Advertisement

“நீ போனால் எனக்கு இங்க என்ன வேலை கெங்கா  என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்டேன் ” கெங்காவின் உயிர் பிரியும் அந்த நேரத்தை சகிக்க முடியாமல் கெங்காவின் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களை தன் மடியில் ஏந்தினார்  சந்திரா.

கெங்காவுடன் வாழ்ந்த வாழ்க்கை நினைவில் ஆட தன்னை அறியாது கண்ணீர் சுரந்து அவர் பாதத்தை நனைத்தது.

கெங்காவின்  தலை பிர்லாவின் மடியில் கிடக்க, அவரது பாதங்கள் சந்திராவின் கைகளுக்குள் அடங்கிக் கிடந்தது.

கடைசிநொடி அனைவரையும் சுற்றி சுழன்று  இறுதியாய் பார்வதிதேவியிடம் நிலைத்து பிரிந்தது கெங்காவின் உயிர்.

பார்வதிதேவியின் இதயத்தினுள் ஏதோ ஒர் பாகம் நழுவியதை கண்கூடாய் உணர்ந்தார்.

கண்ணப்பன்வின் மூலம் செய்தி அறிந்து ப்ருந்தா வரும் முன் கெங்காவின் உயிர் பிரிந்து விட, பிர்லாவின் தோளில் கை வைத்து ஆறுதல் சொன்னாள். நிமிர்ந்து பாராமலேயே தன்னவளின் மீது தலை சாய்ந்தான்,துளி துளி நீராய் உருண்டோடியது அவன் கண்களில்.

 பிர்லாவை நெஞ்சில் தாங்கியபடி, கெங்காவை பார்த்தவளின் பார்வையிலும் கண்ணீர் படலம்.

ஆனால் கூடவே உணர்ந்தது பிர்லாவின் உடல் சூடு  ஆம் காய்ச்சலே தான்

சந்திராவின் வீட்டில் !

மஞ்சள் நிறைந்த முகத்தில் பெரிதாய் குங்குமம் இட்டு, கழுத்தில் கிடந்த தங்க தாலி நீக்கப்பட்டு, புத்தம் புதியமஞ்சள் கயிறு ஏறி இருந்தது  இரண்டு சாஸ்திரங்களையும் கணவனாய் சந்திரா செய்தார்.

கண்ணாடி பேழைக்குள் கிடத்தப்பட்ட உருவம் தூங்கிக்கொண்டிருப்பது போலவே ஒரு தோற்றம்

பிர்லாவின் மனதில் பதிந்த சாந்தமான முகம் இப்பொழுதும் மாறவில்லை

அவரின் உடலுக்கு தீ மூட்டி ஆத்மா சாந்தியடைய அனைத்து ஈம காரியங்களையும் ஒரு மகனாய் முடித்தான் பிர்லா.

கணவன் மகன் என இருவரும் செய்ய வேண்டிய அத்தனையையும் அவர்களே நிறை வேற்ற,அங்கே  வந்த அனைவரும் “இரண்டாவது மனைவியா !” என அதிர்ந்து தான் போயினர் ப்ருந்தாவின் பெற்றோர் உட்பட !

இத்தனை கலோபரங்களுக்கு இடையிலும் வீட்டில் அவ்வப்போது யாருடைய அறையிலாவது எதையாவது உருட்டிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா.

மற்ற யாருடைய கண்களில் சிக்காத போதும் தேவி பார்த்து விட்டார்.

தன் அறையிலும் உருட்டுவதை பார்த்து அங்கே சென்றார்.

“என்ன பண்ணிட்டு இருக்கே இங்கே” கீழே ஒருத்தியோட இறுதி சடங்கெல்லாம் நடந்துட்டு இருக்கும் போது, நீ வீட்டையே உருட்டிட்டு இருக்குறது நல்லாவா இருக்கு!“ பல்லை கடித்தபடி பேச

“பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்கே இருக்குனு தெரியல்லை ”

“அது எதுக்கு உனக்கு, எங்கேயும் கீழ கீழ விழுந்து வச்சிட்டியா?” அவளை ஆராய

“அதெல்லாம் இல்லை, பேராசிட்டமால் வேணும்” அதுக்கு தான் தேடினேன் என ஒரே பார்வை பார்க்க

“உனக்கா காய்ச்சல்”

“இல்லை உங்க மகனுக்கு ”

“என்ன? பிர்லாவுக்கு காய்ச்சலா ” அதிர்ந்தபடி கேட்க

‘அடியே காய்ச்சல்ன்னு சொன்னியா இல்லை வேற எதுவும் சொன்னியா ? இது இப்படி அதிர்ச்சியாகுது!’ அடுத்த ஹார்ட் அட்டாக் இதுக்கு தான் போல ! எச்சிலை கூட்டி உள்ளே இழுத்தாள்.

