Advertisement

புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்

2. தசரதர் செய்த யாகம்

“சிரத்தையுடன் கேட்பவர்களுக்கு சகல செல்வங்களையும், மன அமைதியையும் அளிக்கவல்ல, ராமாயணத்தை அவையோரின் ஆசிகளுடன் நாங்கள் இசைக்கத் தொடங்குகிறோம்”, என்று லவன், குசன் இருவரும் சபையை வணங்கி காவியத்தை பாட ஆரம்பித்தனர்.

[ இங்கே ஒரு கருத்தினை பதிவிடுகிறேன், ஸ்ரீ ராமர், ராவண சம்ஹாரத்திற்காக பூமியில் அவதரித்தார் என்று மனதில் இருத்திக் கொண்டு ராமாயணத்தை படிப்பது பலன் தரும் என்றாலும், ராமரை சாதாரண மானுடனாக பாவித்து, ராமாயணம் அவரது வாழ்க்கை வரலாறு என்ற கோணத்தில் ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், அது சால சிறந்தது என்பது அடியேனின் அபிப்ராயம்.

தர்மத்தின் வழி நடப்பது எவ்விதம் என்று, ஸ்ரீ ராமனாய் பூவுலகில் பிறந்து, நமக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காண்பித்திருக்கிறார். இதை இதிகாசமாக பாவித்து, பக்தியுடன் படிப்பதையோ கேட்பதையோ காட்டிலும், வாழ்வியல் தத்துவமாக, அவரது வரலாறாக படிப்பது உத்தமம் என்று நினைக்கிறேன்.

அவர் அவதார புருஷனாகையால், தந்தை சொல்படி நடந்தார், பரதன் தந்த பதவியினை மறுத்தார், இலங்கைக்கு பாலமிட்டார், சீதையை மீட்டார் என்று புரிந்து கொள்வதைவிட,

தந்தை சொல்லை மீறுவது கூடாது என்ற தர்மத்தின் படி அவர் செயலாற்றினார், அஸ்திர சாஸ்திரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தும், ஒரே ஒரு அஸ்திரத்தில் ராவணனை கதிகலங்க வைக்கக்கூடிய வில்லாளியாய் இருந்தும், கடல் கடந்து சென்று போரிட்டு, ஸீதாதேவியை மீட்டு வந்தார்.

அவ்வளவு தூரம் போவானேன்? அனுமார் லங்கை சென்று சீதாதேவியை பார்த்த மாத்திரத்தில், அவரை ராமரிடம் தூக்கி வரலாகாதா? ஏன் செய்யவில்லை? மனைவியை தூக்கிச் சென்றவனை, போரில் வீழ்த்தி மீட்டுச் செல்வதே கணவனுக்கு கீர்த்தி என்பதால், அதுவே க்ஷத்திரிய தர்மம் என்பதால், அவ்வாறு செய்யவில்லை.

ராமர்…

நின்றால்,

நடந்தால்,

பேசினால்,

அழுதால்,

கோபமுற்றால்,

போரிட்டால்,

ஏன் காதல் செய்தால் கூட அனைத்தும் தர்மப்படியே.

எது தர்மம்? என்று கேள்வி வருகிறதா? எதை செய்யும்போது, ஒருவனது மனதும் அறிவும் நேர்கோட்டில் நிற்குமோ அதுவே தர்மம்.

சர்வ நிச்சயமாக உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தர்மம் தெரியும். தான் செய்யபோகும் செயல், சரியா? தவறா? என்பது அறிவுத்தெளிவுள்ள ஒவ்வொருவனுக்கும் கண்டிப்பாக தெரியும். ஆனால் அதன்படி நடப்பது? நடந்து காண்பித்தார் நம் பாட்டுடைத்தலைவன். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

ராமர் – மனத்துக்கண் மாசிலன். ]

இனி கதைக்கு வருவோம்…

சரயு நதிக்கரையில் கோசலம் என்ற ஒரு நாடு இருந்தது. அந்த நாடு உணவுப் பொருள்களுக்கு சற்றும் பஞ்சமின்றி எல்லா செல்வங்களையும் பெற்று பெறும் புகழுடன் விளங்கியது. அந்நாட்டில் அயோத்தி என்ற நகரை நிர்மாணித்தார் வைவஸ்வத மனு,

