Advertisement

                         
“மது… அம்மாகிட்ட குட் இம்ப்ரூவ்மென்ட். எப்பவுமே நமக்கு ஹீரோயின்தான் தெரியாது. இப்ப ஹீரோகூட தெரியல. இந்த ஹீரோவுக்கு கமல் எவ்வளவோ பெட்டர்மா.. அவர் படத்துலயாவது கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸாவது இருக்கும். ஆனா இந்தப் படத்துல ஹீரோவும் ஹீரோயினும் லைட் யியர் (light year) டிஸ்டன்ஸ்ல நிற்கிறாங்கப்பா… அதுதான் என்னால தாங்க முடியல… கொஞ்சம் பக்கத்துல பக்கத்துல நின்னுருக்கலாம். ஆனா… இன்னொரு விஷயம்.. இந்தப் படத்தோட ஹீரோக்கு இப்ப ஒரு 105 வயசு இருக்காது?? கமல் இஸ் ஜஸ்ட் சிக்ஸ்டி யு நோ… இந்தப் படத்தோட ஹீரோக்கு கமல் 100டைம்ஸ் பெட்டர் மது.”- ஜான்வி மதுவின் காதினில்.
மது ஒரு வார்த்தைகூட பேசவில்லை. துக்கம் அவளது தொண்டையை அடைத்தது. ஆனால் ஜான்வி விடவில்லையே…
“எயிட்டீஸ் ஹீரோயின்ஸை திட்டுனீல? அதான் கடவுள் உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்திட்டார்.”
மது ஜான்வியைப் பார்த்து முறைத்தபோதுகூட ஜான்வி அசரவில்லையே..
“ஆமா மது அப்பவே கேட்கணும்னு நினைச்சேன்… இந்த ஹீரோ கையில ஏதோ வெப்பன் வச்சிருக்காரே… அது என்னப்பா?” என்று கடோர்கஜன் கையில் இருந்த கஜாயுதத்தைப் பார்த்து ஜான்வி அக்கறையாகக் கேள்வி கேட்க,
“வேணா.. நான் சரி கடுப்புல இருக்கேன் ஜானு. போயிடு. அன்ட் ஷட் அப்.” என்றாள் மது.
அதன்பிறகு ஜான்வி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பேசவேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றிய அனைவரும் பக்கம் பக்கமாக வசனம் பேசினார்கள். மூச்சு வாங்க மூச்சு வாங்க வசனம் பேசினார்கள். படம் முழுதும் நகைச்சுவையாக இருந்தபோதும் அலியாபட்டைப் பார்க்க முடியாத கோபத்தில் மதுவினால் சிரிக்க முடியவில்லை.
சிறிது நேரம் உம்மென்று இருந்த ஜான்வி படத்தின் காட்சிகள் நகர நகர படத்தோடு ஒன்றி சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அந்தப் படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியை குரங்காக நினைத்து வில்லன் மகன் பயப்படும்போது ஜான்வி சோபாவில் புரண்டு புரண்டு சிரித்தாள். அதுவரை அந்தப் படத்தை தனது அக்கௌன்ட்டில் வைத்திருந்த நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் சானல்காரன் மட்டும்தான் மதுவின் எதிரியாக இருந்தான்.
ஆனால் எப்போது ஜான்வி சோபாவில் சிரித்துப் புரள ஆரம்பித்தாளோ அப்போதே அவளும் அவளது எதிரியாகிப்போனாள். அவள் சிரித்து ரசித்துப் பார்ப்பதால் அடுத்த வாரமும் இதே போல ஒரு ப்ளாக் அன்ட் ஒயிட் படத்தை அம்மா தேர்ந்தெடுத்து விடுவாரே… அந்தக் காரணத்தால் மதுவிற்கு தங்கை மீது கோபம் கோபமாய் வந்தது.
