Advertisement

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா

பரசுராம கர்வ பங்கம் & அயோத்தி திரும்புதல்

சீதாராமரோடு நான்கு திருமணங்களும் முடிந்த இரவு கழிந்ததும் மறுநாள் விஸ்வாமித்திரர், வடக்கு நோக்கி செல்ல தீர்மானித்து, தசரதர் மற்றும் அவரது புதல்வர்கள் அனைவரையும் வாழ்த்தி, ஜனகர் வசிஷ்டர் முதலான ரிஷிகளிடமும் விடைபெற்று கிளம்பினார். பின், தசரதருக்கு தனது பரிவாரங்களுடன் கிளம்ப, ஜனகர் தங்கம், வெள்ளி, கலை நயமிக்க பாத்திரங்கள், யானைகள், குதிரைகள் என எண்ணிலடங்கா செல்வங்களை சீதனமாக மகள்களுக்கு கொடுத்தவர், சிறுது தூரம் அவர்களோடே பயணித்து அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

குல குரு, ரிஷிகள் முன்னே செல்ல, அவர்களைத் தொடர்ந்து மந்திரி பரிவாரங்களுடன் தசரதர் குடும்பத்தோடு செல்ல, அங்கு பறவைகள் அபசகுனமாக கூச்சல் போட்டன. ஆனால், மிருகங்கள் வலஞ்சுழியாக வந்தன. தசரதர் இப்படிப் பட்ட சகுனங்களைப் பார்த்து, “இவ்வாறான நிமித்தங்கள் சற்று கலக்கம் தருபவையாக இருக்கின்றன, இவற்றின் பலன் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு வசிஷ்டர், “விரைவில் நமக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறதென்று பறவைகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை வந்த வேகத்திலேயே மறையுமென்பதை மிருகங்கள் உணர்த்துகின்றன, எனவே அச்சமோ, கலக்கமோ கொள்ளத்தேவையில்லை” என்று தசரதருக்கு சமாதானம் சொன்னார்.

சற்று நேரத்தில் பூமியைச் சுழற்றி அடிக்கும் பெருங்காற்று கிளப்பியது. திக்குகள் தெரியாத வண்ணம் இருள் சூழ்ந்தது.காற்றினால் எழும்பிய தூசு கண்களை மறைத்தது. அப்போது, மின்னல் போன்ற வில்லுடன், மற்றொரு கையில் கோடாரியுடன், ஒளி பொருந்திய முகத்துடன், ஜமதக்கினியின் புதல்வரான  பரசுராமர் தோன்றினார்.

சர்வேஸ்வரனைப் போல ஒளி பொருந்திய முகத்துடன் ராமரை பார்த்துக் கொண்டிருந்த பரசுராமர் வருகையை அறிந்த ரிஷிகள் மற்றும் ஆன்றோர்கள் தங்களுக்குள்ளாக, “இவரது தந்தை ஜமதக்னியை க்ஷத்ரியர்கள் அழித்தார்கள் என்பதால் பழிக்கு பழியாக மன்னர் குலத்தையே வேரறுக்க செய்தவர் அல்லவா? ஆனால் சாந்தமடைந்து விட்டார் என்பதாக அறிந்தோமே? மீண்டும் அவ்வாறு எண்ணம் கொண்டாரோ?”, என்று சிறிது கலக்கத்துடன் பேசிக் கொண்டனர்.

பரசுராமர் ராமரைப் பார்த்து, “தசரத புத்ர ராமா, சுபாஹு மாரீச, தாடகை முதலானோர்களை நீ வெற்றி கொண்டதை அறிந்தோம். மேலும் அகலிகை சாப விமோசனம் குறித்தும், மேன்மையான சிவதனுசில் நாணேற்றியதையும் அதை முறித்ததையும் கேள்வியுற்றோம். சிவதனுஸை கையாண்டது மிகவும் மெச்சத்தக்க காரியமே. இதோ என்னிடமிருப்பது அதைப் போன்றதொரு பிரசித்தி பெற்ற வில், இது என் தந்தை ஜமதக்னீ-யால் எனக்கு கிடைத்தது”

“உனது வலிமையை நிரூபிக்க இந்த தனுசில் நாணேற்றி பாணம் தொடுப்பாயாக. அப்படி செய்தால், எனக்கு சமமானவென்று உன்னைக் கருதி உன்னோடு போர் புரிவேன், அஃதில்லையாகின், தோல்வியை ஒப்புக்கொண்டு உன் வழியே செல்வாய்”, என்று கூறினார்.

