Advertisement

டாக்ஸி கிளம்பும் போது அந்த டாக்ஸி டிரைவரிடம், “சார்… டிரைவர் சார்… என்னோட மூக்கு மேல… என்னோட மூக்கு மேல விரலை வச்சி நோ… எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொல்லிட்டா டிரைவர் சார். ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என் மூக்கு மேல விரல்ல வச்சி மது சொன்னா சார்.” என்று தனது சொந்தக் கதையை சொல்ல ஆரம்பித்த ஆர்யா, தனது பெங்களூர் வீட்டின் வாசலுக்கு டாக்ஸி வந்து நின்ற பிறகும் நிறுத்தவே இல்லை.
வண்டியை பிரேக் பிடித்து நிறுத்தியதும் டாக்ஸி டிரைவர் விவேக்கிடம், “சார்… நாம 60 கிலோமீட்டரை இரண்டு மணி நேரம் டிரைவ் பண்ணிட்டு வந்திருக்கோம் சார். இந்த ஸ்டியரிங்கை நான் தொட்ட நாள்ல இருந்து இது மாதிரி மெதுவா வண்டி ஓட்டினதே இல்ல சார். வண்டி இன்ஜினை ஸ்டார்ட் பண்ணும் போது, மது என்னோட மூக்கு மேலன்னு ஆரம்பிச்சார் சார். ஆனா… இப்ப வரை நிறுத்தல சார்… நேரா காது டாக்டர்கிட்டதான் போகணும். அதனால 1000 ருபீஸ் குடுங்க சார்.” என்றான் அழாத குறையாக.
விவேக் பல்லைக் கடித்துக்கொண்டு 1000 ரூபாயை டிரைவரிடம் கொடுத்ததும், “சார்… யாரு சார் அந்த மது? ஏன் சார் இவரோட மூக்கு மேல அந்தம்மா கையை வைக்கணும்?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு கிளம்பி விட்டான்.
யார் இந்த மது?
ஆர்யாவின் மூக்கு மேல் விரலை வைத்து நோ… எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்னு சொன்ன மது யாரு?
யார் இந்த மிஸ்டர் லவ் குரு?
யார் அந்த மாயாவி?
இந்த கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்றால் நாம் மது- ஆர்யாவின் பள்ளிக்காலத்திற்குள் செல்ல வேண்டும். செல்வோமா?
                    *  *  *
             மது…
     மதுவின்   பள்ளிக்காலம்…
பாடப்புத்தகங்களின் பையை இரு தோள்களிலும் போட்டுக்கொண்டு சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு வேகமாக வேன் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் மதுமிதா. மதுமிதா என்னும் பெயர் அவளது பாடப்புத்தகங்களின் லேபிள்களில் மட்டுமே இருக்கும்.
மற்ற இடங்களில் எல்லாம் மது தான். மது மட்டும்தான் அவளது அடையாளம். அவள் எப்படி பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்பதில் அரைகுறையோ அப்படித்தான் அவளது பாடநூல்கள் இருந்த பொதிமூட்டையும் அவள் சொல்பேச்சை அரைகுறையாகக் கேட்டது. ஒரு தோளில் மட்டும்தான் இருப்பேன் என்று அடம்செய்து வழிநெடுகிலும் மற்றொரு தோளில் இருந்து சரிந்து கொண்டே வந்தது அந்தப் பொதிமூட்டை. பள்ளி வேன் வந்து நின்றதும் தடபுடலாக தனது சகல சொத்துக்களுடன் அதில் ஏறிக்கொண்டாள் மது. அவளது அவசரம் அவளுக்கு. முன் சீட்டில் உட்கார்ந்தவள் பின்னால் திரும்பி தனது அரட்டையடிக்கும் தோழிகள் கூட்டத்தின் இருப்பிடத்தைக் குறித்துக்கொண்டாள். ஆனால் பின் சீட்டில் பள்ளியின் கிளார்க் அக்காவைப் பார்த்ததும் தனது கூட்டத்தில் சென்று ஜோதியாய் கலப்பதை சிறிதுநேரம் ஒத்திவைத்தாள் மது.
பள்ளி வாகனம் அடுத்த நிறுத்தத்தில் நின்ற போது வேகமாக பின்வரிசையில் அமர்ந்திருந்த கிளார்க் விஷாலியின் அருகே போய் உட்கார்ந்து கொண்டாள் .
