Advertisement

தன்னை பற்றிய முழு நியாபகங்களையும் தொலைத்தவனிடம் நெருங்கவும் முடியாமல்,விலகி தூரப்போகவும் முடியாமல் தத்தளித்தவளுக்கு, நங்கூரமென காதலை ஆழ பதித்தது அந்த வார்த்தைகள்.

கண்களில் தானாகவே நீர் கோர்த்தது. அவனது நிமிர்ந்து பார்க்க திராணியற்றவளாய், ‘நான் என்ன தவறு செய்தேன்’ , பிரித்து வைத்தது உன் அம்மா தான்’ என சொல்ல வெகு நேரம் ஆகாது.

ஆனால் ‘பிர்லாவை தேடி போக கூடாது’ என தன் காலில் விழுந்த தந்தையும் இதற்கு காரணம் தானே. அவர் அன்று அப்படி செய்யாமல் இருந்தால் பிர்லா இப்படி பேச இடமே கொடுக்காமல் அவனை தேடி வந்திருப்பாளே !

இதையெல்லாம் மனதில் நினைக்க மட்டுமே முடியும், வாய் திறந்து சொல்ல முடியாது, சொன்னால் இவனுக்கு மீண்டும் வலிப்பு நோயை வர வழைக்க அவள் தயாரகவும் இல்லை. வேண்டாம் அவன் கோபம் நியாமானது, இவனுக்கு கோபம் வெளிப்பட்டு மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்றாலே போதும்! என நினைத்த மறு நொடி தேங்கிய கண்ணீரை உள்ளுக்குள் இழுத்து சமநிலை படுத்தினாள்.

கொஞ்சம் அமைதி அடைந்த அவள் மனம் நிதானமாய் யோசித்தது. காரணமில்லாமல் விவாதம் செய்வதால் ஒரு ப்ரயோஜனமும் இல்லை என மனமுதிர்ச்சி கண்டிருந்தது அவள் மனம்.

அதன் பொருட்டு இவள் அமைதியாய் நிற்க “எது கேட்டாலும் வாய் திறக்க கூடாதுனு முடிவுல இருக்கியா நீ” எரிந்து விழுந்தான் இவளிடம்.

“ஆமா, தப்பு எல்லாம் என் பெயரில் இருக்கும் போது, நான் அமைதியா தானே இருந்தாகனும்”

“ஏய், கேட்டதுக்கு முதலில் பதில் சொல்லுடி, ஏன் என்னை பார்க்க வரலை  ஏன் என்னை தேடி வரலை ” இவன் அவளை நெருங்க,

‘நீ எப்படி கேட்டாலும் என்னிடமிருந்து பதில் வரவே வராது’ என்ன ஆனாலும் பரவாயில்லை, என பயம் கொள்ளாமல் நின்றிருந்தாள்.

அந்நேரம் “பிர்லா  பிர்லா” என்ற தேவியின் குரல் அவனது அறையை தாண்டியும் உள்ளே கேட்டது.

‘ப்ச்’ என இவளை முறைத்து கொண்டே அறையை விட்டு வெளியே வர “காலையில் இருந்து சாப்பிடவே இல்லை  வா சாப்பிட” கீழே  இருந்தபடியே தேவி இவனை அழைத்தார்.

நிதானமாய் இறங்கி வந்தான்.வந்தவன் வாஸ்பேசனில் கை கழுவிவிட்டு, டைனிங் டேபிளின் முன் அமர்ந்தான்.

வேலன் டிபனை கொண்டு வந்து வைக்க, அவருக்கு பரிமாற இடம் கொடுக்காமல் இவனே, அடிபட்ட கை என பாராமல் எடுத்து போட்டு கொண்டான்.

தேவி “கொடுடா, நான் பரிமாறுறேன்” என அவனிடம் வர

“நான் முழுசா சாப்பிடனும்னா கிட்ட வராதீங்க” என இவன் சொல்ல

“நான் என்னடா பண்ணினேன், என் மேல் இன்னுமா கோபம்?” என ஆரம்பித்தவரை “அவனை சாப்பிட விடு தேவி” என்ற சந்திராவின் குரலில் அப்படியே  ஒதுங்கி விட்டார்.

