Advertisement

பகுதி 28

தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா.

பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி எடுத்து தன் கண் முன்னே காட்டிய போது அப்படி ஒரு ஆனந்தம்.

நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே கண்டறிந்திட முடியும் அவர்களது அச்சின் வார்ப்பு சிலையை கண்ட போது அத்தனை அதிர்ச்சி

ஆனால் இன்று இந்த நொடி இவன் காலடியில் கிடந்த பொக்கிஷம், இருவருக்கும் இடையே உடைந்து கிடந்த பெரும் பள்ளத்தை நிரப்பி, அவர்களுக்கு இடையேயான இடைவெளியை முற்றிலும் தகர்த்து எறிந்தது.

அந்த பொக்கிஷம் பிரக்னன்ஸி கார்ட். ஆம் அன்று ப்ருந்தா அவசரமாய் உபயோகப்படுத்திய அதே பிரக்னன்ஸி கார்ட் தான்.  அவன் காலடியில் இருந்ததை பார்த்த போதே யூகித்துவிட்டாள், இது தன்னுடையது தான் என

இதையெல்லாம் தாண்டிக்கொண்டு, திருமணமான ஒரு மாதம் கடந்த நிலையில், வெகு சில நாட்கள் தள்ளிப்போனதற்காக வீட்டிலும், மருத்துவமனையிலும் இவள் செய்த அட்டகாசங்கள் தான் எத்தனை, அழுத அழுகைகள் எத்தனை.

‘நெகட்டிவ்’ என காட்டிய பிரக்னன்ஸி கார்டை , தன் கையில் ஏந்தி கொண்டு, ‘கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள குழந்தையை எதிர்பார்த்தால் எப்படி?’ என ப்ருந்தவை தோளில் சாய்த்துக்கொண்டு சமாதானப்படுத்திய நிகழ்வுகள் தான் எத்தனை. இப்படி பல பல எண்ணங்கள் உணர்வுகளாய் உடைபெடுத்து, அவளை பூமிக்குள்ளேயே புதைந்து போக சொல்ல, வெடித்து அழுதாள்.

யார் சொன்னது காதலுக்கு உருவம் இல்லையென! இதோ, இறந்து போன தன் காதலுக்கு ஒவ்வொரு முறையும் உருவம் கொடுத்துக்கொண்டு இருக்கிறானே! என் பிர்லா.

“என் உயிரை கொடுத்தாவது என் காதலை நிறுபிச்சுட்டேன்! நீ எப்படி நிறுபிக்க போற?” என்றோ ஒரு நாள் பிர்லாவிடம் தான் கேட்ட கேள்விக்கு, இன்று பதில் அளித்துவிட்டானே தன்னவன்.

இந்த பொக்கிஷங்களை வைத்து பதில் கொடுத்து விட்டானே! இறந்த போன என் காதலை மீண்டும் உயிர்த்தெழ வைத்துவிட்டானே!

காதலை இவன் மறக்கவில்லை, அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் புதைத்து வைத்து இருக்கிறான்.

ப்ருந்தாவின் ஏக்கம், பிர்லாவின் தேடல் என இரண்டையும் ஏந்திய அந்த நினைவுபெட்டகத்தை விட்டு அகலவில்லை அவர்களது கண்கள்.

“இது என்ன? என்னது இது?” எங்கேயோ பார்த்திருக்கிறோம், ஆனால் எங்கே என தெரியாதவனுக்கு குழப்பமே மிஞ்ச, அந்த கேள்விக்கு விடையை ப்ருந்தாவிடம் கேட்டான்.

அவனது கேள்விகளை உணர்ந்தும், பதில் சொல்லாமல், தடுமாறி அழுகைக்கும் ஆனந்தத்திற்கும் இடையில் மாட்டி வார்த்தைகள் வராமல் சதிராட்டம் ஆடிக் கொண்டிருந்தது.

“என்னதுடீ… இது” இவளது அமைதி அழுகை என இரண்டையும் காண சகிக்காமல் உச்ச குரலில் கத்த

அவள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவனையே கலங்கிய கண்களோடு பார்த்தபடி இருந்தாள்.

