Advertisement

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்

செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்

வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்

அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

8. பாற்கடல்

அன்றைய தினம் முடித்து மறுநாள் அவர்கள் ஓடத்தில் ஏறி கங்கையின் வடகரையை அடைந்தனர். அவர்களுக்கு உதவியாய் வந்த ரிஷிகளை அனுப்பி வைத்துவிட்டு கங்கைக்கரையில் சிறிதுநேரம் அமர்ந்து இளைப்பாறினார். அப்போது ராமர் விஸ்வாமித்திரரை வணங்கி, “இந்த விசாலையின் மகிமையையும் இதை ஆளுகின்ற ராஜவம்சம் குறித்தும் கேட்க விரும்புகிறேன்”, என்றார்.

“இங்கே நடந்த இந்திரன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வை சொல்கிறேன். அதற்குமுன் க்ருதயுகத்தில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லி அதன் பின் இந்திரனின் வரலாற்றையும் கூறுகிறேன் கவனித்துக் கேள்.”, என்று விஷ்வாமித்திரர் விசாலை குறித்து அறிய விரும்பிய ராமருக்கு பதில் சொன்னார்.

“காசியபர் ரிஷிக்கு திதி, அதிதி என இரு மனைவியர். திதியின் புத்திரர்கள் மகா பலம் பொருந்தியவர்கள், அதிதியின் புத்திரர்கள் தர்மவான்கள். ஒரு சமயத்தில் அவர்கள் பிறப்பு, இறப்பு, நோய், கவலை, மரணம் ஆகிய தொல்லைகளிலிருந்து விடுபட்டு நீடித்திருக்கும் வழியை யோசித்து பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமிர்தத்தை எடுத்து பருகி சாகாவரம் பெற நினைத்தனர்.

எனவே மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற நாகத்தை கயிறாகவும் உபயோகித்து பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். நெடுங்காலம் கடைந்தபின், பாற்கடலிலிருந்து மூவுலகையும் அழிக்கவல்ல ஆலகாலம் என்ற கொடிய விஷம் வெளிப்பட்டது. அது அக்னியைப் போல ஜொலித்துக் கொண்டு அருகில் இருந்த தேவர்களையும் மனிதர்களையும் லோகங்களையும் எரிக்க ஆரம்பித்தது. திதி மற்றும் அதிதியின் புதல்வர்கள் அந்த விஷத்தின் வாடையைக் கூட தாங்கமுடியாமல் சர்வேஸ்வரனை சரணடைந்தனர். “இந்த ஆலகாலத்தில் இருந்து எங்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும், மகேஸ்வரா”, என்று ஈஸ்வரனிடம் முறையிட்டனர்.

அதே நேரத்தில் அங்கு தோன்றிய மகாவிஷ்ணுவும், திரிசூலதாரியான சிவபெருமானை பார்த்து, “தேவர்களில் முதல்வரே, அனைத்திற்கும் முதல்வா, ஆதி அந்தமில்லாதவரே, பாற்கடலிலிருந்து முதலில் வந்த ஆலகாலத்தை உங்களுக்கான பிரசாதமாக ஏற்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், உங்களைச் சரணாகதி அடைந்த இவர்களை இரட்சிக்க வேண்டும்”, என்று கூறி மறைந்தார்.

விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்று தன்னை சரணாகதி அடைந்தவர்களை காப்பாற்ற ஆலகாலமெனும் கொடிய விஷத்தை தன் உள்ளங்கையில் அடக்கி அப்படியே விழுங்கித் தன் கண்டத்தில் நிறுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார், த்ரிபுராந்தகர். இதைக் கண்ட தேவர்கள் அசுரர்கள் அனைவரும் அவரை வணங்கி மீண்டும் பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.

அடுத்த இடையூறாக, மத்தாக உபயோகித்துக் கொண்டிருந்த அந்த மந்தர மலை கடலில் அமிழ்ந்து போக, இப்போது திதி மற்றும் அதிதியின் புதல்வர்கள் விஷ்ணுவை சரணாகதி அடைந்து, இதற்கு ஒரு உபாயம் செய்யுமாறு வேண்டிக் கேட்க, பரந்தாமன் ஆமை வடிவு கொண்டு அந்த மந்திரகிரி மலையை தன் முதுகில் தாங்கி சமுத்திரத்தில் இருந்தார்.

இன்னும் பலகாலம் பாற்கடலைக் கடைந்த பின்னர், தன்வந்திரி, பாரிஜாதம் என்னும் மரம், ஐராவதம் என்னும் யானை, அப்சரஸ கன்னிகள், வருணனின் புதல்வியான வாருணி, உச்சைச்வரஸ் எனும் குதிரை, கௌஸ்துபம் எனும் மணி, சந்திரன், தேஜோ மயமான மகாலஷ்மி அதன் பின் கடைசியாக அமிர்தமும் பாற்கடலில் இருந்து தோன்றின.

ஆயுர்வேதக் கடவுளான தன்வந்திரி உலகிற்கு பொதுவாக வைக்கப்பட்டார். வாருணி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திதியின் புத்திரர்களை கேட்க, அவர்கள் மறுத்தனர். ஆனால் அதிதியின் புத்திரர்கள் அவளை ஏற்றுக் கொண்டனர். வாருனிக்கு மற்றுமொரு பெயர் சுரை, ஆகவே சுரையை ஏற்றுக்கொண்டவர்கள், சுரர்கள் என்றும், மறுத்தவர்கள் அசுரர்கள் என்றும் பெயர் பெற்றனர். பின்னாளில் திதியின் புத்திரர்கள், அவர்கள் வம்சம் அசுரர்கள் ஆனார்கள்.

