Advertisement

பந்தம் – 18 

கொரோனா காலத்தில் கல்லூரிகள் திறந்தாலும் வகுப்பறைகள் செயல்படாது என்பதை அவர்கள் அறியாமல் போயினர். ஒரே இடத்தில் சமூக இடைவெளியோடு கூட அப்போது இருபது பேருக்கு மேல் கூட தடை இருந்தது. 

ஆக வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இவர்கள் வகுப்பில் இருக்கும் ஐம்பதில் நாற்பது பேர், அரசு ஊதியம் பெரும் செவிலிகள் என்பதால், காலை நேரம் கட்டாயம் மருத்துவமனைக்கு சேவையாற்ற பணிக்கப்பட்டனர். 

அது மே மாதத்தின் இறுதி நாட்கள். அப்போது தான் தமிழகத்தில் முதல் அலையின் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கி இருந்தது. தலைக்கு தொப்பி, முகத்திற்கு N95 முக கவசம், உடலில் முன்பு அறுவை அரங்கில் மட்டுமே உபயோகிக்கும் அறுவை அரங்க சீருடை என உடலோடு, மனதும் இறுக அவர்கள் பணிக்கு வந்தனர். 

பேருந்துகள் இயங்காத நிலையில் இவர்கள் பயணிக்க மட்டும் சிறப்பு பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்திருந்தது. வழி நெடுக ஊரே வெறிச்சோடி கிடக்க, இவர்கள் மட்டும் காலை முதல் மதியம் வரை மருத்துவமனையில் பணி செய்து திரும்புவார்கள். 

தோழிகள் ஐவருக்கும் வேறு வேறு பகுதியில் பணி என்பதால் காலை வருகை பதிவேடு சரி பார்க்கும் இடத்தில் மட்டுமே அவர்கள் சந்திப்பு நிகழும். அப்போது ஒரே இடத்தில் நின்று பேச கூட முடியாது. 

இருவர் சற்று நெருங்கி நின்றாலே பின்னால் இவர்களை பார்வையிட வந்த பேராசிரியர், “சோசியல் டிஸ்டன்ஸ் ப்ளீஸ்…’’ என்று ஹை டெசிபலில் அலறுவார். தொடர்ந்து மூன்று மாதங்களாய் ஊரங்கு நீடிக்க, அன்றாடம் காட்சிகளாய் இருந்த மக்கள் அவதிப்பட்டு போயினர். 

சாலையில் கைவிடப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்தது. அங்கங்கு செயல்பாட்டில் இருந்த அம்மா உணவகமும், சில தொண்டு நிறுவனங்களின் அன்னதானங்களும் மட்டுமே பலர் வயிறு நிறைய காரணமாயிருந்தது. 

ஆரம்பத்தில் விடுமுறை கொண்டாட்டமாய் தொடங்கிய ஊரங்கு, இரண்டு வாரங்கள் கடந்த பின், பொருளாதார மூச்சு திணறலாய் உருவெடுத்தது. ‘விடுமுறை விடுமுறை’ என்று குதூகலிக்கும் பள்ளி சிறுவர்கள் கூட எப்போது பள்ளி திறந்து மீண்டும் தங்கள் நண்பர்களை காண்போம் என்று ஏங்க தொடங்கியிருந்தனர். 

கல்வித்துறை இணையவில் கல்வி என்று வழிமுறையில் மாலுமி அற்ற கப்பலாய் சீரற்று பயணித்து கொண்டிருந்தது. அனைத்து மக்களுமே ஏதோ ஒரு அழுத்தத்திலும், அச்சத்திலும் தங்களின் நாட்களை நகர்த்தி கொண்டிருந்தனர். 

மல்லி மீண்டும் பணிக்கு கிளம்ப வேண்டும் என்றதுமே சீதை ஓடி வந்து, “பேசாம லீவ் போடேன் புள்ள. ஊரெல்லாம் கொரொனா கொரோனான்னு சொல்லிட்டு இருக்காங்க.’’ என்று வருத்தப்பட அவளோ திடமாய், “என் பிரண்ட் எல்லாம் ஒன்பது மாச குழந்தைய அம்மா வீட்ல விட்டுட்டு கொரோனா டூட்டி பார்த்துட்டு இருக்கா. எனக்கு பிரசவ வார்ட்ல தான் டூட்டி. அதோட இன்னும் அஞ்சி மாசத்துல நான் மறுபடியும் நர்ஸ் தான் அதை மறத்துடாதா.’’ என்றாள் உறுதியாய். 

