Advertisement

ஸ்ரீராம தூத மஹாதீர

ருத்ர வீர்ய ஸமத் பவ

அஞ்சன கர்ப்ப ஸம்பூத

வாயு புத்திர நமோஸ்துதே:

5. தாடகை வதம்.

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா…., கௌசல்யையின் மைந்தனே, முதல்வனே, இருளும் ஒளியும் சந்திக்கும் சந்தியா வேளை வந்துவிட்டது துயிலெழுந்து உன் நித்ய அனுஷ்டானங்களை செய்வாயாக”, என்று விஸ்வாமித்திரர் மென்மையாக ராமரை எழுப்புகிறார். இதுவே வெங்கடேச சுப்ரபாதத்தின் முதல் பத்தியாக இன்றளவும் கைக்கொள்ளப்படுகிறது.

விஸ்வாமித்திரரின் குரல் கேட்டதும் ராம லக்ஷ்மணர்கள் இருவரும் உறக்கம் கலைந்து எழுந்து நதியில் குளித்து அவர்கள் முறைப்படி செய்ய வேண்டிய ஜெபதபங்களை மேற்கொண்டனர். பின்னர் முனிவருடன் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சரயூ நதியும் த்ரிபதாகை என்ற நதியும் சங்கமிக்கும் இடத்தில் இருந்த ஒரு ஆசிரமத்தை அடைந்தனர். அவ்வாசிரமம் குறித்து ராம லக்ஷ்மணர்கள் கேள்வி எழுப்ப, அதுகுறித்து சொல்லலானார் விஸ்வாமித்திரர்.

“இது திரிநேத்ரதாரியான சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் முயற்சி செய்த இடம். முன்னொரு காலத்தில் இத்தலத்தில் சதாசிவன் கடுந்தவம் புரிகையில், பார்வதி தேவி அவருக்கு பணிவிடைகள் செய்துகொண்டிருந்தார். அவர் மேல் சிவனுக்கு காமம் ஏற்பட வேண்டுமென மன்மதன் முயல, காமமும், காலனும் அண்டா பரம்பொருள் அல்லவா அவர். திரிபுரம் எரித்தவருக்கு, மன்மதனை எரிப்பதா பெரிய காரியம்?
ஆனாலும் மன்மதன் தேவனாயிற்றே, தேவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் அல்லவா?, ஆதலால் ஈஸ்வரன் மன்மதனை எரிக்க, அவன் அங்கம் இல்லாதவன் ஆகினான். அதாவது அனங்கன் ஆகினான். ஆகையால் அவன் அங்கம் இழந்த தேசமான இது அங்க தேசம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தவம் செய்கிறவர்கள் சதாசிவனின் அனுகிரகத்தினை பரிபூரணமாகப் பெற்றவர்கள். அப்பேறு பெற்ற புண்ணியவான்களை நாம் சந்திப்போம் என்று ராம லக்ஷ்மணர்கள் இருவரிடமும் கூறி அந்த ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர்.

அங்கிருந்த முனிவர்கள் இவர்களின் வருகையை கண்டு பரமானந்தம் அடைந்தனர். மனமுவந்து மூவரையும் வரவேற்று தக்க மரியாதை செய்து,  நல்ல பழங்களை உண்ண கொடுத்து, இரவை அங்கே கழிக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டனர். அவ்விதமே ஆகட்டும் என்று விஸ்வாமித்திரரும் அவர்களுக்கு மறுமொழி கூறி அன்று இரவை அங்கேயே கழித்தார்கள்.

