Advertisement

“பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது’

பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல், எதை எதையோ நினைத்தபடி, நினைவில் ஓடிய அனைத்திற்கும் தீர்வு காண முடியாமல், வந்த உறக்கத்தையும் விரட்டிக்கொண்டிருந்தான் பிர்லா.

காலையில் எழுந்ததுமே அவளது அறைக்கு தான் சென்றான். லேசாய் சாற்றி இருந்த கதவை திறந்தான். நேற்று போட்டிருந்த உடையுடனே உறங்கிப் போய் இருந்தாள்.

‘ப்ச், டிராலி பேக் காரிலயே மறந்தாச்சு போலவே!” என கீழே இறங்கிவந்தவன், முதல் வேலையாய் காரில் இருந்த டிராலி பேக்கை எடுத்து வந்து அவளது அறையில் வைத்துவிட்டு, மேலும்  சிறிது நேரம் நின்று பார்த்தான். ஒரு நாளைக்குள் எத்தனை மாற்றங்கள்!

நேற்று கோபம் கொண்டது போல் இன்று கோபம் கொள்ள முடியவில்லை.

அருகில் சென்றான்,அவளருகில் அமர்ந்தான், நெற்றியில் வழிந்த கூந்தலோடு தானும் புரண்டுவழிய ஆசை கொண்டது மனது.

 அவள் வாகாய் அணைத்திருந்த தலையணையாக மாற உத்வேகம் கொண்டது உள்ளம். திக்கென இருந்தது அவனுக்கு.

‘இதென்ன புதுசா தோணுது?’ பட படவென அவன்  மனம் அடித்துக்கொள்ள அப்படியே எழுந்து வெளியே வந்தான்.

தன் அறைக்கு நுழைய இருந்தவனை தடுத்தது

“பிர்லா“ என்ற சந்திராவின்  குரல். அவர் குரல் கேட்டவன் அப்படியே நின்றுவிட்டான்.

இவர் மாடி ஏறி வருவதற்குள் இவன் கீழறங்கி வந்துவிடுவான். ஆனால் இன்று சந்திரா மாடி ஏறி வரும் வரையிலும் இவனுக்கு யோசனை தான். ‘தந்தை தன்னிடம் உண்மையாய் இல்லை, இப்படி தன் காதலியையே தன்னிடமிருந்து மறைத்து விட்டாரே, என்ற எண்ணமே அவனை தயங்க வைக்க, அப்படியே நின்று விட்டான்.

இவன் யோசனைகள்  முடியும் முன்பு,சந்திரா அவன் முன்பு வந்தார்.

“கொஞ்சம் பேசனும் பிர்லா”

“ரெடியாயிட்டு வரேன்”

“இல்லை அதுக்கு முன்னாடியே பேசனும்”

“என்ன விசயம்” சொல்லுங்க என்பது போல் அவன் நின்றிருந்தான்.

“சீனிவாஸ் எங்கே!”

ப்ருந்தாவை தேடி செல்லும் முன்பே சீனிவாஸ்க்கு ஒரு முடிவுகட்டிட்டு தானே நாகப்பட்டினம் போனான்! நேற்றில் இருந்து சீனிவாஸ், சுந்தரம் இருவரையும் காணவில்லை, அவர்களது குடும்பத்தினர் கதறி அழுததை பார்க்க முடியாமல், இன்று அவனிடம் கேட்டார்.

“ஒரு வாரம் கழிச்சு தான் அவங்க இரண்டு பேரும் வருவாங்க, அவங்களுக்கு தான் சேதாரம் கொஞ்சம்  ஜாஸ்தியா இருக்கும், அப்பறம் அவங்க இரண்டு பேரோட வேலைக்கும் சம்பளத்துக்கும் குறைச்சல் இல்லாமல் இருக்கும்!” என

“இல்லை, பிர்லா மறுபடியும் அவனுங்களை நம்ப கம்பெனிக்குள்ளே விடறது ரொம்ப தப்புன்னு தோணுது! ஒரு தடவை பட்டதே போதும்”

“ப்ச், நம்பளை மாட்டி விடனும்னு நினைக்கிறவன் கம்பெனிக்குள்ள இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, காலை வாரத்தான் செய்வான், இவனுங்களை விலக விட்டு, நமக்கு இன்னும் நிறைய ஆபத்து.!” சில பல ரகசியங்கள் தெரிந்தவர்கள் அவர்கள், அதனாலேயே பிர்லா இந்த முடிவை எடுத்திருந்தான்.

