Advertisement

ஜெய ஜெய சங்கர:

ஹர ஹர சங்கர:

ஸ்ரீ குருப்யோ நம:

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பாலகாண்டம் 

1. காவியம் பிறந்த கதை

“கல்யாண குணங்களான நேர்மை, ஈடிணையற்ற வீரம், தர்மத்தின் சூட்சமம், நன்றி மறவாத குணம், உண்மை பகிர்தல், கொண்ட கொள்கை மாறாத பண்பு, குல கௌரவத்தை காக்கும் மாண்பு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, நல்ல பாண்டித்யம், வெல்ல முடியாத வல்லமை, கருணை ததும்பும் பார்வை, பெரும் தைரியம், கோபமற்ற செயல், ஒளி பொருந்திய முகம், அழுக்காறின்மை [பொறாமை அற்ற குணம்], [ தேவர்களும் அஞ்சும்படி] யுத்தம் செய்யும் திறமை ஆகிய பதினாறு அம்சங்களும் நிரம்பப்பெற்ற ஒருவனைக் கண்டதுண்டா? அப்படிப்பட்ட மனிதன் இருந்தால் அவனைப்பற்றி அடியேன் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நாரத மகரிஷியே, சிறியேனின் இந்த விருப்பத்தை பூர்த்தி செய்வீராக!”, என்று தனது ஆஸ்ரமத்திற்கு வைத்திருந்த நாரதரைப் பார்த்து வால்மீகி கேட்கிறார்.

நாரதர் விடையளிக்கும் முன்….

நாரதரைப் பற்றி… சொல்லவும் வேண்டுமோ? வேதங்களை நன்கறிந்தவர், மூவுலக சஞ்சாரி, மிகச் சிறந்த விஷ்ணு பக்தர் என்பதோடு கலகப்பிரியர் என்ற செல்லப்பெயரும் உள்ளவர்  என அறிந்துள்ளோம்.

சரி, அவரிடம் கேள்வி கேட்கும் இந்த வால்மீகி யார்? பார்ப்போமா?

ப்ருகு வம்சத்தில் பிறந்து, வேடர் குலத்தில் வளர்ந்து, திருடர்களுடன் சேர்ந்து வழிப்பறி செய்தவர் இவர், என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா?  சொன்னதே அவரென்றால்?  நம்பாமல் இருக்க முடியுமா? இவர் ரிஷியான கதையும் அவர் பகிர்ந்ததே, அதுவும் யாரிடம் பகிர்ந்தார் தெரியுமா? நம் பாட்டுடைத்தலைவனான ஸ்ரீ ராமனிடம். அதை சுருக்கமாக இங்கே காண்போமா?

முன்பு ஒரு காலத்தில், மரங்கள் அடர்ந்த வனத்தையொட்டி சில மகரிஷிகள் பாதசாரிகளாய் சென்றபோது.. வால்மீகி அவர்களை மறித்து வழிப்பறியில் ஈடுபட்டார். அப்போது முக்காலமும் உணர்ந்த அந்த மஹரிஷிகள், “திருடனே சற்று பொறு. வேதம் கற்பிக்கும் எங்களிடம் பொன்னும் மணியும் எதிர்பாராதே. எனினும் எங்களிடம் உள்ள அனைத்தையும் தருகிறோம். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு நீ  பதிலுரைக்க வேண்டும்”, என்று கூறினர்.

“சரி  கேளுங்கள்”, என்று இவரும் ஒப்புதல் அளிக்க…

“எதற்காக திருடுகிறாய்?”, என்று கேட்டனர் ரிஷிகள்.

“எனக்காக. என் குடும்பத்திற்காக”, என்று பதிலுரைத்தார் ரிக்ஷன் என்ற இயற்ப்பெயரைக் கொண்ட வால்மீகி.

“நீ கொண்டு செல்லும் பொருட்களுக்கும், பண்டங்களுக்கும் சொந்தம் கொண்டாடும் உன் சுற்றத்தோர், உன் காரியங்களுக்கு உண்டான பாபங்களில் பங்கெடுப்பார்களா? என்பதை அவர்களிடம் கேட்டறிந்து சொல்”,என்றனர் ரிஷிகள்.

