Advertisement

கர்பிணிப் பெண்ணின் கண் ரப்பையை இழுத்து பார்த்தவர், “உனக்கு ரத்தம் கம்மியா இருக்குன்னு சொன்னாங்களா…?’’ என கேட்டார். முதலில் இல்லை என்று மறுப்பாக ஆடிய தலை, மதியின் முகக் குறிப்பை கண்டதும், ‘ஆம்’ என்பதாய் அசைந்தது. 

இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர், அவளின் விடை தாளை கையில் வைத்து கொண்டு, “உங்க அம்மா  மூணாவது பொண்ணா’’ என்றார். அப்பட்டமாக அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் இருக்க அந்த பெண் மிகவும் சிரமப்பட்டு போனாள். 

மதி எழுதிய அவசரத்தில், குடும்ப வரைபடத்தை கேட்டு வரைய கூட அவளுக்கு நேரமில்லை. அவளாகவே வட்டம், கட்டம் என்று தன் விருப்பத்திற்கு ஒரு குடும்ப வரைபடத்தை உருவாக்கிவிட்டாள். 

இப்போது மதிக்கு வேர்க்க தொடங்கியிருந்தது. தற்சமயம் அவளிடம் கேள்வி கேட்டு ஆம் பதிலை பெறாமல், “உங்க அம்மா வயசு என்ன…?’’ என்று நேரடியாக பதில் கொடுக்கும் கேள்வி ஒன்றை கேட்டார். 

‘இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும்.’ என்பதை போல அந்த பெண் இப்போது மதியை பார்த்தார். “பதில் சொல்லும்மா…” என்று ரதி மீண்டும் கேட்ட தொனியில், “நாப்பத்தி எட்டு.’’ என்று பதில் கொடுத்தாள் அந்த பெண். 

‘60’ என்று எழுதியிருந்த இடத்தில் ஒரு வட்டம் போட்டுக் கொண்டவர், “உன்ன வைவால பார்த்துகிறேன்.’’ என்று விட்டு அடுத்த மாணவியை நோக்கி நகர்ந்தார்.   

“வைவால வண்ட வண்டையா திட்டுவாங்களோ..’’ என்று மல்லி மதியை பார்க்க, அவளோ கொஞ்சமும் கவலையின்றி உணவு பழக்க விளக்கத்திற்காக கொண்டு வந்திருந்த கடலை மிட்டாய் ஒன்றை எடுத்து வாயிற்குள் போட்டுக் கொண்டாள். 

மல்லி மதியை விழி விரித்து பார்க்க, ‘ஒன்றும் பிரச்சனை இல்லை.’ என்பதை போல தோளை குலுக்கி கொண்டவள், தன் பொருட்களை எடுத்து வைக்க துவங்கினாள். அன்றைக்கு மதியமும் தோழிகள் உணவகத்தில் கூடினர். 

மற்ற மாணவிகள், ‘வைவா’ என்று பறந்து கொண்டிருக்க, இவர்கள் சாவகாசமாய் அமர்ந்து சாம்பார் வடையை உள் தள்ளிக் கொண்டிருந்தனர். மல்லியோ, மதி எப்படி பேராசிரியர் முன்பு முகத்தை சுருக்கி கொண்டு நின்றாள் என செய்து காட்ட, மதியோ, பேராசிரியர் போல, ‘இடியட்..’ என்ற வார்த்தையை சொல்லி காட்டி மல்லியை கடுப்பேற்றி கொண்டிருந்தாள். 

அதில் மற்ற தோழிகள் வாய் விட்டு சிரிக்க, “ஆக மொத்தம் நம்ம ஐயர்ன் லேடி.. உங்க ரெண்டு பேத்தையும் கன்னா பின்னான்னு ஐயர்ன் செஞ்சிட்டாங்க போல.’’ என்றாள் சங்கரி. 

