Advertisement

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.

இக்ஷ்வாகு மற்றும் நிமி வம்சம் & சீதா ராம கல்யாணம்.

மிதிலை மன்னரான ஜனகருக்கு,குசத்வஜர் என்ற சகோதரர் இருந்தார். அவர் மிதிலையின் அருகிலிருக்கும் ஸாங்காசியம் என்ற நகரை ஆண்டு வந்தார். ஜனகர் நடத்திக் கொண்டிருந்த யாகங்களுக்கு தேவையானவைகளை அனுப்பி அவற்றை மேற்பார்வையிட்டு, யாதொரு தொய்வுமின்றி யாகம் நடைபெற அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருந்தார். ஜனகர் தூது அனுப்பி அவரை வரவழைத்து, ராமர் வில் முறித்த பராக்கிரமம் குறித்து புகழ்ந்து  சீதையின் திருமணம் குறித்து தெரிவிக்க, குசத்வஜர் மனம் மகிழ்ந்தார்.

அவையில் இருந்த சகோதரர்கள் இருவரும் [ஜனகரும் குசத்வஜரும்], மந்திரியான சுதாமா என்பவரை  அயோத்தி மன்னர் தசரதர் தங்கியிருந்த இடத்திற்கு அனுப்பி, தசரத சக்ரவர்த்தியையும், அவரது குலகுரு, ரிஷிகள், மந்திரி பிரதானிகள், இன்னும் வந்திருந்த பந்து மித்ருக்கள் அனைவரையும் தகுந்த மரியாதை செய்து அவைக்கு அழைத்து வருமாறு பணித்தனர்.

அவ்வாறு ஜனகரின் அழைப்பை ஏற்று அவைக்கு வந்த தசரதருக்கு, ஜனகர் தகுந்த மரியாதை செய்து அமரவைத்தார். அப்போது தசரதர் ஜனகரைப்  பார்த்து, “அரசனே! அறிவிற் சிறந்தவரே! உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். எங்கள் இக்ஷ்வாகு குலத்தில், எந்த ஒரு செயலையும் குலகுருவான வசிஷ்டரே முன்னெடுத்து நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். அவர் சொல் தான் எங்களுக்குப் பிராமாணம். இங்கிருக்கும் ப்ரஹ்மரிஷி விஸ்வாமித்திரர் அனுமதியோடு, மற்ற மகரிஷிகளும் அருகில் இருக்க, வசிஷ்டர் முறையாக எங்கள் பரம்பரை குறித்த விவரங்களை தங்களுக்கு எடுத்தியம்புவார்” என்றார்.

உடனே வசிஷ்டர், ஜனகர், குசத்வஜர் மந்திரி பிரதானிகள் மஹரிஷிகள் புரோஹிதர்கள் மற்றும் அவையிலிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள,  இக்ஷ்வாகு பரம்பரை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“நித்யன், அழிவற்றவன், என்றும் அழியாத சக்தியுடையவர் என்று புகழப்படும் ப்ரும்மா முதன்மையானவர். அவரிடமிருந்து மரீசி என்ற மகன் பிறந்தான். மரீசியின் மகன் காஸ்யபர். காஸ்யபரின் மகன் விவஸ்வான் என்று அழைக்கப்படும் சூரியன். வைவஸ்வதன் என்று சொல்லப் படும் மனு அவருடைய பிள்ளை. இவர் மானிட பிறவிகளுக்கு தந்தை என்று அறியப்படுகிறார்.”

“மனுவின் மகன் இக்ஷ்வாகு. இவர்தான் அயோத்தியின் முதல் அரசன். இக்ஷ்வாகுவின் பிள்ளை ஸ்ரீமான் குக்ஷி என்பவன். மூவுலகிலும் புகழ் பெற்றவர். குக்ஷிக்கு விகுக்ஷி என்று மகன். விகுக்ஷியின் பிள்ளை மகா பலசாலியான பாணன் என்பவன்.பாணன் பிள்ளை அனரண்யன். அனரண்யனின் மகன் ப்ருது. ப்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு. த்ரிசங்குவின் பிள்ளை துந்துமாரன் என்று புகழ் பெற்றவன். துந்துமாரனுக்கு யுவனாஸ்வன் பிறந்தான். யுவனாஸ்வனின் மகன் மாந்தாதா. மாந்தாதாவின் மகன் ஸூஸந்தி . ஸூஸந்திக்கு இரண்டு பிள்ளைகள். த்ருவஸந்தி, ப்ரஸேனஜித் என்ற இருவர். த்ருவஸந்தியின் மகன் தான் மிகச் சிறப்பு மிக்க பரதன். பரதன், அஸிதன் என்ற மகனைப் பெற்றான்.”

