Advertisement

பகுதி 14

ப்ருந்தாவின் தற்கொலை முயற்சியின் காரணமாக அவளை தனித்து தனிஅறையில் விடவும் மனதில்லை, பார்வதிதேவியுடனோ,மரகதமுடனோ தங்க வைக்கவும் மனதில்லை  இறுதியில் சந்த்ரபோஸ் “அவளை பிர்லா  கூடவே  தங்க வை, அது தான் சேப் ”  என பார்வதிதேவியிடம் சொல்ல

ஆனால் அது அவரது காதில் சென்று விழுந்தாற்ப்போல் தெரியவில்லை. சந்திராவிடம் எந்த ஒரு பதிலும் கூறாமல் ஹாலிற்கு வந்தார். அங்கே பிர்லாவும் ப்ருந்தாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்ததை பார்த்து அங்கே வந்தார்.

“நீ ரூம்க்கு போ பிர்லா  ப்ருந்தா கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு” என பார்வதிதேவி சொல்ல

“மாம் அவ ஏற்கனவே டயர்டா இருக்கா ” பிர்லா சொல்ல

“பத்து நிமிசத்தில் வருவா நீ போ” என

ப்ருந்தாவை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தான் பிர்லா.

“ம்க்கும்” என்ற செருமலில் சோபாவை விட்டு எழுந்து நின்றாள் ப்ருந்தா.

“சூப்பரா பிளானை எக்ஸ்ஸிக்யூட் பண்ணிட்டே போல” ப்ருந்தாவை இனம் கண்டு கொண்ட பார்வதிதேவியின் முதல் கேள்வி குத்தீட்டியாய் வந்தது.

‘ம்  என்க்வ்யரியா அதுவும் என்கிட்டேயேவா உப்ப்ப்…’ என பெருமூச்செறிந்தவள் “நான் என்ன எக்ஸிக்யூட் பண்ணினேன்  அதுவும் சூப்பரா!” ஒற்றை புருவம் மேலேற  பதிலுக்கு கேட்டாள் ப்ருந்தா.

“இந்த புரியாத மாதிரி பார்க்குறது, தெரியாத மாதிரி கேட்குறது இதெல்லாம் பிர்லாகிட்ட வேணா செல்லுபடி ஆகலாம் ஆனால் என்கிட்ட ஆகாது!” கூர்மையாய் பார்வதிதேவி கேட்டார்.

இந்தம்மாகிட்ட நடிக்க கூட முடியாது போல  என எண்ணியபடியே “நிதானமா நடக்கவேண்டிய கல்யாணம் அவசர அவசரமா நடந்ததே உங்களால தான்  எக்ஸீக்யூட் பண்ணினது வேணா நானா இருக்கலாம் அதுக்கு ரூட் போட வச்சது நீங்க தான் ” தன் காதலை மதித்திருந்தால் இந்த நாடகமே அவசியமில்லையே என இவள் பேசிக்கொண்டிருக்க

“அதுக்காக சாகற அளவு போவியா !” கோபத்தை அடக்கியபடி  பார்வதிதேவி பேச

“அதான் ஒன்றும் ஆகவில்லையே !”என இவளும் பேச

“என்ன ? ஒன்னும் ஆகலையா…? ஒரு வேளை நீ செத்து போய் இருந்தா, என் பையனையில்ல  தூக்கி உள்ள வச்சிருப்பானுங்க ” ஆத்திரம் அடங்காமல் கத்தியவர் “ஒரு வேளை உனக்கு அதான் ஆசையோ !” வார்த்தையை விட்டார் பார்வதிதேவி.

“என்னோட ஆசை அவனை சந்தோஷமா வச்சிக்கிறது மட்டும் தான்  அதை முதலில் மனசில வச்சிக்கிட்டு பேசுங்க  வாய் இருக்கிறதுக்காக ஓவரா பேச வேணாம் ” மரியாதையை இவளும் பறக்க விட

“அப்பறம் எதுக்கு சூசைட் பண்ண ட்ரை பண்ணினியாம் ?”

