Advertisement

பகுதி 27

ப்ருந்தாவின் பதிலில், உடல் இளக நின்றிருந்தவன் “அதுக்கப்பறம் என்ன நடந்தது?” கண்கள் மூடி கிடக்க, குரல் மட்டும் அவனை மீறி வந்தது சற்று காட்டமாய்

பதிலில்லை அவளிடம் !

“தாலி கட்டி விட்டதுக்கு பிறகு என்ன நடந்தது!” பற்களை கடித்துகொண்டு கேட்டான்.

இவள் தயங்கவே, பதில் இல்லாததை உணர்ந்து “சொல்லுன்னு சொன்னேன்” கண்களை பட்டென திறந்து  பொறுமையை பறக்க விட்டபடி ஆக்ரோஷமாய் இவன் கேட்க

அவனது கத்தலில் சிறிதாய் திடுக்கிட்டு “நான்  கட்டிவிட்ட… மறுநிமிசமே, கண்டபடி திட்டி” என நிறுத்த

“கண்டபடி திட்டி” இவன் எடுத்துகொடுக்க,

“அ அ..அப்போவே கழட்டி எறிஞ்சுட்டீங்க!” பட்டென போட்டு உடைக்க, அதிர்ந்து போனான் பிர்லா.

‘கழட்டி எறிந்து விட்டேனா?’

‘அப்பறம் எப்படி மறுபடியும் தன் கழுத்திற்கே வந்தது?’

‘அவள் அறியக்கூடாது என லாக்கெட்டில் மறைத்து மீண்டும் தன் கழுத்திலேயே போட்டு கொண்டேனா?’

அதை விட அப்போது கழற்றுவது போல் பாசாங்கு செய்தது எதற்கு?

இப்போது யாருக்கும் தெரியாமல் அவ்வளவு ஏன்? அவனுக்கே தெரியாமல்  பத்திரப்படுத்தி வைத்திருப்பதின் நோக்கம் தான் என்ன?

யோசித்து யோசித்து, தலைசுற்றிபோனது அவனுக்கு!

‘உன்னை பத்தி தெரிஞ்சு எட்டு மணி நேரம் தான் ஆகுது, உன்னை பார்த்து நாழு மணி நேரம் தான் ஆகுது, ஆனா இந்த பனிரெண்டு மணி்நேரத்துல, என்னோட உயிர் எத்தனை முறை போய்ட்டு வந்திருக்குன்னு எனக்கே தெரியலை! நீ எனக்கு மட்டும் சொந்தமில்லை! என் உயிருக்கும் நீ தான் சொந்தம் போல, உயிர் போக வைக்கிறதும் நீ தான், அதை மீட்டு கொண்டு வரதும் நீ தான்!’

‘நீ கொடுத்த தாலியை பார்த்தே பித்து பிடிச்சு போச்சு, இதில் அந்த தம்மா தூண்டு சிலையில் இருக்குற உன் முகத்தை, நேரில் பார்த்தப்போ பிடிச்ச பித்தும் பிடறியில் அடிச்ச மாதிரி நடுமண்டையில் ஏறி உக்காந்துகிச்சு! நீ கொடுத்த பொருளாலேயே நான் இத்தனை காதலை உணர்ந்திருக்கேன்! ஆனால் என்னை பத்தி முழுசா தெரிஞ்ச நீ, இப்ப வரை அந்த காதலை முகத்தில் காட்டமல் நிக்கிற!’ மனதினுள் எழுந்த கொந்தளிப்பு அடங்குவதாய் தெரியவில்லை. இவனுக்கு.

இத்தனை பேசியும் அமைதியாய்  இருக்கும் இவளை நினைக்க நினைக்க இறங்கிய கோபமெல்லாம் மீண்டும் ஏறுவேன் என சண்டி தனம் செய்ய இவள் பேசவே மாட்டாளா? என சோர்ந்து சுவற்றில் சரிந்தமர்ந்து விட்டான் கண்களை மூடியபடி.

சிறிது நேரத்தில் கையில் சுருக்கென எழுந்த வலியால் கண்களை திறந்தான். கையில் சுற்றி இருந்த துப்பட்டாவை கழற்றி விட்டு டெட்டால் கொண்டு இவள் தான் துடைத்து கொண்டிருந்தாள்.

