Advertisement

பந்தம் – 15

தேனில் ஊறிக் கொண்டிருந்த மலை நெல்லி ஒன்றை எடுத்து வாயில் அதக்கியபடி முன்வாயில் தோரணங்களை கட்டிக் கொண்டிருந்தாள் சங்கரி. அவளுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மதியின் வாயில் கடலை மிட்டாய் அடைக்கலமாகியிருந்தது.

‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் அவர்கள் பொது மக்களுக்கு பயன்படும் கண்காட்சியை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் ஏற்பாடு செய்திருக்க, குழந்தைகளை ஈர்க்கும் இயற்கை தின்பண்டங்கள் என்ற தலைப்பில் செந்தாமரை அழகிய சிறு சிறு மண்பாண்டங்களில், தேன் நெல்லி, கடலைமிட்டாய், எள்ளுருண்டை, திணை லட்டு, வரகுப்பாயசம் என்று கண்ணை கவரும் விதத்தில் அலங்கரித்து, அதை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை காண்பவர் புரிந்து கொள்ளும் விதமாக, அனிமேசன் வடிவ பொம்மைகள் பேசுவதை போல, கணினியின் துணை கொண்டு உருவாக்கி, அச்செடுத்து அவ்விடத்தை சுற்றி ஒட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் கல்லூரியில் இணைந்து ஒருவருடம், மூண்டு மாதங்கள் கடந்திருந்தது. இரண்டாம் வருடத்தில் மனநல செவிலிய பாடத்தை முடித்து இருந்தவர்கள், அடுத்து சமூக நல செவிலியம் என்ற துறையில் தங்கள் கல்விப் பயணத்தை துவங்கி இருந்தனர்.

அந்த துறையில் ஒவ்வொரு வருடமும், இறுதி ஆண்டு மாணவர்கள், பொது மக்களுக்கு பயன் தரும், கண்காட்சி ஒன்றினை நடந்த வேண்டும் என்பது பாடத்திட்டம். சென்ற ஆண்டு மாணவ, மாணவியர், நெகிழிப் பை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கி இருந்தனர்.

கண்காட்சி குறித்த கலந்துரையாடல், அவர்கள் வகுப்பில் துவங்கி இருந்தது. அதே சிந்தையில் இருந்த மல்லி, பால் பொங்குவதை உணராது அடுப்படியில், தலைப்பு சிந்தையில் இருக்க, அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த சுந்தர் அவள் தலையில் தட்டி, அடுப்பைஅணைத்து விட்டு, “என்ன…?’’ என்றான்.

தலையை லேசாக நீவிக் கொண்டவள், கரித் துணியை எடுத்து அடுப்பை சுற்றி துடைத்தபடியே, “எங்க கம்யூனிட்டி எக்சிபிசனுக்கு டாபிக் வேணும். போன வருசம் பிளாஸ்டிக் யூசை குறைக்க சொல்லி அவார்னஸ் கொடுத்து இருக்காங்க. இப்போ நாங்க என்ன செய்றதுன்னு தெரியல. நாளைக்கு எங்க மேம் எல்லாரையும் ஆளுக்கு ஒரு டாபிக் யோசிச்சிட்டு வர சொல்லி இருக்காங்க.” என்றாள்.

“ஓ…’’ என்றவன் சற்று நேரம் தாடையை நீவியபடி யோசித்து விட்டு, “நீங்க ஏன் நம்ம பாரம்பரியம் பத்தி சொல்லக் கூடாது. இப்ப இருக்க தலைமுறைக்கு, நம்ம மூலிகைகள் பத்தியும் தெரியாது. பாரம்பரிய உணவு முறையை பத்தியும் தெரியாது. நீங்க  அதை எடுத்து சொல்ற மாதிரி உங்க எக்சிபிசனை ப்ளான் செய்யலாமே. இப்ப இருக்க பல வியாதிகளுக்கு காரணமே மாறிப் போன உணவும், வாழ்க்கை முறையும் தான். அதை அழுத்தி சொல்ற மாதிரி ஏதாச்சும் யோசிங்க.’’ என்றவன் தன் அறைக்குள் நுழைந்து விட, மல்லியின் மூளையில் சட்டென அந்த யோசனை மின்னல் வெட்டியது.

