‘வாங்க மாமா.. அக்கா நல்லாயிருக்காங்களா..?” என்று சுந்தரத்தை வரவேற்றார் . சுகுனா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். ‘நல்லாயிருக்கியாமா..? என்று விசாரித்து விட்டு.. ‘துரை நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேச வந்திருக்கேன்.” என்றார் . பெரியவர்கள் பேசும் போது இங்கு நின்றால் தன் அப்பாவிற்கு பிடிக்காது என்றுணர்ந்த சுகுனா.. தண்ணீர் சொம்பை வாங்கியதும் வெளியேறி விட்டாள்.
‘சொல்லுங்கமாமா.. என்ன முக்கியமான விசயம்..?” என்றார் தம்பிதுரை.
‘உன் மாப்பிளை என்ன பண்ணிவச்சிருக்கான்னு தெரியுமா துரை..? யாரோ ஒரு பொண்ணை லவ் பண்றானாம். அந்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தை கால்ல நிக்கிறான். என் பையனோட சந்தோசம்தான் முக்கியம்னு கல்யாணம் கூட பண்ணிவச்சிருவேன். ஆனா அந்த பொண்ணு நம்மகிட்ட இருக்கிற சொத்துக்காகத்தான் ரகுவை காதலிக்கிறா. நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன். இந்த மடையனுக்கு அது புரியமாட்டுக்குது. இவனைப் பார்த்து கொஞ்ச நாள் கழிச்சி அவன் தம்பியும் ஒரு பொண்னோட வந்து நிக்கப்போறான்…” என்று ஆத்திரமாய் பேசினார் சுந்தரம்.
‘இப்ப என்னங்க மாமா பண்ணலாம்..?” என்று துரையும் பதட்டமாய் கேட்டார்.
‘துரை.. நான் நல்லா யோசிச்சிதான் இந்த முடிவிற்கு வந்திருக்கேன். நம்ம சுகுனாவிற்கு ரகுன்னா ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும். ரகுவும் உன் பேச்சை என்னைக்குமே தட்டினது இல்லை. நீ சொன்னா அவன் கண்டிப்பா மறுக்க மாட்டான். அதனால உன் பொண்ணை என் மகனுக்கு கேக்கிறேன். உனக்கு இதுல சம்மதமா..?” என்றார்.
‘ரகுக்கு விருப்பம் இல்லைன்றப்ப நான் எப்படி மாமா அவன்கிட்ட இதைப் பத்தி பேசமுடியும்.? அதுவுமில்லாம இதுல சுகுனாவோட வாழ்கையும் அடங்கியிருக்கு. அவன் விருப்பமில்லாம என் பொண்ணை ரகுவிற்கு கல்யாணம் பண்ணிவச்சிட்டு அப்புறம் இரண்டு பேருக்கும் சந்தோசமில்லாம ஆய்டுச்சினா அது இன்னும் நம்மளை பாதிக்கும்.. இதுல இன்னொரு முக்கியமான விசயம்.. முதல்ல ரகு இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்குவானா..?”
‘அவனை கல்யாணத்திற்கு ஒத்துக்க வைக்கிறது என்னோட பொறுப்பு. என்னோட குடும்ப கொளரவத்தை காப்பாத்துவியா துரை..? நான் உன்னை நம்பித்தான் வந்திருக்கேன்..” என்று கெஞ்சுவது போல் கேட்டார் சுந்தரம்.
‘நான் முதல்ல சுகுனாகிட்ட இதைப் பத்தி பேசிடறேன் மாமா. அவகிட்ட உண்மையை மறைச்சிட்டு என்னால ஒன்னும் பண்ணமுடியாது.” என்றார் துரை.
‘ரகுக்கு உண்மையான அன்புன்னா என்னன்னு தெரியலை… நம்ம சுகுனாவை கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறமாத்தான் அதை உணருவான். அதனால கொஞ்சம் பக்குவமா எடுத்து சொல்லு துரை. சுகுனாகிட்ட பேசிட்டு சாயங்காலத்துக்குள்ள நல்ல தகவலா சொல்லு. நான் கிளம்பறேன்..” என்று அடுத்தகட்ட யோசனையோடு வெளியேறினார்.
