Advertisement

Namo aanjaneyam Namo Divya kayam

Namo Vayuputram Namo Suryaputram

6. ஸ்கந்தன் பிறப்பு.

மறுநாள் ராம லக்ஷ்மணர்கள் இருவரும் அதிகாலை எழுந்து அவர்களது அனுஷ்டானங்களை முடித்து, நேரே விஸ்வாமித்திரரிடம் வந்து பணிவாக, “குருவே, நாங்கள் எப்போது ராக்ஷஸர்களை எதிர்பார்க்கலாம்?  யாகத்தை காக்க நாங்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய காலம் எதுவென்பதை  தாங்கள் அறிவுறுத்தினால் அதன்படி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்.”, என்று கேட்க..

அப்போது அருகில் இருந்த முனிவர்கள், “ரகு வம்சத்தில் பிறந்தவர்களே!  விஸ்வாமித்திரர் யாகத்திற்கான அனுஷ்டானங்களை மேற்கொண்டுள்ளதால் யாரிடமும் பேசமாட்டார். இன்றிலிருந்து ஆறு இரவுகள் நீங்கள் ஜாக்கிரதையாக இருந்து இந்த யாகத்தை காப்பாற்ற வேண்டும்.” , என்று தெரிவித்தார்கள்.

ஐந்து நாட்கள் பகல் இரவு பாராது இரண்டு சகோதரர்களும் யாகத்தை எவ்வித பங்கமும் நேராதவாறு பாதுகாத்தனர். யாகம் முடிவடையும்  ஆறாவது நாள், வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென இடி நாதம் முழங்கியது. கரிய மேகக்கூட்டத்தினை போல ராக்ஷஸர்கள் மாரீசன், சுபாகு இருவரும் வானத்தில் தோன்றினர். வேள்வித்தீயை குறைத்து யாகத்தை நிர்மூலம் செய்ய ரத்தத்தை மழையென பொழிந்தனர்.

“லக்ஷ்மணா! இப்போது மானவாஸ்திரத்தின் வலிமையை  நீ காணப்போகிறாய்”, என்று மாரீசனின் மார்பில் மானவ அஸ்திரத்தை தொடுத்தார், அது அவனை நூறு யோசனை தூரத்திற்கப்பால் சமுத்திரத்தில் கொண்டு தள்ளியது. அவன் மூச்சுத்திணறி, அஸ்திரத்தினால் அடிபட்டதால் தன் பலமனைத்தையும் இழந்து, உணர்வின்றி கிடப்பதை பார். இனி மீதம் இருக்கும் ஸுபாகு முதலான இந்த ராக்ஷஸர்கள் மடியப்போவதை பார்”, என்று ஆக்னேயாஸ்திரத்தை சுபாகுவின் மீதும், வாயவ்வாஸ்திரத்தை மற்ற ராக்ஷசர்கள் மீதும் பிரயோகித்தார். அனைவரும் இறந்து மடிந்தனர்.

யாகம் எந்த இடையூறும் இல்லாமல் பூர்த்தியாக, ராக்ஷஸர்கள் தொல்லைக்கு முடிவு கட்டிய வீரம் செறிந்த ராம லக்ஷ்மணர்களை முனிவர்கள் மகிழ்ந்து கொண்டாடி வாழ்த்தினர். விஸ்வாமித்திரர், “ராமா! நீ பராக்கிரமசாலி, உன் செயலால் இந்த சித்தாசிரமம்  நினைத்ததை சாதித்துக் கொடுக்கும் இடமாய் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது” என்று ஆசி கூறினார்.

