Advertisement

பகுதி 25

பொறுமை இழந்தவன், எங்கே அங்கிருந்தால் கைகலப்பு ஏதாவது ஆகி விடுமோ என பயந்து தளர்ந்த நடையுடன் வெளியேறும் முன் அவன் கண்களில் விழுந்தது, அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், அப்படியே நின்றுவிட்டான்.

இவன் நியாபகங்களை இழந்து கிட்டதட்ட முன்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் இந்த தாலி தன் கழுத்திற்கு வந்து எத்தனை மாதங்கள் ஆனதோ? பாட்டி வேறு பல வருடங்களாக இது தன் கழுத்தில் இருப்பதாய் சொன்னார்கள்! இதில் எத்தனை வருடங்களுக்கு முன் ஆரம்பமானது எங்களின் காதல்?

 இப்போது என்ன செய்வது? யாரை கேட்பது? கேள்விகள் போர் தொடுத்து அவன் நிம்மதியையும் குலைத்து கொண்டிருந்தது!

கையில் இருந்த தாலியை உள்ளங்கையில் ஏந்தியபடி அங்கிருந்த சேர் ஒன்றில் அமர்ந்து விட்டான்.

அவனின் யோசனையும் குழப்பமான முகத்தையும் பார்த்து ஏதோ ஓர் யோசனையுடன் மேனேஜர் அவரிடம் வந்தார்.

“நீங்க பார்வதிதேவி பைனான்ஸ், சந்த்ரபோஸ் பையன் தானே!” சந்தோகமாய் இவர் கேட்க

“ம் ஆமாம்  உங்களுக்கு அப்பாவை தெரியுமா? சோர்ந்திருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்.

“தெரியும், உங்க பைனானஸ் தான் இங்கேயும் ஓடுது!” என

“ஓ ” பிர்லாவின் மூளை அடுத்து செய்ய வேண்டியவைகளை பட்டியலிட

“சொல்லுங்க என்ன ஹெல்ப் வேணும்?”அவராகவே கேட்டார்.

“இந்த தாலி! யார் வாங்கினாங்கன்னு தெரியனும்!” என

“அது பில் இல்லாமல் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்!” இவரும் பொறுமையாய் பதில் சொல்ல

“சிசிடிவி ரெக்கார்டை வச்சு எடுக்கலாம்னு எனக்கு தோணுது  இதுக்கு மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!”

“எடுக்கலாம், ஆனால் ஒன்னு தாலி வாங்கின ஆளை உங்களுக்கு அடையாளம் தெரியனும் இல்லைன்னா தாலி வாங்கின தேதி  வேணும்? ஏன்னா இங்கே நகை வாங்குறவங்களோட புல் டீடெய்ல்ஸூம் நாங்க கலெக்ட் பண்ணி வச்சுப்போம்!”

‘அவ முகம் தெரிஞ்சா, நான் ஏன்யா இங்க வந்து நிக்க போறேன்!’ கடுப்புடன் மனம் பதில் கூறினாலும்

“இல்லை எதுவும் அப்ராக்ஸிமேட்டா!, ஒரு ஆறு மாசம் ஒரு வருசத்துக்குரிய சிசிடிவி எடுக்கலாமா? இப்படி கேட்டுவிட  அவன் மனம் துடித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே

“ஒருவேளை தாலி வாங்கின தேதியோ இல்லை அந்த ஆளோட முகமோ தெரிஞ்சதுன்னா வாங்க.! கண்டிப்பா ஏதாவது ஹெல்ப் பண்றேன்”. என அவர் முடித்துவிட

எங்கு சென்றாலும் முட்டு கட்டையாய் இருக்கிறதே! என வீட்டிற்கு சென்றுவிட்டான். இரண்டு மூன்று நாட்களும் இதே நினைவு தான்.கிட்டதட்ட பைத்தியம் பிடிக்கும் நிலை தான்.

விரைவாய் ஓடி ஓடி களைத்து போனவனாய் அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட்டான். பின்னே ஏதாவது ஒரு பக்கம் கதவு திறந்தால் முயன்று பார்க்கலாம். ஆனால் இவன் தட்டும் கதவுகள் அனைத்தும் இறுக்கமாய் மூடிக்கொண்டால் இவனும் என்ன செய்வான். சில நாட்களில் வெறுப்பே மிஞ்ச ஆறப்போட்டுவிட்டான் அந்த விசயத்தை.

———–

அன்று காலை ஆறு மணி போல் போன் ரிமைண்டரில் கத்தி எழுப்பியது அவனை. போனை எடுத்து பார்த்தான் தூக்க கலக்கத்தில் இதென்ன வித்யாசமான சப்தம் என !

