Advertisement

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் 

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம் 

மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்  

4. விஸ்வாமித்திரரின் கோரிக்கை

அரண்மனையை நெருங்கிய விஸ்வாமித்ர முனிவர், அங்கிருந்த துவாரபாலகனைப் பார்த்து கௌசிகர் குலத்தில் பிறந்தவனும், காதியின் புத்திரனும் ஆகிய விஸ்வாமித்திரன் மன்னனை காண வந்திருப்பதாக தெரிவித்துவிட்டு வா”, என்றார். இதைக் கேட்ட மாத்திரத்தில் துவாரபாலகர்கள் விரைந்து சென்றனர் மன்னனிடம் தகவல் தெரிவிக்க. விஸ்வாமித்திரரின் கோபம் தான் ஊரறிந்த விஷயம் ஆயிற்றே.

பிரம்மரிஷியான விஸ்வாமித்திரர் எதிர் கொண்டு அழைக்க வாயிலுக்கு வந்த தசரத மன்னர், சாஸ்திரப்படி அவரை வரவேற்க, “வேந்தனே, எதிரிகளால் வெல்ல முடியாத பலம் பொருந்தியவனாகவும், நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை சரிவர செய்பவனாகவும், இறை தொண்டு புரிபவனாகவும் நீடூழி வாழ்க”, என்று வாழ்த்தினார் விஸ்வாமித்திரர்.

பின் வசிஷ்டரை நெருங்கி வந்தனம் தெரிவித்து, அவரது நலம் விசாரித்தார். அவையில் இருந்த மற்ற ரிஷிகளின் முகமனை ஏற்று, தக்க பதில் மரியாதை செலுத்திய பின், அவரவர் தத்தமது இருக்கையில் அமர, விஸ்வாமித்திரரும் அவருக்கென வழங்கப்பட்ட சிறப்பான ஆசனத்தில் அமர்ந்தார்.

“முனிவர்களில் சிறந்தவரே, சத்ரிய குலத்தில் பிறந்து, அரசாட்சி புரிந்து ராஜரிஷி என்ற பட்டத்துடன், சாமான்யர்களால் நினைக்க முடியாத தவம் பல புரிந்து பிரம்மரிஷி பட்டம் பெற்றவரே, உமது வருகையால் இந்நாடு புண்ணியம் அடைந்தது. பாலை நிலத்தின் மழை, பிள்ளை இல்லாதவனுக்கு மக்கட்பேறு, வறியவனுக்கு பெருந்தனம் கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சி உண்டாகுமோ, அத்தனை உவகை நான் கொண்டேன். நீவிர் என்ன காரியத்துக்காக வந்திருப்பினும், ஆணையிடுங்கள் இக்கணமே நிறைவேற்றி வைக்க சித்தமாயிருக்கிறேன்.”, தசரதர் கூறினார்.  

“வசிஷ்டர் வழிகாட்டுதலுடன் நடக்கும் மன்னன் இவ்வாறு பணிவுடன் இருப்பதில் வியப்பில்லை. நான் வந்த விஷயத்தைக் கூறுகிறேன், மாரீசன், ஸுபாஹு என்ற இரண்டு ராக்ஷஸர்கள், நான் யாகம் செய்யும்போது இடையூறு செய்கின்றனர். மாமிசத்தையும், ரத்தத்தையும் யாக மேடை நோக்கி வீசி யாகத்தை குலைக்கின்றனர். அவர்களை சபிக்க, எனக்கு ஒரு நொடி ஆகாது. ஆயினும், யாகம் மேற்கொள்ளும்போது கோபம் கிஞ்சித்தும் கூடாதென்பதற்காக அமைதி காக்கிறேன்.”

“இப்போது எனது யாகம் பூர்த்தியாகும் நேரம் வந்து விட்டது, பராக்கிரமசாலியான உனது மூத்த குமாரன் இவ்விரு ராக்ஷஸர்களையும் கொல்ல வல்லவன், மூவுலகிலும் அவனது வீரமும் புகழும் ஓங்க, இப்போதே உனது புதல்வனாகிய, ராமனை என்னோடு அனுப்புவாயாக.”, எனக் கேட்டார் விஸ்வாமித்திரர்.