அன்றைய இரவு அங்கேயே கழிய, மறுதினம் காலை, “சுவாமி! உங்கள் கட்டளைக்காக காத்து நிற்கிறோம், அடுத்து என்ன செய்யவேணுமென கட்டளையிட்டால் சிரமேற்கொண்டு செய்கிறோம்” ராம லக்ஷ்மணர் பணிவோடு கேட்க, அருகிருந்த முனிவர்கள் விஸ்வாமித்திரரின் அனுமதி பெற்று, “மிதிலா ராஜ்ஜியத்தின் மன்னர் ஜனகர் எவ்வித பலனையும் எதிர்பாராமல், தெய்வ காரியமாக யாகம் ஒன்று நடத்தப்போகிறார். அதற்காக நாங்கள் அங்கே செல்லப்போகிறோம். நீங்கள் எங்களுடன் அங்கே வந்தால், அவரிடம் இருக்கும் அதி அற்புதமான வில் ஒன்றை நீங்கள் பார்க்கலாம். அது ஜனகருடைய முன்னோர் ஒருவருடைய யாகத்தை மெச்சி தேவர்களால் கொடுக்கப்பட்டது”

“அவ்வில்லில் நாணேற்றும் வல்லமை தேவ, கந்தர்வ, அசுர, ராக்ஷஸர்களுக்குக்கூட  இல்லை எனும்போது, மனிதர்களுக்கு அது அப்பாற்பட்டதாகவே தோன்றுகிறது. பற்பல பராக்கிரமசாலியான அரசர்கள், அரச குமாரர்கள் முயன்றும் அதில் நாணேற்றுவது இயலாத செயலாகவே இருக்கிறது. ராமா! எங்களோடு வந்தால் அத்தகைய தெய்வீகமான வில்லை காண்பதோடு ஜனகர் நடத்தும் யாகத்தையும் கண்டு விட்டு வரலாம்” என்றனர்.

பின் விஸ்வாமித்திரர், அங்கிருந்த வன தேவதைகளை ஆசீர்வாதம் செய்து, “இங்கிருந்து இமயமலை சாரலுக்கு செல்கிறோம், இங்கே வந்த காரியம் இனிதே நிறைவேறிற்று” என்று கூறி, மற்ற முனிவர்களோடும், ராம லக்ஷ்மணர்களோடும் புறப்பட்டார்.

அவ்வனத்தில் இருந்த பறவைகள், விலங்குகள் முதலான அநேக ஜீவராசிகளும் வெகுதூரம் அவர்களோடு கூடவே சென்றன. விசுவாமித்திரர், அவைகளை நீங்கள் உங்கள் இடத்துக்கே செல்ல வேண்டுமென ஆசீர்வதித்து திரும்ப அதனதன் வசிப்பிடத்திற்கே அனுப்பி வைத்தார்.

பின் அவர்கள் அனைவரும் சூரியன் மறையும் நேரத்தில் சோனா நதிக்கரையை சென்று அடைந்தனர். அனைவரும் நித்ய கர்மாக்களான, சந்தியா வந்தனம், ஜெப தனங்களை முடித்தபின் விஸ்வாமித்திரரை சுற்றி அமர்ந்து கொண்டனர். இந்த இடம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பதாக ராமர் கூற, விஸ்வாமித்திரர் அந்த இடத்தின் வரலாறு பற்றி எடுத்தியம்பினார்.

ப்ரம்மாவினால் உண்டாக்கப்பட்ட புத்திரர்களில் குசர் என்பவர், நாரதர் போலின்றி ப்ரஹ்மலோகம் விடுத்து பிரஜைகளை ஆள எண்ணம் கொண்டு பூலோகம் வந்தார். அவர் நல்ல தவசீலர், தர்ம சாஸ்திரத்திரங்களை, அனைத்து நியமங்களை, விரதங்களைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர், விதர்ப்ப ராஜ குமாரியை மணந்து நான்கு புத்திரர்களை பெற்றார். அவர் தனது நான்கு புத்திரர்களையும் நான்கு நகரங்களை நிர்மாணித்து, அங்குள்ள மக்களை நன்கு பரிபாலனம் செய்யுமாறு பணித்தார். அவரின் மகன்களில் குசநாபர் என்பவரும் ஒருவர்.