அவரே ஜீவராசிகளின் தோற்றத்துக்கும் காரணமானவர் என்று கூறப்படுகிறது. அவர் வம்சாவழி வந்த சாகரன்.. பூமியை வெட்டியதால் கடல்கள் உருவானதாகவும் அவன் சந்ததியில் இக்ஷ்வாகு எனும் கீர்த்தி மிக்க மன்னன் பிறந்து மகத்தான ஆட்சி புரிந்தார்.

இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலான மன்னர் தசரதர், அந்நாட்டை சிறப்பாக  ஆண்டுவந்தார். அவர், வேதங்கள் அறிந்தவர், மகரிஷிக்கு நிகரான ராஜரிஷி என  போற்றப்பட்டவர், இந்திரியங்களை அடக்கியவர், செல்வத்தில் குபேரனுக்கு நிகரானவர். அவருக்கு ஆலோசனைகள் கூறுவதற்கு, ராஜநீதி அறிந்த மதியூக மந்திரிகள் இருந்தனர்.

அயோத்தியா நகரில் வாழ்ந்த மக்கள் நேர் வழி செல்லும் குணமுடையவர்களாக, பேராசையின்றி தெய்வத்தை போற்றும் குணத்துடன் மன மகிழ்வுடன் வாழ்ந்துவந்தனர். பொய், புரட்டு திருட்டு அற்றவர்களாக, பொறாமை என்பதை அறியாதவர்களாக, ராஜ விசுவாசத்துடன், பெருந்தன்மையானவர்களாக, விருந்தோம்பலை வாழ்வின் நெறியாக கொண்டு வாழும் மக்களாக இருந்தனர்.

அக்ரோணி சேனைகளும், பலம் பொருந்திய யானைப் படையும், திறன் வாய்ந்த குதிரைப் படையும், தீரம் அமையப் பெற்ற காலாட் படையும் கொண்டதாக, அயோத்தி இருந்தது. துரோகம், நயவஞ்சகம், சூழ்ச்சி இல்லாத வீரர்களைக் கொண்ட நாடாக அயோத்தி திகழ்ந்தது.

சிறப்புக்கள் பொருந்திய தசரத சக்கரவர்த்திக்கு மக்கட்பேறு  இல்லாதது நிவர்த்திக்க முடியாத குறையாக இருந்தது. அஸ்வமேதயாகம் செய்தால்  அந்த குறை நீங்கலாம்  என்ற எண்ணம் அவருக்கு தோன்ற, ஏழு மந்திரிகள் அடங்கிய, தனது மந்திரி சபையைக் கூட்டி அது பற்றி விவாதித்தார். அவர்கள் அதை முழுமனதோடு ஏற்க, மந்திரிகளில் ஒருவரான சுமந்தரரிடம் கூறி, குலகுருவான வசிஷ்டர் மற்றும் ஆச்சாரியார்களை அவைக்கு வரவழைத்தார்.

வேதங்களைப் கற்றறிந்த வாமதேவர், காசியபர், ஜாபாலி, ஸுயக்ஞர் ஆகியோருடன் வசிஷ்ட மகரிஷியும் வர, அவர்களிடம் அஸ்வமேத யாகம் செய்ய  உத்தேசித்து இருப்பதாக தசரதர் கூற, அவர்கள் அனைவரும் மகிழ்ந்து ஏகமனதாக தசரதரின் எண்ணத்தை வரவேற்றனர்.

இந்த யாகத்தை தலைமை ஏற்று நடத்த ரிஷ்யஸ்ருங்கர் என்பவரே தகுதியானவர் என்று சுமந்திரர் முன்மொழிந்தார். அவரைப் பற்றிய விவரங்களைக் கூறுமாறு தசரதர் கேட்க,

சுமந்திரர் பின்வருமாறு கூறலானார்.