அவர் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் தசரத மன்னருக்கு மனம் பதறியது நிலைகுலைந்து போனார், தனது அரியாசனத்தில் சரிவர அமரக் கூட முடியாமல் விஸ்வாமித்திரரிடம்  இறைஞ்சும் வகையில் பேசத் துவங்கினார். “என் ராமன் சிறு பிள்ளை அல்லவா?, அகவை 16 ஆகிறது அவனுக்கு. இதுவரை போர்முனையை காணாதவன், ராக்ஷஸர்களை எதிர்த்து யுத்தம் செய்யும் ஆற்றல் அவனுக்கு இருப்பதாக நான் அறியேன். என் படை அனைத்தும் திரட்டிக்கொண்டு நானே வந்து அந்த ராக்ஷஸர்கள் உடன் யுத்தம் புரிகிறேன் என்னை அழைத்துச் செல்லுங்கள். உங்களது யாகம் தடையின்றி நிறைவேறும், அவ்வாறு நிறைவேற்றுவது என் பொறுப்பு.  ஆனால் என் உயிரினும் மேலான ராமனைக் கேட்காதீர்கள்.  அவன் பாலகன், பலகாலம் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்து, பல யக்ஞ யாகங்கள் செய்து, பிறந்த செல்வத்தை என்னிடமிருந்து பிரிக்காதீர்கள் அவன் இல்லாவிட்டால் நான் உயிர் வாழ முடியாது”, என்றெல்லாம் நா தழுதழுக்க கூறிய தசரதர்.., “இங்கு யாகத்துக்கு இடையூறு செய்கின்ற அந்த ராக்ஷஸர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? அவர்களது வல்லமை யாது?”, என்று கேட்டார்.

“ராவணன் என்ற ராக்ஷஸன், புலஸ்தியரின் வம்சத்தில் உதித்த பிரம்மதேவரிடம் வரம் பெற்று பெரும் பலத்துடன் திகழ்கிறான். குபேரனின் சகோதரனும் விஸ்ரவஸின் மகன் ஆகிய அந்த ராக்ஷஸ தலைவன், உங்களுக்கு தொல்லை கொடுப்பதை வழக்கமாக்கி வருகிறான். அவனால் ஏவப்பட்டவர்களே மாரீசன்,ஸூபாஹு என்ற இந்த இரு ராக்ஷஸர்கள். இவர்கள் விரும்பிய உருவை எடுக்கக் கூடியவர்கள்”, என்று தசரதருக்கு விளக்கினார் விஸ்வாமித்திரர்.

இச்செய்தியைக் கேட்டு தசரதர் இன்னமும் கவலை அடைந்தார். “பிரம்மரிஷி, தேவர்கள் அசுரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் ஆகியோர் கூட ராவணனை அழிக்கும் சக்தி அற்றவர்கள், அவ்வாறான வரம் அவன் பெற்றிருக்கிறான். அங்கனம் இருக்க அவனால் ஏவப்பட்டவர்களைச் சிறுவனாகிய ராமனால் என்ன செய்துவிட முடியும்?, அவனை தயைகூர்ந்து விட்டுவிடுங்கள். அவனுக்கு பதிலாய் நான் வருகிறேன். என் குலம் அழியாமல் காக்க உங்களை வேண்டி நிற்கிறேன்”, என்று மனம் கலங்கி தசரதர் மொழிய, கேட்ட முனிவருக்கு கோபம் வந்தது.

“தசரதா! நான் எதுவும் கேட்காமலேயே  கட்டளையிடுங்கள்,  செய்து முடிக்கிறேன் என்றாய். ரகு வம்சத்தில் உதித்தவன் வாக்கு தவறுவது என்பது எஞ்ஞான்றும் கிடையாது. இப்போது உன்னால் நீ உதித்த வம்சத்திற்கு அந்த பழிச்சொல் நேரப் போகிறது. அந்த மன திருப்தியுடன், சகல சம்பத்துகளும் பெற்று சௌக்கியமாக இரு, நான் செல்கிறேன்”, என்று விட்டார். மேன்மையானவர்களின் வசவும், வாழ்த்தாகத்தான் வரும்.