அப்போது மதுவிற்குப் பொங்கிய கோபம் இரவில் இரண்டு மணிக்கு இரண்டு முறையும் நான்கு மணிக்கு ஒரு முறையும் பேய் அலறலாய் அலாரம் வைத்து ஜான்வியை  மூன்று நான்கு முறை எழுப்பிவிட்ட பிறகுதான் வடிந்தது. அதன்பிறகுதான் மதுவின் கண்கள் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றன.
மறுநாள் ஞாயிறு. அன்றைய இரவிலும் மது தனது அலாரம் சூழ்ச்சிகளை செய்யாமல் விடவில்லை. சனியன்று மதுவின் மேல் சந்தேகப்படாத ஜான்வி ஞாயிறு அன்று சிறியதாய் சந்தேகப்பட ஆரம்பித்தாள்.
                    *   *   *
“மது இன்னும் கிளம்பலையா? மணி எட்டு ஆச்சு.”- மதுவின் அன்னையின் குரல் அவரது படுக்கையறையில் இருந்து வந்தது.
“நான் கிளம்பிட்டேன்மா..”- தனது அறையில் இருந்து மது தனது அன்னையிடம்.
“ஜான்வி வர்றியா இல்லையா? நைட்லாம் தூங்காம முழிச்சி உட்கார்ந்து உட்கார்ந்து பாட்டு கேட்க வேண்டியது.. காலையில ஸ்கூலுக்கு லேட்டா கிளம்ப வேண்டியது.” – மது ஜான்வியிடம்.
“மதூ…” – ஜான்வி.
“என்னடா ஜானு?” என்று இரவு உடையுடன் தங்களது அறையில் கோபமாக நின்ற ஜான்வியைப் பார்த்து மது அன்பாய் கேட்டாள். 
“நைட் எதுக்கு ரெண்டு மூனு அலாரம் வச்ச மது?”
“எனக்கு ஃபிசிக்ஸ் டெஸ்ட் இருந்திச்சிப்பா.”
“வேணா… பொய் சொல்லாத. நீ எழுந்திரிக்கவே இல்ல. காதுல ஹெட்ஃபோன் வச்சிருந்த. நான் தான் எழுந்திரிச்சி பேய் மாதிரி நைட் முழிச்சிட்டு இருந்தேன்.”
“என்ன, ரெண்டு பேரும் கிளம்பலயா?” என்று அன்னை வித்யாவின் குரல் வரவேற்பறையிலிருந்து வந்தது.
“நான் எப்பவோ ரெடி ஜானுதாம்மா லேட்..” என்று அவர்கள் அறையில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் மது.
“இல்லமா… நானும் ரெடி.” என்றபடியே அரைகுறையாய் குளித்து அரைகுறையாய் பல்தேய்த்து அரைகுறையாய் பவுடர் போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்து நின்றாள் ஜான்வி.
“இந்தா ஸ்நாக்ஸ். மறந்திடாத மது.” – வித்யா.
“தாங்கம்மா.” என்று தனது ஸ்நாக்ஸ் டப்பாவை கைநீட்டி வாங்கிக்கொண்ட மது, “நீங்க கிளம்பல?” என்று  தனது அன்னையிடம் கேட்டபோது,
“இன்னும் டென் மினிட்ஸ்டா. ஹெல்மெட் தேடுறேன். நீ போ, உனக்கு ஸ்கூல் வேன் வந்திடும்.” என்றார் அவர்.
வழக்கமாக இருக்கும் உற்சாகம் அன்று துளிகூட மதுவிடம் இல்லை. ஏனென்றால் அன்று திங்கட்கிழமை.
