Advertisement

பகுதி 23

அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தன்படிப்பு, குடும்ப தொழில், அதில் தன்னுடைய பங்களிப்பு என கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவனது நினைவுப்பெட்டகத்தை  நிரப்பிக்கொண்டிருந்தனர், அவனது பெற்றோர்கள்.

ஆனால் அவனது தடுமாற்றம் நிறைந்த பேச்சுக்களும். எதையும் யோசித்து வெகு நேரம் கழித்தே பேசும் பழக்கமும் இந்த மூன்று நாட்களில் அதிகமானதே தவிர குறையவில்லை.

பாசத்தை காட்டும் பெற்றோர்களுக்கு எப்படி திருப்பி தருவது !

ஆசானாய் அனைத்தையும் கற்றுக்கொடுக்கும் தந்தைக்கு எப்படி தருவது குருதட்சனையை !

வயதான காலத்திலும் தன் முகத்தை பார்த்தே தேவையை தீர்த்து வைக்கும் பாட்டி தாத்தாவிற்கு எந்த வகையில் நன்றி செலுத்துவது ! என்ற

பெரும் குழப்பம் அவனிடம்  ஆனாலும் அனைத்தும் பிடித்திருந்தது  இத்தனைக்கும் அனைவரும் தன்னிடம் காட்டிய பாசம் நினைவினில் இல்லை   கோபதாபங்கள் ஞாபகத்தில் இல்லை  இன்பமும் துன்பமும் நினைவடுக்கினில் கூட இல்லை

ஆனால் இழந்த அனைத்தும் புதுவடிவில் புது ரூபத்தில் புது உறவுகள் மூலம் கிடைப்பதை அனுபவிக்க தயாரானான்.

தனக்கு புதிதாக தெரியும் அத்தனையையும் பார்த்து பிறந்த குழந்தையாய் வியப்பில் ஆழ்ந்தான்.

தெரியாததை கற்று கொள்வதில் பள்ளி மாணவனாய் உற்சாகமானான்.

பத்துநாட்கள் வரை தங்கி ட்ரீட்மெண்ட் முடிந்து வீட்டிற்கு திரும்பினான் பிர்லா

இத்தனை நாட்களாகியும், அவனுக்கு நினைபடுத்ததாத ஒரே ஆள் ப்ருந்தா மட்டும் தான்.ஆனால் அதற்கு முக்கிய காரணம் பிர்லாவிற்கு அவளது நியாபகம் வராமல் இருக்க வேண்டும்  என்ற பிரதான நோக்கம் தான்.

இது அனைவருடைய நோக்கம் அல்ல. என சொல்வதை விட பார்வதிதேவியின் பிரதான நோக்கம் மட்டும் தான்  அதற்கு காரணங்கள் நிறைய இருந்தது

ப்ருந்தாவின் சரியில்லாத மனநிலை

திருமணமான இத்தனை நாட்களில் ஒருநாள் கூட பிர்லாவிற்கு சரியான ஜோடி ப்ருந்தா என தோன்றியதில்லை

கெங்காவின் இறப்பின் போது, சரியான நேரத்திற்கு காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்திருந்தால்  பிர்லாவிற்கு இந்த நிலை வந்திருக்காதே

தவிர எல்லாம் மறந்த நிலையில் ப்ருந்தாவுடன் இவனது வாழ்வு சுமூகமாய் இருக்கும் என ஒரு சதவீதம் கூட நம்பிக்கையில்லாதது

 இத்தனை காரணங்களும் வரிசை கட்டி நிற்க, சந்திரா, மரகதாம்பாள்,சதா என அனைவரிடமும் ப்ருந்தாவை பற்றிய பேச்சையே எடுக்க கூடாது என திட்டவட்டமாய் கூறி மறைத்துவிட்டார் ப்ருந்தா பற்றிய அத்தியாயத்தை.

ஊருக்கறியாமல் கோவிலில் நடந்த திருமணமும் கூட அவருக்கு சாதாகமாய் அமைந்தது. மிக நெருங்கியவர்கள் மட்டுமே அறிவர்.

திருமணமான மூன்று மாதங்களில் ரிசப்சன் வைக்க வேண்டும் என்ற எண்ணம் நல்ல நாளுக்குக்காக மேலும் ஒரு மாதம் பிடித்தது. ஆனால் அதற்குள் நிகழ்ந்த கெங்காவின் ஆகாலமரணம் அப்படியே மறக்கடித்திருந்தது.

 குடும்பம், அவர்களது தொழில், தொழில் சம்பந்தப்பட்ட   சூது வாதுகள், அவர்களது வசதி வாயப்புகள், பிர்லாவுடைய நண்பர்கள், அவனது பிடிப்புகள், பிடிப்பின்மைகள் என அனைத்தையும் பாடம் கற்கும் மாணவனாய், அவனது தந்தை,தாய், பாட்டி, தாத்தா என அனைவரிடமிருந்தும்  ஒரு நொடியும் நேரத்தை வீணாக்காது கற்றுக்கொண்டான்.

