Advertisement

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்

மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்

9. அகலிகை சாபம் நீங்கப் பெறுதல்

விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்கள், மறுநாள் காலை அவரவர் நித்யகர்மாக்களை முடித்து கிளம்பி மிதிலை நகரை சமீபித்தனர். ஜனக மன்னரின் நகரமான மிதிலையின் அழகிய நேர்த்தியான தோற்றத்தை  குறித்து, ரிஷிகள் வியந்து பாராட்டினர். ராமர் அங்கே  மனித சஞ்சாரமில்லாத ஆஸ்ரமம் இருப்பதை பார்த்து விஸ்வாமித்திரிடம், “இந்த அழகிய ஆசிரமம் யாருடையது? ஏன் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது?”, என்று விபரம் கேட்டார்.

“ரகு வம்சத்தில் உதித்தவனே! இது தேவர்களாலும் வணங்கப்பெற்ற மிகச் சிறப்பு பெற்ற கௌதமர் என்ற ரிஷியினுடைய ஆஸ்ரமம். ஒரு சாபத்தின் காரணமாக இப்படி அரவமற்று காணப்படுகிறது. அது குறித்து இன்னமும் சொல்லுகிறேன் கேள்” என்று கூறி பின் வருமாறு தொடர்ந்தார்.

“கடுமையான தவங்கள் புரிந்த தவ ச்ரேஷ்டரான கௌதமரிஷி, ஒரு முறை நீராடி நித்யகர்மாக்களை செய்யவென விடியலில் ஆற்றங்கரைக்கு செல்ல, நேரம் பார்த்து காத்திருந்த இந்திரன் கௌதமரின் உருவத்துடன் அவரது ஆசிரமம் வந்தான். அங்கிருந்த அகலிகையைப் பார்த்து, “காமவயப்பட்டவர்கள் நேரம் காலம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள், நாம் இப்போதே கலவியில் ஈடுபடுவோம்” என்று கூறினான்.

கௌதம முனிவர் ஒருநாளும் அவ்வாறு பேசமாட்டார் என்பதை உணர்ந்த அகலிகை, வந்திருப்பது தேவேந்திரன் என்பதை அறிந்து, அப்சரஸ்கள் இந்திராணி முதலானவர்களை அதிபனாக கொண்ட இந்திரனே தன் மேல் வயப்பட்டு வந்திருக்கிறான் என்ற விஷயம் துரதிருஷ்ட வசமாக, அவளுக்கு கர்வத்தோடு பேருவகையும் அளித்தது. இந்திரனுக்கு அகலிகை உடன்பட்டு, அவன் வேண்டி வந்த காரியம் முடிந்தபின், “தேவேந்திரா! மகரிஷி வருவதற்கு முன் இங்கிருந்து போய்விடு, உனக்கும் எனக்கும் கெடுதி நேராவண்ணம் உடனடியாக ஜாக்கிரதையுடன் கிளம்பிச் சென்றுவிடு” என்றாள்.

இந்திரனும், “நான் மிகுந்த சந்தோஷமடைந்தேன், வருகிறேன்” என்று அகலிகையிடம் விடைபெற்று சென்றான். ஆனால், வழியில் அவனை கௌதம முனி பார்த்துவிட, நொடியில் அவனது முக பாவத்திலிருந்து அவன் செய்த பஞ்சபாதகச் செயல், பெரும் தபஸ்வியான அவருக்கு தெரிந்துவிட, “துர்புத்தி கொண்டவனே, என் உருக்கொண்டு செய்யக்கூடாத பாவத்தை செய்தவனே, நீ இனி ஆண்மையற்றுப்போவாய்” என்று சபித்தார். இந்திரனுக்கு அவ்வாறே ஆனது.

தனது மனைவியான அகலிகையைப் பார்த்து, “அன்னாகாரமின்றி, காற்றை புசித்து யார் கண்களுக்கும் தெரியாதவளாக இங்கேயே நெடுங்காலம் விழுந்து கிடப்பாய். நடத்தை சுத்தமில்லாதவளே, வருங்காலத்தில் தூயவனான ராமன் வரும்வரை இப்படியே மண்ணோடு மண்ணாக புழுதியாய் கிடப்பாயாகுக. அவர் சம்பந்தத்தால் உனது பாபம் தொலையும், மனம் சுத்தமாகும், அப்போது உன்னை யாம் ஏற்போம்” என்று சபித்தார்.