“இருந்தாலும்” சந்திரா இழுக்க

“இப்போ கூட அவன் நடவடிக்கை சரியில்லைன்னு வாட்ச் பண்ணி சொன்னதே நம்ப மேனேஜர் தான்.  நான் பழசை எல்லாம் மறந்துட்டன்னு தெரிஞ்ச அடுத்த நிமிசம் தான் அவனுங்க வேலையை காட்டிருக்கானுங்க! அப்போ பயம் விட்டு போச்சுன்னு தானே அர்த்தம் அதான் மறுபடியும் பயத்தை காட்டிருக்கேன்”

“நீ இந்தளவு ஹார்ஷா பிகேவ் பண்ண்மாட்டீயே பிர்லா!” நேற்று காலை கிடைத்த தகவலின் பேரில் சீனிவாஸ்க்கு கட்டம் கட்டி வெளுத்திருந்தான். அதை அவர் கேட்க

“செஞ்ச தப்புக்கு கொடுக்கற மன்னிப்பு, அவனை திருந்தவே விடாது. அப்படியும் ஒரு முறை மன்னிப்பு கொடுத்தாச்சு. திருந்தலை  அதான் இந்த தடவை தண்டனை கொடுத்தாச்சு, இனியும் தப்பு செய்வான் அவன்! அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்!” என்றவன்.

“இனி சீனிவாஸ், சுந்தரம் இரண்டு பேரும் அவனுங்க உண்டு அவனுங்க வேலை உண்டுன்னு இருப்பானுங்க கவலை படாதீங்க!” என அதற்கு ஒரு முடிவை கட்டி இருந்தான்.

பேசியபடியே அவர்கள் கீழிறங்கி வந்துவிட, திடீரென கேட்ட செருமும் சப்தத்தில் திரும்பி பார்க்க, அங்கே, வேலாயுதம், செண்பா, விமல் மூவருமே  நின்றிருந்தனர்.

“வாங்க சம்பந்தி  வாங்க வாங்க  ஏன் அங்கேயே நின்னுடீங்க?” என சந்திரா அழைத்தாலும், ‘என்ன இத்தனை காலையிலேயே வந்திருக்கிறார்கள்?’  எனும் கேள்வி எழாமல் இல்லை.

கூடவே, “தேவி” என குரல் கொடுக்கவும் மறக்கவில்லை. கூடவே அவரது பெற்றொர்களையும் அழைக்க தவறவில்லை சந்திரா.

அதன் பின் பரஸ்பர நல விசாரிப்புகள் சிறு தயக்கத்துடனே நடந்தாலும், உபசரிப்புக்கு குறைவில்லாமல் பார்த்து கொண்டனர்.

 பிர்லா தன் தந்தை தாயிடம் காட்டிய கோபத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் இருந்தது ப்ருந்தாவின் பெற்றோர்கள் மீதான கோபமும். ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல, என அமைதியாக அமர்ந்திருந்தானே ஒழிய ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆனால் அவன் பார்வை முழுதும் விமல் மீது தான். அவனை பார்த்த பிறகு தான் ‘ப்ருந்தாவிடம் இருந்த வீடியோ, அதை கொணர்ந்த விமல், அதற்கு உதவிய ஸ்ரீதர்’ என அடுக்கடுக்காய் நய நியாபகமும் வர’

“நீ கூட ஒரு வார்த்தை சொல்லவே இல்லைல  செத்தடா நீ”  என போனை எடுத்து கொண்டு தோட்டத்து பக்கமாய் சென்றான், ஸ்ரீதருக்கு அழைக்க, “நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்” என வர,

“என் கனெக்‌ஷனை கட் பண்ணி விட்டுட்டு, உனக்கு என்னடா வேற ஒரு கனெக்‌ஷன் வேண்டி கிடக்கு!” மனதினுள் கறுவிக் கொண்டிருந்தான். அதன் பின் மீண்டுமாய் அவன் உள்ளே வந்தான்.

“என்ன சம்பந்தி எதுவும் முக்கியமான விசயமா?” சந்திரா அமைதியை களைய

‘உங்க பையன் தான் வர சொன்னாப்ல’ என அவர் சொல்லும் முன்பே

“நான் தான் வர சொன்னேன்” பிர்லா சற்று சப்தமாய் கூறியபடி வந்து அமர்ந்தான்.

