Advertisement

மல்லி அந்த மூன்று மாதத்தில் தன் கணவன் எத்தனை கவனித்தும் நான்கு கிலோ இளைத்துவிட்டாள். மாலை தோழிகள் இணைய வழி இணையும் போது காரணம் கேட்க, “ஆமா சொகுசா நாலு வீட்டு சோறு தின்னுட்டு மதியம் கிளாஸ் கவனிக்கிறேன்னு சுகமா தூங்குவேன். இப்ப மாங்கு மாங்குன்னு வேலை பாத்துட்டு விடிய விடிய அசைன்மென்ட் எழுதினா எப்படி என் எலும்புல கறி உக்காரும்.’’ என்று முதலை கண்ணீர் விட்டாள். 

“அடிப்பாவி… கிளாஸ்ல தூங்கி தூங்கியே வெயிட் போட்ட ஒரே பண்டாரம் நீயா தாண்டி இருப்ப.’’ என்று மற்ற நால்வரும் ஓட்டி தள்ளினாலும் அது குறித்தெல்லாம் கண்டு கொள்ளாது, “இனி நான் தூங்கமையே செகன்ட் இயர் முடிஞ்சிருமா…?’’ என்று வருத்தமாய் கேட்டு வைத்து தன் தோழிகளின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள் மல்லி. 

இப்படி முதல் அலை மூச்சு முட்ட வைத்து செப்டம்பர் மாத இறுதியில் தன் பயணத்தை சற்றே நிறுத்தி ஓய்வெடுத்தது. முதலில் நகரங்களில் மட்டுமே தன் ஆக்கிரமிப்பை தொடங்கிய கொரொனா பின் நாளில் கிராமங்களுக்கும் பரவி இருந்தது. 

என்னதான் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து இருந்தாலும், மரண விகிதங்கள் மிக குறைவாகவே இருந்தன. அதுவும் அறுபது வயதை தாண்டிய, இணை நோய் கொண்டவர்களை மட்டுமே அப்போது கொரோனா காவு வாங்கிக் கொண்டிருந்தது. 

முதலில் வெருண்ட மக்கள் கூட, ‘இதுவும் ஒருவகை சளி வியாதி தான்’ என அதை கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்னும் இரு மாதங்களில் தங்கள் கல்லூரி வாழ்வே முற்று பெற போகிறது என்ற எண்ணத்தில், தோழிகள் தங்கள் கவனத்தை படிப்பின் பக்கம் திருப்பினர். 

தினம் வம்பு வளர்த்து விளையாடிய கான்பிரன்ஸ் காலில் தினமும் புரியாத பாடங்களை ஒருவருக்கு மற்றவர் சொல்லி கொடுத்து கொண்டனர். முதல் வருடம் எத்தனைக்கு எத்தனை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் விழாக்கள், பரிசளிப்பு என்று குதூகலமாய் சென்றதோ அடுத்த வருடம் முழுமையும் வர்ணங்கள் தொலைத்த வானவில் போன்று வெறுமையாய் கடந்து போயிருந்தது.         

   

அன்றைக்கு அதிசயமாய் மகிழுக்கும் மல்லிக்கும் ஒரே பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியிருந்தது. சுகப்பிரசவமான பெண்களின் பின் கவனிப்பு பிரிவு அது. என்னதான் கை வேலை செய்து கொண்டிருந்தாலும், வாய் ஓயாது பேசியபடியே இருவரும் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அமைந்த நெருக்கம். ஆக இருவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. 

அப்போது உதவி பணியாளர் ஒருவர், “அம்மா கேஸ்…’’ என்றபடி ஒரு சிறுமியை அழைத்து வந்திருந்தார். பாவாடை சட்டையில் மிகவும் நலுங்கிப் போயிருந்தாள் அவள். “என்ன கேஸ்’’ என்று பணி செவிலியர் வினவ, “அபார்சன் கேசுமா.’’ என்றவள் அந்த சிறுமியின் குறிப்பேட்டை கொடுத்துவிட்டு சென்றார். 

குறிப்பேட்டை தங்கள் பதிவேட்டில் எழுதியபடி, வயது என்ற இடத்தில் பதினாறு என்று எழுதிக் கொண்டிருந்தவர், “என்ன படிக்கிற…?” என்றார் கடுமையாய். 

