Advertisement

அவளிடம் பேச வேண்டும், அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடந்த கால காதலை அறிய வேண்டும், அதை அவள் வாயிலாக மட்டுமே தனக்கு தெரிய வேண்டும் என இவன் ஏக்கமே கொண்டான்!

அவன் அவிழ்ப்பான் என இவளும், இவள் அவிழ்ப்பாள் என அவனும் போட்டு வைத்த முடிச்சுகளில் மூச்சு திணறிப்போன வார்த்தைகள் கோபமாய் உருமாறி வெடித்து கிளம்பியது பிர்லாவிற்கு.

ப்ருந்தாவும் சரி பிர்லாவும் சரி தனிமையேலேயே இருந்தனர். இருவருக்கும் இடையில் இருந்த திரை அவர்களை நெருங்க விடவில்லை.

ப்ருந்தாவின் ஏக்கத்திலும், பிர்லாவின் கோபத்திலும் நாட்கள் நகர்ந்தது. அவனது கை காயம் கூட மறைய ஆரம்பித்திருந்தது.

அன்று காலையில், கம்பெனிக்கு செல்ல இருந்தவனை தடுத்தார் சந்திரா, அவன் முன்பு போனை நீட்டியபடி, “சம்பந்தி உன்கிட்டபேசனுமாம்” என்றார்.

நெற்றி சுருக்கி நின்றிருந்தவனுக்கு ‘ஓ  ப்ருந்தாவோட அப்பாவா?’ என போனை வாங்கி காதுக்கு கொடுத்தான்.

“மாப்பிள்ளை கல்யணத்துக்கு தேதி குறிச்சாச்சு, பத்திரிக்கை!” என இழுக்க

“என்ன தேதி” இவன் கேட்க

“அடுத்த மாசம், ஐந்தாம் தேதி” என்றவர் “பத்திரிக்கை” என ஆரம்பிக்க, இதெல்லாம் அப்பாவும் நீங்களும் முடிவு பண்ணிக்கோங்க” என முடித்தவன் “வேற எதுவும் பேசனுமா?” என கேட்டான்.

“ம் ஆமாம், ப்ருந்தா பத்தி பேசனும்” என

அதானே காரணம் இல்லாமல் நீங்களாவது உன்கிட்ட பேசுறதாவது, என உள்ளுக்குள் ஓட “என்ன சொல்லுங்க!” என

“கல்யாண தேதி தான் முடிவு பண்ணியாச்சே, அதுவரை!”

“அதுவரை?”

“ப்ருந்தா எங்க கூட இருக்கட்டுமே, அதாவது எங்க வீட்டில் இருக்கட்டுமே” என இவர் சாதாரணமாக தான் கேட்டார். ஏனென்றால் திருமணத்திற்காக நிறைய பர்ச்சேஸிங் செய்ய வேண்டியிருப்பதாய் செண்பா தான் அழைத்து வர சொன்னார். அதன் பொருட்டே இவனிடம் வேலாயுதம் கேட்க

“இருக்க வேண்டாம்!” சற்றும் யோசிக்காமல் வந்த்து பதில்.

“மாப்பிள்ளை!” இப்போது இவரது நெற்றி சுருங்கியது.

“அவ இனி உங்க வீட்டுக்கு வர மாட்டா!”

“கல்யாணம் முடியற வரைக்கும் மட்டும் இங்கே இருக்கட்டும் மாப்பிள்ளை”

“பச்  வர மாட்டான்னா, வர மாட்டா, அவ்வளவு தான்!” போனை கட் செய்து, சந்திராவிடம் கொடுத்துவிட்டு

“ப்ருந்தா!” என இருந்த இடத்தில் இருந்தே இவன் கத்த, பதறி அடித்து வந்தாள்.

 “உன் அம்மா  அப்பாகிட்ட என்ன சொன்ன?” என இவன் கேட்க

அது தான் தினமும் போனில் பேசுகிறாளே இவள் “நீங்க எதை கேட்கிறீங்க?” என இவள் கேட்க

“நான் அடைச்சு வச்சு கொடுமை படுத்துறேன்னு உன் அப்பாகிட்ட எதுவும் கம்ப்ளெயிண்ட் பண்ணினியா?” புருவம் உயர்த்திக்கொண்டு இவன் கேட்டான்.

“நான் எதுவும் சொல்லலை” சொல்லாமல் போனாலும் அது தான் உண்மை ‘காதல்ன்ற பெயரில் கொடுமை தானே செய்யற. ஒரு நாள் கோபமாய் திட்றதும், ஒரு நாள் அடிக்கிறதும், ஒரு நாள் கொஞ்சுறதும் கொடுமை தானே. கொஞ்சமா படுத்துற நீ?’ என்பது போல் இவள் பார்த்திருக்க

“அப்புறம் ஏன் உன் அப்பா ‘கல்யாணம்  முடியிற வரை’ உன்னை அவர் வீட்டுக்கு எதுக்கு  கூப்பிடனும்?” இவன் சந்தேகமாய் கேட்க

“நீங்க என்னை கொடுமைபடுத்துறதா நான் சொல்லி இருந்தா, எங்கப்பா கல்யாணத்தை நிறுத்த தான் பாப்பாங்க!” சட்டென இவள் கூறியேவிட்டாள்.

