Advertisement

இந்தமுறை அவளது வேகமான நடை ஓசையில் இவனே திரும்பி பார்க்க  டேப்பை அப்படியே தரையில் வைத்து விட்டு ‘உனக்கு தான் ’ என அதை விட்டு பத்தடி தூரம் தள்ளி நிற்க

இந்த முறை பற்கள் அனைத்தையும் காட்டுவது இவன் முறையானது

தந்தையை விட்டு  தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ‘உஃப்…’ என பெருமூச்சு கிளம்ப அது அடங்கும் முன்  அதே மூச்சு அவள் சுவாசத்தை நிறுத்தியிருந்தது

ஆம்  விமலேஷ்  டேப்பை தரிசித்த பக்தனாய் கையில் இருந்த பேப்பரை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்தான்

தரையில் பறந்து வந்த பேப்பர், போனில் பேசியவரின் கண்களை ஈர்க்க அதை குனிந்து எடுத்தார்.

ப்ருந்தாவோ தன் தந்தையிடம் மாட்டீக்கொண்ட தவிப்பில், திரும்பி இவனை பார்க்க விமலேஷ் டேப்பை தூக்குவது தெரிய அவனது டீசர்ட்டை அப்படியே கொத்தாய்  பிடித்து  அலேக்காய் தூக்க

டேப் கைக்கு எட்டாத தவிப்பில் இருந்த கமலேஷோ

“ஏன் கா  நான் தான் அதை அப்பாகிட்ட காட்டலைல ” என பாவமாய் சொல்ல

“அங்க பாரு” என அவன் முகத்தை அப்படியே திருப்பி காட்டினாள்

தந்தையின் கையில் இருந்த பேப்பரை பார்த்தவனும் “ஐய்யோ” என பதற

 அவனை கண்டுகொள்ளாமல் குனிந்து டேப்பை எடுத்துகொண்டு “இரு வந்து வச்சுகுறேன்” என முறைத்தபடியே   தன் தந்தையை நோக்கி போனாள்

தன் தந்தை அதை பிரித்து பார்க்கும் முன் “நீங்க பேசுங்க டாட்  நான் என்னனு பார்க்குறேன்” என நைஸாக லவுட்டிக்கொண்டு வந்தாள் அந்த பேப்பரை.

“ஹப்பாடா  குண்டன் கிட்ட இருந்து தப்பிச்சாச்சு” என பெருமூச்சுடன் தன் அறையினுள் இவள் நுழையும் முன்பே விமலேஷ் அங்கே இருந்தான்

அவனை பார்த்ததும் அத்தனை கோபமும் பீறிட்டு கிளம்ப

“குட்டி சாத்தான்  எனக்கு நீ தம்பியா பொறக்கலைனு யார்டா அழுதது.  பொறந்தது தான் பொறந்த, தின்னமோ தூங்குனோமான்னு இருக்கியா? எப்போ பாரு  நாட் நாட் செவன் மாதிரி எதையாவது துப்பறிஞ்சிட்டே தான் இருப்பியா? இனி என் ரூம் பக்கம் வந்த கொன்னுடுவேண்டா குண்டா” என தலையில் நங்கென ஒரு கொட்டு வைக்க

அதே தூசு போல் தட்டி “டேப்பை கொடு, எனக்கு நிறைய வேலையிருக்கு” என பெட்டில் இருந்து கீழ் இறங்கினான் விமலேஷ்

“டேப்பா வேணும் டேப்பு  வைக்கிறேண்டா உனக்கு ஆப்பு” என பேசியவளை தடுத்தபடி

“நீ டேப்லெட் கொடுக்கலனா அந்த சீக்ரெட் அப்பாகிட்ட மறுபடியும் போகும்” என

“அதான் என் கையில் இருக்கே !” என தந்தையிடமிருந்து பறித்ததை இவள் காட்ட

“அப்போ இதென்ன?” சோபாவில் இவள் விட்டு வந்த அதன் மீதியை இவன் காட்ட

இரண்டாய் கிழி பட்ட போது சோபாவின்  மீது வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி, தன் நெற்றியில் ஓங்கி அறைந்து கொள்ள