“பத்தாவது.’’ என்று அந்த சிறுமி பதில் சொல்ல, “படிக்கிற வயசுல பாத்து வச்சி இருக்க வேலைய பாரு.’’ என்று திட்டிவிட்டு, “கூட இருக்குறது யாரும்மா…?” என்று அதே கடுமை குரலில் விசாரித்தார். 

“நான் தானுங்க இருக்கேன்.’’ என்று ஒரு முதிய பெண் மணி முன்னால் வர, “வீட்ல இருக்க பொண்ணு என்ன செய்யுதுன்னு கூட பார்க்காம அப்படி என்ன தாம்மா செய்வீங்க. இங்க ஒரு கையெழுத்து போடுங்க.’’ என்று குறிப்பேட்டில் கையெழுத்து வாங்கியவர், மல்லியை அழைத்து அந்த பெண்ணிற்கு ஒரு படுக்கையை ஒதுக்க சொன்னார். 

மல்லி, மகிழ் இருவருக்குமே அந்த பெண்ணை காணும் போது உள்ளுக்குள் பரிதாபம் எழுந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருவரும் அமைதியாய் இருந்தனர். மல்லி அந்த பெண்ணிற்கு ஒரு படுக்கையை காண்பிக்க, அதில் ஏறி அமர்ந்தவள் அழுது கொண்டே இருந்தாள். 

இப்போது அந்த சிறுமியை சுற்றி இருந்தவர்கள், ‘இந்த சின்னபுள்ளையை எதுக்கு குழந்தை பிறந்த வார்ட்ல வச்சி இருக்காங்க…?’ என்ற கேள்வியை தாங்கி பார்த்து கொண்டிருந்தார்கள். மகிழ் அவர்களின் பார்வையை உணர்ந்தவள், “என்ன எல்லாரும் கூட்டம் போட்டுட்டு இருக்கீங்க. பேசன்ட் தவிர மத்தவங்க எல்லாம் வெளிய போங்க.’’ என்று அவர்களை வெளியே அனுப்பி வைத்தாள். 

அந்த சிறுமிக்கு நரம்பில் செலுத்த வேண்டிய ஊசி இருக்க, அதை செலுத்திக் கொண்டே அவளை பார்த்து சிரித்த மல்லி, “உனக்கு என்ன சப்ஜக்ட் பிடிக்கும்…?’ என்று கேட்டாள். முதன் முறையாக தன்னை முறைக்காது ஒரு செவிலி பேசுவதை விழி விரித்து ஆச்சர்யமாய் நோக்கிய சிறுமி, “சயின்ஸ்…’’ என்றாள் அழுகையை நிறுத்தி. 

“வாவ் சூப்பர். அதுல என்ன பிடிக்கும்.’’ என்றாள் தொடர்ந்து. “உயிரியல் தான் ஈசியா இருக்கும். எனக்கு நல்லா படம் வரைய வரும். அதனால எங்க சயின்ஸ் மிஸ் போர்ட்ல படம் வரைய எப்பவும் என்னை தான் கூப்பிடுவாங்க.’’ என்றாள் வெள்ளந்தியாய். 

“அப்படியா… சரி மனித இதயம் படம் வரைய தெரியுமா…?’’ என்று கேட்டாள் மகிழ். உடனே சிறுமி ‘தெரியும்’ என்பதாய் தலை அசைக்க, மல்லி வார்டில் இருந்து ஒரு பேப்பரையும், பென்சிலையும் கொண்டு வந்து கொடுத்தாள். 

அத்தனை நேரம் அழுகையில் நனைந்த கன்னம் காய்ந்திருக்க, உதட்டை மடித்து கொண்டு மும்பரமாய் படம் வரைய துவங்கினாள் அந்த சிறுமி. மல்லியும், மகிழும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டு அடுத்த நோயாளிகளை கவனிக்க சென்றனர். 

அப்போது தான் நோயாளிகளை பார்வையிட வந்த மருத்துவர் கூட, சிறுமியை திட்ட வாயை திறந்துவிட்டு, அவள் வரைந்து கொண்டிருந்த படத்தை கண்டு, மௌனமாய் கடந்து சென்றார். 