“அஸிதன் காலத்தில் அவனை எதிர்த்து பல அரசர்கள் சண்டையிட்டனர். தாள ஜங்கர்கள், சூரர்கள், சசிபிந்தவர்கள், என்ற பலரும் யுத்தம் செய்ய வந்தனர். இவர்களுடன் யுத்தம் செய்து தோற்று, அஸிதன் அவனது ராஜ்யத்தை இழந்தான். ஹிமாசலம் சென்று ப்ருகுப்ரஸ்ரவனம் என்ற இடத்தில் வசித்த அவன், உடல் நலக் குறைவால் காலமானான். ஆனால் அஸிதன் காலமானபோது, அவருடையை இரு பத்னிகளும் கர்பவதிகளாக இருந்தனர்”

“இருவருள் ஒரு மனைவி மற்றவள் மீது பொறாமை கொண்டு  கரம் என்ற விஷத்தைக் கொடுத்து அடுத்தவள் கர்பத்தைக் கலைக்க முயன்றாள். அந்த சமயம், மலையடிவாரத்தில் பார்கவ ஸ்யவனன் என்ற பெயருடைய முனிவர், இமய மலையை தன் வாசஸ்தலமாக கொண்டு வசித்து வந்தார். காளிந்தீ என்ற பெயருடைய அஸிதனின் மனைவி [விஷம் அருந்தியவள்] இவரை வணங்கி, தனக்கு பிறக்கப் போவது மகனாக இருக்க வேண்டும், அவன் தீர்க்க ஆயுளுடனும், கீர்த்தி உடையவனாகவும், புத்திர சம்பத்து உடையவனாகவும் விளங்க வேண்டும்  என்று வேண்டினாள்”.

“அவளை ஆசிர்வதித்த ரிஷி -உன் வயிற்றில், சுபுத்திரனாக, மகா பலசாலியாக, மகா வீரனாக, தேஜஸ்வியாக ஒரு பிள்ளை பிறப்பான் என்றார்.  தனது சக்தியால் விஷத்தை வலுவிழக்க செய்தார். ஆயினும் கரம் என்ற விஷம் கருவோடு நிலைத்து நின்று விட்டது. பிறந்த அக்குழந்தை விஷத்தோடு பிறப்பதால் சகரன் எனப்படுவான். என்று முனிவர் சொல்லவும், அந்த பெண் இறந்த தன் பதியை நினைத்த படியே புத்திரனைப் பெற்றெடுத்தாள்.”

“சகரன் என்ற அந்த அரசனுக்கு, அசமஞ்சன் என்ற பிள்ளையும், அவனுக்கு அம்சுமான் என்ற பிள்ளையும், அவனுக்கு திலீபனும், திலீபனுக்கு பகீரதனும், பகீரதனிடத்தில் காகுத்ஸனும் பிறந்தனர். காகுத்ஸனுக்கு ரகு பிள்ளையாக பிறந்தான். ரகுவுக்கு, தேஜஸ்வியான கல்மாஷபாதோ என்ற மகனும், அவனுக்கு சங்கணன், சங்கணனுக்கு சுதர்சனன், சுதர்சனனுக்கு அக்னி வர்ணன், அவனுக்கு சீக்ரகன் என்ற ஒரு மகன்”.

