Advertisement

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும் அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

விஸ்வாமித்திரர்

“ராமா! லக்ஷ்மணா! கேளுங்கள், காதி என்ற புகழ் பெற்ற மன்னரின் புத்திரர் இந்த விஸ்வாமித்திரர். பிரஜைகளின் நன்மையை பெரிதும் போற்றி வந்தவர். எதிரிகள் இவர் பெயரைக் கேட்டால் நடுங்கும் வீரம் கொண்டவர். ஒரு சமயத்தில் தனது சேனைகளோடு திக்விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு திரும்பும் வழியில் இருந்த காட்டில், மகரிஷி வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு சென்றார். இயற்கையான உணவுகளான, பழங்கள், கிழங்குகள் முதலானவற்றை புசித்து கடுந்தவம் செய்து வந்த ரிஷிகள் பலர், முகத்தில் காந்தியுடன் அங்கு இருந்தனர்.

அது மற்றொரு தேவலோகமோ என்று எண்ணத்தக்கதாக இருந்தது. தனது ஆஸ்ரமத்திற்கு வந்து தன்னை வணங்கி நிற்கும் மன்னரான விஸ்வாமித்திரரை உபசரித்து, பழங்கள் கொடுத்து ஆசுவாசம் செய்து கொள்ள வசிஷ்டர் கேட்டுக் கொண்டார். பின், “மன்னரே! உனது குடிகள் சுகமா?  அரசநீதி தவறாமல் செல்வம் ஈட்டி, அதை விருத்தியாகி, உரிய முறையில் மக்களுக்கு தேவையான வழியில் செலவளிக்கின்றீரா? உமது வேலையாட்கள் திருப்தியாக இருக்கின்றனரா? அவர்களை நல்ல விதமாக நடத்துகிறீரா? எதிரிகள் இல்லாமல் இருக்கின்றீரா?  உமது பிள்ளைகள், பேரன்கள் உட்பட உம்மைச் சார்ந்த அனைவரும் எவ்வித குறையுமின்றி நலமுடன் இருக்கின்றார்களா? அதுவே யாம் வேண்டுவது”  என்று விஸ்வாமித்திரரைப் பார்த்து வசிஷ்டர் கேட்டார்.

“ரிஷி அவர்களே! உங்களின் ஆசிர்வாதத்தால் எவ்வித குறைகளுமின்றி அனைவரும் நலம்” என்று பணிவோடு பதிலளித்தார் விஸ்வாமித்திரர்.

பின் வசிஷ்டர், “ராஜா விஸ்வமித்திரா! தர்மவானே! உமக்கு உணவளிக்க ப்ரியமாயிருக்கிறேன், இருந்து விருந்துண்டு செல்லுங்கள்” என்று அரசனைப் பார்த்து கேட்டார்.

அதற்கு, “மகரிஷியே! நீங்கள் கொடுத்த பழங்கள் முதலானவைகளே எங்களுக்கு திருப்தி அளித்தது. காட்டில் வசிக்கும் தங்களுக்கு, எனக்கும் என் சேனைகளுக்கும் உணவளிக்கும் சிரமத்தினை தவிர்க்க விரும்புகிறேன். உலகமே வணங்கத்தக்க உங்களை தரிசனம் செய்ததே எனது பாக்கியம். உங்கள் ஆசிகள் எனக்கு பேரானந்தத்தை கொடுத்தது, எனவே விடை கொடுங்கள் புறப்படுகிறோம்”  என்றார்.

வசிஷ்டர் மீண்டும் உணவுண்டு செல்லுமாறு வலியுறுத்த, “சுவாமி! நீங்கள் மிகவும் கேட்பதால் அப்படியே செய்கிறோம். ஆனாலும் உங்களுக்கு வீண் சிரமமாயிற்றே என்றுதான் தயங்கினேனே தவிர, வேறெந்த ஆட்சேபணையும் இல்லை” என்றார் விஸ்வாமித்திரர்.

