Advertisement

‘மாமா ஏன் இன்னும் சாப்பிட வரல’ என்று எண்ணியவள், ‘சரி நாமே இன்னைக்கு மதிய சாப்பாட்டை தோட்டத்துக்கு கொண்டு போவோம்.’ என முடிவெடுத்து, சுந்தரை காண மதிய உணவு கூடையுடன் தோட்டம் நோக்கி விரைந்தாள். 

அவள் தோட்டத்தை அடையும் போது , சுந்தர் மண்புழு தொட்டியிலிருந்து இயற்கை உரத்தை சேகரித்து கொண்டிருந்தான். அவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை உரங்களை பெரும்பாலும் சுந்தரே உருவாக்கிவிடுவான். 

பஞ்ச கவ்யம், மண்புழு உரம் என்று இயற்கை விவசாயத்தின் வழி பயணிப்பவன். சுந்தர் தன் பணியில் முனைப்பாக இருக்க, “மாமா…’’ என்று உரக்க குரல் கொடுத்தாள் மல்லி. அவள் குரல் இங்கு ஏன் கேட்கிறது என்ற ரீதியில் திரும்பிப் பார்த்தவன் அவள் கையிலிருந்த உணவு கூடையை கண்டு உள்ளுக்குள் ஆச்சர்யம் அடைந்தான். 

திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் மல்லி ஒருமுறை கூட இப்படி மதிய உணவை அவனுக்காய் சுமந்து வந்ததில்லை. முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாதவன், ‘என்ன..’ என்பதாய் புருவத்தை மட்டும் உயர்த்தினான். 

“நேரன் தாண்டி போச்சு. தொட்டி தண்ணில முகம், கால் கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம்.’’ என்றாள் மல்லி. ‘இது என்னடா எட்டாவது அதிசயமா என் பொண்டாட்டி சாப்பிட எல்லாம் கூப்பிடுறா.’ என்று உள்ளுக்குள் வியந்து போனவன், கையிலிருந்த உரத்தை அருகிருந்த சாக்குப்பையில் போட்டு விட்டு, மனைவி சொன்னபடி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மோட்டார் அறை நோக்கி நடந்தான். 

சிறிய அறை தான் அது. ஆனாலும் கணவன் வருவதற்குள் அந்த இடத்தை சுத்தப்படுத்தி, அவன் உண்ண வாழை மரத்திலிருந்து இலை வெட்டி வந்து, அவனுக்காய் காத்திருந்தாள் மல்லி. சுந்தர் அமைதியாக அமர, இலையில் சமைத்த உணவுகளை பரிமாறினாள் மல்லி. 

பெரும்பாலும், சுந்தர் மல்லிக்கு பரிமாறியதே இல்லை. அடிக்கடி அவர்களுக்குள் நடக்கும் மௌனப் போர் ஒரு காரணம் என்றால், அவளின் பணி மற்றொரு காரணம். அவள் தனக்காய் தன் உணவு வேளையை கடத்த விரும்பாத கணவன், அவள் பரிமாற வந்தாலே அனலாய் தகிக்க, மல்லி அந்த எண்ணத்தையே விட்டிருந்தாள். 

முதல் கவளத்தை எடுத்து வாயிலிட்ட சுந்தர் அந்த உணவின் ருசியில் லயித்து போனான். காலா காலாமாய் தாயின் சமையல் ருசி அறிந்த நாவின் ருசி அரும்புகள், இது கண்டிப்பாக அன்னையின் சமையல் இல்லை என்று கட்டியம் கூறின. 

நொடிக்கு ஒருமுறை இவன் முகத்தையும், இலையில் இருந்த உணவையும், கண்களில் எதிர்பார்ப்பு மின்ன, படபடப்புடன் பார்த்து கொண்டிருந்த மல்லியை கண்டவன், ‘ஒருவேளை இவளே சமைத்து கொண்டு வந்திருப்பாளோ…?’ என்ற குழப்பத்தில் இருக்கும் போதே, மல்லி, “குழம்பு நல்லா இருக்கா…?’’ என கேட்டிருந்தாள். 

‘இவ்ளோ டேஸ்ட்டா சமைக்க தெரிஞ்சிக்கிட்டு வேணும்னே இத்தனை நாள் கஞ்சியை கூட கருக விட்டாளா…? எங்க அம்மா அளவுக்கு இல்ல. ஆனாலும் ஓகே தான்.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், வெளியே தன் வழக்கமான பதிலான, “ம்…’’ கொட்டலை தொடர்ந்தான். 

