Advertisement

பந்தம் – 12 

மாதிரி செயன் முறை தேர்வுகள் தொடங்கியிருந்தன. அவர்கள் கல்லூரியில் இணைந்து எட்டு மாதங்கள் கடந்திருந்தது. இன்னும் இரண்டு மாதங்களில் பல்கலைகழக பொது தேர்வு தொடங்க இருப்பதால்,  மாணவர்களின் திறன் அறிய மாதிரி செயன் முறை தேர்வுகள் நடந்தப்பட்டது.

மதியும், மல்லியும் மகப்பேறு பிரிவின் செயன்முறை தேர்வில் இருந்தனர். மற்ற மூவருக்கும் அன்றைக்கு தேர்வுகள் கிடையாது. மகிழ் இவர்கள் தேர்வுகள் நடக்கும் இடத்தில் உதவி மாணவியாக உலவிக் கொண்டிருந்தாள். 

மல்லி மிகுத்த பதட்டத்துடன் இருந்தாள். தயார் செய்ய வேண்டிய அனைத்து பொருட்களையும் கர்ப்பிணியின் படுக்கை அருகே தயார் செய்து வைத்தவள், சற்று நடுக்கத்துடனே நின்றிருந்தாள். இவளுக்கு அப்படியே எதிர்பதமாய் மதி எது வந்தால் எனக்கென்ன என்ற தோரணையில் நின்று கொண்டிருந்தாள். 

இவர்களுக்கு இரண்டு படுக்கைகள் தள்ளி பனை மரம் நின்று கொண்டிருந்தான். பொருட்களை அடுக்கவும், பின் கலைக்கவும் என நிதானமின்றி இருந்தான். இன்றைக்கு தேர்வினை  மதிப்பிட போகிற பேராசிரியர் பாகீரதி என்று தெரிந்த கணத்தில் இருந்தே மாணவிகள் அனைவரும் முழு பதட்டத்தில் இருந்தனர். 

மாணவிகளாவது டிப்ளோமோ காலத்தில் இருந்தே மகப்பேறு படித்தவர்கள். அதனால் கொஞ்சம் திடத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் மாணவர்கள், போஸ்ட் பேசிக் வந்த பிறகே மகப்பேறு அறிவியல் படித்தவர்கள். 

அதிலும் பிரசவ வார்டில் பாதி நாட்கள், வேறு ஏதேனும் வேலை இருப்பதாக சொல்லி நழுவி ஓடியவர்கள். அவன் குறுக்கும் நெடுக்கும் நடப்பதை கண்ட மதி, “இன்னைக்கு செத்தான் சேகரு.’’ என்று மல்லியின் காதில் முணுமுணுத்தாள். 

“ஷ்… சும்மா இரு. பாவம் அவர்.’’ என்றாள் கரிசனையாய். ‘இது எப்போல இருந்து.’ என்று மதி கேள்வியாய் பார்க்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல ரதி மேம் வந்துடுவாங்க. ஒழுங்கா எக்ஸாம் எழுது.’’ என்றவள் கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்து தன் முடிவுகளை விடை தாளில் எழுத தொடங்கினாள். 

வேலனுக்கும், மல்லிக்கும் நட்பின் புரிதல் உருவாகியிருந்தது. சங்கம் தொடர்பாக இருவரும் ஒன்றாகவே அலைய வேண்டி வர அவனின் உதவும் மனப்பான்மை மல்லிக்கு பிடித்திருந்தது. அதோடு இவர்கள் எக்ஸ்டர்னல் கிளாஸ் என்று சொல்லப்படுகின்ற மருத்துவர்கள் எடுக்கும் வகுப்பிற்கு செல்லும் போதெல்லாம், இவர்களோடே அந்த வகுப்பை சேர்ந்து கற்கும் இளைய மாணவிகள் பல பிரச்சனைகளை இழுத்து விட, வேலன் அதை சமாளிக்கும் பாங்கில் மானுடம் தெரியும். 

எந்த விழாவை கொண்டாடினாலும், தின்பண்டம் முதல் உணவு வரை, தூய்மைப் பணியாளர்களை முதலில் அழைத்து கொடுத்து விடுவான். பேராசிரியர்கள் மீதம் இருந்தால் கொடுக்கலாம் என்று சொல்வதை எல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான். 

“அவங்களும் மனுசங்க தானேங்க. மிச்சம் இருக்குறதை எல்லாம் கொடுக்க முடியுமா…?” என்று இவளிடமே நியாயம் கேட்டு நிற்பான். இவர்கள் மருத்துவர்கள் எடுக்கும் வகுப்பிற்கு செல்லும் போதெல்லாம், அவர்கள், ‘எங்கள் கழிப்பறையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் வந்து சென்றாலே வகுப்பறை குப்பை கூளமாக உள்ளது.’ இப்படி எதையாவது சொல்லி அவர்களை நோகடித்து கொண்டே இருப்பார்கள். 

