Advertisement

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி ! எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

7. பகீரத ப்ரயத்தனம்.

விசுவாமித்திரர் தொடர்ந்து கங்கை பூமிக்கு வந்த வரலாறை கூறத் துவங்கினார். “முன்பொரு காலத்தில் சகரர் என்ற சக்ரவர்த்தி அயோத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவருக்கு கேசினி, சுமதி என்று இரு மனைவியர். அவர் பிள்ளைச் செல்வத்திற்காக தவமிருக்க, பிருகு முனிவர், “உனக்கு ஒரு மனைவிக்கு பிறக்கும் மகனால் உன் வம்சம் தழைக்கும், மற்றொரு மனைவிக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் உதிப்பர்” என்று ஆசிர்வதித்தார். அவ்வாறே முதல் மனைவியான கேசினிக்கு, அசமஞ்சன் என்ற பிள்ளையும், இளைய தாரத்திற்கு அறுபதினாயிரம் பிள்ளைகளும் பிறந்து வளர்ந்தனர்.

சகரரின் முதல் தாரத்தின் மகனான அசமஞ்சனுக்கு ஒரு வினோத பழக்கம் இருந்தது. அவ்வப்போது அவன் சிறு குழந்தைகளை விளையாட வருமாறு அழைத்துச் சென்று அவர்களை எல்லாம் தூக்கி நதியில் வீசி எறிந்து கொண்டிருந்தான். இது காலப்போக்கில் சகரருக்கு தெரிய வர, மன்னன் மகன் ஆனால் என்ன? ஒரு நாட்டை ஆள்பவன் அவனது நாட்டு மக்களின் நலனை யோசிப்பானே தவிர, தம் மக்களின் நலன் குறித்து யோசிக்க மாட்டான் அல்லவா? ஆகவே சகரர் தனது மகனாகிய அசமஞ்சனை நாட்டை விட்டு வெளியேற்றினார்.

ஆனால், அசமஞ்சனின் மகனாகிய அம்சுமான், தந்தையைப்போல துஷ்ட குணங்களுடன் அல்லாமல், நற்குணங்கள் நிரம்பப் பெற்றவனாகவும் வீரனாகவும், மக்களின் அன்புக்குப் பாத்திரமானவனாகவும் விளங்கினான்.

அப்போது சகரர் அஸ்வமேத யாகத்தை நடத்தவென தீர்மானித்தார். அந்த யாகக்குதிரையை பாதுகாக்கும் பொறுப்பை அம்சுமானிடம் கொடுத்தார். தனக்கு நிகராக சகரர் கீர்த்தி பெறுவதை சகிக்க முடியாத தேவேந்திரன் யாக குதிரையை அபகரித்துச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான்.

களவு போன அக்குதிரையை மீட்டுவர, முதலில் சகரரின் அறுபதினாயிரம் பிள்ளைகள் புறப்பட்டனர். பூலோகம் முழுவதும் தேடியும் கிடைக்காததால், அவர்கள் வெறும் கையுடன் திரும்பி வர, சகரர் இன்னும் தீவிரமாக தேடுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டு உற்சாகப்படுத்தி அனுப்ப, பூலோகம் முழுமையும் மீண்டும் சலித்து தேடிய அவர்கள் யாகக் குதிரையைத் தேடி பாதாளலோகம் சென்றார்கள்.

அங்கே பூமியில் பளுவைத்தாங்கி கொண்டிருக்கும் புராண புருஷரான கபில வாசுதேவர் இருந்தார். அவரருகே யாகக் குதிரையும் மேய்ந்து கொண்டிருக்க, அவரே குதிரையைத் திருடி வந்தவர் என்று சகர குமாரர்கள் தவறாக எண்ணி அவரைத் தாக்கத் துணிந்தனர். வாசுதேவராகிய அவர் தனது ஹும் என்ற ஒரு மூச்சுனாலேயே, அந்த அறுபதினாயிரம் பேர்களையும் சாம்பலாக்கினார்.

மன்னர் சகரர், குதிரையைத் தேடிச் சென்ற புத்திரர்களை காணாமல், தனது பேரனான அம்சுமானிடம்,  சிறிய தந்தைகளையும் யாக குதிரையையும் தேடிக் கண்டுபிடித்து வருமாறு அனுப்பினார்.

அம்சுமானும் அவர்கள் சென்ற வழித் தடங்களை பின்பற்றிச் சென்று பாதாளலோகம் வரை அடைந்தான். போகும் வழியில் இருந்த அனைத்து திக்தேவதைகளையும் வணங்கி, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றான்.

பாதாள லோகத்தில் யாக குதிரை மேய்ச்சலில் இருந்ததை கண்ட அம்சுமான், அதனருகே அறுபதினாயிரம் சாம்பல் குவியல்களையும் பார்த்து வேதனையுற்றான்.