“சொல்ல மாட்டேல்ல! நீ எப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லி இருக்க  சொல்லாதே!  சொல்லவே சொல்லாதே”

அவளிடம் பதிலில்லை எனவும், தன் காலடியில் கிடந்த அந்த பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டு விறு விறுவென அங்கிருந்து வெளியேற முயன்றானே ஒழிய முடியவில்லை

அவனது கை ப்ருந்தாவின் கையில் பிடிபட்டு அவனை நிறுத்தியது.

“இருக்குற கோபத்துக்கு, உன்னை சப்பு சப்புனு அறையனும், போல் இருக்கு. மரியாதையா கையை விடு” இவன் சொல்லிய நிமிடம் இன்னும் இறுக்கம் அதிகமாக, இவன் கைகளை மேலும் இறுகிப்பிடித்தாள்.

“ஏய், விடுன்னு சொல்றேன்ல!” இவள் கையை படாரென உதறி தள்ள, சிறு அதிர்வு கூட இல்லை இவளிடம், அப்படி ஒரு உடும்பு பிடியாய் இருந்தது.

இருவரது பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதி நிற்க பதிலை எதிர்பார்த்து இவன் விழிகள் தவித்தது.

அதை அப்படியே உள்வாங்கிய இவளோ “இது  பிரக்னன்ஸி கார்ட்” சிறு கோவல் அடிவயிற்றிலிருந்து கிளம்ப, இதயத்தில் இருந்து உருகி வழிந்தது இவள் நேசம் கலந்த குரல்

‘என்ன? பிரக்னன்ஸி கார்டா!’ ஆடிப்போனது அவன் உடல் மட்டுமல்ல, உயிரும் சேர்ந்து தான்!

ஆனால் எப்படி? எனும் கேள்வி தொக்கி நிற்க அந்தளவிற்கு நெருக்கமானவர்களா நாங்கள்? மனதினுள் உதித்த வார்த்தை, மனதை விட்டு வெளிவரவில்லை.

ஆனால் எகிறி துடித்த இதயதுடிப்பை இவளும் உணர்ந்தாளே என்னவோ, “நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி” அவனை மேலும் சோதிக்காமல் இவளே பட்டென உடைக்க

அதீத மன உளைச்சலில் எங்கெங்கோ பறந்த அவன் மன பறவை உளைச்சல் கொடுக்கும் பாரத்தை தாங்க மாட்டாமல் சிறகு ஒடிந்தார்ப்போல அப்படியே தரையில் விழுந்து சிதறிப்போனது.

பேச வார்த்தைகள் வராமல் தொண்டைகுழி ஏறி இறங்க, எச்சில் கூட பாறாங் கல்லாய் சிக்கி தவித்தது அவன் தொண்டை குழிக்குள்.

இதுவரை ப்ருந்தாவை காதலியாய் உருவகப்படுத்தி இருந்தவனுக்கு, மனைவி என்ற சொல் அவனது ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை அப்படியே நிறுத்தியது.

தன்னிமிருந்து தன் காதலை, காதலியை மறைத்தார்கள் என்றதற்கே இன்னும் அடங்கவில்லை அவனது  ஆத்திரமும் கோபமும்.

இதில் ப்ருந்தா தன் மனைவியா! என்ற உண்மை உச்சந்தலையில் அடித்து அவனை நிலைகுழைய செய்தது.

ப்ருந்தா தன்னுடைய மனைவியா? மனைவியா? என நினைக்க நினைக்க ஆத்திரம் உச்சிக்கு ஏறியது.

இவனது நினைவுகளுக்கு தகுந்தாற்ப்போல் இவனது உடலும், முகமும் பாறையென இறுக இறுக,  அவனது கையை பிடித்திருந்த ப்ருந்தா முழுதாய் தளர்த்த, பிடிமானமற்று தன்னிலைக்கே திரும்பியது அவனது வலது கை.

இவனது முக மாற்றத்தில் சற்று பயமேறி பின்னுக்கு கூட நகர்ந்தாள் ப்ருந்தா. அவனதுமுகம் விகாரமாய் மாறும் அளவிற்கு கோபம் ஏறியது.   மொத்த கோபத்தையும் யாரிடம் காட்ட,

நண்பனாய் உயிரானவனாய் பழகி நின்ற தன் தந்தையிடமா? ‘பிர்லா பிர்லா’ என தான் உடல்நிலை சரியில்லாத நிலையில் தன்னை விட்டு அகலாமல், தன்னையே சுற்றி சுற்றி வந்த தாயிடமா?

