Advertisement

“ஸ்டூடன்ஸ் உங்க கிளாஸ் பற்றி கம்ப்ளைன்ட் வந்திருக்கு. உங்க எல்லாருடைய பேக்கையும் செக் பண்ணதுல சில பூரூஃப் கிடைச்சிருக்கு.” – கணித ஆசிரியை திவ்யா.
என்ன?? லன்சுக்கு போனப்ப.. பேக்கை செக் பண்ணாங்களா?
டிஸ்கஸ்டிங்…
என்ன?? எல்லோருடைய பேக்கையுமா? நாம எல்லோரும் மாட்னோம்டா… என்னோட பென் டிரைவ் எடுத்துப் பார்த்திருப்பாங்களா?
ரிடிகுலஸ்…
செத்தான்டா சேகரு…
கணித ஆசிரியை திவ்யா பேசிய பிறகு இது போன்ற பேச்சுக்குரல்கள் தான் அந்த வகுப்பறை முழுதும் கேட்டன.
“லிஸன் ஸ்டூடென்ட்ஸ்… காம் டவுன்…” – இயற்பியல் ஆசிரியை நர்மதா.
“ஸைலன்ஸ்.” – கணித ஆசிரியை திவ்யா.
“பின் டிராப் ஸைலென்ஸ்.”- ஆங்கில ஆசிரியை மெர்சி.
அத்தனை ஆசிரியர்களும் கட்டளையிட்டப் பின் அந்த வகுப்பறையின் சலசலப்பு குறைந்து லேசான அமைதி வந்தது. ஆனால்…
“மதுமிதா கெமிஸ்டிரி மிஸ் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. நீயும் ஹரினியும் பிரின்சிபல் ரூமுக்குப் போங்க.” என்று இயற்பியல் ஆசிரியை சொன்னபோது அந்த அறையின் சலசலப்பு துணிகொண்டு துடைத்தார்போல காணாமல் போனது. உண்மையில் பின் டிராப் ஸைலென்ஸ் வந்துவிட்டது.
பின் டிராப் என்ன… பெரிய பின் டிராப் ஸைலென்ஸ்? அது எல்லாம் ஒரு அமைதியா? இதுதான் அமைதி. “கெமிஸ்டிரி மிஸ்…” என்று சொன்னதும் அந்த வகுப்பறை மாணவர்கள் பேயறைந்த மாதிரி அமைதியானதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லைதான். ஏன் என்றால் அனைவருக்கும் தெரியுமே கெமிஸ்டிரி மிஸ்தான் அந்தப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியை என்று.
அப்புறம் இன்னொரு விஷயமும் இருக்குங்க… இந்தப் பள்ளியின் கெமிஸ்டிரி மிஸ்ஸுக்கும் மதுவுக்கும் ஆகவே ஆகாதுங்க.
             *   *   *
மதுவும் ஜான்வியும் பள்ளியில் இருந்து வேனில் வீடு நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தார்கள். வாகன நெரிசலில் மதுவின் பள்ளி வாகனம் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் தண்ணி லாரிகளின் ஹார்ன் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. மதுவின் மனதுக்குள்ளும் அந்த ஹார்ன் ஒலி போன்ற இரைச்சல்கள் அதிகமிருந்தன. அவளது பள்ளி நாட்களின் சரித்திரத்தில் இன்று தான் மிக மிக மோசமான திங்கட் கிழமை.
மதுவின் முகவாட்டத்தைப் பார்த்த ஜான்வியால் அமைதியாக இருக்கமுடியவில்லை. தனது நண்பர்களுடன் அமராமல் மதுவின் அருகே போய் அமர்ந்தாள்.
“ஏதும் பிரச்சனையா? எல்லா டீச்சர்ஸ்ஸும் ப்ளஸ் ஒன்ல பிரச்சனைன்னு பேசிக்கிட்டாங்க. உன் பேருகூட அதுல அடிபட்டுச்சு? வீட்ல அம்மாகிட்ட சரி டோஸ் வாங்கப் போறன்னு நினைக்கிறேன் மது. வாட்ஸ் ஆப்ல இந்நேரம் விஷயம் தீ மாதிரி பரவியிருக்கும்.” – ஜான்வி.
