ஆச்சர்யத்தோடு ரகுராமைப் பார்த்த சுசிலா.. ‘சரிப்பா.. வா போலாம்.” என்று இருவரும் கிளம்பினார்கள். டிரைவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தானே காரை எடுத்துக்கொண்டு அவன் அம்மாவோடு சென்றான்.
‘ரகு.. நான் வழக்கமா இந்த கோயிலுக்கு தான் வருவேன். இங்கையே காரை நிறுத்து..”
‘இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் வேற கோயிலுக்கு போலாம்மா. அந்த கோயிலும் ரொம்ப நல்லா இருக்கும்.” என்று நேராக பார்வதியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு காரை செலுத்தினான்.
பார்வதி அந்த வழியாத்தான் அலுவலகத்திற்கு சென்றாக வேண்டும். காலை எட்டு மணிதான் ஆனது. சிவகாமி காரை விட்டு இறங்கியதும் ‘என்னப்பா..? கோயில் ரொம்ப நல்லாயிருக்கும்னு சொன்ன..? சின்ன கோவிலாத்தான் இருக்குமாட்டங்குது..” என்றார்.
‘சின்ன கோவில்தான்மா.. ஆனா இன்னைக்கு ஒன்பது மணிக்கு இங்க ஒரு சிறப்பு பூஜை இருக்கு.” என்றான்.
‘சரிப்பா.. வா நாம அதுவரைக்கும் அங்க உக்காரலாம்.” என்று ரகுராமை கோவிலின் உள் அழைத்துச் சென்றார் அவனது அம்மா. சற்று நேரம் அமைதியாக இருந்தவன்..
‘அம்மா.. இங்க டவர் இல்ல. நீங்க இங்கையே இருங்க… நான் ஒரு போன் பண்ணிட்டு வந்திடறேன்.” என்று இந்த பக்கம் வந்து தனது தம்பி ராஜாவிற்கு போன் செய்து ‘ராஜா.. நம்ம சொந்த பந்தம் முக்கயமானவங்களை மட்டும் இங்க இருக்கிற நம்ம ஈஸ்வரன் கோவில்ல முக்கியமான பூஜை இருக்குன்னு சொல்லி ஒரு அரை மணி நேரத்திற்குள்ள எத்தனை பேரை கூட்டிட்டு வரமுடியுமோ கூட்டிட்டு வந்திடு ரொம்ப முக்கியமான காரணத்துக்காகத்தான் சொல்றேன். லேட் பண்ணிடாத..‚ “ என்று விட்டு அம்மாவிடம் வந்தான்.
தன் அம்மாவிடத்தில்.. ‘அம்மா.. நம்ம அப்பாவையும் வரச்சொல்றிங்களா..? நான் சொன்னா வரமாட்டார்.” என்றான்.
மீண்டும் அதிசயித்தபடி.. ‘சரிப்பா..” என்று தன் கணவரிடத்தில் பேசினார். சுந்தரம் ஏதோ தப்பு நடக்கப்போவது போல் உணர்ந்தவர் ‘உடனே வரேன்..” என்றார்.
கோயிலுக்குள் வந்த சுந்தரத்திற்கு.. அதிர்ச்சியாய் இருந்தது. முக்கியமான சொந்தங்கள் அணைவரும் அங்குதான் இருந்தனர். ஏதோ சிறப்பு பூஜையிருக்குன்னு ரகுதான் வரசொன்னானாம்..” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
சரியாக ஒன்பது மணிக்கு பார்வதி தன் அப்பா.. மற்றும் எஸ். ஐ. யுடன் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். ரகுராம் ஆட்டோவை வழிமறித்தான். ஆட்டோவை நிறுத்தியதும் பார்வதியை ஒரு கையிலும் வீராச்சாமியை இன்னொரு கையிலும் பிடித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றான்.
‘என் கையை விடுங்க..” என்று பார்வதி என்ன முயன்றும் தன் கைகளை அவனிடமிருந்து விலக்கிக் கொள்ள முடியவில்லை. எஸ். ஐ. யும் பின்னோடே போனில் யாருடனோ பேசிக்கொண்டே கோயிலுக்குள் வந்தார். அணைவரின் முன்னிலையிலும் வீராச்சாமியின் கையை மட்டும் விடுவித்து தன் பாக்கெட்டில் வைத்திருந்த பொன்தாலிக் கயிற்றை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பார்வதியின் கழுத்தில் கட்டினான்.