அப்போது அங்கே தோன்றிய வாயுக்கு நிகரான வேகத்தில் செல்லக்கூடிய கருடன், “உலக நன்மைக்காக நிகழ்ந்த இந்த விடயத்தைப் பற்றி நீ கவலை கொள்ள வேண்டாம். கபிலவாசுதேவரால் எரிக்கப்பட்டு இறந்த இவர்களது தர்ப்பண புண்ணிய காரியங்கள் செய்ய பூமியிலிருக்கும் எந்த நீரும் உகந்ததல்ல, அவை இவர்களது பாபங்களை நீக்கி இவர்களை குளிரச்செய்ய இயலாது. அதற்கு தேவ லோகத்தில் இருக்கும் கங்கையே ஆகச் சிறந்தது. அப்புனித கங்கையைக் கொண்டு இச்சாம்பல் குவியல்களை நனைத்தால், அவர்கள் அனைவரும் சொர்க்கலோகம் அடைவர். எனவே அதற்கான வழியை பார் அதற்கு முன் உன் தாத்தா ஆரம்பித்திருக்கும் யாகத்தை பூர்த்தி செய்ய இந்த யாக குதிரையைக் கூட்டிச் செல்”, என்று கூற, அம்சுமானும் தனது தாத்தா சகரரிடம் அனைத்து விவரங்களையும் கூறி யாகத்தை பூர்த்தி செய்ய துணை நின்றான்.

சகரர் தேவ கங்கையை பூமிக்கு கொண்டு வராத நிலையிலேயே, அதற்குண்டான வழிகள் தெரியாமல் மரணித்தார். அவருக்குப்பின் ராஜ்யத்துக்கு வந்த அம்சுமான், தனது மகனான திலீபனிடம்  ராஜ்யத்தை ஒப்புவித்து தவம் செய்த போதிலும், தேவ கங்கையை பூமிக்கு கூட்டி வர இயலவில்லை. அடுத்து திலீபனுக்கும் அதே கதைதான், தன் மகனான பகீரதனிடம் ராஜ்ய பாரத்தை கொடுத்து, திலீபன் கடும் தவம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அவன் காலமும் கங்கையை பூமிக்கு கொண்டு வர மார்க்கமின்றி முடிந்தது.”

“பகீரதனக்குப் பிள்ளைகள் இல்லை, எனவே மந்திரிகளை அழைத்து ராஜ்ய பரிபாலனம் செய்யுமாறு கோரி மிகக் கடுமையான பஞ்சாக்கினி தவம் மேற்கொண்டான். பிரம்மதேவர் அவனது தவத்தில் மகிழ்ந்து அவர் முன் தோன்றி, “உன் தவம் போற்றுதற்குரியது, மகிழ்ச்சி. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று கூறினார்.

எனது முன்னோர்களான சகர சக்ரவர்த்தியின் மகன்கள் அறுபதினாயிரம் பேருக்கு நான் புனித கங்கை நீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களுடைய அஸ்தி கங்கை நீரில் நனையவேண்டும். பிள்ளையில்லாத எனக்கு மக்கட்பேறு அளித்து என் சந்ததி வளர அருள்புரிய வேண்டும்”, என்று பகீரதன் பிரம்மனிடம் கோரிக்கை வைக்க,

“பகீரதா, உன் குலம் தழைக்கும், தேவ கங்கை பூமிக்கு வந்தால் அதைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி இங்கு யாருக்கும் கிடையாது, சர்வ லோக ரட்சகனான எம்பெருமான் ஈஸ்வரனை தவிர வேறு யாராலும் அப்பெரும் காரியத்தை செய்ய இயலாது. நீ அவரிடம் சம்மதம் கேட்டுப் பெற்றால், உன் எண்ணம் ஈடேறும். நன்மை உண்டாகட்டும்”, என்று பிரம்மன் ஆசீர்வதித்தார். பின் கங்கையிடமும், பகீரதன் தயாரானதும் இக்காரியத்தை பூர்த்தி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

தன் முன்னோர்களுக்கு எவ்வாறேனும் நற்கதி கிடைக்கவேண்டும் என்ற தீர்மானத்தோடு, மனம் தளராமல் மீண்டும் பகீரதன் தனது தவத்தை ஈஸ்வரனை நோக்கி ஆரம்பித்தான். அவனது கடும் தவத்தை மெச்சி பரமசிவன் அவன் முன் தோன்றி, “பகீரதா! உன் விருப்பம் ஈடேறும். ஹிமவானின் மகளான கங்கை பூமிக்கு வரும்போது நான் அவளை என் சிரசில் தாங்குகிறேன்” என்று வரமளித்தார்.

ப்ரம்ம தேவரின் கூற்றுப்படி கங்கை, தேவலோகத்தில் இருந்து பொழிந்து பூமியை நெருங்க, தன்னைத் தாங்க தயாராக நிற்கும் ஈசனை பார்த்து, ‘ஓ என் வேகத்தை தாங்கும் வல்லமை பெற்றவர் இவரோ?’ என்று ஒரு கணம் ஏளனமாக யோசித்து, “பெரும் பிரவாகமாக இறங்கி அவரை பாதாளத்திற்கு அடித்துச் செல்கிறேன்”, என்ற எண்ணத்துடன் மிக வேகமாக கீழே இறங்கினாள். இதை அறிந்த சர்வேஸ்வரன், கங்கையின் அப்பிரவாகத்தை தன் ஜடாமுடிக்குள் லாவகமாக அடக்கி தலையில் முடிந்து வைத்தார். இவ்வாறு கங்கை ஈசனின் ஜடாமுடியில் சிக்கிக் கொண்டதை பார்த்த பகீரதன், மீண்டும் ஈஸ்வரனைக் குறித்து தவம் புரியலானான்.