“நான் சூசைட்லாம் பண்ணலை, பண்ணின மாதிரி நடிச்சேன்  போது…ம்மா…!”என முடிக்கும் முன் தன் முன் நீண்ட பார்வதிதேவியின் வலது கையை லாவகமாய் பிடித்திருந்தாள் ப்ருந்தா  சிறு அதிர்ச்சியோடு

ஆம், பார்வதிதேவி ப்ருந்தாவை அடிக்க கை ஓங்க இருந்தார்.

அடிக்க துணிவதா என்ற கோபம் ப்ருந்தாவிடம்  அடிக்கவிடவில்லை என்ற ஆத்திரம் பார்வதிதேவியிடம் தன் கையை பிடித்திருந்த ப்ருந்தாவின் கைகளை உதறினார் பார்வதிதேவி

“நல்ல பொண்ணுங்க யாரும் இப்படி ஒரு வேலையை பார்க்க மாட்டாங்க ச்சீ ” என

“நல்ல மாமியார் யாரும் இப்படி ஒரு வேலையை பார்க்க மாட்டங்க ” அவர் கை ஓங்கியதை இவள் குத்தி காட்ட

“உன் கிட்ட பேசறதே வேஸ்ட்  பொண்ணா நீயெல்லாம் !”என முகம் அஷ்டகோணலாக

அதை பார்த்தவள் “வெத்தலை பாக்கு வச்சு நான் அழைக்கவேயில்லையே ” “என் கூட பேசறதுக்கு ” என

“ச்சீ…”என  அந்த இடத்தை காலி செய்த பார்வதிதேவியிடம் அதீத வெறுப்பு மட்டுமே மிஞ்சியது.

‘வாய் எத்தனை பேசினாலும் மனம் காயப்பட்டு தான் போனது ப்ருந்தாவிற்கு, பார்வதிதேவியின் அடிக்க துணிந்த கோபத்தை பார்த்து.

அப்படி என்ன தப்பு செஞ்சிட்டோம்  என் காதல் இவங்களுக்கு காதலா தெரியவேயில்லையா !

அன்று அவள் கட்டிய தாலிக்கும் மதிப்பில்லை இன்று இவன் கட்டிய தாலிக்கு மரியாதை இல்லை.தவறு தன்னிடமா?  இல்லை தன் காதலிடமா? வெகுவாய் குழம்பி போனது ப்ருந்தாவின் மனம்.

இதற்கிடையில்  தாயின் அழைப்பு வேறு  போனை காதுக்கு கொடுத்தவளின் மனம் சண்டிக்குதிரையாய் பறந்து கொண்டிருந்தது. செண்பா என்ன சொன்னார், அதற்கு இவள் என்ன சொன்னாள்  நிச்சயமாய் நினைவில்லை.

போனை ஆப் செய்து, பிர்லாவின் அறைக்கு தனியகவே சென்றாள்.  அறையை திறந்தவளுக்கு படு ஏமாற்றம் தான்.  காலையில் முதலிரவு பற்றி நினைத்து வானத்தில் பறந்தோம், இப்போது என்னவென்றால் மூச்சுக்கு திணறும் மீனாய் தரையில் துள்ளிக்கொண்டிருக்கிறோம். என்ன இது உணர்வுகள் வேறு  வித விதமாய் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கிறது. எரிச்சலானது மனது முதல் முறையாய்.

ஒரு வேளை நாம் தவறான வழியில் செல்கிறோமோ! முதல் முறையாய் முரண்டியது மனது கூடவே சலிப்பும் எழுந்தது.

தலையில் குடிகொண்டிருந்த போனி டெயிலை அவிழ்த்து ரப்பர்பேண்டை ஒரு மூலையில் தூக்கி எறிந்துவிட்டு, தலையை இடமும் வலமுமாய் சிலுப்பி கூந்தலுக்கு விடுதலை கொடுத்தபடி விழுந்தாள் கட்டிலில்.

ப்ருந்தா உள்ளே வந்தது முதல், இதோ இப்போது கட்டிலில் அலையென விழுந்த வரை ஒவ்வொரு செய்கையையும் ரசித்தது பிர்லாவின் கண்கள் அதன் பின்னும் வெகு நேரம் வரை அவளையே பார்த்திருந்தது  அவன் ஆழ்ந்த விழிகள்.