இரவு ஏழு மணிபோல் இருக்கும். சுந்தரம் பார்வதியைப் பற்றின தகவல்களை சேகரிப்பதற்க்காக அவள் வீட்டு வழியாகத்தான் வந்துகொண்டிருந்தார். சுந்தரம் வீட்டிற்கும் பார்வதியின் வீட்டிற்கும் நடுவே இரண்டே இரண்டு தெருக்கள்தான் இடைவெளி. சுந்தரத்தை பார்த்ததும் ரோட்டோரத்தில் மளிகைகடை நடத்திக்கொண்டிருந்த கடைக்காரர்.. ‘என்னண்ணே இந்த பக்கம்..? எதுவும் முக்கியமான சோலியா..?” என்று கேட்டார்.
‘அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. இங்க பார்வதிங்கிறது…” என்று சுந்தரம் ஆரம்பித்தததுதான்.. ‘விசயம் உங்க காதுவரைக்கும் வந்திடுச்சா..?” என்றார்; கடைக்காரர்.
சுந்தரத்திற்கு திக்கென்று ஆனது.. ஊருக்கே தெரிஞ்சிருக்கு.. என்று ஆத்திரப்பட்டவர் அதை மனதுக்குள் மறைத்து.. ‘என்ன விசயம்..? என் காதுக்கு எதுவும் வரலையே..‚ நான் பார்வதியோட அப்பாவைத்தான் பார்;க்க வந்தேன்..” என்றார்.
‘ம்ம்.. என்னத்த சொல்றது..? அவங்க பொண்ணு நல்லாப் படிச்சாளும் படிச்சிச்சி.. அவரை கைலையே புடிக்கமுடியலை. இருக்காதா.. பின்ன..? இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு.. தன்னோட தகுதிக்கு மீறி செலவு பண்ணி படிக்க வச்சிருக்கார். இப்ப அதுக்கான பலனை அனுபவிக்கிறார். பொண்ணுக்கு பச்சை இங்க்குல கையெழுத்து போடற வேலை கிடைச்சிருக்குன்னு.. சந்தோசத்தில மனுசன் தலைகால் புரியாம திரியராரு. இப்ப பார்வதியோட அப்பாவை அவங்க வீட்டுக்கு போனாலும் உங்களால பார்க்கமுடியாதுண்ணே.. இந்நேரம் வேலை விசயமா அவங்க கோயமுத்தூர் கிளம்பியிருப்பாங்க. அவங்க அம்மா வேணும்னா வீட்ல இருப்பாங்க..” என்றார்.
ச்ச்சே… இதுதான் விசயமா..? என்று நினைத்து.. ‘சரிதம்பி.. அவங்க வீடு எதுன்னு சொல்லுங்க.. நான் பார்வதியோட அம்மாகிட்டையாவது வந்த விசயத்தை சொல்லிட்டுப்போயிடுறேன்.” என்று விசாரித்து.. பார்வதியின் வீட்டிற்கு சென்றார்.
பார்வதி வீட்டின் வெளியில் நின்று வீட்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்தார். சிறிய வீடு என்றாலும் மிக நேர்த்தியாக இருந்தது. சுற்றிலும் இருந்த பூந்தோட்டத்திலிருந்து.. வந்த பூக்களின் வாசனை ரம்யமாய் இருந்தது. சற்று நேரம் யோசித்துஇ பிறகு கதவைத் தட்டினார். சத்தம் கேட்டு வெளியே வந்த சிவகாமி.. சுந்தரத்தை புரியாத பார்வை பார்த்தார்.
‘என்ன..? என்னை யாருன்னு தெரியலையா..? உன்னையும்தான் எனக்கு யாருன்னு தெரியாது. ஆனா .. பாருங்க உங்க பொண்ணுக்கு என் மகனை மட்டும் நல்லா தெரிஞ்சிருக்கு..” என்று நக்கலாய் பார்த்தார்.