“today dads birthday” என அலாரமுடன் கூடிய ரிமைண்டர் மொபைலில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. “இதுக்கெல்லாமா ரிமைண்டர் வப்ப! அப்பா பிறந்தநாளை கூடவா  நியாபகம் வச்சிக்க முடியாமல் ரிமைண்டர் போட்ருக்க?”

“இருந்தாலும் உனக்கெல்லாம் ரொம்ப ஞாபக சக்தி தான் போ! ஒரு பொண்ணை நியாபகம் வச்சுக்க துப்பில்லை வந்துட்டான்!” அவன் மன சாட்சியே காறி துப்பியது. அதன் பின் ரிமைண்டரை ஆப் செய்து,பெட்டை விட்டு எழுந்தான்.

எழுந்தவனுக்குள் பளிச் என பொறிதட்டியது. மீண்டுமாய் பெட்டில் கிடந்த போனை எடுத்து அலாரமை ஓபன் செய்து அதில்  ரிமைண்டரை பார்வையிட துவங்கினான்.

தந்தையின் பிறந்தநாள், தாயின் பிறந்த நாள், என ஆரம்பித்து,  அவனது நினைவுப்பெட்டகத்தில் இருக்க வேண்டிய அனைத்தும் ரிமைண்டரில் கிடந்தது! அதில் ஒன்றில் அவன் கண்கள் ஆழப்பதிந்து மீண்டது.

ஜூன் 17 “my queens birth day” என்ற ஒரு அலாரம்

டிசம்பர் 31 “today my queen enters in my life” என்ற மற்றொரு அலாரம்.

அதாவது அவளது பிறந்த நாள் தினத்தையும், திருமண நாள் தினத்தையும் இப்படியாக பதிந்து வைத்திருந்தான். ஆனால் இன்று செப்டம்பர் மாதம்.

தன் பர்ஸில் பத்திரமாய் இருந்த தாலியை எடுத்துவந்தான்.

கையில் இருந்த தாலி, ஜூன் 17, டிசம்பர் 31 இரண்டு தேதிகளையும்   யோசித்து பார்த்தவன். ஒருவேளை இந்த தாலி தன் கைக்கு வந்தது, இந்த இரு தினங்களில் ஏதாவது ஒரு நாளாக இருக்கலாம்  அல்லது இந்த இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட ஏதாவது ஒரு தேதியாக கூட இருக்கலாமே! என எண்ணியது.

எந்த ஒரு  ஆதாரமும் இல்லை என்ற நிலைக்கு, இந்த இரண்டு தேதிகள் கிடைத்தது வரம் தான். கிடைத்த ஆதாரத்தை  உபயோகப்படுத்தும் நேரம் இது என நெஞ்சம் படபடவென அடித்து அவனை துரிதப்படுத்த, தந்தையின்  பிறந்த நாளை மறந்தவனாய் அவசர அவசரமாய் கிளம்பி முதல் ஆளாய் அந்த நகைகடைக்கு சென்றான்.

“மேனேஜர் இன்னும் வரலை சார் !” என்ற செய்தியில் “பரவாயில்லை வெயிட் பண்றேன்!” என அமைதியாய் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டாலும், வெளிச்சத்திற்கு அலையும் விட்டில் பூச்சியாய்  தத்தளித்து கொண்டிருந்தது அவன் மனம்.

மேனேஜர் பத்தரை மணிக்கு மேல் தான் வந்தார். வந்தவரின் கண்களில் முதலில் பட்டது பிர்லா தான்

“என்ன இந்நேரமே வந்திருக்காப்ல!” என இவர் கேள்வி கேட்கும் முன் இவனே அவரிடம் வந்தான்.

தான் அறிந்த அந்த இரு தேதிகளை கூறி, “இந்த இரண்டு தேதியை வைச்சு ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா”  இந்த ஒரு வாக்கியத்தை பேசிமுடிப்பதற்குள் கோடி கோடி எநிர்ப்பார்ப்புகள் வர்ணஜாலங்களாய் வாரி இறைத்தது அவன் விழிகளுள்.