அப்போது வசிஷ்டர் காமதேனு என்ற பெயருடைய பசுவைப் பார்த்து, “இங்கு இருக்கும் அனைவருக்கும் எவ்விதமான உணவு வகைகள் பிடித்தமோ, அவை அனைத்தையும், அறுசுவை பதார்த்தங்கள், பானங்கள், நறுமண வஸ்துக்கள், தாம்பூலம் முதலியவற்றோடு சிறப்பான விருந்தினை தயார் செய்க. விரும்பிய அனைத்தையும் உடனடியாக கொடுக்கும் காமதேனுவே! சீக்கிரமாக இவை அனைத்தையும் ஏற்பாடு செய்க” என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்.

வசிஷ்டர் மிகப்பெரிய ஞானி, விருப்பு வெறுப்புகள் அற்ற தவசீலர். அவர் கேட்டுக் கொண்டதும் காமதேனு (சபலை), உணவு வகைகள் அனைத்தையும் பொழிந்தது.

கரும்புச்சாறு, தேன், பொரி, மைரேயம் என்ற பானம், பானகம், அப்பம், வடை, சுடச்சுட அன்னம், பாயச வகைகள், சித்ரான்னங்கள், ரச வகைகள், வெல்லத்தினால் ஆன பக்ஷணங்கள், தயிர், நெய், இன்னமும் அங்கிருந்தவர்கள் மனதால் நினைத்த அனைத்து உணவு வகைகளும் உடனடியாக கிடைத்தது. விஸ்வாமித்திரரும் அவரது மாபெரும் சேனைகளும், மனம் குளிர வயிறு நிறைய உணவுண்டு மகிழ்ந்தனர்.

விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடம் அளவற்ற ஆனந்தத்துடன் அவரை நமஸ்கரித்து, “மகரிஷி! தங்களது விருந்தோம்பல் என்னை திக்குமுக்காட செய்து விட்டது, இது பூர்வபுண்ணியம். தங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சிறப்பு வாய்ந்த அனைத்தும் மன்னரிடத்தே இருக்க வேண்டுமல்லவா? எனவே தங்களுக்கு லட்சம் பசுக்கள் தருகிறேன். நீங்கள் இந்த சபலையை எனக்கு தந்தருளுங்கள்”, என்று கேட்டார்.

“மன்னா விஸ்வமித்திரா! பெருந்தன்மையுள்ளவனுக்கு புகழ் சேரும். நீ தருவதாக கூறிய அனைத்தையும் நினைத்த மாத்திரத்திலேயே கொடுக்கவல்ல காமதேனு இது. அவ்வாறிருக்க அவற்றுக்கு ஈடாக இதை உனக்கு தருவேனா? தவிர என்னுடைய நித்ய கர்மாக்களுக்கு, ஆசிரம அனுஷ்டானங்களுக்கு இந்த சபலையெனும் பசு மிகவும் உதவியாயிருக்கிறது. எனவே, நீ என்ன வைர வைடூர்யங்கள், கோடி அஸ்வங்கள், லக்ஷம் யானைகள் கொடுத்தாலும், இதை தருவதாயில்லை” என்று வசிஷ்டர் கூறியதும், எப்படியேனும் அந்த பசுவை அடைந்தே தீருவது என்று முடிவெடுத்த விஸ்வாமித்திரர், தனது பரிவாரங்களை அழைத்து அப்பசுவை இழுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டார்.

விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு வரும்போது அவரிடம் இருந்த பணிவென்ன? இப்போது அவருடைய அகங்காரமென்ன? ஒரு பொருளின் மீது ஆசை வைத்தால் எதையும் செய்யத் துணிவு உண்டாகும். அதிலும் அதிகாரத்தில் இருந்தால் கேட்பானேன்? இதற்கு விஸ்வாமித்ர மன்னனும் விதிவிலக்கல்ல.

சேவகர்கள் தன்னை இழுத்து செல்வதை உணர்ந்த சபலை என்ற அந்த பசு, அவர்களை எட்டித்தள்ளி, வசிஷ்டரைப் பார்த்து, “ரிஷியே! என்னை இவர்கள் பலவந்தமாக இழுத்துச் செல்கிறார்களே? நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்களா?” என்று கதறலோடு கேட்டது.