“பிர்லாக்கு வேற எதுவும் டேப்லெட் கொடுக்காத  சேராது  இரு வரேன்” என அப்படியே மாறியது அவரது பேசும் தோணி

ப்ருந்தாவும் விழி விரித்து பார்த்திருக்க  அவரது கப்போர்டை குடைந்து ஒரு டப்பாவையே எடுத்து வந்தார்.

அதிலிருந்து ஒரு அட்டையை எடுத்து கொடுத்தார், மூனு வேளைக்கும் மறக்காமல் அவனுக்கு கொடுத்துடு  பத்தரமா பார்த்துக்கோமா அவனை  கிட்ட இருந்து என்னால் பார்க்க முடியாது” என

‘ம்க்கும் அவ்வளவு அக்கரைன்னா நீங்களே மருந்தை மகனுக்கு ஊட்டி விட வேண்டியது தானே ’ வாய் வரை வந்ததை கடித்து குதறி நசுக்கி சப்தமில்லாமல் வெளியே அனுப்பினாள்.

கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பிர்லாவிற்கு மாத்திரை கொடுக்க மறக்கவில்லை  லேசாய் காய்ச்சல் வரும் முன்பே பார்த்து பார்த்து மாத்திரை கொடுக்கலானாள். ஆனால் இரண்டு மூன்று தடவைக்கும் மேல், “வச்சிட்டு போ  நான் போட்டுகிறேன் ” என்பவன் அதை பின்பு மறந்து தான் போனான்

இவளும், தன் கணவன் என்ன சின்னப்பிள்ளையா ! அவனே சாப்பிட்டுப்பான் ! என அசட்டையாய் விட்டு விட்டாள்.

————–

கெங்கா வேறு எதோ மருந்தை உட் கொண்டிருக்க வேண்டும், உட் கொண்டால் மட்டுமே இத்தகைய அகால மரணம் சாத்தியம்  ஆனால் கெங்கா சொல்லவில்லை  பிரேத பரிசோதனையும் செய்ய முடியாத நிலை

சில நேரங்களில் சில விசயங்கள் சிலருக்கு தெரியாமல் இருப்பதே நல்லது. இல்லாமல் போனால் வாழ்க்கை நரகமாகிப்போகும். முரளிக்கும். இதே எண்ணம் தான்.

‘முரளி ஹார்ட் அட்டாக் என்றே கூறி இருக்க  நிறைய பேருக்கு அது இயற்கை மரணமாய் தெரிய, பிர்லா பார்வதிதேவிக்கு மட்டும் ஓரளவு உண்மை தெரிந்திருந்ததால் நிம்மதி பறி போய் இருந்தது.

பார்வதிதேவியின் உணர்வுகள் வெளிப்படாத போதும் சந்திராவின் மனம் சுக்கல் சுக்கலாய் உடைந்திருப்பதை நன்கு அறிந்திருந்தார்  அவர் மட்டுமா  பிர்லாவும் சேர்ந்து தான்

கெங்காவின் இறப்பிற்கு பின் சந்திராவின் வாழ்வு நிச்சயமாய் பாலைவனமாய் தான் ஆகிப்போனது. இனி நான் என்ன செய்வேன் என்பது போல் ஒரு மாயை அவரிடம்.

பார்வதிதேவியே சில நேரங்களில் சந்திராவை பார்த்து பயந்துதான் போனார். அவரின் கூடவே இருந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட, பிர்லா ப்ருந்தாவிடம் ஒப்படைக்கப்பட்ட திருப்தியில் தன் கணவனிடம் கவனத்தை திருப்பினார்.

ஆனால் யாரிடம் பிர்லா ஒப்படைக்கப்பட்டானோ, அவனின் மறுகிய மனதை அவள் உணரவே போவதில்லை, எதையோ நினைத்து பயந்தவனின் பயத்தை போக்க போவதில்லை என உணராமல் போனது யாருடைய தவறோ ?

