Advertisement

பந்தம் – 11 

என்றைக்கு மல்லி, மகிழின் கதையை முழுமையாக கேட்டாளோ அன்றைக்கே மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டாள். அவளின் வாழ்வை சீராக்க தன்னால் முயன்றதை செய்ய வேண்டும் என்று. 

அடுத்த இரண்டு நாட்களில் மற்ற தோழிகளோடு ரகசிய கூட்டம் அமைத்தவள், மகிழின் வாழ்வு குறித்து அவர்களுக்கு தெரிவிக்க, அது தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றனர் குனிந்த தலையை நிமிர்த்தாமல். 

அவளுடனே பணிபுரிந்திருந்த மதிக்கு விஷயம் தெரிந்திருக்க, அவள் ரேணுவிடமும், சங்கரிக்கும் மேலோட்டமாக சொல்லியிருந்தாள். மல்லி சின்ன சின்ன விசயங்களுக்கு துவண்டு விடுவாள் என்பதால் அவளிடம் மட்டுமே உண்மை மறைக்கப்பட்டிருந்தது. 

தோழிகளை அழுத்தமாய் பார்த்தவள், “சரி…! அவ லைப் அப்படியிருக்கு. இனி இதுல நாம என்ன செய்யப்போறோம். மத்தவங்க மாதிரி நாமும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கப் போறோமா.’’ என்றாள் காட்டமாய். 

“அடியே…! இதுல நாம என்னடி செய்ய முடியும். அவங்க வீட்ல தான் ஏதாவது பார்த்து செய்யணும். அவங்களே எதுவும் யோசிக்காம இருக்கும் போது, நாம என்ன செய்ய முடியும். இது வாழ்க்கை பிரச்சனை. ஈசியா எந்த முடிவும் எடுக்க முடியாது.’’ என்றாள் மதி நிதர்சனத்தை இயம்பும் வேகத்துடன். 

“அப்படியெல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது. அவ என்ன தப்பு செஞ்சா அவ வாழ்கையை வாழாம போக. அவளைப் பத்தி யார் யோசிக்கிறா… யார் யோசிக்கலை அதெல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் யோசிப்பேன் அவ்ளோ தான்.’’ என்றாள் மல்லி வீராப்புடன். 

“சரிடி…! அதுக்கு நாம என்ன செய்ய முடியும்னு சொல்ற.’’ என்றாள் சங்கரி இருவரையும் சமாதானப்படுத்தும் விதத்தில். 

“நேத்து நைட் முழுக்க யோசிச்சு பார்த்துட்டேன். மகிழ் மாதிரி இந்த உலகத்துல எத்தனையோ பாதிக்கப்பட்ட மகிழன் இருப்பாங்க. அதாவது பொண்ணுங்களும் பசங்க மனசை உடச்சிட்டு இப்ப எல்லாம் ஈசியா கல்யாண வாழ்கைக்கு டாடா காட்டிட்டு போயிடுறாளுக. அந்த மாதிரி பாதிகப்பட்ட மனுசனை தேடி பிடிச்சி ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கணும். அதுக்கு அப்புறம் இதயத்தை கம் போட்டு ஒட்டிகிறதோ இல்ல, உடஞ்சே இருக்கட்டும்னு ஓரமா போறதோ அது அவங்க சாய்ஸ். பட் மீட் செய்ய வைக்குறது நம்ம கடமை.’’ என்று மல்லி நீண்ட உரையாற்ற மதி அவளை சந்தேக கண் கொண்டு பார்த்தாள். 

“நீ சொல்றத பார்த்தா… மாப்பிள்ளை தேட போறவ மாதிரி தெரியலையே. ஆல்ரெடி தேடிட்டு வந்து எங்களுக்கு ஜஸ்ட் இன்பர்மேசன் கொடுக்குற மாதிரி இல்ல இருக்கு.’’ என்று சரியாக நடப்பை கணித்தாள். 