இவள் கூறிய பதிலில் இவனுக்கு சுள்ளென கோபம் ஏற

“நான் அப்படி என்ன கொடுமை பண்ணினேன்” எகிறிக்கொண்டு இவன் வர

“நீங்க கொடுமை பண்றீங்கன்னு இங்க யாரும் சொல்லவே இல்லை  நீங்க தான் சொல்லிட்டு இருக்கீங்க”

“அப்பறம் ஏன் உங்கப்பா உன்னை அங்கே கூப்பிட்டாங்க? எனக்கு அதான் சந்தேகமா இருக்கு”

“எல்லா பொண்ணுங்களும் கல்யாணம் முடியற வரை அவங்க அப்பா வீட்டில் தான் இருப்பாங்க, நீங்க தான் கல்யாணத்துக்கு முன்னாடியே கூட்டிட்டு வந்துட்டீங்களே, அதான் அப்படி கேட்ருபாங்க”

“ஓ” இவன் சமாதானமடைந்த குரல் வந்த பின்பு தான் மூச்சே வந்தது ப்ருந்தாவிற்கு.

 ‘அப்பாடி ஒரு வழியா இவனை சாமாளிச்சுட்ட’ என சந்த்ரபோஸ் பெரு மூச்சே விட

அதன் பின் சில நிமிடம் அமைதி நீடிக்க

“உங்கப்பா  உன்கிட்ட எதுவும் சொன்னாங்களா?” இவன் மீண்டுமாய் ப்ருந்தாவிடம் அதே அழுத்தத்தோடு கேட்க

“எ எதை பத்தி” இவளும் பதிலுக்கு கேட்டாள்.

“நம்ம கல்யாண விசயமா!” என்றவுடன்

‘அவர்கள் எங்கே சொன்னார்கள், ஏன் இவன் கூட இப்போது தானே கூறுகிறான், அன்று இவர்களது பேச்சு காதில் விழப்போய் தான் தெரியும் திருமண விசயம்’ என யோசனைகள் ஓடினாலும் “சொன்னாங்க!” அடுத்த பிரச்சனையை இழுக்க வேண்டாம் என பதில் சொன்னாள்.

“எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை, என்ன ஆனாலும் பரவாயில்லை. கல்யாணம் முடியற வரை நீ, இங்கே தான் இருக்கனும்  இனியும் நான் யாரையும் நம்புறதா இல்லை, உன்னை கூட!” சொல்ல வேண்டும் என சொல்லவில்லை, பேச்சு வாக்கில் அப்படியே வந்தது.

சொல்லி சென்றும் விட்டான். ஆனால் ப்ருந்தாவிற்கு அதீத உளைச்சலை கொடுக்க தான் செய்தது இவன் வார்த்தைகள்.

“இவனது ஆட்டம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகுதே, எப்படிமா சமாளிக்க போற!” இவன் சென்றபிறகு அவளருகே வந்தார் சந்திரா.

“அது ஆட்டம் இல்லை மாமா,  கோபம். என்னை அவர்கிட்ட இருந்து மறைச்சு வச்சுடீங்கன்னு, உங்க மேல, என் அப்பா அம்மா மேல எல்லார் மேலயும் இருக்குற கோபம் தான் இப்படி வெளிவருது”

“சரியாகிடுவாங்க மாமா” அவருக்கு இவள் தைரியம் கூறினாலும் இவளுக்கும் பயம் இருக்கவே செய்தது. அமைதி, பொறுமையின் சிகரம் பழைய பிர்லா என்றால், அவை இரண்டையும் தகர்த்தெரியும் எரிமலை இந்த புதிய பிர்லா.

காதலை மறைத்துவிட்டதற்கே இவனை சமாளிக்க முடியவில்லை, இதில், தான் இவனது மனைவி என தெரியவந்தால்? நினைக்கவே பயமாக இருந்தது ப்ருந்தாவிற்கு. ஆனாலும் சந்திராவிற்கு ஆறுதல் சொன்னாள்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்த பார்வதிதேவி வாயை திறக்கவே இல்லை. காரணம் நேற்று இரவு பிர்லா சாப்பிடும் போது அவரை தனியாக இழுத்து சந்திரா விட்ட டோஸில் வாயை மூடிக்கொண்டார் பார்வதிதேவி. தவிர ‘ப்ருந்தாவுடன் தனியாக வாழ்வை அமைத்து கொள்வேன்’ என்ற பிர்லாவின் பேச்சு தான் அவரது வாயை முழுமையாக அடைக்க வைத்திருந்தது.

—————

அதன் பின் சந்திராவே மீண்டும் வேலாயுதத்திற்கு போன் செய்து, பிர்லாவின் செயலுக்கு வேண்டியமட்டும் விளக்கம் கொடுத்து, அடுத்தகட்ட திருமண வேலைகளில் இறங்கினர்.