தந்தையின் கட்டளையை ஏற்று, நான்கு புத்திரர்களும் நகரங்களை நிர்மாணித்தார்கள். குசநாபர், க்ருதாசி என்ற பெண்ணின் மூலம் பல அழகான பெண் குழந்தைகளை பெற்றார். அவர்கள் வாலிப பருவத்தை அடைந்த பொழுது, வாயுதேவன் அவர்களது அழகில் மயங்கி,  தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவர்களிடம் கேட்டான். கூடவே, அவரை மணம் புரிந்து  கொண்டால், அப்பெண்களுக்கு தேவ நிலையைத் தருவதாகவும் எப்போதும் நீடித்திருக்கும் இளமையோடு இருக்கலாம் என்றும் கூறி வாயு அவர்களை தன்வயப்படுத்த முயற்சித்தான்.

அதற்கு அப்பெண்கள் மறுதலித்து, தந்தையின் உத்தரவின்றி எவரையும் மனம் புரிவதற்கில்லை  என்று விட்டனர். வாயு கோபம் கொண்டு அவர்களை சபிக்க, அவர்கள் கோர உருவம் கொண்டவர்களாக மாறினர்.

இவ்விஷயம் கேள்விப்பட்ட குசநாபர், மகள்களின் நிலையை எண்ணி சற்றே மனவருத்தம்  கொண்டாலும், தந்தை சொன்னாலொழிய எவரையும் மனம் புரியோம் என்று வைராக்கியமாக இருந்த பெண்களின் மீது வாஞ்சை கொண்டார்.

அவர்கள் அனைவரின் பொறுமையை போற்றினார். “ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் அனைவருக்கும் பொறுமையே ஆகச் சிறந்த ஆபரணம். அதுவே அனைத்திற்கும் மேற்பட்ட தானம், பொறுமையே அனைத்திற்கும் மேற்பட்ட சத்தியம், அதுவே அனைத்திற்கும் மேற்பட்ட உத்தமமான யாகம், பொறுமையே புகழ், பொறுமையே தர்மம்,  பொறுமையினால்தான்   இவ்வுலகம் நிலைத்து நிற்கிறது. வாயுவிற்கு சாபம் அளிக்கும் வல்லமை  பெற்றவர்களாக இருந்த போதும், அப்படி செய்யாமல் பொறுமையைக் காத்த உங்களை நினைத்து நான் பெருமை அடைகிறேன்” என்று தன மக்களை ஆசீர்வதித்த குசநாபர், அவர்களுக்கு திருமணம் எவ்வாறு யாருடன் செய்விப்பது என்ற ஆலோசனையில் மூழ்கினார்.

முற்காலத்தில், சூலி என்ற மகரிஷி ப்ரஹ்மச்சாரியாக, எவ்வித பலா பலன்களையும் எதிர்பாராது தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஊர்மிளையின் குமாரியான ஸோமதை என்ற கந்தர்வப் பெண் அவருக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது பணிவிடையில் மெச்சி, “பெண்ணே, உனக்கு சகல மங்களமும் உண்டாகட்டும், சொல், உனது கோரிக்கை என்ன?” என்று கேட்டார்.

ஸோமதை, “முனிவரே! தங்களைப் போன்ற ப்ரஹ்ம தேஜஸுடன் கூடிய மகனை அடைய விரும்புகிறேன், நான் திருமணமாகாதவள், ஒருவருடைய பார்வையும் அல்லாதவள் [அதாவது யாரையும் மனத்தால் கூட எண்ணாதவள்] “, என்று வேண்டினாள். “நல்லது, அப்படியே ஆகட்டும்”, என்று ஆசி கூறி, தனது மனதிலே உறுதி செய்து ஸோமதைக்கு ஒரு புத்திரனை அருளினார்.

அவ்வாறு சூலி என்ற மகரிஷியின் மனோபலத்தால் மட்டுமே ஸ்ருஷ்டி செய்யப்பட்டவர் ப்ரம்மதத்தர் என்ற க்ஷத்ரியன். அவர் காம்பீல்யா[கம்பீல்யா என்றும் சொல்வதுண்டு] என்ற நகரத்தில் மக்கள் நலத்தினை கண் போல பாவித்து அரசாட்சி புரிந்து வந்தார்.