“வாங்கின தாலிக்கு பில் போட்டு இருந்தா, அவங்களோட டீட்டெய்ல்ஸ் கண்டிப்பா சிஸ்டமில் இருக்கும்  வாங்க செக் பண்ணி பார்ப்போம்” என இவனை அழத்து செல்ல

“கஸ்டமர்ஸ்ஸோட என்னென்ன டீடெய்ல்ஸ் வாங்குவீங்க” படபடப்பை மறைக்க இவன்மெதுவாய் பேச்சு கொடுக்க

“பொதுவா நகை வாங்குபவர்களின் திருமண நாள் பிறந்த நாள் இரண்டில் ஒன்றை வாங்கி அந்த தேதிகளில் அவர்களுக்கு வாழ்த்து அட்டை மூலமாகவோ  குறுஞ்செய்தி மூலமாகவோ வாழ்த்துகளை தெரிவிப்போம்  அதற்காக தான் கஸ்டர்மரின் பொதுவான விவரங்களை சேகரிப்பது. ஆனால் நீங்க வாங்கினது தாலி, அதனால் கல்யாண பொண்ணு பையனோட பேரு, அவங்க அட்ரெஸ் தென் அவங்க கல்யாண நாள், அவ்வளவு தான் வாங்குவோம்” என சிறிதாய் தலையசைத்தவரை கண்டு

“இது போதுமே” என மனதினுள் நினைத்தவன் “கொஞ்சம் சீக்கரமா பாருங்க” என துரித படுத்தவும் மறக்கவில்லை.

ஆனால் அந்த இரு தேதிகளில் தாலி வாங்கியவர்களின் வரிசைபட்டியல் மட்டும் மொத்தம் முப்பத்து ஐந்து.

அதை அப்படியே அவனிடம் கூறி, சிஸ்டமை அவன் புறமாய் நகற்றி வைத்தார்.

அந்த முப்பத்தைந்து பெண்களின் பெயர்களில், தன்னவளின் பெயரை தேடியது இவன் விழிகள். நிமிடங்கள் மணி கணக்காய் உருண்டோடியது.

இவனது குழப்பமான முகம் மேனஜருக்கே ஒரு மாதிரியாய் தோன்ற வைக்க, “பேர் கூட தெரியாமல் ஒருத்தரை தேடுறது கஷ்டம்” என பிர்லாவின் தோளில் கை வைக்க,

தடுமாற்றத்தை தடுத்து நிமிர்ந்து நின்றான். மெதுவாய் நடந்து சென்று ஒரு சேரில் அமர்ந்தான்.

தன் தேடல் ஒரு முடிவிற்கு வராதா?

தாலி என்ற ஒன்று தன் கண்ணில் படாமல் போய் இருந்தால் இத்தனை துயரப்பட தேவையே இல்லையே!

வேறொருவரின் கடையில் இப்படி பைத்தியம் போல் அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே!

இப்படி யோசித்தவனின் எண்ண அலைகளுக்கு ஒரு புத்துயிர் கிடைக்க, பட்டென நிமிர்ந்தான்.

“எனக்கு ஜூன் 17ம் தேதியில் இருந்து டிசம்பர் 31 வரை தாலி வாங்கினவங்களோட லிஸ்ட் வேணும், அதுவும் ஐஞ்சு பிரான்ச்சோட லிஸ்டும் வேணும்“ என இவன் கேட்டான்  ‘ஐந்து கிளைகளில் எந்த கிளையில் இவள் வாங்கினாள் என தெரியாதே!’ அதன் பொருட்டு இவன் ஐந்து கிளைகளுக்கும் சேர்த்து ஒன்றாக ஸ்கெட்ச் போட்டான்.

ஆனால் இதை கேட்ட மேனேஜரோ “என்ன சார் ஏதோ ஐஞ்சு பிரான்ச்சோட போட்டோ கேட்கிற மாதிரி கேட்குறீங்க? அவ்வளவு ஈசியா தெரியுதோ, இந்த வேலை?” என

“கஷ்டம் தான்  ஆனால் அதுக்காக எவ்வளவு பணம் செலவானலும் பரவாயில்லை சார்  பாத்துக்கலாம், இன்னும் எவ்வளவுனாலும் வாங்கிக்கங்க” என பேச வேண்டிய பேரத்தை பேச

இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், இவன் கேட்பது தவறான நோக்கத்திற்காக அல்ல, மேலும் தெரிந்த நபர் வேறு என்ற எண்ணத்தில் அவன் கேட்டதை செய்ய முடுவெடுத்தார் அந்த மேனேஜர்.

சிறிதே யோசனைக்கு தாவிய அவர் முகம் “ஐந்து பிரான்சிற்கும் கேட்குறீங்க, உடனே எடுக்க முடியாது, ஒரு வாரம் டைம் கொடுங்க” என அந்த மேனேஜர் சொல்ல

“ஒரு வாரமா” என இவன் விழிபிதுங்க

“புரிஞ்சுக்கோங்க சார், கண்டிப்பா ஒரு வாரம் டைம் தேவைப்படும், ஈசியான வேலை இல்லை இது” நிதர்சனத்தை இவனுக்கு புரிய வைத்தார் மேனேஜர்.