இந்தக் கேள்வியில் சில நொடிகள் திகைத்து, பின் “இது நீங்கள் என்னிடமிருந்து தப்பிக்கும் உபாயமோ?”, என்று ரிக்ஷன் சந்தேகிக்க,

“வேடுவ.. நாங்கள் வாக்கினில் நிற்பவர்கள். நீ வரும்வரை இந்த இடத்தைவிட்டு ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என உறுதியளிக்கிறோம். நீ சென்று எங்கள் கேள்விக்கு அவர்கள் சொல்லும் உண்மையான பதிலோடு வா”, என்று அமைதியாக மொழிந்தனர்.

ரிக்ஷனும் சென்றான் அவனது வீட்டிற்கு. தனது சுற்றத்தை எல்லாம் அழைத்து, “நான் கொள்ளையடிக்கும் அனைத்தையும் சிறிதும் சஞ்சலமின்றி அனுபவிக்கும் நீங்கள், அவ்வாறு கொள்ளையடிப்பதால் வரும் என் பாவத்தில் பங்கேற்பீர்களா?”, என்று கேட்டான்.

“மன்னியுங்கள். எங்களை காப்பது உம் கடமை. பொருளோ, பண்டமோ அதை சம்பாதிக்கும் வழி என்பது உம்மை சேர்ந்தது. எனவே, அதன் பலாபலன்களை நீரே அனுபவிக்க முடியுமே தவிர, நாங்கள் அதில் பங்கேற்க இயலாது”, என்று ரிக்ஷனது குடும்பத்தினர் தெளிவாக பதிலளித்தனர்.

ரிஷிகள், இவரிடம் கேட்ட கேள்வியின் பதில் கிடைத்து விட்டது. ஆனால் குடும்பத்தோரின் பதிலை.. கேட்டவனின் நிம்மதி போனது, கூடவே அவனது ஆசா பாசங்களும். வீட்டிலிருந்து வெளியேறினான் ரிக்ஷன்,  ரிஷிகள் இருக்குமிடம் செல்லும் வழியெங்கும், “எத்தனை ஜீவ ஹிம்சைகளை துணிந்து செய்தேன்?, எத்தனை வழிப்போக்கர்களின் உடமைகளைக் களவாடினேன்?, எத்தனை பேர் என்னை சபித்திருப்பார்கள்?”, என்று மனம் வெதும்பினான்.

ரிஷிகள் இவனுக்காக காத்திருந்த இடத்தை வந்தடைந்த ரிக்ஷன், தடாலென அவர்கள் கால்களில் விழுந்து, “ஐயன்மீர்! பதில் கிடைத்தது. புத்தி தெளிந்தது. மாயை அகன்றது”, என்று அழுதவாறே கூற, ஒரு ரிஷி, அவனைத் தூக்கி நிறுத்தி, “வேடுவனே!  தெளிவாக சொல்” என்று அவனை  ஆசுவாசப்படுத்தினார்.

“ஆன்றோர்களே! சொல்கிறேன் கேளுங்கள். என் பாவ காரியங்களின் பலன் என்னையே சாரும் என்றும், அதில் பங்கேற்பதென்பது இயலாதென்றும் என் புத்தியில் உரைக்கும் வண்ணம் ஐயம் திரிபுர தெளிவாகக் கூறினர் என் மனைவி மக்கள்.”

“ரிஷிகளே, இவர்களுக்காகவென நான் செய்த பாவங்கள் சொல்லி மாளாது. தயவு செய்து என் பாவம் தீர வழியுரையுங்கள்”, என்று வேண்டி நின்றான்.

