Advertisement

வீட்டில் விமலை பற்றி ஷர்மி சற்று அதிகமாய் பேசுவதாலும், ஸ்கூலில் விமலே வந்து சில நேரம் பேசி விட்டு செல்பவனாகையால்  ஷர்மியின் தாய் சற்று பயமில்லாமல் சென்று விட

“ஹேய் விமல் நீ மட்டும் ஐஸ்கிரிம் சாப்பிடற  எனக்கு எங்கே!” என ஷர்மி விட்டதை தொடர

“ஹேய் உனக்கில்லாமலா, வா வா, இந்த பிளேவர் நல்லாவே இல்ல வேற வாங்கலாம்” என விமல் ஷர்மியை அழைத்து செல்ல

ப்ருந்தாவிற்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது  விமல் ஷர்மியை அழைத்து கொண்டு வேண்டுமட்டும் ஐஸ்க்ரீமை வாங்கி வந்து டேபிளில் பரப்பி வைத்து அவன் வயதிற்கு தகுந்தாற்ப்போல் கடலை போட்டு கொண்டே உண்டான்.

ஒவ்வொரு ஐஸ்க்ரீமையும் காலி செய்யும் போதெல்லாம் இவளுக்கே நெஞ்சே வெடித்தது.

உண்டு முடித்த பின்போ “அக்கா நீயே இவளோட பில்லையும் சேர்த்தி பே பண்ணிட்டு வா நான் ஷர்மியை அவங்க அம்மாகிட்ட விட்டுட்டு வரேன்” என்றவன் “வா ஷர்மி போகலாம் ” என ஷர்மியை அழைத்து கொண்டு எதிரில் இருந்த ஷாப்பிங் சென்டருக்குள் சென்றான்.

பில்லை பார்த்தால் எண்ணூறு சொச்சம். ஐய்யய்யோ ஐந்நூறு தானே இருக்கு இந்த நாதாரி எண்ணூறு ரூபாயக்கு மொக்கிட்டானே  என்ன செய்றது. ஹோட்டல்ல மாவட்டலாம், இங்க என்ன செய்றது? என குறுக்காய் யோசித்தவள்.

தோழி யாருக்காவது போன் செய்து கொண்டு வர சொல்லலாமா!  என யோசிக்கும் போதே கண்ணாடி தடுப்பின் பின் பிர்லா நடந்து செல்வது தெரிந்தது.

உடனே பல்ப் எறிந்து விட வேகமாய் பில்கவுண்டர் அருகே சென்றவள்

“சார்  பில் பே பண்ணிட்டு இந்த மொபைலை வாங்கிக்கிரேன்” என மொபைலை பில் கவுண்டரில் வைத்து விட்டு அவரது பதிலை கூட எதிர்பாராமல் விறு விறு வென வெளியேறி பிர்லாவை தேடினாள்.

கவுண்டரில் இருந்தவனோ அந்த ஆப்பிள் ஐ போனை லாபம் என நினைத்து டேபிள் டிராயரில் போட்டு மூடினான்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்றபடி யாருடனோ போனில் வெகு தீவிரமாய் பேசிக்கொண்டிருந்தான் பிர்லா

“பிர்லா, பிர்லா இங்க பாரு” என  இருமுறை அழைக்க  அவன் காதில் விழுந்த பாடில்லை அவள் குரல்

மூன்றாவதாய் அவனை அழைத்தபடி அவன் முன் நிற்க, ஒரு கனம் தடைப்பட்ட அவன் உரையாடல் “ஒரு நிமிசம் வெயிட் பண்ணு” என அவளிடம் செய்கையால் சொல்லிவிட்டு மீண்டும் போனில் பேச துவங்க

ஒரு நிமிடம் என சொல்லிவிட்டு கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்கும் மேல் தொடர்ந்த அவனது உரையாடலில் கடுப்பாகிபோனாள் ப்ருந்தா.

இது ஆவுறதுக்கு இல்லை என பிர்லாவின் வலது புறம் வந்து அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சுவாதீனமாய் பர்ஸை உருவி பர்ஸில் இருந்த நோட்டுகளில் தேடி ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்தாள். “ம் இதுவே அதிகம் தான்” என பர்ஸை எடுத்த இடத்திலேயே சொருகிவிட்ட

“கொஞ்சம் அர்ஜண்ட், அப்பறமா திருப்பி கொடுத்திடுறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் ப்ருந்தா.

அவளது பேச்சில் செய்கையில் அவளுக்கு பதில் சொல்ல மறந்து போய் உறைந்து நின்றிருந்தான் பிர்லா.

கவுண்டரில் பணத்தை கொடுத்துவிட்டு போனை வாங்கி வெளி வந்தவளை பார்த்தபடி, இவனும் வந்தான் ஓரளவு நடந்ததை எல்லாம் இவளிடம் கேட்டு அறிந்தும் கொண்டான் பிர்லா.

