Advertisement

வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத்

தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு

கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம்

மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன்.

விஸ்வாமித்திரர் தொடர்ச்சி

விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காக யாகம் ஆரம்பித்து, அதில் கலந்து கொள்ள வருமாறு பல்வேறு ரிஷிகளுக்கும் தகவல் அனுப்பினார். விஸ்வாமித்ரரின் கோபத்திற்கு அஞ்சி பல ரிஷிகள் யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். ஆனால் மஹோதயர் உள்ளிட்ட வசிஷ்டரின் புத்திரர்களான நூறு பேரும், “செய்யத்தகாததை, செய்யக்கூடாதவர், செய்யத் தகுதியில்லாதவனுக்காக செய்கின்றார்” என்று கூறி யாகத்திற்கு வரவில்லை.

[செய்யத்தாகாதது – மனித உடலுடன் தேவலோகம் செல்லச்  செய்யும் யாகம்; செய்யக்கூடாதவர் – க்ஷத்ரியரான விஸ்வாமித்திரருக்கு யாகம் செய்யும் அதிகாரமில்லை; செய்யத் தகுதியில்லாதவன்- அகோர உருவம் அடைந்த சண்டாளனான திரிசங்கு ]

அதில் வெகுண்ட விஸ்வாமித்திரர், ” நான் உக்ரமான தவம் செய்வது இவர்களுக்குத் தெரியாதா? நான் செய்த தவத்தால் க்ஷத்திரியனாக பிறந்தும் யாகம் செய்யும் வல்லமை பெற்றது இவர்களுக்கு தெரியாதா? என்னை எந்த தோஷமும் சேராது. இவ்வாறு அவதூறு சொன்ன அவர்கள், இப்போதே சாம்பலாகக் கடவது. எல்லோருமாக, அவர்கள் இதுவரை செய்த தவத்தின் பயன் அழிந்தவர்களாக, எழுனூறு ஜன்மங்கள் அடையட்டும். அவர்கள் நாய் மாமிசம் சாப்பிடுவர்களாக, அழகில்லாத வடிவம் உடையவர்களாக பிறக்கட்டும்.”

“மகோதயன்(வசிஷ்டரின் மகன்), தேவையின்றி என்னை நிந்தித்தான். இவன் உலகில் எல்லோராலும் மட்டமாக நினைக்கப்படும் வேடனாக பிறந்து உயிர்களை பறிப்பதிலேயே குறியாக, சிறிதளவும் மனதில் தயை என்பது இல்லாதவனாக, கஷ்டம் அனுபவிப்பான்” என்று விஸ்வாமித்திரர், யாகம் செய்யக் குழுமி இருந்த ரிஷிகளின் மத்தியில் கூறினார். அவரது சாபம் உடனே பலிதமாயிற்று.

யாகம் செய்து முடிவில் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க அழைக்க, தேவர்கள் வராததால், விஸ்வாமித்திரருக்கு சொல்லவொன்னா கோபம் மூள, “திரிசங்கு! என் தவத்தின் பலனை உனக்கு அளிக்கிறேன். நீ இதே உடலுடன் தேவலோகம் செல்வாயாகுக” என்று கூறவும், திரிசங்கு அவனுடைய அதே உடலுடன் தேவலோகம் சென்றான்.

ஆனால் அங்கோ, “நீ உன் குல குருவான வசிஷ்டரால் சபிக்கப்பட்டவன். தேவலோகம் வரத் தகுதியற்றவன். தலைகீழாக வந்த இடம் நோக்கி செல்லக் கடவாய்” என்று கூறி திரிசங்குவை திருப்பி அனுப்பினர். திரிசங்கு கீழே விழும்போது, “விஸ்வாமித்திரரே…! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலற, அவரது அபயக் குரல் கேட்டதும், விஸ்வாமித்திரர் நடந்தவைகளை ஞான திருஷ்டியில் அறிந்து உடனே, “திரிசங்கு…! அப்படியே நில்” என்று ஆணையிட்டார்.

அவ்வாறே பூமியிலும் இல்லாமல், மேலுலகும் செல்லாமல் திரிசங்கு நிற்க, மளமளவென, அவன் தலைகீழாக நின்ற அந்த இடத்திலேயே சப்தரிஷி மண்டலம், நக்ஷத்திர மண்டலம் என்று அனைத்தையும் படைத்து, “இன்னொமொரு தேவலோகத்தையும் படைக்கிறேன், அதில் இந்த திரிசங்குவே இந்திரனாக இருக்கட்டும்” என்று எண்ணி தேவர்களை படைக்க நினைக்க, அவரின் தவ வலிமை கண்டு அஞ்சிய தேவர்கள், விஸ்வாமித்திரரை பணிவுடன் அணுகினர்.