“அக்கா நேத்து சொன்ன கதைய பாதியில விட்டுட்டீங்களே?” என்று விஷாலியை தனது பை மூட்டைகளுடன் இடித்துக்கொண்டு அமர்ந்தபடியே கேட்டாள் மது.
“எது? எந்தக் கதை?”- விஷாலி.
“உங்களோட ஃப்ரண்ட் லவ் கதை. அவுங்க டென்த் ஃஸ்டான்டர்ட் லவ் கதை..”
“ஓ…” என்றவர் பலவிஷயங்கள் பேசி ரம்பம் போட்டுவிட்டு முன்தினம் பாதியில் நிறுத்தியிருந்த கதையை ஆரம்பித்தார், “என்னோட ஃப்ரண்ட் ஒருத்தி ஸ்கூல் படிக்கும்போதே ஒரு பையனை லவ் பண்ணா.. என்னோடது கேர்ல்ஸ் ஸ்கூல். அவ லவ் பண்ண பையன் அவ வீட்டுக்கு எதிர் வீடு. அவ மேட்டர் எப்போ எங்களுக்கு தெரிஞ்சதோ அப்போதிலிருந்து நாங்க அவளை கௌதம்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டோம்… என்ன புரியலையா?”
‘இது என்ன அசட்டுத்தனமான கேள்வி? ப்ளஸ் ஒன் படிக்கும் பெண்ணுக்கு இது புரியாமல் இருக்குமா?’ என்று மனதில் நினைத்த மது, அதைச் சொல்லாமல், “கௌதம்தான் அவுங்க லவ்வரா அக்கா?” என்று அப்பாவி போல கேட்க, 
“ம். ஆமா மது… ஆனா, ஸ்கூல் காம்பஸ்குள்ள மட்டும்தான் அப்படிக் கூப்பிடுவோம். இட்ஸ் ஃபன் யு நோ?” என்றவர் சிக்னலில் பள்ளி வாகனம் பிரேக் போட்டு நின்றபோது தனது பேச்சை நிறுத்தினார். இரண்டு நிமிடங்கள் நின்ற வாகனம் அதற்கடுத்த நிமிடத்தில் நகர ஆரம்பித்தது. நின்றுவிட்ட இருவரது பேச்சுகளும் நகர ஆரம்பித்தன.
“நாங்க எல்லோரும் சேர்ந்து அரட்டையடிக்கும் போது அவ மட்டும் தனியாக சில நேரம் சிரிப்பா. நான் அதை கவனிச்சிட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஆனா மத்தவங்ககிட்ட மாட்டிட்டானா அவளை அன்னிக்கு கேலிபேசியே தொலைச்சிக்கட்டிடுவாங்க. பயங்கரமா கலாய்ச்சிடுவாங்க. அப்பயெல்லாம் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கும். அவளே எப்போதும் எங்க கூட்டத்தோட மெயின் டாப்பிக்கா இருந்ததால ரொம்பவே பொறாமையா இருக்கும் தெரியுமா? ஆனா அவ ஒரு நாள் ஸ்கூலுக்கு அழுது வீங்குன முகமா வந்தப்ப பொறாமை போய் பயம் வந்திடுச்சு.”
“ஏன்? அவுங்க வீட்டுல தெரிஞ்சிடுச்சா? செம அடியோ?”
“இல்ல.. பிரச்சனை அது இல்ல..”
“வேற??”
“ஒரு நாள் அவ என்கிட்ட வந்து ‘விஷாலி அவன் என்கூட பேச மாட்டிக்கிறான். இனி ஜென்மத்துக்கும் என்னை அவன் பார்க்கவே மாட்டானாம்’ன்னு சொல்லி அழுதப்ப காதல் பற்றி ரொம்ப ரொம்ப பயம் வந்திடுச்சு. அந்தப் பையன் அவளை டம்ப் (dump) பண்ணிட்டானாம்… அந்த இங்கிலிஷ் வார்த்தைக்கு எனக்கு அன்னிக்குதான் அர்த்தம் தெரிந்தது மது. அவ ப்ளஸ் ஒன்ல ஃபெயில் ஆகி, அதன்பிறகு பேரன்ட்ஸ் அவளை ஹாஸ்டல் சேர்த்து, பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. அதான் நான் லவ் மேரேஜ் பண்ணாம அரேன்ஜ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். உன்னோட ஃப்ரண்ட்ஸ் நிறைய பேர் லவ் பண்றதா திவ்யா மிஸ் சொன்னாங்க. திவ்யா மிஸ்தான உங்களுக்கு மேக்ஸ் எடுக்குறாங்க? என்கிட்ட ரொம்ப கம்ப்ளைன் பண்ணாங்க. ஜாக்கிரதை மது… பிரன்ஸிகிட்ட நியூஸ் போச்சுன்னா பத்து நாள் சஸ்பென்ட் தான். நீங்க டுவல்த்துல நல்ல மார்க் வாங்கணும் என்பதால் சார் இந்த விஷயத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்டா இருக்கார்.”
