Advertisement

அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம் வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் வல்வினை தீரும் நிஜம்

வில் முறிந்தது

இவ்வாறு விஸ்வாமித்திரரின் பெருமையை சதானந்தர் சொல்லி ராம லக்ஷ்மணர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த ஜனகர் முதலானோரும் கேட்டு உவகை அடைந்தனர்.

ஜனகர் விஸ்வாமித்திரரைப் பார்த்து, “உங்களைக் கண்டதினால் பெரும் பேறு பெற்றேன். உங்களின் மன உறுதியும், தவ வலிமையையும் அதிசயிக்கத்தக்கவை. அற்புதங்கள் நிறைந்த உங்கள் வரலாறு எல்லாருக்கும் ஒரு படிப்பினை. இன்னும் இன்னும் உங்களைப் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. ஆனால், அந்தி சாய்ந்து விட்டது, மாலை நேரக் கடமைகள் காத்திருக்கின்றன. எனவே, நாளை காலை உங்களை வந்து தரிசிக்க எனக்கு அனுமதி தரவேண்டும்” என்று பவ்யமாக கேட்டார்.

“மன்னா ஜனகா! அப்படியே ஆகட்டும், சென்று வா” என்று வாழ்த்தி  விஸ்வாமித்திரர் ஜனகரை வழியனுப்பினார்.

மறுநாள் காலை, தான் சொல்லியபடியே ஜனகர் விஸ்வாமித்திரர் இருக்குமிடம் வந்து சேர, தக்கபடி விருந்தோம்பல் செய்து, நிறைய நேரம் அளவளாவிய பின், “தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்” என்றார் ஜனகர்.

அதற்கு விஸ்வாமித்திரர், “இவர்கள் தசரத புத்திரர்கள். தனுர் வித்தையை ஐயம் தெளிவுற கற்றார்கள். இயற்கையாகவே க்ஷத்ரியர்களுக்கு இருக்கும் இயல்பைப் போல, உன்னிடம் இருக்கும் திவ்யமான தனுஸைக் காண ஆவலாய் இருக்கிறார்கள், அதை இவர்கள் பார்க்குமாறு செய்” என்றார் விசுவாமித்திரர்.

“ப்ரஹ்மரிஷியானவரே! நீங்கள் அனுமதித்தால் இந்த வில்லைப்பற்றிய விபரங்களைக் கூற ஆவலாய் உள்ளேன்”, என்று அனுமதி கேட்டு, “இந்த வில் எனது முன்னோரான நிமிச் சக்ரவர்த்தியின் மகனான தேவராதன் என்பவருக்கு தேவர்களால் அளிக்கப்பட்ட வில் இது.  முன்னொரு சமயம், தக்ஷனுடைய யாகத்தில் கலந்து கொள்ள வந்த தேவர்களைக் கொல்ல, சிவபெருமான் வில்லை எடுத்து வர, அப்போது அவருக்கு அஞ்சிய தேவர்கள் சிவனை சரணடைந்தார்கள். அவரது கோபம் தணிந்து, வில்லை தேவர்களுக்கே அளித்து ருத்ரன் அவர்களுக்கு அருளினார். அப்படிப்பட்ட சிறப்பு பெற்ற இந்த தனுஸை, எனது முன்னோர்களுக்கு தேவர்கள் வழங்கினர்.”

“பின் ஒரு சமயம், நான் யாகபூமியை கலப்பையால் உழவு செய்யும் பொது, ஒரு பெண் குழந்தை எனக்கு கிடைத்தது. அப்படி அற்புதமாக கர்ப்ப வாசம் செய்யாமல் எனக்கு கிடைத்த பெண்தான் சீதை. இவ்வாறு விசித்திரமான முறையில் கிடைத்த, யாரும் பெற இயலாத பொக்கிஷமாக நான் காப்பாற்றி வரும் எனது பெண்ணான சீதையை மணமுடிக்க அரசர்களும் சக்ரவர்த்திகளும் போட்டிபோட்டுக் கொண்டு வந்தனர். ஆனால், எவன் ஒருவன் மிகச் சிறப்பு பெற்ற சிவதனுசில் நாணேற்றுகிறானோ அந்த பராக்ரமசாலிக்கே என் தேவதை பெண்ணை மணமுடித்துக் கொடுக்க முடிவு செய்து, அனைவருக்கும் இந்த நிபந்தனை தெரிவிக்கச் செய்தேன்.”