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். வாயை மூடு. நீ இன்னிக்கி டென்னிஸ் கிளாஸ் கட் பண்ணல? பாதி நாள் டென்னிஸ் கிளாஸ் கட் பண்ணிடுவ… இன்னிக்கு மட்டும் ஏன் கட் பண்ணல? ஃப்ர்ஸ்ட் டிரிப்ல வீட்டுக்குப் போய் தொலைச்சிருக்க வேண்டியதுதான? எதுக்கு செகன்ட் டிரிப்ல என்னோட சேர்ந்து வேன்ல வந்து உயிரை வாங்குற?” என்று ஜான்வியிடம் பொரிந்து கொண்டிருந்தாள் மது.
“இன்னிக்கு நீ பிரின்சிபல் ரூமுக்குப் போனியாமே?”
“ஜானு…”
“இல்லப்பா… என் ஃப்ரண்ட் ரெஸ்ட்ரூம் போனப்ப உன்னை பிரின்சி ரூம்ல பார்த்தாளாம். அவதான் சொன்னா… எதுவும் பிரச்சனையில மாட்டிக்கிட்டியா?”
“ப்ச்.”
“ஜஸ்டின் பீபர் பாட்டை நோட்ல எழுதியிருந்தியா?”
“ப்ச்.”
“போன தடவை பேபி பேபி பாட்டை மேக்ஸ் நோட்ல எழுதி வச்சிதான நீ பிரின்சிகிட்ட மாட்டுன?”
“ஜானு… ப்ளீஸ். வில் யூ ஷட் அப்?”
“அப்ப மேட்டர் ரொம்ப பெருசா?”
“நீ இன்னும் ஒரு வார்த்தை பேசுன… அடிச்சிருவேன்…”
“மது… அம்மாக்கு எதுவும் தெரியாதுல? அம்மாவரை விஷயம் போகாதுல? இந்த சன்டே தான் அம்மா அலியா பட் முவி பார்க்கலாம்னு பர்மிஷன் கொடுத்திருக்காங்கப்பா. ”
“ஜானு.” என்று கோபம் விடுத்து லேசாக அழுகை குரலில் ஆரம்பித்த மது, ‘அலியா பட் படம் இந்த வாரமும் போச்சே.’ என்ற கவலையில் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்.
மது அழுவதைப் பார்த்து விஷயம் பெரிதாகிவிட்டது என்று புரிந்துகொண்டாள் ஜான்வி.
“மது… அம்மாக்கு தெரிஞ்சிடுச்சா?”
“ம். . . டீச்சர்ஸ் சொல்லிட்டாங்க.”
“அப்பாவுக்கு கால் பண்ணி சீக்கிரம் வீட்டுக்கு வரச்சொல்லட்டா? அப்பதான் அம்மா ரொம்பத்திட்ட மாட்டாங்க. அப்பாகிட்ட நீ உண்மையைச் சொல்லிட்டா, அப்பா ஒண்ணுமே சொல்லமாட்டார் மது.”
தங்கையின் பாசத்தை நினைத்து மனம் நெகிழ்ந்து மேலும் இரண்டு சொட்டுகள் கண்ணீர் வடித்தாள் மது. தங்கை ஜான்வியின் மேல் காதல் பொங்கி வழிய ஆரம்பித்தது.
“நீ அழுறதைப் பார்த்தா பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டன்னு நினைக்கிறேன். அதுக்குதான் அம்மா சொல்றதை அப்பா சொல்றதைக் கேட்டு நடன்னு நான் சொல்றேன்.” என்று ஜானு ஔவையாராக மாறி மார்டர்ன் ஆத்திச்சூடியில் பேச ஆரம்பித்த கணம் சற்றுமுன் அவள் மேல் பொங்கி வழிந்த காதலை நொடிப்பொழுதில் பிரேக்-அப் செய்துகொண்டாள் மது.
