Advertisement

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அஸாத்யம் கீம் தவ பிரபோ

ராம தூத மஹாப்ராக்ஞ்ய

மம கார்யம் ஸாதயா

ஸ்ரீ ராமர் ஜனனம்

ரிஷ்யசிருங்கர் தசரத மன்னருக்காக புத்ரகாமேஷ்டி யாகத்தை* ஆரம்பித்த அதேவேளையில், வானுலகில் தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், சான்றோர்கள் அனைவரும் பிரம்ம தேவரை அணுகி, “சுவாமி, நீங்கள் கொடுத்த வரத்தின் பலனால், ராவணன் என்ற ராக்ஷஸன் எங்களை படாத பாடு படுத்துகிறான். அவனது தவத்தை மெச்சி நீங்கள் வரம் கொடுத்தீர்கள். ஆனால் துர் குணமுள்ள ராவணனோ மூன்று உலகங்களையும் தனது அட்டூழியங்களால் நடுங்கச் செய்து வருகிறான். ரிஷிகள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் தேவர்கள் என்று அனைவரையும் கேவலப்படுத்த முயல்கிறான். அவனைக் கண்டு பஞ்சபூதங்களும் நடுங்குகிறது. எங்கள் இடர் தீர வழி கூறுங்கள்”, என்று விண்ணப்பித்தனர்.

“ராவணன் என்னிடம் கேட்டுப் பெற்ற வரம், தேவர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள்  அசுரர்கள் ராக்ஷஸர்கள் கையால் தன்னுடைய  மரணம் நிகழக்கூடாது என்பதுதான். மனிதர்களை ஈ, எறும்புக்கு நிகராக கருதியதால், அவர்களால் தனக்கு மரணம் உண்டாகும் என்று அவன் கருதவில்லை. ஆக மனித பிறவியால் நிச்சயமாக அவனுக்கு மரணம் உண்டு, மற்ற வகையில் ராவணனுக்கு மரணம் என்பது கிடையாது”, என்று பிரம்மதேவன் பதிலளித்தார்.

அப்போது அங்கு வந்த  மகாவிஷ்ணுவைப் பார்த்து  ரிஷிகள், கந்தர்வர்கள் முதலானோர் அவரை நமஸ்கரித்து, “எங்கள் துயர் நீங்க நாராயணா நீரே  அருள்புரிய வேண்டும். அயோத்தியில், முனிவர்களுக்கு ஒப்பான தசரதமன்னன் மக்கட்பேறு வேண்டி யாகம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய மூன்று மனைவிகளிடத்தும், உங்களுடைய அம்சத்தை பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு மகனாக நீங்கள் தோன்றவேண்டும். தான் பெற்ற வரத்தால் தலைகால் புரியாமல் ஆடும் ராக்ஷச ராவணனை மானுடனாகவே நீங்கள் வதம் புரியவேண்டும்”, என்று கேட்டுக் கொண்டனர்.

“அங்ஙனமே ஆகட்டும், நல்லோர்களை துன்புறுத்தி இன்பம் காணும் தசகண்ட ராவணனை அழிக்க, யாமே மானுடனாய் வருகிறோம்.  உலக நன்மைக்காக, மக்களைத் துன்புறுத்தும் ராவண சம்ஹாரம் தங்களின் விருப்பப்படியே நிகழும், பயம் விடுத்து, கவலை நீங்கி அமைதியாய் இருங்கள்.”என்று அருள் புரிந்தார்.
அவ்வாறு கூறிய ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி, தனது அம்சத்தை நான்கு பாகங்களாக பகிர்ந்துகொண்டு, தசரதரை தந்தையாக அடைய மனதில் தீர்மானித்தார்.

அதே சமயத்தில் ரிஷ்யஸ்ருங்கர் தலைமையேற்று நடத்தும் தசரத மன்னனின் புத்ர காமேஷ்டி யாகத்தின் வேள்வித்தீயில் இருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. சூரியனைப் போன்ற தேஜசுடனும், கம்பீர தோற்றமும் கொண்டிருந்த அந்த உருவதின் கையில் ஒரு தங்கத்திலானான பாத்திரம் இருந்தது. வெள்ளியினால் ஆன மூடியைக் கொண்ட அப்பாத்திரத்தை தசரத மன்னனிடம் கொடுத்து, “அரசனே! பிரம்மனைச் சேர்ந்தவனாக என்னை அறிந்துகொள். மேன்மையானவனே! மக்கட்பேறு வேண்டி தேவர்களை நோக்கி நீ செய்த இந்த யாகம் பலிதமானது. என் கையில் இருக்கும் இந்த பாயசத்தை உனது மூன்று மனைவிகளுக்கும் கொடுப்பாயாக”, என்று உரைத்துவிட்டு அவ்வுருவம் அரூபமானது.

இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் தசரதர் புளகாங்கிதமடைந்தார். சிறிதும் தாமதிக்காமல், அருகிலிருந்த பட்ட மகிஷியான கௌசல்யைக்கு, பாயாசத்தில் பாதியை பகிர்ந்துகொடுத்தார். பின் அந்த பாதியில் பாதியை, இரண்டாவது மனைவியான சுமித்திரைக்குக் கொடுத்தார். பின் மீதமிருந்த பாகத்தில்  பாதியை கைகேயிக்கு கொடுத்து பின், மிச்சமிருந்ததை சுமித்தரைக்கு கொடுத்தார். [(1/2)+(1/4+1/8)+(1/8)]


தசரதருக்கு ஆயிரக்கணக்கான மனைவியர் உண்டு என்பது வால்மீகி ராமாயணத்தில் என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை கூறப் படவில்லை. அயோத்தியா காண்டத்தில் ஒரு இடத்தில் தசரதருடைய அந்தப்புரத்தில் 350 பெண்மணிகள் இருந்ததாக குறிப்பு வருகிறது, தவிரவும் அவர்கள் ராமரின் சிற்றன்னைகள் என்று கூறப்படுகிறது, ஆயினும் அவர்கள் தசரதருடைய மனைவிகள் என்ற சிறு குறிப்பு கூட எங்கும் காணப்படவில்லை.

எனவே, கௌசல்யை, சுமித்திரை, கைகேயி இவர்களே தசரதர் மனைவிகள் எனக் கொள்ளலாம். மஹாவிஷ்ணுவின் அம்சத்தில் பாதியாக ராமரும், கால் பங்காக லக்ஷ்மணரும்,  அடுத்த பாதியாக பரத சத்ருகனரும் கொண்டு பிறந்தனர்.அங்கே வானுலகில் பிரம்மதேவர், மானுடப் பிறப்பெடுத்த ஸ்ரீ ராமருக்கு உதவி செய்யும் பொருட்டு மாய வித்தைகளை அறிந்தவர்களையும், நீதி சாஸ்திரத்தை போதிக்கக் கூடியவர்களையும், தேர்ந்த அறிவாளிகளையும், வீரர்களையும், வானர உருக் கொண்டவர்களாக யக்ஷ கின்னர, அப்சர பெண்கள் துணையுடன் சந்ததிகளைப்  படைக்குமாறு தேவர்களைப் பணித்தார்.

ராமருக்கு உதவி செய்ய பிரம்மதேவர் ஏற்கனவே படைத்த கரடி வேந்தனான ஜாம்பவானைத் தவிர, வானர புருஷனாகிய வாலியை இந்திரன் படைத்தார். அவனது சகோதரனான சுக்ரீவனை ஒளிமிக்க சூரியன் தனது அம்சத்துடன் படைத்தார். நல்ல மதியூகம் படைத்த நளன் என்ற வானரனை தேவ சிற்பியான விஸ்வகர்மா படைத்தார். புத்தியிலும் பலத்திலும், வேறு யாரும் நிகரில்லாதவராய் அனுமனை வாயுதேவன் படைத்தார். இவர்கள் இச்சாதாரிகள். அதாவது, நினைத்த மாத்திரத்தில் வேறு உருவம் எடுக்கக்கூடியவர்கள், சாத்திரத்தில் விற்பன்னர்கள். மனோ பலம், தேக பலம் பொருந்தியவர்கள்.

சஞ்சல புத்தி, சட்டென உணர்ச்சி வசப்படுதல், சேஷ்டைகள் நிரம்பியவர்கள் என்று சில இடங்களில் இவர்கள் வர்ணிக்கப்பட்டாலும், அவர்களது தொலைநோக்குப் பார்வையும், பலமும், புத்திக்கூர்மையும் அளவற்றதாக இருந்தது.