“செல்வனே! நீ பிறந்தது பிராமண குலத்தில், விதிவசத்தால் வேடுவ இனம் வந்தடைந்து, திருடனுமானாய். இன்றோடு, உன் ஊழ் வினை அகன்றபடியால் எங்களை காண நேரிட்டது. நாங்கள் சென்று திரும்பும்வரை ‘ராம ராம’ என்று ஒரே சிந்தையுடன் உச்சரித்துக் கொண்டிரு. இது மோக்ஷ மார்க்கத்திற்காக தாரக மந்திரம்.”, என்று ஆசிர்வதித்து விட்டு சென்றுவிட்டனர். [ மரா மரா  என்று ரிஷிகள் அவருக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் மரா என்று சமஸ்க்ருத வார்த்தை இருப்பதாக தெரியவில்லை. எனவே இதை பிற்சேர்க்கை என்றும் சொல்வதுண்டு. ]

ரிக்ஷனும் அவர்களின் வார்த்தையை சிரமேற்கொண்டு, காமக் க்ரோதங்கள் கடந்து, விருப்பு வெறுப்பற்று, சிந்தை முழுவதையும் ஒருங்கிணைத்து ராம நாம ஜபத்தில் மூழ்க, ஒரு காலகட்டத்தில் அவரைச் சுற்றி கரையான் புற்று வளர்ந்தும் அவரது கவனம் சிதறவில்லை.

பல காலம் கழித்து வந்த ரிஷிகள், “சாதுவே, நீ ராம தாரக மந்திரத்தை ஒருமுகமாக இத்தனை காலம் தியானித்ததால், உமது பாவங்கள் அனைத்தும் அழிந்தது, மகா ஞானியானாய். பெரும் புண்ணியம் அடைந்து எங்களுக்கு சமமான ரிஷியுமானாய். எனவே புற்றிலிருந்து வெளிவருக”, என்று அவரை அழைக்க, ரிக்ஷனும் அவர் அமர்ந்த இடத்திலிருந்த புற்றை விட்டு வெளிவந்தார். 

“இது உனக்கு புனர் ஜென்மம், புற்றிலிருந்து வெளிவந்தமையால், அதே பொருள் கொண்ட வால்மீகி என்ற பெயருடன், இனி நீ  அழைக்கப்பெற்று கீர்த்தியுடன் விளங்குவாய்”, என்று அவரை வாழ்த்தினர்.

வால்மீகி முனிவரின் கதையைப் பார்த்த நாம், இப்போது அவரின் கேள்விக்கு நாரதர் அளித்த பதிலை பார்ப்போமா? பதினாறு குணங்களும் ஒருங்கே பெற்றவர் இப்பூவுலகில் உண்டா என்றல்லவா வால்மீகி கேட்டார்?

“சொல்கிறேன் ரிஷியே, நீவிர் சொன்ன அனைத்து குணங்களும் ஒருவரிடத்தில் காண்பதென்பது அரிதினும் அரிது. ஆயினும் அவ்வனைத்தும் பெற்ற மானுடன் ஒருவன் உண்டு.  இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்து, அயோத்தியை ஆண்டு வரும் மாமன்னனான ராமர் என்பது அவரது திரு நாமம்”, என்று ஆரம்பித்த நாரதர், தொடர்ந்து…

“அவர் தர்மத்தின் மறுஉருவம், அவரைப் பற்றி அறிந்து கொள்ள அவரது கதையை சொல்கிறேன், கவனமாக கேளுங்கள்”, என்று விட்டு ரத்தினச் சுருக்கமாக ராம கதையை, இசை வடிவில் ஸம்க்ஷேப ராமாயணம் எனப்படும் மூலகாவியத்தை அருளினார்.

