பார்வதியின் அருகில் போய் மெதுவாக ‘பார்வதி…” என்று அழைத்தார். தந்தையின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவள்.. அப்பொழுதுதான் டைம் பார்த்தாள். ‘அச்சோ.. எட்டரை மணியாப்பா ஆய்டுச்சி.. இவ்ளோ நேரம் ஏன்ப்பா எழுப்பாம விட்டிங்க..? நீங்க எப்பவும் ஆறு மணிக்கெல்லாம் டீ குடிச்சிடுவிங்க..”என்று புலம்பியபடியே அவசரமாக குளித்து வெளியே வந்தவள் சமையலறைக்குள் செல்ல.. ‘நான் டீ போட்டுட்டேன்மா.. வா குடிக்கலாம்..” என்றார்.
‘ம்ம்.. உண்மையாவே டீ நல்லா இருக்குப்பா. அப்படியே அம்மா போட்டமாதிரி இருக்கு..” என்றவள்.. அம்மாவின் நினைவை நாமே நியாபகப்படுத்திட்டோமே.. என்று அவள் யோசிக்கும்போதே.. மகளின் முகத்தை பார்த்தவர்
‘நீ நியாபகப்படுத்தலைன்னாலும்.. அவளோட நியாபகம் நான் சாகற வரைக்கும் என்னை விட்டு போகாது. அதனால என்கிட்ட பேசும்போது யோசிச்சி யோசிச்சி பேசாதடா.. ப்ரீயா இரு..” என்றார் சிரித்த முகமாக.
‘சரி வாங்கப்பா வெளிய போய் உக்காரலாம்..” என்று வீராச்சாமியோடு தானும் வெளியே வந்தாள். அங்கு அவர்களின் தோட்டத்தில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவரை அழைத்து.. ‘யார் சொல்லி இங்க வேலை செய்றிங்க..?” என்று தன்மையாய் கேட்டாள்.
‘உங்க வீட்டுக்காரர்தான்மா சொன்னாரு..” என்றாள் அந்த பெண்மணி.
‘என்ன..?” என்று அதிர்ச்சியாய் விழி விரித்தவள்.. ‘நீங்க இங்க வேலை செய்ய வேண்டாம்.. கிளம்புங்க..” என்றாள் கோபமாக.
‘நீங்க கோபமா பேசினாலும்.. வேலையை நிறுத்தக் கூடாதுன்னு … சொல்லிதான்மா அனுப்பியிருக்கார்..” என்றனர்.
‘முதல்ல இங்க இருந்து போகப் போறிங்களா.. இல்லையா…?” என்று கத்தினாள்.
‘எதுக்கு இவ்ளோ கோபம் வருது உனக்கு..?” என்றபடி ராஜாவோடு வந்தான் ரகுராம்.
‘என்ன நினைச்சிட்டு இருக்கிங்க..?” என்று அனல் பறக்க ரகுராமைப் பார்த்தாள்.
இவர்களை கண்டு கொள்ளாமல் வீராச்சாமியிடம் வந்த ராஜா.. ’என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா..” என்று அவரின் காலில் விழுந்தான்.
‘யார் தம்பி நீங்க..? முதல்ல எழுந்திரிங்க..” என்று அவன் தோள் தொட்டு தூக்கிவிட்டார்.
‘நான் உங்க மகளுக்கு கொழுந்தனார். உங்களோட சின்ன மாப்பிள்ளை ரா..ஜா..” என்ற கெத்தாக சொன்னான். ராஜா சொன்ன விதத்தில் வீராச்சாமிக்கு லேசாக சிரிப்பு வரவும்..
அங்கு நின்றிருந்தவர்களிடம்.. ‘நீங்க போய் வேலையைப் பாருங்க..” என்றான் ரகுராம்.
‘போகாதிங்க..”என்றாள் பார்வதி.
‘எனக்கு டீ வேணும்..” என்றான் ராஜா.
மீண்டும் ரகுராம்.. வேலைசெய்யும் பெண்ணைப் பார்த்து.. ‘போங்க..” என்றான்.
‘போகாதிங்க..” என்றாள் பார்வதி.
‘எனக்கு டீ வேணும்..” என்றான் ராஜா.
ரகுராம் சிரித்து.. ‘ஏண்டா கட்டின பொண்டாட்டியோட குடும்பம்தான் நடத்த முடியலை.. அட்லீஸ்.. ஒரு சண்டையாவது நிம்மதியா போட விடேன்டா…” என்றான் பொய் கோபத்துடன்.
ராஜா முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு.. ‘என்னைப் பார்த்தா உனக்கு எப்படியிருக்கு..? ஒரே தலைவலியா இருக்கேன்னு… ஒரு டீ தான கேட்டேன்.‚ இதுல உனக்கென்ன இளிப்பு வேண்டியிருக்கு…?” என்று சிரிக்காமல் கேட்டான்.