போன் பேசி முடித்தவர் நேராக வந்து நின்ற இடம் பூஜை அறை, அதுவும் உள்ளே செல்லாமல் வெளியே நின்றிருந்தார். ஆம் கெங்கா இறந்து இன்னமும் ஒரு வருடம் முடியாத நிலையில் இதுவரை பூஜை அறையின் உள்ளே வந்ததே இல்லை. ஆனால் மனம் கவலையில் இருக்கும் போது இப்படி பூஜை அறைக்கு வெளியில் அமர்ந்து புலம்பி சென்றுவிடுவார். அதன் காரணம் உள்ளிருக்கும் கடவுளின் உருவம் அல்ல  கடவுளாய் மாறி இருந்த கெங்கா வை தேடி தான் அங்கே வருவார். இவர் தான் உள்ளே செல்ல மாட்டாரே ஒழிய, வேலையாட்களை வைத்து சுத்தமாக வைத்து கொள்வார். தினம் தினம் பூஜை நடக்காமல் போனாலும் அங்கிருக்கும் படங்களுக்கு பூக்களை மட்டும் தினமும் மாற்றிவிடுவார்.

சுத்தபத்தமாய் பளிச் என இருந்தது அந்த பூஜை அறை.

இப்போது பிர்லாவின் திருமணத்திற்காக வந்து நின்றார். அங்கே அத்தனை கடவுள்களின் பிம்பங்கள் வரிசை கட்டி நின்றிருந்தாலும் அத்தனை பிம்பங்களிலும் கெங்கா மட்டுமே தெரிந்தார்.

“உன் பையனுக்கு முறைப்படி கல்யாணம் நடக்க போகுது கெங்கா  இன்னைக்கு தான் அதுக்கான வேலைகளை ஆரம்பிக்க போறோம். இதுவரை அவனுக்கு எல்லாமே சரியா நடந்திருந்தாலும், அவனோட கல்யாண வாழ்க்கை ஏதோ ஒரு குறையோட தான் ஆரம்பிச்சது, அதான் நிறைய பிரச்சனையில் கொண்டு போய் விட்டுடுச்சு  ஆனால் இப்போ நடக்கபோற இந்த கல்யாணம் அவனோட ஆயுள் முழுக்க சந்தோஷத்தை மட்டுமே கொடுக்கனும். நீதான் அவனுக்கு துணையாய் இருக்கனும் கெங்கா.” மனமுருக வேண்டினார்.

இவர் வேண்டுதலை முடித்து எழும் போது அவர் பாதத்தில் வந்து விழுந்தது ஒற்றை மல்லிகை பூ. அதை கையில் எடுத்தபடியே நிமிர்ந்து பார்க்க, ஏதோ ஒரு சாமி போட்டோவில் இருந்து விழுந்த பூ தான் என்பதை உணர்ந்தார். ஏனோ கெங்காவே ஆசிர்வதித்தது போல் மனம் நிறைய , அதை கண்களில் எடுத்து ஒற்றியபடி அங்கிருந்து அகன்றார்.

ஆம் கெங்கா பகுதி மற்றவர்களை பொறுத்தவரை முடிந்து தான் விட்டது. ஆனால் சந்திராவிற்கு காற்புள்ளி இட்டு தொடரபட்ட பகுதி. கடவுளின் பிம்பத்தில் எப்போதுமே கெங்கா மட்டும் தான் தெரிவார். அவரது கோபம், துன்பம், கவலை, மகிழ்ச்சி என இப்போதும் கெங்காவுடன் பகிர்ந்து கொள்ள தான் செய்கிறார். முன்பு கிடைக்கும் அதே அமைதி, அதே நிம்மதியை இப்போதும் பரிபூரணமாய் உணரத்தான் செய்கிறது அவர் மனது.

அதன் பின் திருமண வேலைகள் மடமடவென ஆரம்பமானது.ஆரம்பம் முதல் இறுதி வரை நல்லபடியாய் முடியவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம். ஆனால் பிர்லா சீக்கரம் திருமணம் முடிய வேண்டும் என கூடுதலாய் கூறிய வார்த்தைக்கு மதிப்பளித்து எங்கும் தாமதம் செய்யாமல் அடுத்தடுத்த வேலைகள் தொடங்க, வேகம் எடுத்தது திருமணம்.

இவனது கோபத்தில் பல நாட்களும் இவளது அமைதியால் பல நாட்களும், ஓடியது! இதோ இன்னும் சரியாய் ஐந்து நாட்களில் திருமணம் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

மேரேஜ் ஷாப்பிங் என்பார்களே அதற்காக பிர்லாவை அழைக்க, ‘ப்ருந்தாவை கூட்டிட்டு போங்க’ என இவன் சொல்ல

‘பிர்லாவோட சாய்ஸ் தான் என்னோட சாய்ஸூம்” என ப்ருந்தா சொல்லவிட

இருவருக்குமே அதில் எல்லாம் நாட்டம் இல்லாமல் போனதால், இருவரது பெற்றோர் தான் அனைத்திலும் பங்கெடுத்து சிறப்பாய் செய்து கொண்டிருந்தனர்.

Advertisement