அதாவது, ராமர் பிறந்தது, வளர்ந்தது, இளவரசனாக அவருக்கு பட்டம் சூட்ட தந்தையான தசரதர் முடிவு செய்தது, சிற்றன்னை கைகேயி கேட்ட இரண்டு வரங்கள், சீதா ராம லக்ஷ்மணர்கள் காட்டுக்கு சென்றது, தசரதர் மரணம், பரதன் காட்டுக்கு சென்று ராமரிடம் முடி சூட மன்றாடுதல், ராமர் மறுக்கவே, அவரது பாதுகைகளை பெற்று அயோத்யா திரும்பி, பாதுகைகளை பட்டாபிஷேகம் செய்வித்தல். சீதா ராம லக்ஷ்மணர்களின் வனவாசம், சூர்ப்பனகையின் மானபங்கம், சீதையை கவர்ந்து செல்ல ராவணன் வருகை, அவ்வாறு செல்லும்போது, ராவணனுடனான ஜடாயுவின் போர், சீதையை காணாது ராமரின் துயரம், தொடர்ந்து அவரைத் தேடுதல், தேடலில் கிடைத்த சுக்ரீவனின் நட்பு, வாலி வதம், ஸீதையைக் கண்டுபிடிக்க அனுமார் லங்கை செல்லுதல், அசோகவனத்தில் தாயாரின் தரிசனம்,  லங்கை அனுமாரால் தீக்கிரையாக்கப்படுதல், கிஷ்கிந்தை திரும்பி ஸீதையை கண்டதை ராமரிடம் பகிர்தல், ராம ராவண யுத்தம், ராமர் வெற்றி வாகை சூடுதல், அக்னி பரீட்சை, விபீஷணனுக்கு லங்கை ராஜ்ஜியம் அருளி முடி சூடுதல், ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் அனைத்தையும் வால்மீகியிடம் கூறி, ராம ராஜ்ஜியம் எப்படி நடக்கிறது என்பதையும் விவரித்தார்.

ஸ்ரீ ராம ராஜ்ஜியத்தில், தந்தை இருக்க பிள்ளை மரிப்பதில்லை, கற்பு நெறி தவறிய பெண்கள் இல்லை, பஞ்சபூதங்களால் மக்களுக்கு இடர் ஏற்படுவதில்லை, பசி, களவு, பிணி தொல்லைகளை அம்மக்கள் அறிந்தோரில்லை. வரப்புயர்ந்து, நீர் உயர்ந்து, நெல் உயர்ந்து, குடியுயர்ந்து, கவலைகள் அற்ற சகல செல்வங்களும் மகிழ்ச்சியும் நிரம்ப பெற்ற மக்களுக்கு தலைவனாக, கோமானாக ராமர் நல்லாட்சி புரிந்து வருவதாக கூறினார்.

இன்னமும் பற்பல யாகங்கள் செய்து, செழிப்போடும், சீரும் சிறப்போடும், மக்கள் மகிழ பலகாலம் ராமர் ஆட்சி புரிவார். பின் அவர் மேலான பிரம்ம லோகத்தை அடைவார், என்றும் நாரதர் கூறினார்.

அடக்கத்துடன் அமர்ந்து ராம காதையை பணிவோடு கேட்டுக் கொண்டிருந்த வால்மீகி முனிவரைப் பார்த்து, “வேதங்களுக்கு நிகரானதும், சகல பாவங்களை போக்குவதும், மிக உன்னதுமான ராம சரித்திரத்தை எவன் ஒருவன் நினைக்கிறானோ, ஐயமுற கற்றுத் தெளிகிறானோ, அவன் சகல சம்பத்துடன், நோய் நொடிகளற்ற,  தீர்க்க ஆயுளுடன் அமைதியான வாழ்க்கை அமைய பெற்றவனாகிறான், ஆன்ம ஸ்வரூபம் அடைந்தபின், மேலுலகத்தோரால் ஏற்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறான்”, என்று நாரதர் உரைத்தார்.

பின் வால்மீகி முனிவரிடம் இருந்து நாரதர் விடைபெற, அவரை முறைப்படி  தகுந்த மரியாதைகள் கொடுத்து வழியனுப்பி, தனது தினசரி அனுஷ்டானங்களுக்காக தாமஸா நதிக்கரைக்கு சென்றார். அந்த நதிக்கரையை ஒட்டி இருந்த காட்டில், ஒரு மரத்தில் இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் [ஒரு வித பறவையினம் ] மகிழ்ச்சியாய் இருந்த போது, அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்து, ஆண் பறவையை வீழ்த்தினான்.

அப்பறவை துடிதுடித்து இறந்ததையும், துணையை இழந்த பெண் பறவை கதறி அழுவதை கேட்டும், மனம் வருந்தினார். அப்போது அந்த வேடனைப் பார்த்து, “சுகித்திருந்த பறவைகளில் ஒன்றை கொன்ற நீ, நிலையில்லாத வாழ்க்கை அடையக் கடவாய்”, என்று சபித்தார்.

