Advertisement

அங்கே ப்ருந்தாவின் அறையில்  வெகு தாமதமாய் தான் எழுந்தாள். எழுந்ததும் அவள் கண்களில் தட்டுபட்டது டிராலி போக் தான்., நேற்று இரவில் இல்லாத டிராலி பேக் காலையில் அவளுக்கு உதவி செய்ய, குளித்து வேறு உடையில் வந்தாள்.

அவள் அங்கே வரும் போது, பிர்லா கிளம்பி இருந்தான். அடுத்ததாய் இவர்கள் ஆரம்பித்த பேச்சில் கலந்து கொள்ள இஷ்டமில்லாமல் ஓரமாய் நின்று கொண்டாள்.

இவர்கள் பேச்சு முடிந்தபின் ப்ருந்தா அவர்கள் கண்களுக்கு தெரிய

மரகதாம்பாள் தான் பார்த்து “வா ம்மா” என அழைக்க, அவர்கள். அருகே வந்தாள்.

காலை உணவினை ஒன்றாக உண்டபின் அவளை தனியாய் அழைத்து “என்னடி முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கே, அழுதியா?” என செண்பா விசாரிக்க “அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா! நைட் தூங்க லேட் ஆயிடுச்சு” என ப்ருந்தா சொல்ல

ஒரு தாயாய் எல்லை தாண்ட முடியவில்லை செண்பாவினால், தாண்டி பதில் சொல்ல முடியவில்லை ப்ருந்தாவால். தாயும் மகளும் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லை கோடு போட்டு கொள்கின்றனர், அது விலகலினால் அல்ல  தெரிந்தும் காயத்தை மேலும் ரணமாக்க வேண்டாம் என தாயும், என் கஷ்டம் என்னோடு போகட்டும் என மகளும் , அந்த எல்லை கோட்டிற்குள் நின்று விடுகின்றனர்.

அந்த வேதனையை செண்பா கடவுளிடம் ஒப்படைக்க, இவளோ பிர்லாவிடம் ஒப்படைத்துவிட்டாள்.

அதன் பின் தன் குடும்பத்தை வேண்டும் மட்டும் கவனித்து அனுப்பி வைத்தாள் ப்ருந்தா.

அடுத்து தனிமையே அவளுக்கு துணையானது. அவளது அறையில் அமர்ந்திருந்தவளுக்கு இவர்களது பேச்சுகளே திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

“திருமணத்திற்காக நாள் பார்க்கப்படுகிறது” என உணர்ந்து, அவள் கழுத்தை தடவியது அவள் கைகள்

ப்ருந்தா மருத்துவமணையில் இருக்கும் போதே அதை கோவில் உண்டியிலில் போட்டுவிட்டதாய் தந்தை கூறிய போது, “தாலி இல்லைன்னா, நான் அவனுக்கு பொண்டாட்டி இல்லைன்னு ஆயிடுமா? இல்லை அவன் தான் என்னை மறந்திடுவானா?” என திமிராய் பேசிய பேச்சுகளும் நினைவு வந்து, கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் பறித்து கொண்டது.

யோசனையில் இருந்தவளை கலைத்தது “ப்ருந்தா” என்ற சந்திராவின் குரல், அறைக்கு வெளியில் இருந்து.

“கதவு திறந்து தான் இருக்கு” என

உள்ளே வந்தவர் “ப்ரியா இருக்கியாம்மா?” என இவர் கேட்க

“என்னன்னு சொல்லுங்க” என ஒரு சேரை அவர் புறமாய் எடுத்து போட்டாள்

“பிர்லா பத்தி கொஞ்சம் பேசனும்மா!” என தயங்க

அவர் எதை பேச வருகிறார் என தெரிந்த ப்ருந்தாவும்

“நீங்க அப்பாகிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன், எனக்கு புரியுது மாமா, நானும் லவ் ப்ராப்ளம்னு சொல்லி தான் சமாளிச்சிட்டு இருக்கேன். நீங்க கல்யாண வேலையை ஆரம்பிங்க! நானா எதையும் நியாபகபடுத்த மாட்டேன் ஆனால் அதையும் மீறி நியாபகம் வந்தால்?” என இவள் நிறுத்த