“காசியபமுனிவரின் புதல்வரான புகழ்பெற்ற விபாண்டகரின் மகன் ரிஷ்யசிருங்கர் ஆவார். வனத்திலேயே பிறந்து தந்தைக்கு சேவை செய்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வெளியுலகம் அறியாமல் வாழ்ந்து வந்தார் ரிஷ்யஸ்ருங்கர்”.

“அதே காலகட்டத்தில் அங்கதேசம் என்ற நாட்டில் கடும் வறட்சி ஏற்பட, அதன் மன்னனான ரோமபாதன், வறட்சி நீங்கி, மக்கள் வளமோடு வாழ வழிகூறுமாறு அறிவார்ந்த பண்டிதர்களிடம் கேட்க,  பாவம் என்று சொல்லையே இதுவரை அறிந்திராத ரிஷ்யஸ்ருங்கரின் பாதம் அங்கதேசத்தில் பட்டால், மழை பொழியும், நாடு செழிக்கும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்”.

“ஆனால், ரிஷ்யஸ்ருங்கரின் தந்தை விபாண்டக ரிஷி, இயல்பிலேயே மிகக் கோபம் கொண்டவர் என்பதால் அவரை நெருங்க அனைவரும் அஞ்சினர். எனவே, பெண்களை இதுவரை பார்த்தேயிராத ரிஷ்யசிருங்கர் இருக்கும் வனத்திற்குள், அவர்களை அனுப்பி தந்திரமாக அங்க தேசத்திற்கு அழைத்து வந்தார் ரோமபாதர். அவர் காலடி பட்டதும் மழை பொழிந்தது, நாடு செழித்தது”.

அங்க தேச மன்னனான ரோமபாதரும் மனமகிழ்ந்து அவரது மகளான சாந்தையை…ரிஷ்யஸ்ருங்கருக்கே மணமுடித்துக் கொடுத்தார். அவரை தந்திரமாக அங்கதேசத்திற்க்கு  வரவழைத்தமைக்கு விபாண்டகரிடமும், ரிஷ்யஸ்ருங்கரிடமும் மன்னிப்பு வேண்டினார்.  இவ்வாறான விஷயங்களை முக்காலமும் அறிந்த, இகபரத்தில் பற்றில்லாதவருமான மேன்மையான ரிஷி, சனத்குமாரர் என்னிடம் பகிர்ந்தார். கூடவே வருங்காலத்தில் தசரத சக்கரவர்த்தி செய்யப்போகும் அஸ்வமேதயாகம், ரிஷ்யஸ்ருங்கரின் தலைமையில் நடக்கும் என்பதையும் அவர் முன் கூட்டியே தெரிவித்தார் என்று, சுமந்திரர், தசரத மன்னரிடம் தெரிவித்தார்.

“ஆஹா… சுமந்திரரே! அருமையான தகவல்களை கூறினீர். உடனடியாக எனது நண்பனான ரோமபாதனின் அங்கதேசம் சென்று, அவரது மருமகனான ரிஷ்யஸ்ருங்கரை அழைத்துவர, மந்திரிகள், சான்றோர்கள் துணையுடன் செல்ல ஆயத்தமாகிறேன்” என்றுரைத்தார், தசரத சக்ரவர்த்தி. அங்ஙனமே, அங்கதேசம் பயணப்பட்டார் மன்னர் தசரதர்.

ரோமபாதரின் அரண்மனைக்கு சென்றவர், ரிஷ்யஸ்ருங்கரையும், அவரது மனைவியான சாந்தையையும் முக்கியமான காரியத்திற்காக தன்னுடன் அயோத்தியா அனுப்புமாறு ரோமபாதரிடம் கேட்க, அவர் அனுமதியுடன் இருவரும் தசரத சக்ரவர்த்தியுடன் புறப்பட்டனர்.

அஸ்வமேதயாகத்திற்கான ஏற்பாடுகள் வசிஷ்ட மகரிஷியின் மேற்பார்வையில் துவங்க, மந்திரிகள், பண்டிதர்கள் மற்றும் ரிஷிகள் அதற்கான ஒத்துழைப்பை நல்க, மனம் மகிழ்ந்த தசரதர் தனது மனைவிகளான கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோரிடம் இந்த நற்ச்செய்தியை கூறி, அதற்குத் தகுந்த விரதம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவர்களும் மனமுவந்து விரதத்தை மேற்கொண்டனர்.