‘எதற்கு’ என அவனை கேட்கவில்லை, ஆனால் பார்த்தனர்.

“மேரேஜ்க்கு டேட் பிக்ஸ் பண்ண!” என அழுத்தமாய் சொல்ல

இந்த முறை ப்ருந்தாவின் குடும்பம் அதிர்ச்சியடைந்து குழப்பத்தை தத்தெடுக்க, ஏதோ பேச வந்த வேலாயுதத்தை கண்களாலேயே தடுத்து ‘வேண்டாம்’ என தலையசைத்தார் சந்திரா.

“நல்ல நாள் பார்த்து தாலி கட்ட எனக்கு தெரியும், ஆனால் நீங்க முழு மனசோட நடத்தி கொடுங்க! எங்களுக்கு நடந்தது என்னன்னு எனக்கு இப்போ வரை தெரியாது! ஆனால் அம்மாக்கு ப்ருந்தாவை பிடிக்கலை, ப்ருந்தாவோட அப்பாக்கு என்ன பிடிக்கலை.ஆனால்!” என நிறுத்தி

“நான் தாலி கட்ட போறது என் மாமனாருக்கும் இல்லை! ப்ருந்தா வாழ போறது அவ மாமியார் கூடவும் இல்லை” நய்யாண்டி புகுந்து விளையாடியது அவன் வார்த்தையில்

“சோ  வாழ போறது நாங்க இரண்டு பேர் தான், நாங்க நல்லா இருக்கனும்னு நினைச்சா, முழு மனசோட நீங்களே இந்த கல்யாணத்தை நடத்தி கொடுங்க”

இது தான் என் முடிவு என்பது போல் பேசிவிட்டு எழுந்து சென்று விட்டான். அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களின் பின் கிளம்பி வந்தவன் “நான் ஆபிஸ் போறேன்” என பொதுவாய் கூட சொல்லி கொள்ளாமல் வெளியேறிவிட்டான்.

அதுவரை அமைதியாய் இருந்த வேலாயுதம் “என்ன நடக்குது இங்க! எனக்கு ஒன்றும் புரியலை!” என ஆரம்பிக்க.

நேற்று காலையில் இருந்து, சற்று முன் நடந்து கொண்டது வரை, அத்தனையையும் சந்திரா கிட்டதட்ட அரை மணி்நேரத்திற்கும் மேலாக விளக்கி  சொல்ல

“அவங்க இரண்டு பேரும் கல்யாணம் ஆனவங்கன்னு நீங்க சொல்ல வேண்டியது தானே!” சந்திரா பேசியதில் எரிச்சலடைந்தார் வேலாயுதம்.

“நீங்களும் பார்த்தீங்க தானே! லவ் பிரச்சனைன்னு நினைச்சே இந்த ஆட்டம் போடறான், ப்ருந்தா அவனோட மனைவின்னு தெரிஞ்சா, கண்டிப்பா அவன் ஆட்டத்தையும் பேச்சையும் எங்களால தாங்க முடியாது!” சந்திரா மறைத்து சொல்ல

“இல்லை இதில் வேறெதுவோ இருக்குன்னு நினைக்கிறேன்”  சரியாய் கண்டு கொண்டது போல் வேலாயுதம் பார்க்க

“அவ  அவ… அவனுக்கு இப்போ பிட்ஸ் எதுவும் வரதில்லை, பழசெல்லாம் நியாபகம் வந்தால் திரும்பவும் அவனுக்கு அந்த பிரச்சனை வர வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க, ஹாஸ்பிடலில்” வெகுவாய் சந்திரா தயங்கி தயங்கி சொல்ல.

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“அவனோட பழைய வாழ்க்கை அவனுக்கு தெரியாமல் இருக்குறது தான் நல்லதுன்னு சொல்ல வரேன்!” என

“புரியலை!”

“நோயை பத்தி தெரியாதவரைக்கும் தான் நம்பளோட பலம் எல்லாம், தெரிஞ்ச அடுத்த நிமிசம் அது தான் நம்பளோட பலவீனம், அந்த பயமே நம்ப உயிரை குடிக்கிற அளவுக்கு போய்டும், இப்போ அதே நிலைமை தான், பிர்லாவுக்கும்!