[ ஒழுக்கக்கேடான விஷயத்திற்கு கணவர் மனைவிக்கு கொடுத்த தண்டனை இவ்வளவே, இன்றைய காலம் போல கள்ளக்காதல் கொண்ட / காதலை ஒப்புக்கொள்ளாத / வேறு இனம் மதம் ஜாதி கொண்டவனை கைபிடித்ததற்காக…. என்ற காரணங்களுக்கு ஒரு உயிரை எடுக்கும் பாவச் செயலை அன்று செய்யவில்லை. காரணம் கொலை (முக்கியமாக பெண்வதம்) பெரும் பாவமாக கருதப்பட்டது. இப்போது பெண்ணாக பிறப்பதே பெரும் பாவம் என்றானது. சரி அதை சொல்லி மாளாது, என்பதால் விட்டு விடுவோம். அத்தனை தூரம் போவானேன்? ஒரு விவாகரத்து கூட இல்லை. (என் அறிவுக்கு எட்டியவரை இந்து மதத்தில் விவாகரத்து இருப்பதாக தெரியவில்லை, வானப்ரஸ்தம் போகும்போது கூட மனைவியையும் உடன் அழைத்துச் செல்லும் வழமை இருந்தது. தவமியற்ற போனால் கூட மனைவியுடன் செல்லும் வாடிக்கையும் இருந்தது, இது விஸ்வாமித்திரர் கதையைப் பார்க்கும்போது புலனாகும்).

கௌதமரிடம் சாபம் பெற்ற இந்திரன், அக்னி முதலான தேவர்களின் உதவியுடன், அவரது சாபத்திலிருந்து ஒருவாறு விடுபட்டான் என்றார் விஸ்வாமித்திரர். [இந்திரனின் உடல் முழுவதும் பெண் உறுப்பாக (யோனியாக) ஆகக்கடவது என்று கௌதமர் சபித்தார், பின் தேவர்கள் உதவியோடு அதிலிருந்து மீண்டும் என்றும் சொல்லப் படுகிறது]

“ராமா! வா, அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து அகலிகையின் சாபத்தை நிவர்த்தி செய், அவளது நிஜ உருக்கொண்டு கௌதமருடன் சேர நேரம் வந்துவிட்டது” என்றார்.

தேவ, கந்தர்வ, யக்ஷ, மானுட, அசுரர்களின் கண்களுக்கு புலப்படாமல் எவர் பார்வைக்கும் தெரியாமல் நீண்ட நெடும் காலமாக செய்த தவறினை எண்ணி வருந்தி தவம் செய்து கொண்டிருந்த அகலிகை, ராமர் திருவடி பட்டதும் அவளது சுய வடிவம் பெற்றாள்.

ராமரைக் கண்டு அகமகிழ்ந்து மனத்தூய்மையுடன் குற்றம் நீங்கப் பெற்றவளாக அகலிகை இருக்க, ராமலக்ஷ்மணர்கள் அவளது பாதம் பணிந்து நமஸ்கரித்து அவளை மேன்மைப் படுத்தினர். அப்போது அங்கே தோன்றிய கௌதமர் அகலிகையை மனைவியாக ஏற்றுக் கொண்டார். கௌதம ரிஷியின்  விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொண்ட ராமர், மகரிஷிகளோடு மிதிலை நகருக்கு புறப்பட்டார்.

மிதிலை நகரை அடைந்து அங்கு ஜனக மகாராஜாவின் யாகசாலை அருகே தங்குவதற்காக  அவர்கள் யோசனை செய்யும்போது, விஸ்வாமித்திரர் முதலான ரிஷிகள் தனது யாக சாலையில் இருப்பதைக் கேள்வியுற்ற ஜனகர், சதானந்தர் என்ற பெயருடைய தனது தலைமை புரோகிதரருடன் வந்து, விஸ்வாமித்திரர் முதலானோர்க்கு தக்க மரியாதை செய்தார். ஜனகருடன் வந்த சதானந்தர், அகலிகை மற்றும் கௌதமரின் புத்திரர் ஆவார்.

