Advertisement

                        அழகோவியம்  உயிர்பெற்றது..
                              அத்தியாயம் — 1
            பரந்து  விரிந்திருக்கும்   பங்களாவிற்கு  வெளியில்   இருந்தபடி.   ‘மயிலு..  என்னாவாடி  இருக்கும்..?  இப்படி   திடீர்ன்னு  நம்ம  எல்லாரையும்   வெளில  போக  சொல்லிட்டாங்க..   நாங்க  கூப்பிடறவரைக்கும்   யாரும்  உள்ள  வரவேணாம்னு  வேற  சொல்லிட்டாங்க..  நானும்  இருபது  வருசமா  இங்க   வேலைசெய்றேன்.. இதுவரைக்கும்   இந்த  மாதிரி  நடந்ததே  இல்ல..” என்று  அந்த  பெரிய  பங்களாவில் வேலை  செய்யும்  ஐந்து  பேரும்  புலம்பிக்கொண்டிருந்தார்.   
       ‘ரகு..  நான்  சொல்றதை  கேளுப்பா..  நம்ம  சொந்தத்தில  நீ  எந்த  பொண்ணை  சொன்னாலும்  நான்  சம்மதிக்கிறேன்.  நம்ம  குடும்பத்தில  பரம்பரை  பரம்பரையா  எல்லாரும்  சொந்த்திலதான் பொண்ணெடுப்பாங்க.  நாமதான்  இந்த  குடும்பத்துக்கு  பெரிய  வீட்டுக்காரங்க.  எல்லாருக்கும்  நம்மதான்  முன்மாதிரியா  இருக்கனும்.  இப்ப  நாமே அதை  மீறினா..  எல்லாரும்  நம்மளை  கேவலமாத்தான்  நினைப்பாங்க..” என்று  மகனோடு மன்றாடிக்கொண்டிருந்தார்   சுசிலா.
       ‘அம்மா..  காதல்  ஜாதியோ..  அந்தஸ்த்தோ  பார்த்து  வராது.  இதுல  சொந்தத்திலதான்  லவ்  பண்ணனும்னு  நீங்க  சொல்றது..  உங்களுக்கே  அநியாயமா  தெரியலையா..?  இவ்ளோ  காசு  பணம்   இருந்து  என்ன  பிரையோஜனம்..?  நான்  சந்தோசமா  இல்லையே..‚  சொத்து  இருக்குங்கிறதுக்காக   நான்  என்ன  இன்னும்   நூறு  வருசத்துக்கா  வாழப்  போறேன்..?  என்  வாழ்க்கையை  எனக்கு  பிடிச்சமாதிரி  வாழத்தான்  விடுங்களேன்மா…‚”  என்று  ரகுராமும்  தன்  தாயிடம்  மன்றாடினான்.
        ரகுவின்  கலங்கிய  கண்களைப்  பார்த்த  சுசிலா..  சற்றே  மனம்  இறங்கினார்.  தன்  அம்மாவின்  முகத்தில்    அன்பை  கண்ட  ரகுராம்..  ‘அம்மா..  நீங்களே  என்னை  புரிஞ்சிக்கலைன்னா..?”  என்று  பேசிக்கொண்டிருக்கும்போதே..  சுந்தரம்  இடைமறித்து..   ‘ரகு..   உனக்கு  கல்யாணம்னு  ஒன்னு  நடந்தா..  அது  என்  தங்கை  மகளோடவோ..  இல்லன்னா  உன்  தாய்மாமன்  மகளோடவோதான்  கண்டிப்பா   நடந்தாகனும்.. “ என்றார்   ஆணையிடுவது  போல்.
       ‘அப்படின்னா..  நான்  கல்யாணமே   பண்ணிக்கமாட்டேன்..” என்றான்  அவனும்  உறுதியாக. 
       நீ  எப்படி  கல்யாணம்  பண்ணாம  இருந்திடறேன்னு  நானும்  பார்த்திடறேன்டா..  என்று  மனதில்  சபதமே  எடுத்துக்கொண்டார்  சுந்தரம்.   ரகுவும்  சுந்தரமும்..  ஒருவரையொருவர்   எதிரிபோல்  முறைத்துக்கொண்டிருப்பதைப்  பார்த்த  சுசிலா..  ‘ரகு  அப்பாகிட்ட  இப்படி  கோபப்படலாமா..? ரெண்டு  பேருமே  விட்டுக்கொடுக்காம  மல்லுக்கு  நின்னா..?  நான்  என்னத்தாண்டா  பண்றது..?” என்று     ரகுவை  ரூமிற்கு   அழைத்துச்சென்றார். 