மல்லி சிறுமியின் உடனிருந்த முதிய பெண்மணியை அழைத்து விசாரிக்க, “ஸ்கூல் போயிட்டு இருந்தவரை பிள்ளை நல்லா தானுங்க படிச்சிட்டு இருந்தது. கொரோனால பள்ளி கூடம் மூடினதும் ஏதோ போன்ல தான் பாடம் நடத்துறாங்கன்னு பிள்ள போனு கேட்டதுங்க. இவ ஆத்தா ஆறுவருஷம் முன்னாடி புருஷன் பொண்டாட்டி சண்டையில தற்கொலை செஞ்சி செத்து போயிருச்சி. அவ அப்பனும் வேற பொம்பளையை சேர்த்துகிட்டு இந்த புள்ளையை எட்டிக் கூட பார்க்குறது இல்ல. பிள்ள போனு கேட்டதும் நான் வேலை செஞ்ச செங்க சூளை முதலாளிகிட்ட கடன் வாங்கி வாங்கிக் கொடுத்தேன். அதான் வினையமா போச்சு தாயி. இந்த பிள்ளை சேரக் கூடாத சேர்க்கை எல்லாம் சேந்து இப்படி வயித்துல வாங்கிட்டா. இனி அவ வாழ்க்கை என்ன ஆகுமோன்னு நினச்சா தான் மனசெல்லாம் கலங்குது மா…’’ என்று சொல்லி கதறி அழுதார். 

“சரி சரி முடிஞ்சி போனதை பத்தியே பேசி நீங்களும் வேதனைப்பட்டு அந்த பொண்ணையும் வருத்தப்படுத்திட்டு இருக்காதீங்க. ஸ்கூல் திறந்தா மறுபடி படிக்க அனுப்பி வையுங்க. வாழ்கையில யாருமே வழுக்கி விடாம நடந்துட முடியாது. இதையே பேசி பேசி அந்த பொண்ணு மனசை உழட்டி விடாதீங்க.’’ என்றாள் மகிழ். 

மல்லி தன் பணி முடியும் சமயம், அந்த சிறுமியை நெருங்க, தற்சமயம் அழகாய் மனித இதயத்தை வரைத்து, பாகங்களை குறித்து வைத்திருந்தாள். அதை வாங்கி பார்த்த மல்லி, “ரொம்ப அழகா இருக்கு. இனி ஒழுங்கா படிக்கணும் என்ன…? வீட்டுக்கு போனதும் இதையெல்லாம் முழுசா மறந்திடு சரியா…!’’ என்றாள். 

‘சரி’ என்பதாய் சிறுமி தலையாட்ட, மல்லி விலகி நடக்க யத்தனித்தாள். “அக்கா’’ என்று அந்த சிறுமி அழைக்க, மல்லி தேங்கி நின்றாள். “எங்க தெருவுல இருக்க பையன் தான் அக்கா. பேஸ்புக்ல பிரண்ட் ஆயி அப்புறம் லவ் பண்றதா சொன்னான். நானும் அவனை நம்பி லவ் செஞ்சேன் அக்கா. இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாது அக்கா. இப்ப எல்லாரும் என்னை கெட்ட பொண்ணுன்னு சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா.’’ என்றாள் மீண்டும் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி. 

“உனக்கு லவ்வுன்னா என்னன்னு தெரியுமா…?’’ என்றாள் மல்லி ஆழ்ந்த குரலில். அந்த சிறுமி பார்வையை விலக்காது இட வலமாய் தலையசைக்க, “அதோ அங்க பாரு… முதல்ல உங்க அம்மாவுக்கு அப்புறம் உனக்குன்னு உழச்சி ஓடா தேஞ்ச உடம்போட… பால் வாங்க லைன்ல நிக்குறாங்க பாரு உன் பாட்டி. அது தான் ரியல் லவ். மீதி எல்லாம் ரீல் லவ் தான். நான் ஒன்னு சொல்றேன் கேக்குறியா. சரியா உனக்கு இருபத்தியொரு வயசாகும் போது புதுசா உனக்கு ஒரு கடாவாப்பல் முளைக்கும். அப்போ காலேஜ் முடிச்சி நீ ஒரு வேலையில சேர்த்து உன் பாட்டியை வீட்ல உக்கார வச்சி சாப்பாடு போட்டுட்டு இருப்ப. அப்போ உன்னை தேடி வரும் உனக்கே உனக்கான ட்ரூ லவ்.’’ என்றாள். 