இதையெல்லாம் பார்த்தும், அமைதியாக இருக்க முடியாமல்,பிர்லாவின் அருகில் வந்தாள் ப்ருந்தா “கொடுங்க நான் வேணா பரிமாறுறேன்” என இவள் பேசும் முன்

“உனக்கு வேற தனியா சொல்லனுமா?” என இவன் பல்லை கடித்தான். இவளும் சற்று ஒதுங்கி நின்று கொண்டாள். சந்திரா, இவன் சாப்பிடும் வரை பொறுமையாய் அமர்ந்திருந்தார்.அவன் சாப்பிட்டு முடித்தபின்

“என்ன நினைச்சிட்டு இருக்க பிர்லா நீ? காலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஆபிஸ் போயாச்சு, காலையிலும் சாப்பிட வரலை, மதியமும் வரலை  போன் பண்ணினா எடுக்க கூட மாட்ற  சரி  எங்க மேல கோபப்படுறதில் ஒரு நியாயம் இருக்கு, அதென்னடா ப்ருந்தா மேலையும் கோபத்தை காட்ற!” இவனது ஆட்டம் பொறுக்காமல் கேட்டார்.

“அவளே அமைதியா போறா உங்களுகென்ன?” கை கழுவியபடி இவன் சுள்ளென விழ

“எல்லாரும் அமைதியா போறாங்கன்றதுக்காக, நீ ஓவரா ஆடுர்ற பிர்லா!”

“அப்படி தான் ஆடுவேன்” திண்ணமாய் இவன் பேச

“ஏண்டா, இப்படிஎல்லாம் பண்ற” என சந்திராவும்

“எவ்வளவு நாளைக்குடா” என தேவியும்  சிறிது பயத்துடன் கேட்க

இவன் அவர்களை முறைத்து பார்த்திருந்தான் அதீத கோபத்துடன்

“இந்த கோபம் உன் உடம்புக்கு ஆகாதுடா!” சந்திராவும் பயத்தில் சொல்ல

“கோபம் ஆகாதா? இல்லை ப்ருந்தா ஆகாதா?”  சூடாய் வந்தது வார்த்தைகள்.

சந்திரா தேவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, பின் பிர்லாவை பார்த்தனர்.

அதற்காகவே காத்திருந்தார்ப்போல் “எதுக்கு இவளை என்கிட்ட இருந்து பிரிச்சீங்க” ப்ருந்தாவை கைகாட்டி இவன் பேச

“உங்களை பிரிச்சு வச்சது தப்பு தான்  முடிஞ்சதை விட்டுடு, ப்ருந்தா தான் வீட்டுக்கு வந்துட்டால்ல  விடு” அவனது கோபத்தை குறைக்கும் பொருட்டு சந்திரா சமாதானமாய் பேசினார்.

“விடு விடுன்னு அவ்வளவு ஈசியா சொல்றீங்கப்பா, நான் அவளை தேடி போகலைன்னா, ப்ருந்தா இங்கே வந்திருக்கவே மாட்டா, ஹாயா நாகப்பட்னத்திலேயே இருந்திருப்பா  நீங்க என்ன செஞ்சிருப்பீங்க, வேற ஒரு பொண்ணை பார்த்து என்னை அவள் தலையில் கட்டி வச்சிட்டு நிம்மதியா இருந்திருப்பீங்க! ஒரு வேளை வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணின அப்புறம் எனக்கு இவளை பத்தி தெரிய வந்தா என் நிலைமை என்னனு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா?” என குரல் கமற இவன் பேச

“அன்னைக்கே சொன்னேன், இரண்டு பேரையும் பிரிக்க வேண்டாம்னு கேட்டீயா?” என கொண்ட கோபம் எல்லாம் தேவியிடம் பாய்ந்தது சந்திராவிற்கு.