உடனே மல்லியின் முகத்தில் அத்தனை நேரமிருந்த எதிர்பார்ப்பின் மின்னல் மறைய, சூரியன் கண்ட அல்லியாய் மலர் முகம் கூம்பியது. அடிக் கண்ணில் மனையாளை நோட்டமிட்டபடி உணவருந்திக் கொண்டிருந்தவன், “இன்னும் கொஞ்சம் சோறு வை. குழம்பை இன்னும் கொஞ்சம் ஊத்து. ரெண்டு கரண்டி சேத்து ஊத்துனா உன் சொத்து குறைஞ்சிடுமா…? பொரியல் வை.’’ என்று தனக்கு அவள் சமைத்த உணவின் மேல் உள்ள விருப்பத்தை வார்த்தையில் காட்டாமல் செய்கையில் உணர்த்தினான். 

கூம்பியிருந்த முகம் உடனே மலர்ந்து விரிய, மல்லி சிறிய புன்னகையுடன் தன் மாமானுக்கு பரிமாறினாள். அவன் இரசித்து உண்பது முகபாவனைகளில் வெளிப்பட, அதை நெகிழ்வுடன் ரசித்தாள். 

முதன் முறையாக மல்லி தனக்கென சமைத்து பரிமாற, சுந்தருக்குள் அவன் பல காலமாய் புதைத்து வைத்திருந்த காதலன் மெல்ல எட்டிப் பார்க்க முயன்றான். ‘ஆமா ஒரு பொழுது சோறு செஞ்சி கொடுத்துட்டா பேசினது எல்லாம் இல்லைன்னு ஆயிருமா.’ என்று இறுகியிருந்த மனசாட்சி குரல் கொடுக்க, அதன் பிறகு மௌனமாய் உண்டு எழுந்தான். 

மல்லி பாத்திரங்களை தொட்டியில் கழுவியவள், வீட்டிற்கு கிளம்பினாள். “இந்த உர மூட்டையை சாயந்திரம் சுப்பு அண்ணா தோப்புக்கு அனுப்பனும். வீட்ல எதுவும் வேலை இல்லைனா இதை கொஞ்சம் நிரப்பி தறியா..?’’ என கேட்டான் சுந்தர். 

என்னவோ மனையாளின் அருகாமை வேண்டும் என்று உள்ளம் கேட்டது. அதனால் வேலையை சாக்கிட்டு அவளை அழைத்தான். சரி என்பதாய் தலையை உருட்டியவள், தானும் அவனோடு சேர்ந்து மண்புழு தொட்டியிலிருந்த உரங்களை சேகரிக்க தொடங்கினாள். 

அதே நேரம் தன் சேலத்து வீட்டில் மகிழ் தனித்திருந்தாள். தனக்கு மட்டும் என்றால் அவளுக்கு சமைக்கவே பிடிக்காது. காலை உணவாய் குளிர்பதன பேட்டியிலிருந்த சில பழங்களை உண்டவள், மதியம் சோற்றுக்கு தயிர் போதும் என்று முடிவெடுத்துவிட்டு தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்த போது தான் மல்லி அழைத்திருந்தாள். 

அத்தனை நேரமிருந்த தனிமை உணர்வு வெருண்டோட, மகிழ் மகிழ்ச்சி புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்று இருந்தாள். தோழி சமையல் குறிப்பை கேட்க, அவளுக்கு சொல்லி முடித்தவள், மேலும் சிறிது நேரம் அவளோடு அளவளாவி விட்டே அலைபேசியை துண்டித்தாள். 

தன் கணவனுக்காய் மல்லி சமைக்கவிருப்பதாய் சொல்லியிருக்க, தானும் அப்படி அன்போடு சமைத்து, பாசத்தோடு பரிமாற, அருகில் உற்ற சொந்தம் என்று யாரும் இல்லையே என்ற ஏக்கம் அவள் நெஞ்சுக் குழிக்குள் எட்டிப் பார்த்தது. 

தன்னிரக்கம் தன்னை வேரோடு சாய்க்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவள் என்பதால், மாலை கோவிலுக்கு சென்று வர, உதிரியாய் கிடந்த பூக்களை நூல் கொண்டு சரமாய் தொடுத்து கொண்டிருந்தாள். 

அந்த நேரம் அவள் அலைபேசி செய்தி வந்ததின் அறிகுறியாய் சிணுங்க, தன் தோழிகள் யாரேனும், செய்தி அனுப்பியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் மகிழ் அலைபேசியை கையில் எடுத்தாள். 

செய்தி மாறனிடமிருந்து வந்திருந்தது. முகநூலின் வழி தனி செய்தி அனுப்பும் உள்பெட்டியின் வழி காலை வணக்கத்தை தாங்கி வந்திருந்தது செய்தி. அத்தனை நேரமிருந்த வெறுமை உணர்வு மறைய, இதழில் பூத்த புன்னகையுடன், தானும் தன் காலை வணக்கத்தை பதிவு செய்து பதில் கொடுத்தாள் மகிழ். 

அடுத்த கேள்வி, ‘சாப்பிட்டாச்சா…?’ என்று வர, பதில் கொடுத்து இவளும் கேள்வி கேட்க, கிட்ட தட்ட அரைமணி நேரம் நீண்டிருந்தது அந்த உரையாடல். இறுதியில் இவள் தான் கல்லூரி விடுமுறையில் இருப்பதாக கூற, இருவரின் உரையாடல், கொரோனாவின் பக்கம் திரும்பியது.

