சுந்தரம் வீட்டில்.. ரகுவின் கைக்குள் அடங்கியிருந்த பார்வதி.. ‘என்னைய விட எங்கப்பாவைத்தான் நல்லா கவுத்து வச்சிருக்கிங்க..” என்றாள்.
‘ஏன் அப்படி சொல்ற..?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
‘பின்ன..? இதுவரைக்கும் என்னை விட்டுட்டு எங்கையும் போகாதவர்.. ஒரு வாரத்துக்கு யாருக்காக டூர் போயிருக்கார்..?”
‘அவர் இருந்தாமட்டும்..” என்று ரகுராம் பார்வதியை இன்னும் சேர்த்தணைத்தான்.
‘இப்படி உள்ளையே நாலு நாளா அரெஸ்ட் பண்ணி வச்சிருந்தா நான் என்னதான் பண்ணட்டும்..? அத்தை மாமா முகத்தில முழிக்கிறதுக்கே சங்கடமா இருக்கு.. நாளைக்கு திங்கட்கிழமை தயவுசெய்து.. ரகளை பண்ணாம நாளைக்காவது என்னை ஆபீஸ்க்கு போக விட்ருங்க..‚” என்று மிரட்டியபடியே கெஞ்சினாள்.
‘பார்க்கலாம்.. பார்க்கலாம்..” என்றான்.
‘என்னது..? பார்க்கலாமா..? நான் நாளைக்கு ஆபீஸ்க்கே போகலைன்னாலும் பரவாயில்ல.. ஆனா.. அத்தையோடவும் மாமாவோடவும்தான் இருப்பேன்..‚ என்ன நினைப்பாங்க என்னைப்பத்தி…?” என்று கோபித்தாள்.
‘ஒன்னும் நினைக்கமாட்டாங்க.. எனக்கு இப்ப எதைப் பத்தியும்.. யாரைப் பத்தியும் கவலையில்லை நான் உன்னோடவே இருக்கனும்.. அவ்ளோதான். அன்னைக்கு நீ கர்பமா இருக்கேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப பிடிச்ச.. எனக்கு மட்டுமே சொந்தமான.. ஒரு அழகான ஓவியம் திடீர்ன்னு உயிர்பெற்றா எப்படியிருக்குமோ.. அப்படி இருந்திச்சி அந்த உணர்வை இன்னும்கூட எனக்கு சரியா சொல்லதெரியலை இதுக்கப்புறம் நீ எத்தனை குழந்தை பெற்றாலும்.. இப்ப உன் வயித்தில இருக்கிற இந்த குழந்தைதான் எனக்கு ரொம்ப ஸ்பெசல்.. ஏன்னா.. என்னை முழுமையா நம்பி.. எந்த தடையுமில்லாம… என் காதலி எனக்காக கொடுத்த அன்புபரிசு உயிருள்ள பரிசு..” என்று பார்வதியை அணைத்தபடி தன்னைமறந்து பேசிக்கொண்டிருந்தான்.
‘என்னை பார்த்தா உனக்கு டயலாக் அடிக்கிறமாதிரி இருக்கா..?” என்று சற்று கோபப்பட்டாலும்.. ‘கல்யாணம் முடிந்ததும் உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கனும்னு நான் நினைச்சேன்… ஆனா உன்பக்கத்தில கூட என்னால இருக்கமுடியாம போய்டுச்சி அன்னைக்கு நீ மண்டபத்தில அப்படி அழுததும் எனக்கு எப்படியிருந்திச்சி தெரியுமா..? உன் மனசு என்னை தேடும்போது.. என்னால உன்கூட இருக்கமுடியாம போய்டுச்சி.. நீ இல்லாம இங்க எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்குதான் தெரியும்… அதனால எனக்கு யார் என்ன நினைப்பாங்கங்கிற கவலையெல்லாம் இல்ல..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
‘ரகு..“ என்று வெளியில் இருந்து ராஜா அழைத்தான்.
‘வா.. ராஜா..” என்றான்.
‘இல்ல.. நான் ஹால்ல வெய்ட் பண்றேன்.. நீ வா..”
‘எனக்கு தெரியாம என்ன ரகசியம் பேசப்போற..? ஒழுங்கா உள்ள வந்து பேசு..” என்று வெளியே வந்தாள் பார்வதி.
‘இல்ல..” என்று மீண்டும் ராஜா இழுக்கவும்.. ‘என் பொண்டாட்டி மரியாதையா கூப்பிடும்போதே உள்ள வந்திருடா இல்லன்னா அப்புறம் ரொம்ப மரியாதையா கூப்பிடுவா..” என்று உள்ளிருந்து அழைத்தான் ரகு.