அவனது நினைவுப்பெட்டகம் காலியாக இருக்க, அதை நிரப்ப அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை தேடி நிரப்புவதில் வெகு சுவாரஸ்யமாய் கழிந்தது அவனது நாட்களும் நேரங்களும்.

பேச்சு, நடவடிக்கை, மற்றவர்கள் பேசுவதை புரிந்து தாமதமாய் பதில் கூறுவது, கூறிய பதிலில் இருந்த தடுமாற்றம் என அனைத்தும் சிறிது சிறிதாய்  குறைந்து கொண்டே வந்து இதோ இந்த ஆறு மாத காலத்தில் புதிதாய் உருவெடுத்திருந்தான் பிர்லா.

சிறிது நாட்களுக்கு அவனை தனியே விட மனமில்லாமல் தங்களது அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறையை பிர்லாவிற்காக ஒதுக்கி, அவனுடன் சந்திரா தங்குவதாக முடிவு செய்திருந்தனர். மேலும் சிறிது நாட்களுக்கு அவனை ஓய்வெடுக்க வேண்டும் என கறாராக கூறி கம்பெனிக்கும் வரவேண்டாம் என பணித்திருந்தனர், அவனது பெற்றோர்கள்.

அதன்படி சில நாட்கள் தந்தையின் அறையிலேயே கழித்தான். அதன் பின் தந்தையும்தாயும் தனக்காக வேறு வேறு அறையில் இருக்கிறார்கள் என உறுத்த, “அதான் சரியாய்ட்டனே, இனி என்ரூமில் இருந்துகிறேன்” என சொல்ல மறுநாளே தன் அறைக்கு மாறிக்கொண்டான்.

முற்றிலும் மாறி இருந்தது அவனது அவனது அறை

ப்ருந்தாவின் வாசம் நிறைந்த அறையில் அவளது நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் இருந்து காலில் அணியும் செருப்பு வரை அனைத்தும் அகற்றப்பட்டு இருந்தது.  அவனது மொபைலை கூட விட்டு வைக்கவில்லை அவள் நியாபகங்கள் கொடுக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் மேசேஜ்கள் என அனைத்தும் நீக்கப்பட்டுதான் அவன் கையில் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் அதை இவன் உபயோகப்படுத்தவில்லை. ஸ்விட்ச் ஆபிலேயே கிடந்தது.

ரெப்பிரஷ் ஆகி வந்தவன் அறையை ஆராய்ந்தான். இள நீல நிற சுவர்கள், முழு வெள்ளை கர்ட்டைன்கள், ஆங்காங்கே அழகான சில ஓவியங்கள், அதை அடுத்த ஷோகேஸில் அழகழகான சிலைகள், இடை இடையே அவன் உபயோகிக்கும் தொழில் சம்பந்தப்பட்ட புத்தகங்கள்,சில பைல்கள் அனைத்தையும் எடுத்து வருடி, திரும்பவும் அதே இடத்தில் வைத்தான். ஆனால் அத்தனையும் புதிதாய் தான் தெரிந்தது.இத்தனை ஏன் சுவரில் மாட்டப்பட்டு இருந்த வெகு ஸ்டைலாக எடுக்கப்பட்ட அவனது இள வயது போட்டோக்கள் இரண்டு கூட  அவனது நியாபகங்களை மீட்டெடுக்கவில்லை.

அவனது விரல்கள் மெதுவாய் வருடியது அவனது நகல்களை “எதுவுமே நியாபகம் வர மாட்டுதே…! எப்படி தான் இத்தனையையும் மறந்தியோ போ !” என நினைவில் ஆழ்ந்தபடி நிமிர்ந்தான். எதிரில் டிரெஸ்ஸிங் டேபிள், கையில்லா பனியன் ஒரு நைட் பேண்ட்  கலைந்த முடி  புத்துணர்வை பிரதிபலிக்கும்  கலையான முகம், இப்படியும் அப்படியுமாய் பார்த்தான் “அழகா தான் இருக்க ” மனம் சொல்ல நன்றாகவே புன்னகையை சுமந்தது அவன் இதழ்கள்.

 நிறைவாய் திரும்பியவன் கண்களில் பட்டது அவனது மொபைல்  அதை எடுத்து இப்படியும் அப்படியும் திரும்பி பார்த்தான். அவன் கைகள் தானாகவே ஆன் செய்தது. பேட்டர்ன் லாக் கேட்டது போன், குழப்பத்தோடு தந்தையை தேடிப்போனான்.

“ப்பா, போன் பேட்டர்ன் கேட்குது, என்ன பேட்டர்ன் போட்டேன்னு தெரிலப்பா ” அவரிடம் நீட்டினான்.

