Advertisement

பகுதி 24

 “எங்கே வைத்தோம் அந்த பென்டிரைவை!” என தீவீரமாய் மூளை யோசிக்க பதில் தான் நினைவடுக்கில் இல்லை

“கொஞ்சம் யோசிச்சு பாரு பிர்லா” வெகு கூலாக சந்திரா கேட்க

“கொஞ்சம் இல்லை நிறைய யோசிச்சு பார்த்தாலும் என்கிட்ட பென்டிரைவை  பத்தின எதுவும் நியாபகம் இல்லை” கிட்டதட்ட இவனும் கத்த

“இன்னும் எவ்வளவு நேரம் தான் தேடுவீங்க இரண்டுபேரும்,அல்ரெடி ரொம்ப நேரம் போய்டுச்சு, கண்டுபிடிக்க முடியலைன்னா சொல்லிடுங்க, சும்மா தேடுறேன் தேடுறேன்னு பால்வா பண்ணிட்டு இருக்காதீங்க”

பதில் சொல்ல முடியாமல் பிர்லா  நின்றிருக்க “இந்த கம்பெனியே உங்க இரண்டு பேரு கையில் தான் இருக்கு  இத்தனை கேர்லஸ்ஸாவா இருப்பீங்க” சந்திராவையும் சேர்த்து வைத்து  கோபமாய் கத்தி கொண்டிருந்தார் பார்வதிதேவி.  பின்னே கிட்டதட்ட மூன்றரை கோடியை மீட்டு தரும் பென்டிவ் அது.

“இந்த கம்பெனி உன் மகன் ஒருத்தன் கையில் தான் இருக்கு, நீ எந்த கேள்வி கேட்டாலும் அவனை தான் கேட்கனும்” சாவகாசமாய் ஒரு சோபாவில் சென்று அமர்ந்து கொண்டார் சந்திரா.

“ப்பா, வேணாம், கோபத்தை கிளப்பாதீங்க  என் மேலேயே பழியை தூக்கிப்போடதீங்க, நான் கேட்டதும் கம்பெனியையும் அது சம்பந்தபட்ட அத்தனையையும்  தூக்கி கொடுக்குறதோட முடிஞ்சதா  அது எங்க வச்சிருக்கேனு ஜஸ்ட் தெரிஞ்சாவது வச்சிக்க வேணாமா ”

“தெரி்ஞ்சுகிட்டேனே, ஹார்ட் காப்பியை தெரிஞ்சு வச்சிருக்கேனே!” அங்கே தரையில் இருந்து வெளியே வந்திருந்த , அன்று பிர்லா உருவாக்கிய ரோலிங் லாக்கரை கை காட்ட

“இதுவும் அவனா சொல்லி தான் தெரியும், முன்கூடியே தெரிஞ்சு வச்ச மாதிரி பில்டப் வேற” பார்வதிதேவி உறுத்து விழிக்க

“ஆமாம் தெரிஞ்சு வச்சுக்கன்னு உன் மகன் திட்றான் ! தெரிஞ்சு வச்சிருக்கேன்னு பதில் சொன்னா நீ திட்டு ! எல்லாம் அந்த ஸ்ரீநிவாஸால தான்  அவன் ஒருத்தனால தான் இத்தனை பிரச்சனையும்”

“நீங்க பண்றதுக்கெல்லாம் மத்தவங்களை பிளேம் பண்ணாதீங்க ப்பா, அவ்வளவு தான் சொல்வேன். அவன் சரியான பிரச்சனைன்னு தெரிஞ்சும் கம்பெனிக்குள்ளேயே உலாவ விட்டுட்டு பேச்சு பாரு”

“உலாவ விட்டதே நீதாண்டா மகனே”

“அதை தடுக்காமல் நின்னு வேடிக்கை பார்த்தது நீங்க தானே!”

“நீ இப்படி எல்லாத்தையும் மறந்திட்டு நிப்பேன்னு நான் என்ன கனவா கண்டேன் !”