மறுநாள் காலையில் அவரவர் தம் கடமைகளை முடித்து, அந்த காமாச்ரமஸ்தானத்தின் முனிவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஓடத்தில் ஏறி விசுவாமித்திரரும் ராம லட்சுமணர்களும் நதியைக் கடந்தனர். மறுகரையில் அடைந்தபின் மூவருமாக நடக்கத் தொடங்கினர். சிறிது தூரத்தில் ஆளரவமற்ற ஒரு அடர் கானகத்தை அடைந்தார்கள். ஏன் இப்படி இந்த இடம் மனித சஞ்சாரமே இல்லாமல் இருக்கிறது? தயைகூர்ந்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் குருவே என்று ராமர் கேட்க, “முன்பு, வ்ருத்தாசுரன் என்ற அசுரனை வதம் செய்த காரணதால் இந்திரனுக்கு ப்ரஹ்மஹத்தி தோஷமும், அடங்காத பசியும்  பீடித்தது. அந்த சாபம் தீர்க்க முனிவர்களும் தவசீலர்களும், கங்கை முதலான புண்ணிய தீர்த்தத்திற்கு அவனை அழைத்து வந்து புனித நீராட்டினர். தன் உடலின் கசடை நீக்கிய இடத்தை மலத நாடு என்றும் பசியை நீக்கியதால் கரூச நாடு என்றும் பெயர் கொண்டு சிறப்போடு விளங்கட்டும் என்று வரமளித்தார். அதனால் இந்த பூமியும் பெரும் செழிப்போடு விளங்கியது.

அக்காலத்தில் ஸுந்தன் என்ற பெயருடைய யக்ஷன் தாடகை என்பவளை மணந்து அவர்களுக்கு மாரீசன் என்ற மகன் பிறந்தான். அவளோ ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவள். மகன் மாரீசன், இச்சாதாரி, நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் கொள்ள வல்லவன்,பலவான். அவனும் தாடகையும் இந்த மலத கரூஸ நாட்டு மக்களை பயமுறுத்தி இதை வனமாக்கினர்.  இங்கே ஒன்னரை யோசனை தூரத்திற்கு அப்பால் அவள் வசிப்பதால், இவ்வனத்திற்கு தாடகாவனம் என்று பெயராயிற்று. ராமா! நீ அவளை அடக்கி, இந்த பிராந்தியத்தை மீண்டும் செழிப்புறச் செய்யவேண்டும்.”, என்றார்.
“குருவே, பொதுவாக யக்ஷர்கள் வீரம் செறிந்தவர்கள் அல்லவே? பின் எவ்வாறு தாடகை இத்தனை பலம் கொண்டவளாக இருக்கிறாள்?”, என்று கேட்டார் ராமர்.

“முன்னொரு காலத்தில் சுகேது என்ற யக்ஷன் மட்கட்பேறு இல்லாத காரணத்தால் ப்ரம்ஹாவை மனதில் இருத்தி நீண்ட தவம் செய்ய, அதன் பலனாக அவருக்கு தாடகை என்றொரு மகள் பிறந்தாள். அவள் ஆயிரம் யானை பலம் கொண்டவளாக இருந்தாள்.  அப்பெண் வாலிபம் அடைந்ததும் ஜம்பனுடைய மகனான ஸுந்தனுக்கு மணமுடித்தான். அகஸ்தியரின் சாபத்தால் ஸுந்தன் கொல்லப்பட, மகன் மாரீசன் துணையுடன் தாடகை அகஸ்திய மாமுனியை அழிக்க வந்தாள். அவர் தாடகையை கோர உருவம் கொண்டவளாக வேண்டும் என்றும், இருவரையும் மனிதர்களைத் தின்னும் ராக்ஷ்சர்களாக வேண்டும் என்றும் சாபமிட்டார்”.

“அவர்களது கோபத்தை அகஸ்தியர் மீது காட்டமுடியாமல், அவர் வசிக்கும் நாட்டையும்,அங்கிருப்போர்களையும் இம்சித்து வருகிறாள். தாடகையை பெண் என நினைத்து, அவளைக் கொல்வதா என்று தயங்காதே, க்ஷத்ரிய தர்மப்படி, மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் யாராயிருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே. எனவே இங்கே வசித்து வந்தவர்களுக்கு அவளது ஹிம்சை இல்லாதிருக்க,  தர்மம் என்பதே தெரியாத தாடகையை அடக்கி வைப்பது, எந்நாளும் அதர்மம் ஆகாது”, என்றார் விஸ்வாமித்திரர்.