      சுந்தரம்   ஹாலிலேயே   அமர்ந்தபடி  தீவிரமாக  யோசனை  செய்ய  ஆரம்பித்தார்.   ரகுராமிற்கு  தன்  தாய்மாமா  என்றால்  உயிர்.  சிறு  வயதில்  அங்குதான்  அதிகம்  இருப்பான்.     ஆனால்  தன்  மாமன்மகள்  சுகுனா  பருவ  வயதிற்கு  வந்ததிலிருந்து   அங்கு  செல்வதை   கொஞ்சம்  கொஞ்சமாக   குறைத்துக்கொண்டவன்   கடந்த   நான்கு  வருடங்களாக   முற்றிலும்  அங்கு  செல்வதை  தவிர்த்தான்.        ரகுவின்  மாமா  தம்பிதுரைக்கு   ரகு  தன்  மகளிடம்  காட்டும்  பாராமுகம்..  மிகுந்த  வேதனையளித்தாலும்  ரகுவை  அவரால்  வெறுக்க  முடியவில்லை..  இதையெல்லாம்  யோசனை  செய்து  கொண்டிருந்த   சுந்தரம்..  இறுதியாக   ஒரு  முடிவிற்கு  வந்து   தனது   மச்சினன்  வீட்டிற்கு   சென்றார்;.
        ரகுராம்  பார்வதியை   உயிருக்குயிராய் காதலிப்பவன்  முதலில்  ரகுவை  முற்றிலும்  தவிர்த்த  பார்வதி..   பிறகு  வந்த  நாட்களில்  ரகுவை  பிடித்திருந்தும்;;..  தன்  அப்பா  தன்மீது  வைத்திருக்கும்  நம்பிக்கைக்காகவே  அவனிடம்  இருந்து  விலகியிருந்தாள்.  எனினும்  இரண்டு  வருடமாக  போராடி  பார்வதியின்  மனதை  ஜெயித்தேவிட்டான்  ரகுராம்.  இப்பொழுது  இருவரும்   நான்கு  வருடங்களாக  காதலித்து  வருகிறார்கள்.
       ‘பார்வதி..  இன்னைக்கு  எங்க  வீட்ல  நம்ம  விசயத்தைப்  பத்தி  பேசிட்டேன்.” என்று   சந்தோசமாய்  கூறினான்  ரகுராம்.   ஆனால்  பார்வதி  முகத்தில்   எந்த  சந்தோசமில்லை.
      ‘நீங்க  பேசினது  இருக்கட்டும்.   உங்க  அப்பாவும்  அம்மாவும்  நீங்க  பேசினதுக்கு  என்ன  சொன்னாங்க..?” என்று   தனது  ஆழமான  பார்வையை   ரகுமேல்  பதித்தபடி  கேட்டாள்  பார்வதி.
      ‘அப்பா  ஒத்துக்கலை..  அவர்  என்னோட  அத்தைபொண்ணையோ..  இல்ல  மாமன் பொண்ணையோதான்   கல்யாணம்  பண்ணிக்கனும்னு  சொன்னார்.  ஆனா..  நான்.. அப்படி  ஒரு  கல்யாணம்னா..   நான்  கல்யாணமே  பண்ணிக்க மாட்டேன்னு  சொல்லிட்டேன்…‚”என்றான்.
        பார்வதி  அமைதியாகவே  இருக்கவும்.. ‘என்ன  பார்வதி  எதுவுமே  பேசமாட்டிக்கிற..?  என்மேல  உனக்கு  நம்பிக்கையில்லையா..?”  என்றான்.
     ‘நேத்து  வரைக்கும்  இருந்திச்சி.  இப்ப  என்னோட  நம்பிக்கையை  குறைச்சிடுச்சி..” என்றாள்.
    ‘ஏய்..  இவ்ளோ  நாளா  எங்க  வீட்ல  இதைப்பத்தி  பேசவே  தயங்கிட்டு  இருந்த  நான்  இன்னைக்கு  பேசி  எங்கம்மா  மனசை  மாத்தியிருக்கேன்.  இன்னும்  கொஞ்சநாள்ல  எங்கப்பாவும்  ஒத்துக்குவார்.‚” என்றான். பார்வதியின்  கண்கள்  குளமானது.  ‘பார்வதி…  எதுக்கு  இப்படி அழற..?  நான்  நிச்சயமா  உன்னை  ஏமாத்தமாட்டேன்..” என்று  அவளை  தேற்றினான்.