பகீரதனின் விடாமுயற்சியால் அவன்பால் இரக்கம் கொண்ட ஈஸ்வரன், தன் முடியிலிருந்து கங்கையை, ப்ரஹ்மதேவரால் தோற்றுவிக்கப்பட்ட பிந்துசரஸ் என்னும் இடத்தில் வீழுமாறு விடுவித்தார்.

சர்வேஸ்வரனின் தலையில் விழுந்து பின் பூமியில் பாய்வதால் கங்கை நீர் சகல பாவங்களையும் போக்கும் புனித நீரானது. அவ்வாறு பிந்துசரஸில் வீழ்ந்த கங்கை ஏழு கிளைகளாக பிரிந்து, மூன்று கிழக்கு நோக்கியும் மூன்று மேற்கு நோக்கியும் பாய்ந்தன. ஏழாவது கிளை பகீரதனை பின்தொடர்ந்தது. அவ்வாறு பின்தொடர்ந்த கங்கையில் நீராடி அனைவரும் தத்தமது பாபங்களை போக்கிக் கொண்டனர்.

கங்கை பிரவாகமாக சலசலவென்ற சப்தத்துடன் பகீரதனின் தேரைப் பின்தொடர்ந்த அற்புதமான அக்காட்சியைக் காண தேவர்கள், யக்ஷர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் முதலானோர் விண்ணிலிருந்து திரண்டு வந்து கண்டு மகிழ்ந்தனர்.

அவ்வாறு கங்கை பிரவாகமாக செல்லும் வழியில் ஜன்ஹு ரிஷி, என்ற மகரிஷி யாகம் செய்து கொண்டிருந்த யாகசாலையை அடித்துக் கொண்டு சென்றது. அதனால் கோபம் கொண்ட ஜன்ஹுரிஷி, கங்கையை அப்படியே மொத்தமாக குடித்துவிட்டார். அதை பார்த்து மிகுந்த ஆச்சர்யம் அடைந்தவர்கள், “ரிஷி அவர்கள் கங்கையின் தவறினை பொறுத்தருள  வேணுமாய்” கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த ஜன்ஹுரிஷியும், அவரது காதின் வழியாக கங்கையை வெளியே விட்டார். அன்றிலிருந்து கங்கைக்கு ஜான்ஹவி [ஜன்ஹூ-வின் மகள்] என்று பெயரும் சேர்ந்தது.”

“பகீரதனைப் பின் தொடர்ந்த கங்கை, பாதாள லோகம் சென்று, அங்கிருந்த சகர சக்ரவர்த்தியின் அறுபதினாயிரம் மகன்களின் அஸ்தியிலும் பாய்ந்து அவர்களை புண்ணிய லோகத்திற்கு அனுப்பியது”.

“பகீரதா! மனிதர்களில் சிறந்தவனே! உன் விடா முயற்சியால் தேவகங்கை பூமிக்கு வந்ததால், அவள் உனக்கு மகள் முறையாவாள். இனி உன் பெயரை அடைமொழியாகக் கொண்டு ‘பாகீரதி’ என்றும் அழைக்கப்படுவாள். உன் முன்னோர்களை கடைத்தேற்றினாய். தேவலோகத்தில் பாய்ந்த கங்கை பூமியிலும், பாதாளத்திலும் ஆக மூவுலகங்களிலும் பாய்ந்ததால் ‘த்ரிபதாகை’ ஆனாள். உன் புகழ் இப்பூமியில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என ப்ரஹ்மதேவர் பகீரதனை வாழ்த்தினார்”.

“பகீரதன் முன்னோர்களுக்கு உண்டான பித்ரு தர்பணங்களை சகர குமாரர்களுக்கு செய்து அவர்களின் ஆசி பெற்றான்.”, இத்தைகைய பெருமை வாய்ந்த புண்ணிய நதியான கங்கையின் வரலாறை கேட்டவர்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்கள். மேலும் இதை சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு செல்வம், புகழ், நீண்ட ஆயுள், மற்றும் சகல சம்பத்துக்களையும் அளிக்க வல்லது, வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லது இந்த புனித கங்கையின் புராணம்” என்று கங்கையின் கதையை கூறினார் விசுவாமித்திரர். பின் ராம லக்ஷ்மணர்களைப் பார்த்து, “சந்தியா காலமாகிவிட்டதால், அவரவர் கர்மாக்களை முடித்து அனைவரும் உறங்கச் செல்வோம்” என்றார்.

ராம லக்ஷ்மணர்கள் இருவரும், கங்கையின் சரித்திரத்தை மீண்டும் மீண்டும் மனதில் அசைபோட்டு எத்தனை மகத்தான காரியம் இது என்று ஆச்சர்யம் அடைந்தனர்.

ஜெய் ஸ்ரீ ராம்.

Advertisement