்… நாம் பிரம்மிக்கும் எத்தனையோ விஷயங்கள் அருகே செல்கையில் இல்லாமல் போவதும், நாம் பெரிதாய் யோசிக்கும் பிரச்சனைகள் விலகி நிற்கையில் சிறிதாய் போவதும் தானே வாழ்க்கை…” யோசித்தவனின் இதழ்கள் முறுவலித்தது.
“அம்மு…” நினைவுகள் அந்த அம்மு என்ற அழைப்புப் பெயரில் சிக்கிக் கொள்ள, மனதுக்குள் ஒரு சிறுமியின் முகம் மங்கித் தெளிந்தது. இதயம் சுகமாய் பழைய சம்பவத்தை அசை போடத் தொடங்கியது.
பதினான்கு வருடங்களுக்கு முன்பு.
தண்டவாளத்தை உரசிக் கொண்டு தடதடத்துப் பாய்ந்து கொண்டிருந்தது அந்தப் புகைவண்டி. பசுமையைப் போர்த்திக் கொண்டு வரிசையாய் நின்ற மரக்கூட்டங்கள் சடசடவென்று கடந்து போக, காற்று சுகமான தாலாட்டாய் உள்ளே பயணிப்பவரைத் தழுவிக் கொண்டிருந்தது.
புகைவண்டிக்குப் போட்டியாய் வானில் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த வெண் மேகங்கள் சூரியனை ஒளித்து விளையாடிக் கொண்டிருந்தன. ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து அன்று காலையில் புறப்பட்டிருந்த ரயிலில் அவ்வளவாய் கூட்டமில்லாமல் இருந்தது. அங்கங்கே பயணிகள் தனியாகவும், குடும்பத்துடனும் அமர்ந்திருக்க அனைவருக்கும் முகத்தில் ஏதேதோ யோசனைகள், குழப்பங்கள், சந்தோஷங்கள்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாலும் இந்தக் காட்சிகள் எதுவும் கருத்தில் பதியாமல் கண்ணில் நிறைந்த கண்ணீருடன் கையிலிருந்த புகைப்படத்தைப் பார்ப்பதும், நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்வதுமாய் அமர்ந்திருந்தாள் பத்து வயது சிறுமி ஒருத்தி. எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அவளது தந்தை கவலையுடன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த மற்ற இருக்கைகள் எல்லாம் காலியாக இருக்க அவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
“அம்மு, இப்படியே அழுதிட்டு இருந்தா எப்படிடா, பசிக்கலையா…” அன்புடன் கேட்ட தந்தையை கண்ணீருடன் நோக்கியவள் மௌனமாய் கையிலுள்ள புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“அடுத்த ஸ்டேஷன்ல வடை, பிஸ்கட் எதுவும் வாங்கித்தரேன், சாப்பிடறியா…” அவர் கேட்க இடவலமாய் தலையாட்டி மறுத்தவள் வெளியே வெறித்தாள்.
தந்தை சங்கடத்துடன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எப்படி சந்தோஷமாய் ஓடியாடிக் கொண்டிருந்த குழந்தை… அன்னையின் இழப்பில் அடியோடு தளர்ந்து விட்டாளே…” கண்கள் பனிக்க, மனம் மனைவியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது.
“சாருமதி…” பெயர் போலவே அழகான, மென்மையானவள். விசாகப்பட்டினத்தில் ஆசிரமம் ஒன்றில் வளர்ந்தவள் படித்து பெரியவளாகி, ஒரு பள்ளியில் நடன ஆசிரியையாகப் பணி புரிந்து வந்தாள். தினமும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தவள் அங்கு ரயில்வேயில் பணிபுரிந்த சிவநேசனின் கண்ணிலும் பயணிக்கத் தொடங்கினாள்.