சற்று நேரத்திலேயே, “ஒரு பறவையின் துயரம், சாபமிடும் அளவுக்கு என்னை பாதித்ததா?, இவ்வாறு சபித்தது எதனால்? காரணமின்றி காரியமில்லையே?” என்றெல்லாம் யோசித்து, அவரது ஆஸ்ரமத்திற்கு சென்றார். இதே சிந்தனையுடன் அவர் இருக்க, “ஆனால் சபித்துக் கூறிய அந்த வார்த்தைகள் பத லயத்துடன் ஸ்லோகத்தைப் போல அமையபெற்றனவே?”, என்றும் வால்மீகி முனிவருக்கு தோன்றியது.

அப்போது அவர் முன் பிரம்மதேவர் காட்சியருளி, “முனிவரே, உமது வாக்கு, எமது அருளினால்தான் சாபமாக வந்தது. நாரத மகரிஷியின் மூலம் ராம காதையை கேட்ட நீங்கள், அதை முற்று முழுமையாக இயற்றவே இந்த தொடக்கம். நாரதர் உமக்கு கூறியவைகள் மட்டுமன்றி, அன்று நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும், உமது த்ருஷ்டியில் வருவதாகுக. சீதா பிராட்டியின் அவதாரம் குறித்தும், நீர் அறிவீராகுக. உமது ராம சரித்திரத்தில் ஒரு சொல் கூட உண்மையிலிருந்து விலகாதிருக்கும். வேடனை சபித்த அந்த பாடலைக்  கொண்டே ராமாயணத்தின் முதலடியை துவங்குக. இப்பூமியில் மலைகள் உள்ளவரை, நதிகள் உள்ளவரை நீர் இயற்றும் ராமாயணம் நிலைத்திருக்கும். அதை இயற்றப்போகும் நீங்களும் நிரந்தரத் தன்மை அடைவீராகுக!”, என்று மனதார வாழ்த்தி விட்டு மறைந்தார்.

சொல்லொண்ணா மகிழ்ச்சியும், வியப்பும் மேலுற, அங்கு கானகத்தில் வேடனைப் பார்த்து சபித்த அந்த ஸ்லோகத்தையே ஆரம்பமாகக் கொண்டு, ராமாயணத்தை இயற்ற வால்மீகி முனிவர் தீர்மானித்தார். அதைக் குறித்து ஆழமாக சிந்திக்க…சிந்திக்க…, அவருக்கு முன்பு நடந்தவை அனைத்தும், தெளிவாக கண்முன் தெரிந்தன. அன்று நடந்த உரையாடல்கள், கதாபாத்திரங்கள் பயணம் சென்ற நாடுகள், காடுகள், அங்கிருந்தோரின் சுக துக்கங்கள் உள்ளிட்ட உணர்வுகள் என்று அனைத்தும், வால்மீகி முனிவரின் மனக்கண் முன் தெரிந்தது.

வால்மீகி, ராமாயணம் எழுத துவங்கிய காலத்தில் ராமர் அயோத்தியாவின் சக்ரவர்த்தியாக இருக்கிறார். அதாவது ராவண சம்ஹாரமும், அதைத் தொடர்ந்து ஸ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து, மக்களின் அவதூறு காரணமாக ஸீதாதேவி கானகத்தில் விடப்பட்ட நிகழ்வுகளுக்குப் பிறகே, வால்மீகி ராம காதையை எழுதத் துவங்குகிறார்.

கடந்த காலங்களில் நடந்தவையும், இனிவரும் காலத்தில் நடக்க இருப்பதையும், பிரம்மதேரின் அருளால் அறியப் பெற்றதால், ராமாயணத்தை பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், மற்றும் யுத்த காண்டம்,என தொகுத்தோடு மட்டுமல்லாமல், ஸ்ரீராமரின் அந்திமக்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்ததினால், அதைக் குறித்தும் வால்மீகி உத்தரகாண்டத்தில் இயம்பினார்.

அவரால் இயற்றப்பெற்ற ராமாயணம் கேட்பதற்கு இனிமையாகவும், சொற்சுவை, பொருட்சுவையோடும், அழியாத் தன்மை அடைந்தது.