மனையாளின் பதிலில் சுந்தருக்கு உள்ளுக்குள் மகிழ்வே. இவர்கள் பணி என்பது எல்லையில் நிற்கும் போர் வீரர்களுக்கு ஒப்பானது. எல்லையில் அந்நிய சக்திகள் அதி வலிமை கொண்ட ஆயுதங்களுடன் ஊடுருவும் போது,  எந்த இராணுவ வீரனும் புறமுதுகிட்டு ஓடுவதில்லை. 

மரணம் கூட சில அடிகளில் தன்னை நெருங்கலாம் என்று தெரிந்தாலும் கூட திடமாய் முன்னோக்கி தான் நடப்பான். அது போல தான் மருத்துவ முன் களப் பணியாளர்களும். மல்லி மீண்டும் மருத்துவமனை செல்ல தொடங்கியதிலிருந்தே அக்கம், பக்கத்து வீட்டினர் இவர்கள் வீட்டு வாயில் முன்பு நின்று கூட பேசுவதில்லை. 

அவளின் மூத்த தம்பியின் புத்திரன் விளையாட அவர்களின் வீட்டிற்கு வருவதில்லை. ராணியும், முத்துவும் தெருவில் இருக்கும் மற்ற குழந்தைகளோடு விளையாட சென்றால் கூட அக்குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தம் தம் வீட்டிற்குள் அழைத்து கொண்டனர். 

இந்த நவீன தீண்டாமை மல்லிக்கு புதிதாய் இருந்தாலும் அவள் எது குறித்தும் அச்சப்படவில்லை. தினமும் பணிக்காய் சேலம் அரசு மருத்துவமனை செல்பவள், நேரே வீட்டின் பின்கட்டிற்கு வந்து குளித்து விட்டு தன் பணி ஆடைகளை உடனே துவைத்து வெயிலில் உலர வைப்பாள். 

வெகு நாட்கள் புழங்காமல் இருந்த மேல் அறையை சுத்தப்படுத்தி தான் மட்டும் அங்கு தங்கினாள். உணவை கூட மேலே கொடுத்து விட சொல்லினாள். தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த வித பாதிப்பும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள். 

ராணியும், முத்துவும் அவளை புரிந்து கொண்டு தேவைப்பட்ட இடைவெளி கொடுத்து தாயிடம் அளவளாவி விட்டு கீழே இறங்கிவிடுவார்கள். ஆனால் அவளின் இளைய புத்திரன் பூரணன் மட்டும், “மா… தூக்கு… தூக்கு..’’ என்று கைகளை முன்னே நீட்டிக் கொண்டு முன்னே வருவான். 

இரண்டரை வயது பாலகன் பாவம் கிருமி தொற்று குறித்து என்ன அறிவான். அது போன்ற சமயங்களில் மல்லியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நிற்கும். உடனே ஓடி வந்து மகனை தூக்கி மடியில் அமர்த்தி கொள்ளும் சுந்தர், பந்து ஒன்றை கொண்டு வந்து இருவரையும் உருட்ட வைத்து, தாயோடு மகனையும் ஆற்றுப்படுத்துவான். 

அவள் மேல் மாடியில் உறங்க முதல் நாள் இரவு சுந்தர் உள்ளே வரும் போதே, “மாமா வேண்டாம். கூட படிக்கிற பிள்ளைங்களுக்கு கூட பாசிடிவ் வருது. நான் தினம் ஹாஸ்பிடல் போறேன். சிலருக்கு அறிகுறியே இல்லாம கூட இருக்கலாம்னு சொல்றாங்க. ப்ளீஸ்… இந்த கொரோனா எல்லாம் ஓயுற வரை என்கிட்ட இருந்து விலகியே இருங்க. எனக்கு ஏதாவது ஒன்னு ஆனா கூட நம்ம பசங்களுக்கு நீங்க வேணும்.’’ என்றாள் கண்களில் கண்ணீரோடு. 

