Advertisement

காதலின்  லிட்மஸ்  பரீட்சை…
 
     பாலா சுந்தர்
இடம்: பெங்களூர் சென்னை ஹைவே ரோட்…
சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்தவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஆர்யா தனது பைக்கில் அமர்ந்திருந்தான். சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் அவனது வண்டி அந்த சுங்கச் சாவடியைக் கடந்தபோது  அந்த டோல் கேட்டில் பணிபுரியும் ஆட்களிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்துவிட்டான்.
டோல் கேட்டின் பணியாளர்கள் பேட்ரோல் போலிஸிடம் விஷயத்தைச் சொல்ல போலிஸ் ஜீப்பும் வந்துவிட்டது. வெள்ளை நிற சுமோவில் இருந்து இறங்கி வந்த சங்கர் என்ற போலிஸ்காரர், “யாருப்பா பிரச்சனை பண்றது?” என்று தமிழில் அங்கு பணி புரியும் ஊழியரிடம் கேட்டார். சாலையின் ஒரு ஓரத்தில் தனது பைக்கில் அமர்ந்தபடியே சண்டையிட்டுக் கொண்டிருந்த ஆர்யாவைக் கை காட்டினார் ஒரு ஊழியர். உச்சி வெயிலை அண்ணாந்துப் பார்த்தவர் தனது கைபேசியை பேன்ட் பாக்கெட்டில் இருந்து உருவியபடியே ஆர்யாவிடம் நடந்து சென்றார்.
“ஹலோ மிஸ்டர்… நான் கேஸ் போடப்போறேன். பிரச்சனையை யார் முதல்ல ஆரம்பிச்சதுன்னு கோர்ட்ல பார்த்துக்கலாம்.”- ஆர்யா சுங்கச் சாவடி ஊழியரிடம்.
“என்ன சார்… என்ன சார் உங்க பிரச்சனை… உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா? தினம் டோல் கேட்ல பிரச்சனை பண்ண யாராவது ஒருத்தர் வந்திடுவீங்களா?” – போலிஸ்காரர் ஆர்யாவிடம்.
அப்போது ஆர்யாவின் கைபேசி விவேக் காலிங் என்று அழைத்தது. கைபேசியை இயக்கி, “சொல்லுடா விவேக்.” என்றான்.
“மச்சி… எங்கடா போன? இப்ப எங்க இருக்க?”- கைபேசியில் பேசிய விவேக்.
“நானா? நான் எங்க இருக்கேன்? இரு கேட்டுச் சொல்றேன்.” என்று விவேக்கிடம் சொன்ன ஆர்யா சுங்கச்சாவடி ஊழியரிடம், “சார் இது என்ன ஏரியா?” என்று கேட்டான்.
“என்னாது?? எனக்கு அப்பவே ஒரே டவுட்டு…”- ஊழியர்.
“இது என்ன ஏரியா சார்?”- ஆர்யா.
“அட… தண்ணி கேசு சார், நீங்களே கவனிச்சிக்கோங்க. இன்னிக்கி உங்களுக்கு சரியான ஆளு தான் மாட்டிருக்கான். ரேமான்ட்ஸ் கூலிங் கிளாஸ் போட்டிருக்கு பார்ட்டி. கழுத்துல பெரிய ஐ.டி கம்பெனியோட கார்ட் தொங்கவிட்டுருக்கான். அப்ப நான் கிளம்பட்டா?”- ஊழியர் போலிஸ் காரரிடம்.
“ம்… ம்… கிளம்பு. பையன் தமிழ்தான? நானே பார்த்துக்குறேன்.” – போலிஸ்காரர்.
நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்த கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டான் ஆர்யா. கைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு,
“சார்… அவர் எங்க போறாரு? எனக்கும் அவருக்கும் தான சார் பிரச்சனை? அவர் பாட்டுக்க போயிட்டே இருக்காரு…” என்று நகர ஆரம்பித்திருந்த சுங்கச் சாவடி ஊழியரைப் பார்த்து ஆர்யா கேட்க,
ஆர்யாவின் கைபேசி மீண்டும் அவனை அழைத்தது. “விவேக் காலிங்… விவேக் காலிங்…”
ஆர்யா அழைப்பை ஏற்று, “என்னடா? எதுக்கு கால் பண்ணிட்டே இருக்க? கொஞ்ச நேரம் ஃபோனை ஆன் பண்ணி வைக்கக்கூடாதா டா… உடனே பத்து ஃபோன் போடு… இப்ப என்ன?”
“டேய் ஆர்யா, உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை தான? எங்கடா போன? நைட் எல்லாம் நான் உன்னை தேடிட்டே இருந்தேன் தெரியுமா? ஏன்டா எரும ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ண? எங்கடா இருக்க? சொல்லு டா… ப்ளீஸ்.”
