Advertisement

ஒரு வழியாய் ஈசா யோகா மையம் வந்துவிட, அருணை தனியாக அழைத்த மல்லி, “நீ அவரை கூட்டிட்டு கிளம்பு. இன்னும் கோவை குற்றாலம் வரைக்கும் ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிட்டு சுத்தினா… நமக்கு தான் தலை சுத்தும்.’’ என்றாள் நொந்து போய். 

அதை அப்படியே ஆமோதித்த அருண், மாறனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். இவர்களது பயண பொதிகளை வெளியே எடுத்து வைக்கவும், இருவரும் அங்கிருந்து கிளம்பினர். மாறன் வண்டியை திருப்ப பக்க கண்ணாடியை பார்க்க, தோழிகளிடம் விழி விரித்து பேசும் மகிழின் முகம் அவன் பார்வையில் பட்டது. 

‘யப்பா சரியான ராங்கி…’ என்று அவன் மனம் உரைக்க, அருண் மீண்டும் இசை செயலியை இயக்கினான். இம்முறை, “ராங்கி… என்  ராங்கி… ராங்கி… நீ போற என்உயிரை வாங்கி…’’ என்ற பாடல் ஒலித்தது. அப்பாடல்  மாறனின் இதழ்களில் வெகு நாட்களுக்கு பின்பாக ஒரு இலகு புன்னகையை தோற்றுவித்தது. 

“மதி… மகிழ்… நீங்க ரெண்டு பேரும் நம்ம திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போய் கிளாக் ரூம்ல வச்சிட்டு வாங்க. நாங்க மூணு பேரும் கேன்டீன்ல சாம்பார் வடை வாங்கிட்டு, அந்த மரத்தடில வெயிட் பண்றோம். மார்னிங் ப்ரேக் பாஸ்ட் அங்கேயே முடிச்சிக்கலாம்.’’ என்றாள் மல்லி. 

‘சரி’ என்று அவர்கள் இருவரும் முன்னால் செல்ல, மற்ற இருவரையும் அழைத்து கொண்டு மரத்தடிக்கு சென்றவள், இருவரின் முதுகிலும் டின் கட்ட துவங்கினாள். “பிசாசே…! ஏன்டி இப்படி சுள் சுள்னு அடிக்குற. வலிக்குது.’’ என்று இருவரும் அலறிக் கொண்டிருந்தனர். 

“உன்னோட ட்ரைவிங் ஸ்கூல் நாலேஜ் காட்ட… இது தான் நேரமா… ஏன்டி பக்கி உன்கிட்ட தான் ஹெட் செட் இருந்தது இல்ல. உனக்கு பிடிச்ச பாட்டை உன் போன்ல போட்டு கேட்டா ஆகாதா. இருந்த ஒரே ஆப்சன்லையும் ஆசிட் ஊத்தி மூடிட்டீங்களேடி…! உங்களை எல்லாம் கூட்டு சேர்த்துட்டு… ஒரு கொலை கூட உருப்படியா  செய்ய முடியாது.’’ என்று ரேணு, சங்கரி இருவரையும் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தாள். 

அவர்களோ எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் பருத்தி வீரன் கார்த்தி போல, “தெரிஞ்சேவா செய்வாக..’’ என்ற பார்வையை கொடுத்துவிட்டு, கொண்டு வந்திருந்த இட்லியை தட்டில் எடுத்து அடுக்க தொடங்கினர். அதே நேரம் சங்கரி உணவகம் சென்று வடைகளோடு திரும்பி வந்திருந்தாள். 

மதியும், மகிழும் வந்துவிட, ஐவரும் ஒன்றாக அந்த மர நிழலில் அமர்ந்து உணவருந்தினர். மீண்டும் மதி மிளகாய் சட்னியை மல்லியிடம் புகழ, மற்ற மூவரும் கடுப்புடன் மல்லியை முறைத்தனர். 

‘வேணும்னா சொன்னேன்.’ என்ற பார்வையை மல்லி இப்போது கொடுத்து கொண்டிருந்தாள். ஐவரும் உண்டு முடித்ததும், முறைப்படி கோவிலை சுற்றி வந்தனர். தியான லிங்க அறைக்குள் நுழைந்ததும், மற்றவர்களை விட மதி அந்த ஆழ் மௌன நிலைக்குள் மூழ்கிப் போனாள். 

அடுத்து அவர்கள் தீர்த்த குளத்தில் நீராட, அங்கிருந்த நேர்மறை எண்ண அலைகள் அவர்களுக்குள்ளும் ஊடுருவுவதை போல தோழிகள் உணர்ந்தனர். இறுதியில் ஆதியோகியை தரிசித்து விட்டு அவர்கள் வெளியே வரும் போது நேரம் நண்பகலை தொட்டிருந்தது. 