ரக்ஷக் தருணின் பார்வையே இரண்டு மூன்று நாட்களாக சரியில்லையே? ஹரினி சொன்னது போல இன்று அவன் அவளிடம் கிரீட்டிங் கார்ட் நீட்டிவிட்டால்? அம்மாவிடம் விஷயம் சென்றுவிட்டால்… பேட்மிட்டன் கிளாஸ் நின்றுபோய்விடும் என்பது உறுதி. படுபாவி பேட்மிட்டன் சாம்பியன் ஆயிற்றே… அவன் இன்டோர் கோர்ட்டில் பலியாகக் கிடக்கும் காரணத்தால் விஷயம் வெளியே வந்தால் கண்டிப்பாக அம்மா இனி அவளை பேட்மிட்டன் வகுப்புகளுக்கு அனுப்ப மாட்டார். ஜோனல் மேட்ச் வரும் நேரம் பார்த்து இந்தப் பிரச்சனையா? என்று கோபம் வந்தது மதுவிற்கு.
சோம்பேறித்தனமாக தனது பொதி மூட்டையை எடுத்துக்கொண்டு வேன் நிற்கும் இடத்திற்கு நகர்ந்தாள் மது. ஜான்வி எப்போதும் போல மதுவின் நேற்றைய இரவு நேர அலாரம் சூழ்ச்சிகளை மறந்துவிட்டு அப்பாவியாய் மதுவின் சாப்பாட்டுப் பையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அவளுடன் படிக்கட்டுகளைக் கடந்தாள்.
“நானும் கிளம்பிட்டேன் மது. என்கூட வர்றீங்களா?”  என்று அன்னை வித்யா கேட்டதும் ஜான்விக்கு யோசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல்,
“இல்லம்மா, பேட்மிட்டன் பேக், ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்ம் பேக் வேற இருக்கு. வண்டியில இடம் இருக்காது. நாங்க வேன்ல போறோம்.” என்றாள் மது.
அம்மாவின் ஸ்கூட்டியில் அந்த இதமான மார்கழிக் குளிரில் ஜில்லென்றக் காற்று முகத்தில் அறைய, அம்மாவுடன் சின்னதாய் அரட்டையடித்துக் கொண்டே சென்றிட ஆசைதான் மதுவிற்கும். ஆனால் இப்போதெல்லாம் அன்னையுடன் பேசுவதைவிட ஹரினியுடன் ரகசிய பாஷைகள் பேசத்தான் மிகவும் பிடிக்கிறது.
 ‘இந்த ஜானு லூசு அதைக் கெடுத்திடப்போகுது…’ என்று மனம் எச்சரிக்கை செய்ய ஜான்விக்கு முன்பாக அன்னையிடம் மறுப்பாய் பதில் தந்தாள் மது.
வேனில் போனால்தானே ஊர் கதைகள் பேசலாம். அதனால்தான் அவள் அன்னையிடம் மறுத்தது.
அதற்குமேல் மதுவின் அன்னை அவளை வற்புறுத்தவில்லை. தனது ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் மது கீழ்த்தளத்திற்கு வந்திருந்தபோது அவளது தந்தை அர்ஜுன் அவர்களைத் தொடர்ந்து வந்து அவளை அழைத்தார்.
“மது.”- மதுவின் தந்தை அர்ஜுன்.
“அப்பா.”- மது.
“என்கூட கார்ல வந்திடுறீங்களா?” என்றார் அர்ஜுன் தனது கார் சாவியைக் காட்டியபடி.
அப்பாவுடன் சென்றால் அந்த அதிகாலைக் குளிரில், காஃபி டேயில் ஒரு கூல் காபி கிடைக்கும். ஒரு கூல் காப்பிக்காக சரி என்று சொல்லத் தோன்றிய ஆவலை உடனே அடக்கி, “இல்லப்பா ஹரினி எனக்காக ஸ்டாப்ல வெயிட் பண்ணுவா. நான் வேன்லயே போறேனே…” என்றாள் மது.
ரகசிய பாஷைகள் இப்போதும் வென்றுவிட்டன.
“ஓகே தென். பை.” என்று சொன்னவர் மதுவின் கைகளை இரண்டு நிமிடங்கள் அழுந்தப் பற்றி விடுவித்து விட்டு, ஜான்வியிடம் ஒரு பை சொல்லிவிட்டுக் கிளம்பினார்.                            