“எந்த மாவீரனும் இந்த வில்லை இதுவரை கையில் கூட ஏந்தியதில்லை. கையாலே எடுக்கக்கூட  முடியாதெனும் போது, நாணேற்றுவது எங்கே? இதனால் பல சிற்றரசர்களும் பேரரசர்களும் எனக்கு பகையாக ஆனார்கள். அனைவரையும் கடவுள் அருளால் போரிட்டு தோற்றோடச்செய்தேன். இதுதான் இந்த சிவதனுஸான வில்லின் சரித்திரம். ஒருவேளை ராமன் இதற்கு நாணேற்றி விட்டார் என்றால் என் மகள் சீதா, என் வாக்கின்படி அவருக்கே உரியவளாவாள்.”

ஜனகர் இப்படி சொன்னதும், விஸ்வாமித்திரர், “மஹாராஜா! அந்த வில்லை ராமனுக்கு காட்டுங்கள்”  என்று கூற, எட்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டியில் இருந்த அந்த வில் இருந்த பெட்டி அங்கிருந்த சேவகர்கள் பலரால் இழுத்து வரப்பட்டது.

அப்போது ஜனகர், “வேத சாஸ்திரங்களை முற்றும் அறிந்தவரே! இதுவே சிவ தனுசு. தேவர்கள், அசுரர்கள், ராக்ஷஸர்கள், கந்தர்வர்கள்  ஆகிய எல்லோரும் இதை வளைக்கவோ, நாணேற்றவோ சக்தி அற்றவர்கள். அப்படி இருக்க இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதில் சந்தேகமில்லை. எனினும் தசரத ராஜகுமாரர்கள் இந்த வில்லைப் பார்க்கட்டும்” என்றார்.

விஸ்வாமித்திரர் ராமரை பார்த்து, “சுப்ரஜா ராமா! சென்று இந்த வில்லைப் பார்” எனக் கூறினார்.

அதனருகில் சென்று சிவதனுசை பார்வையிட்ட ராமர், “சுவாமி இந்த திவ்யமான வில்லை கையில் எடுத்து வளைத்து நாணேற்றலாமா?” என்று கேட்டார்.

ஜனகரும், விஸ்வாமித்திரரும் சம்மதிக்க, சுற்றியும் இருந்தோர் பார்த்திருக்க அனாயசமாக அதீத பிரயத்தனம் ஏதுமின்றி ராமர் அந்த வில்லை கையில் எடுத்தார்; வளைத்தார்; நாணேற்றினார்.

[இங்கே என்னால் கம்பநாட்டாழ்வாரை சொல்லாமல் இந்த கட்டத்தை கடக்க முடியவில்லை, “கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” அதாவது ராமர் சிவதனுஸை கையில் எடுத்ததை விசுவாமித்திரர், ஜனகர் உட்பட அவரது அவையிலுள்ளோர் அனைவரும் கண்டனராம், அடுத்து அவர்கள் கேட்டது அது உடைந்து விழுந்த சப்தத்தையாம்; ராமருடைய அந்த வேகம்… அத்தனை இலகுவாக சிவதனுஸை வளைத்தார், நாண் ஏற்றினார்; முறித்தார் என்பதைக் குறிப்பால் உணர்த்திய ஒற்றை வாக்கியம், என்னே அழகு!]