சிரித்துக்கொண்டே உள்ளே வந்த ராஜா.. ‘ரகு.. நம்ம விவேக் கால் பண்ணியிருந்தான் போன வாரமே அவனுக்கு லீவ் கிடைச்சிடுச்சாம் என் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம்தான இருக்கு அதனால லீவை கான்சல் பண்ணிட்டு அடுத்த மாசம் வரமாதிரி பார்த்திருக்கான் ஆனா நம்ம சுகுனா.. இந்த வாரம் வரேன்னு சொல்லிட்டு ஏன் வரலைன்னு ஒரே அழுகையாம். என்ன சொல்லியும் கேக்க மாட்றாளாம் பத்தாதுக்கு நேத்தில இருந்து இன்னும் எதுவும் சாப்பிடலையாம் உன்னை சுகுனாகிட்ட பேசசொன்னான்.” என்றான் ராஜா.
பலமாக சிரித்தவன்.. ‘சின்னப்பொண்ணா இருந்தாலும் சரியாத்தான் சொல்லியிருக்கா.. அதோட உன்னோட புகழ் எப்படியெல்லாம் பரவியிருக்கு பார்..” என்றான்.
அந்த நேரம் விவேக்கிடமிருந்து அழைப்பு வரவும்..’சொல்லு விவேக்..”என்றான் ராஜா.
‘நான் மட்டும் இந்த வாரம் வரலைன்னா.. மறுபடி நான் ஊருக்கு வந்தாலும்.. வாழாவெட்டிதான்னு சுகுனா என்னை மிரட்டுறா.. அதனால.. நான் இந்த வாரமே இந்தியா வரேன் ராஜா. ஒரு மாசத்திற்கு லீவ் போட்டுட்டேன் சேர்ந்தாப்பில உன் கல்யாணத்தையும் முடிச்சிட்டு.. இந்தமுறை சுகுனாவையும் இங்க கூட்டிட்டு வந்திடப்போறேன்.. “ என்றான்.
பலமாக சிரித்தவன்.. ‘சரி விவேக் நான் வச்சிடறேன்..” என்று கட் செய்தான்.
ரூமை விட்டு வெளியே வந்த ராஜா.. ‘அண்ணி.. நம்ம குடும்பத்தில எல்லாரையும் விட மிரட்டுறதுல நீங்கதான் நெம்பர் ஒன். பார்த்திங்களா..? எங்கண்ணன் நாலுநாளா.. எப்படி மிரண்டுபோய் இருக்காரு..“ என்று திரும்பும்போது.. சுந்தரம் ராஜாவை முறைத்தார்.
‘இதோ வரேன்.. “ என்று அவன் பின்னாலேயே வந்தாள் பார்வதி.
‘ஒரு அண்ணிகிட்ட இப்படித்தான் பேசுறதா ராஜா..?” என்று சுந்தரம் ராஜாவை திட்ட..
‘நான் உண்மையைத்தான்ப்பா சொன்னேன்..” என்று வெளியே போய்விட்டான்.
ராஜா போய்விட்டான் என்று நினைத்த பார்வதி ‘மாமா.. என்கிட்ட ராஜா அப்படி பேசறதுதான் எனக்கு சந்தோசமா இருக்கு.. எனக்கு கிடைச்ச வேலையும்.. எல்லாரிடமும் இருந்து என்னை பத்தடி தள்ளியே வச்சிருச்சி.. இப்படியே இருந்தேன்னா.. எனக்கு சிரிப்பே மறந்திடுமாட்டங்குது. ஒத்த பொண்ணாவே வீட்ல இருந்திட்டு இப்ப இங்க எல்லாரோடவும் இப்படி இருக்கிறது.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள்.
ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த ராஜா.. ‘நீங்க எங்க..? எல்லாரோடையும் சேர்ந்திருக்கிங்க…? நாலுநாளா எங்கண்ணனோட தனிக்குடித்தனம்தான பண்ணிட்டு இருக்கிங்க..” என சொல்லி வண்டியை கிளப்பிக்கொண்டு ஓடியே போனான்.
‘மாமா.. கல்யாணத்தை இன்னும் பத்துநாள் முன்னாடியே வச்சிடுங்க..‚ இவரை என்ன பண்ணலாம்னு நான் மீனாக்கு டிரெனிங் கொடுத்துடறேன்..‚” என்று சிரித்தாள்.
‘உண்மையாவே அப்படித்தான்மா வச்சாகனும் ராஜாக்கு இன்னும் இருபது நாள் கழிச்சி பிறந்தநாள் வருது அதுக்கப்புறம் இருபத்தி எட்டு வயசு பிறக்குது. இரட்டைப்படையில கல்யாணம் பண்ணக்கூடாதாம். அதனால பத்துநாள் முன்னாடியே கல்யாணத்தை வச்சிடலாமான்னு பார்க்கிறேன்..” என்றார்.