அந்த சிறுமி கலங்கிய விழிகளோடு, ‘சரி’ என தலை அசைக்க, அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்து அங்கிருந்து நடந்தாள் மல்லி. மகிழ் எழுத்துப் பணிகளை முடித்திருக்க, தோழிகள் இருவரும் பணி செவிலியிடம் விடை பெற்று பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தனர். 

“பொண்ணா பிறந்தாலே பிரச்சனை தான்.’’ என்றாள் மகிழ். “பொண்ணா பிறந்ததால இல்லை ஒரு பொண்ணை எப்படி மதிக்கணும் எப்படி நடத்தனும்னு தெரியாத சமூகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம். அதான் பிரச்சனை.’’ என்றாள் மல்லி. 

எப்போதும் கேலியும், கிண்டலுமாய் இருந்தாலும் மல்லி சில கருத்துக்களை முன் வைக்கும் போது ஒவ்வொரு வார்த்தையும் வில்லிலிருந்து புறப்படும் அம்பை போல மற்றவர் மனதை துளைக்கும். தோழியின் கருத்திற்கு, “நீ சொல்றதும் சரி தான்…’’ என்று உடன்பட்டாள் மல்லி. 

பேருந்து வந்ததும் இருக்கைக்கு ஒருவர் அமர அவர்கள் பயணம் தொடங்கியது. மதி தன் இருசக்கர வாகனத்தில் விரைந்திருக்க, ரேணு மற்றும் சங்கரியின் கணவன்மார்கள் அவர்களை வந்து அழைத்து சென்றிருந்தனர். 

மகிழ் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும், மல்லிக்கு கை காட்டிவிட்டு இறங்கி கொண்டாள். வீட்டை அடைந்தவள் வழமை போல தன்னை தூய்மை செய்து கொண்டு, சமைத்து உண்டாள். சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்கலாம் என்று அவள் எண்ணிய நேரம் அலைபேசி ஓசை எழுப்பி அவளை அழைத்தது. 

தொடுதிரையில் தந்தையின் பெயர் தெரியவும், முகம் புன்னகையில் விரிந்தாலும், ‘இது அவர் பேசுற நேரம் இல்லையே’ என்று உள்ளுக்குள் ஒரு பதட்டம் உருண்டு ஓடியது. “ஹெலோ… சொல்லுங்கப்பா….!’’ என மகிழ் அழைப்பை ஏற்க, மறுபக்கம் மாயக்கண்ணன் மகளின் இதயத்தில் வார்த்தைகள் மூலம் உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சினார். 

“வேணிம்மா…! இந்த வாரம் வெள்ளிக்கிழமை கவர்மென்ட் லீவ் வருது. உனக்கு காலேஜு லீவா தானே இருக்கும். உன் செல்லம்மா அத்தை வீட்ல இருந்து உனக்கு பூ வைக்க வாறாக. கால் டாக்சி புடிச்சி வந்து சேந்துரு.’’ என்றார். 

மகிழின் இதயம் பயத்தில் தடதடத்தது. “பா… இப்ப எதுக்கு அவசரம்…’’ என அவள் திக்கி திணற, “ஏன் கழுத…? உனக்கு என்ன வயசு குறையுதுன்னு நினைப்பா. உங்க அத்தை வீட்ல பேசி ஆறுமாசம் முடிஞ்ச சங்கதி உனக்கு தெரியும் தானே. இத்தனை நாள் பதில் சொல்லாம இருந்தவங்க… நேத்து தான் போன் செஞ்சி பூ வச்சி உறுதி செய்ய வாரோம்டு சொல்றாக. நீ அதையும், இதையும் அச்சானியமா பேசாம ஒழுங்கா வந்து சேரு. கடைக்கு போற வேலை கிடக்கு. நான் நைட்டு வந்து பேசுதேன்.’’ என்றவர் அலைபேசியை வைத்துவிட வெகு நாட்களுக்கு பின் மகிழ் அதிர்ச்சியில் சமைந்து நின்றாள். 

பந்தமாகும். 

 

Advertisement