“அப்படி அடிச்சுக்காத இல்ல இப்படி அடிச்சுக்கோ” என அவள் நெற்றியில் விமலேஷ் ஓங்கி அடித்தே காட்டிவிட

இரண்டடி பின்னால் சென்று விழ தெரிந்தாள் ப்ருந்தா

எப்படியோ சமாளித்து நிமிர்ந்து, ஆத்திரத்துடன் அவனை பார்க்க  ட்ரெஸிங் டேபிளின் அந்த சிறிய சேரில் நின்றிருந்தான்

இவன் உன்னை அடிக்கிற நிலைமைக்கு வந்துட்டியே ப்ருந்தா த்தூ என தனக்கு தானே காறி உமிழ்ந்த படி

“இந்தா” என டேப்லெட்டை ஒரு கையால் கொடுத்தபடி, அந்த பேப்பருக்காக மறுகையை நீட்டினாள்.  ஆனால் நீட்டபட்ட அவள் கையில் இருந்த மற்றொரு பேப்பரையும் பிடுங்கிய விமலேஷ்

“ஐஸ்கீரிமை யார் எடுத்து தருவா  அதையும் கொண்டு வா அப்போ தான் புல் எவிடன்ஸூம் உன் கைக்கு வரும்” என சேரில் இருந்து குதித்து அறையை விட்டு வெளியே சென்றான் விமலேஷ்

கமலின் இந்த செய்கையில் ப்ருந்தாவின் வாய்க்குள் ஈ போனாலும் தெரியப்போவதில்லை.  நீட்டிய கை நீட்டியபடி போன அவனையே பார்த்தபடி அப்படியே நின்றிருந்தாள் ப்ருந்தா.  கிழிபட்ட இரண்டு பேப்பர்களுமே அவன் கையில் சிக்கிக்கொண்டதால்.

அது வேறொன்றும் இல்லை, இந்த நான்கு வருட படிப்பில் ப்ருந்தா சேர்த்து வைத்திருந்த மொத்த அரியரின் அனைத்து விபரமும் அடங்கிய பேப்பர் தான் அது. இது கடைசி வருடம் என்பதால் அனைத்தையும் கிளியர் செய்தாக வேண்டும் இல்லையென்றால் டிகிரி கைக்கு வராது என நேற்று தான் அரியருக்கு அப்ளை செய்து அதற்கென பீஸையும் தனியாய் கட்டி இருந்தாள்.

அந்த பில்லுடன் சேர்ந்த அரியர் லிஸ்ட் தான் அந்த பேப்பர். இது வரை அவள் அரியர் வைத்திருப்பது வீட்டிற்கு தெரியாது  ஆனால் அவனது தம்பிக்கு தெரிந்து விட்டது.

“குட்டி சாத்தான், குண்டா, ஐஸ்கீரிம் அண்டா”  என ஏக போகத்திற்கும் திட்டி தீர்த்தபடி தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

சமையலறைக்குள் சென்றவள் பிரிட்ஜை திறந்து மறுபடியும் ஐஸ்கீரிமை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு அவனையே பார்த்திருக்க, “யாரும் எதுக்காகவும் நிற்க வேண்டாம், நானே அந்த கிழிஞ்ச பேப்பரை கொண்டு வந்து கொடுப்பேன்” என விமலும் சொல்ல, தங் தங் கென கோபத்தை நடையில் காட்டியபடி வந்தாள் தன்னறைக்கு.

பின்னோடு வந்த விமலோ, மறுபடியும் படாரென கதவை திறந்து “அப்படியே KFC க்கு கால் பண்ணி, பீட்சா வித் பிரைட் சிக்கன் & ஜிங்கர் பர்கர் வித் பிசி சிக்கன் ஆர்டர் பண்ணிடு, இன்னும் ஆப் அன் அவர்ல வரனும்” என கையில் இருந்த ஐஸ்கீரிமை வழித்தபடி விமலேஷ் செல்ல.