“குடிக்கிறதுக்கெல்லாம் வஞ்சனை பார்க்கமா வாரி இறைக்கிற  இதில் கை நிறைய டிப்ஸ் வேற கொடுக்குற ஆனா இந்த சின்ன ஐஸ்கிரீம் பார்லருக்கு கொடுக்க காசில்லையா?” என இவன் நக்கலடிக்க

பொய் சொல்ல விரும்பாமல் “ஆமாம் காசில்லை. காசில்லாமல் தான் உன் பணத்தை யூஸ் பண்ணினேன்” என ப்ருந்தாவும் பதிலுக்கு வாயாடினாள்.

“எந்த உரிமையில் நீ இப்படியெல்லாம் பண்ற!” அவளின் நெருக்கமான நடவடிக்கையில் பிர்லா கேட்டு விட

“எல்லாம் நீ என்னை லவ் பண்ற உரிமையில் தான்” பட்டென போட்டு உடைத்தாள் ப்ருந்தா

“ஏய்  நான் அப்படியெல்லாம் இல்ல! உன்னை லவ் லாம் பண்ணலை!” திக்கி திணறி தடுமாறி வந்தன  அவனது வார்த்தைகள்.

“அப்பறம் ஏன் பப்ல வச்சு என்கிட்ட பேசின? பேசிற மாதிரி வந்து சைட் அடிச்ச? என்னோட வயசை தெரிஞ்சிக்க ஏன் காலேஜ் வந்தே? இதோ உன் பர்ஸை எடுக்கும் போது  கட்டின பொண்டாட்டிக்கே பர்ஸை கொடுத்த மாதிரி ஏன் அமைதியா நின்ன!” என

இவள் விடாமல் பேசிக் கொண்டிருக்க ,மூச்சு வாங்கியதென்னவோ பிர்லாவிற்கு தான்

“ஷப்பா..  எவ்வளவு வாயடிக்கிறா இவ!” என மனதினுள் ஓட

“இப்படியெல்லாம் பண்ணினா அது லவ்வா? அது ஜஸ்ட் ஒரு அட்ராக்‌ஷன், அதுக்கு மேல சொல்லனும்னு என்னை பொறுத்த வரை ஒரு க்ரஷ் தான்.  தவிர நான் உன்னை லவ் பண்றேனு, உன்கிட்ட நான் எப்போ சொன்னேன்?” தவிப்பாய் பிர்லா பேச

“சரி நீ  சொல்லாத நான் சொல்றேன்” “ஐ லவ் யூ… ஐ லவ் யூ  ஐ லவ் யூ” என வடிவேலு தோரணையில் சொல்ல

பிர்லா சிரித்தேவிட்டான்

“அப்பாடி  லவ்வை அக்சப்ட் பண்ணிகிட்ட என்னை உன்னோட லவ்வராவும் அக்செப்ட் பண்ணிகிட்ட” அவன் சிரிப்பு கொடுத்த தைரியத்தில் இவள் பேச

“நான் அக்சப்ட் பண்றது இருக்கட்டும் நீ என்னை உன் லவ்வரா செலக்ட் பண்ணினதுக்கு  காரணம் என்ன?” சிரிப்பை விட்டு சீரியஸாய் கேட்க

“சிம்பிள்? நீ குடிக்காதது தான் காரணம்” என

“என்ன…!” இதெல்லாம் ஒரு காரணமா என்பது போல் இவள் குழப்பமாய் கேட்க

“ஆமாம் ? நான் குடிக்கும் போது பங்கு கேட்டு வர மாட்டேல்ல  எவ்வளவு வாங்கினாலும் அது எனக்கு மட்டும் தானே” லாஜிக்காய் பேசினாள் ப்ருந்தா

“அடிப்பாவி” அவன் வாயை விரல்களால் அடைத்தே விட்டான் பிர்லா  அதிர்ச்சியில்

“இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கு பா  இந்த காலத்துல அழகான பசங்களை பாரக்கறதே கஷ்டம் ஒன்னு தொந்தியோட இருக்கானுங்க, இல்ல சொட்டையோட இருக்கனுங்க.  ஆனா பாரு இரண்டுமே உனக்கு இல்ல  அத விட ஒரு கெட்டபழக்கமும் இல்லாத ரொம்ப நல்ல பையன் நீ… நீயெல்லாம் யாருக்கோ புருஷனா போறதுக்கு எனக்கு புருஷனா வந்துடேன் நான் உன்னை கண்கலங்கமால் பார்த்துகிறேன் ” என

பிர்லாவின் பார்வை கோபத்திற்கு பதில் ஒரு மார்க்கமாய் மாறி இருந்தது ‘புருஷன்’ என்ற வார்த்தையில்

“ஏன் பா… இப்படி பார்க்குற…” பிர்லாவின் பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் கேட்க

சட்டென சுதாரித்தான் பிர்லா.

