Advertisement

பகுதி 6

பேருந்தின் பின் செல்லும் போது வழியெங்கும் ப்ருந்தாவின் நினைவுகளே  இப்போது மட்டுமல்ல  நேற்று இரவும் கூட தான்  காரணம் ஸ்ரீநாத்

பப்பில் இருந்து வீட்டிற்கு வரும் வரை ஸ்ரீநாத் அவனை திரும்பி திரும்பி பார்ப்பதும் பின் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொள்வதுமாய் இருக்க

“என்னடா ” என பிர்லா கேட்டு விட்டான்

ரியர்வியூ மிரரை பிர்லாவின் முகம் நோக்கி திருப்பி “இத்தனை சந்தோஷமான முகத்தை இத்தனை நாள் எங்கேடா மறைச்சு வச்சிருந்த ?” என கேட்க

“எப்போதும் பார்க்கும் முகம் தானே  இதுல என்ன சந்தோஷம் தெரியுது?” என பார்த்தவனுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை…

ஆனால் வீட்டில் அவனது அறை கண்ணாடியில் நொடிக்கொருமுறை கண்டு கொண்டு தான் இருந்தான்  அவனது முகத்தை  அடிக்கடி கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்ததினாலோ என்னவோ  அவனுக்கே சிரிப்பு வந்துவிட  அவளுடனான முதல் கனாவுடன் உறங்க துவங்கினான்

பேருந்தில் இருந்து ப்ருந்தா இறங்கும் முன் இவன் அந்த பேருந்தின் அருகில் நின்றிருந்தான். மற்றவர்களின் கவனம் தன் புறம் திரும்பாமால் அவளை பின் தொடர்ந்தான்

 அவள் ஒரு கிளாஸினுள் நுழைய, அவளின் பின்னே செல்லவிருந்த  மற்றொரு மாணவனை நிறுத்தி

“இது எந்த டிபார்ட்மெண்ட்  எந்த இயர் ?” என கேட்க

“இது பிடெக் பைனல் இயர் .சார் ” என அவன் பதில் சொல்ல

“அப்போ பிஹச்டீ ?”

“அது  கடைசி பில்டிங்  சார் ” என தனக்கு பொறுமையாய் பதில் கூறியவனிடம்

“ஓ  தேங்யூ ” என அவனை அனுப்பி விட்டு கிளாஸினுள் தைரியமாய் வந்தவனுக்குள் ,சிறு ஆசுவாசம்  இவள் தன்னை விட மூத்த பெண் அல்ல என…

தன் தோழிகளுடன் ஆர்வமாய் பேசிக்கொண்டிந்த ப்ருந்தாவின் முன் வந்து “உன்கிட்ட பேசனும்  கொஞ்சம் வர்றியா ?” என பிர்லா சுவாதீனமாய் கேட்க

ஒட்டுமொத்த கிளாஸின் கவனத்தை ஈர்க்காது போனாலும் அவளை சுற்றியிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தான்

ப்ருந்தாவிற்கு அவனை கண்டதும் அதிர்ச்சி எல்லாம் இல்லை  ஆனால் சற்று அதிகமான சுவாரஸ்யம் எழுந்தது  கூடவே ‘ஏன் தன்னை தேடி வந்தான் ?’ என்ற காரணம் அறிந்தபின் கூடவே எழுந்த புன்னகையை அடக்கி

“கசின் டீ  இதோ வரேன்…” என தன் தோழிகளிடம் தன் ட்ரேட் மார்க் பொய்யை கூறி அவனுடன் சென்றாள்

கிளாஸ் ஆரம்பிக்க இன்னும் நேரமிருக்க, அவனை அழைத்து கொண்டு ஒருமரத்தடிக்கு வந்தாள்

 “ஏய்  நீ பிஹச்டீ தானே சொன்ன  இப்போ பிடெக் பைனல் ல உக்கார்ந்திருக்க?” எடுத்த எடுப்பிலேயே அவளை குற்றம் சுமத்தினான் பிர்லா

“இதை தெரிஞ்சுக்க தான்  நீ என் பின்னாடியே வந்தியாக்கும்!” நய்யாண்டி பேசியது அவள் நயன விழிகள்.

‘ஐயோ கண்டுபிடிச்சுட்டாளே’ என அவனுள் சிறிது தடுமாற்றம் தான். ‘இல்லையென கூறி விடலாமா’ மனம் கூறும் போதே பொய் சொல்ல மனமில்லை அவன் மூளைக்கு.