“நான் எங்க இருக்கேன்…” என்று யோசித்த ஆர்யா சற்று குழம்பியவனாய்,
“தெரியல டா விவேக். என் பக்கத்துல ஒரு போலிஸ்காரர் இருக்காரு. அவ்வளவு தான் புரியிது. வாந்தி வர்ற மாதிரி இருக்கு…” என்று சொன்னவன் குடம் குடமாக தனது பைக்கின் அருகேயே வாந்தி எடுத்தான்.
வாந்தி எடுத்ததால் ஆர்யாவினால் கைபேசியில் விவேக்குடன் இணைப்பில் இருக்க முடியவில்லை. இணைப்பு முன்பு போல துண்டிக்கப்பட்டது.
“ஹலோ மிஸ்டர்… என்ன டரன்க் அன்ட் டிரைவ்வா? ஏறுங்க சார் ஜீப்ல.”- போலிஸ்காரர்.
“ம்??” என்று கேட்டது மட்டும் தான் ஆர்யாவிற்குத் தெரியும். ஏன் என்றால் “ம்” என்று கேட்டுவிட்டு மயங்கி விட்டான் ஆர்யா.
ஆனால் மயக்கத்தில் மட்டும் அவனது உதடுகள் “மது… மது…” என்று உளறின.
“விவேக் காலிங்… விவேக் காலிங்…” என்றது ஆர்யாவின் கைபேசி. ஆர்யா மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்ததால் காவல் துறை அதிகாரியே கைபேசி அழைப்பை ஏற்றார்.
“சார்… சொல்லுங்க. நான் பேட்ரோல் போலிஸ் சங்கர் பேசுறேன். இந்தப் பையன் உங்க ஃப்ரண்டா?”
“போலிஸ்ஸா?”
“ஆமா சார்.”
“ஆக்சிடென்ட் பண்ணிட்டானா சார்…”
“இல்ல. ஆனா கேஸ் போடப்போறேன். டிரன்க் அன்ட் டிரைவ் கேஸ். என் பேரு சங்கர். ஓசூர் ஹைவேல இருக்கும் பி3 போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்திடுங்க. வந்து ஃபைன் கட்டி பைக்கையும் உங்க ஃப்ரண்ட்டையும் கூட்டிட்டுப்போங்க. சரியா?”
“ஓசூரா?? அங்க எப்படி சார்… அவ்வளவு தூரமாகவா பைக்ல போயிருக்கான்… நிஜமாகவே ஓசூரா சார்.”
“ஆமாங்க… நிஜமாகவே ஓசூர் தான் சார். நீங்க எங்க இருக்கீங்க?”
“ஓசூர் தாண்டி…”
“ஓ… நீங்க வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகிடுமே… பரவாயில்ல நான் ஸ்டேஷன்ல இருக்கேன் வந்திடுங்க.”
“சார்… சார்… ப்ளீஸ் ப்ளீஸ்… நாங்க ரொம்ப டீசென்ட் பீபிள் சார்.”
“அதை உங்க ஃப்ரண்ட் நடு ரோட்டுல வாந்தியெடுக்கிறதுக்கு முன்ன என்கிட்டச் சொல்லி இருந்தீங்கன்னா நம்புற மாதிரி இருந்திருக்கும்.”
“சார்… இது தான் சார் முதல் தடவையா அவன் குடிச்சிருக்கான். ஒரு லவ் மேட்டர்ல அப்செட் ஆகி…”
“ஆமா… சார் மது மதுன்னு தான் புலம்புறார்.” என்று போலிஸ் அதிகாரி சொல்லிக் கொண்டிருந்த போதே…
“டேய் விவேக் என்னோட மூக்கு மேல விரலை வச்சி, ‘நோ… எனக்கு நீ வேணாம். அமெரிக்காதான் வேணும்’னு சொல்லிட்டா டா மச்சி. ஒரு சினிமா படத்துல கார்த்திக் மூக்கு மேல ரேவதி விரல்ல வச்சி சொல்வாங்கல? அது மாதிரி என் மூக்கு மேல விரல்ல வச்சி மது சொன்னா டா.” என்றான் பாதி மயக்கத்தில் எழுந்து அமர்ந்த ஆர்யா.