‘அண்ணா.. நான் உங்களை இந்த ஊருக்குள்ள ஓரிருமுறை பார்த்திருக்கேன் . என்ன விசயமா இங்க வந்திருக்கிங்க..? என்னோட வீட்டுக்காரர் கோயமுத்தூர் வரைக்கும் போயிருக்கார்.. அவர்கிட்ட எதாவது சொல்லனும்ங்களா..?” என்று வெள்ளந்தியாய் கேட்டார்.
‘உங்களோட சொத்துசுகத்தைப் பத்தி நான் எதுக்குங்க தெரிஞ்சிக்கனும்..?” என்று மீண்டும் தன்மையாகத்தான் சிவகாமி கேட்டார்.
‘அதானே.. குடும்பத்தில யாராவது ஒருத்தருக்கு தெரிஞ்சிருந்தா போதாதா..? அதுதான் உன் பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கே..‚ அது தெரிஞ்சிதான என் மகனை மடக்கிப் போட்டிருக்கா..?” என்றார்.
‘நீங்க வேற யாரையோ பார்க்க வந்திட்டு தவறா என்கிட்ட பேசறிங்கன்னு நினைக்கிறேன். நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு என்பொண்ணு இல்ல..” என்றார் பொறுமையாய்.
‘பார்வதிங்கிறது.. உங்க பொண்ணுதான..?” என்றார்.
‘ஆமா.. என்பொண்ணுதான்..” என்றார் சிவகாமி.
‘அப்ப… நான் சரியாத்தான் வந்திருக்கேன். உன்பொண்ணுதான் என் மகனை வளைச்சிப்போட்டிருக்கா. நான் நல்லவிதமா சொல்றேன். ஒழுங்கா இந்த ஊரவிட்டு போய்டுங்க. இல்லன்னா..? குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்திடுவேன்.‚”
‘நாங்க எதுக்கு ஊரைவிட்டுப் போகனும்..? என்பெண்ணு அப்பேர்பட்டவ இல்ல. ஆம்பளையில்லாத வீட்ல வந்து ரகளை பண்றிங்களா..? முதல்ல கிளம்புங்க இங்கயிருந்து..” என்று கதவை சாத்தினார்.
‘காலைல போய்ட்டு இப்ப வரிங்க..? அப்படி எங்கத்தான போனிங்க..?” என்றார் சுசிலா.
‘இரு.. சொல்றேன்..” என்று தம்பிதுரைக்கு தொலைபேசியில் அழைத்தார்.
‘துரை.. என்னைய்யா முடிவெடுத்திருக்க..? சுகுனாகிட்ட பேசிட்டியா..?” என்றார்.
‘மாமா.. நான் சுகுனாகிட்ட பேசினேன். முதல்ல அவ ஒத்துக்கவேயில்ல. நான்தான் ரகு காதலிக்கிற பொண்ணு நல்லவளா இருந்திருந்தா உன் சுந்தரம் மாமாவே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. அந்த பொண்ணுக்கிட்ட இருந்து நம்ம ரகுவை நாமதானம்மா காப்பாத்தனும். அப்படின்னு பொறுமையா எடுத்து சொன்னேன்இ ஒத்துக்கிட்டா. “
‘அப்ப நிச்சயத்தை நாளைக்கே வச்சுக்கலாம். முறைப்படி நாங்க எல்லாரும் நாளைக்கு அங்க வரோம்.” என்று முடித்துக்கொண்டார்.
ரகுராம் சாப்பிடுவதற்காக தன் ரூமிலிருந்து வெளியே வந்தான். ரகு வந்து சாப்பிட உக்கார்ந்ததும்.. ‘சுசிலா.. நாளைக்கு நம்ம ரகுவிற்கும் உன் தம்பி மகள் சுகுனாவிற்கும் நிச்சயம் பண்ணப்போறோம். அதனால காலைல சீக்கிரம் எழுந்து ரெடியாயிடு..” என்று ரகுராமை பார்க்காமல் தன் மனைவியை பார்த்து தெனாவெட்டாய் சொன்னார்.
‘அப்பா யாரைக் கேட்டு இந்த முடிவிற்கு வந்திங்க..?” என்றான் ஆத்திரத்தோடு.