“ஐய்யோ  அப்பாவும் மகனும் அப்பறம் அக்கபோறு கூட்டுங்க! இப்போ நீங்க உள்ளே  போய் தேடுங்க,பிர்லா நீ கம்பெனி கிளம்பு, அங்கே போய் ஒரு தடவை தேடிடு ” என பார்வதிதேவி இருவரையும் விரட்ட

“என்னால் இதுக்கு மேல தேட முடியாது” என சந்திரா இன்னும் வாகாய் சோபாவில் அமர்ந்து கொள்ள

ஆனால் அதை கவனிக்காத பிர்லாவிற்கு கம்பெனி சென்று தேடுவது தான் சரியெனபட  டீபாயில் கிடந்த கார் சாவியை எடுத்து நகர

தரையில் இருந்து ஒன்றரை அடிக்கும் மேல் வட்டமாய் நின்றிருந்த லாக்கர் பட அதையே பார்த்திருந்தான். ஒரு காலத்தில் இவர்களை காப்பாற்றிய சேப்டி லாக்கர். அத்தனை பத்திரங்களும் அதனுள் அடங்கி இருப்பதை சந்திரா தான் காட்டினார். அதில் இரண்டு பென்டிரைவ்களை மட்டும் எப்படி மிஸ் பண்ணினேன்!” என இவன் லாக்கரையே பார்த்திருந்தான்.

“என்னடா ?” அவன் பார்வை பார்த்து பெற்றவர்கள் கேட்க

“பென்டிரைவ் கம்பெனியில்  இருக்க சான்ஸ் இல்லைம்மா” யோசனையில் சொல்ல

“ஏன் ?” சந்திரா கேட்க

“டாகுமெண்ட் ஹார்ட் காப்பீஸ் எல்லாமே சேஃப்பா இருக்கனும்னு வீட்டை தான் ச்சூஸ்  பண்ணிருக்கேன், கம்பெனியை செலக்ட் பண்ணலையே! அப்படினா சாப்ட் காப்பியும் வீட்டில் தானே இருக்கனும்” என சொல்ல

“பாயிண்ட்டு டீ ” என சந்திரா, பார்வதிதேவியிடம் கூவியபடி சோபாவை விட்டு எழ

“என்ன பாயிண்டு…” பார்வதிதேவி பல்லை கடிக்க

“இல்லைடீ  இத்தனை பெரிய லாக்கரை வைக்கிறதுக்கு நம்ப வீட்டைதானே செலக்ட் பண்ணிருக்கான்  அப்போ பென்டிரைவும் கம்பெனியில் இருக்க சான்ஸே இல்லை” என

பார்வதிதேவிக்கு எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது என தெரியாமல் நின்ற இடத்திலேயே நாலாபுறம் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருக்க

அதீத யோசனையில் இருந்த பிர்லாவோ, கையில் இருந்த கார்கீயை அழுத்துவதும், விடுவிப்பதும் என மாறி மாறி அவன் விரல்கள் அந்த வேலையை பார்க்க, ஒரு கட்டத்தில் யோசனைகளின் அழுத்தத்தில்  கைகளும் சற்று அதிகமாய் அழுந்த  அந்த கீயில் இருந்து ‘கிளீக்’ என்ற சத்தத்துடன்  பட்டன்  கத்தி போல் விரிந்தது ஏதோ ஒன்று !

அந்த சிறு சப்தத்தில் அனைவரின் கவனிமும் அவன் புறம் செல்ல பிர்லாவும் அதை தான்  இப்படியும் அப்படியுமாய் வியப்புடன் திருப்பி பார்த்து கொண்டிருந்தான்.

ஏனெனில் அது ஒரு பென்டரைவ், கார் கீயுடன் அட்டாச்சாகவே இருந்தது அந்த பென் டிரைவ்.

அகலமாய் விரிந்த கண்கள்  திகைப்பில் இருந்து மீண்டு வர வெகுநேரமானது.

“கையிலேயே வெண்ணையை வச்சுகிட்டு நெய்க்கு அலையிறது இது தானா ?” இத்தனை நேரம் வேடிக்கை பார்த்திருந்த சதானந்ம் கிண்டலடிக்க.