பரசுராமரின் இந்த பேச்சால் கலக்கமடைந்த தசரதர், “ஸ்வாமி, தாங்கள் ப்ராஹ்மணரல்லவா?, வேதம் ஓதுவதை விரதமாக கொண்டவரே, தாங்கள் இருபத்தியொரு முறை மன்னர் குலத்தை நிர்மூலம் செய்த பாபத்தை போக்க யாகம் மேற்கொண்டீர். ப்ருகு வம்சத்தின் வாரிசாகிய தாங்கள், இந்திரனிடம் ஆயுதங்களை விட்டொழித்ததாக வாக்கு கொடுத்திருக்கிறீர். அப்போது காஸ்யப முனிவருக்கு இந்த பூமியை தானமாக செய்தீர். மேலும் தாங்கள் மஹேந்திர மலையில் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தீர்கள் அல்லவா? அப்படியிருக்க என் மகன் ராமனை அழித்து எம் குலத்தை ஒன்றுமில்லாமல் செய்ய வந்தீரோ?” என்று புலம்பினார்.

அப்போதும் தசரதரை சட்டை செய்யாமல் பரசுராமர் ராமரை நோக்கியே பேசினார். “ராமா, கேள். ஜனகரிடமிருந்தது முக்கண் முதல்வனாகிய பரமசிவனின் வில். என்னிடமிருப்பது விஷ்ணுவினுடையது. இரண்டுமே தேவதச்சனான விஸ்வகர்மாவால் உறுதியுள்ளதுமாகவும், பலம் பொருந்தியதாகவும் செய்யப்பட்டது. தேவர்கள் ஒரு வில்லை முப்புரம் அழிக்கும் சிவனுக்கும் மற்றொன்றை விஷ்ணுவிற்கும் தந்தனர். பரமசிவனின் வில் உன்னால் முறிந்தது. இதோ, என்னிடமிருப்பது வைஷ்ணவ வில். இதன் சிறப்பினை கூறுகிறேன் கேள்”

“சிவா விஷ்ணு இருவரிடமும்  இந்த வில் சென்று சேர்ந்த பிறகு, தேவர்களுக்கு இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. நேரே பிரம்மாவிடம் சென்று இவர்களின் ஐயப்பாட்டை தெரிவிக்க, அவர் இருவருக்கும் இடையே பேதமில்லை என்று எத்தனை முறை சொன்னாலும் புரிந்து கொள்ளாத இவர்களிடம் பேசிப் பயனில்லை, நேரிலேயே தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தோடு சிவா விஷ்ணு இருவரிடையே போட்டியைத் தோற்றுவித்தார் பிரம்மதேவர்.

[அவ்வாறு செய்யும்படி பரம்பொருளின் சித்தம், இருவரும் எண்ணமும் செயலுமாக இருப்பவர்கள், அதாவது விஷ்ணுவின் எண்ணமாக சிவனும், சிவனின் செயலாக விஷ்ணுவும் இருக்கும்போது இருவருக்குள்ளும் பிரிவு ஏது? ] எனவே, தேவர்கள் விருப்பப்படி சண்டை நடந்தது,  எப்படி? மூவுலகும் கிடுகிடுக்கும் வண்ணம், அனைத்து உயிர்களும் மயிர் கூச்செரியும் திகிலுடன் இவர்களது மாயச் சண்டையை பார்த்து பயந்து நடுங்கி கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் விஷ்ணு ஹூம் என்ற ரீங்காரமிட, சிவனுடைய வில் செயலற்றுப் போனது. அவர் ருத்ர மூர்த்தியாக, திரிபுரம் எரித்த சிவனாக கோபத்தில் தகதகவென நின்றபோது, தேவர்கள், ரிஷிகள், தேவ கணங்கள் அவர் ரௌத்திரத்தின் விளைவுகளுக்குப் பயந்து, சிவா விஷ்ணு இருவரையும் அமைதியடையும்படி வேண்டிக் கொண்டனர்.

சாந்தமடைந்த சர்வேஸ்வரன் அந்த வில்லை நிமி பரம்பரையை சேர்ந்த தேவரதனுக்கு அளித்தார். மகாவிஷ்ணு ப்ருகு வம்சத்தில் பிறந்த ரிசீகரிடம் ஒப்புவித்தார். அவர் தனது புத்திரரும், எனது தந்தையுமான ஜமதக்கினிக்கு வழங்கினார். மிகுந்த தபோவலிமையும் தேஜஸ்வினியுமான என் தந்தை ஆயுதமின்றி இருந்தபோது, கர்த்தவீர்யாஜுனன் என்ற க்ஷத்திரியன், ஆயிரம் கையுடையவன் என்று அழைக்கப்பட்டவன், அவரைக் குரூரமாக கொன்றான்”.