‘அன்றைய கடைசி இரவு, பிர்லா வெட்டி வெட்டி இழுத்த உடல் நியாபகம் வந்து அவள் உடலை நடுநடுங்க செய்ய’ இல்லை மீண்டும் பிர்லாவை அந்த நிலையில் தன்னால் பார்க்க முடியாது.  அதற்கு எத்தனை வலியை வேண்டுமானலும் நான் தாங்கி கொள்வேன். என மனம் உறுதி கொள்ள,

“நியாபகம் வர கூடாதுன்னு நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்” என இவள் நம்பிக்கையாய் பேச

‘பக்குவம் நிறைந்த ப்ருந்தாவின் பேச்சுக்கள்’ நிச்சயமாய் ஒரு வித அமைதியை கொடுத்தது சந்திராவிற்கு.

ஆனாலும் “வேண்டிக்கோங்க, நல்லா வேண்டிக்கோங்க!’ நேரங்கெட்ட நேரத்தில் பிர்லாவின் பேச்சும் ஓடி ஒளிந்தது இருவரது மூளைக்குள்ளும்.

————

இரவில் தான் வந்தான் பிர்லா. நேராக அவனது அறைக்கு தான் வந்தான். மாடி ஏறும் போதே இவள் கவனித்து விட்டாள். இவன் அறைக்குள் சென்று பத்து நிமிடங்களின் பின் சென்றாள். திறந்தே இருந்தது கதவு. அகலமாய் திறந்து உள்ளே சென்றாள். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவன், இவளை கண்டதும் மீண்டுமாய் கட்டிலில் சாய்ந்தது இவன் தலை. உடை கூட மாற்றாமல் ஒரு காலை குத்துகாலிட்டு, மறுகாலை நீட்டி, நெற்றியை மறைத்தபடி படுத்திருந்தான்.

“மதியமும் வரலை, இப்போவாவது சாப்பிட வாங்க” முதல் முறையாய் அக்கறை கலந்த உரிமை இவளிடம் வெளிப்படுவதை கண் மூடி உள் வாங்கினான்.

காலையில் இருந்து வரவில்லையே என இவளுக்கு கொஞ்சமும் கவலையே இல்லையா? என காலையில் இருந்து உறுத்திக்கொண்டிருந்த உறுத்தல் சற்று தட்டுபட்டது பிர்லாவிற்கு. ஆனால் படுக்கையில் இருந்து எழவோ, அவளுக்கு பதில் சொல்லவோ இல்லை.

இவனிடம் பதில் இல்லாததை உணர்ந்து “எழுந்து வாங்க” மீண்டும் இவளே அழைத்தாள்

“நீ போ  வரேன்” குரல் மட்டுமே வந்தது அவனிடமிருந்து.

சிறிதும் கண்டுகொள்ளாமல் வந்த இவனது பதிலில், கோபம் கூட லேசாய் வந்தது ப்ருந்தாவிற்கு.

“சாப்பிட வாங்கன்னு சொன்னேன்” மீண்டுமாய் சொல்ல, அவளையே பார்த்திருந்தான்.

இவன் ஏன் இப்படி படுத்துறான் என்ற எரிச்சல் கூடி கொண்டே செல்ல “காலையில் இருந்து நீங்க வீட்டுக்கு வரவே இல்லைனு, உங்களுக்கு எத்தனை தடவை போன் பண்ணிருக்கேன், அதுக்கு பதில் சொல்ல கூட நேரம் இல்லை! இப்போ இப்படி தனியா கத்திட்டு இருக்கேன் அதுக்கும் பதில் சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்” என

“என்ன எனக்கு போன் பண்ணியா?” என அவளை பார்த்தபடியே பெட்டில் கிடந்த போனை எடுத்து பார்க்க, அதில் நிறைய மிஸ்டு கால்கள். தெரிந்த எண்கள் தெரியாத எண்கள் என வரிசை கட்டி நின்றிருந்தது.