ஆனால் அவர் கோபம் அறிந்த பூமாதேவி நடுங்கியது, மூவுலகும் பதறியது, விஸ்வாமித்திரரின் கோபம் நாட்டிற்கு பெரும் கேடாய் முடியும் என்பதை உணர்ந்த வசிஷ்ட மகரிஷி, மன்னனிடம் பேசினார். “தசரதா!  தர்மம் தவறாதே கொடுத்த வாக்கிலிருந்து வழுவாதே, விஸ்வாமித்திரர் யாருமே அறியாத பற்பல அஸ்திரங்கள் கற்றவர், புதிய அஸ்திரங்கள் படைக்கும் திறமை உடையவர். யாரையும் அழிக்க வல்லமை கொண்டவர் அவர். முக்காலமும் உணர்ந்தவர். ஆயினும் அவரது யாகம் காக்க உன் புதல்வனை அவர் கேட்கிறார் என்றால், அது அவனுக்கு ஆசீர்வாதம்  என்றே கொள்ள வேண்டும். நீ எள்முனையளவும் பயம் கொள்ள தேவை இல்லை. எனவே அவரோடு ராமனை அனுப்பி வைப்பாய்”, என்று அறிவுறுத்தினார்.

வசிஷ்டரின் வார்த்தைகளால், ஓரளவு தெளிந்த தசரதர், மகனை விஸ்வாமித்திரர் உடன் அனுப்பி வைக்க சம்மதித்தார். சேவகனை அழைத்து, லஷ்மணனோடு கூடிய ராமரை அவைக்கு வர பணித்தார். அன்னலும் வந்தார் இளவலுடன்.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்தைக் காக்க, ராமரைக் கேட்டாரே அன்றி லக்ஷ்மணனை அழைக்கவில்லை. தந்தை தசரதரும் ராமனை அனுப்பி வைக்க மனம் கலங்குவதாகவே, வால்மீகி குறிப்பிட்டுள்ளார். குலகுருவான வசிஷ்டரும், மகன் என்று ஒருமையில் குறிப்பிடுகிறாரேயன்றி, லக்ஷ்மணனை பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் ராமரை அவைக்கு அழைக்கும்போது, லக்ஷ்மணனோடு கூடிய ராமர் வரவழைக்கப்பட்டார் என்று உள்ளது. அதாவது, ராமர் செல்கிறார் என்றால் அவரது நிழலான லக்ஷ்மணனும் அவரை தொடர்வார் என்பது மறை பொருள். நிழல் என்றாவது நிஜத்தை நீங்கி இருக்கிறதா?

ஆன்றோர்கள் அவையோர்கள் ஆசீர்வதிக்க, மந்திரங்கள் முழங்க விஸ்வாமித்திரரின் பொறுப்பில் ராம லக்ஷ்மணர்கள் விடப்பட்டனர். அப்போது நல்ல சகுனங்கள் தோன்றின, சுகந்த மணமுள்ள காற்று வீசியது.

பிரம்ம தேவரை நிழல்போல் தொடர்கின்ற அஸ்வினி தேவர்கள் போலவும், பரம்பொருளான ஈஸ்வரனை தொடர்ந்து செல்லும் ஸ்கந்தன், விசாகன் போலவும், ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்திரரை தொடர்ந்து சென்றனர்.விசாகன் என்பது ஸ்கந்தனின் ஒரு அம்சம், என்று புராணத்தில் வருகிறது.

சரயூ நதிக்கரையில் தென்திசையில் சிறிது தூரம் சென்றபின், ரிஷி விஸ்வாமித்திரர் ராமரை அழைத்து, “இனியவனே, பசி, களைப்பு, பிணி ஏற்படாமல் இருக்க நான் உனக்கு என் தவத்தினால் பெற்ற பலை, அதிபலை என்ற இரு மந்திரங்களை உபதேசிக்கிறேன். அறிவிற் சிறந்தவனாகவும், ஆராய்ந்து நோக்கும் தெளிந்த  புத்தி உள்ளவனாகவும், அழகிற் சிறந்தவனாகவும், புகழிலும் வீரத்திலும் உனக்கு நிகர் இல்லாதவனாகவும் விளங்குகின்றவனே, நீயே இந்த மந்திரத்தை பெற தகுதி உள்ளவன்”, என்று மந்திரங்களை உபதேசித்தார். அதைக் கேட்டதும், ராமரின் முகம் தனி சோபையுடன் மிளிர்ந்தது. அந்தி சாய்ந்ததால், சரயு நதிக் கரையிலேயே, ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்திரருடன் அந்த இரவை அங்கேயே கழித்தனர். பொழுது புலர்ந்தது.

ஜெய் ஸ்ரீ ராம் 

Advertisement