‘மாமா.. இனிமே இவ வெறும் பார்வதி இல்ல.. மிசஸ் பார்வதிரகுராம்..” என்று சொல்லி முடிக்கவும் அங்கு போலீஸ் ஜீப் வருவதற்கும் சரியாக இருந்தது. வீராச்சாமியின் மகளுக்கு பிரச்சணையென்று போலீஸ் ஸடேசனுக்கு தகவல் சொன்னதும் அச்சமயம் அங்கிருந்த உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். நாம் நேற்று இவனிடம் சொன்ன வார்த்தைக்காகத் தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து முடித்திருக்கிறான் என்று வீராச்சாமிக்கு நன்றாக புரிந்திருந்தது.
‘இனிமே யாரும் உங்களை தப்பா சொல்லமாட்டாங்க மாமா..” என்று கிசுகிசுத்தான்.
சுந்தரம் ஏதோ சொல்ல வருவதை புரிந்து கொண்ட ரகு.. அவன் அப்பாவைத் தவிர்த்து ‘அம்மா.. இது முழுக்க முழுக்க என்னோட முடிவுதான். இனிமே யாராவது ஒரு வார்த்தை பார்வதியை தப்பா பேசினிங்கன்னா.. அது என்னை அசிங்கப்படுத்தற மாதிரி. என்னை யாராவது அசிங்கப் படுத்தினாங்கன்னா.. அப்புறம் எங்க அப்பா அதைபார்த்திட்டு சும்மா இருக்கமாட்டாரு. அப்படித்தானப்பா..?” என்று இப்பொழு சுந்தரத்தை அழுத்தமாய் பார்த்தான். ரகுவின் உறவினர்கள் அணைவரும் ஸ்தம்பித்துப் போயிருந்தனர். ஐந்து போலீசுடன் ஒரு சில உயர் அதிகாரிகளும் இருப்பதால் சுந்தரம் எதுவும் பேசாமல் வாயடைத்துப்போனார்.
ரகு நேராக.. எஸ். ஐ.யிடம் சென்றான். ‘சார்.. அப்படியே முறைப்படி இந்த கல்யாணத்தை ரிஜ்ஸ்தர் பண்ணிடலாம்னு இருக்கேன். எங்களை ஆசிர்வாதம் பண்ணிட்டு ஒரு சாட்சி கையெழுத்து மட்டும் போட்டுருங்க சார்…” என்று ரிக்வஸ்ட்டாக சொன்னான்.
பிறகு சுசிலாவைப் பார்த்து.. ‘அம்மா.. சிறப்பு பூஜை முடிஞ்சிடுச்சி. நீங்க அப்பாவோட… வீட்டுக்கு போங்க. நாங்க ரிஜிஸ்தர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு வந்திடறோம்.” என்று சொல்லி பார்வதியிடம் சென்றான்.
பார்வதியிடம் சென்று ‘பத்து மணிக்கெல்லாம் நாம ரிஜிஸ்தர் ஆபிஸ்ல இருக்கனும். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். அதனால சீக்கிரம் வேலை முடிஞ்சிடும்.. வா..” என்று மீண்டும் பார்வதியை ஒரு கையிலும் வீராச்சாமியை ஒரு கையிலும் பிடித்தவன் பார்வதி வந்த ஆட்டோவிலேயே போய் அமர்ந்தான்.
பார்வதிக்கு தன் அம்மா இறந்ததற்கு பிறகு ரகுராமோடு வாழலாம் என்ற எண்ணமெல்லாம் இல்லை ஆனால் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் அப்பாபேர் தெரியாத தப்பான குழந்தை.. என்ற சொல்லை தன் குழந்தைக்கு வாங்கி கொடுத்துவிடக் கூடாது என்றும் நினைத்தாள். அதனாலேயே.. ரகுவின் இந்த செயலுக்கு அவளால் எந்த மறுப்பும் சொல்ல முடியாமல் போனது. வீராச்சாமியும் தன் மகளைப் போலவே நினைத்தனால் அவரும் அமைதியாகவே இருந்தார்.