“தவத்தில் சிறந்தவரே! மனிதர்கள் செய்த புண்ணியத்தினால் அல்லவோ தேவலோகம் வரவேண்டும்? அது தானே நியதி. இந்த திரிசங்கு அவரது குருவான வசிஷ்டரை அவமதித்ததால் பாபம் தேடிக்கொண்டார். சுவர்க்கம் வர தகுதியில்லாதவன் ஆனார்” என்று கூறி அவரின் நோக்கம் மரபுகளுக்கு எதிரானது என்பதை புரிய வைத்தனர்.

அதில் கோபம் தணிந்த விசுவாமித்திரர், “திரிசங்கு-வை தேவலோகம் அனுப்புகிறேன் என்று நான் வாக்குக் கொடுத்து விட்டேன். இப்போது அவர் இருக்கும் இடம் அப்படியே சுவர்க்கமாகவே இருக்கட்டும். ஆனால், மேற்கொண்டு இந்திரன் முதலான தேவர்களை படைக்காமல் விடுகிறேன், என்னைப் பணிந்த உங்களுக்கு எனது ஆசிர்வாதங்கள்” என்று தேவர்களை வாழ்த்தினார். 

திரிசங்கு-விற்கு தனது தவமனைத்தையும் பிரயோகித்ததால் சோர்வுற்ற விஸ்வாமித்திரர், மேற்கு திசையில் சென்று தனது தவத்தை மீண்டும் ஆரம்பித்தார். ஆனால் அங்கும் இடையூறு வந்தது.

அம்பரீஷன் என்ற மன்னன், ஒரு யாகத்தை ஆரம்பித்தான். அந்த யாக பசுவை இந்திரன் எடுத்துக் கொண்டு போக, அவரது மந்திரிகள், “யாக பசு காணாமல் போனது துரதிஷ்டமே. பசுவிற்கு பதிலாக, மனிதனை பலியிடலாம். ஆனால் ஒன்று, அவனை அவனது பெற்றோர் மனமுவந்து தரவேணும். அதற்குண்டான ஏற்பாடு செய்யுங்கள்” என்றனர்.

‘யார் தருவார் பெற்ற பிள்ளையை மனமுவந்து?’ என்று யோசித்த அம்பரீஷன், பறையறிவித்து நாட்டு மக்களிடம் கேட்டான். ஒருவரும் முன்வராததால், காட்டில் ரிசீகன் [விஸ்வாமித்திரரின் சகோதரியின் கணவர்] என்ற ரிஷியிடம், கையேந்தி நின்றான். “முனிவரே! துவங்கிய யாகம் நடக்காவிட்டால் அது எனது மக்களை பாதிக்கும். எனவே நான் தரும் நவரத்தினங்கள், பசு, தான தானியங்களை பெற்றுக் கொண்டு உமது மூன்று பிள்ளைகளில் ஒருவரை மனமுவந்து தாருங்கள்” என்றுகேட்டான்.

ரிசீக ரிஷி, அம்பரீஷனுக்கு மனமிரங்கி, “எனது மூத்த குமாரனை தரமாட்டேன்” என்று யோசனையாக கூறவும், அருகிலிருந்த அவரது மனைவி, “இளைய குமாரனை தர நான் சம்மதிக்க மாட்டேன், அவன் எனக்கு மிகவும் பிரியமானவன்” என்று கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் இரண்டாவது மகனாகிய சுனத்சேபன், “அப்பொழுது உங்கள் இருவருக்கும் நான் ப்ரியமானவனில்லை அல்லவா? சரி நானே அம்பரீஷ மன்னனுடன் போகிறேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்து மன்னனுடன் செல்ல கிளம்பினான்.

வழியில் தாய் மாமனான விஸ்வாமித்திரரைப் பார்த்ததும் துக்கம் மேலோங்க, “மாமா! எனக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை, என்னைக் காப்பாற யாருமில்லை” என்று பலவாறு புலம்ப, விஸ்வாமித்திரருக்கு அவன் மீது கருணை ஏற்பட்டது. 

