Advertisement

அங்கே, தெளதொளப்பாய் ஒரு பேண்ட் மட்டுமே அணிந்திருந்தபடி இறுகி போன முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தான் பிர்லா.

ஒரு கையில் மாத்திரையும், மறுகையில் வாட்டர் பாட்டில் ஒன்றில் தண்ணீருமாய் வந்தவள் “வாயை திறங்க” என்றாள்.

பாட்டிலையும் மாத்திரையையும் தட்டி விடும் வேகம் வந்தாலும், இன்னமும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்த அவளது நிலை அவனை வாய் திறக்க வைத்தது. வயிற்றினுள்ளே வாங்கி கொண்டான் மாத்திரையும்,  நீரையும்.

“ஏண்டா, மழையில் நனைஞ்சு விளையாட நீ என்ன சின்ன பிள்ளையாடா?” சந்திராவின் குரலில் இருவருமே அவரை திரும்பி பார்த்தனர்.

அவனருகில் வந்தவர் “மாத்திரை கொடுத்து விட்டேன் போட்டியா?” என

“போட்டுடாங்க மாமா” என அவன் பதில் சொல்லாததால் பிர்லவிற்க்கு பதில் இவள் தான் பதில் சொன்னாள்.

இவனது அமைதியை குழப்பமாய் பார்த்தவர், அவனை நெருங்கி அவன் நெற்றியில் கை வைத்து பார்த்து,  உடல் சூடு எதுவும் இல்லை என உணர்ந்து “காய்ச்சல் எதுவும் இல்லை” என தனக்கு தானே பேசியபடி,

“அவனுக்கு காய்ச்சல் வந்துடும் இப்படி பயப்படுற நீ, இப்படி ஈரத்தோடு நின்னால் உனக்கும் தான் காய்ச்சல் வரும். நீ போம்மா  நான்  இவனை பார்த்துகிறேன்” என

ஓரிரு நிமிடங்களை அவனையே பார்த்தபடி நின்றவள், “போ ப்ருந்தா இவனை நான் பார்த்துகிறேன்” என  வலுக்கட்டாயமாய் அனுப்பி வைத்தார்.

ஈரம் தோய்ந்த உடையுடன் செல்லும் அவளை விட்டு இம்மியும் அகலவில்லை பிர்லாவின் விழிகள்.

அவள் சென்றவுடன் அப்படியே கட்டிலில் படுத்தவன் தான் இறுக்கமாய் கண் மூடிக்கொண்டான். “என்னடா எதுவும் பிரச்சனையா?” என கேட்ட தந்தைக்கு இவன் பதிலும் சொல்லவில்லை. இவனது இந்த பேரமைதியை பார்த்து சந்திராவும் அமைதியாய் படுத்து கொண்டார்.

கண் மூடி படுத்திருந்தவனுக்குள் பிருந்தாவின் எண்ணங்கள் படையெடுத்தன. அவளது வீட்டில் இருந்து அழைத்து வந்த போது எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் அவளது பெற்றோர் அனுப்பி வைத்தது,

திருமணத்திற்கு முன்பே தன் வீட்டில் தங்க அனுமதி கொடுத்தது, இதோ வீட்டில் ஒருத்தியாய் எந்த ஒரு தயக்கமும் இல்லமால் சுதந்திரமாய்  இவள் வலம் வந்தது,

தான் எத்தனை திட்டினாலும் அத்தனையும் வாங்கி கொண்டு அமைதியாய் இருந்தது, உரிமையாய் கோபம்கொண்டு தன்னை அடித்தது, அரவணைத்தது,

இதோ இப்போது கூட நடந்த அத்தனையையும்  ஒவ்வொன்றாய் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி வலம்வர

ஆச்சர்யம், அதிர்ச்சி, கோபம், ஆத்திரம், கலக்கம், கண்ணீர், ஏக்கம், தாபம் என, இவளை பார்த்த நாளில் இருந்து தன்னிடம் வெளிப்படுத்தும் நவரசங்களும் அவன் கண்களுக்குள் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.