“எல்லாம் சரி தான்  ஆனா குடிக்கிறியே  குடிச்சிட்டு வந்து என்னை அடிச்சிட்டேன்னா? தூக்கி போட்டு மிதிச்சிட்டேன்னா? நான் என்ன செய்வேன்? எங்கே போவேன்?” என ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க

இவள் குடிப்பதும் குடித்தபின் உளருவதும் உளறியபின் இவனை போட்டு அடிப்பதும் போல் ஒரு கற்பனை இருவருக்கும் ஓடியது இருவருள்ளுமே!

முண்டா பனியன், கட்டம் போட்ட கைலி, கையில் ஒரு பாட்டில் என அவளின்  முழு உருவமும் அவதாரமாய் தயமாறி கண் முன் தோன்ற

ப்ருந்தாவின் முகம் அஷ்ட கோணாலாய் மாறியது என்றால் பிர்லா வாய் விட்டு சிரித்தான் மிக பலமாய்.

‘எதற்கு இப்படி முகம் போகுது’ என பிர்லாவும் கேட்கவில்லை

‘எதுக்கு இப்படி சிரிக்கிற?’ என ப்ருந்தாவும் கேட்கவில்லை

‘புரிதல்’ என்ற ஒன்று அவர்களது மனதில் முதல் முறையாய் வந்தமர்ந்தது.

“யார்க்கா இது ?” கமலேஷின் குரல் இருவரையும் திருப்ப

“உன் மாமா டா  குண்டா” எந்த நேரமும் குறையாது என் கொழுப்பு என்பது போல் ப்ருந்தா பதில் சொல்ல.

பக் கென இருந்தது பிர்லாவிற்கு

“ஏன் அங்கிள் உங்களுக்கு வேற பிகரே கிடைக்கலியா?” என விமலேஷ் அசால்ட்டாய் கேட்டதில்.

மீண்டும் ஒரு சிரிப்பலை பிர்லாவிடம், எரிமலை கொதிப்பு ப்ருந்தாவிடம்

அவளை பார்த்தபடியே “இவளை ட்ராப் பண்ணிடுங்க அங்கிள்  வேற பிக் அப் பண்ணிக்கலாம்” என விமல் பயமில்லாமல் தன் அக்காவின் மேல் பாசமில்லாமல் சொல்ல

“உன் அங்கிள் என்னை ட்ராப் பண்றாரோ இல்லையோ  உன்னை யார் நம்ப வீட்டில் ட்ராப் பண்றாங்கனு நானும் பார்ர்க்கேன்  போடா குண்டா குட்டி அண்டா” என விமலையும்

“போடா பெரிய அண்டா” என பிர்லாவையும் திட்டியபடி அங்கிருந்து சென்றுவிட்டாள் படு வேகமாக.

“ஹாய் மாமா…“ போகும் ப்ருந்தாவை பார்த்தபடி இருந்த பிர்ராவை தன்புறம் திருப்பினான் விமல்.

“மாமாவா?” என இழுத்தவன் “முடிவே பண்ணிட்ட போல…” பிர்லா கேட்க

 “அப்போ நீங்க இன்னும் முடிவு பண்ணலையா” என கேட்க

“நான் முடிவு பண்றது இருக்கட்டும், அதென்ன அப்போ அங்கிள் சொன்ன இப்போ மாமா சொல்ற?”

“மாமானு சொன்னா தானே என்னை வீட்டில் ட்ராப் பண்ணுவீங்க”

“அடப்பாவிங்களா? அக்காவும் தம்பியும் ஒரு மார்க்கமா தாண்டா திரியுறீங்கடா எல்லாம் என் நேரம்”

“என்ன மாமா பண்ணறது நமக்கு வேலை ஆகனும்ல ”

“நல்லா வருவீங்கடா…நீங்களாம் ”

“வீட்டில் விட்றீங்களா மாமா”

“நீ மாமானு கூப்பிடலைன்னாலும் நான் கொண்டு போய் விடுவேன் அதுக்காக இத்தனை மாமாலாம் வேணாம்”

“ம்” என லேசாய் அசடு வழிந்தவன் “ஆமாம் உங்க பேர் என்ன?”