“ம்ஹ்க்கும் ம்ஹ்க்கும்…ம்ஹூக்கும்” என அடித் தொண்டையில் இருந்து குரல் எழும்ப, நாசி விடைக்கும் கோபத்தை அடக்க தெரியாமல் கட்டிலில் குப்புற படுத்து கை கால்களை தட தட வென மெத்தையில் அடித்து தன் கோபத்தை தணித்து கொண்டிருக்க

“நீ இன்னும் ஆர்டர் பண்ணலையா“ என்ற குரலில். படுத்த வாக்கிலியே திரும்பி அவனை பார்த்து “என்கிட்ட அவ்வளவு காசில்லைடா” என

“நீ சொல்ற எல்லாத்தையும் அப்படியே நம்புறதுக்கு நான் ஒன்னும் அப்பா இல்லை“ என ஒரு தோரணையை கொடுக்க

மீண்டும் ஒரு முறை வாய் பிளந்தாள் ப்ருந்தா

“டேய் என்கிட்ட நிஜமாவே காசில்லைடா” என இவள் மன்றாட

“உன்னோட அரியர் பீஸ் ஏழாயிறத்து ஐந்நூறு, ஆனா நீ எக்ஸ்ட்ரா கோர்ஸ்  பீஸ்னு  பொய் சொல்லி பத்தாயிரம் வாங்கி இருக்க தானே! சோ அடிச்ச கொள்ளையில் உனக்கு இரண்டாயிரம் எனக்கு ஐந்தூறு. ம் சீக்கிரம் ஆர்டர் பண்ணு  எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சு” என அசால்ட்டாய் சொல்லி சென்றான் விமல்.

‘இவன் என்ன இப்படி கணக்கு பார்க்குறான். அதுவும் இரண்டாயிருத்து ஐநூறுன்னு அசால்ட்டா சொல்றான்.  இருந்த காசையெல்லாம் நேத்து பப்பில் வேறவிட்டாச்சே’ என மீதம் எவ்வளவு இருக்கிறது என பர்ஸை நோண்டினாள்

பிட்சா ஆர்டர் செய்யும் அளவிற்கு பணம் இருக்க ‘அப்பாடா’ என பெருமூச்சை வெளியேற்றிய படி, அந்த காசில் விமலேஷ் கேட்டதை ஆர்டர் செய்துவிட்டு இவளும் கல்லூரிக்கு கிளம்பி கீழே வந்தாள்

டைனிங் ஹாலில் நாசியை கவர்ந்திழுக்கும் நெய் மணத்தோடு சேர்ந்த வெண்பொங்கல் வரவேற்க மூச்சை ரசித்து இழுத்து கொண்டு, இவள் கைகளை தட்டியபடி பந்திக்கு தயாராய் அமர்ந்தாள் ப்ருந்தா.

கமலேஷோ மிக அசால்ட்டாய் அவன் அன்னையுடன் வாக்கு வாதத்தில் இருந்தான்.

“டேய் பொங்கல் வேணாம்னா  என்னடா அர்த்தம்” என செண்பா கேட்க

“என்ன அர்த்தம்? எனக்கு வேற ஐட்டம் வருதுனு அர்த்தம் அம்மா” என கையில் இருந்த டேப்பில் கவனமாய் கேம் விளையாண்டபடி  விமல் சொல்ல

“போச்சு  இன்னைக்கு வெளக்கமார் பூஜை கன்பார்ம்” என இவர்களது பேச்சை கேட்டபடி, தனக்கு தானே பேசியவள் “பிட்சா வர முன்னாடி நீ பந்திக்கு முந்திடு ப்ருந்தா!”  என தட்டை எடுத்து வேக வேகமாய் அவளுக்கு அவளே பரிமாறிக்கொண்டாள்

“ஐயோ உவக்…. அக்கா இதையா திங்க போற! இதையெல்லாம் நீ் சாப்பிடுவியா என்ன?  அப்பறம் நீ ஆர்டர் பண்ணின பீட்சா பர்கர்லாம் யார் சாப்பிடுவா?” என சரியான நேரமாய் போட்டு தாக்கினான் விமல்.