ஜனக மன்னரது மரியாதைகளைப் பெற்ற விஸ்வாமித்திரர் அவர்களை ஆசீர்வாதம் செய்தார். பின்னர் ஜனகர், “ரிஷிகளுள் மேன்மை பொருந்தியவரே! உங்கள் தரிசனம் கிடைத்ததால், இப்போதே எனக்கு யாகம் முடிந்து பலனைப் பெற்றுவிட்ட திருப்தி கிடைத்தது, எனினும் யாகம் பூர்த்தியடைய இன்னும் பனிரெண்டு நாட்கள் உள்ளன. தாங்கள் இருந்து யாகத்தை நிறைவு செய்ய வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

பின்னர் ஜனகர் விஸ்வாமித்திரரின் அருகிலிருந்த அரசகுமாரர்களைப் பார்த்து, “சூரியனைப் போல் ஜொலிக்கும் தேஜஸுடன், யானையின் நடை, சிங்கத்தின் கம்பீரம், வேங்கையின் வீரம் கொண்ட இவர் யார்? அக்னியின் அம்சத்தில் உதித்த சிவ புதல்வனான அறுமுகனோ?  என்னையும் என் நாட்டையும் உய்விக்க வந்தருளச் செய்தனரோ? தேவர்கள் போல் இருக்கும் இவர் யார்?” என்று விஸ்வாமித்திரரைப் பார்த்து கேட்டார்.

அப்போது அவர், “இவர்கள் தசரத சக்ரவர்த்தியின் குமாரர்கள். ராக்ஷஸர்களை அழித்து என் யாகம் காத்து நின்றவர்கள். அகலிகைக்கு புனர் ஜென்மம் கொடுத்த ராமன், உன்னிடமிருக்கும் மேன்மையான வில்லை ஒரு முறை பார்க்கவேண்டுமென்று ஆவலுடன் இருகின்றனர்” என்று ஜனகரிடம் தெரிவித்தார்.

அகலிகை குறித்து கேள்விப்பட்டவுடன், ஜனகரின் அருகே நின்ற சதானந்தர், “அப்படியா! ராமரின் புண்ணியத்தால் என் அன்னை அகலிகை தந்தையோடு சேர்ந்து விட்டாரா? என் அன்னையின் கதை முழுமையாக தங்களுக்கு சொல்லப்பட்டதா? தாயார் சுய உருவைப் பெற்று தங்களுக்கு உண்டான பணிவிடை செய்தாரா? சற்று விபரமாக சொல்லுங்கள்” என்று கௌதம அகலிகையின் புதல்வரான சதானந்தர் கேட்க…

விஸ்வாமித்திரர் நடந்த அனைத்தையும் விபரமாக கூறி, “அனைத்தும் சுபமாய் முடிந்தது,  ஜமதக்கினியின் சதியான ரேணுகாதேவி எங்கனம் பூஜைக்குரியவரோ, கௌதமரின் அகலிகையும் இனி பூஜைக்குகந்தவரே, தர்மத்தை வழுவாது நிற்கும் பேறு அவர் அடைந்தார்”  என்று சதானந்தரிடம் விஸ்வாமித்திரர் கூறினார்.

சதானந்தர், ராமரைப் பார்த்து, “மற்றவர்களால் செய்யமுடியாத காரியங்கள் உங்களால் ஆனது. நீங்கள் வந்தது எங்கள் நன்மைக்கே. பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரரின் அடியொற்றி நடக்கும் நீங்கள் அவரது பராக்ரமமான சரிதத்தை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும், சொல்கிறேன் கேளுங்கள்”,  என்று கூறி விஸ்வாமித்திரரின் வரலாற்றை எடுத்தியம்ப ஆரம்பித்தார்.

ஜெய் ஸ்ரீ ராம்



Advertisement