முழுதாய் நான்கு நாட்களுக்கு பின் சாஸ்திரம் சடங்கு கட்டு என அனைத்தும் முடிந்திருக்க, லேசாய் உறக்கம் அவர்களை தழுவ, ஹாலை விட்டு அவர் அவர் அறைக்கு சென்றனர்.

கண்ணாடி பேழைக்குள் பிர்லா கிடக்க

அலங்கோலமான நிலையில் ப்ருந்தா அலறிக்கொண்டிருந்தாள்.

‘நீ இல்லாமல் எனக்கு இங்க என்ன வேலை  என்னையும் உன் கூடவே கூட்டி போய்டேன்’ மருத்துவமணையில் நடந்த சந்திராவின் பேச்சு, ப்ருந்தாவின் குரலாய் மாறி, அசரீரியாய் அவன் காதுக்குள் விழுந்து கொண்டிருக்க  உறங்கி கொண்டிருந்த பிர்லா படாரென எழுந்து அமர்ந்தான்.

கெங்காவின் அகால மரணம் ஆழமாய் அவன் மனதில் பதிந்தது, இப்போது உருவம் பெற்றிருந்தது.

பி பிரு ந்தா….

உடலெல்லாம் வியர்த்து ஊத்தி இருந்தது.

கனவென்றாலும் காலமே உறைந்தது போல் கற்பாறையாய் இறுகி போனது அவன் உடல்

ஆழ்ந்த பெரிய பெரிய மூச்சுக்கள், உள்ளே செல்வதும் வெளியே செல்வதுமாய் இருக்க…

அருகில் கிடந்த மனைவியின் விரல்களில் தன் விரல்களை கோர்த்து கொண்டான்.

உறக்கத்தில் அவளும் இறுக்கமாய் பற்றிக்கொள்ள

கெங்காம்மா மாதிரி எனக்கும் நோய் இருக்கே ! அப்போ ! அப்போ ! நா நானும்  இறந்திடுவேனா ! பிரஸர் எக்கு தப்பாய் எகிற ஆரம்பித்தது.

ப்ருந்தா  நான் இல்லைன்னா அப்பா மாதிரி புலம்புவாளே ! அழுவாளே ! ஏங்குவாளே !

 எனக்கு பிறகு நீ என்ன செய்வ ?

யார் உன்னை பார்த்துப்பா ?

அப்பாவுக்காவது , எங்கம்மா இருக்காங்க ! ஆனால் உனக்கு யார் இருக்கா ப்ருந்தா !

அய்யோ நான் என்ன செய்வேன் !

 அவன் எண்ணங்கள் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது.

முதல் நாள் மழையில் நனைந்தது, அடுத்த இரண்டு மூன்று தூக்கமில்லா துக்க இரவுகள் இடையிலேயே விட்டு விட்டு வந்த காய்ச்சல், அத்தோடு இத்தகைய மனநிலையில் நாளுக்கு நாள்  ஏறிய மனவுளைச்சல் நொடிக்கொருமுறை அதிகம் தான் ஆனது பிர்லாவிற்கு.

இத்தனையும் நடக்க, பிர்லா மன அழுத்ததிற்கு உள்ளானான். அதோடு விட்ட காய்ச்சல் அதிகமாகி, கடுமையான காய்ச்சலும் சேர வழக்கமாய் வரும் தலைவலி இன்று ஏனோ கூடுதலாய் எழ

இரு கைகளாலும் அழுத்தி பிடித்து வலியை நிறுத்த போராட, ம்ஹூம் அதிகமாகியதே தவிர குறையவில்லை.

வெகு நாட்களாய் இல்லாத தலைவலியை உணர்ந்த அவன் மனம்  அடுத்து வலிப்பு வருமே என அபாய சங்கை ஊத ‘உன்னை விட்டுட்டு போய்டுவேனோ !’

‘ம்ஹூம், நான் போக மாட்டேன்

 போகவே மாட்டேன்

நான் அவள் கூட வாழனும்

இந்த ஒரு ஜென்மாமவது அவள் கூட வாழவிடு கடவுளே ’

அருகில் படுத்திருந்த மனைவியின் முதுகில் ஒண்டினான் வலி தாங்க முடியாமல்.

அவளை அணைத்து கொள்ள துடித்த கைகள் அந்தரத்தில் பாய, இணைந்து கிடந்த விரல்கள் மின்சாரம் பாய்ந்தாற்ப்போல் பாய்ந்து ஒரு பக்கமாய் ஓட, அவளோடு ஒண்டிய உடல் திடீரென தனியாய் தூக்கிப்போட துண்டாய் போய் விழுந்தான்.