‘ரகு.. நானும் உன்கூட சாட்சி கையெழுத்துப் போட வரேன்..” என்று ரகுவோடு சென்றார். ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பார்வதி ரகுராமின் கல்யாணம் முறைப்படி ரிஜிஸ்தர் செய்யப்பட்டது. ‘என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா..” என்று தம்பிதுரையின் காலில் விழுந்தான் ரகுராம். பார்வதி அவளின் அப்பாவோடுதான் நின்றிருந்தாள்.
‘உன் பொண்டாட்டியையும் கூப்பிடு ரகு..” என்றார்.
ரகுராம் பார்வதியைப் பார்க்க.. அவள் தன் அப்பாவின் பக்கம் திரும்பிக்கொண்டாள். ‘பரவாயில்ல மாமா.. என்னை ஆசீர்வாதம் பண்ணினாலே அது அவளுக்கும்தான்.” என்றான்.
‘நல்லாயிருப்பா..” என்று வாழ்த்தினார்.
‘இப்பொழுது வீராச்சாமியிடம் சென்றவன் அவர் பக்கத்தில் இருந்த பார்வதியை வலுக்கட்டாயமாக கை பிடித்து இழுத்து அவளின் அப்பா காலில் பார்வதியோடு சேர்ந்து.. தானும் விழுந்து ‘ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா..” என்றான்.
‘ம்ம்.. “ என்று மட்டும் சொல்லிவிட்டு இருவரின் தோள்தொட்டு தூக்கிவிட்டார்.
‘அங்கிள்.. என்னால என் பொண்டாட்டிக்கு எந்த தொல்லையும் வராது. நீங்க உங்களை வீணா ஸ்ட்ரெண் பண்ணிக்காதிங்க..” என்று தினமும் பார்வதியோடு வரும் எஸ். பி. யிடம் சொன்னான்.
‘வீராச்சாமி.. ரகுராம்தான் உன் பொண்ணை காதலிச்சிருக்கான்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா.. உண்மையாவே நான் பயந்திருக்கமாட்டேன். ரகுவை எனக்கு முன்னாடியே தெரியும். ரொம்ப நல்ல பையன். நீயே தேடினாக்கூட இப்படி ஒரு மாப்பிள்ளையை உன்னால கண்டுபிடிக்க முடியாது. அதனாலதான் ரகு பார்வதிக்கு தாலி கட்டும்போது நான் எதுவும் சொல்லாம அமைதியா இருந்திட்டேன். ஒன்னும் கவலைப்படாத. இனிமே எல்லாம் நல்லதாத்தான் நடக்கும் வா..” என்று அழைத்துச்சென்றார்.
பார்வதி அலுவலகத்தினுள் காலை பதினொரு மணிக்கு வந்தாள். வந்ததும்.. ‘என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதிங்க..” என்று சக ஊழியர்களிடம் சொல்லி தனியறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
ரகுராம் தன் வீட்டிற்கு செல்லாமல் அவனின் அம்மாவை போனில் அழைத்தான்.
அம்மாவின் பேச்சு ரகுராமிற்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது. லேசாக தனக்குள் சிரித்தவன்.. ‘பார்வதியை சாதாரண ஆளுன்னு நினைச்சிட்டியா..? நான் கூப்பிட்டா வந்துடுவான்னு இவ்ளோ திடமா நம்புற..? அவ ஆபீஸ்க்கு போய்ட்டாம்மா.. என்மேல கொலைவெறியில இருப்பா. ஒரே ஒரு நிமிசத்தில நான் கட்டின தாலியை கழட்டி என் மூஞ்சியில விட்டெறிஞ்சிருப்பா. அவ வயித்துல வளர்ந்திட்டு இருக்கிற குழந்தைக்காகத்தான் அமைதியா இருந்திருக்கா.” என்றான்.
‘என்னப்பா இப்படி சொல்ற..? அவளோ கோவக்காரியா அவ..?” என்றார்.
‘பின்ன..? புருசன் என்ன செய்தாலும் உன்னை மாதிரியே அவளும் அமைதியா இருப்பான்னு நினைக்கிறியா..? அதெல்லாம் அவகிட்ட வேலைக்கே ஆகாது. அவளை அன்பால மட்டும்தான் நம்மால கட்டிப்போட முடியும். சரி.. அப்பா உன்னை எதாவது திட்டினாரா..?” என்றான்.