            *   *   *
மதுவும் ஜான்வியும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். மது பதினோராம் வகுப்பு மாணவி. ஜான்வி ஒன்பதாம் வகுப்பு மாணவி.
மணி இப்போது 12.30. மதிய வேளை.
அன்று திங்கட் கிழமை.
ஆம். மதுவும் ஹரினியும் பயந்துகொண்டிருந்த அதே திங்கட்கிழமை தான்.
இன்னும் பத்து நிமிடத்தில் மதிய உணவு வேளைக்கு மணி அடித்துவிடுவார்கள். மதிய உணவை அந்த பெரிய திடலில் வைத்துதான் மாணவர்கள் சாப்பிடுவார்கள். கம்ப்யூட்டர் லாப்பில் ப்ராக்டிகல் வகுப்பை முடித்துவிட்டு ஹரினியும் மதுவும் மெல்ல நடைபாதையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். சாவதானமாக இருவரும் வகுப்பறை வாசலுக்கு வந்தார்கள். அனைவரது சாப்பாட்டுப் பைகளும் வகுப்பறையின் வெளியே இருக்கும் ஹுக்குகளில் தொங்க விடப்பட்டிருக்கும்.
மதிய உணவு வேளைக்கான பெல் அடித்தது. ஆனால் சாப்பாட்டுக் கூடையை எடுக்கவே பயமாக இருந்தது இருவருக்கும். ஏன் என்றால் இன்று வேலன்டைன்ஸ் டே. மதுவிற்கு தனது சாப்பாட்டுப் பையில் தனது வகுப்பு மாணவன் எவனும் கார்ட் வைத்திருப்பானோ என்ற பயம். ஹரினிக்கு தனக்கு யாரும் கார்ட் வைக்காமல் போய்விடுவார்களோ என்று பயம். இருவரும் அவரவர் பயத்தை மறைத்து உள்ளுக்குள் மென்று விழுங்கி பைகளை எடுத்துக்கொண்டு கிரவுன்டிற்கு வந்தனர்.
          *   *   *
                        
                    3
“ஹப்பாடா.. பயந்த மாதிரி எந்த லவ் லெட்டரும் வரலப்பா… லன்ச் பேக்ல லெட்டர் இல்லைன்னதும் தான் உயிரே வந்துச்சு. “- மது.
“ஆமா மது எனக்கும் உன் லன்ச் பேக் பார்த்தபிறகுதான் உயிரே வந்திச்சு. நான் பயந்த மாதிரி உனக்கு எந்த லவ் லெட்டரும் வரல. எனக்கு யாரும் கார்ட் கொடுக்காட்டினாக்கூட பரவாயில்லப்பா.”- என்று கூறி கண்ணடித்தாள் ஹரினி .
“அட லூசு… ரக்ஷக்தருண் பைத்தியம் உனக்கு முத்திடுச்சு.”- மது.
“ஹி இஸ் கியூட்பா.”
“உன்னைத் திருத்தவே முடியாது. கம்ப்யூட்டர் லேப்ல ப்ரோகிராம்க்கு அவுட்புட் வந்ததா?”
“நான் வான்னு கூப்பிட்டேன். அது வர மாட்டேன்னு சொல்லிடுச்சுப்பா..”
“ஏய்…”
“அட நீ வேற… ப்ளஸ் ஒன்ல யாரும் படிக்கக்கூடாது தெரியுமோ. ஜாலியா சுத்தணும். ப்ளஸ் டூல மாடு மாதிரி… இல்ல இல்ல என்னோட அண்ணன் பைக் மாதிரி உழைச்சி உழைச்சி ஓடாகத் தேயணும்… இந்த ஜி.கேகூட உனக்கு இல்ல… ப்ரோகிராமுக்கு அவுட்புட் வரலைன்னு கவலைப்படுற.”
