Advertisement

குதி 1

கிட்டதட்ட இருபது வருடங்களாய் “போஸ்இன்ஸ்டிட்யூட் ஆப்டெக்னாஜி“  சந்த்ரபோஸின் கையிலும்,“பார்வதி பைனான்ஸ்” அவரது மனைவியான பார்வதிதேவியின் கையிலும் சிறிதும் நெகிழ்ச்சி இல்லாது வளர்ச்சியை மட்டும்  அடைந்து கொண்டிருந்தது.

வளர்ச்சி என்பது அவர்களது தொழிலில் மட்டும் தானே ஒழிய அவர்களது வாழ்வில் இல்லை. இதோ பணத்திற்கு பணம் என அதை மட்டும் பொருத்தமாய் கொண்டு முடிக்கப்பட்ட திருமணம் அவர்களுடையது. மனப்பொருத்தம் என்பது சிறிதும் இல்லை  அது அவர்களது நடவடிக்கையிலேயே தெரிய ஆரம்பித்தது, அதுவும் பார்வதிதேவியின் மூலம் சற்று ஜாஸ்தியாகவே வெளிப்பட்டு விடும்

சந்த்ரபோஸின் மீது இளக்காரம் என்பதெல்லாம் இல்லை ஆனால் கணவன் என்கிற மரியாதை சற்று குறைந்த நிலை தான். ஆணுக்கு நிகர் பெண் என சற்று ஜாஸ்தியாகவே நினைத்து அவருக்கு இணையாக தொழிலிலும் இறங்கி முழு வெற்றியும் கண்டவர். ஆனால் தொழிலை விட கணவனுக்கு சற்று முன்னுரிமை உண்டு என மறந்து போனார்.

திருமணம் ஆன புதிதில் ஆர்வம் மேலிட்ட தாம்பத்தியம் இரண்டு வருடங்களின் பின் அவர்களது ஒரே மகனின்  பிறப்பின் பின் அதிலும் பிடிப்பு என்பது இல்லை. திருமணத்திற்கு பின் தன்னில் பாதியாய் சந்த்ரபோஸை நினைக்க மறந்தார் பார்வதிதேவி. ஆனால் மனைவி, மனைவியின் பாசத்தை மட்டும் உயர்வாய் நினைத்திருந்தார் சந்த்ரபோஸ்.

அதன் விளைவு இருவருக்குமிடையில் லேசாய் கீறல் விழ ஆரம்பித்து. அது பெரிய மரமாகும் என நினைக்காத  சந்த்ரபோஸ் மனைவியை தேடவே துவங்கிவிட்டார்

அவரது மகன்  பிர்லா என்கிற பிர்லாபோஸ் கூட அந்தளவு தாயை தேடி இருக்க மாட்டான்  சந்த்ரபோஸின் தேடல் சற்று தீவிரமாய் தான் இருந்தது.

பிஸ்னஸ் பின் சுற்றும் தாய், அவரை சுற்றும் தந்தை  என இருவரையும் மறந்தவனாய் பிர்லா அவனது பாட்டி தாத்தாவிடம் அழகாய் வளர்ந்தான்.

பிர்லாவிற்காவது பாட்டி தாத்தா ! ஆனால் தன் கணவனுக்கு? கவனிக்க தவறிவிட்டார் பார்வதிதேவி  ஆனால் சந்த்ரபோஸிற்கு மனைவியின் அன்பான அரவணைப்பு தேவையாய் தெரிய, அதை உணர்த்தவும் சந்த்ரபோஸ் தவறிவிட, அதை பார்வதிதேவி உணராமல் போனார்

அது தான் முதல் ஏமாற்றம், முதல் தடுமாற்றம். முதலில் பார்வதிதேவியின் நினைவுகளை நெட்டி தள்ள ப்ஸ்னஸின் பின் ஓடியவருக்கு இந்த இருபது வருடமும்  ஓடியே விட்டது  ஒரு நிலையில்  சலிப்பு தட்ட, ஓட்டத்தை விட்டு அமர்ந்துவிட்டார்  அதன் பலனாய் சிறிது ஆட்டம் கண்டது அவரது பிஸ்னஸ் கூடவே அவரது உடலும் தான்.

“என் கூட பார்ட்டிக்கு வர முடியாத அளவுக்கு அப்படி என்ன ப்ஸ்னஸ்” அடிக்கடி பார்வதிதேவி சந்த்ரபோஸிடம் கேட்கும் கேள்வி, “ப்ஸ்னஸில் எப்படி இத்தனை லாஸ் வந்தது, நீங்க எப்படி கவனிக்காமல் விட்டீங்க” என்று மாறி போனது, காலத்தின் மாற்றத்தினால்.