“குண்டன் போட்டுட்டாண்டா குண்டை” சுறு சுறுவென மூக்கு நுனி சிவந்து கோபத்தை காட்ட, கண் முன்னே இருந்த நெய் வடியும் பொங்கலும் அதன் பங்கிற்கு வாய் விட்டு சிரித்து மேலும் அவளுக்கு கோபத்தை ஏற்றிவிட

“ஏண்டி யாரை கேட்டு பீட்சா ஆர்டர் பண்ணினே?” என செண்பா கேட்கும் போதே

“மேடம்  பீட்சா” என்ற சத்தத்துடன் டெலிவரி பாய் வர

“அக்கா போ  போ… சீக்கிரம் போய் வாங்கிட்டு வா” என தட்டில் கை கூட வைக்க விடாமல் ப்ருந்தாவை விமல் தள்ளி விட்டான்.

தன்னை விடாமல் முறைத்திருந்த தாயை பார்த்து தலை குனிந்தபடி டைனிங் டேபிளை விட்டு அகன்றாள்.

அதையும் மீறி கையில் ஒட்டியிருந்த பொங்கலை வாய்க்குள் விட்டு சப்பியபடியே சென்றாள். பணம் கொடுத்து சூடான  பீட்சா பார்கரை வாங்கி வந்தாள்.  இவள் வாங்கி வந்ததை  வேகமாய் கடை பரப்பினான் விமலேஷ்.

இதை பார்த்த செண்பவிற்கு கோபம் கட்டுகடங்காமல் பொங்க  “பீட்சா சாப்பிடும் போது பொங்கல் எதுக்கு உனக்கு நீ பீட்சாவையே திண்ணு? இப்போ மட்டுமில்லை இனி எப்போவும்  பீட்சாவையே சாப்பிட்டுகோங்க” என பொங்கலை தூக்கிக்கொண்டு சென்றுவிட

“தம்பி இருக்கும் போது அக்காவிற்கு எதுக்கு பங்கு” என, ப்ருந்தாவின் கை அருகில் இருந்த பர்கரையும் விமலேஷ் தூக்கி கொண்டு அவனது அறைப்பக்கம் சென்றுவிட

முஷ்டியை மடக்கி இருந்த கோபத்தை தணிக்கும் விதமாய் டைனிங் டேபிள் மீது கோபம் தீரும் மட்டும் குத்த, வலியெடுத்தது என்னவோ அவளது கைகளுக்கு தான்

“இருடா குண்டா, உனக்குனு ஒரு அண்டா சிக்காமலேயா போகும்  அப்போ இருக்குடா உனக்கு கச்சேரி” என வராத கண்ணீரை வழித்து துடைத்துக்கொண்டு கல்லூரி கிளம்பினாள். மேலும் தாமதம் செய்தால் கல்லூரி பேரூந்து சென்றுவிடுமே என அவசர அவசரமாய் சென்று ஒரு வழியாய் கல்லூரி பேரூந்தை பிடித்து அதிலேறி அமர்ந்தாள்  ஒவ்வொரு ஸ்டாப்பாய் கடந்து கல்லூரி பேரூந்தும் ஒரு சிக்னலில் நின்றது

அதேநேரம் சிக்னலில் இருந்த பிர்லாவின் பார்வை வட்டத்துள் கல்லூரி பேரூந்தில் இருந்த ப்ருந்தா விழ  அடுத்து எந்த வித யோசனையும் இன்றி பிர்லாவின் கார் அந்த பேரூந்தை தான் பின்தொடர்ந்தது

கிட்டதட்ட நாற்பது நிமிடங்களுக்கு பின் கல்லூரியின் உள் செல்ல  இவனது காரை வெளியில் நிறுத்திவிட்டு இவனும் உள்ளே சென்றான்.

Advertisement