மிக அழகான பெண்களைக் கொண்ட மாநிலம் ஆந்திரா என்பதற்கு அவளும் ஒரு அடையாளமாக இருந்தாள். அவர்களுக்கே உரித்தான அழகும், எடுப்பான தோற்றமும், நிமிர்வும், பண்பும் சிவநேசனை வசீகரிக்க இருவரும் ஒருவரையொருவர் மனமார விரும்பினர். இருவர் கண்களும் உரசத் தொடங்க, ரதியும், மன்மதனும் பின்னிலிருந்து காதல் கீதம் வாசிக்கத் தொடங்கினர். சிவநேசனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். அத்தையின் பொறுப்பில் வளர்ந்து, படித்து தனக்கென்று ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டவர். எனவே அவர்களின் மாநிலக் கலப்புத் திருமணத்துக்கு பெரிதாய் எதிர்ப்பு இல்லாமல் போனது.
ஆந்திராவும், தமிழ்நாடும் இணைந்ததன் அடையாளமாய் அவர்களின் மாசற்ற காதலுக்குப் பிறந்தவள் தான் ஓவியா.
சாருமதி அழகோடு அன்பும் நிறைந்தவளாய் இருக்க எந்தப் பிரச்சனையும் இல்லாத மகிழ்ச்சி மட்டுமே நிறைந்த இல்வாழ்க்கை. உறவென்று யாருமில்லாத அவர்களின்  உதிரத்தில் ஜனித்த மகளை நேசத்தில் குளிப்பாட்டினர். பிறந்ததும் அழகான ஓவியம் போல் ரோஜாக் குவியலாய் கிடந்த மகளுக்கு ஓவியா என்றே பெயரிட்டனர். அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டனர். பிடித்ததெல்லாம் செய்து கொடுத்தனர்.
நாட்டிய ஆசிரியையான சாருமதி மகளுக்கும் நாட்டியம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். ஓவியாவுக்கும் அதில் மிகவும் விருப்பம் இருக்கவே சீக்கிரமே கற்றுக் கொள்ளத் தொடங்கினாள். அத்தோடு பாட்டு கிளாசுக்கும் போகத் தொடங்கினாள். தங்களின் குழந்தைப்பருவத்தில் எதிர்பார்த்து கிடைக்காமல் போன சந்தோஷங்களை எல்லாம் மகளுக்குக் கொடுத்து விடும் முனைப்பில் பெற்றோர் இருந்தனர்.
தாய் தந்தையின் அரவணைப்பில் ஓவியா மிகவும் சந்தோஷமாய் வளரத் தொடங்கினாள். அன்னையின் அழகின் மீது எப்போதும் அவளுக்குப் பெருமை இருந்தது. தானும் அன்னையின் உருவத்தை ஒத்து இருப்பதில் மிகுந்த சந்தோசம் கொண்டிருந்தாள். காதலிக்கும்போதே தமிழ் படிக்கத் தொடங்கியிருந்த சாருமதி, கணவனின் தாய்மொழியை குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதற்காய் வீட்டில் தமிழிலேயே பேச முயல ஓவியாவும் நன்றாகத் தமிழ் கற்றுக் கொண்டாள்.
பத்து வருடம் சந்தோசத்தை மட்டுமே அவர்களுக்குக் கொடுத்திருந்த வாழ்க்கையில் யார் கண் பட்டதோ சாருமதிக்கு அடிக்கடி தலைவலி வரத் தொடங்கியது.
மாத்திரை, தைலம் என்று எடுத்துக் கொண்டாலும் விடாமல் வலிக்கவே தளர்ந்து போனாள். அன்னைக்கு இப்படி ஆனதால் ஓவியாவும் சோர்வுற்றாள்.
சிவநேசன் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, சாருமதிக்கு மூளையில் கட்டி இருப்பதாக பெரிய குண்டைத் தூக்கி தலையில் போட்டனர். சிகிச்சை தொடங்கியது.
அழகே உருவான தாய் மொட்டைத் தலையுடன் ஆளே உருமாறிப் போக ஓவியாவால் தாங்க முடியவில்லை.
தன்னை நினைத்து கணவனும், மகளும் வருந்துவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்க மாத்திரையை அப்படியே வாயில் சரித்துக் கொண்டு நிரந்தர நித்திரைக்கு வழி தேடிக் கொண்டாள் சாருமதி.