துடைத்துவிட்டு ‘என் வேலை முடிந்தது என்பது போல்’ எழ,

“உனக்கு என்னை பிடிக்கும் தானே!” உள்ளுக்குள் அரித்து கொண்டிருந்த கேள்வியை இவன் கேட்டு விட

“ஏன் இப்படி கேட்கீங்க?” கையில் இருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை தரையில் வைத்துவிட்டு அவன் எதரிலேயே அமர்ந்தாள்.

“ஒருவேளை நீ என்னை பிடிக்காமல் என்னை விட்டு போய் இருந்தால், நான் உன்னை கட்டாயப்படுத்த முடியாதில்லை.” இத்தனை நேரமாய் கண்களில் தெரிந்த கோபம் ஆத்திரம் எல்லாம் மறைந்து விட்டிருக்க, அவன் கண்களில் காதலோடு இணைந்த பயத்தை கண்டாள் ப்ருந்தா.

“உங்களை மட்டும் தான் பிர்லா பிடிக்கும், வேற யாரையும் பிடிச்சிருந்தா, இந்த ஒரு வருசமா நான் ஏன்  உங்களுக்காக காத்துட்டு இருக்கனும்” இவள் சொல்ல

“அப்பறம் ஏன் என்னை விட்டுட்டு போன?” இவனது ஆழ் மன கேள்வியில், கண்ணீர் துளிகளே வடிந்தது ப்ருந்தாவின் கண்களில் இருந்து, எல்லாம் மறந்து நிற்பவனிடம் எதை நியாபக படுத்த என தெரியாமல்.

“சொல்லு” காயம் பட்ட கையோடு அவள் வலது கை விரல்களை பிடித்தான் பிர்லா.

லேசாய் அதிர்ந்து அவள் உடல். ஏனென்றே தெரியாமல் இவளது விரல்களும் இறுக்கமாய் பிடித்து கொண்டது.

இவள் விரல்களில் பார்வை பதித்திருக்க, அவனோ அவள். மேல் பார்வை வைத்திருந்தான்.

தான் கோபம்கொண்ட போதும் ஏற்று கொண்டாள், கழுத்தை நெறித்த போது எதிர்ப்பே காட்டாமல் ‘உனக்கில்லாத உரிமையா’ என வலியை தாங்கி நின்றிருந்தாள். இதோ கை காயத்திற்கு அனுமதி கூட கேட்காமால் துடைத்து மருந்திட்டு எழுந்தாள்.

இந்த நொடி விரல்கள் இணைந்த போது இளகி நிற்கிறாள். ஆக மொத்தத்தில் ‘உனக்கு நான் புதிதல்ல’ ‘உன் உணர்வுகளுக்கு நான் புதிதல்ல’  என வார்த்தைகளால் கூறாமல் செயலில் இவள் காட்ட, அவளில் பதிந்தது இவனது ஆழ்ந்த பார்வை.

வெகு நேரம் அவன் முன் அமர முடியவில்லை. லேசாய் விரல்களை பிரிக்க, முதலில் இறுக்க பிடித்தவன் “பதில் சொல்ல மாட்டேல்ல” என்றபடி விட்டு விட்டான் அவள் விரல்களை.

“சொல்லாத  ஆனால் எனக்கு தெரியாமல் மறைக்கனும்னு மட்டும் நினைக்காத  எப்படி இருந்தாலும் எனக்கு தெரிய வந்திடும்” அழுத்தமாய் பேசியதில் திகிலோடு பார்த்தாள்.

இடது கை மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை, பரவியிருந்த இரத்தகரை, ஆசூசையாய் இருக்க,  சுவாதீனாய் சட்டையை கழற்றும் நோக்கோடு பட்டன்களை கழட்டினான், ப்ருந்தா தன் முன் இருக்கிறாள் என்பதையும் மறந்து.

அவனையே பார்த்திருந்தவனின் பார்வையில் பட்டது சட்டை பட்டன்களை கழற்றிய பிர்லாவும் அவனது மேனரிசமும் தான். அதுவும் சாதாரணமாய் தன் முன்னால் கழற்றுகிறானே! மனம் படபடவென அடித்து கொள்ள ஏதோ நினைவில் கழற்றியவனின் பார்வை மொத்தமும் அவனிடமே விழ, நினைவுகள் மொத்தமும் வேறெங்கோயோ இருந்தது. பிசிக்கலி பிரசண்ட் மெண்டலி ஆப்சண்ட் என்பார்களே அதை போல் தான் நின்றிருந்தாள்.