“பெண்ணே! நீ எந்தவொரு குற்றமும் புரியவில்லை, நான் உன்னைக் கைவிடவுமில்லை. ஆயினும் இந்த விஸ்வாமித்திரன் க்ஷத்ரியன், நம்மை காத்து ரக்ஷிக்க கடமைப் பட்டவன். அவனை எதிர்ப்பதென்பது தவம் செய்யும் என்னால் இயலாது. தவ வலிமையால் இவரை சபிப்பதோ, தண்டிப்பதோ தகாது” என்றார்.

“சுவாமி! நீங்கள் ப்ரஹ்மரிஷி, உங்கள் தவ வலிமைக்கு முன் க்ஷத்ரியர்கள், அவர்களின் பராக்கிரமம் தூசு போன்றது. உங்கள் பார்வை ஒன்றினாலேயே அவர்கள் அனைவரும் பொசுங்கி விடுவார்கள். ஆயினும் நீங்கள் அவரை எதிர்க்கத் துணியாததால், இத்தனை நாட்களாக உங்களோடு இருந்ததில்,  உங்கள் மந்திர பலத்தால் என்னுடைய சக்தி  எல்லையற்றதாயிருக்கிறது. உத்தரவிடுங்கள், இந்த மன்னனின் படை பலத்தை ஒன்றுமில்லாமல் பண்ணுகிறேன்”என்று காமதேனுவாகிய சபலை விண்ணப்பிக்க…

“எதிரிகளை வெல்லும் சைனியத்தை உண்டாக்கி உன்னை காத்துக் கொள்வாயாக” என்று வசிஷ்டர் ஆசிர்வதித்தார்.

பின்னர் அந்த பசு, “ஹூம்பா” என்று சப்தம் செய்ய, அதிலிருந்து எண்ணற்ற சேவகர்கள் உருவானார்கள். அவர்கள் விஸ்வாமித்திரரின் படைகளை அடித்து துவம்சம் செய்தனர். கோபம் மிகக் கொண்டு விஸ்வாமித்திரர், ரதத்திலேறி அஸ்திரங்களை மழையெனப் பொழிந்து சபலை உண்டாக்கிய சேவகர்களை அழித்தார். உடனே, காமதேனு இன்னும் பலவானாக பலபேரை உருவாக்க, அவர்களையும் விஸ்வாமித்திரர் தனது அஸ்திரங்களால் துண்டம் துண்டமாக செய்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட வசிஷ்டர், “இன்னமும் அக்ரோணி சேனைகளை உருவாக்கு” என்று சபலைக்கு உத்தரவிட்டார். மறு நொடி சபலையான அந்த பசுவிலிருந்து, காம்போஜர்கள், யவனர்கள், மிலேச்சர்கள், கிராதகர்கள் முதலானோர் பல்லாயிரக்கணக்கில் உருவாக, அவர்கள் விஸ்வாமித்திரரின் சேனைகளை ஒன்றுமில்லாமல் செய்தனர்.

சேனைகள் அழிந்ததைக் கண்ணுற்ற விஸ்வாமித்திரரின் புதல்வர்கள் நூறு பேரும், வசிஷ்டரை நோக்கி பெருங்கோபத்துடன் தாக்க வர, வசிஷ்டர் “ஹும்” என்று ஒரு அதட்டல் போட்டதும் அவர்கள் அனைவரும் செத்து மடிந்தனர்.

விஸ்வாமித்திரருக்கு கையறு நிலை. சைனியங்கள், தளபதிகள், குதிரை, காலாட்படைகள் அனைத்திற்கும் மேலாக அவரது புத்திரர்கள் என அனைவரும் அழிந்ததை நினைத்து மனம் வருந்தினார். எத்தனை படைகள், அஸ்திர சாஸ்திரங்கள் இருந்துமென்ன? ஒரு ரிஷியிடம் தோற்றோமே? என்ற மன உளைச்சலுடன், மிகுந்திருந்த ஒரே ஒரு மகனைக் கூப்பிட்டு, “இனி நீயே அரசாள்வாய். தரும ராஜ நீதியிலிருந்து வழுவாமல், மக்களைக் காப்பாய்” என்று மகனை நாட்டைப் பாதுகாக்க சொல்லிவிட்டு, இமயமலைக்கு பயணமானார்.