முடிந்தது… சாருமதியின் இறுதிக் காரியத்தை நல்லபடியாய் முடித்தார் சிவநேசன். மனைவியின் இழப்பைக் கூட விதியென்று தேற்றிக் கொண்ட சிவநேசனுக்கு அன்னையின் நினைவில் மூலையில் சுருண்டு கொள்ளும் மகளின் கண்ணீரைத்தான் சகிக்க முடியவில்லை.
சதர்ன் ரெயில்வேயில் விசாகப்பட்டினத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் தமிழ்நாட்டுக்கே திரும்பிவிட நினைத்தார். சென்னையில் அவரது அத்தை இருப்பதால் மெல்ல மகளை மீட்டெடுக்க முடியுமென்ற நம்பிக்கையில் டிரான்ஸ்பருக்கு விண்ணப்பிக்க உடனே கிடைத்தது.
இப்போது சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஓவியா உண்மையில் அன்னையில் இழப்பில் மிகவும் முடங்கிப் போயிருந்தாள். சரியாய் சாப்பிடாமல் தூங்காமல் அன்னையின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு எப்போதும் வற்றாத கண்ணீருடன் இருக்கும் மகளைத் தேற்ற சிவநேசன் எத்தனையோ முயன்றும் முடியவில்லை.
அன்னை, தந்தையைத் தவிர வேறு உறவுகளின் நேசத்தை அறிந்திராத பத்து வயதுப் பெண்ணுக்கு இழந்துவிட்ட அழகான உலகத்தைத் தாண்டி வேறு எதையும் யோசிக்கக் கூடப் பிடிக்கவில்லை. கவலையுடன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவநேசன்.
புகைவண்டியின் ஹாரன் நீண்டு ஒலித்து மெல்ல வேகம் குறைய, எந்த ஸ்டேஷன் என்று வெளியே பார்த்தார்.
“நரசிங்கப்பள்ளி” என்ற எழுத்துகள் மஞ்சள் பலகையில் தெலுங்கிலும், ஆங்கிலத்திலுமாய் பளிச்சிட்டது. புகைவண்டி மெல்ல ஓய்வெடுத்துக் கொள்ள ஸ்டேஷனில் சில பயணிகள் இறங்க, சிலர் ஏறினர். வாழ்க்கையை ஏற்ற இறக்கங்களைக் கடந்து பயணிக்க வேண்டுமென்று சொல்வது போல் இருந்தது.
சுறுசுறுப்புடன் காபி, டீ… வடா… என்ற வார்த்தைகள் உற்சாகமாய் ஒலிக்கத் தொடங்க மகளைப் பார்த்தார்.
“அம்மு… ஏதாச்சும் சாப்பிடறியா…” வேண்டாமென்று தலையாட்டினாள்.
“சரி, அப்பா தண்ணி பாட்டில் வாங்கிட்டு வரேன்… இங்கயே இரு…” என்றவர் எழுந்து சென்றார். அவள் வெளியே பார்த்துக் கொண்டிருக்க சில பயணிகள் அங்கங்கே ஏறி அமர இருக்கைகள் நிறைந்து தெலுகு மணத்தது.
சிவநேசன் தண்ணி பாட்டிலுடன் பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏற சைரன் ஒலித்தது. அப்போது ஒரு பையன் ஏறுவதற்காய் ஓடி வர வண்டி நகரத் தொடங்கியதைக் கண்டவர் படியின் அருகேயே நின்றார். அந்தப் பையன் வேகமாய் கையிலிருந்த பாகை வண்டிக்குள் எறிந்துவிட்டு நகரத் தொடங்கிய ரயிலுக்குள் கம்பியைப் பிடித்து ஏறினான்.