“சார்… சார்… ப்ளீஸ் சார்… நான்.” என்று விவேக் கைபேசியில் கெஞ்சிக்கொண்டே இருந்தான். ஆர்யாவின் புலம்பலையும் வேடிக்கை பார்த்த காவல் அதிகாரி விவேக்கிடம்,
“சார். உங்க ஃப்ரண்ட் பத்திரமா இருப்பார். என்னோட ஜீப்புல தான் கூட்டிட்டுப் போறேன். பயப்படாம மெதுவா வந்து உங்க ஃப்ரண்டைக் கூட்டிட்டுப் போங்க. சரியா? நான் வச்சிடுறேன்.” என்று விவேக்கின் பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்தார்.
ஆர்யாவின் கைபேசியை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். சுங்கச் சாவடி ஊழியர்கள் இருவரை அழைத்து, “எப்பா பசங்களா, இந்தப் பையனை என்னோட ஜீப்புல ஏத்துங்க.” என்றார்.
ஆர்யாவை ஜீப்பில் ஏற்றியதும் மிஸ்டர் லவ் குருவும் அந்த ஜீப்பில் ஏறிக்கொண்டார். மிஸ்டர் லவ் குரு ஒரு மாயாவி. யார் கண்ணுக்கும் தெரிய மாட்டார். விக்கிரமாதித்தனுக்கு ஒரு வேதாளம் இருப்பது போல மிஸ்டர் லவ் குரு ஆர்யாவின் வேதாளம்.
                    *  *  *
இடம்: போலிஸ் ஸ்டேஷன்…
“சார் ஒரு டிரன்க் அன்ட் டிரைவ் கேஸ் விஷயமா வந்திருக்கேன் சார். சங்கர் சாரைப் பார்க்கணும்.”- விவேக்.
“தமிழா? அந்தாளுக்கு எப்படித்தான் தண்ணிகேஸா தினம் தினம் ஒண்ணு மாட்டுதோ? பேன்க் பேலன்லஸை ஏத்திட்டே போறார் மனுஷன்…”- வாயிலில் நின்றுகொண்டிருந்த காவல் துறை அதிகாரி.
“ஆமா சார் தமிழ்தான். சங்கர் சார்?”- விவேக்.
“உள்ளப் போங்க சார். உங்க ஃப்ரண்ட் உள்ளதான் இருக்கார். ஆமா, யாரு சார் அந்த மது? உள்ள வந்த நேரத்துல இருந்து சின்னக் குழந்தை மாதிரி அந்தப் பையன் மது மதுன்னு ஒரே புலம்பல் சார். பாவமா இருந்திச்சு… முதல் தடவை தண்ணியா?”
“ஆமா…”
“அதான… பார்த்தாலே தெரியிதே. பொண்ணு பேரைச் சொல்லி புலம்புனா முதல் தடவை தண்ணியாகத்தான் இருக்கும்… ஃப்ரண்ட்டை பத்திரமா பார்த்துக்கோங்க சார்… முதல் வேலையா டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போங்க. போதை தெளிய ஒரு நாள் ஆகும் போல… மதுன்னு பேச ஆரம்பிச்சார்னா தலையே வலிக்க ஆரம்பிக்குது சார்.”
விவேக் தலையில் அடிக்காத குறையாக, “எல்லாம் என் தலையெழுத்து…” என்று கோபமாக புலம்பியபடி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து உள்ளே சென்றான்.
இருபது காவலர்கள் அந்த அறையில் இருந்தனர். ஆர்யா ஒரு ஓரத்தில் இருந்த பென்ச்சில் படுத்திருந்தான். டையை கையில் வைத்துகொண்டு சுற்றியபடியே அவனுக்கு மேலே சுழன்ற காற்றாடியைப் பார்த்து, “என் மூக்கு மேல கைய வச்சி…” என்று பேசிக் கொண்டிருந்தான் ஆர்யா.
விவேக் ஆர்யாவின் அருகே சென்று, “டேய் எரும, போதையில வண்டிய எடுத்திட்டு நீ பாட்டுக்க கிளம்பிட்ட… என் உயிரே போயிடுச்சு மச்சி.” என்று சொன்னவன் தன் மனோபலத்தை இழந்து கண்ணீர் வடித்தான். கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “குடிக்காத குடிக்காதன்னு சொன்னேனே டா. கேட்டியா? இவ்வளவு போதையில எப்படி டா இவ்வளவு தூரம் வண்டி ஓட்டின??” என்று அழுதுகொண்டே கேள்வி கேட்க,
“டேய்… விவேக் வந்திட்டியா டா… என்னோட மூக்கு மேல…”
“தெரியும். இப்ப அதை விடுறியா இல்லையா? மது அப்படிச் சொன்னதை மறந்திடு ஆர்யா. அது ஒரு கெட்ட கனவு…” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே காவல்துறை அதிகாரி சங்கர், “சார் கொஞ்சம் இங்க வாங்க.” என்று விவேக்கை அழைத்தார்.