அவர்களது இருப்பிடமான கிஷ்கிந்தை தேர்ந்த கட்டுமானதுடன் கூடிய மாளிகைகளைக் கொண்டதாகவும், அகலமான தெருக்களை உடையதாகவும் இருந்தது. இந்த வானரர்கள், இசைப்பதில் வல்லவர்களாக, ஆடை, பொன் ஆபரணங்களை அணிந்தவர்களாக சகல செல்வங்களையும் கொண்டவர்களாக இருந்தனர். இந்த கிஷ்கிந்தையை, வாலி மன்னராக இருந்து பரிபாலித்து  வந்தார்.
அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் முடிந்த ஒரு வருடம் அதாவது பன்னிரெண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில், சுக்லபக்ஷ நவமி திதியில், புனர்பூச நக்ஷத்திரத்தில், கடக லக்னத்துடன்,  கௌசல்யாவின் புதல்வனாக ஸ்ரீ ராமர் ஜனித்தார். அவர் அவதரித்த நேரத்தில் சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தன.

கைகேயிக்கு பூச நக்ஷத்திரத்தில் பரதனும், சுமித்திரைக்கு ஆயில்ய நக்ஷத்திரத்தில் லக்ஷ்மண, சத்ருகனனும் பிறந்தார்கள். சுப சகுனங்கள் தோன்றின, வானம் மழையாய் பொழிந்து தன் ஆசியை தூவியது. மக்கள் மனம் மகிழ்ந்து வாத்தியம் இசைத்தனர். குல குருவான வசிஷ்டர் அனைத்து குழந்தைகளும் முறையே ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருகன் என்று பெயர் சூட்டினார்.


[வீட்டின் பெரியவர்களே பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் முறை என்பது தொன்று தொட்டு நம் நாட்டில் இருந்து வருகிறது. தற்காலத்தில், அது கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருவதோடு மட்டுமன்றி, அர்த்தமில்லா பெயர்களும், வாயில் நுழையாத பெயர்களும்,  ஆங்கில எழுத்துக்களை கொண்டு கணிக்கப்படும் எண் கணிதம் கூறுவதை வைத்து தத்தமது வாரிசுகளின் பெயரில் புதுமையை புகுத்துகிறார்கள், இன்றைய தலைமுறையினர். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் “வீக்ஷா”, என்று பெயர் வைத்துள்ளனர். எந்த அகராதியைப் புரட்டினாலும் அர்த்தம் வராத ஒரு பெயர். (தெரிந்தால் சொல்லுங்கள் தோழமைகளே) ஆங்கிலத்திலோ அது ‘பலமில்லாத’ என்ற அர்த்தத்தில் வரும். என்னவென்று அக்குழந்தையை அழைப்பது?]

குழந்தைகளுக்கு நடத்தப்பட வேண்டிய அனைத்து விதமான யாகம் முதலான வைதீக சடங்குகள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டன. ராமாயண பால காண்டத்தில் சிறுவர்களது குறும்புத்தனங்களோ, பராக்கிரமங்களோ பெரிதாக சிலாகித்துக் கூறப்படவில்லை. சாதாரணமான மன்னர் குல குழந்தைகளாகவே ராம, லட்சுமண, பரத, சத்ருகனர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
நால்வரும் முறையாக வேதங்களை கற்றுணர்ந்து வீரம் நிறைந்தவர்களாகவும் உலகத்தைக் காப்பது முதற் கடமை என பயிற்றுவிக்கப்பட்டும், நல்ல ஞானம் கொண்டவர்களாகவும் வளர்ந்தனர்.


ராமரின் நிழலாக லக்ஷ்மணர் வளர்ந்தார் என்றால், பரதனை தொடர்பவனாக சத்ருகனன் வளர்ந்தார். வில்வித்தை பயில்வதிலும், தர்ம சாஸ்திரங்களை கற்று அறிவதிலும், பெரியவர்களுக்கு மரியாதை செய்து பணிந்து நடப்பதிலும் விருப்பம் கொண்டவர்களாக நால்வரும் திகழ்ந்தனர்.

நற்குணங்கள் கொண்ட மகன்களை பெற்ற தசரதர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக எண்ணி குலகுருவான வசிஷ்டர் முதலான ஆச்சார்யார்களுடனும் மந்திரிகளுடனும் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். அந்நேரத்தில் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் அவரது அவையை நாடி வந்தார்.

ஜெய் ஸ்ரீ ராம் 

Advertisement