“சுனத்சேபா! கலங்காதே. உனக்கு பதிலாக என் மகன்கள் யாரையாவது அம்பரீஷனுக்கு தருகிறேன். உனக்கு நீண்ட ஆயுள் உண்டாகட்டும்” என்று ஆசீர்வாதம் செய்தார். தனது நான்கு மகன்களை கூப்பிட்டு, இன்ன விஷயமென்று சொல்லி யார் மன்னனுடன் போக தயாராயிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவரது நான்கு பிள்ளைகளும் ஆட்சேபம் தெரிவித்தனர். “தமக்கை மகனுக்காக தம் மகனை தாரை வார்ப்பீர்களோ?” என்று தந்தையையே ஏளனம் செய்ய, “நாய் மாமிசம் தின்று நீங்களும் வசிஷ்ட புத்திரர்கள் போல, ஆயிரம் வருஷங்கள் பூமியில் அலையக் கடவீர்கள்” என்று சபித்தார்.

பின்னர், சுனத்சேபனிடம், “பயப்படாதே, உன்னைக் காப்பேன் என்ற எனது வாக்கு ஒருநாளும் தப்பாது. இந்த மன்னன் அம்பரீசனுடன் செல். அங்கே யாகத்தில் அக்னிக்கு உன்னை தாரை வார்க்கும் போது, எதிரில் நின்று இந்த மந்திரங்களைக் கூறு. இந்திரன் முதலான தேவர்கள் மகிழ்வார்கள். நீயும் தீர்க்கமான ஆயுசுடன் இருக்கலாம்” என்று கூறி இரண்டு மந்திரங்களையும் உபதேசித்தார்.

இப்போது அம்பரீசனுடைய யாகமும் பூர்த்தியானது, சுனத்சேபனும் உயிர்பிழைத்தான். ஆனால், தனது பிள்ளைகள் மேல் கோபம்கொண்டு சபித்ததால், விஸ்வாமித்திரரின் தவப்பயன் அழிந்தது. மனம் வருந்திய விஸ்வாமித்திரர், “இனி எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளக் கூடாது” என்று நிச்சயித்து, மீண்டும் தனது தவத்தை துவங்கினார்.   

பலவருட தவத்திற்கு பிறகு ப்ரஹ்மதேவர் தோன்றி, “முதலில் ராஜ ரிஷியாயிருந்த நீர், இப்போது பொறுமையை கைப்பற்றியதால் க்ஷத்ரியத்தன்மை நீங்கி ரிஷியானீர்.”, என்று வாழ்த்திவிட்டு சென்றார். வெறும் ரிஷியாவதுவா விசுவாமித்திரரின் நோக்கம்? அல்லவே? எனவே மீண்டும் தவம். இப்போது சோதனை மேனகை உருவத்தில் வந்தது.

தடாகத்தில் நீராடும் மேனகையை ஒருசமயம் விசுவாமித்திரர் காண நேர, ஆவல் மீது மிகுந்த மையல் கொண்டு, பத்து வருடங்களை அவளோடு கழித்தார். திடீரென ஒரு நாள், தான் ஆரம்பித்த காரியம் என்ன இப்போது இங்கே செய்து கொண்டிருப்பது என்ன? என்ற யோசனை வர, காமத்தால் என் தவம் வீணானதே என்று மனம் நொந்தார்.

அவரது வேதனையைக் கண்ட மேனகை எங்கே தன்னை சபித்திடுவாரோ என்று எண்ண, “உன் மீது தவறில்லை, எனக்கு புத்தி பிசகி இப்படி செய்தால் அதற்கு நீ என்ன செய்வாய்?”, என்று கேட்டு அவளை அனுப்பி வைத்தார். அடுத்தவனை நோக்கி உன்னால்தான் நான் கெட்டேன், என்ற பாவம் [ bhavam ] போய் விட்டது, சுய சோதனை செய்து தவறு தன்னுடையது என்று தெளிந்து, இனி இந்திரியங்களை அடக்கி தவம் செய்வது என்ற முடிவெடுத்தார் விசுவாமித்திரர்.

கடுந்தவம் புரியும் அவரை சோதிக்க இப்போது இந்திரன் புறப்பட்டான், தன அவையை அலங்கரிக்கும் அப்சரஸான ரம்பையை அனுப்ப, விஸ்வாமித்திரருக்கு அவளைக் கண்டதும் தனது ஞான திருஷ்டியால் இந்திரனின் திட்டமிது என்று தெரிந்து, ரம்பையை கல்லாக போகுமாறு சபித்தார். பின்னர், எய்தவன் ஒருவனிருக்க அம்பை நோவானேன்?, என்று யோசித்து ரம்பைக்கு சாப விமோச்சனமும் அளித்தார். ஆனால், சாபம் தந்ததால் தனது தவவலிமை குறைந்ததை உணர்ந்தவர், பேசினால் தானே சக்தி விரயம்? இனி பேசுவதில்லை என்று முடிவெடுத்து, அடுத்து அவர் மேக்கொண்டது பஞ்சாக்னி தபஸ்.