இப்படி பிர்லா தன்னை ஒதுக்குவதையும், சந்திரா கோபத்தை தன்னிடம் வெளிப்படுத்துவதையும் பொறுக்காத பார்வதிதேவி,

“ஆமாண்டா, நீ ப்ருந்தாவை தேடி போகலைன்னா, அவள் இந்த வீட்டுக்குள்ள மறுபடியும் வந்திருக்கவே மாட்டாள், ஏன் இப்போ கூட இவள் இந்த வீட்டுக்குள்ள இருக்குறது எனக்கு பிடிக்கலை, இதுக்கு இப்போ என்ன பண்ணனும்ன்ற?” என பார்வதிதேவியும் பொறுமையிழந்து பேசினார்.

“தேவி” என ஏதோ பேச வந்த சந்திராவை தடுத்தவர் “இது நான் உருவாக்குன பிரச்சனை, நானே பார்த்துகிறேன்” என பார்வதிதேவி முற்றுபுள்ளி வைக்க

“இந்தளவு வெறுப்பை காட்றதுக்கு அவள் என்ன செஞ்சாம்மா?” என்ன நடந்தது என தெரியாத ஆத்திரத்துடன் பிர்லா கேட்க

“என்ன செஞ்சாளா? நீ எங்களுக்கு கிடைப்பியா மாட்டியான்னு நினைக்கிற அளவுக்கு, உன்னை ஹாஸ்பிடலில் படுக்க வச்சவளே அவ தாண்டா, இன்னைக்கு நீ இப்படி பழசை எல்லாம் மறந்துட்டு நிக்கிறதுக்கும் இவ தாண்டா காரணம், கிட்ட தட்ட உன் உயிர் போய் உயிர் வந்திருக்கு, அப்படி பட்டவ கிட்ட மறுபடியும் உன்னை கொடுக்க நான் எப்படி சம்மதிப்பேன்? அதான் உங்க இரண்டு பேரையும் பிரிச்சேன். இப்போ கூட அவ இங்கே வந்தது எனக்கு பிடிக்கலை, உன் ஒருத்தனுக்காக தான் அத்தனையும் பொறுத்துட்டு இருக்கேன்” என

“அப்போ அப்பாக்கு என்னை மாதிரி ஒரு நிலைமை வந்து, அப்பாவும் என்னை மாதிரியே பாதிக்கப்பட்டு இருந்து, பாட்டி ‘இதுக்கு காரணம் நீங்க தான்னு’ சொல்லி, உங்க மேல பழியை போட்டு, உங்களை அப்பாகிட்ட இருந்து பிரிச்சு வச்சா, மறுபடியும் அப்பாவைதேடி நீங்கவரவே மாட்டீங்களா?” என  கைகளை கட்டியபடி இவன் கேட்டான்.

வார்த்தைகள் அப்படியே உறைந்து போக, சந்திராவை தான் பார்த்தார் தேவி.

“உன் வாய் தான் உனக்கு எமன்!” என சந்திரா வாய்க்குள் முனுமுனுக்க, அது நன்றாகவே கேட்டது பார்வதிதேவிக்கு.  இதோ இப்போது வரை ப்ருந்தாவை பற்றியோ கடந்த கால காதல் வாழ்க்கையை, திருமண பந்தமோ எதுவுமே நினைவில்லாத இவனிடமிருந்து, தக்க காரணத்தை சொல்லி இருவரையும் பிரித்து விடலாம் என தான் நினைத்திருந்தார் பார்வதிதேவி.

ஆனால் அந்த காதல் வாழ்வு, திருமண பந்தம் என அதற்கும் அப்பாற்பட்டதொரு பிணைப்பு பிர்லா ப்ருந்தா இருவருக்குள்ளும் இருப்பதை பார்வதிதேவி அறியவில்லை.

அந்த பிணைப்பு தான் ப்ருந்தாவை, தன்னிடமே இழுத்து வர முக்கியமானதொரு காரணியாய் இருக்கிறது என்பது பிர்லா உட்பட யாருமே அறியாதது.