பொறுமையை ஆபரணமாக கொண்ட தன் மகள்களுக்கு, அத்தகைய ப்ரஹ்ம தேஜஸுடைய ப்ரம்மதத்தரே தகுந்த மணமகன் ஆவார் என்று குசநாபர் தீர்மானித்து, அவருக்கே தனது மகள்களை மணமுடித்து கொடுக்க நினைத்தார்.

குசநாபர் சென்று கேட்டதும் அவரது வார்த்தைக்கு இணங்கி ப்ரம்மதத்தரும் குசநாபரின் பெண்களை மணக்க சம்மதித்து அப்பெண்களை திருமணம் செய்தார். ப்ரஹ்மதத்தரின் கரம் பற்றியதும், அப்பெண்கள் அனைவரும் சாபம் நீங்கி தங்களது பழைய எழிலான தோற்றத்தை அடைந்தனர்.

தன் பெண் மக்களுக்கு திருமணம் முடிந்ததில் மன நிம்மதி அடைந்தாலும் குசநாபருக்கு தனக்கு ஒரு மகன் இல்லையே என்ற குறை இருந்தது. அதை நிவர்த்தி செய்வதற்காக அவர் ஒரு யாகம் நடத்த, அப்போது குசநாபருடைய தந்தையான குசர் அவரிடத்து வந்து, “மகனே! உனக்கு மிகவும் சிறப்புவாய்ந்த காதி என்ற ஒரு மகன் பிறப்பான். அவனால் உன் குலத்தின் பெருமை மிகும்” என்று ஆசீர்வதித்தார். சில காலத்திற்கு பின் அவருக்கு காதி என்றொரு மகன் பிறந்தான். அவர் மக்கள் அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற மன்னனாகத் திகழ்ந்தார்.

“நான் அவருடைய மகன். குசரின் குலத் தோன்றல்கள். ஆதலால் எனக்கு கௌசிகர் என்ற பெயர் வந்தது. எனக்கு சத்தியவதி என்ற சகோதரி உண்டு. அவர்  ரிசீகர் என்பவரை மணந்து பல்வேறு விரதங்களையும் பதிவிரதா தர்மத்தையும் மேற்கொண்டு அளவற்ற புண்ணியம் அடைந்ததால் தன் பூ உடலோடு சொர்க்கத்திற்கு சென்றாள். பின் கௌசிகா என்ற நதியாக மாறி இமயமலைச் சாரலில் தவழ்ந்து வர, அந்நதிக்கரையில் தான் நான் வசித்து வருகிறேன். இந்த யாகம் செய்வதற்காக இங்கே வந்தேன். “

இக்கதையைக் கூறி முடிக்கும்போது இரவு நேரமாகிவிட்டதால் விஸ்வாமித்திரர், “இஷ்வாகு குலத்தில் பிறந்தவனே! இரவு நேரமாகிவிட்டது. மரங்கள் அசைவதை நிறுத்திவிட்டன, சந்திரன் தனது குளிர்ந்த கிரணங்களால், அனைவருக்கும் குளுமையை பரப்புகின்றது. தாமதித்தால் நாளை பிரயாணம் சிரமமாகும் எனவே நல்ல உறக்கம் கொள்வாயாக. மங்களம் உண்டாகட்டும்” என்றுவிட்டு அவரும் படுத்து உறங்கினார்.

மறுநாள் விடிந்தது அவரவர் தத்தமது நித்ய கர்மங்களை முடித்து, அனைவரும் ஆழமற்ற அந்த சோனா நதியில் இறங்கி நடக்கத் துவங்கினர். மதிய நேரத்தில் கங்கையை அடைந்தவர்கள் ஹோம தர்ப்பண காரியங்கள் முடித்த பின் உணவு உட்கொண்டு விட்டு கங்கைக் கரையில் அமர்ந்தனர். “முனிவர்களில் சிறந்தவரே! இந்த கங்கை மூன்று உலகங்களிலும் பரவியது எப்படி? த்ரிபதாகா என்ற பெயர் இதற்கு ஏன் உருவானது? இதன் வரலாற்றை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று ராமர் கேட்க விஸ்வாமித்ரர் கங்கை நதியின் வரலாற்றை எடுத்துரைக்கத் தொடங்கினார்.