அங்கு சென்று பரமேஸ்வரனை நோக்கி நீண்ட நெடுங்காலம் கடுந்தவம் புரியலானார். அவரது தவத்தில் மகிழ்ந்த சர்வேஸ்வரனும், “ராஜா விஸ்வாமித்திரா! எதற்காக இத்தனை கடுமையான தவம்?” என்று கேட்டார். அதற்கு விஸ்வாமித்திரர், “தேவதேவா! உங்களுக்கு என்மேல் கருணையுண்டானால், எனக்கு தனுர்வேதமனைத்தும் இந்த நொடியே கைவர வேண்டும். அங்கம், உபாங்கம், உபநிஷங்களின் ரகசியம் முதலானவற்றுடன் அனைத்து அஸ்திர சாஸ்திர வித்தைகளும் எனக்கு இக்கணமே தெரியவேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

பரம்பொருளான ஈஸ்வரனும், “அவ்வாறே ஆகுக”, என்று வரமளித்தார். அனைத்து சாஸ்திரங்களையும் சர்வேசனிடமே வரமாக பெற்ற ஒரு போர் புரிவதை தர்மமாகக் கொண்ட மன்னன் என்ன செய்வான்? கர்வமடைவான். அகந்தையுற்ற விஸ்வாமித்திரரும் வசிஷ்டரை அழிப்பேன் என்று சூளுரைத்து, அவரது ஆஸ்ரமம் சென்று அஸ்திர பிரயோகம் செய்து பசும் சோலையாக அமைதியாக இருந்த அந்த ஆசிரமத்தை பாலைவனம் போலாக்கினார். அங்கிருந்த முனிவர்கள், அவர்தம் குடும்பங்கள் போக்கிடமின்றி அங்கங்கு சிதறி ஓட, “பயம் வேண்டாம், அகந்தை கொண்ட இந்த காதியின் புதல்வனை ஒன்றுமில்லாமல் பண்ணுகிறேன், ஓடாதீர்கள்” என்று  வசிஷ்டர் சொன்னார்.

பின்னர் விஸ்வாமித்திரரைப் பார்த்து, “எண்ணற்ற சாதுக்களுக்கு புகலிடமாக திகழ்ந்த இந்த ஆஸ்ரமத்தை அழிக்கத் துணிந்தாய், உனது க்ஷத்திரிய பலம் நீ செய்த தவம், கற்ற அஸ்திர சாஸ்திரங்கள், எனது தவ வலிமைக்கு ஈடாகுமா? இதோ பார்”, என்று கடுங்கோபத்துடன் கூறி, தனது ப்ரஹ்மதண்டத்தை கையிலெடுத்தார்.

அதன் பின் விஸ்வாமித்திரர் தொடுத்த பானங்கள் அனைத்தும், வசிஷ்டரின் ப்ரஹ்மதண்டத்தின் முன் ஒன்றுமில்லாமல் போயின. கடைசியாக ப்ரஹ்மாஸ்திரத்தை விஸ்வாமித்திரர் வசிஷ்டர் மீது ஏவ, அந்த அதீத சக்தி பெற்ற, உலகமனைத்தையும் அழிக்க வல்ல அந்த மேன்மையான அஸ்திரமும் வசிஷ்டரின் தண்டத்தின் முன் பயனற்றுப் போனது.

ப்ரம்மாஸ்திரத்தையே விழுங்கி ஊழிக்கால அக்கினியைப் போல வசிஷ்டரின் ப்ரஹ்மதண்டம் ஜொலிக்க, வசிஷ்டரோ மூவுலகும் வியந்து நோக்கும் வண்ணம் ஒளி பொருந்தியவராக காட்சியளித்தார்.