“நிறைய மிஸ்ட் கால்  இதில் உன்னோட நம்பர் எது?” என இவன் கேட்க

‘என்னையவே இவனுக்கு நியாபகம் இல்லை, என் நம்பர் மட்டும் எப்படி நியாபகம் இருக்கும்’ என இவள் யோசிக்கும் அந்த இடைவெளியில் இவன் அவளை தான் பார்த்திருந்தான்.

கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலே இருக்காது, இவளிடம் கேட்பதற்கு சுவற்றில் எங்காவது முட்டிக்கொள்ளலாமா? என தான் முறைத்து பார்த்திருந்தான்.

இவனது பார்வை அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்த, வேகமாய் அவனது அருகில் சென்று மொபைலை வாங்கி, மிஸ்ட்காலில் இருந்த தன் நம்பரை எடுத்து கொடுத்தாள்.

அதை ‘ப்ருந்தா’ என பெயரிட்டு மொபைலில் சேமித்தபடி, “காலையில் கம்பெனி போகும் போது மொபைலை வீட்டிலேயே வச்சுட்டு போய்ட்டேன்” அதனால் தான் உன்  போன்காலை அட்டெண்ட் பண்ண முடியவில்லை” என மறைமுகமாய் இவன் பதில் சொன்னான்.

‘காலையில் இருந்து தன்னை தேடவே இல்லையா இவள்’ என்ற பிர்லாவின் கோபம்

‘காலையில் இருந்து இத்தனை முறை போன் செய்தும் தனக்கு இவன் பதில் அளிக்கவே இல்லையே’ என்ற ப்ருந்தாவின் எரிச்சல் என இருவரின் கோபதாபங்கள் சற்று மட்டுபட்டாலும்

‘ஏன் போன் எடுக்கலைன்னா, கம்பெனி நம்பருக்கு போன் செய்திருக்கலாமே’ என இவனும்

‘சரி, மொபைலை தான்  வீட்டிலேயே வைத்துவிட்டு போய்ட்டான்  ஆனால் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட முகம் கூட பார்க்க மறுத்தானே! சரியாக பதில் கூட சொல்லாமல் தானே இருந்தான் இவன்’  என்ற கோபம் இவளுக்கும் வேறு கனன்றது.

இருவரது கோபமும், காரணம் தேடிக்கொண்டு உடைபெடுக்க தயாரானது.

தத்தமது யோசனைகளில் எத்தனை நேரம் ஓடியதோ? இருவரது பார்வையும் மீள வழியின்றி சிக்கி கிடந்தது.

“என் போன் நம்பர் எப்போ இருந்து தெரியும் உனக்கு?” ஏதோ யோசனையில் இருந்தவளை யோசிக்க விடாமல் தடுத்தது கூர்மை தோய்ந்த இவன் குரல்.

“ம் என்ன?” இவள் தடுமாற

“என் போன் நம்பர் எப்போ இருந்து தெரியும்னு கேட்டேன். அதாவது நான், நேத்தைக்கு சாயந்திரம் உன்னை தேடி உன் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி இருந்தே தெரியுமா? இல்லை வீட்டுக்கு வந்தப்புறம் தெரியுமானு கேட்டேன்” என தெளிவாய் கேட்க  தடுமாறினாள் ப்ருந்தா.

ஆம் காதலிக்கும் காலத்தில் அவனிடமிருந்து எடுத்த போன் நம்பர், இது இன்றைய பொழுது வரை அவளது போனில் தான் இருக்கிறது. முன்பு அவள் இருந்த நிலை அவனை தொடர்பு கொள்ளவிடவில்லை. ஆனால் இன்றோ அந்த நிலை அடியோடு மாற, காலையில் இருந்து சாப்பிடாமலும் வீட்டிற்கு வராமலும் இருந்தவனை தைரியமாய் போனில் அழைக்க தூண்டியது.