விவேக் வேகமாக சங்கரின் அருகே சென்று நின்றான்.
“சார்… நீங்க தான் என்கூட ஃபோன்ல பேசுனீங்களா?” என்று வார்த்தைகளில் மரியாதையை டன் டன்னாக நிரப்பிக்கொண்டு அதிகாரியிடம் கேட்டான் விவேக்.
“ஆமா. நீங்க தான் விவேக்கா?”
“ஆமா சார். ஆர்யாவை கூட்டிட்டுப் போயிடலாமா சார்…”
“இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க வரலைன்னா நாங்களே உங்க ஐ.டி கம்பெனி வாசல்ல அவனை விட்டுருப்போம்.”
“ஏன் சார்? என்ன ஆச்சு சார்?”
“பின்ன என்னங்க? என் மூக்கு மேல கைய வச்சின்னு ஆரம்பிச்சார்ன்னா முடிக்கவே மாட்டிக்கிறார். இங்க இருக்கிறவங்கல பாதி பேருக்கு தமிழ் தெரியாது. அதனால அவுங்க எல்லாரும் தப்பிச்சிட்டாங்க. மாட்டிக்கிட்டது என்னை மாதிரி நாலு பேர் மட்டும் தான். நான் – ஸ்டாப்பா பேசுறார்ங்க.”
“இவனைத் தேடுன கொஞ்ச நேரத்துல என் உயிரே போயிடுச்சு சார். பப்புல தண்ணியடிச்சிட்டு  வீட்டுக்கு வந்ததும் மௌனராகம் படம் பார்த்திட்டு ஒண்ணாதான் படுத்திருந்தோம் சார். நடு ராத்திரி எழுந்திருச்சு இதே மாதிரி புலம்புனான் சார்.”
“மது நோ சொல்லிட்டான்னு ஒரே புலம்பல்…”
“ஆமா சார். அப்புறம் நான் கண் அசந்த நேரமா பைக் எடுத்திட்டு கிளம்பிட்டான் சார்… நான் டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டப்பிறகுதான் சார் எனக்கே போதை தெளிஞ்சிருக்கு… அவனையும் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும் சார்.”
“ஓ…”
“ஒரு லவ் மேட்டர் சார். சின்ன பிரச்சனை தான் சார். சரியாகிடும். நான் கிளம்பவா சார்.” என்று விவேக் கேட்க,
“ம்… அபராதம் கட்டிட்டு கிளம்புங்க.”
“சார். பத்தாயிரம் தான் கொண்டு வந்தேன்.” என்று விவேக் சொன்னபோது நான்காயிரம் வசூல் செய்ய நினைத்த அந்த காவல்துறை அதிகாரி பெருந்தன்மையாக,
“பத்தாயிரம் போதும். தமிழ்ப்பசங்களா போயிட்டீங்க… அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் பரவாயில்லை.” என்றார்.
“சரி சார். அப்ப நாங்க கிளம்பலாமா சார்??”
“ம்… பைக்கை மட்டும் நாளைக்கு கோர்ட்ல இருந்து லீகலாக வாங்கிக்கோங்க. சரியா?”.
“கோர்ட்டா? அதுலாம்… கஷ்டமே சார்.”- விவேக்.
“அப்ப ஓசூர் 32 ஹைவே ரோட்ல ஒரு டோல் கேட் இருக்குல? அங்க வந்து நாளைக்கு பைக்கை எடுத்துக்கோங்க. வரும் போது… ஃபைன்னா…”
“வரும்போது ஒரு பத்தாயிரம் மட்டும் கொண்டு வர்றேன் சார்… என்கிட்ட அவ்வளவு தான் இருக்கு.”
இப்போதும் நான்காயிரம் மட்டுமே கேட்க நினைத்த அந்த காவல்துறை அதிகாரி மனதின் சந்தோஷத்தை வெளிக்காட்டாமல்,
“சரி… அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்.” என்றார்.
பின்னர் விவேக் தான் அழைத்து வந்திருந்த கால் டாக்ஸியில் ஆர்யாவை ஏற்றிக்கொண்டு டாக்ஸி டிரைவரிடம், “கிளம்புப்பா.” என்றான்.
டாக்ஸியின் மேல் பாகத்தில் மிஸ்டர் லவ் குரு பயங்கர யோசனையில் அமர்ந்திருந்தார். அவர் தீவிரமாக ஒரு விஷயத்தை தனது மனதில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார்.
மிஸ்டர் லவ் குரு ஆர்யாவின் வேதாளம் என்பதால் அவன் பின்னால் தொடர்ந்து கொண்டே இருந்தார்.
                     *  *  *

Advertisement