                   *   *   *
“ஏய் நம்ம திவ்யா மிஸ் நிறைய பேர் லவ் மேட்டரை கண்டுபிடிச்சிட்டாங்களாம்.”- மது .
“ஸோ வாட்? உனக்கு இப்ப தான் தெரியுமா?” என்றாள் மதுவின் தோழி ஹரினி.
“உனக்குத் தெரியுமா?”
“ம்… எப்பவோ.”
“என்கிட்ட ஏன் சொல்லலை? எத்தனை பேர் மாட்டுவாங்க தெரியுமா? அத்தனை பேரையும் சஸ்பன்ட் பண்ணப்போறாங்களாம். உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. என்னோட வீட்டுல தெரிஞ்சது அவ்வளவுதான். நான் தப்பே பண்ணாட்டியும் அம்மாக்கு தெரிஞ்சா என்னோட பேட்மிட்டன் கிளாஸ்தான் முதல்ல கட் ஆகும். ச்ச… என்னோட டைம்மே சரியில்ல… திவ்யா மிஸ் நாளைக்கே ரிப்போர்ட் பண்ணாலும் பண்ணலாம்.”
“திவ்யா மிஸ் ரிப்போர்ட் பண்ண மாட்டாங்கப்பா மது. யூ டோன்ட் வொரி அட் ஆல்.”
“ஹு செட் ஸோ?” – மது.
“என்னை நம்பு. திவ்யா மிஸ் மூச்சுவிட மாட்டாங்க..”
“எப்படிப்பா சொல்ற?”
“உனக்கு அவுங்க நடத்துற மேக்ஸ் புரியுமா?”
“புரியிற மாதிரிதான் இருக்கும்..”
“கரெக்ட்டா சொல்லு. புரியுமா புரியாதா?”
“புரியிற மாதிரி புரியாது..”
“எனக்கு அவுங்க மேக்ஸ் நடத்துனா.. புரியாத மாதிரிகூடப் புரியாது. what is “X” what is “X” ன்னு காட்டுக் கத்து கத்துனா எல்லோருக்கும் புரிஞ்சிடுமா? நம்ம பசங்க பாதி பேர் லவ் பண்ண ஆரம்பிச்சதே அந்த பி.டி.எஸ் மேக்ஸ் டியூஷன் சென்டர்லதான். அதான் நம்பிக்கையா சொல்றேன் அவுங்க பிரின்ஸிகிட்ட ரிப்போர்ட் பண்ண மாட்டாங்க. திவ்யா மிஸ் பிரின்சிபல்கிட்ட போனா.. “எப்ப, எப்படி பசங்களோட பொண்ணுங்களுக்கு கான்டாக்ட் அதிகமாச்சு?”ன்னு கேள்வி கேட்பார். “ஸ்கூல்ல நான் நடத்தும் மேக்ஸ் புரியாம பசங்க டியூஷன் போனாங்க. பசங்க மேக்ஸ் டியூஷன் போனப்பதான் கான்டாக்ட்ஸ் அதிகமாகி லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.” என்று பிரின்சிபல்கிட்ட திவ்யா மிஸ் சொல்வாங்கன்னு நீ நினைக்கிற? நோ சான்ஸ். ஆனா மது… எனக்கு திவ்யா மிஸ் பத்தியெல்லாம் கவலையே இல்ல… என்னோட பயம் எல்லாம் வேற ஒண்ணைப் பத்திதான்.”
ஹரினி ஒரு விஷயத்திற்கு பயந்தால் அது விஷயமல்ல. அதற்குப் பெயர் பூதம். டம்மிபூதம் இல்லை, நிஜமான பூதம் என்று அர்த்தம். ஹரினியின் பயத்தை புரிந்து கொண்ட மது அவளிடம், 
“வேற எதைப் பத்தி கவலைப்படுற மேடம்?” என்று தனது பயத்தை மறைத்துக் கேட்க,
“இன்னைக்கு வெள்ளிக்கிழமை… இன்னும் இரண்டு நாள்ல திங்கட்கிழமை வருது.” என்றாள் ஹரினி.