உடனே அருகிருந்த சுவற்றில் கை முஷ்டியை மடக்கி ஓங்கி குத்தியவன், “அதெல்லாம் உனக்கு ஒன்னும் ஆகாதுடி. நீயெல்லாம் எல்லையில நிக்குற குலசாமி. உனக்கு ஒன்னும் ஆகாது.” என்று கரகரத்த குரலில் கூறியவன், “நீ இல்லைனா நாங்க மட்டும் எப்படி இருப்போம்னு நினைக்குற. உனக்கு என்ன நான் உங்கிட்ட இருந்து ஆறடி இடைவெளில இருக்கணும். நீ அந்த மூலையில படு. நான் வாசக் கதவை திறந்து வச்சி வெளிய படுக்குறேன். உன் மூச்சு காத்து சுத்தாத இடத்துல எனக்கு தூக்கம் வராது.’’ என்றவன் அறைக்கு வெளியே தலையணை போட்டு படுத்துக் கொள்ள, மல்லியின் கண்களில் உணர்ச்சி பெருக்கில் மீண்டும் ஆறாய் கண்ணீர் பெருகியது.

‘எதை எதையோ காதல் என தேடி  திரிகிறேனே. இதை விட பெருங்காதலை நான் எங்கு காண.’ என்றவளின் உள்ளம் கரைய, ஒருக்களித்து அவள் முகம் பார்த்தபடி உறங்கும் கணவனை மல்லி உறங்காது நெடு நேரம் பார்த்திருந்தாள். 

அவள் மாடி அறைக்கு குடியேறிய நாளிலிருந்தே சுந்தரின் நெஞ்சம் ஆட்டம் கண்டிருந்தது. ஒரு காலத்தில், ‘அவ அப்படியெல்லாம் பேசினா தானே’ என்று தன்மானத்தை தூக்கி வைத்து சுமந்த மனம் தற்சமயம், ‘தன் மனையாள் கண்ணனுக்கு தெரியாத எதிரியுடன் தினம் தினம் போராட போகிறாள்’ என்று தெரிய வந்த நாள் முதல் அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு அவள் பாதங்களில் சரணடைந்திருந்தது. 

மல்லியின் உணவு முதல் அத்தனை தேவைகளையும் தள்ளி இருந்தாலும், தவறாது கவனித்து கொண்டான். காலை உணவில் கட்டாயம் ஒரு பழமும் கீரையும் இடம் பிடித்து இருக்கும். மதிய உணவில் முட்டையும், இரவு உணவில் பாலோடு ஊறவைத்த உலர் பழங்கள் இருக்கும் படி பார்த்து கொள்வான். 

அதோடு அறிவார்த்த சித்த மருத்துவர்கள் பகிரும், காசாய வகைகளை அவளோடு குடும்பத்தினரையும் அருந்த வைத்தான். நூறடியில் தாய் வீடு தள்ளி நிற்க, கொண்டவனே அவளை தாயாய் அரவணைத்தான். 

சீதையோ, கோதண்டனோ தள்ளி நிற்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இருவருமே இணை நோய் உள்ளவர்கள். ஆகையால் மகன்கள் தள்ளி நிற்க வைத்திருந்தனர். தினமும் மொட்டை மாடியில் நின்று மொத்த குடும்பமும் அவளிடம் கத்தி கத்தி பேசுவார்கள். 

எப்போதும் அவளுக்கும் சுந்தருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்கும். ஆனால் இருவருக்கும் இதய அளவில் இருந்த இடைவெளி முற்றிலும் மறைந்து, அவர்களின் ஆத்மார்ந்த காதலை இருவரும் மற்றவர்களின் விழிகளில் தரிசித்தனர். 

வாய் விட்டு அதை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் கூட, ‘நீ மட்டுமே என் உலகம்’ என்ற செய்தி மற்றவருக்கு புரிய தான் செய்தது. இப்படி குடும்ப துணையுடன் காலத்தை நெட்டி தள்ளிய மல்லி, மதி, ரேணு, சங்கரி நால்வருமே மனதளவில் தளர்ந்திருக்க, எப்போது தோழிகளுடன் கைகோர்த்து, கட்டிப்பிடித்து தன் வாழ்வின் வெறுமையை முடிந்த அளவிற்கு விரட்டிக் கொண்டிருந்த மகிழின் நிலமை அவர்களை விட மோசம் கண்டிருந்தது. 