“சீக்ரனுக்கு மருவும், மருவுக்கு சுஸ்ருகன், சுஸ்ருகனுக்கு, அம்பரீஷன் என்ற மகன். அம்பரீஷன் பிள்ளை நகுஷன், நகுஷனுக்கு யயாதி. யயாதிக்கு நபாகன். நபாகனுக்கு அஜன். அஜனின் மகனே இங்கிருக்கும் தசரதன். இந்த தசரதனின்  குமாரர்கள் தான் ராம, லக்ஷ்மணர்கள். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள். தர்மத்தின் வழி நடப்பவர்கள். உண்மை பேசுபவர்கள், மாபெரும் வீரர்கள். இப்படிப்பட்ட இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த இவர்களுக்கு உங்கள் பெண்களை வேண்டுகிறோம். இந்த திருமணத்திற்கு தங்களின் சம்மதத்தை வேண்டுகிறோம்”, என்று ஜனகரிடம் கேட்டார் வசிஷ்டர்.

“மகளது திருமணத்தின்போது குல வரிசைகளை சொல்வது எங்கள் வழக்கமாகும். அந்த மரபின்படி, அவையோர் அனுமதியுடன் நிமி வம்ச பரம்பரையை சொல்கிறேன்”, என்று துவங்கிய ஜனகர் அவரது குலம் குறித்து சொல்லலானார்.

“தனது செயல்களால் மூவுலகிலும் பிரசித்தி பெற்ற ஒரு அரசன் இருந்தான். அவர் நிமி, தர்மவான், அவனுக்கு மிதி என்று ஒரு மகன். ஜனகன், இவர்தான் முதலாவது ஜனகர், அவருக்கு உதாவஸு என்ற பிள்ளை. உதாவஸுவுக்கு தேவராதன் என்ற மகா பலசாலியான பிள்ளை. ராஜரிஷியாக இருந்த தேவராதனுக்கு, ப்ருஹத்ரதன் என்ற மகன். இவருக்கு மகாவீரன் என்ற பலசாலியான மகன் பிறந்தான். மகாவீரனுக்கு த்ருதிமான், த்ருதிமானுக்கு சுத்ருதி. சுத்ருதிக்கு த்ருஷ்ட கேது, த்ருஷ்டகேது என்ற ராஜரிஷிக்கு ஹர்யஸ்வன் என்ற மகன். ஹர்யஸ்வனுடைய பிள்ளை மரு. மருவின் பிள்ளை ப்ரதீந்தகன். இவருக்கு கீர்த்திரதன் என்று மகன். தேவமீடன் கீர்த்திரதனின் பிள்ளை. தேவமீடனுக்கு, விபுதன், விபுதனுக்கு மஹீத்ரகன், மஹீத்ரகனுக்கு கீர்த்திராதன், கீர்திராதனுக்கு மகாரோமன். மகாரோமனுக்கு ஸ்வர்ணரோமன் என்பவர் பிறந்தார் அவர் ராஜரிஷி. அவருக்கு ஹ்ரஸ்வரோமன் என்ற மகன்”

“ஹ்ரஸ்வரோமனாகிய அவருக்கு இரண்டு பிள்ளைகள். நான் மூத்தவன். இளையவன் என் தம்பி குசத்வஜன். மூத்தவனான எனக்கு ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு, தம்பி குசத்வஜனை என் பொறுப்பில் விட்டு, என் தந்தை வனம் சென்றவர், தள்ளாமையால் காலம் ஆனார்.”

“அப்போது ஸாங்காசிய மன்னனான ஸுதன்வா எனது ராஜ்ஜியமான  மிதிலையை ஆக்ரமித்து, சிவபெருமானின் வில்லையும்,  சீதையையும் தனக்குத் தர வேண்டினான். அதற்கு அவன் தகுதியில்லாதவனாக எனக்குத் தோன்றவே நான் மறுக்க, இருவருக்கும் சண்டை மூண்டது. அப்போரின் போது ஸுதன்வா கொல்லப்பட்டான். அவனது ஸாங்காஸ்ய நகருக்கு, என் தம்பியை அரசனாக நியமித்தேன். இத்தகைய சிறப்பு வாய்ந்த வம்சத்தில் பிறந்த யாம் மிக்க மகிழ்ச்சியுடன் எமது இரண்டு குமாரிகளான சீதையையும், ஊர்மிளையையும், ராம லக்ஷ்மணர்களுக்கு  திருமணம் செய்து கொடுக்க சித்தமாயிருக்கிறோம். இன்றிலிருந்து மூன்றாம் நாள் உத்திர பல்குணி நட்சத்திரம் வருகிறது, திருமணம் முதலிய விசேஷங்களுக்கு உகந்த நாள். அன்றே இவர்களது திருமணத்தை நடத்திட ஆவலாய் இருக்கிறோம். அதற்கு தங்களது அனுமதியும் ஆசிர்வாதங்களும் வேண்டுகிறோம்” என்றார் ஜனகர்.