“ப்ச்… சொல்லு ஹரினி.. அவுட்புட் வந்ததா, இல்லையா?”
“என்னோட ப்ரோகிராமை எக்சிகியூட் பண்ணதும் கம்ப்யூட்டர் டென் மினிட்ஸ் புத்தரோட டிசைப்பிள் ஆகிடுச்சுப்பா… ஆமாம்ப்பா… சுற்றம் மறந்து சொந்தம் பந்தம் மறந்து தியான நிலைக்குப் போன புத்தர் மாதிரி என்னோட கம்ப்யூட்டரும் சுற்றம் மறந்து தியானம் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அமைதியா ஷட் டௌன் ஆகிடுச்சு.”
“ஹா… ஹா… எத்தினி ஃபார் லூப்(For Loop) முடிக்காமல் விட்ட?”
“யாருக்குத் தெரியும்?? ஆனா போன தடவைக்கு இந்த தடவை பெட்டர்..”
“அப்படியா?” என்று கேட்ட மது அடுத்த பூமராங்கை எதிர்பார்த்தாள்.
“ஆமாம்பா, போன தடவை நித்தியானந்தா நிலைக்கு போயிடுச்சு.. ”
“ஹா… ஹா… எப்படி?”
“ஸ்கிரின்ல பத்து நிமிஷம் அவுட்புட் non-stopஆக வந்துச்சு. கம்ப்யூட்டர் ஸ்கிரீன் நித்தியானந்தா மாதிரி, மைக்கேல் ஜாக்சன் மாதிரி டான்ஸ் ஆடுச்சுப்பா. ‘திரும்ப ஒரு தடவை ப்ரோகிராமை ரன் பண்ணிக்காட்டட்டுமா சார்?’ ன்னு கேட்டதுக்கு நம்ம கம்ப்யூட்டர் சாரே பயந்து, ‘no no just one time is enough’ ன்னு சொல்லிட்டாரு தெரியுமா?”
இருவரும் கேலி பேசி நகைத்து சாப்பாட்டு வேலையை முடித்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றபோது அங்கே நான்கு ஆசிரியர்கள் இருந்தார்கள்.
“ஏய் இப்ப ஃபிசிக்ஸ் பீரியட் தான?” – மது .
“ஆமாப்பா..” – ஹரினி.
“எதுக்கு நம்ம கிளாஸ்ல நாலு டீச்சர்ஸ் இருக்காங்க? ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? டீச்சர்ஸ் இல்லாத நேரத்துல பசங்க கத்தி கித்தி ரகளை பண்ணிட்டாங்களா? மொத்த கிளாஸும் கிரவுன்டுல ஓடணுமா? அப்படினாலும் நாலு டீச்சர்ஸ் எதுக்கு வந்திருக்காங்க?”
“நல்லவேளை நாலு பேருல கெமிஸ்டிரி மிஸ் இல்லைன்னு நினைச்சுக்கோ.”
“ஆமா… ஆமா நீ சொல்றதும் சரிதான். நல்லவேளை கெமிஸ்டிரி மிஸ் இங்க வரலை.” என்றவள் மனதில் கெமிஸ்டிரி மிஸ் இல்லாத விஷயத்தை நினைத்து சந்தோஷப்பட்டு வகுப்பறைக்குள் தைரியமாகக் கால் பதித்தாள்.
இந்தப் பள்ளிக்குள் அவளுக்கும் கெமிஸ்டிரி டீச்சருக்கும்தான் ஆகவே ஆகாதே.
முக்கியமாக ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் மதுவுக்கும் அவருக்கும் ஆகவே ஆகாதே..
“மது கிளாஸ் ரூமிற்குள்ளப் போகாத ஓடிடு… சிக் ரூமிற்குள் போய் படுத்துக்கோ…” – யாரோ ஒரு புண்ணியவான். (சொல்றதைக் கேட்டுக்கோம்மா மது)
           *   *   *

Advertisement