எல்லாவற்றையும் மீறி, பிரக்னன்ஸி கார்டை பார்த்தபோது அவள் கொண்ட அதிர்ச்சியும், கண்களில் மிளிர்ந்த காதலும், அதில் பிரதிபலித்த இயலாமையும் அவன் நிம்மதியை அடியோடு விரட்டியது.

தாலி, சிலை, கார்ட் இம்மூன்றும் கொடுத்த உணர்வுகளையே தாங்க முடியவில்லை, இன்னும் எத்தனை  பொக்கிஷங்கள் மறைந்து இருக்கிறதோ? இருவரின் வாழ்விலும். நினைக்க நினைக்க வலி தான் மிஞ்சியது.

 ‘அப்பா அம்மா தாத்தா பாட்டி ப்ருந்தா, அத்தனை பேரும் ஏமாத்திட்டீங்கல்ல’  என்ற கோபம்  இறுதியில் பேயாட்டம் போட்டது அவனுள்.

அங்கே பிருந்தாவிற்கோ  நடு இரவிற்கு மேல் ஆகியும் இவளுக்கு உறக்கம் வரவேயில்லை. ‘இதே போன்றதொரு ஒரு அழகான மழை நேரத்தில் இருவரும் சேர்ந்து நனைந்த தருணங்களும், அதன் பின்னான கெங்காவின் இறப்பும், அதை தொடர்ந்து பிர்லாவின் துடி துடித்து தூக்கி போட்ட உடலும், சுயநினைவின்றி உயிரற்ற உடலாய் மருத்துவணையில் கிடந்த தருணங்களும், மீண்டும் ஒரு மரண பயத்தை அவள் கண் முன் வரவழைக்க, உறக்கம் என்பது அவளை உரச கூட மறந்து போய் நின்றிருந்தது.

அதற்கு மேல் நிலை கொள்ளாமல் அவனது அறைக்கு சென்றாள்.

கட்டிலின் ஒரு புறம் பிர்லா, மறுபுறம் சந்திரா என இருவரும் படுத்திருந்தனர். மெல்ல நடந்து அவனருகே சென்றாள்.நெற்றி கழுத்து என வருடியது அவள் விரல்கள். உடல் சூடில்லை, என இவள் நிம்மதி கொள்ளும் முன், கழுத்தில் பதிந்திருந்த கையை இறுக்கமாய் பிடித்திருந்தான் பிர்லா.

இவள் திடுக்கிட்டு போய், கையை தன் புறமாய் இழுக்க, பிர்லாவோ விடுவதாய் இல்லை.

‘பிர்லா’ லேசாய் இவனை அழைக்க, பட்டென விழித்த அவன் விழிகள் இருட்டிலும் பளபளத்தது.

அந்த பார்வை ஏதோ செய்ய, கையை உருவி கொண்டு வேகமாய் அங்கிருந்து அகன்றாள். தனது அறைக்கு வந்தவளுக்கு யோசிக்கவும் நேரம் தராமல் பின்னோடு வந்திருந்தான் பிர்லா.

வந்தவன் கதவை சாற்றி அதன் மீது சாய்ந்து நிற்க, இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்தது. உரிமை தானகவே வந்து ஒட்டி கொள்ள, அவளையே பார்த்திருந்தான்.

இரவு தூங்கவே இல்லை என்பதை அவன் சிவந்த  விழிகள் காட்டி கொடுக்க, ‘மனைவி என்ற உண்மையையாவது இவனிடம் சொல்லி இருக்கலாமோ? நானும் மற்றவர்களுடன் சேர்ந்து இவன் உணர்களோடு விளையாடுகிறனோ?’ அவன் மனம் கூறிய நொடி, சிறு தேம்பல் வெடிக்க, ஓடி சென்று அவன் மார்பில் சாய்ந்தாள்.

“சாரி பிர்லா  நானும் உன்னை கஷ்டபடுத்திட்டேன், உன் உணர்வுகளோடு மோசமா விளையாடிட்டேன் கோவல்களுக்கிடையே  வார்த்தைகள் வந்து விழ அவனை இறுக கட்டி கொண்டாள்.