“அதனால் வெகுண்ட நான், க்ஷத்ரியர்கள் பிறக்க பிறக்க அவர்கள் குலத்தை  இருபத்தியோருமுறை வேரறுத்தேன். பூமி முழுமையும் எனது வசமானது. பின் இந்த பாபங்களை போக்க, ஒரு பெரிய யாகம் செய்து, நான் வென்ற பூமியை காஸ்யப மஹரிஷிக்கு தானம் செய்தேன். மஹேந்திர பர்வதத்தில் தவம் மேற்கொண்டுள்ளேன். சிவதனுசை நீ முறித்ததாக கேள்வியுற்று, இந்த விஷ்ணுவின் தனுஸிலும் நாணேற்றுவாயோ என்பதைக் காண விழைகிறேன், அப்படி நாணேற்றி அம்பு தொடுத்தால் என்னோடு போரிடும் சந்தர்ப்பத்தை நீ பெறுவாய்”, என்றார் பரசுராமர்.

தந்தையை அசட்டை செய்து தன்னிடம் பேசும் பரசுராமரிடம், ராமர் தீர்க்கமான குரலில், “ப்ருகு வம்சத்தில் பிறந்தவரே, தங்களது பராக்கிரமத்தை கேள்விப்பட்டிருக்கிறேன், அதர்மமாக தந்தையைக் கொன்றவனை எந்தவொரு வீரம் மிக்க மைந்தனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். ஆகவே, நீவிர் செய்தது சரியே. ஆனால், இதுவரை நீங்கள் வென்ற க்ஷத்ரியர்களைப்  போல என்னை ஏளனமாக என்ன வேண்டாம். அவமதிக்கவும் செய்யாதீர், இத்தனை அலட்சியமாக பேசுவதால், இதோ நான் என் வலிமையைக் காட்டுகிறேன், பாருங்கள்”, என்று பரசுராமரிடம் இருந்த வில்லையும் அம்பையும்  வாங்கி, வேகமாக தனது இடதுகால் கட்டை விரலால் அத்தனுஸின் முனையைப் பிடித்து நிமிர்த்தி, வில்லின் மறுநுனியை இடது கையால் தாங்கி, நொடியில் வலது கையால் நாணேற்றி அம்பு தொடுத்து நின்றார்.

தொடுத்த அம்பு வில்லில் இருக்க, பரசுராமரை பார்த்து ராமர், “அந்தணரே, நீங்கள் அந்தணர் என்ற காரணத்தினாலே வணங்கத்தக்கவர், தவிர ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரருக்கு தாங்கள் வேண்டியவர், விஸ்வாமித்திரரோ எங்களுக்கு குருவுக்கு நிகரானவர், எனவே, நீங்கள் பூஜிக்கத்தக்கவர். அதனால் உங்களை மாய்க்க என்னால் ஆகாது. நான் தொடுத்த இந்த பாணமோ விஷ்ணுவின் அம்சம், எதிரியை வெற்றி கொள்ளாமல் திரும்பாது, சொல்லுங்கள், நினைத்த போது நினைத்த உலகத்திற்கு செல்லும் உங்கள் சக்தியை அழிக்கட்டுமா? அல்லது உங்களது தவ வலிமையால் தேவர்களின் உலகை அடையும் தகுதி அடைந்துள்ளீர் அத்தகுதியை அழிக்கட்டுமா? இந்த பாணத்தின் குறி என்ன?”, என்று கேட்டார்.

அந்த விஷ்ணு வில்லின் டங்காரம் கேட்டதும் தேவ, ரிஷி, கந்தர்வ, யக்ஷ, ரக்ஷச, அப்சரஸ், சித்தர்கள் முதலானோர் வானில் கூடி என்ன நடக்கப் போகிறது என்று பதைபதைப்புடன் பார்த்து நின்றிருந்தனர். உலகமே மூச்சு விட மறந்து நின்றுபோயிருந்தது.

ராமரிடம் பரசுராமர், “ராமா, வானில் கூடி நம்மை பார்க்கும்  தேவ, ரிஷி, கந்தர்வ, யக்ஷ, ரக்ஷச, அப்சரஸ், சித்தர்கள் நீ செய்த அளப்பரிய காரியத்தைக் காண வந்திருக்கின்றனர், பார். விஷ்ணுவின் தனுஸை அசாத்தியமாக கையாண்டதால் நீ விஷ்ணுவின் அம்சமே என்பதை நிச்சயமாக உணர்ந்தேன். மூவுலகிற்கும் அதிபதியான நீ என்னை வென்றாய் என்பதில் எனக்கு பெருமையே”. என்றவர் தொடர்ந்து..