இல்லை

இல்லை  என ப்ருந்தாவை பார்வையால் எரித்தபடி, ‘மனைவி’ என்ற முழு அங்கிகாரம் பெற்ற பின்பும் தன்னை பிரிந்து சென்ற இவளிடமா?

இல்லை எல்லாவற்றையும் மறந்து நிற்கும் தன்னிடமா?

‘எல்லாவற்றையும் மறக்க போய் தானே தனக்கு இந்த நிலை’ என இறுதியில் தன் மீதே முழு கோபமமும் திரும்பி நிற்க, வெறுத்து போனான் தன்னையே!

யாரிடம் கோபம் கொள்ள என தெரியாமல் அப்படியே திரும்பி படாரென கதவை திறந்து, படபடவென படியில் இறங்கி வெளியேறினான்.

காதலியை மறைத்ததற்கே அந்த ஆட்டம் ஆடியவன், இப்போது மனைவி என தெரிந்த பின்பு எப்படி ஆட்போகிறானோ? எப்படி்மாற  போகிறதோ இவனது நடவடிக்கை? இவனது கோபம், ஆத்திரம் இதையெல்லாம் எதிர்பார்த்தவளுக்கு அவனது பேரமைதி ‘திக்’ என இருந்தது,.

அதிலும் அவனது வேகமும், நிதானமில்லா நடவடிக்கையும் இவளுக்கு அதிகமான பயத்தை தான் கொடுத்தது.

ஆனால் பயம் கொள்ளும் நேரம் இதுவல்ல என சற்றும் தாமதிக்காமல் அதே வேகத்தோடு இவளும் கீழ் இறங்கி சென்றாள்.

மழையில் நனைந்தபடி கார்கதவை திறந்து கொண்டிருந்தான் பிர்லா.

‘அய்யோ இந்த மழை வேறு எப்போதிருந்து பெய்து கொண்டிருக்கிறது?’ என்ற நினைப்பையும் மீறி ‘பிர்லாவிற்கு மழை சுத்தமாய் ஆகாதே. ஒரு முறை மழையினால் பட்ட கஷ்டம் போதாதா?’ என்ற பயமே அவள் கால்களுக்கு வேகத்தை கொடுக்க, வாசலைகடந்து, நடைபாதையை தாண்டி இவளும் மழையில் நனைந்தபடி இவனை நெருங்கி இருந்தாள்.

கார் கதவை திறந்து ஏறி கொண்டிருந்தவனை, தடுத்து கதவை அடித்து சாற்றிவிட்டு, அவன் கை பிடித்து இவள் இழுக்க, ஒரு நிமிடம் கால்கள் தடுமாறியவன், இவள் என தெரிந்ததும் உடல்  முற்றிலும் இறுக விட, ஒரு இன்ச் கூட அவனை அசைக்கவே முடியவில்லை.

“மழையில் நனையாதீங்களேன், உங்களுக்கும் மழைக்கும் ஆகாது  உள்ளே வாங்க பிர்லா“ முழங்கைகளில் கை கொடுத்து முழு பலம் கொண்டு இவள் இழுக்க

“ஏன்? ஏன் ஆகாது மழையில் நனைஞ்சா நான் செத்தா போய்டுவேன்”

இப்போதும் சாவை பற்றியே பேசும் இவனை! நறநறவென பல்லை கடித்தவள், அவன் முன் வந்து மார்பில் கைவைத்து முழு பலம் கொண்டு இவனை பின்னுக்கு தள்ள,  கொஞ்சமாய் அசைந்து கொடுத்தது இவன் உடல். அது இவளுக்கு சாதகமாய் அமைய, மேலும் மேலும் முழு பலத்தோடு தள்ளினாள்.