பதிலில்லை அவரிடம் “என்னாச்சுனு சொன்னா தான் தெரியும்? என்ன பிரச்சனை ?” இத்தனைவருடம் அசையாத தொழில் ஆட்டம் கண்டதில் பார்வதிதேவி வாயை திறந்தார்.

“ஹெல்த் கொஞ்சம் சரியில்லை  ப்ரசர் சுகர்லாம் கூடிடுச்சு தேவி ”

“அதான் ஏற்கனவே   ஹாஸ்பிடல் போறீங்களே அப்பறம் என்ன ?” என தேவி கேட்க

‘ஹாஸ்பிடல் போனால் இதெல்லாம் சரியாகுமா ? நீ கவனிச்சா சரியாகும் !’ என சொல்ல வந்தவர், அத்தனையையும் முழுங்கிவிட்டு “இனி கவனமா இருக்கேன் ” என்ற சொல்லோடு எழுந்து சென்று விட்டார்.

அப்படி மருத்துவமணைக்கு தொடர்ந்து செல்லும் போது பழக்கமானவர், தான் கெங்கா

சந்த்ரபோஸ்க்கு எல்லாவற்றிலும் பிடிப்பு விட்டுபோக ப்ரசர் பிரச்சனை காரணமாக ஹாஸ்பிடல் சென்ற போது பழக்கமானவர் தான் டாக்டர் கெங்கா. முதல் திருமண முறிவு காரணமாக இப்போது தனிமையான வாழ்க்கை வாழ்பவர்.

முன்பெல்லாம் ஏனோ தானோ வென வருபவர் கெங்காவின் தனிமை வாழ்க்கை அறிந்த பின் சிறிது நெருங்கியிருந்தார், சூழ்நிலையும் அப்படி தான் இருந்தது.

சந்த்ரபோஸின் அன்பிற்கு ஏங்கும் உள்ளத்தை மதித்து தன்னை போலவே அன்பிற்காக ஏங்குபவருக்கு ஒரு தோழியாய் இருக்க விருப்பட்டு அவரும் சந்த்ரபோஸோடு தன் நேரங்களை செலவிட்டார்.

மருத்துமணையிலிருந்து சற்று வெளி வந்து நிறைய இடங்களில் சந்தித்த சந்திப்பு எல்லாம் இறுதியில் கெங்காவின் வீட்டிற்கே அழைத்து வந்தது. காரணம் இன்றும் தேவியோடு நடந்த சண்டை. ஆக இது தான் சாக்கென கெங்காவுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“உங்க வொய்பை கூட்டி வாங்க கவுன்சிலிங் கொடுக்கலாம் ” என எவ்வளவோ சொல்லியும், சந்த்ரபோஸிடம் பெரிய அளவிலான மறுப்பு மட்டுமே வந்தது.

“ஏன்? உங்க ஓய்ப் வர மாட்டாங்களா?” என கேட்டார் கெங்கா

“அவள் வர மாட்டாள். அதுக்கு பதிலா நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ?” கேட்டுவிட்டு டீன் ஏஜ் பையனாய் மாறிப்போனார் சில விநாடிகளில்.

“இல்லை, நான் அப்படியெல்லாம் நினைக்கலை, உங்களுக்கு நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம்னு தான்“ என தன் அதிர்ச்சியை மறைத்தாலும், அவரது முகத்தில் இருந்த ஆசையை ஒரு நொடியில் கண்டு கொண்டார் சந்த்ரபோஸ்

அதை வெளிப்படையாய் கெங்காவிடம் தெரியப்படுத்தும் போது “முடியவே முடியாது என மறுத்தார்” கெங்கா.

ஆனால்  சில காலம் மட்டுமே மறுக்க முடிந்தது. கெங்காவின் தனிமை வாழ்க்கை அந்த தடையை உடைத்தெறிந்துவிட திருமணம் செய்து கொண்டார்.

கட்டிய மனைவிக்கு துரோகம் செய்கிறோம் என மனசாட்சி ஒரு புறம் உறுத்தினாலும் கிட்டதட்ட இருபது வருடங்களாய் மிஷினாய் மாறிப்போன உடலுக்கும், பாசம் ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்து போய் சாதகப்பறவையாய் தத்தளிக்கும் மனதிற்கும் கெங்காவை வடிகாலாக்கி கொண்டார் சந்த்ரா.