“ஆம். நீ கூறியது சரிதான், விஷ்ணுவின் அம்பு இலக்கில்லாது போகக்கூடாது, என் தவத்தின் பலனாக நான் மேன்மையான உலகிற்கு செல்ல தகுதி பெற்றேன் அல்லவா? அதை உனது பாணம் குறிபார்க்கட்டும். நான் காஸ்யபருக்கு இந்த பூமியை தானமாக தந்தபோது, ஒருக்காலும் இந்த பூமியில் வசிக்கலாகாது என்று அவர் வேண்டிக் கொண்டார். எனவே, நான் நிரந்தரமாக எங்கும் இருப்பதில்லை. நினைத்த நேரம் வேறு உலகிற்கு என்னால் செல்லமுடியும். அப்படித்தான் சஞ்சாரம் செய்து கொண்டுள்ளேன். அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற எனது தவ வலிமை போகட்டும், உங்கள் குறியும் அதுவாக இருக்கட்டும்”, என்றார்.

இவ்வாறு பரசுராமர் சொன்னதும், ராமர் அம்பை எய்தார், பரசுராமரின் தவ வலிமையால் பெற்ற தகுதியை தான் இழந்தது தெரிய, ராமரை வலம் வந்து நமஸ்கரித்து, பரசுராமர் மஹேந்திர மலைக்கு திரும்பினார்.

[வானவரும் அநேக மற்றவர்களும் சூழ இருந்தபோது ராமரை விஷ்ணுவின் அம்சம் என்று பரசுராமர் சொன்னாலும், அதை ராமர் ஆமோதிக்கவோ ஏற்கவோ இல்லை. அவர் தன்னை அவதாரமாக கருதாமல், தன்னை சாதாரண மனிதனைப்போலவே பாவித்தார், அவதார நோக்கம் முடியும் வரையில் அவ்வாறே நடந்தார். தக்க தருணத்தில் உதவிய / தனது வீரத்தை காண்பித்த ஒரு மனிதனை கடவுள் என்று சொல்வதில்லையா? அதுபோல எண்ணி அவ்வகையான துதிகளைக் கடந்தார்.]

பரசுராமர் விடைபெற்று மஹேந்திரமலைக்கு சென்றதும், அவர் தந்த விஷ்ணுவின் வில்லை ராமர் வருண பகவானிடம் ஒப்புவித்தார். பரசுராமரின் தாக்கத்திலிருந்து வெளி வராத தந்தை தசரதரிடம் அவர் சென்று விட்டார் என்ற விபரத்தைத் தெரிவித்து, மேற்கொண்டு பயணிக்க ஆயத்தமானார். தசரதருக்கு படை பரிவாரங்களோடு அயோத்தி கிளம்பினார்.

தசரதர் முதலானோர் அயோத்தி நகர் வந்தடைந்தபோது, நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொரு தெருவிலும் கொடி மாவிலை மற்றும் பூக்களாலான தோரணங்கள் கட்டி நீர் தெளித்து கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாய் மிளிர்ந்தன. மங்கள வாத்தியங்கள் முழங்க, மக்கள் தெருக்களில் நிரம்பி, தங்களது மன்னரையும், மணமுடித்து வரும் அவரது வாரிசுகளையும் காண மகிழ்ச்சியோடு குழுமி இருந்தனர். தசரதர் தனது படை பரிவாரங்களோடு வந்ததும், பெரியவர்கள் ஆசீர்வாதங்கள் கூற, மக்கள் பூக்களை வாரியிறைத்து தங்களது மகிழ்வை தெரியப்படுத்தினர்,

இவ்வாறு மக்கள் புடைசூழ, தசரதர் தனது மகன்களுடன் அரண்மனைக்கு சென்றனர். அங்கு வாயிலில் காத்திருந்த கௌசல்யை, சுமித்திரை, கைகேயி [இவர்கள் மகன்களது திருமணத்தைக் காண மிதிலைக்கு செல்லவில்லை, அந்நாளில் அவ்வாறு வழக்கமில்லை போலும் ] ஆரத்தி எடுத்து மகன் மருமகள்களை வாழ்த்தி உபசரித்தனர்.