அடுத்த நாள் அவர்கள் வகுப்பறையில்,பேராசிரியர் மாணவிகளிடம் கலந்துரையாடினார். தன் முறை வரும் போது எழுந்து நின்ற மல்லி, “மேம்… என்னோட ஐடியா… உணவே மருந்து. இப்ப இருக்க நம்ம யங்கர் ஜெனரேசனுக்கு லேஸ், குர்குரி தெரிஞ்ச அளவுக்கு ரவா லட்டையும், தேன் குழலையும் தெரியாது. அதே மாதிரி சின்ன சின்ன கிராமத்துல கூட லேசான ஜலதோஷம் பிடிச்சாலே ஊசி போடுங்க, மாத்திரை கொடுங்கன்னு ஹாஸ்பிட்டல் வாசல்ல போய் நிக்குறாங்க. நம்ம வீட்டு அஞ்சறை பெட்டியில இருக்க, ஓமமும், மிளகும், பின் தோட்டத்துல இருக்க கற்பூரவல்லியும் அவங்க கவனத்துல படுறதே இல்ல. நம்ம மரபை மறுபடி மக்கள் மனசுல பதிய வைக்க நாம இந்த தீம்ல எக்சிபிசன் நடந்தினா நல்லா இருக்கும்னு தோணுது மேம்.’’ என்று மல்லி முடிக்க, வகுப்பறையில் படபடவென கைதட்டல் ஓசை எழுந்தது.

மேஜையில் தட்டி வகுப்பறையில் மீண்டும் அமைதியை நிலைநாட்டிய பேராசிரியர், “சரி… மல்லி ஐடியா எத்தனை பேருக்கு ஓகே.’’ என்று கேட்க, வகுப்பில் பெரும்பான்மை மாணவிகள் கையை உயர்த்தியிருந்தனர்.

உடனடியாக கண்காட்சிக்கு ஒரு குழுவை கட்டமைத்தவர், மல்லியை அதன் தலைவியாக்கினார். கண்காட்சியில் எத்தனை அரங்குகள் அமைப்பது, என்னென்ன நிகழ்சிகளை ஒருங்கிணைப்பது என்று அவர்கள் தங்கள் திட்டமிடலை துவங்கினர்.

முதல் அரங்கில் மூலிகை செடிகள் வரிசைகட்டி சிறு தொட்டிகளில் அமர்ந்திருக்க, அதன் பெயரோடு, பலன்களும் பக்கத்தில் அழகாய் ஒட்டப்பட்டிருந்தது. அடுத்த அரங்கில் அஞ்சறை பெட்டியும் அருமருந்தும் என்ற தலைப்பில் அஞ்சறை பெட்டியில் பயன்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் மருத்துவ பலன்கள் குறித்து விரிவான விளக்கங்கள் சுவற்றில் நீண்ட அட்டைகளாக தொங்கவிடப்பட்டிருந்தன.

அதற்கு அருகில், குழந்தைகளை ஈர்க்கும் இயற்கை தின்பண்டங்கள் குடிலில் விதவிதமான இயற்கை உணவுகள் குழந்தைகளை கவரும் வகையில் சிறிய மண் பாண்டங்களில் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கடுத்த அரங்கில், தீங்கு விளைவிக்கும் செயற்கை உணவுகள் என்ற தலைப்பில், துரித உணவுகளை வரிசையாய் அடுக்கி, அதன் கீழ் வயிறு, இதயம், குடல் ஆகிய உள் உறுப்புகள் கண்ணீர் விட்டு கதறுவதை போன்ற உருவ சித்திரங்களை ஒட்டி வைத்து, அவற்றை உண்பதால் ஏற்படும் தீமைகளை பெரிய பெரிய பதாகைகளில் எழுதி வைத்திருந்தனர்.

அதோடு, கிராம மக்கள் இவர்களின் நோக்கை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வில்லுப்பாட்டும். பொம்மலாட்ட நிகழ்வும் கூட ஏற்பாடாகியிருந்தது.

“எவடி அவ…! என்னோட மண்பானையில கைவச்சவ. உங்களை இங்க தான நிக்க சொன்னேன். எங்க போனீங்க.’’ என்று தன் பூனை குரலில் புலியை போல உறும முயன்று கொண்டிருந்தார் செந்தாமரை. அவர் தான் இயற்கை தின்பண்டங்கள் அரங்கின் பொறுப்பாளர்.