இதோ கெங்காவுடனான வாழ்வின் பின் புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தார். எதிலும் ஒரு சுறு சுறுப்பு  தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது. தனக்கிருந்த அத்தனை மன உளைச்சலில் இருந்தும் வெளிவந்தார் சந்த்ரபோஸ். அதற்கு கெங்காவும் பேரூதவியாய் இருந்தார்.

இது அறியாத பார்வதிதேவி எப்போதும் போல் தொழில் தொழில் என அதிலேயே உழன்று கொண்டு, சதா சந்த்ரபோஸிடம் ஏதாவது குறை சொல்லி கொண்டும், அநை காரணமாக கொண்டு ஏதாவது சண்டை பிடிப்பதையே வழக்கமாக்கி வைத்திருந்தார்.

இதில், இவர்களது பிடித்தமில்லா வாழ்வில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நங்கள் ஒரே மகன் பிர்லாவை மறந்து போயினர் இருவரும்.

தாய்க்கும் தந்தைக்கும் அவ்வப்போது நடக்கும் சிறு சிறு சண்டைகளில், விவரம் புரியா அந்த வயதில் எல்லாம் அழுகைக்கு தயாராகும் அந்த பிஞ்சு முகம், விவரம் புரிந்தபின்போ அடுத்ததடுத்த சண்டைகளில் அழவே ஆரம்பித்தது.

அழ முடியாத வயதை தொட்டவுடனோ அழ முடியவில்லை. ஆண் பிள்ளை அழலாமா? என கேட்டு கேட்டு அழுகையை விட்டொழிந்தான். கண்களின் மூலம் வெளிப்படுத்த முடியாத அழுகை, அது கொடுக்கும் அழுத்தம் எல்லாமும் சேர்ந்து  மேலேறி தலையில் அமர்ந்து கொண்டது. அது பின்னாளில் தலைவலியாய் உறுப்பெற்றது.

“கண்ணப்பன், தம்பியை சீக்கிரம் ஸ்கூலில் விட்டுட்டு வா, இன்னைக்கு பிஸ்னஸ் மீட்டிங் இருக்கு. அதுவும் இன்னும் ஒன் அவர்ல… ம் சீக்கிரம்” என அமைதியாய் அதே நேரம் அழுத்தமாய் சொல்ல

“சரிங்க மேடம், தம்பியை விட்டுட்டு சீக்கிரமே வந்திடுறேன்” என பார்வதிதேவியிடம் சொல்லிவிட்டு அமைதியாய் வந்த டிரைவர் கண்ணப்பன், “தம்பி ரெடி ஆயிட்டீங்கன்னா, ஸ்கூலுக்கு போகலாமா” பதினேழு வயது இளைஞனாய் பணத்தில் குளித்த தோற்றத்துடன் டைனிங் டேபிளை நோக்கி வந்த பிர்லாவை கேட்டார்.

“இன்னும் சாப்பிடலை கண்ணப்பன், சாப்பிட்டுட்டு வரேன்” என டைனிங் டேபிளை நோக்கி எட்டுகள் வைத்தான்.

இங்கிருந்து ஸ்கூல் போக அரைமணி நேரம், திரும்பி வர அரைமணி நேரம் இப்போது கிளம்பினால் தான் சரியாய் இருக்கும், என அங்கிருந்த வால்கிளாக்கையும் பிர்லாவையும் மாறி மாறி பார்க்க

படியில் இருந்து இறங்கிய பார்வதிதேவி “பிர்லா இன்னும் நீ ஸ்கூலுக்கு போகலையா” என்றவர்

“கண்ணப்பன் அவனை ஸ்கூல் கூட்டி போகாமல் என்ன செய்ற நீ ” என பார்வதிதேவி மீட்டிங்கிற்கு லேட் ஆகிவிடுமோ என கத்த துவங்க

“மாம்…. ஒரு டென் மினிட்ஸ்” என பிர்லா டைனிங் டேபிள் பக்கம் செல்ல மேலும்  இரண்டு எட்டு தான் வைத்திருப்பான்.

அவன் டைனிங் டேபிளை நோக்கி சொல்கிறான் என கவனிக்காமல் “பிர்லா, அல்ரெடி உன் டேட் ஒரு காரில் போயாச்சு, நீ ஸ்கூலுக்கு போனால் தான் நான் மீட்டிங் அட்டென்ட் பண்ணமுடியும், க்விக்கா கிளம்பு, டைம் ஆச்சு, பேசி பேசியே நேரம் விரயம் பண்ணாதே”

“மேடம், பிர்லா தம்பி இன்னமும்” ‘சாப்பிடவில்லை’ என்ற வார்த்தை சொல்லும் முன்பே

“கண்ணப்பன், இதென்ன குறுக்க பேசுற பழக்கம், அவனை ஸ்கூலில் விட்டுட்டு வாங்க.” என தேவி ஒரு பார்வை பார்க்க….