மது-ஜான்வி காதல் பிரேக் அப் ஆனது.
“இந்த வாரம் அலியா பட் கேன்ஸலா?” என்று அடுத்ததாக ஜான்வி சொன்னதும், அடக்கி வைத்திருந்த அழுகை சட்டென பீரிட்டு எழ… தனது பள்ளி சீருடையின் கோட்டில் கண்ணீரைத் துடைத்தபடி ஜான்வியிடமிருந்து முகத்தை மறைத்துக்கொண்டு அழுதாள் மது.
ஆதரவாக ஜான்வி அவளது தோள் மீது கைவைத்தபோது… தனது தோள்களில் இருந்த ஜானுவின் கரங்களைத் தட்டிவிட்டுவிட்டு ஜன்னல் ஓரமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மது. அவர்கள் இறங்கவேண்டிய பஸ் நிறுத்தம் வரும் வரை தலையை ஜான்வியின் பக்கமாய் திருப்பவேயில்லை அவள்.
ரக்ஷக் தருண் மேல் எழுந்த கோபம் ஜான்வியின் மேல் முழுதாய் பாய்ந்தது. எளியவரை வலியவர் அடக்கும் அடக்குமுறை முதலில் வீட்டின் மூத்தபிள்ளையிடமிருந்து தான் தொடங்குகிறது. மூத்தவள், இளையவளிடம் தனது கோபத்தைக் காட்டினாள். தனது கோபத்தை முழுதும் ஜான்வியிடம் காட்டினாள் மது.
இறங்கவேண்டிய பஸ் நிறுத்தம் வந்ததும் ஜான்வி வேகமாக தனது சாப்பாட்டுப் பையை எடுத்தக் கையோடு மதுவின் சாப்பாட்டுப் பையையும் எடுத்துக்கொண்டாள்.
“லன்ச் பேக்கை கொடு. நானே தூக்கிட்டு வர்றேன். அம்மா திட்டுவாங்க.” என்று சிடுசிடுத்தாள் மது.
“இருக்கட்டும் மது. நீயே அழுது அழுது டயர்டா இருக்க, உன்னைப் பார்க்கவே ரொம்ப பாவமா இருக்குப்பா. நானே தூக்கிட்டு வர்றேன்.” என்றதும் மது ஒன்றும் பேசாமல் ஜான்வியை உரசிக்கொண்டே வீடு நோக்கி நடந்தாள்.
“அழாதப்பா மது. ப்ளீஸ். அப்பா சீக்கிரம் வந்திருவார். நான் வீட்டுக்குப்போனதும் அப்பாக்கு கால் பண்ணித் தர்றேன். சரியாப்பா?”- ஜான்வி.
ஜான்வியின் கரிசனத்தில் நெகிழ்ந்தாள் மது.
“காதல் பிரேக்-அப் கேன்சல்டு.” – ஒரு தோசை பார்சல் என்று ஹோட்டல் சமையற்கட்டு நோக்கி கத்தும் பேரர் போலக் கத்தியது மதுவின் மனசாட்சி.
வலியவரை எளியவர் தனது அன்பால் அடக்கும் தந்திரங்கள் வீட்டின் கடைக்குட்டியிடமிருந்துதான் தோன்றுகின்றன. ஜான்வி தனது அன்பால் மதுவின் கோபத்தை அடக்கினாள்.
“ஏய்… ஃபிரீஜ்…” (hey freeze) என்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடந்து இருவரும் தங்களது குடியிருப்பிற்குச் சென்றனர்.
                *   *   *
                       
            4
வீட்டிற்குள் வந்ததும் வீட்டு வேலைக்காரப் பெண்மணி தட்டில் வைத்துக்கொடுத்த பிரியாணியை பாதி மென்றும் மெல்லாமலும் தின்று முடித்தாள் மது. மதுவிற்கும் ஜான்விக்கும் பொதுவாக ஒரு கைபேசி இருந்தது.