“மைக் ஆன் செய்ய போயிட்டு வந்தேன்… என்ன ஆச்சு.’’ என்று வேகமாய் மனைவியின் அருகில் ஓடினார் ரஞ்சன். “ரெண்டு நெல்லி. மூணு கடலை உருண்டையை காணோம்.’’ என்று அவர் வேக மூச்சு விட்டு நிற்க, “சரி விடு விடு… கூட்டத்துல யாரை கேக்க. அதான் டப்பால எக்ஸ்ட்ரா எடுத்துட்டு வந்த இல்ல. மேம் வந்து எக்சிபிசன் ஓபன் செய்யும் போது வச்சிக்கலாம்.’’ என்றார்.

சரியாய் பத்து நிமிடங்களுக்கு முன்னால், இவர் காவல் காக்க ஆரம்பிக்கும் போதே, மல்லி அண்ட் கோ அவரை நெருங்கி தங்களுக்கு விருப்பமான பண்டங்களை லவட்டியிருந்தனர். ‘எடுத்துக்க கழுத’ என்று எளிதாக எடுத்து நீட்டியவர், தற்சமயம் மண்டகப்படி வாங்கிக் கொண்டிருக்க, வரவேற்பு தட்டில் சந்தனத்தை கரைத்து கொண்டிருந்த மகிழ், ஓரக்கண்ணால் அவரை பார்த்து, ‘தேவையா உங்களுக்கு இது.’ என்பதை போல சிரித்தாள்.

செந்தாமரை அலற தொடங்கியதும், ஐவரும் தங்கள் வாயில் இருந்த உருண்டைகளை வேக வேகமாக விழுங்க தொடங்க, தொலைத்த பொருளின் எண்ணிக்கை ஐந்து என்றதுமே செந்தாமரை அவர்களின் மீது பார்வையை திருப்பியிருந்தார்.

ஐவரின் வாயும் வேக வேகமாக அசைய, ‘அட களவாணி பய புள்ளைகளா…’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டவர் திரும்பி தன் கணவரை ஒரு உக்கிர பார்வை பார்த்தார். அந்த அப்பாவி மனிதரோ, ‘சோலி முடிஞ்சி…’ என்று தனக்குள் அலறிக் கொண்டார்.

அதே நேரம் கல்லூரி முதல்வரோடு, சமூக நல பேராசிரியர்களும் வந்து சேர, கண்காட்சி விழா அரங்கு திறக்கப்படும் வைபவத்திற்கு தயாரானது. வாயிலின் குறுக்கே கட்டியிருந்த சிவப்பு நிற ரிப்பன் துணியை அலங்கரிக்கப்பட்ட கத்தரி கொண்டு வெட்டி, கல்லூரி முதல்வர் கண்காட்சியை திறந்து வைத்தார்.

அன்றைக்கு மருத்துவமனைக்கு புற நோயாயளிகாய் வருகை தந்திருந்த சுமார் இருநூறு மக்களோடு, உள்ளுறை நோயாளிகளின் உடனிருப்போர், அந்த வீதியில் உள்ள மக்கள் என்று கண்காட்சியை காண ஏராளமான மக்கள் கூடினர்.

அதுவும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், இவர்களே உருவாகியிருந்த பெரிய வில்லோடு, இவர்கள் வில்லுப்பாட்டு குழு பாட்டுப் பாட மேடையேறிய போது, அங்கு தள்ளு முள்ளே நிகழ்ந்தது.

உணவே மருந்தின் கோட்பாடுகளை, ‘தந்தனத்தோம் என்று சொல்லியே…’ என்று ஆரம்பித்து, ‘சொல்லுங்க.. நீங்க சொன்னா நாங்க தெரிஞ்சிக்க போறோம்..’ என்று ஜதி போட்டு, வெவ்வேறு புகழ்பெற்ற  திரை இசைப்பாடல்களுக்கு தங்கள் நோக்கத்தை கூறும் வரியெழுதி சுருதி சேர்த்து அவர்கள் பாடிய போது மொத்த கூட்டமும் மெய் மறந்திருந்தது.

அவர்கள் தங்கள் நிகழ்வை முடித்து விட்டு கீழிறங்க, கரகோசம் ஓய சில பல நிமிடங்கள் ஆனது. அடுத்து மேடையேறிய பொம்மலாட்டக் குழு, தங்கள் கருத்தை முன் வைக்கும் உத்தியில் முழுக்க முழுக்க ஹாஸ்யத்தை புகுத்தியிருந்தனர்.