“ஆமாம்   நீ என்னை விட பெரிய பொண்ணா இல்லையானு தெரிஞ்சுக்க தான் வந்தேன் இப்போ என்னன்ற?” பட்டென இவன் பேச

“தெரிஞ்சுகிட்டாச்சு, நான் உன்னை விட சின்ன பொண்ணுனு  இப்போ என்ன பண்றதா உத்தேசம்!” என கை கட்டி கொண்டு சட்டமாய் இவள் கேட்க

‘ஆமா எதுக்கு இதை தெரிஞ்சுகிட்டோம் இதை தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறோம்?’ மனதினுள் கேள்வி கேட்க, அவனது வெள்ளந்தி முகமோ அந்த குழப்பத்தை அழகாய் வெளிக்காட்டியது.

அதை சரியாய் கணித்தவளோ “ஓய்  நீ என்னை சைட் அடிக்கிறியா!” கேட்ட ப்ருந்தாவின் முகத்தில் ஆயிரம் என்ன பல லட்சம் வாட்ஸ் பல்புகளே எரிந்தது.

ஒரு நொடி தன் இதய துடிப்பு நின்று போனதோடு, ஒரு ஆண்மகனின் வெட்கம் சுமந்த முகத்தை முதன் முதலில் பார்த்த ப்ருந்தாவிற்கு அது காண கிடைக்கா பொக்கிஷம் தான் தெரிந்தது.

“ஹேய் பிர்லா  என்னை சைட் அடிக்கிற தானே, லவ் பண்ற தானே…! சொல்லு ப்ளீஸ் பதில் சொல்லு, ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லேன்” என தன் முகம் காண மறுத்தவனிடம் கிளிப்பிள்ளையாய் இவள் கெஞ்சிக் கொண்டிருக்க  கல்லூரியில் கேட்ட பெல் சத்தம் அவன் நினைவுகளை உதறி தள்ள

“சும்மா தெரிஞ்சுகலாம்னு தான்  வந்தேன்  மத்தபடி ஒன்னுமில்லை. அதுவும் சைட் எல்லாம் இல்லவே இல்லை” என அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கூறியவனுக்கு, மனதினை அடக்க முடியவில்லை.

சொல்லியவனோ அவள் முன் நிற்க பயந்து போய், எங்கே தன் மனதை கண்டு கொள்வாளோ என பயந்து, விட்டால் போதுமென காரில் வந்து அமர்ந்தான்.

காரினுள் அமர்ந்தவனுக்குள் இரத்தம் மொத்தமாய் புதுவெள்ளமாய் பாய்ந்து பெருக்கெடுத்து ஓடியது. கூடவே உடலில் ஓடிய சிறு சிலிர்ப்பும் அவனுக்கு புது புது உணர்வுகளை காட்டியது.

“ஷப்பா.. கொஞ்ச நேரத்திலே என் உயிர் நாடியையே பிடிச்சுட்டாலே  ராட்சசி” என தனக்கு தானே சிரித்தபடி காரை கிளப்பி கம்பெனி வந்து சேர்ந்தான்.

அவனது அந்த சிரிப்பை, புன்னகை தாங்கிய முகத்தை முதலில் கவனித்தது அவனின் தந்தை சந்த்ரா தான்.

பிர்லாவின் முகம் காட்டிய புன்னகை சந்த்ராவை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பிர்லாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வீட்டில் தேவியும் சந்த்ரபோஸூம் முன்னைப்போல்   சண்டையிட்டு கொள்வதில்லை. இருந்தாலும் அந்த வீடு  பிர்லாவிற்கு என்னவோ சிரிப்பு நிறைந்திருக்கும்  ஒரு சாதரண வீடாய் ஒரு நாளும் காட்சியளித்ததில்லை. மேலும் பிர்லா வாய் விட்டு சிரிக்கவைக்கவோ, அவனுடன் சண்டையிட்டு கோபப்படுத்தவோ தம்பி தங்கை என யாரும் இல்லாமல் போனது கூட ஒரு வகை காரணமாக கூட இருக்கலாம்.உடல் நிலை சரியான போனதும், வீட்டின் இந்த நிலை பிர்லாவின் சிரிப்பை அறவே விரட்டி இருந்தது

பிர்லாவின் இந்த அமைதி தேங்கிய முகத்திற்கே பழகிப்போனவர்களுக்கு, இந்த புன்னகை தேங்கி வலம் வந்த இந்த பிர்லா மிக வித்யாசமாக தான் தெரிந்தான்.  சற்று அதிர்வாய் தான் அவனை உள்வாங்கினார் சந்த்ரபோஸ்

“தேவி, பிர்லா வரான் அவனை கொஞ்சம் பாரு!” என இன்டர்காமின் வழியே்தேவியை அழைந்து உடனடியாய் கூற

‘இதென்ன பேச்சு’ என நெற்றி சுருக்கினாலும் ‘சந்த்ரா எப்போதும் இப்படி கூறுபவர் அல்ல’ எனவே கேபினின் கண்ணாடி வழியாய் பார்த்த தேவியும் சற்று புருவம் மேலேற்றினார். பிர்லாவின் அந்த புன்னகை முகத்தை பார்த்து.