ஆனால் அவனின் செய்கையும் அந்த மேனரிசமும் அவனோடு, தான்  வம்பு வளர்த்த வேளைகளையும் அதன் பின் நடக்கும் விசேஷ நிகழ்வுகளையும் விசமாய் எடுத்துரைக்க! அவள் பார்வையில் வேறெதோ உணர்வுகளை உணர்ந்தான் பிர்லா.

அவளின் அந்த விஷேச பார்வையை பார்த்தவனுக்கு அதன் அர்த்தம் சிறிதும் விளங்கவில்லை. ஆனால் நன்றாக உணர்ந்தான் அந்த வித்யாசத்தை.

அதன் தாக்கம் “என்னாச்சு! ஏன்? இப்படி பார்க்குற?” என தானகவே கேட்க வைத்தது. அவள் பார்வையின் வீரியம் அப்படி!

அவள் பார்வையோ, அவன் முகத்ததை விட்டு, இரண்டு பட்டன்கள் மட்டுமே திறந்திருந்த சட்டைக்கு நகர்ந்து, பின் மெதுவாய் அவன் முகம் நோக்க,  சட்டென்று பார்வையை  மாற்றிகொண்டு சட்டென எழுந்தவள்,  திரும்பி நின்று கொண்டாள். கண்ணீரை மறைக்க வேறு வழியும் தெரியவில்லை அவளுக்கு.

ஆனால் அதை தவறாக புரிந்து கொண்ட பிர்லா “சாரி, மறந்து போய் என்னோட ரூம்க்கே கூட்டிட்டு வந்துட்டேன்!” கழட்டிய பட்டன்களை மீண்டுமாய் போட்டபடி எழுந்து நின்றவன் இவள் முன் வந்து பேச, அவளின் நெற்றி சுருங்கியது அவனின் பேச்சில்.

 “கீழே கெஸ்ட் ரூம் ஒன்னு இருக்கு, இல்லைன்னா, இந்த ரூமில் இருந்து இரண்டு ரூம் தள்ளி ஒன்னு ப்ரியா இருக்கு, இரண்டையும் பாரு எது கம்பர்டபிளா இருக்கோ யூஸ் பண்ணிக்கோ” என இவன் அசால்ட்டாய் சொல்ல

சுருங்கியிருந்த விழிகள் இன்னும் கூர்மையாக “எ எதுக்கு!” என கேட்டாள்.

“என்ன எதுக்கு? கல்யாணமாகாமல் ஓரே ரூமில் எப்படி இருக்க முடியும்?” இவன் குழப்பமாய் கேட்க

அப்படி ஒரு அதிர்ச்சி! அவள் முகத்தில், எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், அவன் வாயால் கேட்கும் போது தேங்கிய கண்ணீர் பட பட வென கன்னங்களில் உருண்டோட

“ஹேய்!” “நான் எதாவது தப்பா?” என முடிக்க தெரியாமல் தடுமாற,

அதில் தெளிந்தவள், கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துவிட்டு “எந்த ரூம்னாலும் எனக்கு ஒகே தான்!” நீர் கோர்த்த கண்களுடன் சிரித்தாள்.

அப்போதைய பார்வை எதற்காக! இப்போதைய அழுகை எதற்காக! என புரியாமல்

 “இல்லை, உன் வாய் ஒன்னு பேசுது, ஆனால் உன் கண் வேறு எதையோ பேசுது, அதை விட இந்த கண்ணீர்” வார்த்தைகளில் தான் எத்தனை தயக்கம்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை ” பட்டென இவள் சொன்னாள்.

“இல்லை சொல்லு  ஏதோ பேசுது  உன் பார்வை, என்னன்னு சொல்லு” இவன் விழிகள் பதிலுக்காக யாசிக்க  கீழே அத்தனை கத்து கத்தியவன் இப்போது அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

‘ஒன்னுமில்லை!” என முகத்தை திருப்பியபடி அவனது யாசிப்பை நிராகரித்தாள்.

எப்படி கேட்டும் பதிலில்லை அவளிடம், அதற்கு மேல் எப்படி வற்புறுத்த என தெரியாமல்!