உச்சச்ரவஸ் குதிரை இந்திரனுக்கு வழங்கப்பட்டது, கௌஸ்துப ரத்தினம் மகாவிஷ்ணுவை சேர்ந்தது, சந்திரன் சர்வேஸ்வரனை சேர, மகாலக்ஷ்மியோ மகாவிஷ்ணுவின் மார்பில் தஞ்சம் அடைந்தாள்.

பாற்கடலைக் கடைந்த நோக்கமான அமிர்தம் வெளிவந்ததும், சுரர்களும் அசுரர்களும் அது தங்களையே சேரவேண்டுமென்று போட்டி போட்டுக்கொண்டு பெரும் யத்தத்தில் இறங்கினர். இருதரப்பிலும் பெரும் அழிவு நேரிட, (சுரர்கள்) தேவர்கள் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். அவரும் மோகினி உருக்கொண்டு, அமிர்தத்தை தன்வசப்படுத்த, திதியின் புத்திரர்களான அசுரர்கள் அழிந்தனர். மகாவிஷ்ணுவை சரணடைந்த தேவர்கள் அவரது கடாட்சத்தை அடைந்து அமிர்த பானத்தையும் புசித்து சாகாவரம் பெற்றனர். ரிஷிகளும் மற்றவர்களும் புடைசூழ தேவேந்திரன் உலகங்களை ஆண்டுவந்தான்.

தன்னுடைய புதல்வர்களை கொல்லப்பட்டதால், மனம் வருந்திய திதி தனது கணவராகிய காஸ்யப ரிஷியிடம், இந்திரனைக் கொல்லக்கூடிய மகன் வேண்டும் என யாசித்தாள். மரீசியின் மகனான காஸ்யபரும், விரத அனுஷ்டானங்களில் இருந்து விலகாமல் நீண்டகாலம் தவம் செய்தால், அப்படிப்பட்ட மகன் உனக்கு பிறப்பான் என்று அவர் வரமளித்தார்.

திதியின் தவமும்  ஆரம்பமாகியது. யாரைக் கொல்வதற்காக திதி தவம் மேற்கொள்கிறாளோ, அந்த இந்திரனே திதியான தனது சிற்றன்னைக்கு தவம் செய்வதற்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் மனமுவந்து செய்தான். காலப்போக்கில் அவனது செயல்களால் திதியின் மனம் இளகியது. ஆனாலும் அவள் தவத்தை நிறுத்திய பாடில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க ஒரு நாள் சற்று சோர்வுற்று தரையில் திதி படுத்துறங்க அவளது தலைமுடி கால்களில் பட்டது. அவ்வாறு நடப்பது (முடி கால்களில் படுவது )விரத பங்கம். இவ்வாறு ஏதேனும் அபசாரம் நேருமென்று பல காலம் காத்திருந்த தேவேந்திரன் தனது சிற்றன்னையின் கர்ப்பத்தை வஜ்ராயுதத்தால் ஏழு துண்டங்கள் ஆக்கினான். தனது கருவின் ஓலத்தைக் கேட்ட திதி பதற்றத்துடன் விழித்தெழுந்து, “கொல்லாதே என் பிள்ளையைக் கொல்லாதே”, என்று இந்திரனை தடுத்தாள்.

ஆனால் இந்திரனோ, “தாயே, தங்கள் தலைமுடி கால்களில் பட படுத்துறங்கியதால் உங்கள் விரதத்துக்கு பங்கம் நேர்ந்தது. மேலும், என்னை தற்காத்துக் கொள்ள, உங்கள் கருவிலுருக்கும் சிசுவை கொல்வதில் தவறில்லை என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது”, என்று நிதானமாக கூற, மனம் நொந்த திதி, தன்னால் விரத பங்கம் ஏற்பட்டதை ஒப்புக் கொண்டு, தேவேந்திரனிடத்தில் துண்டமாகிய கர்ப்ப பாகங்கள் உயிர்பெற்று மகன்களாக தேவலோகத்தில் சஞ்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தேவேந்திரனும் அதற்கு இசைந்தான்”.

“ராமா, காஸ்யபரின் மனைவி திதி தவம் செய்த இடம் இது, இந்திரன் அவளுக்கு பணிவிடை செய்த இடமும் இதுவே. விசாலன் என்ற மன்னன் இந்த நகரை நிர்மாணித்தான், எனவே இது விசாலை ஆனது, அவனது வழித்தோன்றலான ஸுமதி என்ற மன்னன் இப்போது இங்கே ஆட்சி செய்து வருகிறான்”, என்று விசுவாமித்திரர் கூறினார்.

அன்றைய பொழுதை அங்கே கழித்துவிட்டு மறுநாள் மிதிலைக்கு புறப்படலாம் என்று முடிவெடுத்துஅங்கே இளைப்பாற முடிவு செய்தனர். விசுவாமித்திரர் தனது நகர எல்லையில் இருப்பதை அறிந்த அப்பிராந்தியத்தின் மன்னனான ஸூமதி, நேரே சென்று அவர்களை வணங்கி தகுந்த மரியாதைகள் செய்தார். அவரிடத்து ராம லக்ஷ்மணர்களை தசரத குமாரர்கள் இவர்கள் என்று அறிமுகப்படுத்தி, தனது யாகம் சிறப்புற பூர்த்தியடைய இவர்களே காரணம் என்று விசுவாமித்திரர் கூறினார். மன்னனின் உபசாரங்களை ஏற்று அவரை ஆசீர்வதித்து அனுப்பிவிட்டு, இரவுப் பொழுதை அங்கே கழித்தனர். மறுநாள் மூவரும் மிதிலைக்கு பயணப்பட்டனர்.

ஜெய் ஸ்ரீ ராம்

Advertisement