பிர்லாவின் இந்த புன்னகைக்கு பின் இருக்கும்காரணம் அப்போதே தெரிய வேண்டும் என்ற வேகம் எழ, அடுத்த கனம் அவர் போன் செய்து விசாரித்த இடம் ‘ஸ்ரீநாத்’

“இவன், இந்த பிர்லா பண்றதெல்லாம் பார்த்தால், கன்பார்மா சைட் தான் அடிக்கிறான்.  ஆனால் ஏன் உண்மையை சொல்லாமல் போய்ட்டான்” என காலையில் கல்லூரி வந்ததில் இருந்து இதோ மாலையில் வீட்டிற்கு வரும் வரை ப்ருந்தாவை புலம்ப வாய் விட்டே வைத்து கொண்டிருந்தான் பிர்லா.

“சும்மா செவனேன்னு இருந்தவளை தேடி வந்து பார்த்து சீண்டி விட்டுட்டானே படுபாவி” என மனதிற்குள் திட்டிக்கொண்டே  வந்தவளை

“என்ன ப்ருந்தா தேவையில்லாத வேலையெல்லாம் நிறைய பார்க்குற போல.. வயசுக்கு தகுந்த மாதிரியா நடந்துகிற நீ?”  என்ற தந்தையின் குரலில் வாய் விட்டு புலம்பி கொண்டே வந்தவள், பிரேக் அடித்து நின்றாள்.

“நான்.. நான் என்ன பண்ணினேன் டேட்” அருகில் நின்றிருந்த செண்பவை பார்த்தபடியே “என்னை பெத்த மகராசி என்னை பெத்த மககராசன்கிட்ட என்ன சொல்லி போட்டு விட்டாளோ”  என லுக் வேறு விட

“விமல் சும்மாவே படிக்க மாட்றான்  நீ டேப்லெட்டை வேற அவன் கையில் கொடுத்திருக்க! வீட்டுக்கு மூத்தவள் நீயே இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்? ஏற்கனவே விமல் வெயிட் ஏறிட்டே வேற போறான். இதில் பீட்சா பர்கர் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி அவனுக்கு.

கடைசியா வார்ன் பண்றேன், இனி ஜன்க் புட் எதுவும் வீட்டுக்குள்ள வரவே கூடாது நியாபகம் வச்சுக்கோ.

இவன் கூட படிக்கிற பசங்க எல்லாரும் ஹைட்டா வளர்ந்துட்டு போனால் உன் தம்பி மட்டும் சைட்ல வளர்ந்துட்டே போறான்  அவன் ஹெல்ததை நீயே கெடுத்துடாத அவ்வளவு தான் சொல்வேன்.

அவன் கையில் இனி நான் டேப்பை பார்த்தேன், அதுவும் நீ கொடுத்தேன்னு தெரிஞ்சது தோலை உரிச்சிடுவேன்” என ப்ருந்தாவை வாங்கு வாங்கு என வாங்கிவிட்டு இறுதியில் உறுமி விட்டும் செல்ல

‘தாயை முறைத்தபடி தன் உடன்பிறப்பை தேடிப்போனாள்’

‘அவன் கேட்கிறதை கொடுக்கலைனா என் மானம் ஏர் இந்தியாலயே போனாலும் போய்டும். கேட்ட திண்பண்டத்தை வாங்கி கொடுத்தால் அதே ஏர் இந்தியா கடலுக்குள்ள போன கதை தான். மொத்தமா நான் குளோஸ். இப்போ வார்ன் பண்ணி விட்டுட்டார், அடுத்து பனிஷ் மெண்ட் தான்’ என பிர்லாவை மறந்து விட்டு விமலை தேடிப்போனாள்.

“டேப்லெட், பர்கர், பீட்சா எதையும் என்கிட்ட கேட்காதே!  டாட் என்னை பயங்கரமா திட்றாங்க” அழுகாத குறையாய் இவள் சொல்ல

“என்னை கழட்டி விட இதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன காரணம்  வேற ஏதாவது பெரிய காரணமா இருந்தா சொல்லு!” ப்ருந்தாவின் உடன்பிறப்பு நான் என நிறுபித்தான் விமல்.