அவையில் ஜனகர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்திரர் வசிஷ்டர் முதலான ரிஷிகளோடு கூடிப் பேசி பின் , “ஜனகரே! இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையும், உந்தன் நிமி வம்சத்து குல வரிசையும் மிகவும் புகழுடையது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ராம லக்ஷ்மணர்களுக்கு உந்தன் குமாரிகளை கொடுப்பது மிகப் பொருத்தமான ஒன்றே. மிதிலை அரசே! இன்னுமொன்று சொல்கிறேன் கேள், உனது தம்பி குசத்வஜனின் புதல்விகள் இருவரையும் தசரதரின் மற்ற புதல்வர்களான பரத சத்ருக்கனனுக்கு மனம் முடித்து வைக்க கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் அழகும், பண்பும், வீரமும் தைரியமும் நிரம்பப் பெற்றவர்கள். இந்த திருமணங்களின் மூலம் உங்கள் இரு வம்சமும் மேலும் கீர்த்தியினை அடையும்” என்று கூறினார்.

அவரது கூற்றில் மனம் மகிழ்ந்த ஜனகர், “முனிவர்களே! தங்கள் யோசனை மிகவும் நன்று. எங்களை இக்ஷ்வாகு குலத்திற்கு இணையாக கருதி சம்பந்தம் செய்ய விருப்பப்படுவதால் அவ்வாறே நடத்தி வைக்க தயாராக இருக்கிறோம், நால்வர் திருமணமும் ஒரே நாளில் கன்யாதானம் செய்து வைக்கிறோம். எங்களை தர்மத்தின் வழி நடக்கக் கூறிய நீங்கள் எனக்கும் என் தம்பியாகிய குசத்வஜனுக்கும்  குரு ஆவீர்கள். நீங்களும் வசிஷ்டரும் என்ன நினைக்கிறீர்களோ அது அவ்விதமே நிறைவேற்றப்படும்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அப்போது தசரதர், “ஜனகரே! நீங்களும் உங்கள் தம்பியும் குணவான்கள். ரிஷிகளையும், மன்னர்களையும் தகுந்த முறையுடன் உபசரித்து மரியாதை செய்கின்றீர்கள். உங்கள் செயலால் மிகுந்த மகிழ்வுண்டாகியது. நால்வர் திருமணத்திற்குண்டான கோதானம், நாந்தி முதலானவைகளை மேற்கொள்ள நாங்கள் ஆயத்தமாக வேண்டும். எனவே, எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று ஜனகர் முதலானவர்களிடம் கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

மறுநாள் விவாக சடங்குகளை துவங்கிய தசரதர், கோதானம் எனப்படும் ப்ராஹ்மணர்களுக்கு பசுக்களை தானம் செய்து முடிக்கும் தருணம், பரதனின் மாமாவும், கேகய நாட்டின் இளவரசனுமான யுதாஜித் அங்கு வந்து சேர்ந்தான். சம்பிரதாய  விசாரிப்புகளுக்குப் பின், “எனது தந்தை அவரது பேரனான பரதனைக் காண ஆவலாய் இருக்கிறார். எனவே, நான் அயோத்தி சென்றேன், அங்கிருப்பவர்கள் நீங்கள் இங்கே ராமரின் திருமணத்திற்கு வந்திருப்பதாக கூறினார்கள், உங்களை இங்கேயே தரிசித்து விடலாமென்று  மிதிலைக்கு வந்தேன்” என்றார் யுதாஜித்.

[ இவை அனைத்துமே தற்செயல்களே, அதாவது பரதனை கைகேய நாட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த யுதாஜித், ராமர் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லையே என்று முகம்திருப்பவில்லை. மாறாக, தானாகவே முன்வந்து மிதிலைக்கு சென்றார். பரதனின் திருமணம் குறித்து அயோத்தியில் யாரும் யோசித்திருக்கவில்லை, அவ்வளவு ஏன்?, தசரதரே யோசிக்காத விஷயம்தானே இது. விஸ்வாமித்திரர் வசிஷ்டரை கலந்து ஆலோசித்தார், தசரதரிடம் கூட விவாதியாமல், நேரே ஜனகரிடம் பரத சத்ருக்கன விவாகம் குறித்து பேசி, அவரே முடிவு செய்தார். இங்கே குருவிற்கு மன்னர்கள் கட்டுப்பட்டது அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதை தெளிவாக தெரிகின்றது.