அலங்காரமில்லாத அவள் மட்டும்போதும்

என் அறையை மட்டுமல்ல

என் மனதையும் அழகுபடுத்த…!

மனம் குட்டியாய் கவிதை கூட சொன்னது. பெரிதாய் இதழ்கள் புன்னகை புரிய.. பிர்லா நீயா கவிதையெல்லாம் சொல்ற? தனக்கு தானே வியந்து போனான்.

அடுத்த கவிதையை அவன் மனது எழுதும் முன் சிறிதாய் கதவை தட்டும் ஓசை எழுந்தது. கூடவே ‘பிர்லா கதவை திற’ என்ற பார்வதிதேவியின் அழைப்பும் சேர்ந்தது.

அப்போது தான் பிர்லாவும் உள்ளே இருக்கிறான் என தெரிய  மூடிக்கிடந்த விழிகள் விருட்டென விழித்தது கொள்ள அவள் உடலும் எழுந்து அமர்ந்தது.

வேக வேகமாய் இவனை தேட, அறையின் ஒரு மூலையில் நின்றிருந்த பிர்லாவிடம் போய் சிக்கி கொண்டது இவள் விழிகள். நான்கு விழிகளும் மென்மையாய் மோதிக்கொண்டது.

இன்னமும் அவளை பார்த்த படியே கதவை திறந்தான் பிர்லா.

“மாம்.. என்ன இந்த நேரம்” என பிர்லா கேட்டு முடிக்கும் முன் “பிர்லா, கீழே இருக்குற ரூம்க்கு போ“ என தேவி கூற..

“மாம்! ப்ருந்தா தனியா இருப்பா?” என இவன் சொல்ல வந்ததை முடிக்கும் முன்.

“சொன்னதை செய் பிர்லா, கீழே தாத்தா ரூம்க்கு போ நீ” என பிடிவாதமாய் அங்கேயே நின்றார் தேவி.

ப்ருந்தாவிற்கும் தன் அன்னைக்கும் ஏதும் சண்டையா? ஆம் சண்டையே தான் என்பது போல் இருவரது முகமும் அப்படியே காட்டி கொடுக்க,  ஏதோ இருக்கிறது  அதுவும் எதுவுமே பேசாமல் மீண்டும் கட்டிலில் அமைதியாய் விழுந்து கிடந்த  ப்ருந்தா அந்த சந்தேகத்தை தூண்டிவிட்டாள். இவர்களுக்குள் சண்டை என்றான பின் தானும் சேர்ந்து ஏற்றி விட வேண்டாம் என வீண் வாக்கு வாதத்தை தவிர்த்து  கதவை இழுத்து சாத்திவிட்டு கீழிறங்கி சென்றான். அதன் பின்பு தான் தேவியும் அங்கிருந்து நகர்ந்தார்.

அத்தனையும் பார்த்த ப்ருந்தா இவன் கீழ் இறங்கி செல்வதை பார்க்க முடியாமல் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.

கீழே தாத்தாவின் அறைக்கு சென்ற பிர்லாவோ உறங்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.  அருகில் அவன் தாத்தா சதானந்தம் வேறு “டேய் ஒன்னு நீ தூங்கு, இல்லை என்னை தூங்க விடு, இப்படி உருண்டு உருண்டு தூங்கினா நான் எப்படிடா தூங்குறது, பத்தாததுக்கு இந்த இந்த லைட் வேற” பளிச் என கண் கூசிய எல்ஈடீ பல்பில் முகம் சுருக்கினார் சதானந்தம்.

“தாத்தா நான் ப்ருந்தா கிட்ட போகனும், இப்போவே” ப்ருந்தாவின் வாடிப்போன முகம் அவன் மனதில் நிழலாட, வேறொங்கோ வெறித்தபடி கூறினான் பிர்லா.