“அப்போ இது நெய்யா ? பென்டிரைவ் இல்லையா ?” மரகதாம்பாள் அதைவிட நக்கலாய் கேட்க

“அய்யோ சும்மா இருங்களேன் இரண்டுபேரும் !” சொல்லியபடி, அந்த பென்டிரைவை, தன் மொபைலிலேயே கனெக்ட் செய்து பார்க்க, அவர்கள் தேடிய சாப்ட்காபிகளின் ஒரு பகுதி முழுதும் இருக்க ஆசுவாச பெருமூச்சொன்று கிளம்பியது.

“பிர்லா, அதுக்குள்ள பெரு மூச்செல்லாம் விடாத, இன்னும் ஒரு பென்டிரைவ் மிஸ் ஆகுதுடா ” சந்திரா நியாபகப்படுத்த

பிர்லா முறைத்த முறைப்பில்

“சரி, அந்த பென் டிரைவை என்கிட்ட கொடு நான் லேப்டாப்பில் போட்டு பார்த்துட்டு இருக்கேன், மொபைலில் என்னால் பார்க்கமுடியாது, நீ போய் இன்னொரு பென்டிரைவை தேடு” என மொபைலில் இருந்த பென்டிரைவை பிடுங்கி கொண்டு செல்ல

பதிலுக்கு பிர்லா இன்னமும் முறைக்க “இன்னோன்னையும் தேடிடு பிர்லா  கம்பெனியை சேஃப் பண்ணிடலாம்  ப்ளீஸ்டா” பார்வதிதேவி அவனை துரித படுத்த

நிதர்சனம் உணர்ந்து, கார்கீயில் பென் டிரைவை வைத்தது போல், அவன் உபயோகிக்கும் பொருட்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது, என அவன் புலங்கும் அத்தனை பொருட்களிலும் தேட துவங்கினான். டீவி ஹோம் தியேட்டர் என பெரிய பெரிய பொருட்களை விட்டு வாட்ச், சென்ட்பாட்டில் என ஆரம்பித்து அவனது க்ஷூ செப்பல் வரை தொடர்ந்தது. ஏறக்குறைய எல்லாவற்றையும் உடைக்காத குறை தான், பிரித்து போட்டு வைத்திருத்தான்.ஆனால் எதுவுமே கிடைத்தபாடில்லை,

இறுதியில் தலைவலியே மிஞ்ச கட்டிலில் அப்படியே மல்லாந்து விழுந்தான். விழுந்த வேகத்தில் அவன் முகத்தில் வந்து மோதியது அவனது லிங்க வடிவ டாலர். அது மோதிய வேகத்தில் லேசாய் வலிக்க கூட செய்தது. விருட்டென எழுந்து அமர்ந்தவன் அதை கையில் எடுத்து பார்த்தான்.

மருத்துவமணையில் இருந்து வீட்டிற்கு வந்த சில நாட்களில் பாட்டி “ரொம்ப வருசமா உன் கழுத்தில் கிடந்தது, மறுபடியும் போட்டுக்கோ” என்றபடி அணிவித்துவிட

“இது என்ன இத்தனை வெயிட்டா இருக்கு”

“அது இரும்பால செஞ்சது டா ராசிப்படி இது உன் கழுத்தில் இருக்கனும், அது தான் நல்லது” என சென்டிமெண்டால் அவனை அடக்கி வைத்திருந்தார் அப்போது  ஆனால் அது அவனது பிட்ஸ் நோய்க்காக செய்யப்பட்டது, என்பதை மறைத்தது அவனுக்கு தெரியாதே !