பின் மணமகள்கள் தாங்கள் செய்ய வேண்டிய சடங்குகளை ராணிகள் மூவரும் தெரிவித்து, ராஜகுமாரிகளை செய்ய வைத்தனர். பசு, தனம், தானியம் முதலான அநேக தானங்கள் செய்து அவரவர் அரண்மனைக்கு சென்றனர். ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள், இல்லறத்தை நல்லறமாக அனுஷ்டித்து, யுத்த மற்றும் நீதி சாஸ்திரங்களில் தெளிவு பெற்றவர்களாகவும், அஸ்திர சாஸ்திரங்களை முழுமையாக பழகி வீரத்தில் நிகரில்லாதவர்களாக இருந்தனர்.

சில காலம் சென்றதும் நினைவு வந்தவராக தசரதர் பரதனை அழைத்து, “பரதா, குமாரா, உன் மாமா யுதாஜித் உன்னை கைகேயே நாட்டிற்கு உனது தாத்தாவின் விருப்பத்தின் பேரில் கூட்டிச் செல்ல வெகு காலம் முன் வந்தார். மிதிலைக்கு அவர் வந்ததன் நோக்கமும் அதுவே, நான் அங்கிருந்த ரிஷிகள் முன் உன்னை அவரோடு அனுப்புவதாக வாக்களித்திருக்கிறேன். எனவே நீ, உன் மாமனுடன் கிளம்புவாயாக”. என்றார்.

தந்தை தசரததரின் கூற்றைக் கேட்ட பரதன்,  தாய் தந்தையை  நமஸ்கரித்துக் ராம லக்ஷ்மணர்களிடமும்  மற்ற எல்லோரிடமிருந்தும் விடைபெற்று சத்ருக்கனனை அழைத்துகே கொண்டு கேகேயே நாட்டுக்கு மாமன் யுதாஜித்துடன் கிளம்பினார்கள்.

பரத சத்ருக்னர்கள் புறப்பட்டுச் சென்றபிறகு, ராம லக்ஷ்மணர்கள் இருவரும் தந்தை தசரதரை தெய்வத்தை போல் மதித்து நடந்தனர். அவரது உத்தரவுக்காக காத்திருந்து பிரஜைகளின் குறைகளை தீர்ப்பதில் முனைந்து செயல்பட்டனர். பெரியவர்களுக்கும் குருவுக்குமுண்டான மரியாதைகளை ராஜகுமாரர்கள் சிறப்பாக செய்து வந்தனர். இதனால், அயோத்தி மக்களுக்கு ராமர் பால் அளவற்ற பிரியம் உண்டானது.   

தந்தை தசரதருக்கும்  நாட்டு மக்கள் அனைவர்க்கும் பிடித்தவராக ராமர் இருந்தார், பின் மனைவி சீதைக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன? 

தர்மமே உருவாக நின்ற ராமருக்கு,  ‘அழகு, பக்தி, பண்பு, அனைத்தும் பொருந்திய சீதையை தந்தை தனக்காக அளித்தார்’, என்ற மகிழ்ச்சி எப்போதும் இருந்தது. என்ன தந்தை தசரதர் சீதையை அளித்தாரா? என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆம். தசரதர்தான் சீதையை ராமருக்கு மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார். எப்போது? மிதிலாபுரியில் ராமர் சிவதனுஸை முறித்து வெற்றிவாகை சூடி நின்றதும், ஜனகர் சீதையை மணந்து கொள்ள ராமரைக் கேட்க, அது என் உரிமையில்லை, என் தந்தையிடம் கேட்கவேண்டிய விஷயமிது என்று சொல்லி நின்றார். பின் தசரதர் மிதிலைக்கு வந்து சீதையை மருமகளாக்கி கொள்ள சம்மதித்ததும் தான், திருமணங்கள் நடந்தன. [அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி.. வால்மீகி ராமாயணத்தில் இல்லை, சீதாராம கல்யாணம் பெரியவர்கள் பார்த்து பேசி முடித்து வைத்த திருமணம்]  

சீதைக்கோ ராமரை தந்தை பார்த்து வைத்தாரா, தமையன் பார்த்து வைத்தாரா என்பதெல்லாம் இல்லை. சீதைக்கு ராமரை ஏன் பிடிக்கும் என்ற கேள்வி எழுந்தால், சீதையின் பதில் இதுவாகத்தான் இருக்கும். “அவர் என் கணவர் என்பதால் பிடிக்கும்”, அவ்வளவே. [ இன்றுவரை நம் நாட்டுப் பெரும்பாலான பெண்கள் இந்த பதிலை வெளியே சொல்லவில்லையாயினும் மனதுக்குள் கூறுகிறார்கள், இது தொடரவேண்டும்].

அயோத்தியா காண்டத்தில் இவை இன்னமும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் முற்றுப் பெற்றது.

ஜெய் ஸ்ரீ ராம்

Advertisement