அதுபோல, தம்பி குசத்வஜனின் மகள்களுக்கு திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தது ஜனகரே அன்றி, அப்பெண்களின் தந்தை குசத்வஜர் அல்ல. வீட்டின் பெரியவர்கள் பேச்சை மீறுவது பற்றியெல்லாம் அங்கே கேள்வியே இல்லை. இதிலிருந்து பெரியவர்களின் முடிவே இறுதியானது என்ற சமூக கட்டுப்பாடு தெள்ளென தெரிகிறது. ]

திருமண தினத்தன்று தசரதர் மகன்களுடன் மண்டபத்திற்கு வந்து சேர, வசிஷ்டர் ஜனகரிடம், திருமண சடங்குகளைத் துவக்க அனுமதி கோரினார். “முனிவர் பெருமானே! உங்களை குருவென்று வரித்தபிறகு, இவ்வாறு என்னிடம் அனுமதி கோரலாமா? இந்த ராஜ்ஜியமே உங்களுடையதுதான், நீங்கள் ஆணையிடுங்கள் அது அவ்விதமே நிறைவேறும்” என்று ஜனகர் பணிவோடு கூறினார்.

சதானந்தர், விஸ்வாமித்திரர் துணையோடு மணப்பந்தலின் நடுவே அக்னிக்கான மேடையை அமைத்த வசிஷ்டர், அதன் நாற்புறங்களிலும் மலர்கள், தங்க பாத்திரங்கள், வெள்ளி கலசங்கள், முளைவிட்ட தானியங்கள், ஹோம பாத்திரங்கள், மஞ்சள் அக்ஷதை, நெல் பொரி, நீர் நிறைந்த பாத்திரம் முதலிய ஹோமத்திற்கு தேவையான அனைத்தயும் தாயார் செய்து, சடங்குகளை ஆரம்பித்தார்.

அப்போது சர்வ அலங்காரங்களுடன் திவ்யமான பட்டாடை உடுத்தி, தாமரையில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியின் பொலிவைக் கொண்டிருந்த ஸீதை வந்தாள். ஜனகர் அவளை ராமரின் எதிரே நிறுத்தி, ராமரைப் பார்த்து, “இவள் என் மகள் ஸீதை, என் பாசமிகு மகள், இவள் நீ எந்த தர்மத்தை மேற்கொள்கிறாயோ அதன் படியே நடந்து உனக்கு உதவியாக இருப்பாள். இவளை உனக்கு மனைவியாக கொடுக்கிறேன், பெற்றுக்கொள்வாயாக! உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்! உன்னை அடைந்த இவள் பதிவிரதை, பாக்கியசாலி, இனி என்றும் உன்னை நிழல் போல் தொடர்வாள்” என்று கூறி சீதையின் கையை ராமரிடம் கொடுத்து, மந்திர நீரைக் கொண்டு ராமரின் கையில் தாரை வார்த்துக் கொடுத்தார்.

அப்போது வானிலிருந்து தேவர்கள், மஹரிஷிகள் ‘ஆஹா! ஆஹா!’ வென கொண்டாட, தேவ வாத்தியங்கள் முழங்க வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது. சம்பந்திகள் இருவரும் பேருவகை அடைந்தனர்.

அடுத்து ஊர்மிளா லக்ஷ்மண, மாண்டவி பரத, ஸ்ருதகீர்த்தி சத்ருக்ன திருமணங்களை ஜனகர் முன்னின்று நடத்தி வைத்தார். அப்போது மீண்டுமொரு முறை தெய்வீக வாத்தியங்களும், கந்தர்வ கானமும் அப்சரஸ் நடனங்களும், வானிலிருந்து பூச்சிதறலும் அரங்கேறின.

ஜெய் ஸ்ரீராம்

Advertisement