Advertisement

பந்தம் – 17 

“நாளை முதல் பதினான்கு நாட்கள் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.’’ என்று தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் மல்லி. 

அவர்கள் சமூக நல பாட திட்டத்தில் இருக்கும் போதே, சீனாவில் பரவி வந்த கொரொனோ வைரஸ் குறித்து அவர்களுக்கு பாடம் நடத்தியதுடன், அதை தவிர்க்க, தனி மனித இடைவெளி, முக கவசம் மற்றும் கை கழுவுதல் ஆகிய வழி முறைகளை பொது மக்களுக்கு விளக்கவும் மாணவிகளை ஊக்குவித்தனர். 

அந்த நேரத்தில் பொது மக்கள், ‘கொரொனோ வா… அதெல்லாம் பாம்பு பல்லி சாப்பிடுறவனுக்கு வரும். நமக்கு எப்படி வரும்…’ ‘கொரொனோ ஒரு வைரசே இல்லையாம் பா… அந்நிய நாட்டு சதி.’ ‘அது ஏதோ கதிர்வீச்சாம் பா. உலகம் அழிஞ்சிடும் போல.’ என்று ஆளுக்கு ஒரு புரளியை பரப்பி கொண்டிருந்த நேரம். 

டிசம்பரில் சீனாவில் தலைவிரித்து ஆடிய வைரஸ், மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதிக்க, நூற்றி இருபது கோடி மக்களும், பருந்துக்கு பயந்து வளை தங்கும் எலிகள் போல தங்கள் வீடுகளில் முடங்கினர். 

இதுவரை எது எல்லாம் அவர்களுக்கு அத்யாவசியமாய் இருந்ததோ, அதெல்லாம் ஒரே நாளில் அவசியமற்று போனது. ‘கொரொனோ’ இருபதாம் நூற்றாண்டில் மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை என்ற இயற்கைக்கு எதிரான தலைக்கணத்தை, இயற்கை ஒற்றை ‘நுண்மீ’ என்ற கண்ணனுக்கு தெரியாத சுத்தியல் கொண்டு ஓங்கி உடைத்திருந்தது. 

மருத்துவமனை வாயில் தவிர அனைத்து வாயில்களும் மூடப்பட்டு விட, நேற்று வரை கடி ஜோக்கிலும், திரையில் கவர்ச்சி காட்டவும் மட்டுமே பயன்பட்டு வந்த செவிலிய, மருத்துவ உவமைகள் ஒரே நாளில் கவச உடை மாற்றப்பட்டு உயிர் காக்கும் காவலர்கள் ஆயினர். 

மல்லி வருத்ததுடன் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தாள். ‘போச்சு டா… இனி பதினாலு நாள் காலேஜ் கிடையாதா…? மகிழ் வைக்குற எண்ணெய் கத்திரிக்கா பொரியல் இல்லாம எனக்கு தொண்டையில சோறு இறங்காதே.’ என்று தன் சொந்த கவலையில் மூழ்கி இருந்தாள். 

2019 மார்ச் மாதம் பொது ஊரடங்கு தொடங்கப்பட்ட போது, அனைவரும் எதிர்பாரத பொக்கிசமாய் கிடைத்த விடுமுறையை கொண்டாடி கழிக்கும் உற்சாக மனநிலையில் இருந்தனர். 

முத்துவும், ராணியும் தங்கள் பள்ளிக்கு விடுமுறை என்பதால் நடு வீட்டில் தாயக் கோடு வரைந்து, காலை உணவு முடிந்ததும், தாயக் கட்டையை உருட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் உற்சாகமாய் பாரி காய்களை நகர்த்தி கொண்டிருந்தார். 

தாயக்கட்டை உருளும் ஒலி ‘சிலிங் சிலிங்’ என்று கூடத்தில் நான்கு திசைகளிலும் எதிரொலித்து கொண்டிருந்தது.  தன் மகிழுந்து சேவையை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சீனு பொழுதை நெட்டி தள்ள முடியாது மல்லியின் வீட்டிற்கு வந்திருந்தான். 

அப்போது தான் தக்காளி நாற்றை பதியன் போட்டு விட்டு வந்திருந்த சுந்தர் காலை உணவிற்காய் வீட்டிற்குள் வந்தான். சீனு அவனை கண்டதும், “ஷப்பா… முடில மாமா. தெரு முழுக்க, மோகினி கால்ல சலங்கை கட்டிக்கிட்டு ஓடுற மாதிரி இந்த தாயக்கட்டை உருள்ற சத்தம் கேக்குது. இந்த கேமுக்கு எல்லாம் எங்க ஆயா காலத்துலையே பால் ஊத்தி அடக்கம் செஞ்சி வச்சிருந்தோம். இந்த வீணாப் போன கொரோனா வந்து மொத்தமா எழுப்பி விட்ருச்சு. முக்கு தெரு வரைக்கும் கூட போக முடில. போலீஸ் முட்டிலையே தட்டுறாங்க. எங்கள மாதிரி இளந்தாரி பயலுக எல்லாம் எப்படி டைமை ஓட்றது. இத்தனை நாள் மொத்தமா லீவு கிடைச்சும் வீட்ல முக்காடு போட்டு உக்கார வச்சிட்டாங்களே. சும்மா இருக்குறது கூட கடுப்பா இல்ல. ஆனா இந்த தாயக்கட்டை சத்தம்… வேற லெவல்ல எரிச்சலை கிளப்புது.’’ என்றான் கடுப்புடன். 