“உங்களுக்கு வேணா அவ என்னோட காதலியா தெரியலாம்மா  ஆனா என்னோட மனசுக்கு இப்போ வரை அந்த எண்ணமே வரலை” என நிறுத்தியவன்

குடும்பத்தினரின் அதிர்ந்து முகத்தை உள்வாங்கியபடி “உங்களுக்கு அப்பா எப்படியோ, அப்படி தான் ப்ருந்தாவுக்கு நான்” என இவன் நிறுத்த

அதுவரை கண்ணில் கோர்த்திருந்த நீர் அப்படியே கன்னத்தில் இறங்கியது ப்ருந்தாவிற்கு, ஆனால் தேவியோ அதிர்ந்து போய் அவனை பார்த்தார்.

“எனக்கு ஆதாரமா கிடைச்ச தாலியை தேடி போனதால் தான் என் வாழ்க்கை மறுபடியும் எனக்கு கிடைச்சிருக்கு, இல்லைனா” “நினைச்சு கூட பார்க்க முடியலம்மா!”மனம் அத்தனை வலித்தது அவனுக்கு.

“இத்தனைக்கும் எல்லா தப்புக்கும் நீங்க தான் காரணம்னு சொல்றீங்க, என்னால் என்ன செஞ்சிட முடியும்னு தானே இத்தனை தைரியம் உங்களுக்கு” கசங்கிய முகத்தை அழுந்த துடைத்து,

“என்னாலையும் முடியுற காரியம் சிலது இருக்குமா,  ப்ருந்தாவோட மட்டுமே என்னோட வாழ்க்கைன்னு, கண் காணாத இடத்துக்கு இங்கே இருந்து, அவளை அழைச்சிட்டு போய்டுவேன் ” மிக அழுத்தமாய் வந்தது அவன் வாரத்தைகள்.

தேவி வாய் பிளந்து நிற்க, சந்திராவோ ‘உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என பார்வதிதேவியை முறைத்தபடியே நிற்க.

“எங்களை மறுபடியும் பிரிக்க நினைக்காதீங்க, நான் உங்களை பிரிய வேண்டியது இருக்கும்” என கூறினான்.

பதில் பேசமுடியா பதுமையாய், கலங்கிய கண்களுமாய் நின்றிருந்தவளை “ப்ருந்தா” என சத்தமாய் அழைத்தான்.

பதறி துள்ளி கண்களை துடைத்து நிமிர்ந்தவளிடம் “இனி எங்கம்மா சொன்னாலும், ஏன் நானே சொன்னாலும் என்னை விட்டு இனி எங்கேயும் போய்டாத, நீ கொடுத்த ஒவ்வொரு பொருளையும் பொக்கிஷம் மாதிரி எனக்கே தெரியாமல் மறைச்சு வச்சு இருக்கேன். இன்னும் எத்தனை மறைச்சு வச்சு இருக்கேன்னும் தெரியலை. நான் தேடி வந்த நேரத்தில் எனக்கும் சரி உனக்கும் சரி வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகலை” ஆனால் “ஒருவேளை இந்நேரம் வேற ஒருத்தரோட உனக்கோ எனக்கோ கல்யாணம் ஆகி இருந்தா?” என கேள்வி எழுப்ப

“பிர்லா” என  அலறியே விட்டாள் ப்ருந்தா.

“இனி என்னை விட்டு போவியா?” இவளை பார்த்தபடி கேட்க

“இல்லை போ மாட்டேன்” என அழுகையினுடே இவள் திக்கி திணற

“மறுபடியும் நான் உன்னை மறந்தாலும், போவியா?”

“சத்தியமா போக மாட்டேன்” கண்ணீர் வடிய பேச

“போய்டாத செத்து போய்டுவேன்!” என இவன் முடிக்க

நான்கெட்டுகளில் அவனிடம் வந்தவள் “செத்துடுவியா  செத்துடுவியா? என்னை விட்டுட்டு நீ செத்துடுவியா” என அவன் சட்டையை பிடித்தவள், இழுத்து அவனை கீழே தள்ளினாள்.

Advertisement