மல்லி இந்த குற்றசாட்டிற்கு தலையில் கை வைத்து நிற்கும் போதெல்லாம், ‘சானிடரி வொர்க்கர்ஸ் ஸ்டாப்ஸ் டாய்லெட் யூஸ் செஞ்சா வார்ட்ல எவ்ளோ சண்டை போடுறோம். அதே தான் இப்ப அவங்க நம்ம கிட்ட காட்றாங்க. முதல்ல எல்லாரும் மனுசங்க அப்படிங்கிற தாட் வர வரைக்கும் யாரையும் எதுவும் சொல்ல முடியாது.’’ என்று சொல்லி செல்வான். 

ஒருமுறை இவர்கள் இளைய மாணவி ஒருத்தி, மருத்துவ வகுப்பின் வெளி வராண்டாவில் வாந்தி எடுத்துவிட, அங்கிருந்த மருத்துவ பேராசிரியர், “நீங்க தான் சுத்தம் செஞ்சிட்டு போகணும்.’’ என்று சொல்லி சென்றுவிட்டார். 

உடல்நிலை சரியில்லாத மாணவி தானே தன் வாந்தியை சுத்தம் செய்ய முனைய, அப்போதும் வேறொரு தளத்தில் பணியிலிருந்த தூய்மை பணியாளரை அழைத்து வந்து அந்த மாணவிக்கு ஓய்வு கொடுத்ததும் வேலன் தான். 

மல்லி அப்போதும் தயக்கத்தோடு நிற்க, “நம்ம வாந்தியை கிளீன் செய்ய நாம அவ்ளோ டிக்னிடி பாக்குறோம். ஆனா அவங்க நாம யூஸ் செய்ற டாய்லட்டை கூட அசால்ட்டா கிளீன் செஞ்சிட்டு போறாங்க.’’ என்று விட்டு அகல அந்த வார்த்தைகள் பல நாட்கள் மல்லியின் மனதில் ஒலித்து கொண்டிருந்தது. 

அதன் பிறகு மல்லியும் வேலனை போல, தூய்மை பணியாளர்களுடன் மனிதத்தோடு பழக கற்று கொண்டாள். முன்பு கடிந்து பேசினாள் என்று இல்லை. ஆனால் அவர்கள் நிலையிலிருந்து எதையும் யோசித்து பார்த்ததில்லை. 

அதன் பிறகு ஒரு நாள் எதேச்சையாக அவள் வேலனின் முகநூல் பக்கத்தில் நுழைய முகப்பில், ‘சே’ புன்னகைத்து கொண்டிருந்தார். எப்போதும் வகுப்பறையில் கேலியும், கிண்டலுமாய் திரியும் அவனிடம் இப்படி ஒரு கொள்கை பிடிப்பு இருக்கும் என்று மல்லி எண்ணியிருக்கவே இல்லை. 

அதனால் இப்போதெல்லாம் தோழிகள் அவனை கிண்டல் செய்து பேசும் போதெல்லாம் அதில் அவள் கலந்து கொள்வதில்லை. குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த வேலன் இவள் முன் வந்து நின்றான். 

இவள் என்ன என்று விழி நிமிர்த்தி பார்க்கும் போதே, “என் பேசன்ட்டை கவர் செய்யணும். கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணு மல்லி.’’ என்று இவளிடம் கேட்டான். 

“சரி…’’ என்றவள் தன் இடத்தில் எழுதிக் கொண்டிருந்த விடைத் தாளை வைத்து விட்டு, அவன் கர்பிணிப் பெண்ணின் மேல் போர்வையை போர்த்தி அவளின் பெரிய வயிறு மட்டும் தெரியும் படி செய்தாள். 

இவர்களின் மகப்பேறு செயல் முறை தேர்வில், கர்பிணிப் பெண்கள் நோயாளியாய் வந்தால், மாணவ, மாணவியர், அவர்களின் வயிறை தொட்டுப் பார்த்து குழந்தையின் தலை எப்புறம் உள்ளது. இதய துடிப்பு எங்கே ஒலிக்கிறது. தோராயமான கர்ப்ப காலம் ஆகியவற்றை சொல்ல வேண்டும். மேலும் அவர்களுக்கு இரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றையும் செய்து முடிக்க வேண்டும். 

பொதுவாக மாணவர்களுக்கு கர்ப்பிணி பெண்கள் நோயாளியாய் வந்தால், உடன் பயிலும் சக மாணவியர் அவர்களின் நோயாளிகளை தாயார் செய்து தர அனுமதி உண்டு. (போர்வையை போர்த்தி வயிறை மட்டும் தெரியும் படி செய்வது) 

வேலனின் தேர்வுக்கு ஒதுக்கபட்ட கர்பிணிப் பெண்ணை தயார் செய்து முடித்தவள், மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பினாள். அதே நேரம் பேராசிரியர் மேற்பார்வையிட வருவதாய் தகவல்கள் பறக்க, மாணவர்கள் நேர்நில் நிலைக்கு சென்றனர். 