இவள் தள்ளிய வேகத்தாலும், பிர்லாவிடம்  எதிர்ப்பு இல்லாததாலும், இவள் தள்ளிய வேகத்தில், வாசல் படியில் சென்று விழுந்தான் பிர்லா. இவனை தள்ளி விட்டதும் சிட்டென பறந்து வேகமாய் வீட்டினுள் சென்றவள், கைக்கு கிடைத்த டவலை எடுத்து கொண்டு அவனிடம் வந்தாள். ஈரம் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தவனின், தலையை தன் பக்கமாய் திரும்பி ஈரத்தை துவட்டி எடுத்தாள்.

வெகு நேரமாய் துவட்டியவள், ஈரம் அந்தளவிற்கு இல்லை என அவனின் கை பிடித்து எழுப்பி நிறுத்த, எழுந்து நின்றான் இவன். அவளது செய்கைகள் அனைத்திற்க்கும்  சுத்தமாய் எதிர்ப்பில்லை அவனிடம். அவனது அறைக்கு இழுத்து சென்றவள், கப்போர்டில் கிடந்த ஆடை ஒன்றை எடுத்து அவன் கைகளில் கொடுத்து “டிரெஸ் மாத்திட்டு வாங்க பிர்லா” என அவனிடம் சொல்ல

இவன் அப்படியே நின்றிருந்தான்.

‘நீ மாத்துறியா, இல்லை நான் மாத்திவிடவா?’ என்பது சட்டை பட்டன்களில் இவள் கை வைக்க, அவள் கையை தடுத்து, ‘நானே மாத்திப்பேன்’ என இவனே அந்த வேலையை ஆரம்பிக்க, “மாத்திட்டு இருங்க, இதோ வரேன்“ என அவனிடம் கூறிவிட்டு, தன் மாமியார் தேவியை தேடி இவள் சென்றாள்.

“அத்தை அத்தை” அறைக்கு வெளியில் கேட்ட குரலில், தேவிக்கு விழிப்பு வந்தாலும், ‘இவள் ஏன் இந்நேரம் வந்திருக்கிறாள், அதுவிம் இத்தனை சத்தத்தோடு கதவை தட்டுகிறாள்’ என விழி திறக்கும் முன் சந்திராவே எழ, ‘அவரே பார்த்துப்பார்’ என மீண்டும் துயிலில் ஆழ்ந்தார் தேவி.

“தேவி, தூங்குறாளே? என்னம்மா?” என இவள் குரல் கேட்டு வெளியே வந்த சந்திரா, ஈரம் சொட்ட சொட்ட இருந்தவளை பார்த்து “என்ன ஆச்சும்மா, ஏன் இப்படி ஈரமாய் வந்து நிக்கிற? என்னாச்சு” என சந்திரா பதற

“எ.. எ.. எனக்கு ஒன்றும் இல்லை மாமா  பி..பிர்லா  தான் மழையில் நனைச்சுட்டான்” மழை நீர் சுமந்த அந்த முகத்திலும் அவள் கலங்கிய முகம் தெளிவாய் தெரிந்தது.

கிட்ட தட்ட இந்த ஒரு வருட காலமாக காய்ச்சல் சார்ந்த உபாதைகள் பிர்லாவிற்கு வந்தாலும், பிட்ஸ் என்ற ஒன்றை இவனோடு, இவன் உடலும் மறந்துவிட்டதோ என்னவோ, அதனுடைய பாதிப்புகள் இப்போது வரை அவனுக்கு இருந்தது இல்லை.

ஆனாலும் மழையில் நனைய விட்டதில்லை இப்போது வரை. ஆனால் இப்போது இவன் நனைந்த செய்தி, அவருக்குள் பதட்டத்தை கொடுக்க, “இரும்மா, வரேன்” என மீண்டும் அறையினுள்ளே சென்றவர், இரண்டு மாத்திரைகளோடு வந்தார். “இப்போதைக்கு இதை கொடும்மா பீவர் குறையலன்னா ஹாஸ்பிடல் போகலாம், நான டாக்கிட்ட பேசிடுறேன்” என கூற “சரி மாமா பீவர் கூடினா சொல்றேன்” என மாத்திரைகளை வாங்கி கொண்டு, மீண்டும் வேகமாய் பிர்லாவின் அறைக்கு சென்றாள்.

Advertisement