‘பாசிடிவ் கேஸ் இன்னும் நம்ம தமிழ்நாட்டுக்கு வரல. ஆனா எப்ப வேணும்னாலும் வரலாம். சீனா மாதிரி மருத்துவ கட்டமைப்பு சீரா இருக்க நாட்டையே தலை கீழா புரட்டி எடுத்துட்டு இருக்கு. நம்மளை மாதிரி திக் பாப்புலேசன் கன்ட்ரில வந்தா நிலைமை என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு.’ என்றான் மாறன் செய்திப் பெட்டியில். 

‘நம்ம நாட்டோட சீதோசன நிலைக்கும், உணவு முறைக்கும் கண்டிப்பா அந்த வைரஸ் நம்ம நாட்ல அந்த அளவுக்கு பரவாது. இனி சம்மர் சீசன் வேற. அப்படியே வைரஸ் தாக்கினாலும் பெருசா ஸ்ப்ரெட் எல்லாம் ஆகாதுன்னு தான் நினைக்கிறேன்.’ என்று பதில் செய்தியில் தன் எண்ணம் பகிர்ந்தாள் மகிழ். 

‘வராம இருந்தா தான், நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.’ என்று மாறன் சொல்ல, அதை மகிழ் ஆமோதிக்க, மேலும் சிறிது நேரம் செய்தி வழியே பேசிக் கொண்டிருந்தவர்கள், அவன் பணி நேரம் தொடங்கப் போகிறது என சொன்னதும் முற்று பெற்றது.

அப்போது அவர்கள் அறியவில்லை, அடுத்தடுத்து அலையென படையெடுக்கப் போகும் கொரோனா பேரலையில் பந்தம், சொந்தம் ஏன் தங்கள் சொந்த உயிரை கூட துச்சமென அடகு வைத்து, கவச உடை தரித்து, போர்க்களம் புகும் வீரர்களென கொரோனாவுடன் வருடம் முழுக்க போர் புரிய போகிறார்கள் என.  

மதியம் தயிர் சாதம் மட்டும் போதும் என எண்ணியிருந்த மகிழ், மாறனுடன் பேசிய பிறகு ஏற்பட்ட உற்சாகத்தில், வாயில் தன் மனதிற்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள் கொஞ்சமாய் வெஜிடபிள் புலாவ் செய்யும் முடிவுடன். 

மதியோ தன் வீட்டில் நான்கு நாத்தனார்களும் குவித்து விட, அண்டாவில் பிரியாணி கிண்டிக் கொண்டிருந்தாள். கிண்டுதல், உண்ணுதல், உறங்குதல் என்ற வழமை மட்டும் அவள் வாழ்வில் தொடர்கதையாக, இடுப்பில் இன்னொரு மடிப்பு விழ நாள் பார்த்து கொண்டிருந்தது. 

சங்கரியும், ரேணுவும் தங்கள் குழந்தைகளை சூப்பர் ஜூனியர் ஆக்கியே தீர வேண்டும் என்ற முடிவோடு, அவர்களை குட்டியோ தட்டியோ விழுந்து விழுந்து படிக்க வைத்து கொண்டிருந்தனர். 

இப்படி தோழிகளின் வாழ்வு ஆளுக்கு ஒரு திசையில் பயணித்தாலும், அவ்வப்போது, அலைபேசியில் ஒன்றாக இணைந்து வாயால் கும்மியடித்து, வஞ்சகப் புகழ்ச்சி அணி கொண்டு ஒருவரை மற்றவர் புகழ்ந்து சிரித்து களைத்து போகவில்லை என்றால் அவர்களுக்கு அந்த நாள் முடியாது. 

இந்த ஊரடங்கு எப்போது முடியும், மறுபடி எப்போது கல்லூரி தொடங்கும், மீண்டும் கல்லூரி கேண்டீனில் வடை சாப்பிட்டு, வகுப்பறையில் ஆசிரியரை ஏமாற்றி கொட்டாவி மறைத்து தூங்குவது எப்போது நடக்கும் என இவர்கள் எப்போது எப்போது எப்போது என காத்திருந்த அந்த நாளும் முழுதாய் மூன்று மாதங்கள் முடிந்த பின் வந்தது.

ஆனால் அப்படி வந்த நாட்கள் அவர்களுக்கு வசந்தமாய் வந்ததாவென்றால், அவர்கள் ஐவரின் தலையும் குறுகும் நெடுக்கும் மறுப்பாய் தான் ஆடும். ஏனெனில் இவர்களுக்கு மத்தியில் முதல் அலை என்ற போர்வையில் கொரோனா வந்திருந்தது அழையாத சீன விருந்தாளியாய். 

பந்தமாகும்.  

    

 

Advertisement