“நீ சரியான கேடி. நம்ம பேட்ச் அருண் தெரியும் இல்ல. சங்க பிரச்சனை அது இதுன்னு அப்பப்ப எனக்கு போன் பண்ணுவான். அவன் கூட வொர்க் பண்ற அவன் சீனியர் கதையை ஒரு மூணு மாசம் முன்னாடி ரொம்ப பீல் செஞ்சி சொல்லிட்டு இருந்தான். அந்த மனுஷன் ரொம்ப நல்லவராம். லவ் மேரேஜ் தான். பொண்ணு நம்ம பீல்ட் தான். ஆனா கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல, அவங்க தம்பி படிப்புக்கு இவர் செலவு செஞ்சதை எல்லாம் கணக்கு கேட்டு இருக்கும் போல. சின்ன சின்ன சண்டை பெருசா வெடிச்சி… கடைசியா டிவோர்ஸ் வரைக்கும் போயிடுச்சாம். இப்ப அந்த பொண்ணு அவங்க மாமா பையனை கட்டிக்கிட்டு நிம்மதியா இருக்காம். இந்த மனுஷன் பாவம்… வாழ்வே மாயம் கமல் மாதிரி வாழ்கையில பிடிப்பே இல்லாம சுத்திட்டு இருக்காராம்.’’ என்று அவள் கதை சொல்லி முடிக்க, மற்ற நால்வரும் கன்னத்தில் கை வைத்து அவளிடம் கதை கேட்டு கொண்டிருந்தனர். 

“சரிடி… அந்த தாடிக்கும் நம்ம கேடிக்கும் நாம எப்படி கனக்சன் கொடுக்க முடியும், ஹவ்.. நாம சேலத்துல இருக்கோம். அருண் கோயம்புத்தூர்ல இல்ல வேலை பார்த்துட்டு இருக்கான்.’’ என்று தன் சந்தேகத்தை முன் வைத்தாள் மதி. 

“அதுக்கு தான் கோயம்பத்தூருக்கு ஒரு டூரை போடப் போறோம். நமக்கு தியரி மாடல் எக்ஸாம் முடிஞ்சதும் ரெண்டு நாள் லீவ் வருது. அந்த டைம்ல எக்ஸாம் டென்சன் அது இதுன்னு சொல்லி ஒன் டே கோயம்பத்தூருக்கு ஒரு ட்ரிப் ப்ளான் செய்றோம். அருணை அவன் காரை எடுத்துட்டு நம்மளை வந்து பிக் அப் செய்ய சொல்றேன். கூட மாறன் அண்ணாவையும் எதாச்சும் பொய் சொல்லி தள்ளிட்டு வர சொல்றேன். ரெண்டு பேரும் பர்ஸ்ட் மீட் செய்யட்டும். அவங்க ரெண்டு பேர் ரியாக்சன் பார்த்துட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு செய்யலாம்.’’ என்றாள் மல்லி. 

ரேணு உடனே, “கோயம்பத்தூரா… சரி சரி  என்னை ஈசா யோகா மையமும், கோவை குற்றாலமும் கூட்டிட்டு போறதா இருந்தா நான் வறேன்.’’ என்றாள் தன் சம்மதத்தை தெரிவிக்கும் நோக்கில். 

“ஊர் சுத்தி…’’ என்று அவள் தலையில் லேசாக தட்டிய சங்கரி, “சரி போலாம். போய் பார்க்கலாம். நானும் எங்க வீட்டுக்காரர்கிட்ட டூர் போறோம்னு சொல்லிட்டு வறேன். இனியாவது மகிழ் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா சரி.’’ என்றாள். 

இப்படி தோழிகள் நால்வரும் முன் கூட்டியே திட்டமிட்டு தான் மகிழை அங்கு அழைத்து வந்திருந்தனர். என்ன தான் கதையடித்து அழைத்து வந்திருந்தாலும், ரயில் நிலைய நடைபாதையில் நடக்கும் போதே நால்வருக்கும் பதட்டம் அதிகரித்தது. 

இவர்கள் பயணித்த ரயில் வேறு முக்கால் மணி நேரம் தாமதமாகியிருக்க, அருண் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மல்லிக்கு அழைக்க முயன்று கொண்டிருந்தான். ஆனால் ரயில் நிலையம் வந்து அடையும் வரை அவள் அலைபேசியோ தொடர்பு எல்லைக்கு அப்பாலே இருந்து விட்டிருந்தது. 

ஒருவழியாய் தோழிகள் ஐவரும் ரயில் நிலையத்தின் பின்பக்க வாயிலை அடைந்து, அருணின் மகிழுந்தை அடையாளம் கண்டு அருகில் செல்லும் போது, அவர்களை வரவேற்றது முகத்தை இறுக்கமாய் வைத்திருந்த மாறவர்ம பாண்டியன் தான். 

“ஏங்க… ட்ரைன் லேட்னா இன்பார்ம் செய்ய மாட்டீங்களா. இதுல வேற வர எல்லாரும் பொண்ணுங்கன்னு இப்ப தான் சொல்றான். ஊர் விட்டு ஊர் வறீங்க. தகவல் சொல்றதுக்கு என்ன…?’’ என்று முன்னால் நின்று கொண்டிருந்த மல்லியிடம் எகிறினான். 