‘என்னை எதுவும் சொல்லலை. ஆனா.. ரொம்ப கோபமா இருக்கார். இன்னும் காலைல இருந்து எதுவும் சாப்பிடலை. அவரை சாப்பிட கூப்பிடவே எனக்கு பயமா இருக்கு.” என்றார்.
‘முதல்ல நீ சாப்டியாம்மா..?” என்றான்.
‘உங்கப்பா சாப்பிடாம நான் என்னைக்குடா சாப்பிட்டிருக்கேன்..?”
‘மயக்கம் வந்திடப்போகுது. முதல்ல தயவு செஞ்சி சாப்பிடுங்கம்மா.. நான் ஒரு இரண்டு மணிநேரத்தில வந்திடறேன்.” என்று போனை கட் பண்ணினான்.
ரகுவிற்கு தன் அம்மாவின் நிலைகுறித்து கவலையாகத்தான் இருந்தது. பசியென்றால் என்னவென்றே அறியாதவர்கள் பாவம் என்று நினைத்தான். ஆனால் இப்பொழுது வீட்டிற்கு சென்றால் அப்பாவின் கோபம் இன்னும்தான் அதிகமாகும் என்பதும் ரகுவிற்கு நன்றாக தெரியும். சரி.. முதல்ல பார்வதியை சாப்பிட வைத்துவிட்டு அப்புறம் அம்மாவை போய் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு நேராக பார்வதியின் அலுவலகம் நோக்கி சென்றான்.
‘சார்.. மேடம் யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்னாங்க சார்.. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க சார்..” என்று பார்வதியின் அசிஸ்டென்ட் ரகுவிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக்கொண்டிருந்தான்.
‘நான் இப்ப உள்ளே போறதால உங்களுக்கு எந்த பிரச்சணையும் வராது பழனி அன்னைக்கு சும்மாதான் நான் அவளோட புருசன்னு சொன்னேன் ஆனா.. உண்மையாவே இன்னைக்கு காலைலதான் உன்னோட மேடமை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதனால இப்ப கொஞ்சம் கோபத்தில இருக்கா நான் போய் அவளை சாப்பிட மட்டும் வச்சிட்டு வந்திடறேன் ப்ளீஸ்.. பழனி..” என்று ரகு சொன்னதும்
‘என்னங்க சார்.. நீங்க போய் என்கிட்ட கெஞ்சிட்டு இருக்கிங்க..? நீங்க மேடத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு எனக்கு தெரியாது. நீங்க போங்க.. யாரும் உள்ள வராத மாதிரி நான் பார்த்துக்கிறேன்..” என்றார் பழனி.
பழனிக்கு நன்றியை தெரிவித்து பார்வதியிடம் வந்தான் ரகுராம். டேபிள் மீது தன் தலையை சாய்த்து கண்மூடி படுத்திருந்தாள். அமைதியாக அவளருகில் போய் நின்றான். சற்று நேரத்திலேயே ரகுராமின் தனிப்பட்ட வாசனை பார்வதியின் நாசியை வருட.. பட்டென்று கண்விழித்தாள். பார்வதியிடம் எதுவும் பேசாமல்.. அவளின் லன்ச் பேகை எடுத்தான்.
‘பழனி…” என்று அந்த கத்து கத்தினாள். ஆனால் யாரும் உள்ளே வரவில்லை. பிறகு பார்வதியே எழுந்திரிக்க முற்படும்போது.. அவளது சோல்டரை அழுத்தமாக பற்றி அமர வைத்தான். அவளின் லன்ச் பாக்சை திறந்து வைத்து.. சாப்பிடு என்பதுபோல் தன் கண்களால் சைகை செய்தான். லன்ச் பாக்சை அவ்வளவு ஆத்திரத்தோடு கீழே தட்டிவிட்டாள். ‘பழனி..” என்று மிக மெதுவாகத்தான் அழைத்தான். அடுத்த நொடி பழனி வந்து நின்றான். அவ்வளவு கோபமாய் பழனியைப் பார்த்தவள்.. ‘இவ்ளோ நேரம் எங்க போய் தொலைஞ்ச..?” என்றாள். எப்பொழுதும் பழனியை மரியாதைக் குறைவாக பார்வதி நடத்தியது இல்லையென்பதால்.. பார்வதியின் கோபத்தை பார்த்த பழனி பார்வதியிடம் என்னை மன்னிச்சிடுங்க மேடம்..” என்று கையெடுத்து கும்பிட்டான்.