“ஹிமவான் என்பவன் மலைகளின் அரசன் அவனுக்கு இரண்டு குமாரிகள். மூத்தவள் கங்கை,  இளையவள் பார்வதி. அப்போது தேவர்கள், மூவுலகுக்கும் நன்மை செய்ய ஒரு சேனாதிபதி உண்டாவதற்கும், தங்களது ஆராதனை முதலிய இன்னபிற காரியங்களுக்காகவும் ஹிமவானின் மூத்த புதல்வியான கங்கையை கேட்க, உலக நன்மைக்காக அவர்களது விருப்பத்திற்கு இணங்கி ஹிமவான், தனது மகளான கங்கையை அவர்களுக்கு அளித்தார். தேவர்களுக்கு அளிக்கப்பட்ட கங்கை தெய்வீக நதியாகி தேவலோகத்தை சேர்ந்தாள். இளையவள் பார்வதியோ கடுமையான தவமிருந்து சர்வ லோக நாயகனான பரமசிவனை மணந்தாள். “

“பார்வதியை மனம் முடித்த சர்வேஸ்வரன் பலகாலம் இன்புற்றிருக்க, பிரபாவம் மிக்க உங்களுக்கு பிள்ளைகள் உண்டாகலாகாது, நீங்கள் துறவு நிலை மேற்கொள்ளுங்கள் என்ற தேவர்களின் விருப்பத்திற்கு இணங்கி, தனது வீர்யத்தை பூமியில் விட, பூமி தாங்க முடியாதவளாகி அலற, அக்னி தேவன் அதைத் தொடர்ந்து தாங்கிக்கொள்ளத் துணிந்தும், அவராலும் முடியாது தடுமாறி கங்கையிடம் சேர்ப்பித்தார். ஆனால், அப்புனிதமான கங்கையால் கூட பரமசிவனின் தேஜஸை தாங்க இயலவில்லை, அதை இமயமலை அடிவாரத்தில் கொண்டுவிட, அங்கொரு தெய்வ மகன் பிறந்தான். அக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கிருத்திகை நக்ஷத்திர கூட்டத்திடம் ஒப்புவிக்க, அவர்களும் அதைச் செவ்வனே செய்தனர்.

கிருத்திகை நக்ஷத்திரத்தால் வளர்க்கப்பட்டவன் என்பதால், அக்குழந்தை கார்த்திகேயன் என்ற பெயரைப் பெற்றது. சர்வேஸ்வரனின் வீர்யம் கீழே விழப் பிறந்தவனானதால், ஸ்கந்தன் என்று அழைக்க பெற்றார். அவரே தேவர்களைக் காக்க கொடும் அசுரர்களை வென்று தேவர்களின் சேனாதிபதியாக ஆனார். அவர் பிறப்பு குமாரசம்பவம் என்று மிக பிரசித்தமாயிற்று. “ராமா! இந்த கார்த்திகேயனுடைய சரித்திரத்தை கேட்ட மாத்திரத்தில், ஒருவன் செய்த சகல பாபங்களில் இருந்தும் விடுபடுவான், தேவலோகம் செல்வான்” என்று குமார சம்பவத்தை சிலாகித்து கூறினார் விஸ்வாமித்திரர்.

“தேவலோகத்தில் பாய்ந்த கங்கை இங்கே பூமியில் பாய்ந்து, பாதாளலோகம் வரை சென்றது எப்படி?”,என்று ராமர் கேட்க விஸ்வாமித்திரர் கங்கையின் கதையை விளக்கமாக பகிர ஆரம்பித்தார்.

ஜெய் ஸ்ரீ ராம்

Advertisement