“பிர்லா, பிர்லா போஸ் ”

“நான் விமல் விமலேஷ்” அவனைப்போலவே சொல்லி காட்ட…

“உங்கக்காவை எப்படி தான் வீட்டில். சமாளிக்கிறாங்களோனு நான் யோசிச்சேன்.  ஆனா சும்மா சொல்ல கூடாது, அவளை நீ தான் சமாளிக்கிற போல, என்ன கரெக்டா” என

“அதெப்படி மாமா கரெக்டா சொல்றீங்க”

“அது தான் பார்த்தாலே தெரியுதே  ஆனா எப்படினு எனக்கும் சொல்லுடா ப்யூச்சர்ல உதவும்” என பிர்லா சிரிக்க

“ம் வேறென்ன பிளாக் மெயில் தான் பண்ணி தான் சமாளிக்கிறேன்.  நிறைய ப்ராடு வேலை பார்ப்பா, அம்மா அப்பாக்கு தெரியாமல் அதை அப்பப்போ நான் கண்டுபிடிச்சு பிளாக்மெயில் பண்ணுவேன்”

“பிளாக்மெயில்  பண்ணுவியா?” என்றவன் “பிளாக்மயில் பண்ணி என்ன கேட்ப?”

“இந்த வயசுல நான் என்ன கேட்க போறேன் மாமா…என் வயித்துக்கு தான் கேட்க போறேன்.  நான் ரொம்ப வெயிட்டா இருக்கேன்னு வீட்டில் எனக்கு தம்மா தூண்டு சாப்பாடு போட்டு அனுப்பிடுவாங்க. பாஸ்ட் புட், ஜங்க புட்லாம் கண்ணுலையே காட்ட மாட்டாங்க. அதனால தான் நான் இவளை பிளாக்மெயில் பண்ணி பீட்சா பர்கர் ஐஸ்கீரிம்னு ஆர்டர் பண்ணி திண்பேன்” என  சிரிக்க பிர்லாவும் சேர்ந்து சிரித்தான்.

“என்கிட்ட இவ்ளோ ப்ராங்கா பேசுறியே  ஒரு வேளை உன் அக்காவை நான் கடத்திட்டு போய்ட்டா? என்னடா செய்வ?” என இழுக்க

“கடத்துனதே தப்புன்னு நீங்களே கொண்டு வந்து எங்க வீட்லையே விட்ருவீங்க மாமா“ என இழுக்க

“ஏன்டா?” அதிர்ச்சியாய் கேட்க

“அவளுக்கு சரக்கு வாங்கி கொடுக்க முடியாமல், நீங்களே கொண்டு வந்து விட்ருவீங்க.! அப்படி ஒரு குடிகாரி அவ!”

“உனக்கு தெரியுமா  அவள் ட்ரின்க் பண்றது?” அதிர்ச்சியானான் பிர்லா

“என்ன மாமா  அவ அரியர் வச்சதையே கண்டு பிடிச்சிட்டேன்  இதெல்லாம் பெரிய மேட்டரா” என

“ஓ  அம்மையார் ஓவர் படிப்ப்ப்ப்பாளியுமா? படிப்புக்கும் டிமிக்கி கொடுப்பாளா?” என இழுத்தவன் “அப்போ இதையும் வச்சு பிளாக் மெயில் பண்றியா?” என

“எதுனாலும் எவிடன்ஸோட பண்ணனும் மாமா  எவிடன்ஸ் இல்லைன்னு வச்சுக்கோங்க  என் அக்கா பக்காவா எனக்கு ஆப்பு வச்சிடுவா. அதான் நான் அடக்கி வாசிக்கிறேன்  எப்படியும் பாட்டிலும் கையுமா ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்கிட்ட சிக்க தான் போறா” என காரில் வரும் போது இருவரும் பேசிக்கொண்டே வர  பிர்லா மட்டும் சிறிது யோசனையில் ஆழ்ந்து விட

“என்ன மாமா யோசிக்குறீங்க” என

“முன்னெல்லாம் யோசிச்சதில்லை. இப்போ ரொம்ப யோசிக்கிறேன். என் கூட சண்டை போட ஒரு தம்பியோ தங்கையோ இல்லையேனு இப்போ வருத்தமா இருக்கு” தன் மண்டையில் ஓடியதை அப்படியே சொல்ல

“சீக்கிரமா அக்காவை கல்யாணம் பண்ணிக்கங்க  அந்த வருத்தமே வராது உங்களுக்கு  அவ கூட சண்டை போட்டால் காலையில் விடியறதும் தெரியாது சூரியன் மறையறதும் தெரியாது” என பிர்லாவிடம் பதில் கூறி

“இதோ இந்த வீடு தான், நான் போறேன்.. பாய் மாமா“ என கார் கதவை திறந்து கொண்டு தன் வீட்டினுள் சென்று மறைந்தான் விமல்.

ப்ருந்தாவின் வீட்டு வாசலில் நின்றிருந்த பிர்லாவின் மனமும் விமலுடனேயே இறங்கி சென்றது

Advertisement