“செம்மையா இருக்கு. இப்படி அடிக்கடி ஒரு டூரை போடுவோம். அந்த தியான மண்டபம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது. எவ்ளோ அமைதியா இருந்தது இல்ல.’’ என்றாள் மதி. மற்ற நால்வரும் கூட அவள் கருத்திற்கு ஒத்திசைத்தனர். 

மதிய உணவை வெளி உணவகத்தில் முடித்தவர்கள், அடுத்து தங்கள் பயணத்தை கோவை குற்றாலம் நோக்கி தொடர்ந்தனர். பேருந்தில் பயணிக்கும் போது மகிழ், “பேசாம அந்த வானரங்களை வெயிட் செய்ய சொல்லி இருக்கலாம். என்ன வாய் தான் கொஞ்சம் அதிகம். ஆனாலும் காலைல கார்ல வந்தது நல்லா இருந்தது இல்ல.’’ என்றாள் கல்மிஷம் இல்லாமல். 

உடனே மல்லி, “அதான் எல்லாரும் பேசிப் பேசியே தொரத்தி விட்டீங்களே. இனி நம்மளை கண்டாலே தெரிச்சி ஓடிடுவாங்க.’’ என்றாள் கடுப்புடன். 

‘இவ இப்ப இந்தப் பக்கம் இல்ல பார்வையை திருப்புவா’ என்று தெரிந்து வைத்திருந்த ரேணுவும், சங்கரியும் உடனே துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு உறங்குவதை போல நடிக்க துவங்கினர். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் கோவைக் குற்றாலம் வந்துவிட, மகிழும் மதியும் சென்று அனுமதி சீட்டை வாங்கி வந்தனர். “இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்காம். வேகமா நடனங்கடி’’ என்று மதி சொல்ல மூவரும் மற்ற இருவரோடு கரங்களை பிணைத்து கொண்டு வேகமாக நடந்தனர். 

சற்று உள் நோக்கி நடக்கவும், பரந்து விரிந்திருந்த வனாந்தரம் அவர்களை, தென்றலுடன் வரவேற்றது. பாதை சற்றே ஓங்கு தாங்காய் மலைப் பாதை போல இருக்க, தோழிகள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக் கொண்டு தங்கள் நடை பயணத்தை தொடர்ந்தனர். 

எங்கிருந்தோ வலசை வந்த பறவைகள் கிளைகளில் இருந்தபடி பண் இசைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த ஒவ்வொரு மரமும், உயரத்திலும், சுற்றளவிலும் சிறு மலைகளை ஒத்திருக்க, மரங்களின் பசும் தலை சூரிய வெளிச்சத்தையே வடிகட்டியிருந்தது. 

ஒரு காட்டிற்குள் நடக்கும் உணர்வை அந்த சூழல் அப்பட்டமாய் தர, இயற்கையை ரசித்த தோழிகள் மெய் மறந்து அந்த கானகத்திற்குள் நடக்க ஆரம்பித்தனர். இன்னும் சற்று உள்ளே சென்றதும் அருவியோன்று ஆர்பரிக்கும் ஓசை இவர்களின் செவி நிறைக்க, இவர்களின் நடை தற்சமயம் ஓட்டம் ஆனது. 

குற்றாலம் போல உயரம் இல்லை என்றாலும், குளித்து அனுபவிக்க கூடிய உயரத்தில் அருவிகள் கொட்டிக் கொண்டிருந்தன. “வாவ்..’’ என்று கூட்டமாய் குரல் கொடுத்தவர்கள், அருவியின் சாரலில் தங்கள் உடலோடு உள்ளத்தையும் குளிர்விக்க ஆரம்பித்தனர். 

ஒருவர் மீது மற்றவர் நீரை வாரி இறைப்பதும், பயந்து நடுங்கிக் கொண்டிருந்த மல்லியை நீருக்குள் இழுத்து விடுவதுமென நீண்ட நேரம் நீருக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். ரேணுவும், சங்கரியும் நீச்சல் அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்க மீன்களை போல அடியாழம் வரை நீந்தி வந்தனர். 

“உங்க மூணு பேருக்கும் நாங்க நீச்சல் சொல்லி கொடுக்கப் போறோம்.’’ என்று சொல்லி மற்ற மூவரையும் வைத்து, “காலை இப்படி உதை… கையை இப்படி துடுப்பு போடு..’’ என்று ஓட்டியெடுத்து கொண்டிருந்தனர். 