இப்போது மதியுமே சற்று பதட்டத்துடன் இருந்தாள். தேர்வு அறைக்குள் நுழைந்தவர், முதலில் வேலணை நெருங்கினார். அவர் ஒரு பரிசோதனையை செய்து காட்ட, வேர்த்து கொட்டியபடி அவன் தடுமாறிக் கொண்டிருக்க, அதை அவரே அவனுக்கு அழகாக விளக்கினார். 

“போஸ்டிங் போடும் போதெல்லாம்… அது இதுன்னு சொல்லிட்டு ஓடுறது. அப்புறம் எப்படி மேன் லேர்ன் பண்ணுவ. சரி ட்ரே செட்டிங்க்ஸ் காட்டு. ஹெல்த் எஜுகேசனுக்கு என்ன ப்ளாஷ் கார்ட் வச்சி இருக்க’’ என்றவர் மேலும் சில கேள்விகளை வேலனிடம் கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

அடுத்து அவர் மல்லியை நெருங்க, அவளோ பதட்டத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். “என்ன கேஸ் மல்லிகேஸ்வரி.’’ என்றார் கம்பீர குரலில். “பி.ஐ.எச். மேம்” என்றாள் மல்லி பணிவுடன்.  ( கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நிலை.)

“ஓகே. பீட்டல் ஹார்ட் ரேட் எங்க பார்ப்ப.’’ என்றார். (குழந்தையின் இதய துடிப்பை பார்க்கும் முறை.) குழந்தையின் இதய துடிப்பை பார்க்கும் இடத்தை ஆங்கிலத்தில் விளக்கியபடி, தன் பீடாஸ் கோப்பை (இதய துடிப்பை கண்டறியும் கருவி.) கர்ப்பிணியின் வயிற்றின் மீது வைத்தாள். 

ஆனால் பின்னால் நின்று கொண்டிருந்த அவர் மீது மோதுவதை போல் உணர, மல்லி சுற்றிக் கொண்டு எதிர்புறம் சென்று நின்று மீண்டும் இதய துடிப்பை காண முயன்றாள். அதே நேரம், “இடியட்…’’ என்று கர்ஜிக்க, இவளுக்கு அருகே நின்றிருந்த மதியும் சேர்ந்து பதறிப் போனாள். 

“ஹார்ட் ரேட் லெப்ட் சைட் போய் பார்க்கலாமா…? ஆல்வேஸ் ஸ்டேன்ட் ரைட் சைட் ஆப் பேசன்ட்டுன்னு எத்தனை தடவை சொல்லி இருப்பேன்.” என்றார் முகத்தில் கண்டிப்பை காட்டி. மல்லி அப்படியே தேங்கி நிற்க, சிறிது நேரம் அவளை முறைத்து நின்றவர், “உன் ப்ளாஷ் கார்டை காட்டு.’’ என்றார். 

மல்லி தெளியாத பயத்துடனே அதையும் எடுத்து காட்டினாள். அதன் பிறகு அவர் அங்கிருந்து மதியின் பக்கம் நகர்ந்தார். மல்லி ஒரு பெருமூச்சை விட, நின்ற இடத்தில் இருந்தே, ‘பார்த்துக்கலாம் விடு.’ என்று விழிகளை மூடி திறந்தாள் ரதிக்கு பின் நின்று கொண்டிருந்த மகிழ். 

மதி தனக்கு ஒதுக்கப்பட்ட கர்பிணிப் பெண்ணிடம், “நான் எது சொன்னாலும் நீங்க அதுக்கு ஆமாம் போட்டணும்.’’ என்று ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாள். அவளை நெருங்கிய பேராசிரியர், “டயக்னோசிஸ்” என்றார். 

மதி தெளிவாக, ‘பிரக்னன்சி வித் அனீமியா.’’ என்றாள். (கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை.) தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மகிழிடம், “நீ போய் இந்த பேசன்ட் கேசீட்ல எச்.பி லெவல் பார்த்துட்டு வா.’’ என்று சொன்னதும் மதியின் முகம் வெளுத்து போனது. 

அவள் முன்னர் அவள் எழுதி சமர்ப்பித்து இருந்த நோய்குறியையே இந்த தேர்விலும் எழுத முடிவு செய்திருந்தாள். ஆக லேசாக குறைந்திருந்த இரும்பு சத்தை, இரும்பு சத்து குறைபாடு நோயாக கணக்கில் கொண்டு தன் விடை தாளை எழுதி முடித்து இருந்தாள். 

  

Advertisement