யாக சாலைகள் அமைக்கப் பெற்றன. காசிராஜன், கேகய ராஜன்,  ரோம பாதன் ஜனகர் போன்ற மன்னர்களை மந்திரி சுமந்திரரே நேரில் சென்று, யாகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பல மன்னர்களும் சிற்றரசர்களும், வேத சாத்திர விற்பன்னர்களும், பண்டிதர்களும் குழுமி இருக்க, வசிஷ்டர், “யாகம் முடியும்வரை செய்யப்படும் தானங்கள் ஆத்மார்த்தமாகவும், கிஞ்சித்தும் அலட்சியம் இல்லாமலும் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அது மன்னனுக்கு கேடு விளைவிக்கும் எனவே எந்த விதமான தானமாக இருந்தாலும், அதை பெறுபவர்கள், மன்னனை உய்விக்க வந்தவர்கள் என்பதை உத்தேசித்து,  தகுந்த மரியாதை செய்து பணிவாக கொடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அஸ்வமேத யாகத்திற்காக, சர்வ லட்சணங்களும் உடைய குதிரை ஒன்று புவியை வலம்வர அனுப்பப்பட்டது. அது சில காலம் கழித்து யாராலும் தடுத்து நிறுத்த படாமல் அயோத்தியா வந்தடைந்தது.(யாரவது / எந்த மன்னாவது குதிரையை தடுத்து நிறுத்தினால், எந்த ஒரு மன்னர் யாகம் நடத்துகிறாரோ அவரோடு போரிட, அஸ்வத்தை நிறுத்தியவர் அழைப்பு விடுப்பதாக அர்த்தம். யாகம் செய்யும் மன்னர், அவ்வாறு எதிர்ப்பவனை போரில் வெல்ல வேண்டும்).

அக்குதிரையின் அட்டியின்ற வரவினால், மக்கள் மகிழ்ந்தனர். அஸ்வமேத யாகத்திற்கான ஹோமம் துவங்கியது,  வேத கோஷங்கள் விண்ணதிர முழங்கின. மந்திரங்கள் ஓதப்பட்டது. நாட்டு மக்கள் கூட்டமாக வந்து, யாகம் சிறப்பாக அமையட்டும் என்ற பிரார்த்தனைகள், வாழ்த்துக்கள் நல்கி, தசரதர் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் முதலான தானத்தைப் பெற்று, மனநிறைவுடன் சென்றனர்.

ஆன்றோர்கள் வாழ்த்த, சாஸ்திர தர்மத்துடன் செய்யப்பட்ட யாகம் தூய்மைக்கு பங்கம் இல்லாமல் சிறப்புற நிறைவுற்றது.

மாமன்னர்களால் மட்டுமே செய்யக்கூடிய அஸ்வமேத யாகத்தை பூர்த்தி செய்த உவகையுடன் மன்னர் தசரதர் ரிஷ்யசிருங்கரை அணுகி, “மேன்மை பொருந்தியவரே! எம் குலம் வாழையடி வாழையாக வளர மக்கட்பேறு வேண்டும் என்கின்ற எனது விருப்பம் நிறைவேற மேலும் ஏதாவது  செய்யவேண்டி இருந்தால், அதைக் கூறி எம்மை வழிநடத்த வேண்டும்”, என்று பணிவுடன் விண்ணப்பித்தார்.

“உன் வம்சம் கீர்த்தி அடையும் வகையில் உனக்கு நான்கு மகன்கள் பிறப்பார்கள், அதர்வண வேதத்தில் கூறப்பட்டிருக்கும் ‘புத்திரகாமேஷ்டி’ யாகம் செய்வது, நிச்சயமாக அந்தப் பலனை உனக்கு தரும். கவலை வேண்டாம், யாமே அந்த யாகத்தை முன்நின்று நடத்தி, உன் குறையை நிவர்த்திப்போம்”, என்று ரிஷ்யசிருங்கர், தசரதருக்கு ஆசி வழங்கினார்.

ஜெய் ஸ்ரீ ராம்

Advertisement