அற்புதமான அந்த பரமசிவனுடைய வில் நடுவில் ஒடிந்தது, ஒரு பெரும் சப்தம் உண்டாயிற்று. மலைகள் பிளந்து நடுங்குவது போல் பூமி நடுங்கிற்று. அந்த சப்தத்தில் ராம லட்சுமணர்களையும், ஜனக விஸ்வாமித்திரரையும் தவிர, அங்கிருந்த சுற்றியுள்ளவர்கள் மயங்கி விழுந்தனர்.

சிறிது நேரத்தில் அனைவரும் தெளிந்து விட, அப்போது ஜனகர் விஸ்வாமித்திரரைப் பார்த்து, “இதுவரை மனதார நினைத்து பார்க்க முடியாத அற்புதம் இங்கே நிகழ்ந்தது தசரத புத்திரனாகிய ராமருடைய வீரம் இதில் தெரிந்தது. சிவதனுசை வளைத்து நாணேற்றிய அவருக்கே எனது அருந்தவப் புதல்வியான சீதையை தருவதாக இருக்கிறேன். சீதை பிறப்பிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள், மேலும் என் மகளுமானதால் அவளது கீர்த்திக்கு எப்போதும் பஞ்சமில்லை. இப்பொழுது அவள் சேரும் இடமும் மிகச்சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும்” என்றவர் தொடர்ந்து, “முனிவரே! நீங்கள் உத்தரவு அளித்தால், என் மந்திரிகளை அயோத்திக்கு அனுப்பி இங்கே நடந்தவைகளை தெரிவித்து, தசரத சக்கரவர்த்தியின் சம்மதத்துடன் சீதையை இராமனுக்கு மணமுடிக்க விரும்புகிறேன். அவரையும் அவரது பரிவாரங்களுடன் இங்கே சீக்கிரமாக அழைத்து வரச் செய்கிறேன்” என்றார்.

விஸ்வாமித்திரர் அதற்கு சம்மதம் தெரிவிக்க உடனடியாக தனது மந்திரிகளை தசரதரின்  அரண்மனை அனுப்பினார் ஜனகர்.

ஜனகரின் மந்திரிகள் மூன்று நாட்கள் குதிரையில் ப்ரயாணம் செய்து நான்காவது நாள், அயோத்தியை அடைந்து, மிதிலாபுரி மன்னரான ஜனகரின் செய்தியை பின்வருமாறு தெரிவித்தனர். “மேன்மை பொருந்திய சிவதனுசை வளைத்து நாணேற்றுபவர்க்கே எனது மகளான சீதையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தேன். என் மகளின் அதிர்ஷ்டம் காரணமாக இப்போது விஸ்வாமித்திரருடன் எங்கள் நகருக்கு விஜயம் செய்த உங்கள் மகன் ராமர், அவையோர் எல்லோர் முன்னிலையிலும் அந்த வில்லை உடைத்து, அவரது வீரத்தை பறை சாற்றினார். எனவே எனது மகளான சீதையை அவருக்கு மணம் முடித்துக் கொடுக்க உங்கள் சம்மதத்தை கோருகிறேன். மேலும் தாங்களும் தங்கள் பரிவாரங்கள் சூழ மிதிலைக்கு வரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.”

ஜனக மந்திரிகளின் வார்த்தைகளைக் கேட்ட தசரதன் மிகவும் சந்தோஷமடைந்து, வசிஷ்டர், வாமதேவர் முதலானவர்களைப் பார்த்து, “ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரருடன் மிதிலையில் இருக்கிறார்கள். அங்கிருந்த சிவதனுசில் நாணேற்றி தனது வீரத்தை வெளிப்படுத்தியிருக்கும் நமது குமாரன் ராமனுக்குப் பரிசாக தனது புத்திரியான சீதையை மணமுடித்துக் கொடுக்க ஜனக மன்னர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். உங்களுக்கு சம்மதம் என்றால் உடனடியாக அனைவரும் மிதிலைக்கு கிளம்புவோம்”, என்றார். மந்திரிகளும், மகரிஷிகளும் அதை மகிழ்ந்து ஏற்றுக்கொள்ள, ஜனக மன்னரின் தூதுவர்களை அன்று ஒருநாள் தங்கும்படி சொல்லி, மறுநாள் அனைவரும் மிதிலைக்கு கிளம்ப முடிவெடுத்தனர்.