வாழ்வில் பல துயரங்களை உறுதியாய் கடந்து வந்தவள், ஆக இந்த கடுமையான பயணத்தையும் தனியே திடமாய் மேற்கொண்டாள். முன்பை போல தான் ஒருத்திக்கு எதற்கு வகை வகையாய் சமைப்பது என்ற எண்ணத்தை மாற்றி கொண்டு ஆரோக்கியமான உணவினை சமைத்து உண்டாள். 

நேரத்தை நெட்டி தள்ள முடியாதென்றால், பாட புத்தகத்தை எடுத்து கொண்டு அமர்ந்து விடுவாள். விதி எத்தனை கோரமாய் தன்னை தலை குனிய வைத்தாலும், தன் கல்வி மட்டுமே தன்னை கம்பீரமாய் மற்றவர் முன் தலை நிமிர வைக்கும் என்ற எண்ணத்தின் உந்து விசையோடு தினமும் படிப்பாள். 

அதே நேரம் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் பணியிலிருத்த மாறனுக்கு கொரொனா பிரிவில் பணியாற்ற வேண்டி வந்தது. ஆரம்பத்தில்  அவளிடம் செய்தியில் பேசி வந்த மாறன், அவனின் பிறந்தநாளுக்கு அவள் வாழ்த்தும் போது, அவனின் அலைபேசி எண்ணை கொடுக்க, வாழ்த்த என்று தொடங்கிய உரையாடல், தினமும் காலை மாலை என இருவேளையும் நட்பு பகிரலாய் தொடர்ந்து கொண்டிருந்தது. 

மாறனுமே தனிமையில் வசிப்பவன். கொரொனா பேரிடர் அவன் மனதையும் மூர்க்கமாய் வதைத்திருந்தது. ஆனால் தினமும் அவனுடன் உரையாடும் மகிழ், “காலைல கண்டிப்பா பாதாம் நாலு ஊற வச்சி சாப்பிட்டு போங்க. டூட்டி போயிட்டு வந்தா வெந்நீர்ல தான் குளிக்கணும். அதுல வேப்பிலையும் மஞ்சளும் கூட சேர்த்து குளிங்க. நிறைய வடிவேலு காமெடி பாருங்க. நான் தினம் ஒரு அரைமணி நேரம் பாத்துட்டு தான் தூங்குவேன்.’’ என்று தன் வாழ்வியல் முறைகளை அவனோடு பகிர்ந்து கொள்வாள். 

அவனும் தன் பணியில் நடக்கும் சம்பவங்களை அவளோடு பகிர்ந்து கொள்வான். இருவருமே காதல் வயப்பட்டார்களா என்றால் அது இருவருக்குமே தெரியாது. இருவருமே ஆளுக்கு ஒரு வகையில் பலமாய் இதயத்தில் அடி வாங்கியவர்கள். 

அந்த அடியே வாழ்வில் அவர்களை அடுத்த அடி எடுத்து வைக்க தயங்க வைத்தது. ஆனால் இருவருக்குமே மற்றவரின் ஆறுதல் வார்த்தைகள், தனிமை பயணத்தில் தோள் சாய தோழமை கிடைத்த நிறைவை கொடுத்து. 

ஆக அந்த இதத்தை எதை பேசியும் கெடுத்து கொள்ள விரும்பாது இருவரும் ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தனர்.  மருத்துவமனை வாயிலில் சந்திக்கும் போதெல்லாம் தோழிகள், கைகளை கோர்த்து கொண்டு, உதட்டை குவித்தும், ஒருவர் மீது மற்றவர்களுக்கு இருக்கும் பிரியத்தை அந்த சொற்ப வினாடிகளில் பகிர்ந்து கொள்வர். 

சூழ இருக்கும் மாணவிகள் அப்போதும், “கொரோனா குத்தாட்டம் போட்டுட்டு இருக்கு. அப்பவாவது அடங்குறாளுகளா பாரு. இவளுக கொடுக்குற ரொமான்டிக் லுக்குல டைட்டானிக் கப்பல் கவுந்துடும் போல.” என்று கழுவி ஊற்றினாலும் அதயெல்லாம் கண்டு கொள்ளாது தங்கள் பாசப் பயிரை வளர்த்து திரிவார்கள். 

Advertisement