“ஆக்ஸிடண்டில் தான் அம்னீசியா வந்தது, அதில் தான் எல்லாத்தையும் மறந்துட்டேன்னு இது வரை நம்பிட்டு இருந்தேன்!  நீயாவது சொல்லு, முழுசா சொல்லு! என்ன நடந்ததுன்னு சொல்லு” என்ற  பிர்லாவின் வார்த்தையில் பட்டென விலகி நின்றாள்.

விலகிய விலகல் சொன்னது ‘நான் சொல்ல மாட்டேன்’ என

“நீ சொல்லாத வரை ‘எனக்கு என்ன ஆச்சுன்னு’ தெரியாத வரை நான் இப்படி தான் இருப்பேன், உனக்கு உன்னோட பழைய பிர்லா வேணுமா வேண்டாமான்னு நீ தான் முடிவு பண்ணனும்” இவன் அமைதியாய் கூறியதில்

“எனக்கு பழைய பிர்லா வேணும் தான் அதற்காக, உன்னை இழக்க நான் தயாராய் இல்லை பிர்லா. ஏற்கனவே நீ உயிரோட துடி துடிச்சதை கண்ணால பார்த்து, பைத்தியம் பிடிச்சு போய் பைத்தியமா இருந்தேன். இப்போ மறுபடியும் அதே தப்பை நான் செய்ய விரும்பலை. எனக்கு நீ மட்டும் போதும். இந்த பிர்லா மட்டும் போதும், போதும்” சொல்லிய படி மீண்டுமாய் அவன் மார்பிலேயே சாய்ந்தாள் ப்ருந்தா.

“அப்படி என்ன தான் நடந்தது ப்ருந்தா”

“எல்லாத்தையும் மறந்த நீங்க, இதையும் மறந்திடுங்க, அது தான் உங்களுக்கு நல்லது”

“உன்னை கண்டுபிடிச்சு தேடி வந்ததையா? கணவன் மனைவின்னு கூட பார்க்காமல் நம்ப இரண்டு பேரு வீட்டிலேயும் பிரிச்சு வச்சதையா? இல்லை நீயும் சேர்ந்துகிட்டு என்னை தனியா விட்டுட்டு போனதையா? எதை மறக்க!” மார்பில் இருந்தவளின் முகத்தை நிமிர்த்தி இவன் கேட்க

“கேள்வி கேட்கிறது ஈசி, ஆனால் பதில் சொல்றது ரொம்ப கஷ்டம் இப்போ இந்த நிமஷம் இது மட்டும் தான் நிஜம் இது தவிர எல்லாத்தையுமே மறந்திடுங்க”

“முடியாது, எப்படி மறக்க முடியும்? முடியவே முடியாது” இவன் வெறி பிடித்தாற்ப்போல் பேச

அதை தொடர விடவில்லை ப்ருந்தா, ஒரு முடிவுடன் “நான் மறக்க வைக்கிறேன். என்னால் மறக்க வைக்க முடியும்“ என்றவள், நொடியில் எம்பி அவன் இதழ்களில் முத்தமிட, அடுத்த நொடி, அவளை பிரிந்து நின்றான்.

“எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்திட்டு, இப்போ எதுக்கு மருந்து போடனும். காயப்படுத்தாமல் இரு அது போதும்” என்றவன். அவளையும் அந்த அறையையும் விட்டு வேக வேகமாய் வெளியேறினான்.

அதிர்ந்து நின்றது ப்ருந்தா தான்.

——-

உறக்கமில்லா இரவை கழித்தவன், மறுநாள் விடிந்ததுமே, அவன் சென்ற இடம் ஸ்ரீநாத்தின் வீடு தான்!

தந்தைக்கு அடுத்து அவனது மறந்து போன நியாபகங்கள் பலவற்றை தனக்குள் பழகி கொடுத்தவன் ஸ்ரீநாத் தான். தவிர தன்னுடைய வீடீயோவை விமல் மூலமாக ப்ருந்தாவிடம் கொடுக்க செய்தவனும் அவன் தான். அப்படி்இருக்கும் போது கண்டிப்பாய், தன்னுடைய கருப்பு பக்கங்களும் அவனுக்கு தெரிந்திருக்கும் என தான் அவனிடம் சென்றது.