பிர்லாவின் பள்ளி கால வாழ்க்கை, அதாவது கெங்காவின் அறிமுகத்திற்கு பின், இதோ அவளது மறைவு வரை, பிர்லாவிற்கு நடந்த பெரும்பான்மையான மனம் சார்ந்த பிரச்சனை பற்றி ஏதாவது ஒரு கட்டத்தில் சொல்ல பட வேண்டும், அல்லது அவனே தெரிந்து கொள்ளும் நிலை வரும். அந்த நிலையை கண்டிப்பாக அவனால் தாங்கி கொள்ளவே முடியாது. மீண்டும் அவனது மூளை நரம்புகள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை வர நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது. இதை சொன்னது  பிர்லாவை பற்றியும் கெங்காவை பற்றியும் அறிந்த முரளியே தான். ஒரு டாக்டர் சொல்லும் போது நாங்க என்ன செய்ய முடியும்?” ஆதங்கமாய் அவர் கேட்க

“ஓ  அப்போ இதை தான் சாக்கா வச்சிகிட்டு இரண்டு பேரையும் பிரிச்சுட்டீங்க அப்படி தானே” செண்பா கேட்க

“நீங்களும் சேர்த்து வைக்கனும்ன்னு ஆசைபட்ட மாதிரி தெரியலையே?” தேவி உள் வர

“கொஞ்சம் அமைதியா இருக்க எல்லாரும்  அப்போ இருந்த நிலையில் யாராலும் தீரமா மெடிவெடுக்கமுடியலை, தப்பு இரண்டு குடும்பத்து மேலையும் இருக்கும். இரண்டு பேருமே அவங்க அவங்க பிள்ளைகளுக்காக பார்த்தீங்களே தவிர்த்து, ப்யூச்சர்ல இந்த மாதரி பிரச்சனை வரும்னு நினைக்கலை?” என சதானந்ம் பேச

“ஆமாம் அவர் சொல்றது தான் சரி  குற்றம் சொல்றதா இருந்தா, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். ப்ருந்தாவை பற்றி அவன் எதேச்சையா தெரிஞ்ச மாதிரி , அவன் கல்யாண விசயமும் தெரியுறப்போ தெரிஞ்சிட்டு போகட்டும்.! அடுத்து ஆகற வேலையை பார்ப்போம், நீங்க என்ன சொல்றீங்க?” அனைவருக்கும் பொதுவாய் மரகதாம்பாள், கேட்க

“அன்னைக்கு இருந்த அதே பிரச்சனை தான் இன்னைக்கும் நம்மளுக்குள்ள இருக்கு, ஆனால் அதோட வீரியம் இன்னைக்கு ரொம்பவே குறைஞ்சு போச்சு, காலம் காயத்தை அத்தும்னு சும்மாவா சொன்னாங்க !” செண்பா மகளுக்காக தணிந்து பேச

“நீங்க சொல்றது சரி தான்  கல்யாணத்துக்கு தேதியை குறிங்க சம்பந்தி, தவிர ஏற்கனவே அவள் கழுத்தில் இருந்த தாலியை கோவில் உண்டியலில் போட்டுட்டேன், அதனாலகண்டிப்பா கல்யாணம் நடந்தாகனும்” வேலாயுதமும் சம்மத்தத்தை சொன்னார்.

ஒரு வழியாய் பிரச்சனை அங்கே முடிவு பெற முறைத்து கொண்டிருந்தது விமல் மட்டும் தான். இத்தனையையும் வேடிக்கை பார்த்த விமல் “இவிங்களா இத்தனை நாள் சண்டை போட்டு கொண்டு இருந்தாங்க. இவிங்க போதைக்கு அக்கா, மாமான்னு இரண்டு பேரையும் ஊறுகாயா ஆக்கிட்டாங்களே!” எப்போதும் போல் சிப்ஸ் பாக்கெட்டை வாய்க்கு கொடுத்துவிட்டு அஷ்ட கோணலான முகத்துடன் இவர்களை வெறித்திருந்தான்.

“என்னடா அப்படி பார்க்குற!”மரகதாம்பாள் வாய் விட

“மாமாக்கு அம்னீசியா வரதுக்கு பதிலா உங்க எல்லாருக்கும் வந்திருக்கலாம்! அக்காவும் மாமாவுமாவது சந்தோஷமா இருந்திருப்பாங்க” எதையும் யோசிக்காமல் விமல் கூறி விட

‘ஙே’ என தான் விழித்திருந்தனர் அத்தனை பேரும். அதையும் மீறி சந்திரா சிரித்து விட, லேசான கீற்று புன்னகை கூட அவர்களது முகத்தில் தோன்றி மறைந்தது.

———-

Advertisement