‘தலைவலி வந்தா.. எங்கையாவது கல்லில போய் நல்லா முட்டிக்கோங்க.. சரியாய்டும்..” என்று ஆத்திரமாக சொன்னாள் பார்வதி.
‘அந்த வைத்தியம் எங்க அண்ணனுக்கு அண்ணி.. எனக்கு அவ்ளோ பெரிய ட்ரீட்மெண்ட் தேவையில்லை. ஒரு டீ குடிச்சாலே சரியாய்டும்..” என்று கூலாக சொன்னான்.
வீராச்சாமி.. வேறு வழியில்லாமல் ராஜாவிடம் டீயைக் கொடுத்தார். ‘மாமான்னா.. மாமாதான்.” என்று டீ யை வாங்கி குடித்தான்.
ரகுவை கோபமாக பார்;த்தாள் பார்வதி. ‘நீ இப்ப இவங்களை வேலை செய்ய விடாம கலாட்டா பண்ணின்னா… நான் உன்னை ஆபீஸ்க்கு போகவே விடமாட்டேன். அத்தை இருக்கும் போது இந்த இடம் எப்படி இருந்ததோ.. அப்படித்தான் இனிமே எப்பவும் இருக்கனும்..” என்றான் கண்டிப்புடன்.
‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? ஏதோ.. பெரிய பிஸ்னஸ் மேன்னு சொன்னாங்க..? இங்க வந்து தோட்ட வேலை பார்த்திட்டு இருக்கிங்க..” என்றாள்.
‘ம்ம்.. இப்ப பிஸ்னஸ் லாஸ்ல போய்ட்டு இருக்கு.. சும்மாத்தான் இருக்கேன். அதனால நீதான் உங்க ஆபீஸ்ல டெம்ப்ரவரியா ஒரு வேலை போட்டு கொடேன். எனக்கும் வசதியாப் போய்டும்.” என்றான் ரகு.
ராஜாவின் போன் அடிக்கவும்இ ‘அண்ணா அப்பா போன் பண்றார்.” என சொல்லி ஆன் செய்து.. ‘ஹலோ அப்பா..” என்றான்.
‘எங்கடா இருக்க..? டீ கூட குடிக்காம அப்படி என்ன அவசர வேலை..?” என்றார் சுந்தரம்.
‘ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்திடு.‚” என்று கடுப்பாக சொன்னார்.
போனை கட் பண்ணாமலே.. ‘அண்ணி.. ஏதோ முக்கியமான வேலையாம். அப்பா கூப்பிடறார். நான் போய்ட்டு ப்ரீயா இருக்கும்போது வரேன்..” என்றான்.
‘உங்களை யாரும் இங்க வெத்தலை பாக்கு வச்சி அழைக்கல.. அப்படியே உங்க உடன் பிறப்பையும் கூட்டிட்டு போய்டுங்க.. தயவு செய்து திரும்ப வந்திடாதிங்க.. எங்களை நிம்மதியா இருக்க விடுங்க..” என்று கடுப்பாக சொன்னாள் பார்வதி.
‘சரி.. நான் வண்டியை எடுத்திட்டு வீட்டுக்கு போய்ட்டா.. அப்புறம் நீ எப்படி வருவ..? பேசாம என்கூடவே வந்திடு. அட்லீஸ்ட் அண்ணியாவது டென்சன் இல்லாம இருப்பாங்க..”
‘சரி.. ஒரு நிமிசம் இரு..” என்றவன்.. ‘மாமா.. இவங்க வேலை செய்யும் போது சின்னப் புள்ளத்தனமா.. உங்க பொண்ணு இவங்களை டிஸ்டர்ப் பண்ணவேணாம்னு சொல்லுங்க. அப்புறம் அவளுக்குத்தான் சிரமம்..” என்று கிளம்பினான்.
‘ரகு.. நான் சும்மாத்தான் உன்னை வரசொன்னேன். அப்பா என்னைத்தான் கூப்பிட்டார். நீ இங்க இருக்கறதுன்னா இருந்திட்டு அப்புறமா வா..” என்றான் சீரியசாக.
‘ஆமாமா.. இந்த மூஞ்சியை பார்த்திட்டு இருந்திட்டாலும்.. “ என்று பார்வதியை எரிச்சலோடு பார்த்தவன் ‘என்னை கடுப்பேத்தாம ஒழுங்கா வண்டியை எடு..” என்றான்.
வீட்டிற்கு வந்ததும்.. ‘எங்கடாப் போன..?” என்றார் சுந்தரம்.