‘நான் யார்கிட்டடா கேட்கனும்..? என் குடும்ப விசேசம் . நான்தான் முடிவு பண்ணுவேன். வேலையைப் பார்த்துக்கிட்ட நான் சொல்றதை மட்டும் செய்..” என்று மிரட்டினார்.
‘இந்த மிரட்டறது எல்லாம் என்கிட்ட வேணாம். நான் எங்கையும் வரமாட்டேன்.” என்று ரகுவும் திடமாய் மறுத்தான்.
‘ஆமா… அந்த பார்வதிக்கு எதோ வேலைகிடைக்கப் போகுதாமே…? அவளோட அப்பனும் அவளும் கோயமுத்தூர்க்கு போயிருக்காங்களாம்… அதனால அவளோட அம்மா தனியாத்தான் வீட்ல இருக்கிறா.. நாளைக்கு நீ எங்களோட வராம இருந்து.. அந்த கோவத்தில நானேது அந்த பார்வதியோட அம்மாவை ஆள் வச்சியேது கொன்னுடப்போறேன். வீணா என்னை ஒரு கொலைபண்ண வச்சிடாத..‚ அந்த பார்வதி புள்ளையோட அம்மாவை கொன்னுட்டாலும்.. அந்த புள்ளை உன்னை அப்பவும் ஏத்துக்குவாளா..?” என்று கூலாக கேட்டார்.
‘அப்பா.. “ என்று கோபத்தில் சாப்பாடு தட்டை தூக்கியெறிந்தான்.
‘நீ மட்டும் நாளைக்கு எங்க கூட உன்மாமன் வீட்டுக்கு வரலைன்னு வச்சிக்க.. இந்த ஊர்ல ஒரு சாவு நிச்சயம்..‚” என்று அவரும் கோபமாய் எழுந்து போனார்.
ரகுவிற்கு தன் அப்பாவைப் பற்றி நன்றாகவே தெரியும். இதுபோல் கேவலமாக நடந்து கொள்பவரும் இல்லை. சொத்திற்க்காகத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என நினைத்தவன்.. இனி நேராக தன் மாமாவிடத்தில் உதவியை நாட முடிவு செய்தான். அடுத்தநாள் காலை ரெடியாகி வெளியே வந்த ரகுவைப் பார்த்த சுந்தரம்.. வெற்றிச் சிரிப்பு சிரித்தார். சொந்த பந்தம் என்று ஒரு முப்பதுபேர் வரை கிளம்பி ரகு நிச்சயத்திற்காக துரை வீட்டிற்கு வந்திருந்தனர்.
ரகுராம் தன் மாமாவிடம்.. ‘மாமா நான் ஒரு பொண்ணை விரும்பறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அப்பாகிட்ட சொல்லியும் என்னை மிரட்டி இங்க கூட்டிட்டு வந்திருக்கார். தயவு செய்து நீங்களாவது என்னை புரிஞ்சிக்கோங்க மாமா. இந்த நிச்சயத்தை நிறுத்திடுங்க.” என்றான்.
‘ரகு நீ சின்னப் பையன். நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு உனக்கு இன்னும் சரியா புரியலை. நானும் அப்பாவும் எதுவாயிருந்தாலும் உன்னோட நல்லதுக்குத்தான் பண்ணுவோம். போக போக நீயே இதை நல்லாப் புரிஞ்சிக்குவ..” என்று எடுத்துரைத்தார்.
‘உன்னோட சந்தோசத்திற்காகத்தான் ரகு நாங்க இதெல்லாம் பண்றோம்..” என்றார்.