மல்லிதான் அந்த பொம்மலாட்டத்தை வடிமமைத்திருந்தாள். ஒவ்வொரு பொம்மையாய் பேச பேச, கீழே இருந்தவர்கள் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தனர். மல்லியின் அருகில் அமர்ந்திருந்த மகிழ், அவள் தலையில் தட்டியபடியே சிரித்துக் கொண்டிருந்தாள்.

இப்படி கொண்டாட்ட கோலாகலமாய் கண்காட்சி முடிவடைய, அன்றைக்கு மதியம் வகுப்பில் கண்காட்சிக்காக ஒதுக்கியிருந்த இருப்பந்தைந்து மதிப்பெண்களில் ஒன்றை கூட குறைக்காமல் பேராசிரியர் அப்படியே வழங்குவதாக அறிவிக்க, வகுப்பறையே மகிழ்ச்சி ஆரவாரத்தில் அல்லோலகல்லோலப்பட்டது.

சிறந்த தலைப்பை தேர்ந்தெடுத்து தந்த மல்லிக்கு மாணவர்கள் நன்றி கூற, முழுமையாய் செயல்பட தனக்கு சுதந்திரத்தையும், உடனின்று தன் கற்பனையை கண் முன் காட்சியாய் கொண்டு வந்த உடன்பயிலும் மாணவிகளுக்கு மல்லி நன்றி தெரிவித்தாள்.

அதன் பிறகு தோழிகள் தங்கள் வழக்கமான பாணியில் தேநீர் கடையில் சில்லறை சிதறும் அளவு சிரித்து அலப்பறையை கிளப்பிவிட்டு தங்கள் இல்லம் நோக்கி கிளம்பினர். மல்லி வீட்டின் முற்றத்தில் கால் வைக்கும் போதே, மாட்டுக்கு தீவனம் கலக்கிக் கொண்டிருந்த சுந்தர் கண்ணில் பட்டான்.

தனக்கு வகுப்பறையில் கிடைத்த அத்தனை பாராட்டிற்கும் கணவன் தான் காரணம் என்ற எண்ணம் உள்ளிருந்து உந்த நேராக அவன் முன் சென்று நின்றாள். கல்லூரி சீருடையோடு தன் முன் நிற்கும் மனைவியை சுந்தர் கண்களில் கேள்வியோடு நிமிர்ந்து பார்த்தான்.

“தாங்க்ஸ் மாமா.’’ என்றாள் மல்லி இதயத்தின் அடியாழத்திலிருந்து. தன்னை நேர் கொண்ட துளைக்கும் அந்த அன்பு விழிகளை எதிர்கொள்ள முடியாமல், “எதுக்கு.’’ என்றான் இல்லாத சலிப்பை குரலில் கூட்டி.

அவன் குரல் அவள் பேச்சிற்கு தடை போட முனைந்த போதும், உள்ளுக்குள் பொங்கிய உற்சாகத்திற்கு அது பொருட்டாக படாது போகவே, “நீங்க சொன்ன டைட்டில் தான் கம்யூனிட்டி எக்சிபிசனுக்கு செலக்ட் செஞ்சாங்க. இன்னைக்கு தான் எக்சிபிசன். பப்ளிக்ல இருந்து, எங்க ப்ரின்சி மேம், ப்ரோபோசர்ஸ் எல்லாரும் ‘தீ’மை புகழ்ந்து தள்ளிட்டாங்க. அவங்களை பொறுத்தவரை அந்த டைட்டிலை யோசிச்சது நான். இன்னைக்கு எல்லாரும் என்னை பாராட்டும் போது எனக்கு உங்க நியாபகம் தான் வந்தது. அவங்க எல்லாரோட பாராட்டும் உங்களுக்கு சேர வேண்டியது மாமா. ரொம்ப தாங்க்ஸ்.’’ என்றாள் மீண்டும் உள்ளார்ந்து.

முகம் மகிழ்வில் பூரித்திருக்க, உள்ளத்து அன்பின் ஊற்று கண்ணின் கருமணி வழியே ஒளியாகி எட்டிப் பார்க்க, மொட்டவிழ்ந்த மலர் போல இதழ்கள் சிரிப்பில் மலர்ந்திருக்க, சுந்தருக்கு மனையாளிடமிருந்து பார்வையை திருப்பவே முடியவில்லை.

Advertisement