சிறு புன்னகையோடு பார்த்திருந்த சந்திரா, அதனுடைய லாக்கை ஓப்பன் செய்து கொடுக்க  இவன் நிமிர்ந்து அவரை பார்த்தான்

நம்பளோட நிறைய சீக்ரெட்ஸ் இந்த மொபைலில் தான் இருக்கு, சோ இரண்டு பேருக்கும் நடுவிலும் எந்த ஒரு ரகசியமும் இல்லை  உன் பேட்டர்ன் எனக்கு தெரியும், என் பேட்டர்ன் உனக்கு தெரியும், ஈவன் சாப்ட் வேர் சம்பந்தப்பட்ட அத்தனை பாஸ்வேர்டும் இரண்டு பேருக்கும் தெரியும்” என அவன் தோளில் கை போட்டார் சந்த்ரா.

“நீங்க எனக்கு அப்பாவா இல்லை,  லவ்வரா?”  என்னை பத்தி இத்தனை புரிஞ்சு வச்சு இருக்கீங்க  என்னோட லவ்வரே தோத்து போய்டுவா போங்க!”  என சிரிக்க

 “உன் லவ்வரா? நானா? சான்சே இல்லைடா அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா” என கிண்டலாய் சிரித்தார். ஆனால் அந்த சிரிப்பிற்குள் தான் எத்தனை அளவு துயரம் ஒளிந்திருந்தது என்பதை அவர் மட்டுமே அறிவார்.

ஆன் செய்த மொபைலை சிறிது நேரம் நோண்டிக்கொண்டிருந்தான், அதில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுகள், ஏகப்பட்ட மேசேஜ்கள், கான்டாக்ட்ஸ், அத்தனையும் விழிகள் உள் வாங்கினாலும், ஏனோ உள்வாங்கி அத்தனையையும்  கிரகித்து கண்டறிய முடியாத மூளை சமாளிக்க முடியாமல் திணறியது. மொபைலை வைத்த்விட்டு அப்படியே படுத்துக்கொண்டான்.

“என்னடா? என்னாச்சு?” அவன் அருகில் அமர்ந்து தலையை லேசாய் வருடினார்.

“மொபைலை ஆப்பரேட் பண்ண தெரியுது, ஆனால் அதில் இருக்கிற எதுவும் நியாபகத்துக்கு கொண்டு வர முடியலைப்பா ”

“அதெல்லாம்…” என பேச வந்தவரை தடுத்தது பிர்லாவின் மொபைல் ரிங் டோன்

“உரசாத  உசுரத்தான்

உருக்காத மனசைத்தான்

அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளியே பறக்கும் இதயம்

அடியே!” என்ற பாடல் வரிகளில் பிர்லா அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.

இதை எப்படி மறந்தோம்? இந்த பாடலை எப்படி மறந்தோம்? சதா இப்பாடலுடனே குடும்பம் நடத்தும் இந்நிகழ்வை எப்படி மறந்தோம்? திணறி திண்டாடினார் சந்த்ரா.

“மண்ட மேல இருந்த கொண்டையை மறந்திட்டியேடா சந்திரா” அவர் மனசாட்சி பல்லை காட்ட பிர்லாவை கவனித்தார் சந்திரா

பாடல் வந்த திசையை இவன் விழிகள் தொடர, அதன் இசையில் செவிகள் கூர்மையானது. ஏனோ அந்த பாடலை கேட்டதும் சிலை போல் அமர்ந்துவிட்டான். ஒரு முறை இரண்டு முறையல்ல பல முறை அடித்து ஓய்ந்தது அந்த மொபைல்.

“என்னாச்சுடா, எடுத்து பேச வேண்டியது தானே” அவனது அமைதியையும் ஒரு வித கூர்மையாய் இருந்தவனையும் பார்த்தவருக்கு நெஞ்சுக்குள் பகீரென இருந்தது.

பின்னே மொபைலில் இருந்த ப்ருந்தா போட்டோக்கள், அவளது போன் நம்பர்கள், அவளுடன் சம்பந்தப்பட்ட நிறைய மேசேஜ்கள் என அனைத்தையும் டெலிட் செய்தவர், சதா இந்த பாடலுடனே மல்லுகட்டுவதை மட்டும் மறந்து போனது தான் விந்தையிலும் விந்தை!

முதன் முதலில் இந்த பாடலை கேட்ட போது “டேய், பிர்லா நீ ஒரு பிசினஸ் மேன் டா, ஏண்டா இப்படி ஒரு பாட்டை ரிங் டோனா வைக்கிற, மத்தவங்க கேட்டால் சிரிக்க போறாங்க” என சந்திரா கேட்டதற்கு சிறு புன்னகையை பரிசளித்தானே தவிர, இப்போது வரை அதே ரிங் டோனை வைத்திருக்கும் மகனை சமாளிக்கும் வழியறியவில்லை.

Advertisement