“நூறு சுந்தரை சேர்த்த கலவை மாதிரி இருக்காரே…’’ என்று மல்லி மனதிற்குள் அரண்டு போய் அவனை பார்த்து கொண்டிருக்கும் போதே, அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மகிழ், அவளை பின் இழுத்து தான் முன்னால் வந்து நின்றாள். 

“ஏன்… பொண்ணுங்கன்னா உங்க ஊர்ல காக்கா வந்து தூக்கிட்டு போயிருமா…?’’ என்று வெகு அலட்சியமாக கேட்டாள். மற்ற நால்வரும், ‘போச்சுடா…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொள்ள, மல்லி ஓரமாய் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த அருணை முறைத்தாள். 

மகிழ் தன்னை ஏதேனும் சொன்னால் கூட அமைதியாக இருந்து விடுவாள். ஆனால் அவள் தோழிகளிடம் யாராவது வம்பு பேசினால் அவர்களை உண்டு இல்லை என்று செய்த பிறகே ஓய்வாள். 

இப்போதும் அப்படித் தான். வர்மன் நேரடியாக மல்லியிடம் எகிற, அது மகிழிடம் எதிரொலித்துவிட்டது. அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பதை இறுகிய அவன் முகமே எடுத்து காட்ட, “காக்கா தூக்கிட்டு போற அளவுக்கு ஒல்லி பெல்லியாவா இருக்கோம். ஹி.. ஹி… உனக்கு எப்பவுமே காமெடி தான் மகிழ். மாஸ்டர் நாங்க வர லேட் ஆகும்னு நான் அருணுக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே மெசேஜ் செஞ்சேன். ஆனா ட்ரைன்ல வரும் போது சிக்னல் கிடைக்காம அந்த மெசேஜ் டெலிவரி ஆகல. சரி சரி டைம் ஆச்சு. கிளம்புவோம்.’’ என்றவள் வேக வேகமாக பயணப் பொதிகளை மகிழுந்திற்குள் இடம் மாற்ற துவங்கினாள். 

அருணும் அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று பின்னால் வர, மாறன் தன் ஓட்டுனர் இருக்கையை தேடி நடந்தான். போகும் முன் மகிழை பார்த்து முறைத்துவிட்டே நடந்தான். இவளும் தன் வழமை போல புருவத்தை ஏற்றி இறக்கி தோள்களை குலுக்கினாள். 

‘சரியான திமிர் பிடிச்சவ போல…’ என்று அவன் மனதிற்குள் சொல்லிக் கொள்ள, மகிழும், ‘சரிதான் போடா…’ என்பது போன்ற ஒரு பார்வையை திருப்பி கொடுத்து கொண்டிருந்தாள். 

‘ஆரம்பமே சறுக்கிடுச்சே’ என்பதை போல தோழிகள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அருண் கொண்டு வந்திருந்தது இனோவா வகை மகிழுந்து. ஆக பின்னால் ஐவருக்கும் இடம் தாராளமாகவே இருந்தது. 

சங்கரி அப்போது தான் மகிழுந்தை இயக்க பயிற்சி பெற்று கொண்டிருந்தாள். அவள் ஆவலாக அந்த வாகன இயக்கத்தை எட்டிப் பார்த்தபடி, “இது பவர் ஸ்டியரிங் தானே ப்ரதர்.’’ என்று தன் விசாரணையை துவக்கினாள். 

“ஆமாம் மா. எலக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங்.’’ என்று சொல்ல, சங்கரி வாகனம் குறித்த தன் சந்தேகங்களை தொடர்ந்து கேட்க, மாறனும் எளிமையாக விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தான். 

சங்கரி உடனே, “நானும் ட்ரைவிங் கிளாஸ் போயிட்டு இருக்கேன் ப்ரோ. எங்க வீட்லயும் இன்னோவா தான் வாங்கப் போறோம். கார் வாங்குனதும் என் பிரண்ட்சை கூட்டிட்டு ஜாலியா ஒரு ஹில் ஸ்டேசனுக்கு டூர் போயிட்டு வரணும்.’’ என்றாள் கண்களில் கனவுகள் மிதக்க. 