பள்ளியில் நடந்தவற்றை தந்தையுடன் கைபேசியில் மது பேசிய பிறகு ஜான்வி எப்போதும் போல அந்த செல்பேசியில் ஆங்கில பாப் பாடல்களை ஓடவிட்டாள். அந்த செல்பேசியில் இன்டர்நெட் வசதிகள் முடக்கப்பட்டிருந்தன.
கைபேசியில் பாடல் ஓடிக்கொண்டிருக்க ஒரு வீடியோ கேமை கணினியில் விளையாட ஆரம்பித்தாள் ஜான்வி. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர்கள் இருவரும் பாடப் புத்தகங்களோடு உட்கார வேண்டும். அதுவரை ஆடலாம் பாடலாம், குட்டிக் கரணம் போடலாம். எதற்கும் தடையில்லை.
கைபேசியின் ஸ்பீக்கரில் ஜஸ்டின் பீபர் கொஞ்ச நேரம் கத்தினான், காதலில் கசிந்துருகினான். கிரிஸ்டினா பெரி கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டே பாடினாள், சிரித்தபடியே பாடலால் காதல் செய்தாள். செலினா கோமெச் கொஞ்ச நேரம் போதையேறிய குரலில் கொஞ்சினாள், காதலும் காமமும் சரிவரக்கலந்து வந்தது அவளது குரலில். ஷான் கொஞ்ச நேரம் சில்மிஷம் செய்தா(ள்)(ன்).
அந்த குரல் ஆணா பெண்ணா என்பது கைபேசிக்கே தெரியவில்லை. (அதான், சில்மிஷம் செய்தா(ள்)(ன்). )  
ஒரு நிமிஷம் இருங்க… ஜான்வி என்னமோ ஷான் பற்றிப் பேசுறா… என்னன்னு கேட்டுட்டு வர்றேன்.
“ஷான்… பேபி ஐ லவ் யு டுயூட்.” – ஜான்வி கணினியில் விளையாடும் போது தன்னை மறந்து பிதற்றினாள்.
ஜான்விக்கு அந்த ஷானை ரொம்பப் பிடிச்சிருக்காம். லவ் யூன்னு சொல்றாளே? அப்ப ஷான் என்பது ஆண்தானுங்க. சற்றுமுன் தந்த என்னோட ஸ்டேட்மென்ட்டை மாற்றிக்கிறேன்… ஷான் கொஞ்ச நேரம் சில்மிஷம் செய்தான்… 
ஆனால் ஒரு மணி நேரம் கடந்த பிறகு ஜஸ்டின் பீபர், ஷான், செலினா என அனைவரும் கப்சிப் என்று கைபேசிக்குள்ளே அடங்கிப் போனார்கள்.
ஜான்வி தனது ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களை மேஜையில் பரப்பியபடி நாற்காலியில் அமர்ந்துவிட்டாள். மது தனது சிறிய கட்டிலின் திவான் தலையணையில் முதுகைச் சாய்த்தபடி உட்கார்ந்து கணித பாடத்தின் வீட்டுப்பாடத்தை எழுத ஆரம்பித்திருந்தாள்.
எண்ணம், மனம் எல்லாம் வாசல் பக்கமாகவே இருந்தாலும் மதுவின் கைகள் தனது வேலையைச் செய்தன. மணி ஆறு நாற்பது ஆனது. மதுவின் அன்னையும் தந்தையும் ஒன்றாகவே வீட்டிற்குள் நுழைந்தார்கள். மதுவின் தந்தை எப்போதும் எட்டு மணிக்குதான் வீடு வருவார். ஆனால் அன்று அறுபது நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்டார்.
எல்லாப் புகழும் ஜான்விக்கே.
            *   *   *

Advertisement