அவரது தயக்கத்தை உணர்ந்தனாய் “நான் எதுவும் மிஸ்யூஸ் பண்ணிடுவேன்னு நினைக்குறீங்களா!?” சரியாய் கேட்க ,அதற்கு அவருடைய தயக்கமே பதிலாக

“அப்படி நினைச்சிருந்தா, உங்க கூட நின்னு இத்தனை நேரம் பேசிட்டு இருக்க மாட்டேன்.” என அடித்து பேசினாலும், ‘இவனை நம்பலாமா என்பது போல் தான் இருந்தது அவர் பார்வை’.

“உங்க வார்த்தையில் இருக்குற நம்பிக்கை, உங்க முகத்துல இல்லை சார்” என எழுந்து நின்றவன்

“நீங்க சொன்ன மாதிரி ஒரு வாரம் டைம் எடுத்துக்கோங்க, ஆனால் அந்த டைம் முடிஞ்ச அடுத்த நிமிசம் நான் இங்க இருப்பேன்”

“தவிர, அப்படி எடுக்க போர உங்க கஸ்டமர் லிஸ்டை நீங்களே முதலில் செக் பண்ணி பாருங்க, அதில் என் பேர் இருந்தா மட்டும் அதை என்கிட்ட கொடுங்க  அப்படி இல்லாத பட்சத்தில் உங்களை எந்த விதத்திலும்  தொந்தரவு பண்ண மாட்டேன்” என இவன் பேச

கடைசி சொன்ன வார்த்தைகளை மறந்தவராய் “என்ன குழப்புறீங்க, நகை வாங்கினவங்க லிஸ்டில் எப்படி உங்க பேரு வரும்?” பிர்லா பேசியதில்

“நீங்க தானே, தாலி வாங்கினால் கண்டிப்பா கல்யாண பொண்ணு மாப்பிள்ளை சம்பந்தபட்ட அத்தனையையும் வாங்கி வைப்போம்னு சொன்னீங்க! பொண்ணு  பேரு தானே தெரியாது  ஆனா மாப்பிள்ளோட பேர் தெரியுமே, அது நிச்சயம் என்னோட பெயரா தான் இருக்கும்” ஆணித்தரமாய் பேசினான் பிர்லா.

“தாலி வாங்கிய நபரை வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக இவன் தேடுகிறான் என நினைத்தாரே ஒழிய” ஒரு பெண் இதில் சம்பந்தப்பட்டு இருப்பாள், அந்த பெண்ணிறகும் இவனுக்கும் தொடர்பு இருக்கும் என சத்தியமாய் நினைக்கவில்லை.

ஆரம்பத்தில் சொல்லாமல் விட்ட அத்தனையும் இந்த நொடி புரிந்து போனது மேனேஜருக்கு.

ஆனாலும் அவர் மனம் கேட்காமல் “பெரிய இடத்து பையன் நீங்க, உங்க கல்யாணம் வெளியில் தெரியாமல் நடக்க சான்ஸே இல்லை ! உங்க கல்யாண விசயமா எதுவும் எங்க காதுக்கும் வந்ததில்லை? அப்படி இருக்கும் போது!” அவனை குழப்பி இவரும் குழம்ப

“அந்த லிஸ்டில் என்னோட பேரு இருக்கா இல்லையான்னு சொல்லுங்க போதும்” வேண்டியதை மட்டும் இவன் பேச

“சரி கண்டிப்பா பார்த்து சொல்றேன், அடுத்த வாரம் வாங்க” என அவனை சமாளித்து அனுப்பி வைப்பதற்குள் பெரும் பாடு பட்டுபோனார்.

சொன்னது போல் அடுத்த வாரம் வரை தன் ஐம்புலன்களையும் படாத பாடு பட்டு அடக்கி காத்திருந்தான் பிர்லா, ஆனால் அந்த ஒரு வாரம் முடிந்த அடுத்த நொடி கடை திறப்பதற்கு சில நொடிகளின் முன்பே  வந்து சேர்ந்திருந்தான்.

செக்யூரிட்டி கூட இவனை தான் பார்த்திருந்தான். இவன் அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.கடை திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தான்.

அடுத்த பத்து நிமிடங்களில் கடை திறந்து, வேலையாட்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர், கடைசியாய் தான் மேனேஜர் வந்தார். அதை பார்த்தவனுக்குள் வேகமாய் அவருடன் இணைந்து கொள்ள ஆவல் தான் எழுந்தது. ஆனால் அவரை உள்ளே போக விட்டு சிறது கழித்து தான் இவனும் உள்ளே நுழைந்தான். நேராக அவன் சென்று நின்ற இடம் மேனேஜரின் அறை வாயிலில் தான்.

இவன் வரவை எதிர்பார்த்தார், ஆனால் இத்தனை சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. என்பதை அவர் முகமே காட்டி கொடுத்தது.

Advertisement