அவன் அறையை விட்டு வெளியேறி, மெதுவாய் நடந்தாள்.சற்று தள்ளி இருந்த இரண்டாவது அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால் அவள் பின்னோடு வந்தவன்,

”தனியா தூங்கிப்ப தானே!” உன் கேட்க

 காதருகில் கேட்ட குரலில் பட்டென இவள் திரும்ப, இவள் நெற்றி அவன் நாடியில் பலமாய் முட்டிக்கொள்ள, ‘வலியை  உணராது இருவருமே நின்றிருந்தனர்.’

ப்ருந்தாவோ மனதார தடுமாறி நிற்க, இவன் சர்வ சாதாரணமாய் நின்றிருந்தான்.

“தனியா தூங்கிப்பியான்னு கேட்டேன்?” மறுபடியும் இவன் கேட்க,

“ம்  தூங்கிப்பேன்” என முடித்துக்கொண்டாள்.

இவளின் பார்வையோ, அவன் முகத்தில் இருந்து சற்று கீழறங்கி சரியாய் மாட்டப்பட்டிருந்த பட்டனில் பதிந்து கிடந்தது, மீள முடியாமல்.

கீழே குனிந்து பார்த்தவனும் ‘இந்த சட்டை பட்டனில், அப்படி என்ன தான் இருக்கு?’ அவள் பார்வையின் அர்த்தம் விளங்காமல் அங்கிருந்து உடனடியாய் வெளியேறினான்.

கட்டிலில் அமர்ந்தவள் முழங்கால்களை கோர்த்தபடி அமர்ந்து விட்டாள்.

ஒரே நாளில் இல்லையில்லை பனிரெண்டு மணி நேரத்தற்குள்  தன்னை தேடிக்கொண்டு வந்ததற்காக மகிழ்ச்சியடைவதா?

 இத்தனை நியாபக மறதியின் இடையிலும்,  பொக்கிஷங்களாகிப்போன, பொருட்களுக்காக இவனை கொண்டாடுவதா?

 மனைவியென்று அறியாமல் காதலியாய் தள்ளி நிறுத்தியிருப்பதற்காக நொந்து கொள்வதா?

தன்னுடைய நியாபகங்கள் இல்லாமலேயே, தங்கள் காதல் மேல் கொண்ட நம்பிக்கையால் குடும்பத்தையே பந்தாடியதற்காக சந்தோஷம் அடைவதா?

இதோ மனைவி என்றும் அறியாமல் இப்படி தனியறையில் விட்டு தவிக்க வைத்தற்காக கண்ணரில் கரைவதா?

காதல் கோழையாகிப்போனாள் ப்ருந்தா !

அவனில்லாத இந்ந காலம் அவளுக்கு பிடித்தமான வாழ்க்கை தான். ஆனால் கனவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தாள்.

பிடித்த வாழ்வை கனவில் வாழ்வது அத்தனை கொடூரமாய் இல்லை, ஆனால் நியாபகம் மறந்த பிர்லாவுடன் வாழ்வது  கொடுமையிலும் கொடுமையாய் இருந்தது.

ஆனால் தன் நியாபகமாய் அவன் காக்கும் பொக்கிஷங்கள் அவனுடனான காதலை புதுப்பித்தது என்னவோ உண்மை தான். ஆனால் தன் நியாபகங்கள் இல்லாமல் வாழும் வாழ்வை கண் மூடி சிந்திக்க கூட முடியவில்லை அவளால்.

வெயிலில் அல்லாடிய தனக்கு இப்போது கிடைத்த, நிழல் போதுமென அமைதி கொள்ளவா? இல்லை நிஜம் தான் வேண்டுமென அமைதியை கொல்லவா? பெரும் போராட்டம் மனதினுள் எழ

அடிவயிற்றில் எழுந்த வலி இதயம் முழுதும் பரவ, அருகில் இருந்த தலையணை தன்னவனாய் மாறிப்போக, இறுக்க கட்டிக்கொண்டாள். மூடிய விழிகளுள் சட்டை பட்டன்களை கழற்றியபடி பிர்லாவின் உருவம் உதயமாக, கண்ணோரம் நீர் வழிந்தோடியது.

‘ஏனோ தன் கணவன், பிர்லாவிற்காக ஏங்கிப்போனது மனது’

————

Advertisement