‘அண்ணியை பார்க்கிற வேலைதான்ப்பா..” என்று கூலாக சொல்லவும் சுந்தரம் முறைத்த முறைப்பில்.. சுசிலா பயந்துபோய்.. ‘ஏண்டா இப்படி அவரை படுத்திறிங்க..?” என்றார்.
‘அம்மா.. ரகு இப்படி பண்ணினதுக்கு அண்ணி என்ன பண்ணுவாங்க…? தாலி கட்டினது கட்டினதுதான…? அதுவுமில்லாம.. தி கிரேட் சுந்தரம் சுசிலாவோட வம்ச வாரிசை வேற சுமந்திட்டிருக்காங்க. நம்ம வாரிசாச்சே.. அண்ணி வயித்துக்குள்ள இருக்கும் போதே சேட்டையை ஆரம்பிச்சிடுச்சி.. அதன் விளைவா அவங்க நேத்து மயக்கம் போட்டுட்டாங்க. அண்ணி அப்படியிருக்கும் போது அவங்களை போய் விசாரிக்கிறதுதான மனிதாபிமானம். அதுக்காகத்தான் அங்க போனேன்..” என்று சொன்னான்.
‘நாயை விரட்டுற மாதிரி விரட்டியிருக்கா.. அந்த பார்வதி. இதுல நலம் விசாரிக்கப் போனானுங்களாம்.. மானம் கெட்டவனுங்க..” என்றார் சுந்தரம்.
‘பரவாயில்ல… நாயா இருந்தாலும் பார்வதியோட நாயா இருக்கிறதுல எனக்கு சந்தோசம்தான்..” என்றான் ரகு.
‘நான் ரகுவோட தம்பி நாய்.. ஆனாலும் ராஜா நாய்..” என்று தன் காலரை தூக்கிவிட்டபடி சொன்னான் ராஜா. வந்த சிரிப்பை அடக்கிய ரகு.. எழுந்து உள்ளே போய்விட்டான்.
‘இப்ப சுகுனாவுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்..?” என்றார் சுந்தரம்.
‘நீங்க தான ஆரம்பிச்சிங்க.. அதனால நீங்களே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்க..” என்றான் ராஜா.
‘ஏன்.. நீ நல்லபையன் இல்லையா..?” என்றார் சுந்தரம்.
ஓஹோ.. சுத்தி வளைச்சி இங்கதான் வரிங்களா..? என்று நினைத்த ராஜா.. ‘அப்பா இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? அப்படியேன்னாலும் என்னால சுகுனாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அண்ணனுக்கு பார்த்த பொண்ணுன்னு என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கும்.” என்றான்.
‘சரி.. உங்கத்தை பொண்ணுங்களை யாரையாவது பேசி முடிச்சிடலாம்..” என்றார் சுந்தரம்.
‘அப்பா.. துரைமாமா சுகுனாவை நினைச்சி மனவருத்தத்தில இருப்பாரு. அவர் அப்படியிருக்கும்போது.. நாம பாட்டுக்கு அத்தை வீட்ல போய் பொண்ணு கேட்டா.. அது தப்பாய்டும். அதனால சுகுனாக்கு முதல்ல கல்யாணம் ஆகட்டும். அப்புறம் பாhத்துக்கலாம்..”
‘வேற ஒரு காரணமும் இல்லதான..?” என்றார் அர்த்தத்தோடு.
‘நீங்க பயப்படாதிங்கப்பா.. இந்த ராஜாவுக்கேத்த ராணி.. இந்த ஊர்லயே இல்ல.. அதனால கொஞ்சம் அட்ஜட்ஸ் பண்ணி பக்கத்து ஊர்ல இருக்கிற என் அத்தை பொண்ணு மீனாவுக்கே.. நான் வாழ்க்கை கொடுக்கலாம்னு இருக்கிறேன்..” என்று சுந்தரத்திடம் சாதுர்யமாக மீனா மீதான தனது விருப்பத்தை தெரிவித்தான்.
ராஜா தன் தங்கை மகள் மீனாவை செலக்ட் செய்தது சந்தோசத்தை கொடுத்தாலும் ராஜா மனம் மாறிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சீக்கிரமாக சுகுனாவிற்கு மாப்பிளைப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
ரகு ரூமிற்குள் இருந்து ராஜாவிற்கு கால் பண்ணினான். யோசனையோடு அட்டென் செய்த ராஜா.. ‘ம்..” என்றான். ‘என்னோட ரூம்க்கு வாடா..” என்றான்.
ராஜா உள்ளே வரவும்.. ‘சரியான கேடிடா நீ..” என்றான்.
‘அப்படியா சொல்ற..?” என்றான் ராஜா.