‘அப்ப நான் சொல்றவரைக்கும் இந்த விசயத்தை ராஜாகிட்ட சொல்லிடாதிங்கமாமா..” என்று ராஜாவிற்காக காத்திருந்து அவன் வந்ததும் பார்வதி முகத்தை சோகமாக வைத்திருந்தாள். பார்வதி முகத்தை பார்த்து பதறிய ராஜா.. ‘என்ன அண்ணி..? உடம்பு சரியில்லையா…?” என்று அக்கறையாய் கேட்டான்.
‘அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ‚ மாமாதான் உன்னோட கல்யாணத்தை இன்னும் இரண்டு வருசத்திற்கு தள்ளி வச்சிட்டாரு..” என்று சோகமாய் சொன்னாள்.
‘என்ன சொல்றிங்க..? அப்பா ஏன் அப்படி பண்ணினார்..?” என்று ராஜா பதற சுசிலாவும். சுந்தரமும் சிரித்துவிட்டனர். அப்பொழுதும் பார்வதி சிரிக்காமல் ‘உனக்கு இன்னும் கல்யாணம் பண்ற அளவுக்கு மெச்சூரிட்டி வரலையாம் சில நேரம் எனக்குக்கூட அப்படித்தான் தோணுது..” என்று ராஜாவை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்.
‘அப்படியா..? அப்ப.. காட்டுக்கு போய் ஒரு பெண்சிங்கத்தை பிடிச்சி இவருக்கு கட்டி வைங்க..‚ நம்ம மீனுக்குட்டியெல்லாம் இவருக்கு செட்டாவமாட்டா..” என்று லேசாய் சிரித்தாள்.
பார்வதியின் சிரிப்பிற்கு பிறகுதான் ராஜாவிற்கு மூச்சே வந்தது. ‘என்னாச்சி ரகு இவங்களுக்கு..?” என்று சிரித்தான்.
‘உனக்கு இன்னும் பதினைந்து நாள்ல கல்யாணம் என்ஜாய்..” என்று சிரித்தான் ரகு.
‘அது எப்படிடா உனக்கு மட்டும் எல்லாமே சாதகமாவே அமையுது..?” என்றான் ரகு.
‘நான்தான் ராஜாவாச்சே..” என கெத்தாக சொன்னவன்இ ‘ம்ம்.. “ என்ற பார்வதியின் சத்தத்தில் ‘அச்சோ.. உங்களுக்கு இல்லண்ணி.. மீனாக்கு..” என்று பவ்யமாய் சொன்னான்.
அணைத்து சொந்தங்களும் சூழ ராஜா.. மீனா திருமணம் வெகுவிமரிசையாய் நடந்தது. ராஜாவிற்கு உடையில் இருந்து.. காலனிவரை அணைத்தையும் பார்வதிதான் பார்த்து பார்த்து வாங்கினாள். திருமண பரிசாக.. இரண்டு டிக்கெட்டுக்களை கொடுத்தாள் பார்வதி.
‘அண்ணி.. சுவிட்சர்லாந்தா..? அதுவும் இருபதுநாளா..? இங்க ஏகப்பட்ட வேலை பெண்டிங் இருக்கு..” என்றான் உண்மையாக.
‘உன் தொல்லையில்லாம நாங்க ஒரு இருபது நாளைக்காவது நிம்மதியா இருக்கோம்.. தயவு செய்து கிளம்பு..” என்றாள் பொய்கோபமாக.
‘அக்கா.. விவேக் என்னை விட்டுட்டு அமெரிக்கா போனமாதிரி.. ராஜாமாமாவையும் தனியாவே சுவட்சர்லாந்து அனுப்பிவைங்க..‚ மீனா இங்கையே இருக்கட்டும் பெருசா எனக்கு மட்டும் வந்து அட்வைஸ் பண்ணினாரு இல்ல..” என்று சுகுனா சொன்னாள்.
‘அடிப்பாவி.. உனக்கேண்டி இந்த கொலைவெறி..? நானா உன் புருசனை அமெரிக்காவில போய் வேலைபார்க்க சொன்னேன்..? எங்க அண்ணி சும்மாவே ஆடுவாங்க.. இதுல இவ கால்ல சலங்கை வேற கட்டிவிடறாளே..‚ இவ பேச்சை கேட்டுக்கிட்டு பெரிய பாவத்தை பண்ணிடாதிங்கண்ணி..” என்று ராஜா பயந்தவன் போல் பார்வதியை வேண்டினான்.
‘பார்வதியை நம்பினோர் கைவிடப்படார்..” என்று வரம் தரும் சாமியைப்போல் பார்வதி .. ராஜாவிடம் பாவனைசெய்ய.. ரகுராம் காதலுடன் பார்வதியைப் பார்க்க.. சுந்தரமும் சுசிலாவும் பெருமைபொங்க பார்வதியை பார்த்திருந்தனர்.