இதையும் செக் பண்ணிடுவோம் என அதை கழட்டி அதன் பென்டென்டை ஆராய்ந்தான். லாக் டைப்போ இல்லை பட்டன் டைப்போ என எதுவுமே இல்லாமல் மொழுக்கென கிடந்தது அந்த லிங்க முகப்பு  கனமான பொருள் ஒன்றை கொண்டு அதை நிமிர்த்தி வைத்து இரண்டு போடு போட அது லேசாய் விரிசல் விட்டது, அதை அறியாமல் மேலும் இரண்டு போடு போட, அதன் லாக் டைப் திறந்து கொண்டது. இன்னும் ஒரு முறை அடித்தால் கண்டிப்பாய் அது உடைந்துவிடும். ஆனால் அதை பார்க்காமல்,சிறு கோபத்துடன் பெட்டில் வீசி எறிந்தான்  அதுவே பெட்டை விட்டு உருண்டோடி தரையில் விழுந்து நன்றாகவே திறந்து கொண்டது.

ஆனால் பிர்லாவோ அது உடையவில்லை என்ற கடுப்பில்,  அதை உடைக்க மேலும் வேறு ஏதாவது கனமான பொருள் கிடைக்கிறதா என அறை முழுக்க தேடியதில், ஹாங்கரில் தொங்கி கொண்டிருந்த பெல்ட் ஒன்று அவன் கண்ணை கவர்ந்தது. காரணம் கார் கீயின் வடிவமைப்பை ஒத்திருந்தது அந்த பெல்ட்.

பெல்ட்டோடு இருந்த மெட்டல் டிசைனை திருப்பி பார்க்க சிறு பட்டன் இருந்தது அங்கே  அதை அழுத்த பட்டென விரிந்தது ஒரு பென்ட்ரைவ்

“உஃப்” சன்னமான சிரிப்பு கிளம்ப “என்ன மூளைடா உன் மூளை ” என இன்னமும் சிரித்தபடி திரும்ப, இவன் வீசியதில் அந்த லிங்க முகப்பு லாக்கெட் லேசாக திறந்தார்ப்போல் கிடந்தது.

“பிர்லா இதுக்குள்ளேயும் எதையோ வச்சிருக்க போலடா” என எண்ணியபடி பெல்ட்டை கட்டிலில் வைத்துவிட்டு, கீழே குனிந்து அதை நன்றாக திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் கையில் இருந்த டாலர் தரையில் விழுந்து அதிலிருந்த தாலி தெறித்து தனியாய் விழுந்தது.

ஆம் தாலியே தான். அன்று விளையாட்டாய் ப்ருந்தா, பிர்லாவின் கழுத்தில் கட்டிய தாலி தான் அது.

இவன் உச்ச அதிர்வில் நின்றிருக்க, “என்ன பிர்லா கிடைச்சதா?” என்றபடி சந்திரா வர

அவசரமாய் திரும்பினான் கீழே இருந்த தாலியை மறைத்தபடி,

“எ… என்னப்பா ?”

“இல்லைடா  இன்னொரு பென்டிரைவ் கிடைச்சதான்னு கேட்டேன் !”

“ம்  இதோ” என கட்டிலில் கிடந்த பெல்ட்டின் மெட்டல் டிசைனோடு இருந்த பென்டிரைவை சந்திராவிடம் கொடுக்க

அதை இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்து

“அப்பாடா ஒரு வழியாய் கிடச்சுதா?” “ஆனாலும் ஒளிச்சு வைக்க இடமே இல்லையாடா உனக்கு?” “உன் மூளையை மியூசியத்தில் தாண்டா வைக்கனும்.” இவர் பாட்டிற்கு பேசிக்கொண்டிருக்க ,பிர்லாவின் அதிர்வை கவனித்தாற்போல் தெரியவில்லை.

 காணாமல் போனதாய் நினைத்த இரு பென்டிரைவ்களும் கிடைத்துவிட்ட மகிழ்வில், இன்னமும் பிரம்மிப்பில் நின்றிருந்தவனின் தோள் தொட்டு “பென்டிரைவை எடுத்து கொடுத்ததோடு எல்லாம் முடிந்ததா? இனி தான் வேலை இருக்கு  வா” என அவனை இழுத்து செல்ல, சென்றவனின் பார்வை முழுவதும் திரும்பி, கீழே கிடந்த அந்த தாலியை வெறித்தபடி தான் மறைந்தது.

Advertisement