     ‘கொஞ்சம்  நிறுத்துறிங்களா..?” என்று  கத்தினாள். ‘உங்கப்பா  ஒத்துக்கலைன்னா..  நீங்க  யாரையும்   கல்யாணம்  பண்ணிக்க  மாட்டிங்களா..?   ஆனா..  என்கிட்ட   கூடிய  சீக்கிரம்  என்னை  கல்யாணம்  பண்ணிக்கிறேன்னுதான  சொன்னிங்க..?   என்கிட்ட  சொன்னமாதிரியே ..  நான்  பார்வதியை  மட்டும்தான்  கல்யாணம்  பண்ணிக்குவேன்னு   தீர்க்கமா  உங்க  வீட்ல    சொன்னிங்களா..?” என்று   கேள்வியாய்ப்  பார்த்தாள்.
    ‘எனக்கு  பிடிச்சமாதிரித்தான்  நான்   வாழ  ஆசைப்படறேன்னு  சொல்லியிருக்கேன்.    நீ   இல்லாத  ஒரு  வாழ்க்கை  எனக்கு  பிடிச்ச  வாழ்க்கையா  இருக்குமா..?”  என்றான்.
     ‘ஆக…  நேரடியா  என்னைப்  பத்தி  பேசறதுக்கு  உங்களுக்கு  இன்னும்  தைரியம்  வரலை… அப்படித்தான..?   ஆனா..  நான்  எங்கப்பாகிட்ட..   கல்யாணம்  பண்ணினா  உங்களை  மட்டும்தான்  பண்ணிக்குவேன்னு   சொல்லியிருக்கேன்..”  என்று  நிமிர்வாய்  அவனைப்  பார்த்து..
       ‘அதுக்கு  எங்கப்பா  என்ன  சொன்னார்  தெரியுங்களா..?   முதல்ல யார்  அந்த பையன்னு  கேட்டார்  நான் உங்களைப்  பத்தி  சொன்னதும்..  உங்களோட  பேக்ரௌன்ட்  தெரிஞ்சிகிட்டு..  அந்த  இடம்  வேண்டாம்டா..  அது  நம்ம  வசதிக்கு  மீறின  இடம்ன்னு  சொன்னார்.   என்னா  வேற  ஒருத்தரை  கல்யாணம்  செய்துக்கிறதை  யோசிச்சிகூட  பார்க்க  முடியாதுப்பான்னு  நான்  உறுதியா  சொன்னேன்  உடனே  எங்கப்பா..  பார்வதி   உன்  சந்தோசம்தான்  என்  சந்தோசம்.  ஒரு  அப்பாவா  உன்  சந்தோசத்துக்கு  தடையா  ஒருநாளும்  நான்  இருக்கமாட்டேன்.   அதே  மாதிரி..  ஒரு   மகளா  நீ  எனக்கு  ஒன்னு  செய்யனும்.  நீ  என்னோட   பொண்ணு  மட்டும்  இல்லை  என்  உயிர்  என்  சந்தோசம்  என்  வாழ்க்கையோட  அர்த்தம் இப்படி எல்லாமே  நீதான்.   உன்னை  யார்  கல்யாணம்  பண்ணிக்கிட்டாலும்  கௌவுரமாகவும்  பெருமையாவும்   ஏத்துக்கனும்.   அப்படி  இல்லன்னா..  நான்  செத்திடுவேன்னு  சொல்றார்.   இப்ப  சொல்லுங்க..  உங்க  அப்பாக்காக  நீங்க  யாரையும்  கல்யாணம்  பண்ணாம  இருப்பேன்ங்கிறிங்க..   அதே  மாதிரி..  என்னோட  அப்பாக்காக   நான்  என்ன  செய்யட்டும்..?” என்றாள்.
      ரகுராம்  அமைதியாக  இருக்கவும்  ‘உங்க  வீட்ல  சம்மதிக்கலைன்னாலும்   அவங்ககிட்ட   நம்ம  விசயத்தை  சொன்னதுக்கே  இவ்ளோ  பெருமைப்  படுறிங்களே..   எங்க  வீட்ல  சம்மதிச்சாங்களான்னு   ஒரு  வார்த்தை  என்கிட்ட  கேட்டிங்களா..? ஏன்  கேக்கலை..?   ஏன்னா..   எங்க  வீட்டோட   சம்மதம்ங்கிறது   உங்களுக்கு  அவ்ளோ  முக்கியமா  படல..  அதான..?  நம்மகிட்டதான்   சொத்து  இருக்கே..   அதனால  சூடு  சொரனையே  இல்லாம  என்அப்பாவும்    என்னை  உங்களோட  அனுப்பி  வச்சிடுவாருன்னு  நினைச்சிட்டிங்க.. அப்படித்தான..?“  என்றாள்.