“ஹி…ஹி…  ஜோக்கா… வெளிய போய் சிரிக்கலாமா…? நாளைக்கு உங்களை ஐயர்ன் செய்வாங்க. ரெடியா இருங்க.’’ என சொல்லி மதி மல்லிக்கு ஹை பை கொடுத்தாள். அப்போது இவர்களை கடந்து சென்ற மாணவிகள், “எக்சாம்னா கூட இவளுக என்ஜாய் பண்றாளுங்கப்பா…’’ என பொருமி சென்றனர். 

அடுத்த நாள் மற்ற மூவருக்கும் அதே தேர்வு. நேற்றைக்கு மகிழ் உதவி மாணவி என்றாள், இன்றைக்கு மல்லி உதவி மாணவியாய் இருந்தாள். மகிழ், ரேணு, சங்கரி மூவருக்கும் அன்றைக்கு தேர்வு. 

அதே பணியிடத்தில் மதிக்கும் பணியிருந்தது. ஆக ஐவரும் ஒரே தளத்தில் இருந்தனர். ‘இது வேணும். அது வேணும்’ என்று மூவரும் மல்லியை பந்தாட, ‘இவளுக கண்ல பட்டாலே குத்தம் போல.’ என்று மல்லி நொந்து போனாள். 

அதோடு மற்ற மாணவிகளும், தங்களுக்கு தேவையானாதை கேட்க அனைவருக்கும் ஓடி ஓடி உதவிக் கொண்டிருந்தாள். அதே நேரம் மதியும் பணியிடத்தில் வேலை செய்பவள் போல, தேர்வெழுதும் மாணவிகளுக்கு உதவி கொண்டிருந்தாள். 

நேற்று கர்ப்பிணி பெண்களை பரிசோதிக்கும் முறைகளை செய்ய சொல்லி காண்பிக்க சொன்ன பேராசிரியர், இன்றைக்கு, சிறுநீர் பரிசோதனைகளை மாணவிகள் சரிவர செய்து இருக்கிறார்களா என் சரிபார்க்க முயன்றார். 

அவர் முதல் மாணவியை தோரணம் கட்ட துவங்கும் போதே, சங்கரி பதட்டமாய் மல்லியை அழைத்தாள். ‘என்ன..’ என்று பார்வையால் கேட்டபடி அவள் அருகில் போனாள். “என் பேசன்ட்டை யூரின் பிடிக்க சொல்ல மறந்துட்டேன். அதுவும் டயபடிக் கேஸ் வேற. என்ன கண்டிப்பா யூரின் டெஸ்ட் கேப்பாங்க. எனக்கு இப்போ உடனே கொஞ்சம் யூரின் சாம்பிள் வேணும்.’’ என்றாள் கையில் காலி கண்ணாடி குப்பியை வைத்து கொண்டு. 

“சரி இரு. பக்கத்துல எங்கயாச்சும் இருந்து பாதி சாம்பிள் சுட்டுட்டு வறேன். உன்னால எதை எல்லாம் ஆட்டைய போட வேண்டி இருக்கு பாரு.’’ என்றாள் கடுப்புடன். 

இவளின் கெட்ட நேரமோ என்னவோ, பரிசோதனை முடித்திருந்த மற்ற மாணவிகள், தாங்கள் சேகரித்த சிறுநீர் மாதிரியை பரிசோதனை முடித்தவுடன் குப்பை தொட்டியில் சேர்த்திருந்தனர். 

தேர்வு நடக்கும் இடத்தை ஒரு சுற்று சுற்றி வந்த மல்லி, “யார்கிட்டயும் சாம்பிள் இல்ல.’’ என்றாள் வருத்தமாய். “ஏதாச்சும் செய்டி.’’ என்றாள் சங்கரி முறைத்து கொண்டே. அதே கோபத்தை முகத்தில் காட்டிய மல்லி, “செய்… செய்னா… அப்ப நான் தான் சொய்னு உச்சா போய் உனக்கு சாம்பிள் தரணும்.’’ என்றாள் பற்களை கடித்தபடி. 