இருவரும் தங்களை காலாய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே மற்ற மூவருக்கும் சில நிமிடங்கள் தேவைப்பட, விசயம் புரிந்ததும், மற்ற மூவரும் சேர்ந்து, ரேணுவையும், சங்கரியையும் துரத்தி துரத்தி அடித்தனர்.

இப்படி வேடிக்கையும், விளையாட்டுமாய் அந்த மாலை கழிய அவர்கள் புறப்பட வேண்டிய தருணமும் வந்தது. உடைமாற்றும் அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தவர்கள், அடுத்து ரயில் நிலையம் நோக்கி பயணித்தனர். 

ஒரு நாள். தோழிகளுடன் மட்டுமே கழித்து வந்த ஒரு நாள். அனைவர் மனதிலும் இருந்த சோர்வை நீக்கி அளப்பரிய புத்துணர்ச்சியை தேக்கி இருந்தது. தங்கள் மாப்பிள்ளை பார்க்கும் படலம் தோல்வியில் முடித்ததை கூட , நட்பின் குதூகலத்தில் தோழிகள் புறம் தள்ளியிருந்தனர்.

  

மல்லி ஐவருக்கமான பயண சீட்டை எடுத்து வர, ரேணுவும், சங்கரியும் பெண்கள் பெட்டியில்  இடம் பிடித்து வைத்திருந்தனர். பயண சீட்டை எடுத்து வந்த மல்லி, “எங்கடி அவளுக ரெண்டு பேரையும் காணோம்.’’ என்று இருவரிடமும் விசாரித்து கொண்டிருந்தாள். 

“சாப்பாடு வாங்கிட்டு வரேன்னு போனாளுகடி. இன்னும் காணோம்.’’ என்று கையை பிசைந்தாள் சங்கரி. அதே நேரம் ரயில் புறப்படுவதற்கான நீண்ட சங்கு முழங்கியது. “இவளுகளோட…’’ என்று கடுப்பான மல்லி வாயிலில் நின்று எட்டிப் பார்க்க துவங்கினாள். 

அடுத்தடுத்து அறிவிப்பு ஒலிக்க, இரண்டாம் நிமிடம் ரயில் மெதுவாக நடை மேடையில் இருந்து நகர துவங்கியது. இப்போது மற்ற இருவரும் கூட பதட்டம் கொண்டனர். மூவரும் வாயிலில் வந்து நிற்க, வேக வேகமாக நடை பாதையில் ஓடி வந்த மதியும், மகிழும் முதலில் தங்கள் கையில் இருந்த பொட்டலங்களை தோழிகளிடம் கொடுத்தனர். 

பின்பு அவர்களும் ஓடி வந்து ரயில் ஏற, தோழிகள் கை கொடுத்து உதவினர். “லூசாடி நீங்க. இந்த ட்ரைனை மிஸ் செஞ்சா அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு நமக்கு ட்ரைன் இல்ல தெரியுமா..?’’ என்று கத்த தொடங்கினாள் மல்லி. 

“ஏன் இப்ப டென்சன் ஆகுற. அதான் இந்த குண்டான் சட்டியவே உருட்டிட்டு வந்து ஏறிட்டோம்ல. சிக்கன் ரைஸ் சூடா போட்டு தரேன்னு சொன்னான். அதான் வெயிட் செஞ்சி வாங்கிட்டு வந்தோம். சோறு முக்கியம் பாஸ்.’’ என்றவள் தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தாள் மகிழ்.

அதுவரை மதியையும், மகிழையும் முறைத்து கொண்டிருந்த ரேணுவும், சங்கரியும் ‘சிக்கன் ரைஸ்’ என்ற வார்த்தையில் குளிர்ந்து, மற்ற இருவரிடமும் பல்லை காட்டினர். நால்வரும் ‘ஹை பை’ கொடுத்து கொள்ள மல்லியின் இதழ்களும் சிரிப்பில் மலர்ந்தது. 

“வாழ்கையில ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். ஒன்னு நம்ம நிம்மதி. இன்னொன்னு சோறு. ரெண்டையும் எதுக்காகவும் விட்டு கொடுக்க கூடாது.’’ என்ற மகிழ் உணவு பொட்டலத்தை பிரிக்க, அவள் முகத்தையே அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி. 

அதே நேரம் அருணிடம், “ஊருக்கு வந்த உன் பிரண்ட்ஸ் கிளம்பிட்டாங்களா…?’’ என கேட்டுக் கொண்டிருந்தான் மாறன். அவர்கள் ஒன்றாய் தங்கியிருந்த அறையில் இருந்த தொலைக்காட்சியில், ‘ராங்கி… என் ராங்கி..’ பாடல் ஒலித்து கொண்டிருந்தது. 

பந்தமாகும். 

       

   

Advertisement