உடனே வாய் விட்டு பெரிதாய் சிரித்த சுந்தர், “மோகினி பேயா…! டேய் ஆனாலும் உனக்கு இத்தனை குசும்பு ஆகாதுடா. உங்களால ஊர் மைதானத்துல போய் கிரிகெட் விளையாட முடியலைன்னு வீட்ல தாயம் உருட்ற ஆளுகளை வம்பு பேசிட்டு இருக்கியா…?’’ என்றான் கிண்டலாய். 

அடுப்படியில் நின்று, மகிழிடம் அலைபேசியில் எண்ணெய் கத்தரி பொரியலுக்கு பதம் கேட்டு கொண்டிருந்த மல்லி, கணவனின் சிரிப்பொலியில் வெளியே எட்டிப் பார்த்தாள். ‘மச்சினனை கண்டா தான் எம் புருசனுக்கு பல் இருக்குறதே வெளிய தெரியுது.’ என்று மனதிற்குள் நொடித்து கொண்டவள், அலைபேசியை மறக்க, “ஹெலோ…’’ என்று மறுமுனையில் அவளை ஏலம் போட்டு கொண்டிருந்தாள் மகிழ். 

“ஹா…! வர மல்லியை வறுத்துட்டு… பொடியா அரைக்கணும்… அப்புறம்…’’ என்று மல்லி அலைபேசியில் கவனமாகிவிட, சுந்தர், அடுப்படிக்குள் நுழைந்து அவனின் காலை உணவான கம்மங்கூழை சிறு வெங்காயத்துடன் சேர்த்து உண்டவன் மீண்டும் தோட்டத்திற்கு கிளம்பினான். 

“ஏண்டா பொழுது போகல… சத்தம் பிடிக்லைன்னு இங்க உக்காந்து புலம்பறதுக்கு உங்க அப்பாரு காலைல இருந்து உங்க தோப்புல தனியா தென்னை மரத்துக்கு உரம் வச்சிட்டு இருக்காரு. அங்க போய் உதவி செஞ்சா என்னடா…?’’ என்றான். 

“அதெல்லாம் நமக்கு ஆகாது மாமோய். நீ எனக்கு ஹாட் ஸ்டார் ரீசார்ஜ் போட்டு விடு. நான் ரூம்ல போய் படம் பாக்குறேன். இந்த பதினாலு நாள் முடிஞ்சதும் எனக்கு நிக்க நேரம் இல்லாம வேலை வரப் போகுது.’’ என்றான் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி. 

“அதானே…! அண்ணனுக்கும் தம்பியும் காட்டு வேலையை கண்ல கூட பாக்க மாட்டீங்களே.’’ என்றுவிட்டு தன் அலைபேசியை எடுத்து மச்சினனுக்கு அவன் கேட்ட செயலியை மீள் நிரப்பு(ரீசார்ஜ்) செய்து கொடுத்தவன், தன் விவாசாயப் பணியாற்ற கிளம்பிவிட்டான். 

அரக்கப் பறக்க வாழ்ந்தே பழக்கப்பட்ட வாழ்வில், எதிர்பார்த்து கிடைத்த ஓய்வு நாளில் மல்லி இரசித்து சமைத்தாள். அவளுக்கும் சமையலுக்கும் எட்டாம் பொருத்தம். அந்த பொருத்தத்தை தகுத்த முறையில் வடிவேற்றி கொடுத்தவர்கள் அவளின் அம்மாவும், அத்தையும் தான். 

‘வேலைக்கு போய் வரும் பெண்’ என இருவரும் அவள் நாக்கிற்கு வஞ்சனை வைக்காது சமைத்து போட, ‘இதான் நல்லா இருக்கு.’ என்று அந்த சொகுசிற்கு பழகி போனவள், பின்னாளில் அவர்களாய் சமைக்க சொல்லி கெஞ்சும் போதும், “அதெல்லாம் என்னால முடியாது. நான் பாத்திரம் வேணா தேய்ச்சி தரேன்.’’ என்று நாசூக்காய் நகர பழகி கொண்டாள். 