உடனே சங்கரியின் முகம் மின்விளக்கை போட்டது போல ஒளிர்ந்தது. “குட் ஐடியா. நீயே பேசாம யூரின் பிடிச்சிட்டு வா.’’ என்று மீண்டும் அந்த சிறு கண்ணாடி குப்பியை அவள் உள்ளங்கையில் திணித்தாள். 

‘நானா…’ என்று மல்லி முகத்தை சுழிக்கும் போதே, மதி கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குளுகோஸ் மாட்ட அங்கே வந்தாள். அவளை கண்டது மல்லி வேகமாய் அவளை நெருங்கியவள், “சங்கரிக்கு யூரின் சேம்பிள் வேணுமாம்.’’ என்றவள் தன் கையில் இருந்த குப்பியை அவள் கைக்கு இடம் மாற்றினாள். 

‘அதுக்கு’ என்று மதி பீதியாய் பார்க்க, “நோ மோர் ஆப்சன். நீ தான் உன் சொந்த யூரினை கலக்ட் செஞ்சி அவகிட்ட தரணும்.’’ என்றாள். “ஏய்… அவளை சும்மா தண்ணில டெஸ்ட் செய்ய சொல்லு…’’ என்றாள் மதி வேகமாய். 

“அந்த அம்மா பார்த்தே கண்டுபிடிச்சிருவாங்க. ஒழுங்கா ரெண்டு பேத்துல எவளாவது யூரின் சாம்பிள் கலக்ட் செஞ்சிட்டு வாங்கடி.’’ என்று அடிக்குரலில் மிரட்டினாள் சங்கரி. 

“ஏய்… எனக்கு வரலடி.’’ என்றாள் மதி அப்பாவியாய். “தண்ணி குடிச்சிட்டு போ. தானா வரும்.’’ என்றாள் சங்கரி விடாப்பிடியாய். 

“இவளுக கூட பிரண்ட்ஷிப் வச்சதுக்கு என்னை என்ன வேலை எல்லாம் பாக்க வைக்குறாளுக. ஸ்டாப் பாத்ரூம்ல வேற தண்ணி வருதான்னு தெரியலையே.’’ என்று புலம்பிக் கொண்டே முன்னால் நடந்தாள். 

என்னதான் தேர்வு எழுதிக் கொண்டிருந்தாலும், இவர்கள் அடிக்கும் கூத்தை சில மீட்டர்கள் இடைவெளியில் நின்று கவனித்து கொண்டிருந்த மகிழால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முயன்று தன் கவனத்தை தேர்வில் திருப்பியவள், “இந்த பக்கிகளோட…’’ என்று மனதிற்குள் உருண்டு, புரண்டு சிரித்து கொண்டிருந்தாள். 

தேர்வென்று வந்துவிட்டால் ரேணு தீயாகிவிடுவாள். ஆக அங்கு நடந்த எதையுமே கண்டு கொள்ளாமல் அவள் கருமமே கண்ணாயிருந்தாள். எப்படியோ சிறுநீர் மாதிரியை சேகரித்து, மதி கொண்டு போய் கொடுக்க, “உன் பேக்ல எப்பவும் சுகர் வச்சி இருப்ப இல்ல. அதை இதுல கொஞ்சம் போடுடி.’’ என்று அவளின் பொறுமையை மிகவும் சோதித்துக் கொண்டிருந்தாள் சங்கரி. 

‘வெளிய வாடி. உன் தலையில ரெண்டு போடுறேன்.’ என்று மனதிற்குள் பொருமி கொண்டவள், அவள் கேட்டபடி சில சர்க்கரை துகள்களை தன் சிறுநீரில் தூவி விட்டு வந்தாள். சங்கரியின் சிறுநீர் பரிசோதனை நீரிழிவு நோயாளியின் முடிவை அப்பட்டமாய் பிரதிபலிக்க, ரதி அவளை பாராட்டி விட்டு சென்றார். 