கோடைக் காலத்தில் நான்கு புறமும் தீயினால் சூழப்பட்டும், குளிர் காலத்தில் நீரில் நின்றும் புரிவது பஞ்சாக்னி தபஸ். அதை செய்து, காற்றை மட்டுமே ஆகாரமாக கொண்டு நீண்ட நெடிய தவத்தை புரிந்தார் விசுவாமித்திரர். அவரது தலையிலிருந்து ஆவி புறப்பட்டது அத்தனை கோர தவம். அத்தவத்தின் விளைவாக கடல் கொந்தளித்தது, சூரியன் ஒளி மங்கினான். பூமி நடுங்கியது, மூவுலகும் பொசுங்கிப் போகுமோ என்ற ஐயம் ஏற்பட, தேவர்கள், ரிஷிக்கள்

ப்ரஹ்மாவிடம் வேண்டிக்கொள்ள, அவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, விசுவாமித்திரரின் முன் தோன்றினார்.

தேவர்கள் புடை சூழ வந்த அவர், “இப்போது நீர் ப்ரஹ்மரிஷியானீர்”, என்று மொழிய.. அப்போதும் விசுவாமித்திரர் மனம் ஒப்புக் கொள்ளாமல், வேதங்களின் சாரத்தை முழுமையாக அறிந்தவரும்,ப்ரஹ்மாவின் புதல்வரும்மான வசிஷ்டரே வந்து சொன்னாலொழிய நான் ப்ரஹ்மரிஷி என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நிச்சயமாக மீண்டும் தவத்தில் ஈடுபடுவேன்” என்றார்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும், வசிஷ்டர் விசுவாமித்திரரின் புத்திரர்களைக் கொன்றவர். சரி, இவராவது சும்மாயிருந்தாரா என்றால் அதுவுமில்லை, வசிஷ்டரின் புத்திரர்களை நாய் மாமிசம் உண்ணும் பிறப்பாக பலகாலம் வாழுமாறு சபித்தார். அது மட்டுமா, எத்தனை துவேஷம் இருந்தது வசிஷ்டர் மீது?

இப்பொது என்னவாயிற்று? மனம் தெளிந்தது, சலனம், வீழ்ச்சி எதுவுமற்ற நிலை பெற்ற விசுவாமித்திரர், தன மகன்களை கொன்றவரே வந்து தன்னை ஆசிர்வாதம் செய்யவேண்டும் என்று விழைகிறார். அது மட்டுமல்ல, வசிஷ்டரின் பெருமைகளை தானே மனமுவந்து சொல்லி, அவர் வர வேணும் என்று ப்ரஹ்மாவிடமே கேட்கிறார். இது ப்ரஹ்மரிஷி தத்துவம். கோபதாபங்கள், மத மாச்சர்யங்கள், குல வேறுபாடுகள் அனைத்தும் கடந்து இந்திரியங்களை வென்று நின்றார் விசுவாமித்திரர். இவர் போற்றுதலுக்குரியவர்.

விசுவாமித்திரர் வேண்டியவண்ணமே வசிஷ்டரே விசுவாமித்திரரின் எதிரே வந்து, “யாரும் செய்ய இயலாத அரிய பெரிய தவம் செய்து க்ஷத்ரிய குலத்தில் பிறந்தாலும், ப்ராஹ்மண குலத்துக்கு உயர்ந்து, மேலும் மேன்மையான ப்ரஹ்மரிஷி தகுதிகளை பெற்றீர். வாழ்க”, என்று வாழ்த்தினார்.

வசிஷ்டர் வாழ்த்துவது…  தனது ஆஸ்ரமத்தை துவம்சம் செய்த, தனது காமதேனுவை பலவந்தமாக இழுத்துச் செல்ல நினைத்த, மகன்களை கொடுமையாக சபித்த விசுவாமித்திரரை. 

ஞானம் ஞானத்தை போற்றும்.

ஜெய் ஸ்ரீராம்

ReplyForward

Advertisement