“இவனை என்ன செய்வது, எப்படி கையாள்வது? எப்படி பால் போட்டாலும் நோ பால் ஆக்கிடுறானே!” என்ற கொலைவெறியோடு பார்த்தவளிடம்

“எனக்கு இப்போ ஐஸ்கீரிம் வேணும். உடனே பிரிட்ஜில் இருக்குன்னு எடுக்க போய்டாதே. அது அல்ரெடி காலி. வீட்டில் ஸ்டாக் இல்லை” என மீண்டும் வெடியை பற்ற வைக்க

“விமல்” என உச்சபட்ச குரலில் கத்தியவள் “இவ்வளவு நேரம் பேசினதை புல்லா கேட்டுட்டு, மறுபடியும் ஐஸ்க்ரீம் கேட்டா என்னடா அர்த்தம். ஏண்டா என்னை உயிரோட சாவடிக்கற” கேட்ட ப்ருந்தா நிஜமாகவே அழும் நிலைக்கு தயாராக

“இப்போ எனக்கு ஐஸ்கீரிம் வந்தே ஆகனும். வீட்டில் இல்லை. அதனால நீ வெளியில் கூட்டிட்டு போகனும். கூட்டிட்டு போக முடியுமா முடியாதா? அதுவும் இப்போவே“ டீலா, நோ டீலா என நேரடியாய் இறங்க

தலைசுற்றியது ப்ருந்தாவிற்கு. ஆனாலும் சாட்டைக்கு பயம் கொள்ள தானே வேண்டும் குரங்கு என

“வெயிட் பண்ணு. கொஞ்ச நேரம் ரெப்பரிஷ் ஆயிட்டு  வந்து தொலைக்கிறேன்” ஏக கடுப்புடன் சென்றாள்

“டேய்  எங்கிட்ட ஐந்நூறு ரூபாய் தான் இருக்கு அதுக்குள்ள திண்ணு  ஜாஸ்தியாக திண்ணு என்னை ஐஸ்க்ரீம் பார்லரில் மாட்டி விட்டுடாத” பிரபல மால் ஒன்றில் இருந்த ஐபேக்கோ பார்லரில் அமர்ந்தபடி ப்ருந்தா சொல்லி கொண்டிருக்க

‘ம் ம் ’ என பலமாய் தலையசைத்துக்கொண்டிருந்தான் விமல்  ‘ஆனால் அவன் செய்கையோ எதிர்பதமாய் தான் இருந்தது’

தனக்கு மிக பிடித்த பிளேவர் ஒன்றை வாங்கி வந்து அங்கிருந்த டேபிளில் அமர்ந்தபடி உண்ண துவங்கினான்.

‘இவனே ஐந்நூறையும் காலி பண்ணிடுவான்  போலவே ’ என அவன் முன் இருந்த பெரிய சைஸ் ஐஸ்கீரிமை பார்த்து, எங்கே பணம் போதாமல் போய் விடுமோ என அவளுக்கு கூட வாங்கிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

அந்த பெரிய சைஸ் ஐஸ்க்ரீமை உண்டு முடிக்கும் தருணம் “ஹாய் விமல்“ என அவன் வயதில் ஒருத்தி வர

“ஹேய் ஷர்மி  இங்க என்ன!”  ஐஸ்கீரமை விட்டு எழுந்து நின்றான் விமல்

“அம்மா கூட ஷாப்பிங் வந்தேன், உன்னை பார்த்தேனா வந்துட்டேன்” என இவள் பேசிக்கொண்டிருக்கும் போதே

“ஹேய் ஷர்மி நாம அங்கே போகனும் வா என்கூட!” என அதற்கு எதிர்த்தார்போல் இருந்த ஷாப்பிங் சென்டர் காண்பித்து ஷர்மியின் தாய் ஷர்மியை அழைக்க

“நீ போய் வேணும்கிறதை வாங்கிட்டு வாங்க மம்மி. நான் விமல் கூட பேசிட்டு இருக்கேன்.  அங்கே வந்தால் எனக்கு போர் அடிக்கும்” என

“நீங்க போய்ட்டு வாங்க ஆண்டி, இவள் என் அக்கா தான். அவள் தான் கூட இருக்காளே! நீங்க போங்க” பெரிய மனிதனாய் விமல் பேச

“சரி மா பார்த்துக்கோ”  என சம்மந்தமேயில்லாமல் ப்ருந்தாவிடம் சொல்லி சென்றார் ஷர்மியின் தாய்.

Advertisement