அன்று மதியம் உணவக சந்திப்பில், “யார் யாரோ எதை எதையோ டொனேட் செஞ்சி இந்த உலகம் பாத்திருக்கும். உலக வரலாற்றில் முதல் முறையா என் யூரினை டொனேட் செஞ்சி… என் நண்பி பாஸாக ஹெல்ப் செஞ்சி இருக்கேன். இதை கண்டிப்பா நம்ம காலேஜ் கல்வெட்டுல செதுக்கி வைக்கணும். முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. பிரண்டுக்கு யூரின் கொடுத்தா பர்தா லேடின்னு. டைமிங்கா, ரைமிங்கா இருக்கு இல்ல லைன்.’’ என மதி மல்லியிடம் கேட்க, அப்போது தான் தண்ணீரை குடிப்பதற்கு வாயில் ஊற்றியிருந்த மகிழ், பக்கென சிரித்ததில் அவள் எதிரே இருந்த ரேணுவின் முகம் மழையில் நனைந்தது போல் ஆனது. 

“எரும மாடுகளா…! படிக்க விடுங்கடி. இன்னும் ஒன் அவர்ல வைவா எங்களுக்கு.’’ என்றவள் கைகுட்டையில் முகத்தை துடைத்து விட்டு மீண்டும் படிக்க துவங்க, “அது வைவா இல்ல மா. வைறேன் வா. அதுக்கெல்லாம் உசிரை கொடுத்து படிக்காத.’’ என மல்லி நக்கல் அடிக்க, மதி இப்போது மல்லிக்கு ஹைபை கொடுத்தாள். 

“இவளுகளோட…’’ என்றபடி சங்கரி சிரித்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தாள். அன்றைக்கும் இவர்களின் உற்சாகத்தை மற்ற மாணவர்கள் வியப்புடன் பார்த்து செல்ல, “மலை ரெண்டா பொளந்து உருண்டு வந்தா கூட… மச்சி சூடா ஒரு டீ சொல்லேன் குரூப்… இன்னும் கிளம்பலையா…?’’ என்றபடி அங்கு வந்து சேர்ந்தான் வேலன். 

“பாருடா… நாங்க டீ சொல்றோம். நீங்க பீர் சொல்வீங்க. அவ்ளோ தானே வித்யாசம். என்னவோ இவர் எல்லாத்துக்கும் பயந்து நடுங்குற மாதிரி.’’ என்று மகிழ் திருப்பி கொடுக்க, “பாய்லர் சூடா இருக்கும்னு தெரிஞ்சும் தொட்டு பாக்குறதே வேலை..’’ என்றபடி வேலனின் அருகில் வந்து அமர்ந்தார் ரஞ்சன். 

அவரை கண்டதும் மகிழ் கொஞ்சம் அமைதி கொண்டாள். “கழுதைகளா… வைவா வச்சிக்கிட்டு கத பேசிட்டு இருக்கீங்களா. சீக்கிரம் போங்க. ரதி மேம் அப்பவே லஞ்சுக்கு கிளம்பிட்டாங்க.’’ என்றார் தகவலாய். 

“போறோம்ணா…’’ என்று மகிழ் எழுந்து கொள்ள, மற்ற தோழிகளும் அவளை பின் தொடர்ந்தனர். மதி அப்போது தான் தயிர் வடை சொல்லலாம் என்று உத்தேசித்து இருக்க, மகிழ் கிளம்பவும் வேறு வழியின்றி தானும் கிளம்பினாள். 

‘வட போச்சா..’ என்ற பார்வையை தோழிகள் பார்த்து கொள்ள, ‘நான் எல்லாம் வாழ்கையே போனா கூட வருத்தப்படாத ஆளு…’ என்ற செய்தியை வெளிக்காட்டும் கம்பீர நடையில் மகிழ் முன்னேறிக் கொண்டிருந்தாள். 

அதே நேரம், ஊற வைத்த சூடான சாம்பார் வடையை ஊதி ஊதி தன் வாயில் போட்டுக் கொண்டிருந்தான் மாறவர்மன். 

பந்தமாகும். 

 

Advertisement