அடுத்த நாள், தசரதன் தனது சபையில் அனைவரும் குழுமியிருக்க, தனது மந்திரியான சுமந்திரரை அழைத்து, ‘திருமணத்திற்கு தேவையான ரத்தின, வைர, வைடூர்யங்களை, ஆபரணங்களை, தனம் முதலாவற்றை நமது பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் கொண்டு முன்னே செல்லச் சொல்லுங்கள். நமது பரிவாரங்கள் அனைத்தும் புறப்படத் தயாராக இருக்கட்டும். வசிஷ்டரும், வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், மார்க்கண்டேயர் முதலான பெரியோர்கள் துவங்கிய செயல்கள் நல்லபடி முடிய ஆசீர்வாதம் செய்து முன்னே செல்லட்டும், எனது ரதங்களும் தயாராகட்டும். விரைந்து மிதிலைக்கு கிளம்புவோம்” என்றார்.

தசரதர் சொன்னபடி அனைவரும் அயோத்தியிலிருந்து கிளம்பி நான்கு தினங்கள் பிரயாணம் சென்று மிதிலையை அடைந்தனர். மன்னரான ஜனகர் அவர்களை எதிர்கொண்டழைத்து மிகுந்த மரியாதை செய்து சிறப்பித்தார்.

“சிறப்பு வாய்ந்த, கீர்த்தி மிக்க பரிவாரங்களால் சூழப்பட்டு எனது ராஜ்யத்திற்கு  வருகை புரிந்திருக்கும் தசரத சக்ரவர்த்தியே! உங்கள் வரவினால் எம் குலம்  பெருமையடைந்தது. நான் செய்த புண்ணியத்தின் பலனாக நீவீர் இங்கு வந்தருளினீர்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாகம் இன்னும் இரண்டொரு நாளில் பூர்த்தியாகும். அது நிறைவடைந்ததும், சீதா ராம கல்யாணத்தை நடத்த சித்தமாயிருக்கிறேன். அதற்கு தங்கள் அனுமதியை எதிர்பார்க்கிறேன்”, என்றார் ஜனகர்.

“தான சாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்த ஜனகரே! நீங்கள் தானம் கொடுப்பவராக இருப்பதால் உங்கள் வசதிப்படியே ஆகுக. நீங்கள் தருவதை ஆனந்தமாக பெறப்போகும் எங்களுக்கு அந்த நேரத்தைக் குறிக்கும் அதிகாரமில்லை.  நீங்கள் நிச்சயித்த நேரத்தில், எங்களாலான அனைத்தும் செய்ய சித்தமாயிருக்கிறோம்”, என்றார் தசரத சக்ரவர்த்தி. [இப்படி இக்காலத்தில் இரண்டு சம்மந்திகள் பேசிக்கொண்டால் ஆச்சர்யமே]

ஆஹா! நல்ல இடத்திற்குத் தான் தனது அருமை மகள் அடிபெயரப்போகிறாள் என்ற மன சந்தோஷத்துடன், தசரதருக்கும், மற்றும் அவரது பரிவாரங்களும் தகுந்த தங்குமிடத்தை ஏற்பாடு செய்தார் ஜனகர். இரு பக்கத்திலும் இருந்த மஹரிஷிகள் ஒருவருக்கொருவர் மரியாதை பரிமாற, ராம லக்ஷ்மணர்களைப் பார்த்த தசரதர் உள்ளம் குளிர்ந்தார். அனைவரும் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாளிகையில் அன்றைய இரவைக் கழித்தனர்.

ஜெய் ஸ்ரீராம்.

Advertisement