‘சுகுனா… “ என்று ஹாலில் இருந்தே அந்த கத்து கத்தினான். ‘ரகு… எதுக்கு இப்படி கத்தற..” என்று அவனின் கைப்பிடித்து.. அமைதிப்படுத்தினார் துரை. ரகுவின் குரலில் தன் பெயரை சொல்லிக்கேட்கவும்.. சுகுனா ஓடி வந்தாள். சுகுனாவைப் பார்த்தவன்.. ‘இங்க பாரு சுகுனா.. நான் எப்பவும் உன்னை என் மனைவியா நினைச்சே பார்த்ததில்லை. அது உனக்கும் நல்லாவே தெரியும். என்னோட உயிர்க்கு எதுன்னாலும் நான் கவலைப் பட்டிருக்கமாட்டேன். ஆனா அவர் பார்வதியோட அம்மாவை கொண்ணுடுவேன்னு என்னை மிரட்டிதான் இங்க கூட்டிட்டு வந்தார். என்மேல உண்மையான பாசமிருந்தா.. நீயே இந்த நிச்சயத்தை நிறுத்திடு. யார் பேச்சை கேட்டு இதுக்கு நீ சம்மதிச்சிருந்தாலும் பின்னாடி நீதான் கஷ்ட்டப்படுவ.. இல்ல.. சரியாய்ப்போய்டும்னு நினைச்சிட்டு ஒருவேளை நீ என்னை கல்யாணமே பண்ணிக்கிட்டாலும்.. அதுக்கப்புறம் நீ விதவையாத்தான் வாழவேண்டி வரும். பார்வதியைத்; தவிர வேற யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அதுக்கப்புறம் கண்டிப்பா நான் உயிரோடவே இருக்கமாட்டேன்.” என்று ஆத்திரமாய் பேசினான்.
சுகுனா மிகவும் பயந்துதான் போனாள். ‘இங்க வந்து இத்தனைபேர் முன்னாடி நான் மட்டும் எப்படி மாமாவை எதிர்த்து பேச முடியும்..? உங்க அப்பாக்கு எப்படி நீங்க கட்டுப் பட்டிருக்கிங்களோ..? அதே மாதிரித்தான் நானும் எங்க அப்பாக்கு கட்டுப்பட்டு இதுக்கு சம்மதிச்சிருக்கேன்.” என்றாள் பயத்தோடு.
சுகுனாவின் விருப்பத்தோடும் ரகுவின் விருப்பமில்லாமலும் அங்கே அணைவர் முன்னிலையிலும் நிச்சதார்த்தம் நடந்து முடிந்தது. அணைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அங்கு பார்வதியும் அவளுடைய அப்பா வீராச்சாமியும் வந்து நின்றனர்.
வீராச்சாமியை நேரில் பார்த்ததும்.. ஒரு நேர்மையான போலீசாக முன்னமே சுந்தரத்திற்கு தெரிந்திருந்தது. ரகுவின் முகத்தில் அதிர்ச்சியைப் பார்த்த சுந்தரம் இவள்தான் பார்வதி என்று சரியாக கனித்தார். ‘பார்வதி.. “ என்றபடி வெளியே வந்தான் ரகுராம்.
‘இங்க நடக்கிறது .. நான் கேள்விப் பட்டது எல்லாம் உண்மையா..?” என்றாள்.
‘ஏய்.. நான் உன் நல்லதுக்காகத்தான் இதுக்கு சம்மதிச்சேன்.“ என்று பதறினான்.
‘எது என்னோட நல்லது..?” என்றாள் ஆத்திரம் பொங்க..
‘எங்கப்பா உன்னோட அம்மாவை கொன்னுடுவேன்னு மிரட்டினார். நீங்க ரெண்டுபேரும் வேற ஊர்ல இல்ல.. உங்கம்மாவுக்கு எங்கப்பாவால எந்த ஆபத்தும் வந்திடக்கூடாதுங்கறதுக்காகத்தான் சூழ்நிலைக் கைதியா நான் இந்த நிச்சயத்துகு வரமாதிரி ஆய்டுச்சி…” என்றான்.
சொந்த பந்தங்கள் அணைவரும் இருக்கும் காரணத்தினால் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த சுந்தரம் இப்பொழுது பார்வதியிடம் வந்து.. ‘நீ சின்னபொண்ணு.. நல்லாப் படிச்சி எதோ பெரிய வேலைக்கு போகப்போறேன்னு கேள்விபட்டேன்… மலையோட மடுவு மோதறமாதிரி.. வீணா எங்ககிட்ட மோதி வாழ்கையை பாழாக்கிக்காத.. போ.. போய் சந்தோசமா வாழறதுக்கு வழியப்பாரு..” என்று ஆத்திரத்தை அடக்கியபடி சொன்னார்.