“வண்டி நகரத் தொடங்கிருச்சே தம்பி… இப்படியா ஓடி வந்து ஏறுறது… மிஸ் ஆனா என்னாகறது…” அவர் தெலுங்கில் சொல்ல, “ப்ச்… எனக்கு ஆயுள் கெட்டின்னா ஒண்ணும் ஆயிருக்காது சார்…” என்று தமிழில் சொன்னவனின் பாதி வார்த்தைகள் புரியாமல், “தமிழா தம்பி…” என்று உடனே தமிழுக்குத் தாவினார்.
பெரிதாய் மூச்செடுத்துக் கொண்டு தன்னை சமாதானித்துக்  கொண்டவன், “ஆமா சார்… கொஞ்சம் தண்ணி தரீங்களா ப்ளீஸ்…” என்றதும், மறுக்க மனமில்லாமல் புதிதாய் வாங்கிய தண்ணி பாட்டிலை நீட்டினார்.
வாங்கி மளமளவென்று பாதி பாட்டிலை வாய்க்குள் சரித்துக் கொண்டவன் நன்றியுடன் நீட்டினான்.
அவர் தனது சீட்டுக்கு செல்வதற்காய் நடக்க அவனும் பின்னிலேயே வந்தான். முதலிலேயே அவர்களின் இருக்கை இருந்தது. அதில் இப்போது நிறைய பேர் அமர்ந்திருக்க, சிவநேசன் மகளின் முன் அமர்ந்து தண்ணி பாட்டிலையும் பிஸ்கட்டையும் நீட்ட, வாங்கி வைத்துக் கொண்டாள்.
அம்முவின் அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தவன் அவளை நோக்கி சிநேகமாய் சிரிக்க, திரும்பிக் கொண்டாள். அதைக் கண்டு கொள்ளாமல் தோளைக் குலுக்கிக் கொண்டு பாக்கெட்டில் இருந்த பபிள் கம் ஒன்றைப் பிரித்து வாயில் அடக்கிக் கொண்டவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.
“தனியாவா தம்பி வந்த…” மகளின் அருகில் அமர்ந்த அந்தப் பையனிடம் சிவநேசன் கேட்டார்.
“ம்ம்… வந்தது தனியா தான்… இப்பதான் இங்கே நிறைய பேர் துணைக்கு இருக்கீங்களே…” சொல்லி சிரித்தவனின் உதடோடு கண்ணும் சேர்ந்து சிரிக்க அவனது எதார்த்தமான பேச்சு அவருக்கு ரொம்பப் பிடித்தது.
“ம்ம்… நல்லாப் பேசறியே… உன் பேரு என்ன…”
“தேவ், தேவ் கிருஷ்ணா…” என்றவனை அம்மு நிமிர்ந்து பார்க்க அவளை நோக்கி சிரித்தவன், “ஹாய்… உங்க பொண்ணா சார்…” என்றான் சிவநேசனிடம்.
“ம்ம்… ஆமா தேவ்… உன் பேரு ரொம்ப நல்லாருக்கு…”
“தேங்க்ஸ் சார்… மத்தவங்க கிட்ட பேசவே யோசிக்கிற இந்தக் காலத்துல நீங்களும் ரொம்ப நல்லாப் பேசறீங்க அங்கிள்…” சட்டென்று சார், அங்கிளாக சிரித்தார்.
“நாங்க சென்னை, நீ எந்த ஊருக்கு தேவ்…”
“ஓ… நானும் சென்னைக்கு தான் அங்கிள்…” என்றவன் தாங்கள் பேசுவதை கவனிக்காமல் ஏதோ யோசனையில் அடிக்கடி கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அம்முவையும் கவனித்தான்.
எதற்கோ குனிந்தவளின் கையிருந்த புகைப்படம் கீழே விழ, சட்டென்று குனிந்து எடுத்தவன், “உங்க அம்மாவா… ரொம்ப அழகாருக்காங்க…” என்று சொல்லிக் கொடுக்க அவள் கண்கள் சட்டென்று குளமானது. அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவனுக்கு எதுவும் புரியவில்லை.
அதீத அன்போ கண்
துடைக்கும் ஆறுதலோ
தேவையில்லை…
ஆதரவாய் சாய்ந்திட
தோள் மட்டும்
கொடு போதும்…

Advertisement