“குருவே, உங்கள் வார்த்தைகளை சிரமேற்கொண்டு, உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென என் தந்தை உத்தரவிட்டிருக்கிறார். அவர் வார்த்தை எனக்கு சாஸனம். ப்ரஹ்ம ஞானியான உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதே என் பாக்கியம்”, என்று பணிவாக ராமர் கூறினார். ஆவது வில்லை வளைத்து  நாணில் இருந்து ஓசை எழுப்பினார். அவ்வோசை எல்லாத்  திசையிலும் பரவி எதிரொலித்தது.

சிறிது தொலைவில் இருந்த தாடகை இச்சத்தம் கேட்டு, ஆவேசமாக பெரும் சப்தத்துடன் ராம லக்ஷ்மணர்கள் இருக்கும் இடம் தேடி விரைந்தோடி வந்தாள். அந்த நேரத்திலும் ராமர்  ஒரு நொடி தயங்கி, “லக்ஷ்மணா, இவளை அடக்கி மற்றோருக்கு தொந்தரவு இல்லாமல் செய்யத்தானே குருநாதர் கூறினார். அச்சம் தரக்கூடிய தோற்றத்தை உடைய இவளது அங்கங்களை அறுத்து, அடித்து துரத்தி விடுவோம். அப்போது விஸ்வாமித்திர முனிவரின் நோக்கமும் நிறைவேறும்,  ஒரு பெண்ணைக் கொன்ற பாபமும் பீடிக்காதல்லவா?”, என்று லக்ஷ்மணனிடம் கூறினார் ராமர்.

தாடகை அதிபயங்கரமான கர்ஜனையுடன், கைகளை உயரமாக தூக்கியபடி ராமரை நோக்கி பாய்ந்தாள். இதைப் பார்த்த விஸ்வமித்திரர், ‘ஹூம்’ , என்று பெரும் ஒலியை எழுப்பி, அவளை அச்சப்பட வைத்தார். இக்ஷ்வாகு வாரிசுகளை நோக்கி, “இருவருக்கும் வெற்றி உண்டாகட்டும்”, என்று ஆசிர்வதித்தார்.
தாடகை சுதாரித்து, பெரும் புழுதியை எழுப்பி, கல் மழை பொழியச் செய்தாள். ராமர் அக்கல் மழையை தடுத்து, அவளது கைகள் இரண்டையும் துண்டித்தார். அவளது காதுகளையும் மூக்கையும், லக்ஷ்மணர் பங்கம் செய்தார். கோரமான அலறலுடன் மாய உருவங்கள் எடுத்த தாடகை, இன்னமும் ஆக்ரோஷமாக மாயா ரூபத்தில் அரச புத்திரர்களை தாக்க வந்தாள்.

தாடகை ஏற்படுத்திய கல்மழை ரகு வம்சத்தினர் இருவரையும் சூழ்ந்திருக்க, அவர்களை பார்த்த விசுவாமித்திரர், “ராமா, இவள் கொடிய பாபங்கள் செய்பவள், நிஷ்டூரமானவள், இவளுக்கு பெண்ணென்று இரக்கம் காட்டி தயங்கியது போதும், சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்குகிறது, அந்நேரத்தில், ராக்ஷசர்களின் பலமும் அதிகரிக்கும், எனவே ராமா, அதற்கு முன் இவளைக் கொன்றுவிடவேண்டும்”, என்று எச்சரித்தார்.

கல் மழையைப் பொழியும் தாடகை மாய ரூபத்தில் இருந்ததால், அவள் ஹீங்காரம் வந்த இடத்தை கணித்து, ராமர் அம்புகளை எய்து அவளைத் தடுத்தார். தன முயற்சி வீணாவத்தைக் கண்ட தாடகை, ராம லக்ஷ்மணர்களை நோக்கி ஆவேசம்கொண்டு ஓடிவர, ஒரு அஸ்திரத்தால் அவளை மாய்த்தார் ராமர்.