‘சந்தோசமா வாழுன்னு மட்டும் சொல்லாதிங்க.. வாயும்.. வயிறுமா சந்தோசமா வாழுன்னு வாழ்த்துங்க..” என்று சத்தமாகவே கத்தி சொல்லி உக்கிரமாய் ரகுராமைப் பார்த்தாள்.
அங்கிருந்த அணைவரும் பார்வதியை கேவலமாக பார்க்க.. ரகுமட்டும் அதிர்ச்சியாய் உணர்ந்தாலும் ஆனந்தத்திலன் உச்சத்திற்கே சென்றான். தன்னையறியாமல் அவளருகில் வந்தான். பார்வதியின் அப்பாவை அணைவரும் கேவலமாக பேசினர். அப்பொழுதுதான் தன் அப்பாவைப் பார்த்த பார்வதி அவர் படும் வேதனையை தாங்கமுடியாமல்.. ‘வாங்கப்பா..” என்று அவரை அழைத்துச் சென்றாள். நடை பிணமாய் சென்றார் வீராச்சாமி.
ரகுராம் இந்த அளவிற்கா அந்த பெண்ணிடம் தன் மனதை கொடுத்திருக்கிறான்.. என்று உள்ளுக்குள் புழுங்கிப்போனார் தம்பிதுரை. எத்தனை முறைப்பெண்கள் இருந்தாலும் ஒருவரையும் தன் பார்வையில் கூட கன்னியம் தவறி பார்த்ததில்லை. இந்த அளவிற்கு ஆனபின்பு தன் மகளின் சந்தோசம் கருதியும் ரகுவின் சந்தோசம் கருதியும்… இந்த கல்யாணம் வேண்டாம் என்றும் திடமாய் முடிவெடுத்தார்.
துரையின் முகத்தை பார்த்த சுந்தரம்.. ‘துரை.. அந்த கேடுகெட்டவ சொல்றதை வச்சி நீ எந்த முடிவும் அவரசப்பட்டு எடுத்திடாத.. நம்ம ரகு அப்படிப்பட்டவன் இல்லை..” என்றார்.
‘ரகு.. அந்த பொண்ணு சொல்றது உண்மையா..” என்று துரைகேட்டார்.
‘ஆமாம் மாமா.. அதனாலத்தான் இந்த கல்யாணம் வேணாம் மீறி பண்ணினா நான் செத்துடுவேன்னு சொன்னேன்.. நீங்களாவது என் பேச்சை கேட்டிருக்கலாம் இப்ப சுகுனா மனசையும் கஷ்டப்படுத்திட்டிங்க..” என்றான்.
‘மாமா.. இந்த கல்யாணப்பேச்சை இத்தோட நிறுத்திடுங்க..” என்று அணைவர் முன்னிலையிலும் தம்பிதுரை சொல்ல.. அவமானமாய் உணர்ந்த சுந்தரம். ‘இப்படி பண்ணி என் குடும்ப மானத்தை வாங்கிட்டியேடா..“ என்று சுந்தரம் ரகுவை அடிக்கப்போக.. அதைத் தடுத்த தம்பிதுரை.. ‘வீணா என் பொண்ணு மனசை நானே சங்கடப்படுத்திட்டேன். இப்ப கோபப்பட்டு என்ன ஆகப்போகுது..? என் பொண்ணோட நிலையை நினைச்சி தயவு செய்து தப்பா நினைக்காம இங்கயிருந்து முதல்ல எல்லாரும் கிளம்புங்க…” என்று தன் அக்காவை பார்த்து சங்கடமாய் சொன்னார் தம்பிதுரை.
‘எங்களால உனக்கு எந்த கஷ்டமும் வேணாம் துரை.. நாங்க கிளம்பறோம்..” என்று சுசிலா அணைவரையும் அழைத்துக்கொண்டு கண்ணீர் வழிய வெளியேறினார்.