 வித்யாசமான ஒலியும் சப்தமும் கட்டிலின் அதிகமான அசைவும் ப்ருந்தாவின் உறக்கத்தை விரட்ட  தூக்கத்திலேயே துலாவினாள் கைகளை, அவன் நெஞ்சில் விழுந்த கைகள் அவனொடு அவன் இழுப்பிற்கு சுண்டி சுண்டி இழுக்க படாரென கண் விழித்தாள்.

தலை அறுத்துப்போடபட்ட மீனாய் கட்டிலில் துள்ளிக்கொண்டிருந்தவனை  பார்த்து

“பிர்லாஆ ” என அலறியே விட்டாள் ப்ருந்தா.

“ஏய்  பிர்லா என்னாச்சு “

“சொல்லுடா ”

“எனக்கு பயமா இருக்கு ”

“இங்க பாரு  என்னை பாரு ” முகம் தொட்டு, மார்பை நீவி, கைகால் வருடி அவன் துள்ளலை கட்டுக்குள் கொண்டு வர பார்க்க  ம்ஹூம் அவளால் முடியவில்லை

அவனை தன் மார்போடு சேர்த்து குழந்தையாய் அனைத்து அந்த துள்ளலை நிறுத்த போராடுவதற்க்குள் அவளின் ஆவி துடித்து போனது.

“பிர்லா பயமுறுத்தாத என்னை பாருடா ” கதறி அழுதவள் அவனை முடிந்தளவு இறுக்கமாய் பிடிக்க

ப்ருந்தாவின் குரல் கேட்ட பின் முன்பை விட அதிகமாய் உடல் வெட்டி இழுத்தது. இழுத்த இழுப்பில் அவன் மீதிருந்த ப்ருந்தா பிடிமானம் இன்றி மறுபுறம் உருண்டு தரையில் விழ எக்குதப்பாய் கையில் மாட்டிய நைட் லேம்ப் ஒயரின் உபயத்தால், மரத்திலான அந்த லேம்ப் அவள் தலையிலேயே விழுந்து உடைந்தது.

“ஆ…” அலறியவள் தலையை பிடித்தபடியே வலியையும் மீறி பிர்லாவை காக்கவேண்டும் என்ற வெறியில் எழுந்து அமர்ந்தாள்

பிர்லா உடலில் நடந்த மாற்றங்களால், பிர்லாவிற்கு என்ன நடக்கிறது என்பது கூட மூளையில் பதியவில்லை.

 அவனை நோக்கி நகர்ந்த பார்வை, நிலை குத்தி்நின்றது அவனிடத்தில். பிர்லாவின் உடல் வெகு வேகமாய் வெட்டி வெட்டி இழுக்க  ஒவ்வொரு வெட்டுக்கும் இவள் விழுந்த பகுதியை  நோக்கி, தூக்கி தூக்கி போட்டு  அதுவரை எங்கோ வெறித்த கருவிழிகள் இரண்டும் மேல் நோக்கி செல்ல வெள்ளை முழி மட்டுமே தெரிந்தது,கடைசியாய் ஒரு வெட்டு, தனியாய் தூக்கிப் போட, இறுதியில் கட்டிலில் இருந்து மடார் என உடைந்து சிதறிய நைட் லேம்ப்பின் மீது,  அவள் காலடியிலேயே இவன் விழுந்தான்.

விழுந்த அடியில் அவனது உடல் தூக்கி போடுவதை நிறுத்தி அப்படியே அமைதியாகி, மேலிருந்த கருவிழிகள் சிறிது சிறிதாய் கீழறங்கி, பின் விழிகள் தெரியாத அளவு மூடிக்கொண்டது

உயிரோடு இருக்கிறானா? இல்லையா ? இந்த நிலையில் அவனை பார்க்கும் யாருக்கும் தோன்றும்  ஒரே கேள்வி இது தான்

வாயில் கை வைத்து பேயறைந்தார் போல் சுவரோடு சுவராய் அமர்ந்திருந்தவள் தான்  தலையில் வந்த இரத்தத்தினாலா  இல்லை இதயத்தில் கசிந்த இரத்தத்தினாலோ  எதுவோ ஒன்று அவளுக்கு மயக்கத்தை கொடுக்க  அவளும் அவன் மீதே சரிந்தாள்

Advertisement