தாடகை மடிந்ததை எண்ணி, இந்திராதி தேவர்கள் “நல்லது, நல்லது”, என்று இருவரையும் வாழ்த்திவிட்டு, விஸ்வாமித்திரரிடம், “ப்ரம்ம ஞானியாகிய நீவிர் பெற்ற அஸ்திர சாஸ்திரங்கள் யாவையும், ராமருக்கு அருளுங்கள். அவர் இவற்றைப் பெற பூரண தகுதியுடையவர். பிற்காலத்தில் அரிய பெரிய செயல்களை, அவர் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இன்று நடந்த இச்செயல் தேவர்களை மகிழ்விக்கிறது, உமக்கு கீர்த்தி உண்டாகட்டும்.”, என்று கூறிச் சென்றனர். இதனால் மனம் உவந்த பிரம்ம ரிஷி, ராமரை ஆரத்தழுவி உச்சி முகர்ந்தார். மூவரும் அன்று இரவுப் பொழுதினை அங்கேயே கழித்தனர்.

அடுத்த நாள், “ராஜகுமாரா! உனக்கு பெரும் புகழும், எல்லாவிதமான சம்பத்துகளும் கிடைக்கப் பெறுவதாகுக. எனக்கு தெரிந்த சகல அஸ்திரங்களையும் உனக்கு உபதேசிக்கிறேன். இவை தேவ, அசுர, கந்தர்வர்கள் முதலானோரையும், அனைத்து சத்ருக்களையும் எதிர்த்து, அவர்களை போரில் ஜெயித்து வசப்படுத்தும் வல்லமை பெற்றவை”, என்று ராமரை ஆசிர்வதித்த  விசுவாமித்திரர், கிழக்கு முகமாக அமர்ந்து, அவருக்கு மந்திரங்களின் மூலமாக அனைத்து விதமான அஸ்திரங்களையும் உபதேசித்தார்.

அவற்றுள் சில:
தண்ட சக்ரம், கால சக்ரம், தர்ம சக்ரம், விஷ்ணு சக்ரம், வஜ்ரம், சிவசூலம், ஐந்திரம், ப்ராஹ்மம், ஐஷீகம், பிரம்மசிரஸ் போன்ற அஸ்திரங்கள்;
மோதகீ, சிகரீ என்ற கதாயுதங்கள்;
தர்ம பாசம், காலபாசம், வர்ண பாசம், வருணாஸ்திரம், நீரிடி, நெருப்பிடி, பிநாகாஸ்திரம், நாராயணாஸ்திரம், ஆஞ்னேயாஸ்திரம், வாயுவாஸ்திரம், ஹயசிரஸ், வித்யாதராஸ்திரம் [கத்தி ரூபமுடையது],  கங்காளாஸ்திரம் கபாலாஸ்திரம் [அஸுரர்களுடையது], போன்ற பலவகையான அஸ்திரங்களை ராமருக்கு விசுவாமித்திரர் அருளிச் செய்தார்.

ஒரே நேரத்தில், இத்தனை விதமான அஸ்திரங்களை பெறுவதென்பது தேவர்களாலும் நினைக்க இயலாதது. எனினும் அவ்வஸ்திரங்கள் எல்லாம் குருவிடமிருந்து உபதேசம் பெற்ற ராமருக்கு அடிமைகளாயின. ராமர் அவற்றை தொட்டு, “நான் நினைத்த பொழுது வரவேண்டும்”, என அவற்றிற்கு உத்தரவிட்டு அனுப்பினார்.

அகமும் முகமும் மலர விஸ்வாமித்திரரிடம் இருந்து மந்திர உபதேசங்களை கொண்ட ராமர் அவரை வணங்கி, “குருவே, உங்கள் அருளால் தேவ அஸுரர்களாலும் வெல்லமுடியாத பெரும்பேறு பெற்றவனானேன். எனினும், இந்த அஸ்திரங்களை ஏவிய பின்னர் திரும்பப் பெரும் வித்தையையும் எனக்கு அருளவேண்டுகிறேன்”. என்று கேட்டார்.