“அது முடியாதேடா, நல்ல நாள் பார்க்கிற வரை வெயிட் பண்ண சொன்னா  உங்கம்மா, அமைதியா தூங்குடா” என்ற சதாவின் பதிலுக்கு,

“வரவர உங்க அக்கப்போருக்கு ஒரு அளவில்லாமல் போய்ட்டு இருக்கு?” என சலித்து கொண்டவன் “ப்ருந்தாவை பார்த்துட்டு கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் நீ நிம்மதியா தூங்கு அம்மாகிட்ட சொன்னன்னு வச்சுக்கோ சதா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என இவன் சட்டமாய் கூற

“டேய் உங்கம்மா தேடி வந்தால் என்னால் பதில் சொல்ல முடியாதுடா”

“முடியாதுனா பதில் சொல்லாத சதா!” என கூறியபடி, தாத்தாவின் பேச்சு எதுவும் காதில் விழாதவனாய் வேகமாய் அங்கிருந்து வெளியேறி தன் அறையின் முன் நின்றிருந்தான். அதற்கு முன் தன் தாயின் அறைக்கு சென்றான்,  நல்ல வேளை தேவி அங்கே நன்றாக தூங்கிவிட்டார் என நிம்மதி கொண்டாலும், ‘அன்னையின் நம்பிக்கையை உடைக்கிறோம் என உறுத்தினாலும், ப்ருந்தா உடைந்து விடக்கூடாதே’ என்ற எண்ணமே உறுத்தி கொண்டிருக்க தன் அறை கதவை திறந்தான்.

உள்ளே லாக் செய்ய கூட இல்லை இவன் செல்லும் எப்படி படுத்திருந்தாளோ அப்படியே படுத்திருந்தாள். மெதுவாய் அருகில் சென்றான்.

”ப்ருந்தா!” என்ற அழைப்பில், இறுகி கிடந்த விழிகள் மெல்ல உருண்டாலும் விழித்துக்கொள்ள ஏனோ தயக்கம். அப்படியே படுத்திருந்தாள்.

வட்டமாய் விரிந்திருந்த கூந்தலுக்குள் சிறு நீள்வட்டமாய் அவள் முகம்  அதை பார்த்தபடியே அவளருகில் படுத்தான். மருத்துவமணையில் இருந்து வந்த பின் இப்போது தான் குளித்திருப்பாள் போல சுடிதாரை கலைந்து டீசர்ட், பேண்டில் இருந்தாள்.

“ப்ருந்தா”

“செல்லம்மா !”

“கண்ணம்மா ” என வித விதமாய் அழைத்தான் ம்ஹூம் சிறிதும் அசைவில்லை அவளிடம்

“ஹேய் பொண்டாட்டி  உன்ன தான் !” ஹஸ்கியாய் அழைத்தும் பார்த்தான்… ம்ஹூம்…

“ஓய்  குடிகாரி ” போதையாய் அழைக்க  வெடுக்கென முகத்தை மட்டும் திருப்பி அவனை முறைக்க

‘ஐ  ஒர்க் அவுட் ஆகிடுச்சு !’ துள்ளி குதிக்காத குறை தான் அவனிடம்

‘என்ன?’ என கேட்காத போதும் பிர்லாவின் பேச்சுக்காக காத்துகிடந்தது அவள் செவிகள்.

“நீ பண்ணின மேஜிக்குள்ள  டாக்டர் எப்படி உள்ளே வந்தார் ?” என கேட்க !

“இதை கேட்க தான் இங்கே வந்தியா !” அப்பட்டமான ஏமாற்றம் அவளிடம் !

“ஆமா  அதுக்கு தான் வந்தேன் ” என கேட்டவனுக்கு ஓர் ஆழ்ந்த பார்வையை பதில் அளித்தாள் ப்ருந்தா.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ப்ருந்தா !” தலைக்கு கையை முட்டு கொடுத்தபடி அனந்த சயனன் போல் ஒரு போஸ் அவனிடம்

இருந்தும் இவள் வாயை திறக்கும் வழியை காணவில்லை

“சீரியஸா கேட்குறேன் , டாக்டரை என்ன சொல்லி மிரட்டுன  எனக்கு தெரிஞ்சாகனும் சொல்லு ” என ஒரு கை தலையை தாங்கி இருக்க, மறுகையால் அவள் டீசர்டினுள் கிடந்த தாலியை சுவாதீனமாய் வெளியே எடுத்தபடி இவன் கேட்டான்.

Advertisement