விஸ்வாமித்திரர் திகைத்தார். தனது க்ஷத்திரிய பலம், தவமிருந்து பெற்ற அஸ்திரங்கள் அனைத்தும் ப்ரஹ்மரிஷியான வசிஷ்டரின் முன் தோற்றோடியதைக் கண்டு மனம் வெதும்பினார். “மன்னனாக இருந்து எத்தனை எதிரிகளை தோற்கடித்திட்டேன்?, தவமிருந்து எல்லா அஸ்திரங்களையும் வரமாக பெற்றேன். ஆனால், ஒரு ப்ரஹ்மரிஷியிடம் தோற்று நிற்கிறேன். என்ன என் க்ஷத்ரிய பலம்? வசிஷ்டரின் ப்ரஹ்ம பலமே பெரிது. இனி நான் ப்ரஹ்மரிஷியாகும் வரை ஓயமாட்டேன்”, என்று தீர்மானம் செய்து, மிகக் கடுமையான தவம் புரியலானார்.

[ தவம் என்றால் என்ன?, அநேகம் பேருக்கு இந்தக் கேள்வி தோன்றலாம், மனம் உள்ளுக்குள் அடங்கி ஒற்றை நோக்கமாய் இருப்பது தவம்.

சரி, முதலில் மனம் அடங்க என்ன வேண்டும்? கூச்சல் குழப்பங்கள் இல்லாத இடம் வேண்டும். பொன், பொருள் மீது பற்றில்லாத நிலை வேண்டும்.

இவை தவத்தின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளோர்க்கு, அதாவது மனத்தினை அடக்க முயற்சி செய்வோர்க்கு. அது மக்கள் வாழும் இடத்தில் சாத்தியப்படாதென்பதால் முற்காலத்தில் தவம் செய்பவர்கள் மலைகளை நோக்கி போனார்கள்.

ஒருவனுக்கு மனம் அடங்கி விட்டதென்றால், வீடு, நாடு, காடு, மேடு, பிள்ளை, பந்துக்கள், நட்பு, நாய், நரி, சிங்கம், புலி, பாம்பு, மண்புழு அனைத்தும் ஒன்றே, அனைத்துமாகி நிற்பதும் இயக்குவதும் சிவமே என்பது தெளிவாகிய பின் அங்கே சலனதிற்கு இடமில்லை.

ஆனால், மனம் அடங்குதல் என்பது அத்தனை சுலபமில்லை, அது அமைதியானது போல ஒரு தோற்றமயக்கம் தந்து, மீண்டும் சலனமெனும் பள்ளத்தாக்கில் நம்மையறியாது விழவைக்கும், கடும் முயற்சியின் பின் எழும், விழும். ஏன் வீழ்கிறோம் என்பது புரியாத வரை, மனம் அடங்குதலும் பொங்கி பிரவாகமாக வெடிப்பதும் திரும்பத்திரும்ப நிகழும். புரிந்தபின், நம்மை வீழ்த்துவது எது என்று அறிந்து தெளிபவன் ஞானி. சலனம் அடக்கம் அனைத்தையும் கடந்து வெளியே வருபவன் ப்ரஹ்ம ஞானி ]

தன் மனைவியோடு தெற்கு நோக்கிச் சென்று விஸ்வாமித்திரர் கிழங்குகளும், இலை தழைகளையும் புசித்து ஆயிரம் வருடங்கள் தவம் செய்தார். அப்போது அவருக்கு ஹவிஷ்யந்தன், மனுஷ்யந்தன், த்ருடநேத்ரன், மஹாரதன் என்ற பிள்ளைகள் பிறந்தனர். அவரது கடுமையான தவத்தினை மெச்சி ப்ரஹ்மதேவர் காட்சியருளி, “காதியின் புதல்வா! உன் தவம் சிறந்தது. இன்று முதல் நீ ராஜரிஷி ஆவாய்”, என்று வாழ்த்தினார்.