       ‘ஏய்..  நான்  அப்படியெல்லாம்  நினைக்கல..   நான்  இப்படி  நினைப்பேன்னு   நீதான்  இப்ப  என்னை  கேவலப்படுத்தற..”  என்றான்.
      ‘இப்ப  கொஞ்ச  நேரத்துக்கு  முன்னாடி  என்கிட்ட  உன்னை  நான்  நிச்சயமா  ஏமாத்த  மாட்டேன்னு  சொன்னிங்களே..  அதுக்கு  என்ன  அர்த்தம்..?   நீங்க   என்  வாழ்க்கையில  இல்லாம  போனா..   நான்  மட்டும்தான்  ஏமாறுவனா..? அந்த  ஏமாற்றம்  உங்களுக்கு  இருக்காதா..?” என்றாள்.
        ‘பார்வதி..  நீ  இந்த  மாதிரி  நினைப்பேன்னு  நான்  யோசிக்கலை..   உங்கப்பா..  உன்  சந்தோசத்துக்காக  நம்ம  காதலை  ஏத்துக்குவாங்கன்னு  நினைச்சேனே  தவிர  அவங்க  சம்மதம்  முக்கியமில்லைன்னு  நான்  எப்பவும்  நினைச்சதில்ல.   எங்கப்பாம்மாகிட்ட  நான்  சம்மதத்தை  எதிர்பார்க்கிறதே   அவங்க  சம்மதிச்சதுக்கு  அப்புறம்   அவங்களோட  வந்து   உன்னோட  அப்பாம்மாகிட்ட  முறைப்படி  பொண்ணு  கேட்டு  ஊர்அறிய  உன்னை  கல்யாணம்  பண்ணிக்கறதுக்காகத்தான்.    உன்னை  ஏமாத்தமாட்டேன்னு  நான்  சொன்னதுவேணா  தப்புதான்.  அதுக்காக  நீ  இல்லாத  வாழ்க்கை  எனக்கு  ஏமாற்றமில்லாமையா   இருக்கும்..?  இதை  நான்  சொல்லித்தான்  நீ  தெரிஞ்சுக்கனுமா…?” என்றான்.
       ரகுராமின்  இந்த  பேச்சு  பார்வதிக்கு  சற்று  நிம்மதியை  வரவழைத்தது.  ‘பொதுவா  எல்லாப்  பொண்ணுங்களும்  கல்யாணத்துக்கு  முன்னாடி  தப்பு  பண்ணினாங்கன்னா..  ஆம்பளைங்களை   மட்டும்  அதுக்கு  காரணம்  காட்டி..  இப்படி  பண்ணிட்டிங்களேன்னு  கேப்பாங்க.  ஆனா     இன்னைக்கு  வரைக்கும்  அந்தமாதிரி   உங்களை  குற்றம்  சொல்லனும்னு   எனக்கு   தோணினதே  இல்ல.  என்னைக்கு  என்  மனசுக்குள்ள  நீங்க  முழுசா  வந்திட்டிங்களோ..  அன்னைக்கே  உங்களுக்கு  இல்லாததுன்னு  என்கிட்ட  எதுவுமே  இல்லன்னு   நினைச்சிதான்…“  என்று    தலைகுனிந்தாள்.  ஆனால்   ஒருநிமிடம்தான் . 
பிறகு  அவனை   நிமிர்வாய்  பார்த்து..  ‘முழு  மனதாய்  நான்  என்னை  உங்களுக்கு  கொடுத்தேன்.  அதே  மாதிரி..  நீங்களும்  உங்களை  எனக்கு  கொடுத்திருக்கிங்க..   எந்த  சூழ்நிலையிலும்   அதை  மறந்திடாதிங்க…“ என்று  குரலுயர்த்தி  கண்டிப்போடு  சொன்னாள்.
பிறகு சற்று நேரத்திலேயே  தன்னை  ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. ‘நானும்   என்னோட  அப்பாவும்  இன்னைக்கு  நைட்  என்னோட  இன்டர்வ்யூக்காக    கோயம்புத்தூர்  போறோம்.  அதுக்கு  எல்லாம்  ப்ரிப்பேர்  பண்ணனும்.  டைம்  ஆய்டுச்சி  நான்  கிளம்பறேன்..” என்றாள்.