“ஆமா. பூமி ஒழுங்காதான் சுத்திட்டு இருக்கு அதனால இன்னும் இரண்டு நாள்ல திங்கட்கிழமை தான வருது?” என்று மது கேள்வி கேட்க,
“ஜோக் பண்ணாத மது. திங்கட்கிழமை தான் வேலன்டைன்ஸ் டே மது. ரக்ஷக் தருண் உனக்கு கார்ட் கொடுத்திடுவானோன்னு தான் எனக்கு பயமா இருக்கு. ஐ லைக் ஹிம் யு நோ…” என்று ஹரினியிடமிருந்து பதில் வந்தது.
“பட் ஐ ஹேட் பாய்ஸ் யூ நோ. எங்க வீட்டுல இன்னும் ஐஞ்சு வருஷத்துக்கு நாங்க லவ் என்ற வார்த்தையை யூஸ் பண்ணவே கூடாது தெரியுமா?” என்று மது சிரிக்காமல் படு சீரியஸாகச் சொன்னாலும் பூதம் பூதாகரமாக அவள் முன்னே நின்று “ஹி… ஹி” என்று சிரித்தது.
                     *  *  *
“அம்மா ப்ளூடூத் ஆன் பண்ணியாச்சு.. நெட்ஃப்லிக்ஸ்ல எந்தப் படம்னு நானே செலக்ட் பண்ணிடவா?”- என்று வரவேற்பறையில் இருந்து கத்தியபடியே மதுவின் தங்கை ஜான்வி, அடுக்களையில் சமையல் செய்யும் அன்னை வித்யாவிடம் கேட்டாள்.
“ஏய் லூசு, அம்மாகிட்ட எதுக்கு கேட்குற? அம்மா வர்றதுக்கு முன்னே அலியா பட் படத்தைப் போடு. அவுங்க வந்தாங்கன்னா கமல் படத்தைப் போட்டுருவாங்க, ப்ளீஸ் ஜான்வி. கமல் தவிர அந்தப் படத்தில் நடிச்ச யாரையும் இதுக்கு முன்னே எந்தப்படத்திலயும் நான் பார்த்தது இல்ல. ஹீரோவை மட்டும் தெரிஞ்சிக்கிட்டு எப்படி படம் பார்க்கிறது?? நீயே சொல்லுப்பா… ஜானு… ஹீரோயின் யாருன்னே தெரியாம அந்த எயிட்டீஸ் (80’s) ஹீரோயினை எப்படிப்பா கண்ணக்கொண்டு பார்க்கிறது? நல்ல படங்களும் பார்க்கணும்தான்… அம்மா சொல்ற மாதிரி we should also watch good old movies… but… கமலுக்கு இப்ப என்ன வயசு?? அவருக்கு அறுபது வயசுப்பா… எனக்கு இப்ப என்ன வயசு?? எனக்கு பதினாறு வயசுப்பா… ஏதாவது மேட்ச் ஆகுதா? ஷாரூக்கான் பையன் நடிச்சப் படத்தை பத்து தடவை பார்க்கிற வயசு நமக்கு ஜானு. நாம படம் பார்க்கிறதே இந்த சாட்டர்டே மட்டும்தான், அதையும் எதுக்கு கெடுக்கிற ஜானு. நீ கத்தாம இருந்தா அம்மா ஒரு அரை மணி நேரம் லேட்டா வருவாங்கல? எதுக்கு கத்துற?”
“அம்மா நல்ல படமாதான் போடுவாங்கப்பா மது.”
“ஜானு… என்னோட கண்ணைப்பாரு..”
“மது… ஏன் இவ்வளவு டென்ஷன்??”
“ஜானு… ஐ செட் யு டு லுக் அட் மை ஐய்ஸ்…”
ஜானு மதுவின் கட்டளைக்கு உடனே கீழ்ப்படிந்து மதுவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்.
“ஷாரூக்கான் பையன் நடிச்சப் படத்தை பத்து தடவை பார்க்கிற வயசு நமக்கு ஜானு. இதை நீ மனசுல மனப்பாடமா வச்சிக்கணும். அம்மா நம்மள பிரைன் வாஷ் பண்ணப் பார்க்கிறாங்க ஜானு. நீ மசிஞ்சிடாத..”
“மது…”
“ஸே யெஸ்…”
“ஓகே… ஓகே யெஸ்… சினிமா விஷயத்துல நம்ம சாய்ஸ்தான்.”- ஜான்வி.
“இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்குறேன்…”
“சினிமா விஷயத்துல உன் சாய்ஸ் தான் மது. இப்ப சரியா சொன்னேன்னா?”
“200 பெர்சென்ட் ஜானு… இப்ப அலியா பட் படத்தைப்போடு ஜானு… சீக்கிரம்.”
“சரி… பொறுமையா இருப்பா. அலியா பட் படம் போடுறேன்.” என்ற ஜானு ரிமோட்டின் உதவியுடன் அலியா பட் படத்தை ஓடவிட்டாள்.
 “படத்துல அலியா எத்தன லிப்லாக் பண்றா மது? பத்தா? பதினைந்தா?” என்று தமக்கையிடம் சந்தேகமாய் வினவினாள் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜான்வி.
“அவ்வளவு கம்மியாவா? “- மது.
“ஏய், நீ ரொம்ப மோசம்ப்பா..”- ஜான்வி.
“ஹி… ஹி… சும்மாதான் ஜானு. எனக்கே எத்தனை லிப்லாக்னு தெரியாது. அதைத்தான் நானும் பார்க்கணும்னு நினைச்சேன். மம்மி வர்றதுக்குள்ள ப்ளே பண்ணு ஜானு.”
“பொறு மது. சப்டைட்டில் செலக்ட் பண்ணிட்டு படத்தைப் ப்ளே பண்றேன்.”
“எதுக்கு சப்டைட்டில்? ஹிந்தி படம் எல்லாமே பாதி இங்கிலிஷ்லதான பேசுறாங்க. சப்டைட்டிலாம் வேணாம் ஜானு. படத்தை சீக்கிரம் ப்ளே பண்ணு.” என்று மது சொல்லிக் கொண்டிருந்தபோது அவளது அன்னை அவள் அருகே வந்து அமர்ந்திருந்தார். அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவரும் கால் நீட்டி அமர்ந்துகொண்டார்.
அதிகாரமாக ரிமோட்டைக் கேட்டு அவர் கை நீட்டியபோது மதுவும் ஜான்வியும் சட்டெனக் கீழ்ப்படிந்து ரிமோட்டைக் கொடுத்தனர். “ஹச்.” என்றுகூட இருவரும் சத்தம் எழுப்பவில்லை.
மது தொலைக்காட்சிப் பெட்டியின் திரையையே பார்க்க, ஜான்வி ரிமோட்டின் அசைவைப் பார்க்க, இருவரின் அன்னை வித்யா ஒரு அற்புதமான தமிழ்ப்படத்தை தேர்ந்தெடுத்து ஓடவிட்டார்.
ஆனால் படத்தின் டைட்டில் கார்ட் ஆரம்பித்த நொடியில் இருந்து மதுவின் இதயம் ஹாஃப்பாயிலாக மாறிவிட்டிருந்தது. பாதி வெந்து வேகாத நிலைக்குச் சென்றுவிட்டது. ஜான்வி ஜென் நிலையில் இருந்தாள். எல்லாம் புரிந்தும் புரியாத மனநிலை. கைமீறிப்போன விஷயத்தில் ஏற்படும் தெளிவு. இரு குமரிகளும் சப்தமின்றி பேச்சின்றி அமைதி நிலைக்குச் சென்றுவிட்டனர்.
இரு பெண்டிரும் ஊமையாய் இருக்க…  திரையில் பளிச்சிட்ட உருவம் மட்டும் “நமோன் நம.. நமோன் நம.” என்று உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
(அந்த நபரை உங்களுக்குத் தெரிகிறதா? 1960ல் நீங்கள் பிறந்திருந்தால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவீர்கள்.. இல்லையென்றால் கொஞ்சம் கஷ்டம் தான்…)
ஏனெனில் திரையில் திரையிடப்பட்ட படம் 1957ம் ஆண்டு வெளிவந்த மாயாபஜார் திரைப்படம். அதில் நமோன் நம… நமோன் நம என்று கர்ஜனையாய் கூறி அடிக்கடி சிரித்தவர் கடோர்கஜன்…
கலர் கலராக உடையணிந்து ஒல்லி அலியா பட்டின் லிப்லாக் பார்க்க நினைத்தவர்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் உடைகள் மங்கித் தெரிய… போட்டிருந்த நகைகள் டால்லடிக்க… முழங்கை, விரல்கள், கண்கள், கன்னங்கள் மட்டுமே தெரியும்படி உடையணிந்த குண்டுப் பெண்களைப் பார்த்தது பார்த்தபடி உறைந்து போய் அமர்ந்திருந்தனர். 

Advertisement