ஆனால் இவன் இப்படியெல்லாம் கேள்வி கேட்டு திணறடிப்பான் என்ற ஒரே விசயம் மட்டுமே இவள் எதிர்பாராதது.

“நீ அமைதியா இருக்குறதை பார்த்தா, என் போன் நம்பர் உன் போனில் ரொம்ப நாளா உறங்கிட்டு இருக்கு போல!” ‘என் போன் நம்பர் உனக்கு தெரிஞ்சிருக்கு, ஆனால் உன் நம்பர் எனக்கு தெரியவே இல்லையே’ என்பது போன்ற இவனது பேச்சு அவளது யோசனைகளை உடைத்தது.

“நான் தான் நியாபகம் எல்லாத்தையும் இழந்துட்டு நின்னேன், உன்னை தேடலை, தேடி வரலை  ஆனால் உனக்கு நான், நம்பளோட காதல், நம்பளோட பிரச்சனைன்னு எல்லாமே தெரியும் தானே, நீ ஒரு போன் பண்ணி நடந்ததை சொல்லி இருக்கலாம்ல!” இத்தனை கால வாழ்க்கை தொலைந்து போய் விட்டதே பொறுமை பறந்தது.

“ப்ச் அதை விடு,எனக்கு தெரிஞ்சு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி கிட்டதட்ட பத்து பதினைஞ்சு நாள் அங்கேயே தான் கிடந்தேன். நேரில் தான் வரலை நீ  அட்லீஸ்ட் ஒரு போன் பண்ணி ‘இருக்கனா? செத்தனா? ன்னு கூட கேட்க முடியலை உனக்கு” பறந்த பொறுமை எல்லாம்  கோபத்தை இழுத்து வந்தது.

“பிர் லா….” என்ற பலமான சப்தத்தில் பிர்லாவின் பேச்சு தடைபட

“இருக்கேனா ? செத்தேனாவா ? இதெல்லாம் என்ன வார்த்தை, பிர்லா”    அதிர்ந்து போய் கேட்டாள் ப்ருந்தா  இவன் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக இவளது வாழ்வையே ஒதுக்கியவளுக்கு அத்தனை வலியை கொடுத்தது அவனது வார்த்தை.

“உண்மையை தானே சொன்னேன், இருக்கேனா, செத்தனான்னு ஒரு தடவையாவது வந்து பார்த்தன்னு சொல்லு!” இவனும் எகிற

“வரலை தான்  வர சூழ்நிலையில் நான் இல்லை, அதுக்காக இத்தனை பெரிய வார்த்தையை சொல்லனுமா?”

“ஆமா சொல்லுவேன் ” என திமிறி நின்ற பிர்லா இவளுக்கு புதிதாய் தான் தெரிந்தான்.

“இப்போ கூட எனக்கு உன் பேரை தவிர எதுவுமே தெரியாது, நீ எப்படிபட்டவ? உன்னோட குணம் என்ன? உன் குலம் கோத்திரம் என்ன? நீ நல்லவளா? கெட்டவளா? இப்படி எதுவுமே தெரியாது? இத்தனை ஏன்  நீ என்னை லவ் பண்றியா இல்லையான்னு கூட தெரியாது. ஆனால் உன்னை நியாபகப்படுத்தின பொருள் எல்லாமே சேர்ந்து அந்த நிமிசமே உன் மேல காதலை வர வழைச்சிடுச்சு, நம்ப காதலை உண்மைன்னு நம்பவச்சது,  அந்த உண்மை தான் உன்னை தேடி வரவழைச்சது” மூச்சு வாங்க பேசியவன் “ஆனா நீ நான் எப்படி இருக்கேன்னு  கூட தெரிஞ்சுக்க முன் வரவேயில்லையே! அப்போ அப்படி தான் பேசுவேன்” இவன் கோபத்தில் எகிறினான்.

‘அந்த நிமிசமே காதல் வந்துடுச்சு’ என்ற வார்த்தைகளில் அடங்கி கிடந்த அவன் மீதான காதல் மீண்டும் உயிர்த்தெழுந்தது.

Advertisement