“எனக்கு அப்புறம் என் பையன் நல்ல கொழம்புக்கு ஏங்கி போக போறாண்டி…’’ என மாமியார் வருத்தப்படும் போதெல்லாம், “பாரி… நீ எல்லாம் வைரம் பாய்ஞ்ச கட்டை. நம்ம ராணி, முத்து வளந்து சமைக்க ஆரம்பிக்கிற வரை சும்மா கிண்ணுன்னு இருப்ப. எதை சொல்லி தருவியோ இல்லையோ அந்த மிளகு தக்காளி குழம்பை மறக்காமா சொல்லி கொடுத்திரு.’’ என்று விட்டு நகர்ந்து விடுவாள். 

“அடியே… அப்பவும் நீ சமைக்க மாட்ட… அம்மா கை, அப்புறம் அத்தை கை, கடைசியா பொண்ணு கைக்கு கரண்டி போயி உனக்கு சோறு வரும். ஆனா நீ குந்தாணி மாதிரி குத்த வச்சி காலத்தை ஓட்டப் போற.’’ என்று வசை பாடினாலும், “நீ சமைச்சா தான் உன் புள்ள ஒழுங்கா சோறு தின்னும்.’’ என்ற ஒற்றை வார்த்தையில் அவரை பெட்டி பாம்பாய் அடக்கி விடுவாள். 

அப்படி சமையல் கட்டுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்று சுற்றி வந்தவள், ஊரடங்கில், வராத சமையல் கலையை கட்டி இழுத்துவிடும் ஆர்வத்துடன், அடுபங்கரையை உருட்டிக் கொண்டிருந்தாள். 

நேற்று இரவு முதலே வலையொளியில் (யூடியூப்) பல சமையல் குறிப்புகளை கண்டிருந்தவள், அதுவும் போதாதென்று காலையிலேயே மகிழுக்கு அழைத்து அவளிடமும் சமையல் குறிப்புகளை கேட்டுக் கொண்டிருந்தாள். 

மற்றவர்கள் பொழுது போக்கும் படலத்தில் மூழ்கி இருக்க, தக்காளி குழம்பு, எலுமிச்சை ரசம், எண்ணெய் கத்தரி பொரியல் என்று மதிய சமையலை முடித்தவள், சமையலறை சூட்டில் அத்தனை நேரம் நின்றது கசகசவேன்றிருக்க, மீண்டும் ஒரு முறை குளிர் நீரில் குளித்து வந்தாள். 

தாயத்தை இரண்டு ஆட்டம் முடித்த குழு இப்போது மாமனோடு  தொடுதிரை அலைபேசி விளையாட்டில் மூழ்கியிருக்க, “ஏய்… வந்து சாப்பிடுங்கடி. முத்து போய் தம்பியை ஆச்சி வீட்ல இருந்து கூட்டிட்டு வா.’’ என்று பணித்தாள். 

மகள்கள் இருவரும் தம்பியோடு திரும்பி வர, தன் அத்தையோடு சேர்த்து தம்பிக்கும் உணவினை பரிமாறினாள். “நானே சமைச்சேன். எப்படி இருக்குடா தம்பி.’’ என்று ஆசையாய் அவனிடம் கேட்க, “அத்த கூட்டி வச்ச குழம்புல உப்பை அள்ளி தூவிட்டு சமச்சேன்னு கதை விடுறியா…? உனக்கு வட்டமா தோசை சுடவே வராது. பொய் சொல்லலாம். அதுக்குன்னு, ஏக்ரா கணக்குல பொய் சொல்லாத அக்கா.’’ என்று கேலி பேசியவன், “அந்த பொரியலை கொஞ்சம் இந்த பக்கம் தள்ளு.’’ என கேட்டான்.  

உடனே முகத்தை சுருக்கிய மல்லி, “பொரியலும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. ரசத்தை ஊத்தி குடி போ…’’ என்றவள் சோற்றை பிசைத்து மகனுக்கு ஊட்ட தொடங்கினாள். 

மருமகனுக்கு பொரியலை நகர்த்திவிட்ட பாரி, “டே… அவதாண்டா சமைச்சா. ஆனா மிளாகப் பொடில இருந்து ரசப்பொடி வரை அத்தனையும் நான் கைபட அரச்சு வச்சது. வெறும் தண்ணில கரைச்சாலே எட்டூருக்கு மணக்காதா…?’’ என்று அவனுடன் கூட்டு சேர்ந்து மருமகளை கடுப்பேற்றினார். 

“நாளைல இருந்து அடுப்படி பக்கமே போக மாட்டேன். எப்படியோ போங்க.’’ என்றவள் மகனை தூக்கி கொண்டு முற்றத்து பக்கம் நடந்து விட, சீனுவும் பாரியும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர். 

அனைவரும் உண்டு முடித்தும் தானும் உண்டவள், பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நேரத்தை பார்க்க அது மதியம் இரண்டை தாண்டியிருந்தது. உண்ட களைப்பில் குழந்தைகள் கூடத்தில் உறங்கியிருக்க, அவர்களோடு பாரியும் சங்கமித்து இருந்தார். 

Advertisement