ஆனால் எவ்வளவு கேட்டும் ஒழுங்கான பதிலில்லை ஸ்ரீநாத்திடம். எத்தனை முடியுமோ அத்தனை தட்டி கழித்தான்.

“பழைய பிர்லா எப்படி பட்டவன்னு எனக்கு தெரியாது ஆனால் இப்போ இந்த பிர்லா ரொம்ப ஸ்ராங், எல்லாரும் மறைக்க மறைக்க எனக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கனும்னு வெறியே வருது

வெறும் மழையில் நனைஞ்சதுக்கே ப்ருந்தா ஆடிப்போய் நின்னுட்டா!

அது அவளோட அன்பின் வெளிப்பாடுன்னு மனசுக்கு புரியது, ஆனால் என்ன நடந்ததுன்னு தெரியாமல் அந்த அன்பை ஏத்துக்க விடாமல் மூளை தடுக்குது. எங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியாமல் ப்ருந்தா கிட்டே ரொம்ப ஹார்சா பிகேவ் பண்றேன்

வீட்டில் இருக்குற அத்தனை பேரையும் பந்தாடிட்டுஇருக்கேன். மனைவின்னு கூட தெரியாமல் ப்ருந்தாவையும் சேர்த்துவச்சு கஷ்டபடுத்திட்டு இருக்கேன்

நீ் சொல்லலைன்னா, ப்ருந்தா கூட என் வாழ்க்கை சுமுகமா போகாதுடா, அவளோட நிம்மதியா வாழமுடியாது” என இவன் வார்த்தைகளில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

‘எதுவும் தெரியாமல் இருந்தால் இவன் நிம்மதியாய் இருப்பான்’ என ஸ்ரீ நினைத்ததிற்கு மாறாக பிர்லாவின் நடவடிக்கை இருக்க, இதற்கு மேல் மறைக்க வேண்டாம் என

“சொல்றேன் பிர்லா, ஆனால் உனக்கு பழைய நியாபகங்கள்  எதுவும் வராதது மாதிரி காட்டிக்க!”

“ஏண்டா?”

“தெரிஞ்ச மாதிரி காட்டிகிட்டால்,  உனக்கு எப்போ என்ன ஆகுமோன்னு ப்ருந்தாவும், உன் அம்மாவும் கண்டிப்பா நிம்மதியா வாழ மாட்டாங்க, இதுக்கு ஓகேன்னா, நான் சொல்றேன்!” என

எப்படியாவது விசயம் தெரிந்தால் போதும் என பிர்லாவிற்கும் தோன்ற இவனும் சம்மதித்தான்.

அவனது இளமை கால தலைவலியில் ஆரம்பித்து, பிட்ஸ், அவனது காதல், கலாட்டாவில் நடந்த திருமணம், அதன் பின்னான பிர்லாவின் உடல் நலகுறைவு, அதன் விளைவால் உண்டான ப்ருந்தாவின் மனநோய், அதற்காக இருவரையும் பிரித்தது வரை சொல்லி முடித்தான்.

இதில் அவன் சொல்லாமல் விட்ட ஒரே விசயம் கெங்கா தான். கெங்காவை பற்றி இப்போது இவன் தெரிந்து கொள்வது சரியல்ல என இவனுக்கே தோன்ற அதை மறைத்து மற்றவைகளை பூசி மொழுகி, அவன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் பொறுமையாய் சொல்ல சொல்ல, பிர்லாவின் முகம் வெளிறி போனது.

தன் தாய் தந்தையை விட இதில் அதிகமாய் பாதிக்கப்பட்ட ப்ருந்தாவை நினைத்து இரத்த கண்ணீர் வடிக்காத குறை தான்.

ஸ்ரீநாத்  விளக்கியவைகளுக்கு எப்படி ரியாக்ட் செய்வது? எப்படி பதில் அளிப்பது என தெரியாமல் உடைந்து போய் அமர்ந்துவிட்டான் பிர்லா. கண்களோடு இதயமும் ப்ருந்தாவிற்காக கலங்கி தவித்தது.

Advertisement