“ச்சே ” என ‌ஷூ அணிந்த பிர்லாவின் கால்கள் அருகில் இருந்த ஷோபாவில் எட்டி மிதிக்க, அதிலும் கோபம் தணியாமல் விறுவிறுவென அங்கிரு்து சென்று காரில் ஏறியிருந்தான்.

அவனது பேக்கை தூக்கியபடி அவனுக்கு முன்பாக காரில் அமர்ந்து சற்று வேகமாகவே காரை செலுத்தினார் கண்ணப்பன்.

காரில் செல்லும் போதே “பிர்ரா தம்பி, சாப்பிடலைன்னு அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தான தம்பி”

‘ஆம் சொல்லி இருந்தால் அதை கண்டிப்பாய் தடுத்திருக்க மாட்டார் பார்வதிதேவி ’

‘டென் மினிட்ஸ் மாம்’ என கேட்டவனிடம் “எதுக்கு பத்து நிமிஷம் ?” என பார்வதிதேவியும் கேட்டிருக்கலாம்

ஆனால் சொல்லும் அளவு நெருக்கமும் கேட்கும் அளவு பாசமும் அங்கே இல்லாமல் போய்விட்டது தான் காரணம்.

இருந்தும் மகன் சாப்பிட்டானா ! என தெரிந்து கொள்ளாத தாய் என்ன தாய் ? என கோபமும் எழுந்தது பிர்லாவுக்கு.

“தலை வலிக்குது, கொஞ்சம் பேசாமல் வர்றீங்களா ?” தாயை பற்றி அடுத்தவனிடம் குறை சொல்ல முடியவில்லை ஆதலால் இப்போதைக்கு டிரைவரின் வாயை அடைத்தான்.

“தம்பி இப்போலாம் ஜாஸ்தியாக தலைவலி வருதுனு சொல்றீங்க  அம்மாகிட்ட சொல்லைன்னாலும் ஐயா கிட்ட சொல்லுங்க தம்பி  தலைவலி வர வயசா தம்பி  இது.!” உண்மையான அக்கறையுடன் சொல்ல

“லொட லொடன்னு பேசாமல் ஸ்கூல் போங்க கண்ணப்பன், லேட்டா போய் அம்மாகிட்ட திட்டு வாங்காதீங்க” சொல்லிவிட்டு அமைதியாய் தலையை பின் சீட்டில் சாய்த்தான் பிர்லா.

“நான் வேணா ஹோட்டலில் நிப்பாட்டட்டுமா  தம்பி” அவனது கோபத்தையும் பொருட்படுத்தாமல், அவனது சோர்வான முகத்தை காண பொறுக்காமல் மீண்டும் கேட்க

பதிலே இல்லை அவனிடம், சாய்த்த தலையையும், மூடிய கண்களையும் அசைக்க கூட இல்லை “தனக்கு ஒரு டிரைவர் பரிதாபம் பார்ப்பதா ?” என்ற தோரணை தான் பிர்லாவிடம் இருந்தது.

“அம்மாவை எந்த நிலையிலும் விட்டு கொடுக்காத இந்த நல்ல பையனோட வாழ்க்கையை கெடுக்குறாங்களே பார்வதிம்மா? அடிக்கடி தலை வலின்னு சொல்லிட்டு இருக்கான் இவனை கூட கவனிக்காமல் என்ன பிசினஸ்” ஏகப்பட்ட யோசனைகளுடனே ஸ்கூலில் பிர்லாவை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் கண்ணப்பன்.

அவன் படிக்கும் அந்த உயர் ரக பள்ளியில் மதிய உணவு அங்கேயே வழங்கப்படும். காலையில சாப்பிடாததிற்கும்  சேர்த்து வைத்து மதியம் சாப்பிட்டு தன் பசியை முழுதாய் தீர்த்து கொண்டான். அன்று ஒரு நாள் மட்டுமல்ல, அது போல் நிறைய நாட்கள் நடந்தேறியிருக்கிறது அவன் வாழ்நாளில்.

அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து தன் தந்தைக்காக காத்திருந்தான்.

Advertisement