‘பழனி.. உங்க மேடம்க்கு அவங்க கொண்டு வந்த சாப்பாடு பிடிக்கலையாம். அதனால கீழ கொட்டிட்டாங்க. இதை சுத்தம் பண்ணிட்டு நீங்க போய் வேற எதாவது வாங்கிட்டு வாங்க.” என்று பழனிக்கு பொறுமையாய்.. பணித்தான்.
அங்கு கொட்டியிருந்த சாப்பாட்டை சுத்தம் செய்த பழனி.. அடுத்த பத்தாவது நிமிடத்தில் வேறு சாப்பாடோடு வந்தார். சாப்பாடை வைத்துவிட்டு வெளியே போக எத்தனிக்கவும் ‘ஒரு நிமிசம் பழனி.. எதுக்கும் நீங்க இங்கையே இருங்க.. ஏன்னா உங்க மேடம்க்கு இந்த சாப்பாடும் பிடிக்கலைன்னா.. அதையும் கொட்டிடுவாங்க. உங்க மேடம்க்கு நீங்க வாங்கி வர சாப்பாடு எப்ப பிடிச்சிபோய் அவங்க சாப்பிடறாங்களோ.. அதுவரைக்கும் நீங்க இன்னைக்கு இந்த வேலையைத்தான் செய்ய வேண்டி வரும்..” என்றான்.
பழனி செய்வதறியாது திகைத்து நிற்க.. பார்வதி ரகுராமை முறைத்தாள். மனதிற்குள் சிரித்தவன் ‘பழனி.. உங்க மேடம்க்கு இந்த சாப்பாடே பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. அதனால நீங்க போங்க.” என்றான். ரகுவின் வார்த்தையை கட்டளையாய் ஏற்று வெளியேறினார் பழனி. மீண்டும் அவளிடம் எதுவும் பேசாமல்.. பார்சல் சாப்பாட்டை அவள் சாப்பிடுவதற்கு ஏதுவாக பிரித்து வைத்தான்.
‘எனக்கு பசிக்கலை..” என்று அவன் முகம்பாராமல் சொன்னாள்.
‘சரி.. உனக்கு எப்ப பசிக்குதோ.. அப்ப சாப்பிடு. நீ சாப்பிட்டதும் நான் போறேன்.”
‘ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்றிங்க..?” என்றாள்.
‘பின்ன..? புருசனோட சித்திரவதையெல்லாம் இல்லாம அப்படியே சொகுசு வாழ்க்கை வாழலாம்னு பார்க்கிறியா..?” என்றான் நக்கலாக.
‘ஆமாம் பெரிய.. பு..ரு..ச..ன்..” என்று முனகியவள்.. ‘எனக்கு சாப்பிட்டா வாந்திவந்திடும்..” என்று கடுப்பாக சொன்னாள்.
பார்வதியை நம்பாத பார்வை பார்த்தவன் ‘பரவாயில்லை.. சாப்பிட்டு வாந்தி எடு..”
தான் சாப்பிடாமல் நகரமாட்டான் என்றுணர்ந்தவள்.. நான்கு வாய் சாப்பாடுதான் சாப்பிட்டாள். உடனே வாந்தி எடுத்துவிட்டாள். பார்வதி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு தன்னையறியாமல் உள்ளே வந்த பழனி.. அதனை சுத்தம் செய்ய எத்தனிக்க.. ‘நீ போ பழனி.. நான் பார்த்துக்கிறேன்.” என்றவன்.. பழனி வெளியே சென்றதும் தானே அதனை சுத்தம் செய்துவிட்டு பார்வதியைப் பார்க்க.. டேபிள் மீது கண்மூடி படுத்திருந்தாள்.
‘பார்வதி..” என்று மென்மையாய் அழைத்துப் பார்த்தான். பார்வதியிடம் பதிலில்லாமல் போகவும் அவளின் முகத்தை தன் கைகளால் நிமிர்த்திப் பார்த்தான். பார்வதியின் தலை பலமில்லாமல் ரகுராமின் கைகளிலேயே சரிந்தது ‘ஏய்..“ என்று பதறியவன்.. அவளை தூக்கிவந்து காரில் கிடத்தி அருகிலுள்ள ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்.