ஆனால் ‘பிரம்மரிஷி எங்கே? ராஜரிஷி எங்கே? இல்லை இல்லை பிரம்மரிஷி ஆவதே எனது நோக்கம்’ என்ற வைராக்கியம் கொண்டு மேலும் தீவிரமாக விஸ்வாமித்திரர் தவம் புரியத் தொடங்கினார். அவரது தவம் மூவுலகத்தையும் கிடுகிடுக்க வைத்தது.

அதே காலகட்டத்தில் திரிசங்கு என்ற ஒரு மன்னன் இருந்தார். அவருக்கு தன் மானுட உடலுடனே தேவலோகம் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதை நிறைவேற்றி தருமாறு அவரது குலகுருவான வசிஷ்டரிடம் வேண்டி யாகம் செய்யுமாறு கேட்க, அது தேவையில்லாத காரியம் செய்யக்தகாததும் கூட என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.

அதன்பின் திரிசங்கு, வசிஷ்டரின் புத்திரர்கள் நூறுபேர், அவர்களும் தவம் செய்து யாகம் செய்யும் தகுதியை கொண்டவர்கள். அவர்களிடம் சென்று இவ்வாறு தான் இந்த பூத உடலுடன் தேவருலகம் செல்ல யாகம் நடத்தித் தருமாறு கேட்க, “உங்களது குருநாதரான எங்களது தந்தை வசிஷ்டர் முடியாதென்ற காரியத்தை நாங்கள் செய்வோம் என்று நினைத்தீர்களா? அரசன் குருவை பணிவதே மரபு. அவர் தகாதென்ற காரியத்தை நீங்கள் செய்யத் துணிவது சரி அல்ல” என்று கூறினர்.

“சரி குருவும் கைவிட்டார், குருபுத்திரர்களும் கைவிட்டனர். அவராலும் உங்களாலும் ஆகாது என்றால் நான் வேறு யாரிடமாவது சென்று இந்த யாகத்தை நடத்தித் தருமாறு கேட்கிறேன்” என்று திரிசங்கு சொல்லவும், வசிஷ்ட புத்திரர்களுக்கு கோபம் வந்தது. குரு என ஒருவரை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் சொல்வதை மீறுவதே தவறு. அப்படி இருக்க இன்னொருவரை கொண்டு யாகம் செய்ய துணிந்த திரிசங்குவைப் பார்த்து, “உனக்கு அகோர உருவம் உண்டாகட்டும்” என்று சபித்து விட்டனர். திரிசங்கும் உடனே விகார ரூபமடைந்தான். ஆயினும் அவனது தேவலோக ஆசை விட்டபாடில்லை.

முடிவில் விஸ்வாமித்திரர் தவம் செய்த இடத்திற்கு சென்று முறையிட்டான். என்ன இருந்தாலும் விஸ்வாமித்திரரும் ஒருகாலத்தில் க்ஷத்திரியன் தானே? அவர் இன்னுமொரு மன்னரைப் பார்த்து பரிதாபப் படுவதில் வியப்பேதும் இல்லையே?. “அயோத்தி மன்னா திரிசங்கு! என்னவாயிற்று உனக்கு. யார் கொடுத்த சாபம் இது? எம்மை நாடி வந்த காரணம் யாது?” என்று கேட்டார் விஸ்வாமித்திரர். [திரிசங்கு- இக்ஷ்வாகு குலத்தில் உதித்தவர், ராமரின் முன்னோர்களில் ஒருவர், அயோத்தியை ஆண்டவர்]

திரிசங்கும் நடந்த அனைத்தையும் விவரமாகச் சொல்ல, “திரிசங்கு! பயப்படாதே, நீ நடத்துவதாக உத்தேசித்த யாகத்தை நான் உத்தமமான ரிஷிகளை கொண்டு நடத்திக் காட்டுகிறேன். உன்னை இதே விகார ரூபத்துடன் தேவலோகத்திற்கு அனுப்புவது என் வேலை” என்றார் விஸ்வாமித்திரர்.

ஜெய் ஸ்ரீ ராம்

Advertisement