“ஹில் ஸ்டேசன் போறது எல்லாம் சரி. ஆனா நீங்க காரை ட்ரைவ் செஞ்சிட்டு போகாதீங்க. ப்லைன்ஸ்ல கூட பொண்ணுங்க ஈசியா கார் ஓட்டிடலாம். ஆனா ஹில் ஸ்டேசன் ட்ரைவிங் அவ்ளோ சேப் இல்ல. நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்க ஆளை கூட கூட்டிட்டு போயிட்டு வாங்க.’’ என்றான் மாறன். 

அவன் என்னவோ எதார்த்தமாக சங்கரியின் நலம் கருதி தான் சொன்னான். ஆனால் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த மகிழ் அதை பதார்த்தமாக புரிந்து கொண்டாள். ஆண்களிடம் இயல்பாகவே அடக்கி ஆளும் குணமே மிகுத்திருக்கிறது என்பதை வாழ்ந்து பார்த்து அறிந்தவள் ஆகையால் மாறனின் வார்த்தைகள் அவளுக்குள் கனலை மூட்டியது. 

“ஏய்…! எல்லாம் உன்னால முடியும்டி. எந்த காலத்துல இருக்கோம் நாம. பொண்ணுங்க இப்ப பிளைட் மட்டும் இல்ல ராக்கெட் ஓட்டிட்டு இருக்காங்க. ஆப்டர் ஆல் ஒரு காரை ஓட்ட முடியாதா..?’’ என்றாள் மாறனை நக்கலாக பார்த்து கொண்டே. 

‘இவளோட…’ என்று பற்களை கடித்த மாறன், தன் கோபத்தின் அழுத்தத்தை ஆக்சிலேட்டரில் காண்பிக்க வண்டி நூற்றி இருபது கிலோமீட்டர்கள் வேகத்தில் பறந்தது. சங்கரி எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை போல தலையை குனிய, ‘வாய திறந்து வம்பை விலைக்கு வாங்கிட்டு… நானா பேசினேனு குனிஞ்சிட்டா சரியான குந்தாணி. இவளை…’ மல்லி அவளை முறைத்து கொண்டிருந்தாள். 

ரேணுவோ, “கார்ல மியூசிக் சிஸ்டம்  இருந்தா ஆன் பண்ணுங்க ப்ரோ.’’ என்று அடுத்த வில்லங்கத்திற்கு அடி போட்டாள். மகிழுந்தில் இருந்த இசை செயலியை மாறன் இயக்க, முதல் பாடலாய், “பெண்கள் கையில் சிக்கும் ஆண்கள் எல்லாம் பாவம்…’’ என்று பாதியில் நின்றிருந்த பாடல் அதி வேகமாய் ஒலித்தது. 

இப்போது மாறன் ஒரு குறுஞ் சிரிப்புடன் வாகனத்தை இயக்க, மகிழிற்கு ரத்த அழுத்தம் எகிற தொடங்கியது. முன்னால் இருந்த அருணை அன்பாய் அழைத்தவள், “ப்ரோ… உங்க மியூசிக் சிஸ்டத்தை ப்ளூ டூத்ல கனக்ட் செய்ய முடியுமா…?’’ என்று சாந்தமாக கேட்டாள். 

அவனும் முடியும் என்று சொல்ல, தன் அலைபேசியை இசை செயலியுடன் இணைத்தவள், “ஏ… வந்தவனும் சரியில்ல.. வாய்ச்சவனும் சரியில்ல ஒருத்தனையும் நம்ப முடியல அடி ஆத்தி…’’ என்ற தெம்மாங்கு பாடலை ஒலிக்க விட்டாள். 

அது குடிக்கும் ஆண்களை திருந்த சொல்லும் நாட்டுப்புற பாடல். அதே நேரம் ஆண்களின் இயல்புகளை கிழித்து காயப் போடும் பாடல். இப்போது மகிழ் நக்கலாய் புன்னகைக்க, இசையை நிறுத்திய மாறன், வண்டியை இன்னும் வேகமாய் செலுத்த துவங்கினான். 

“ஐயோ… நமக்கு இந்த சோடி சேக்குற வேலை எல்லாம் தேவையா. நான் கஷ்டப்பட்டு வளர்ந்த என் தொப்பையை ஒரே நாள்ல பிதுக்கி எடுக்காம விட மாட்டாளுக போல. யா அல்லா… என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்துங்க.’’ என்று வேண்டுதல் வைத்தபடி மதினா வர, ‘டோடல் டேமேஜ். என்னோட மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்டாளே.’ என்று நொந்து போய் மகிழை பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி. 

Advertisement