இவ்வாறு அவர் இயற்றிய ராமாயணத்தை, மக்கள் அனைவர்க்கும் எடுத்து சொல்லும் ஆற்றல் உடையவர் யார் என்று வால்மீகி ரிஷி, ஆஸ்ரமத்தில் அமர்ந்து சிந்தித்திருந்தார். அவ்வேளையில், அவரது ஆஸ்ரமத்தில் உதித்த லவ குசர்கள் என்ற இரட்டையர், ரிஷி வால்மீகியின் ஆசிகளுக்காக பாதம் பணிந்தனர். [குருவின் பாதம் பணிவது அன்றைய தினசரி நிகழ்வு ]

அப்பிள்ளைகள், வேதத்தை நன்கு கற்றவர்களாகவும், ஒளி பொருந்திய வதனத்துடனும், இனிமையான மொழிகளை பேசுபவர்களாகவும், கம்பீரமானவர்களாகவும் இருந்தனர். மஹாஞானியான வால்மீகி, அவ்விருவரையும் அமர வைத்து, மனிதர்களில் உத்தமரான ஸ்ரீ ராமரின் வரலாறைக் கூறுவதாகவும், ஸீதாதேவின் மகத்தான சரித்திரத்தையும், ராவண வதம் பற்றிய விபரங்களை கூறுவதாகவும் சொல்லி, தான் இயற்றிய ராமாயணத்தை அவர்களுக்கு கற்பித்தார்.

தங்கள் தந்தை தாயின் சரித்திரத்தைத்தான் அறிந்து கொள்கிறோம் என்றுணராத அந்த பாலகர்கள், வால்மீகி அருளிய ராமாயணத்தை ஐயம் திரிபுர கற்றுணர்த்தனர். பின் அவர்களது மதுரமான குரலால் அக்காவியத்தை, ரிஷிகளும், நல்லோர் கூடிடும் சபைகளிலும் பாடினா். தெய்வீகமான கவிதை வடிவில் அமைந்த ராமரின் கதையை, லவ குசர்கள் பாடக்கேட்ட மஹரிஷிகள், சிறுவர்களை வாழ்த்தி, தங்களிடமிருந்த மென்மையான வஸ்திரங்கள், கமண்டலங்கள் போன்றவற்றை பரிசாக வழங்கினர்.

அச்சமயம் அயோத்யாவில் அஸ்வமேத யாகம் நடந்து கொண்டிருந்தது. யாக செயல்பாடுகளுக்கு இடையில் மகரிஷிகள் இச்சிறுவர்களது கவிதை நடையில் அமைந்த ராமாயண மகிமையை கூற, எட்டுத் திக்கும் லவ குசர்களின் புகழ் பரவியது. அது சக்ரவர்த்தி ராமரையும் எட்ட, அவர்களை அரண்மனைக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

தேஜோ மூர்த்தியான, சூர்யவம்சத்தில் உதித்த, சக்கரவர்த்தி ராமர் நடு நாயகமாக அரியாசனத்தில் வீற்றிருக்க…, சகோதரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து ராஜ பரிபாலனம் செய்யும் அரண்மனைக்கு லவன், குசன் இருவரும் வந்து சேர்ந்தனர்.

அவையோர் அனைவரும் அவர்கள் இசைக்கப் போகும் ராம காதையைக் கேட்கும் ஆவலுடன் இருக்க, ராஜா ராமர், “சர்வ லட்சணங்கள் பொருந்திய குமாரர்களே, தேமதுர மொழியில் நீவிர் இசைத்து வரும் காவியத்தை இங்கே பாடுவீராகுக.”, என்று உரைத்தார். அயோத்ய சக்ரவர்த்தியே தங்களை பாடச் சொன்ன ஆனந்தத்தில், பெரும் உற்சாகத்தோடு வால்மீகி அருளிய ராமாயணத்தைப் பாட, அந்த நிகழ்வுகளை மனதினுள் அசைபோட்ட ராமரும், நெக்குருகி தனது அரியாசனத்திலிருந்து கீழே இறங்கி, சபையோருடன் அமர்ந்து அக்காவியத்தைக் கேட்டார்.

ஜெய் ஸ்ரீ ராம்!

Advertisement