‘உனக்கும் மீனாக்கும் நடுவில.. அசைக்க முடியாத லவ் ஓடிட்டு இருக்குன்னு எனக்கு இரண்டு வருசத்துக்கு முன்னாடியே தெரியும். டைம் பார்த்து தாக்கிட்டஇ இருந்தாலும் சூப்பர்..” என்று சந்தோசமாய் பாராட்டினான்.
அதிர்ச்சியோடு நம்பமுடியாத திகைப்பில் இருந்தான் ராஜா. ‘ஏண்டா.. பிஸ்னஸ்.. பிஸ்னசுன்னுதானடா இருபத்திநாலு மணி நேரமும் சுத்திட்டு இருப்ப..‚ இதுல உன்னோட லவ்வையும் டெவலப் பண்ணிகிட்டு என்னை எந்த கேப்பில கவனிச்ச..? நாங்க இதுவரைக்கும் எங்கையும் வெளிலக் கூட போனதில்லையே.. “ என்று திகைப்பாய் கேட்டான்.
‘நீ எதுக்குடாப்பா வெளில போகனும்..? அதுதான் வாரத்தில நாலு நாளைக்காவது யாருமில்லாத நேரம் பார்த்து மீனாவோட வீட்டுக்கே போய்டுறியே..‚” என்று சிரித்தான் ரகு.
‘அடப்பாவி.. உண்மையாவே நீ டேன்ஜரான ஆளுதான். உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்..” என்றான்.
‘ராஜா. உண்மையாவே உனக்கு தேங்க் பண்ணத்தான் நான் கூப்பிட்டேன். எனக்கு துரைமாமாவையும் சுகுனாவையும் நினைச்சி ரொம்ப வருத்தமா இருக்கு.. நல்ல வேளை நீயே சுகுனா கல்யாணம் பத்தி பேச்சு எடுத்திட்ட.. சுகுனாக்கு கல்யாணம் நடந்து அவ சந்தோசமா வாழ்ந்தாதாண்டா என் வாழ்கையை கூட குற்ற உணர்ச்சியில்லாம என்னால வாழமுடியும்..” என்றான் வருத்தமாய்.
‘பார்த்துக்கலாம் விடு ரகு. அதுக்குத்தான ஒரு செக் வச்சிருக்கேன்.. ரகு ஒரு முக்கியமான விசயம்… நம்ம அக்காவீட்டுக்கும் பக்கத்து தெருவில.. விவேக்ன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நம்ம சுகுனாவை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். மூனு வருசத்துக்கு முன்னாடி நம்ம அக்கா வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போனப்ப யார்கிட்டையோ நம்ம சுகுனாவை காமிச்சி அடிக்கடி ஏதோ சொல்லிட்டே இருந்தான். நான் நேரடியா சுகுனாகிட்டையே கேட்டேன். அதுக்கு சுகுனா.. அவன் கிடக்கிறான்.. நான் போற பக்கமெல்லாம் வந்து நின்னுட்டிருப்பான்னு சொன்னா.. நேத்து நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதும் நான் சுகுனாவை பத்திதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். அவனைப் பத்தி கொஞ்சம் டீடெய்ல் கலெக்ட் பண்ணு ரகு.. நீ ஓ.கேன்னு சொன்னினா.. எனக்கு திருப்தியா இருக்கும். துரைமாமாவும்.. நீ சொன்னா ஒத்துக்குவார்.” என்றான்.
‘சரிடா.. நான் இன்னைக்கே அதை என்னன்னு பார்க்கிறேன்.. அப்படியே இன்னொரு விசயம் ராஜா.. நான் சுகுனாவோட கல்யாணத்துக்கு வரமாட்டேன். கல்யாணத்துக்கு மட்டும் இல்ல. அவ சம்மதமா வேற எந்த பங்சனுக்கும் வரமாட்டேன். நீதான் பக்கத்தில இருந்து பார்த்துக்கனும்..” என்றான்.
‘ஏன் ரகு..? நீ வரலைன்னா மாமா ரொம்ப வருத்தப்படுவார்..” என்றான் ராஜா.
ஆமாம் என்பதுபோல் தலையசைத்தவன் ‘ஆனா.. ஆரம்பத்திலேயே நான் அவளை விரும்பலைங்கிறதை தெளிவா புரியவச்சிட்டேன். அதுக்காகத்தான் துரைமாமா வீட்டுக்கு போறதைக் கூட நிறுத்தினேன். ஆனாலும் அவ என்னை மறக்கமுடியாம தவிக்கிறாடா.. எனக்கு என்ன செய்றதுன்னே புரியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று வருந்தினான்.
‘ரகு.. நீ ரொம்ப உன்னை வருத்திக்காத.. நான் பார்த்துக்கிறேன்.” என்றான் ராஜா.