        ‘பார்வதி..  இன்னும்  கொஞ்சநாள்ல  நம்ம  கல்யாணம்  நடக்கப்போகுது.  கல்யாணம்   பண்ணினதுக்கப்புறம்    உன்னை  வேலைக்கு  போக  நான்  விடமாட்டேன்.  அப்படியிருக்கிறப்ப  எதுக்கு  தேவையில்லாத  அலைச்சல்..?  நீ   போய்ட்டின்னா  அப்புறம்  உன்னை  ரெண்டு  நாளைக்கு  பார்க்கவே  முடியாது..”  என்று  தவித்தான்.
        ‘நான்  வேலைக்கு  போறது  உங்களுக்கு  பிடிக்காதுன்னு  எனக்கும்  தெரியும்.     எங்க  அப்பாவோட  ஆசைக்காகத்தான்  போறேன்.  அவர்  என்னை  கஷ்ட்டப்பட்டு  படிக்க  வச்சிருக்கார்.  கவர்ன்மெண்ட்  அதிகாரியா  வேலைக்குப்   போகப்போறேன்னு  ரொம்ப  சந்தோசத்தில  இருக்கார்.    அவர்  நான்  வாங்கப்போற  சம்பளத்தை  பெருசா  பார்க்கல..  அவருக்கு நான்  பச்சை  இங்க்குல  கையெழுத்துப்  போடனும்.. அவ்ளோதான்‚  அவருக்காகத்தான்   வேலைக்கு  போகனும்னு   நான்  இப்ப  முடிவு  பண்ணியிருக்கேன்.  எவ்ளோ  பெரிய  வேலையா  இருந்தாலும்  உங்களுக்காக  அதை  விடவும்  நான்  தயாராத்தான்  இருக்கேன்.   ஆனா..  அதை   நம்ம  கல்யாணம்  நல்லபடியா   முடிஞ்சதுக்கப்புறம்  பேசிக்கலாம்.” என்றாள்.
      தனக்காக  வேலையை  விடுவேன்  என்று  பார்வதி  சொல்லவும்..    பெருமையாய்  உணர்ந்தவன்..  ‘சரி  டைம்  ஆய்டுச்சி..  கிளம்பலாம்..” என்று  கிளம்பினார்கள்.
      பார்வதி..  காண்போர்களை  ஒரு  நிமிடம்  கவர்ந்திழுக்கும்  அழகு.  பார்வதியின்  அம்மா ..  சிவகாமி தமெக்கென  இருக்கும்  ஒரே ஒரு  ஏக்கர்  நிலத்தில்   விதவிதமான  பூ  வகைகளை  மட்டுமே  விரும்பி  விவசாயம்  செய்பவர்.  தோட்ட  வேலைக்கு   தன்  துணைக்கு    கணவரை  கூட  அழைக்கமாட்டார்.
மாதா  மாதம்  தன்  கணவரிடம்..  ‘ஏங்க   இது  முழுக்க  முழுக்க  நானே  என்  சொந்த  உழைப்புல  சம்பாரிச்ச  பணம்.”  என்று  பெருமையாய்  கொடுத்து   அதில்  தன்னையும்  பெருமையாய்  உணரும்  சுபாவம்   கொண்டவர்.   ஆனால்  பார்வதியின்  காதல்  விசயம்பற்றி  சிவகாமிக்கு  தெரியாது.  பார்வதியின்  அப்பாதான்  பார்வதியிடம்  இதைப் பற்றி  அம்மாவிடம்  சொல்லவேண்டாம்  என்று  சொல்லி  வைத்திருந்தார்.
    பார்வதியின்  அப்பா   வீராச்சாமி  ஊட்டி  போலீஸ்  ஸ்டேசனில்  ஏட்டாக  பணிபுரிபவர்.     மிகவும்  நல்ல  மனிதர்  என்று  பெயரெடுத்தவர்.  தன்  மகளும்  மனைவியும்தான்  அவருக்கு  உலகம்.  அதைத்தாண்டி  வேறு  எதையும்  யோசிக்கமாட்டார்.  தாம்  லஞ்சம்  வாங்கினால்..  தன்  மகளுக்கு  புத்தி  சொல்லும்  அறுகதையற்று   போய்விடுவோம்  என்பதற்காகவே   மிகவும்  நேர்மையாக  இருப்பார்.  ஆனால்.. ஏட்டாக  இருந்தாலும்  அவரோடு    பணிபுரியும்   மேல்  அதிகாரிகள்   கூட   வீராச்சாமியை  மரியாதையாகத்தான்  பார்ப்பார்கள்.    தன்  மகள்  பெரிய  அதிகாரியாக  வரவேண்டும்  என்பதே  அவரது  வாழ்நாள்  ஆசையாகும். 

Advertisement