அவர் பணிவில் மனமுவந்த விசுவாமித்திரர், அஸ்திரங்களை திரும்பப் பெரும் வித்தைகளை, “சத்யவான், சத்யகீர்த்தி, த்ரிஷ்டகம், ரபசம், பராங்முகம், பிரசமணம், தைத்யம், விதூதம், மகரம், போன்ற முதலான மந்திரதேவதைகளை தெரிவித்து காமரூபிகளான இவற்றை  நீயே அடையத் தக்கவன்” என்றார்.
அந்த மந்திர தேவதைகள், மனித உருவத்தில் வந்து ராமரைப் பணிந்து நின்றன. “மந்திர தேவதாக்களே,  நீங்கள் எப்போதும் என் ஞாபகத்தில் இருங்கள், நான் நினைத்தபோது வந்து எனக்கு உதவி செய்யுங்கள்”, என்று உத்தரவிட்டார்.

பின்னர், அவர்களது பயணம் செவ்வனே துவங்க, ஒரு பெரும் ரம்மியமான சோலையை அவர்கள் நெருங்கினார்கள். “அந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் சோலை மிகவும் அழகாக இருக்கிறது,  மான்கள் சுதந்திரமாக உலவுகின்றன, பக்ஷிகள் குரல் மதுரமாக கேட்கிறது, இது ஆசிரமம் போல இருக்கிறது, இது யாருடைய ஆசிரமம்?”, என்று ராமர் விஸ்வாமித்திரரைப் பார்த்து கேட்டார்.

“அனைத்து உலகத்தையும் காத்து ரக்ஷிக்கின்ற மஹாவிஷ்ணு தவம் செய்த ஆஸ்ரமம் இது. அக்காலத்தில், தேவர்களையே வெல்ல விரும்பிய, அசுரன் விரோசனுடைய புத்திரனான மஹாபலி சக்ரவர்த்தியை அடக்க, எம்பெருமான் வாமனனாக அவதாரம் எடுத்தார். 

“மூன்றடியை மஹாபலியிடம் தானமாக கேட்டு, விஸ்வரூபமெடுத்து அனைத்து உலகத்திலும் வியாபித்து நின்று, ஒரு அடியை அண்டத்திலும் இன்னொரு அடியை ஆகாசத்தில் வைத்து, மூன்றாமடிக்கு இடம் கேட்க, மஹாபலி தன் தலையில் வைக்குமாறு கூறி, உலகளந்த பெருமானின் ஆசி பெற்றார். மஹாவிஷ்ணு வாமனனாக வசித்த ஆஸ்ரமம் இது. ஒப்புயர்வற்ற இந்த சித்தாஸ்ரமம் எனது ஆஸ்ரமமாக உள்ளது”, என்று கூறி அங்கே அரச குமாரர்களை அழைத்துச் சென்றார்.

அவ்வாசிரமத்தில் இருந்த அனைவரும் இவர்களின் வருகைக்கு மகிழ்ந்து, தக்க மரியாதைகளுடன் உபசாரம் செய்தனர். பின்னர், ராம லக்ஷ்மணர்கள் இருவரும், முனிவரைப் பணித்து நின்று, “ஐயன்மீர், யாகம் புரிவதற்காக்கான விரதம் முதலானவற்றை நீங்கள் துவங்குங்கள், உங்களது யாகம் விக்னமின்றி சீரான முறையில் நடந்து முடியும்”, என்று விச்வாமித்திரரைக் கேட்டு கொண்டனர். அவரும் சர்வ இந்திரியங்களை அடக்கியாள்பவராக தேஜோ முகத்துடன், யாகத்திற்குண்டான விரதங்களை மேற்கொண்டார்.

Advertisement